ஆறாத வடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 30, 2020
பார்வையிட்டோர்: 6,295 
 

(இதற்கு முந்தைய ‘மழை வனப்பு‘ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).

“முதல்ல நான் ஒண்ணு சொல்லிடறேன் தம்பி; என்னைப் பொறுத்தவரைக்கும் வாழ்க்கையில் காம்ப்ரமைஸ் பண்ணிக்கவே முடியாத சில ஸ்ட்ராங் எத்திக்ஸ் எனக்கு உண்டு.

“அதன் அளவுகோல்படி அன்னிக்கு நாச்சியப்பன் மாமா உனக்குத் தந்த அட்வைஸ் இருக்கே, அது மன்னிக்கவே முடியாத கேவலமானது. ரொம்ப ரொம்பக் கீழ்த்தரமானது. இத்தனைக்கும் அந்த அட்வைஸ் அவரால் எனக்கு சொல்லப்படவில்லை. என் சித்தியின் பையனுக்குத்தான்…

“ஆனா ஒரு மனுஷனிடம் மனிதம் என்பதனோட மேன்மைகளை நாசம் பண்ற மாதிரியான விஷம் தோய்ந்த அம்பு அந்த விஷ அம்பு. அது என்னை ரொம்பக் காயப்படுத்தி விட்டது ராஜா; ரொம்ப நாளைக்கு ஆறாம இருந்த அந்தக் காயம் காலத்தால இன்னைக்கு ஆறிப் போயிட்டாலும், காயத்தோட ஆறாத வடு என்னுள் அப்படியேதான் என்னுள் இருக்கு…”

அப்போது ராஜாராமன் சட்டென குறுக்கிட்டான்.

“இப்பத் தெரியுது அண்ணாச்சி. எப்படி நீங்க இப்படி ஒரு தனித் தன்மையான ரைட்டரா ஆனீங்கன்னு… ஏன்னா உங்களுக்கு ஏற்பட்ட காயம் எல்லோருக்குள்ளேயும் ஏற்படறதுக்கு சான்ஸே கிடையாது. உண்மையில் இந்தக் காயம் ஒரு வெரி க்ரேட் ஹியூமன் டச் அண்ணாச்சி! இந்த ஹியூமன் டச் உங்க எழுத்துல அப்படியே ட்ரான்ஸ்பர் ஆகறது என்பதால்தான், படிக்கிறவங்களை உங்க கதைகளுக்குள்ள இன்வால்வ் ஆக வச்சிடுது. ரைட்டா அண்ணாச்சி நான் சொல்றது…?”

“நீ சொல்ற மாதிரியும் இருக்கலாம்… எனக்குத் தெரியாது.”

“இப்ப நீங்க என்னை என்ன கேக்கப் போறீங்க என்கிறதை நான் கொஞ்சம் ஊகிச்சிட்டேன்னு நினைக்கிறேன்.”

“அழகான ஒரு பொண்ணைப் பாத்து வைப்பாட்டியா வச்சிக்கோன்னு படு மோசமா அட்வைஸ் பண்ணின நாச்சியப்பனை பெரிசா விமர்சனம் பண்றதுல எனக்கு ஆர்வம் ஒன்றும் கிடையாது ராஜா… அந்த அட்வைஸ் அவரோட லெவல்! டெய்லி ராத்திரி ஒரு மணிக்கு சுக்கா வறுவலும் கோழி சாப்ஸும் ஆர்டர் பண்ணி சாப்பிடற லெவல்!

“கல்யாணத்துக்கு காத்துகிட்டு இருக்கிற இருபத்தி மூன்று வயதுப் பையனைப் பாத்து வைப்பாட்டி வச்சிக்கன்னு சொல்ற எந்த சென்சிடிவிட்டியும் இல்லாத ஒரு மனுஷனைப் பற்றி என்ன அபிப்பிராயம் சொல்ல? என்னோட கவலை உன்னைப் பத்தி; என்னோட பயம் உன்னைப் பத்தி. நாச்சியப்பனோட அட்வைஸைக் கேட்டு மனசுக்குள்ள அந்த நிமிஷம் நீ என்ன ஆனேன்னு எனக்குத் தெரியாது. இப்பவும் தெரியாது.

“அன்னைக்கு நாச்சியப்பன் அப்படிச் சொன்னதும் உன் மனசுக்கு எப்படி இருந்தது? அவரிடம் பேசிட்டு எழுந்து போனபோது என்ன மாதிரி ஐடியாவில் கிளம்பிப் போனே? அந்தச் சம்பவம் நடந்த பதினைஞ்சாவது நாளோ இருபதாவது நாளோ கழிச்சி உனக்கும் வேணுகோபாலோட மகளுக்கும் கல்யாணம் பண்றதா வெத்தலைப் பாக்கு மாத்தி உறுதி பேசியாச்சுன்னு எனக்கு நியூஸ் வந்தது. நடுவில் என்ன ஆச்சு?

“நாச்சியப்பனை மீட் பண்றதுக்கு முன்னாடி வரைக்கும் வேண்டவே வேண்டாம்னு சொல்லிட்டு இருந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு எதனால நீ திடீர்னு சம்மதிச்சே? அப்படி நீ சம்மதம் சொன்னதற்கு காரணம் நாச்சியப்பனோட அட்வைஸா? இத்தனை வருஷமா பதில் தெரியாமலே எனக்குள்ள இருக்கிற ஒரே கேள்வி இதுதான் ராஜா… இதுக்குப் பதில் தெரியணும் எனக்கு.

“அன்னைக்கி வேணுகோபாலோட மகளுக்கும் உனக்கும் கல்யாணம் உறுதி பேசியாச்சுன்னு எனக்கு நியூஸ் வந்ததும் மனசால நான் எப்படிப்பட்ட ஒரு அடி வாங்கினேன்னு ஒருத்தருக்குமே தெரியாது ராஜா. அந்த மாதிரியான ஒரு பயங்கர அடி அது! மோசமான ஒரு சூது கடைசியில ஜெயிச்சுட்ட மாதிரி எனக்குத் தெரிஞ்சுது.

“நாச்சியப்பனோட அசிங்கமான ஐடியாப் படி அழகில்லாத வேணுகோபால் மகளைக் கல்யாணம் பண்ணிகிட்டு, அழகா இருக்கிற ஒருத்தியை வைப்பாட்டியா வச்சிக்கலாம் என்கிற முடிவுக்கு வந்துதான் கல்யாணத்துக்கு நீ சம்மதம் சொன்னியா? இந்தக் கேள்விக்கு உன்கிட்ட இருந்து எனக்கு இப்பவே பதில் தெரியணும் ராஜா…

“ஒரு விஷயத்தை மட்டும் மறுபடியும் சொல்லிடறேன்… ராஜாராமன் என்கிற தனி மனிதனோட அந்தரங்கத்தைத் தெரிஞ்சுக்கிறதுல எனக்கு எந்த ஆர்வமும் கிடையாது. ஒரு மனிதன் சூது ஒன்றுக்குப் பலியானானா என்கிற தாங்க முடியாத இம்சைதான் எனக்கு.

“பதில் சொல்றதுக்கு உனக்கு இஷ்டம் இருந்தா என்னிடம் சொல்; இஷ்டம் இல்லேன்னா வேண்டாம். ஒரு பேச்சுக்கு சொல்றேன் ராஜா, பதில் சொல்றதுக்கு நீ விருப்பப் படலைன்னு வச்சிக்க – அதிலேயே உனக்குள்ள இருக்கிற பதில் எனக்குத் தெரிஞ்சி போயிடும்…!”

இப்படி நான் சொல்லி முடித்ததும் ராஜாராமனின் கை மிக அன்புடன் என்னுடைய கைகளைப் பற்றிக் கொண்டது. நானும் உடனே ஒரு அங்கீகரிப்புடன் அவன் கைகளைப் பற்றினேன். அதன் பிறகு என் வலது கையை ராஜாராமன் இறுகப் பற்றிக் குலுக்கினான். அவனின் மனதிற்குள் ஏற்பட்டிருக்கும் உணர்வுப் பெருக்கின் வேகம் அவனுடைய கைப் பிடியில் தெரிந்தது. அந்த வேகத்திலேயே ராஜாராமன் சொன்னான்:

“இத்தனை வருஷம் கழிச்சி கிடைச்சிருக்கிற இந்த சந்தர்ப்பத்துல இவ்வளவு கவலையோடு; இவ்வளவு பெரிய மனிதாபமான பயத்தோடு என்னை நீங்க கேட்டதை பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன் அண்ணாச்சி. நெஜமாவே ஐயம் ரியலி ப்ரவுட் ஆப் யூ. நீங்க வேற உங்களோட எழுத்து வேற இல்லேங்கறதை ஜஸ்ட் லைக் தட் என்கிற மாதிரி நிரூபித்து விட்டீர்கள். நான் ரொம்ப நன்றி சொல்லணும் உங்களுக்கு.

“ஆனா ஒரே ஒரு எக்ஸ்க்யூஸ்… இப்பவே என்னால இதுக்கு பதில் சொல்ல முடியாது அண்ணாச்சி. ஏற்கனவே நான் ரொம்ப லேட். முக்கியமான ஒரு பேஷண்டைப் பாக்கிறதுக்கு நான் இப்பவே போயாகணும். ஐ ஹாவ் டு ரஷ். என்னைத் தப்பா நெனைச்சுக்க மாட்டீங்கன்னு நெனைக்கிறேன். ஸாரி; ஹோட்டல்ல உங்களை ட்ராப் பண்ணிட்டு நான் உடனே ஹாஸ்பிடலுக்குப் திரும்பிப் போறேன். அதிகமாப் போனா இன்னும் ஒரு பத்து நாளைக்குள்ள உங்களுக்கு நான் ஒரு நீண்ட லெட்டர் எழுதிப் போட்டு விடுகிறேன்.

“அதுல எல்லாத்தையும் விலாவாரியா சொல்லிடறேன் அண்ணாச்சி. பதில் சொல்றதைவிட ஒரு கடிதமா எழுதறதுல நல்லா என்னைப் பத்தி சொல்லிடறது வசதியா, கொஞ்சம் ஈஸியா இருக்கும்னு எனக்குத் தோணுது. அதனால் திருப்பியும் கெஞ்சிக் கேட்டுக்கிறேன், தப்பா நெனைக்காதீங்க.

“பதில் சொல்றத்க்குப் பயப்படற மாதிரி என்கிட்ட எதுவும் இல்லை அண்ணாச்சி… மை ஹேண்ட்ஸ் ஆர் கிளீன்…”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *