ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 29, 2021
பார்வையிட்டோர்: 5,749 
 
 

“வாங்க..!! நேரமாச்சுங்களே… அஞ்சு நிமிஷம் லேட்டானாலும் பசி உசிரு போவுதேன்னு கத்துற ஆளு…!! இன்னைக்கு என்னாச்சு….???”

சாப்பிட எழுந்தேன்.

டைனிங் டேபிளைப் பார்த்ததுமே தூக்கி வாரிப் போட்டது..

“புவனா..என்ன..தட்டு பெரிசாயிருச்சு…?”

“போதும்..உளறாதீங்க..தட்டு எப்படி பெரிசாகும்…?”

“தட்டு முழுசும் சப்பாத்தி, குருமா , சோறுன்னு நிறஞ்சு வழியுமே..இப்போ ஓரத்தில் சின்னதா ஏதோ ஒட்டிட்டு இருக்காப்போல …. அதான் தட்டு பெரிசாயிருச்சோன்னு சந்தேகம் வந்திருச்சு…..!!!!

“உக்காருங்க முதல்ல….விவரமா சொல்லத்தானே போறேன்…!”

நேத்து கோவிலுக்கு போயிருந்தேனில்ல….அங்க ஒரு வயசானவர பாத்தேன்..சாமி கணக்கா மொகத்தில ஒரு களை…பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருந்திச்சு..

என்னைய பார்த்து..

“அம்மா…உங்க மொகத்தில ஒரு வாட்டம் தெரியுதே…உள்ளத உள்ளபடி சொல்லுங்க… ஏதாச்சும் செய்ய முடியுமான்னு பாக்கலாம்….”

இந்த இடத்தில் புவனவைப் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்….

புவனா ஒரு வளர்ந்த குழந்தை … வெளுத்ததெல்லாம் பால்….அப்பா , அம்மா அதிகமாகவே ஊட்டி வளர்த்து விட்டார்களோ என எண்ண வைக்கும் உடல் வாகு….

உடலும் உள்ளமும் ரொம்பவே பெரிசு…

***

அப்போது எனக்கு கிட்டத்தட்ட முப்பது வயதிருக்கும்… கல்யாணம் செய்து கொள்ளாமல் தட்டிக் கழித்துத் கொண்டே போனேன்…

கடைசியில் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்ள வேண்டியதாயிற்று….

ஒரே ஒரு கண்டிஷன்….

‘ஒரு பெண்ணைத்தான் பார்ப்பேன்.. அவள்தான் என்மனைவி….’

பையன் சம்மதித்தால் போதுமென்று என் பெற்றோர்கள் சரி என்று ஒத்துக் கொண்டார்கள்…

புவனா எல்லோருக்கும் காப்பி, பலகாரம் கொண்டு வந்தாள்…அம்மா என் கையைப் பிடித்துக் கொண்டு,

“சுதாகர்.. கொஞ்சம் எந்திருச்சு வெளியே வா….!!”

‘ஒரு.. நிமிஷம்….’ன்னு சொல்லிட்டு வெளியே இழுத்துட்டு போனாங்க அம்மா..

“இந்த பொண்ணு வேணாம்.. உடனே கிளம்பு….”

“என்ன சொல்றீங்க…???”

“ஏன்.. உனக்கு பொடனியிலேயா கண்ணிருக்கு.. இந்த பொண்ணையா கட்டிக்க போற…???”

“பொண்ணுக்கு என்ன குறச்சல்ன்னு….???”

“ஒரு கொறச்சலுமில்லப்பா…எல்லாமே கூடுதல் தான்…”

“அம்மா.. நான் வரும்போதே என்ன சொன்னேன் …மறந்து போச்சா….???”

“டேய்..சுதா…நீ சொன்னது முன்னபின்ன இருக்கிறவங்களுக்கு சரியா இருக்கும்..ஆனா..பொண்ண பாத்தயில்ல…???

“பாக்காம இருக்க முடியுமா…???”

அப்பா வேற அவர் பங்குக்கு…

“அம்மா.. நான் சொன்னா சொன்னதுதான்.. புவனா தான் என் பெண்டாட்டி…!!!”

அம்மாவுக்கு ஆரம்பத்திலிருந்தே புவனாவைப் பிடிக்கவில்லை.. அம்மாவுக்கு எல்லாமே பெர்ஃபெக்ட்டா இருக்கணும்.

“அதெப்படி..உடம்ப கூட கச்சிதமா வச்சுக்க முடியாத பொண்ணு வீட்ட சரியா வச்சுக்கும்….??? “

புவனா அதைப்பற்றியெல்லாம் கவலைப் பட்டதாய் தெரியவில்லை…

காலையில் நாலு மணிக்கு எழுந்து பம்பரமாய் வேலை செய்வாள்..

அம்மாவை தாங்கு தாங்கென்று தாங்குவாள்… ஒரு கரண்டியைக் கூட கழுவ விட்டதில்லை.. படுக்கும்போது மணி பதினொன்று…

அம்மாவுக்கு புவனாவைப் பிடிக்காமல் போனதற்கு இன்னொரு காரணமும் சேர்ந்து கொண்டது…

எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போய்விட்டது…

இரண்டு பேரும் டாக்டரிடம் போய் காட்டியதில் முதலில் புவனாவின் எடையைக் குறைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்….

முதல் முதலாக புவனாவின் கண்ணில் கண்ணீர்…

“என்ன மன்னிச்சிடுங்க….!!!”

“என்ன புவனா… என்ன பேச்சு இது…???”

“நீங்க ஏங்க என்ன பிடிச்சிருக்குன்னு சொன்னீங்க..?? எத்தன பேர் என்ன பொண்ணு பாத்தாங்க…??

எல்லோருக்கும் பிடிக்காம போன என்ன உங்களுக்கு மட்டும் ஏங்க பிடிச்சு போச்சு…???

நான் உண்மையிலேயே எதிர்பாக்கவேயில்ல… அன்னைக்கு நான் உங்கள நெனச்சு ரொம்ப அழுதேன்….பாவங்க நீங்க…!!!”

“புவனா… எனக்கு நீ என்ன குறவச்ச..?? உன்ன கல்யாணம் பண்ணிக்க நான் எவ்வளவு குடுத்து வச்சிருக்கேன் தெரியுமா….??

என்ன விட உனக்கு மத்தவங்க அபிப்ராயமா முக்கியம்…???

இனிமே உங்கண்ணிலேர்ந்து ஒரு சொட்டு கண்ணீர் வரக்கூடாது…ஆமா…. சொல்லிட்டேன்…!

அம்மா மனம் மட்டும் இளகவேயில்லை…

அப்பா வாயே வாயே திறக்கமாட்டார்….சாப்பிடும் நேரம் தவிர….

ஒருநாளாவது அம்மாவைப் பற்றி தவறாக புவனா என்னிடம் கூறியதேயில்லை…

பாவம்.கடைசி வரை அம்மா மனசு மாறவேயில்லை….

அப்பா.அம்மா..காலம் முடிந்ததும் தீர்மானம் செய்து விட்டேன்..!

புவனாவை எக்காரணம் கொண்டும் முகம் வாட விடுவதில்லை என்று.

ஏதாவது சொல்லி சிரிக்க வைத்துவிடுவேன், அசட்டு ஜோக் என்று புவனா கேலி செய்தாலும் சரி…!

***

“சரி..கோவில்ல பாத்த ஆசாமி என்ன சொன்னார்….???”

“ஆசாமி இல்லீங்க…சாமி…..”

“சரி…சாமி…சொல்லு…..!!”

“நாம சாப்பிடறதெல்லாமே விஷமாம்…!!”

“ஐய்யய்யோ….நம்ம வீட்டுக்கு அவரு எப்ப வந்தாரு….???”

“நாமன்னா நாம மட்டும் இல்லீங்க… பொதுவா இந்த காலத்து சாப்பாடு சரியில்லையாம்….!!”

“அப்புறம்….??”

“பூமிக்கு கீழ் இருக்கிறதெல்லாம் ஆகாதாம்…!!!”

“பூமிக்கு மேல இருக்கிறதெல்லாம் திங்கலாமா…பறக்கிறது…ஒடறது… இதெல்லாம் …..????

“நீங்க குறுக்க குறுக்க பேசினா நான் எழுந்திரிச்சு போயிடுவேன்…!!”

“இல்ல..சொல்லு….!!”

“பச்ச பசேல்னு இருக்கிற எல்லாமே சாப்பிடலாமாம்….!”

“புல்லு கூட பச்சையாத்தானே இருக்கு!!!”

“சரியா சொன்னீங்க…காலைல எந்திரிச்சதும் அருகம்புல் ஜுஸ் குடிச்சா அவ்வளவு நல்லதாம்..!!”

“அதோட கொள்ளும் சேத்து சாப்பிட்டா குதிர மாதிரி ஓடலாமே….”

புவனா நான் சொல்வதைப் பொருட்படுத்தாமல் மேலே பேசிக்கொண்டே போனாள்….

“ஒரு கீரையும் தள்ளாதீங்க..மாடில எல்லா கீரையும் போடலாம்..நானே வீட்டுக்கு வந்து காட்டித் தரேன்..’ ன்னு சொல்லியிருக்கிறார்னா பாத்துக்குங்க…”

“அவரு எப்படி இருப்பார் சொல்லு….”

“கொஞ்சம் குள்ளம்… நிறம் மட்டுதான…தல நரச்சு…தாடி நீளமா..”

“மூக்கில ஒரு பெரிய மரு…!!”

“அவரேதான்… உங்களுக்கு எப்படி தெரியும்….???”

சரவணபவன்ல ‘ஈவினிங் பூரி.. கிழங்கு..ஆலு பரோட்டா.. பாஸந்தி’ ரெகுலரா வந்து சாப்பிடுவார்னு சொன்னா தொலைந்தேன்…!

‘உங்களுக்கு எப்படி தெரியும்னு கேட்டா…???’

புவனா..நீ எல்லாரையும் நம்பாத…பாதி ஃப்ராடா கூட இருக்கலாம்…!!! (என்னையும் சேத்துதான்)…

ஒரு தடவை புவனா ..முதுகு வலி… தூக்கம் வரவில்லையென்று…

‘வரகுணநாதன்னு ஒரு சாமியார் இருக்கார்..அவரப் போய் பாத்துட்டு வரேன்’ன்னு போனாள்..

அவர், ‘கட்டில்ல படுக்கவே கூடாது..தரையில தலைகாணி கூட இல்லாம படுத்தா மூணு நாள்ல முதுகுவலி போய் …

நல்லா தூக்கம் வரும்னு சொன்னத நம்பி கீழ் படுத்தவதான்…

அப்புறம் அவள எழுப்பி உட்கார வச்சதில என் முதுகு பிடித்துக் கொண்டு ஒரு மாதம் தரையில் படுக்க வேண்டி வந்து விட்டது….

எதுக்கும் தயாராக இருந்தேன்….

தோட்டத்தில் இருந்த பூச்செடிகள் எல்லாம் காணாமல் போய், இப்போது எங்கு பார்த்தாலும் கீரை மயம்.. !!!!!

அரைக் கீரை, முளைக்கீரை , பொன்னாங்கண்ணி, அகத்திக்கீரை, சுக்கட்டி கீரை… இன்னும் புதிய புதிய கீரைகள்…!!!!

“இதோ பாருங்க..இது ஆடாதோடா..ஆடு தொடா கீர… அவ்வளவு சத்து…!!”

“ஆடு கூட சீந்தலன்னா எனக்கென்னவோ சந்தேகமாக இருக்கு…”

“உங்களுக்கு எதில சந்தேகம் வரமா இருக்கு….???”

ஒரு மாதிரி வீட்டுத் தோட்டத்தை ஆட்டுத் தோட்டமாக மாற்றி விட்டாள்….!!!!

இன்னும் கொஞ்ச நாளில் நானும் புவனாவும் ‘ மே…ம்மே…’ என்று கத்தினாலும் ஆச்சரியப்படாதீர்கள்….!!!!

கீரை போட்டதிலிருந்து எனக்கு வேலை கூடிப் போச்சு…

“சும்மா…மோட்டு வளையப் பாத்துட்டு உக்காந்துதானே இருக்கீங்க… இந்த கீரையை ஆஞ்சு குடுங்க….”

ஆட்டுக்குத் தழை காட்டுவதைப்போல தினம் விதம் விதமா கட்டுக் கீரையை என்முன்னால் போட்டு விட்டு போய்விடுவாள்…!!!!

ஆடாகப் பிறந்திருந்தால் நான்பாட்டுக்கு அதை மேய்ந்து விட்டு போயிருப்பேன்…..!!!!

சில நாள் என்னையே பறித்துக் கொண்டு வரவும் சொல்வாள்..

ஆனால் சும்மா சொல்லக் கூடாது…கீரையை எப்படியோ ஒரு வழி பண்ணி…

“ஆஹா…பேஷ்.. பேஷ்… ரொம்ப நன்னாயிருக்கே ‘ என்று சொல்ல வைத்து விடுவாள்….

ஒரு நாள் சமையலறையில் நுழைந்தவன் அப்படியே பிரமித்துப் போய் நின்று விட்டேன்…

எனக்குத் தெரியாமல் எப்போது அறைக்குப் பச்சை பெயிண்ட் அடித்தாள்…..???

‘எல்லாம் பச்சை மயம்’!

M.L.V. குரலில் பாட வேண்டும் போல இருந்தது…..

கண்ணைக் கசக்கி விட்டுக் கொண்டு நன்றாகப் பார்த்தேன்….

சின்ன சின்னதாய் ட்ரேயில் பச்சை பசேலென்று முளைத்து நிற்கும் பச்சை குருத்துகள்…!!!

“என்ன புவனா…?? வீட்டுக்குள்ளேயும் தோட்டமா…???”

“ஆமாங்க…இது பேரு ‘ Micro Greens’..!!

“என்னென்னவோ சொல்ற.. புரியும்படி சொல்லேன்….”

“அதாவது….செடி முளச்சு பிஞ்சு இலைங்க வருமில்ல..அது அத்தனையும் சத்து..

வெந்தயம், தனியா, பட்டாணி, முள்ளங்கி, பீட்ருட்..எது வேணாலும் போடலாம்… இந்தமாதிரி சின்ன ட்ரேயில கொஞ்சம் மண் போதுங்க…”

“ஓ .அடுப்பில் குழம்பு கொதிக்கும்போ அப்படியே பறிச்சு , பறிச்சு போட்டுக்கலாம்…

சூப்பர் ஐடியா….!!! உனக்கு டாக்டர் பட்டமே தரலாம் போலியே…..!!!”

அடுத்தநாள் காலை எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது….!!!

வழக்கம் போல காலையில் தினசரியை எடுத்து வைத்துக் கொண்டு காப்பிக்காக தயாராயிருந்தேன்.

பேப்பரை படித்துக் கொண்டே ஒரு வாய் காப்பியை வாயில் வைத்து உறிஞ்ச……?????

“புவனா..என்ன இது??? காப்பி கசப்பா , கறுப்பா…???”

“நான் கொண்டு வந்து வைக்கும் போதே சொல்ல ஆரம்பிச்சேங்க…

உங்களுக்குத்தான் பேப்பர் படிக்கும்போ பூகம்பமே வந்தாலும் தெரியாதே..!!

சரி எங் காப்பியையும் எடுத்துட்டு வரலாம்னு….”

“இது பேரு காப்பியா….???”

கொஞ்சம் அதட்டி விட்டேன் போலிருக்கிறது..

புவனா பயத்தில் ஏதோ உளற ஆரம்பித்தாள்..

“அது வந்து…. காப்பி ஒடம்புக்கு கெடுதலாம்…காலைல எந்திரிச்சதும் இரண்டு சுக்கு தட்டிப்போட்டு..துளசி…வெத்தலை..”

“போதும் நிறுத்து…இத்தன நாள் பேசாமல் தானே இருந்தேன்..

உனக்குத் தெரியுமில்ல…இந்த காப்பி இல்லைனா எனக்கு ஒண்ணுமே ஓடாதுன்னு…

கடைசில அங்க சுத்தி, இங்க சுத்தி என் காப்பில கை வச்சிட்டயே….இது மனுஷன் குடிப்பானா…???”

தூக்கி வீசி விட்டேன்…. பாவம் பயந்து போய் விட்டாள்….

“ஸாரிங்க…இதோ இப்பவே போய் உங்க ஸ்பெஷல் காப்பி போட்டு எடுத்துட்டு வரேன்….”

அப்படியும் விடுவதாயில்லை…
மறுநாள் சாப்பாட்டு மேசை மேல் வட்ட வட்டமாய்… கருப்பும் பச்சையுமாய்…!!!!

“புவனா… ஏன் வறட்டிய வாங்கி இங்க வச்சிருக்க…செடிக்கு ஏதாவது உரம் போடணுமா…??”

“ஐய்யே..அது ஒண்ணும் வறட்டி இல்ல..அக்கி ரொட்டி…

செரிமானத்துக்கு ரொம்ப நல்லதாம்…தொட்டுக்க பாருங்க..பிரண்ட துவையல்…”

இது ஒண்ணும் சரிப்பட்டு வராது என்று தோன்றியது….

இவளை எப்படி மாற்றுவது…..????

ஒருநாள் சரவணபவனுக்கு கூட்டிக் கொண்டு போய் கீரை சாமியை காட்டலாமா….???

அதுக்கெல்லாம் வேலையே இல்லாமல் போய்விட்டது…..

ஒரு நாள் தீடீரென்று புவனா வயிற்றைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டாள்….

“ஐய்யோ…அம்மா..முடியலையே..!!”

“புவனா என்ன செய்யுது…??”

“சொழட்டி சொழட்டி வலிக்குதுங்க…உயிரு போகுது…”

“இரு.. டாக்ஸிக்கு ஃபோன் பண்றேன்…நம்பி கிட்ட போகலாம்…!!”

“நம்பி எங்கள் குடும்ப டாக்டர்..நம்பியை நம்பினோர் கைவிடப்படார்… எங்களுக்கு அவர்தான் ராசியான டாக்டர்…”

“வாங்க சுதாகர்…வாங்ம்மா…!!?

நல்லா இருக்கீங்களான்னு கேக்க முடியாத ஒரே தொழில் டாக்டர் தொழில்தானே…!!!

நல்லாயிருந்தா என்னப் பாக்க ஏன் வரப்போறீங்க….???

நன்றாகப் பேசும் டாக்டர்களைப் பார்ப்பதே அபூர்வமாகிவிட்டதே..

கண்ணாலேயே தலையிலிருந்து கால் வரை ஸ்கேன் பண்ணி உடனே ப்ரிஸ்கிரிப்ஷன் எழுதிக் கொடுத்து விட்டு…
“அடுத்த பேஷன்ட்ட அனுப்பும்மா…”என்று சொல்லும் டாக்டர்கள் தானே அதிகம் இருக்கிறார்கள்…!!!

எனக்குத் தெரிந்த ஒரு டாக்டர் ஒரு நோயாளி உள்ளே இருக்கும்போதே அடுத்த நோயாளியை உள்ளே வரவழைத்து அஸிஸ்டன்டை வைத்து செக் பண்ண தொடங்கிவிடுவார்..

அவ்வளவு பிஸியாம்….!!!!

பாவம் புவனா வலியால் துடித்துக் கொண்டிருக்கும்போது என்ன வளவளன்னு பேச்சு என்கிறீர்களா…???

“போய் ஒரு அப்டாமினல் ஸ்கேன் எடுத்துட்டு வாங்கம்மா….”!

எல்லா டெஸ்ட்டும் முடிந்தது..

“அம்மா..பயப்படும்படியா ஒண்ணுமில்ல.. கிட்னியில சின்ன ஸ்டோன்..நிறைய தண்ணி குடிங்க….அதுவே வந்திடும்…ஆமா நிறைய கீரை சாப்பிடுவீங்களோ…???”

“நிறைய இல்ல டாக்டர்.. கீரை மட்டுமேதான் சாப்பிடுவோம்….!!”

“கொஞ்ச நாளைக்கு நிறுத்தி வையுங்க..இந்த மருந்தையும் சாப்பிடுங்க…பயமே வேண்டாம்….”

“புவனா…நீ எதுக்காக உன்ன வருத்திக்கிற…நீ எப்படி இருக்கிறயோ அப்படியே இரு…

எப்பவுமே மத்தவங்களுக்காக நம்மள மாத்திக்க நெனச்சா அதுக்கு ஒரு முடிவே இல்ல…இந்த புவனாவைத்தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கே… அப்புறம் என்ன கவலை…???

“ஏங்க இத்தனை கீரையும் வீணாப் போகுதே….!!”

“அதுக்கு ஒரு வழி இருக்கு….!!”

“ஹலோ…மாடசாமி…உன்னோட ஆட்டுக்கு சரியான தீவனம் இல்லைன்னு சொன்னியே… நாளைக்கு ஆட்ட கூட்டிட்டு வீட்டுக்கு வா…”

இப்போதெல்லாம் புவனாவுக்கு ஆட்டுக் குட்டியுடனே பொழுது சரியாகப் போய் விடுகிறது..

எங்கள் வீட்டிலிருந்து ‘ம்மேமே…’ என்று சத்தம் கேட்கிறதா.. ???

சத்தியமாய் நாங்கள் இல்லை..!!!!! நல்லவேளை தப்பித்தேன்…!!!

Print Friendly, PDF & Email

0 thoughts on “ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ…

  1. Thanks Sister for your appreciation.

    The society yet to change a lot. I hope the next generation are not giving much importance to these mythological belief.

  2. Sir, really nice to read a story like this n appreciate you very much…mostly men are like sugavanam n somu in our society. So men are always following their father or grand father or someone has to tell about women, y they don’t think? Because sugavanam also had a mother n somu also had a mother ..y they didnt think ?not in your story sir but in real life….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *