(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மாதா கோயிலின் மணியோசையிலிருந்து மணி ஒன்பது என்று தெரிந்தால் போதும்; வாத்தியார் வைத்தியலிங்கம் தலைப்பாகையை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு, “சரி, நான் போகிறேன்!” என்பார்தம் சகதர்மிணியிடம்.
“அபசகுனம் மாதிரி ‘போகிறேன், போகிறேன்’ என்று சொல்கிறீர்களே? ‘போய் வருகிறேன்’ என்று சொல்லுங்கள்!”என்று திருத்துவாள் அவள்.
“ஆமாம், நான் போய்விட்டால் உலகமே அஸ்தமித்து விடுமாக்கும்?” என்பார் வாத்தியார் வெறுப்புடன்.
“அதற்கு என்னை ஏன் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமாம்?” என்று தன் மேலாக்கை எடுத்துக் கண்களைத் துடைத்து விட்டுக் கொள்வாள் அவள்.
“அடி, அசடே! நான் மட்டுமா உன்னைக் கல்யாணம் செய்து கொண்டேன்? நீயுந்தானே என்னைக் கல்யாணம் செய்துகொண்டாய்?” என்று சொல்லி, வராத சிரிப்பை வரவழைத்துக் கொள்வார் வாத்தியார். உடனே அவருடைய சகதர்மிணியின் கோபமும் ஒருவாறு தணிந்து விடும், அவ்வளவுதான்; பள்ளிக்கூடத்தை நோக்கி வாத்தியார் நடையைக் கட்டிவிடுவார்.
வழியெல்லாம் அவருக்குத் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் – அவரிடம் படித்தவர்கள் – இப்படி எத்தனையோ பேர் அவரைச் சந்திப்பார்கள். “என்ன, வாத்தியார் வாள்! – நமஸ்காரம் – செளக்கியந்தானே?” என்று கை கூப்பிய வண்ணம் வழக்கமாகக் கேட்கும் அந்த அசட்டுக் கேள்வியைக் கேட்காமல் விடமாட்டார்க்ள்.
“நேற்றுத்தான் வாத்தியார் செளக்கியமாயிருந்தாரே, இன்று அவருடைய செளக்கியத்திற்கு என்ன ஆபத்து வந்துவிட்டிருக்கப் போகிறது!” என்று எண்ணி, அவர்கள் ஒரு நாளாவது சும்மா இருக்க வேண்டுமே? – ஊஹும்!
அப்பாவி வாத்தியார் என்ன செய்வார், பாவம்! – அவரும் அவர்களுக்குச் சளைக்காமல், “செள…க்..கி….ய…ந்… தா….ன்!” என்று முகஸ்துதிக்காக ஒரு பச்சை பொய்யைக் கொஞ்சம் தயக்கத்துடன் சொல்லிவிட்டு மேலே நடப்பார்.
இடையே கோயில்கள் வேறு வந்து குறுக்கிடும். வாத்தியார் வைத்தியலிங்கம் பிள்ளையைவிட எத்தனையோ விதத்தில் உயர்ந்தவர்கள் பலர் காரிலும் மற்ற வாகனங்களிலும் அதே ரஸ்தாவில்தான் சென்று கொண்டிருப்பார்கள், அவர்களெல்லாம் தங்களைக் குறுக்கிடும் கோயில்களைப் பற்றிக் கவலைப்படுவதே கிடையாது. இந்த விஷயத்தில் வாத்தியார் வைத்தியலிங்கம் மட்டும் அவர்களுக்கு நேர் விரோதம். எந்தக் கோயிலைக் கண்டாலும் சரி, உடனே தமது பாதரட்சைகளைக் கழற்றிக் கீழேவிட்டு விட்டு, பவ்யமாக ஒரு ‘கும்பிடு’ போட்டுவிட்டுத்தான் அப்பால் செல்வார். விஷ்ணு கோயில், சிவன் கோயிலாயிருந்தால் இந்த ஒரே ஒரு கும்பிடோடு சரி – விநாயகராயிருந்துவிட்டாலோ தொல்லை தான் – பிரதட்சணம் வருவதோடு தோப்புக்கரணம் வேறு போட வேண்டும்; காதைப் பிடித்துக் கொள்வதோடு கன்னத்தில் வேறு போட்டுக் கொள்ள வேண்டும். இதெல்லாம்தான் போகட்டும் என்றால், தலையிலாவது குட்டிக் கொள்ளாமல் இருப்பார் என்கிறீர்களா – அதுதான் கிடையாது! – எண்ணி மூன்று குட்டுகள் குட்டிக் கொள்ளாமல் அடுத்தடி வைக்கமாட்டார்!
இதில் ஆச்சரியம் என்னவென்றால், மேற்கண்டவாறு கோயிலுக்குக் கோயில் நின்று தொழுது சென்ற வாத்தியார் பூலோகத்தில் நரகத்தைக் கண்டார்; தொழாமலே சென்றவர்களோ, சொர்க்கத்தைக் கண்டார்கள்!
***
எது இருந்தாலும் எது இல்லாமற் போனாலும் வாத்தியார் வைத்தியலிங்கம் எத்தனையோ விதத்தில் கொடுத்து வைத்தவர். தங்களுடைய பிள்ளைகளுக்குக் கல்யாணம் ஆகும் வரை தாங்கள் இருந்தால் போதும் என்று பகவானை அல்லும் பகலும் அனவரதமும் பிரார்த்தனை செய்து கொண்டு வந்த அவருடைய பெற்றோர், அவருக்கு ஏழாவது குழந்தை பிறந்துங்கூட உயிருடன் இருந்தார்கள்; கல்யாணம் பண்ணிக்கொண்டு புக்ககம் போனதங்கை, அண்ணாவை நீண்ட நாட்கள் பிரிந்திருக்க மனமில்லாமலோ என்னவோ, அடுத்த வருஷமே விதவைக் கோலத்துடன்பிறந்தகம் வந்து சேர்ந்துவிட்டாள்; அவருடைய மனைவி மங்களமும் ஸ்ரீதனமாக ஒன்றும் கொண்டு வராமற் போகவில்லை – தன்னுடன் பெற்றோரையிழந்த இரண்டு தங்கைமாரைக் கட்டி கட்டியாகக் கொண்டு வந்திருந்தாள்!
இத்தனை விஷயங்களில் கொடுத்து வைத்திருந்த வாத்தியார், ஒரே விஷயத்தில் மட்டும் ஏனோ கொடுத்து வைக்கவில்லை. அதாவது அவருக்குப் பிறந்த ஏழு குழந்தைகளும் உயிரோடு இருக்கவில்லை. என்ன இருந்தாலும் கடவுள் கருணையுள்ளவரல்லவா? அவற்றில் ஆறு குழந்தைகளைத் தம்மிடம் அழைத்துக் கொண்டார். நான்காவதாகப் பிறந்த ஒரே ஒரு ஆண் குழந்தை மட்டும் தான் அவருக்கு இருந்தது. அதற்கு இப்போது ஆறாவது வயது நடந்து கொண்டிருக்கிறது. ஆக எட்டு ஜீவன்களும் வாத்தியார் வைத்தியலிங்கத்தின் வரும்படியை எதிர்பார்த்துத் தங்கள் காலத்தைக் கழித்து வந்தன.
இந்த லட்சணத்தில்தான் தன்னுடைய ஏக புத்திரஜயசந்திரனுக்கு நல்ல முறையில் அக்ஷராப்பியாசம் செய்து வைக்க வேண்டுமென்று விரும்பினாள் மங்களம். அதற்கேற்றாற்போல், அடுத்த தெருவில் வசிக்கும் அழகிரிசாமி என்பவன் – சின்னஞ் சிறு வயதில் வைத்தியலிங்கம் வாத்தியாரிடம் கல்வி கற்றவன் – அன்று கையில் அக்ஷராப்பியாசப் பத்திரிக்கையுடன் அவர்கள் வீட்டைத் தேடி வந்தான்.
“வாடா, வா! என்ன விசேஷம்?”என்று வாத்சல்யத்துடன் அவனை வரவேற்றார் வைத்தியலிங்கம்.
“குழந்தை குமரேசனுக்கு அடுத்த வாரம் அக்ஷராப்பியாசம், அழைப்பிதழ் வைத்துவிட்டுப் போகலாமென்று வந்தேன்”என்று சொல்லிக் கொண்டே, ஒரு பத்திரிக்கையை எடுத்து அவரிடம் நீட்டினான் அழகிரிசாமி.
“ரொம்ப சந்தோஷம்!” என்று அதை வாங்கிக் கொண்டார் வாத்தியார்.
“என்னமோ, எல்லாம் உங்க புண்ணியந்தான்! அன்று நீங்கள் என்னைத் தெருத் தெருவாகத் தேடியலைந்து இழுத்துக் கொண்டு போய் அத்தனை அக்கறையுடன் பாடம் சொல்லிக் கொடுத்திராவிட்டால் இன்று நான் எப்படி இருந்திருப்பேனோ?”
“என் புண்ணியமென்ன, புண்ணியம்? எல்லாம் கடவுளின் கிருபை என்று சொல்லு!”
“அப்படிச் சொல்லிவிட முடியுமா? எனக்குத் தெரிந்த கடவுள் நீங்கள்தான்! – எது எப்படியானாலும் குழந்தையின் அக்ஷராப்பியாசத்திற்கு நீங்கள் அவசியம் வரவேணும். அவனையும் உங்கள் பள்ளிக்கூடத்தில்தான் சேர்க்கப் போகிறேன். என்னைக் கவனித்துக் கொண்டது போல் அவனையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேணும்…”
“அதற்கென்ன, அப்படியே ஆகட்டும்”
“நமஸ்காரம்!”
அவன் போய்விட்டான்; மங்களம் ஆரம்பித்தாள்.
“ஆமாம், நம் ஜயச்சந்திரனுக்கு ஐந்து வருஷங்கள் பூர்த்தியாகி ஆறாவது வருஷங்கூடப் பிறந்து விட்டதே இன்னும் எப்பொழுதுதான் அவனுக்கு நீங்கள் அக்ஷராப்பியாசம் செய்துவைக்கப் போகிறீர்கள்?”
“சரிதான்போடி, அது ஒன்றுதான் குறைச்சல் நமக்கு!”
“என்ன, அப்படிச்சொல்கிறீர்களே!இருப்பது ஒரு குழந்தை…”
“நான்மட்டும் இரண்டு என்றா சொல்கிறேன்?”
“உங்கள் பரிகாசமெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்; கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்;”
“என்னடி, உனக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது? வயிற்றுச் சோற்றுக்கே வரும்படி போதாமல் மாதம் பிறந்தால் பத்தும் இருபதுமாகக் கடன் வாங்கிக் காலஷேபம் செய்ய வேண்டி யிருக்கிறது; அக்ஷராப்பியாசம் என்கிறாயே!”
“ரொம்ப அழகாய்த்தான் இருக்கிறது! ஊர்ப் பிள்ளைகளெல்லாம் உங்களைக் கொண்டு படிக்க வேண்டும்; உங்கள் பிள்ளை மட்டும் தற்குறியாகத் திரிய வேண்டுமாக்கும்?”
“அதற்கென்ன, அப்படியா விட்டுவிடுவேன்? பெற்றெடுத்த தோஷத்துக்காக அவனுக்கு அக்ஷராப்பியாசம் செய்து வைக்காவிட்டாலும் ஆபீஸாப்பியாசமாவது செய்து வைக்க மாட்டேனா?”
“அதென்ன, ஆபீஸாப்பியாசம்….?”
“சரியாய்ப் போச்சு; தயவு செய்து நீ கொஞ்ச நேரம் பேசாமலிரேன்! அதைப்பற்றி அப்புறம் பேசிக் கொள்ளலாம்.இப்போது வீட்டுச் செலவுக்கு இந்த மாதம் யாரிடம் இருபது ரூபாய் மேற்கொண்டு கடன் வாங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்தவர்களிலோ ஒருவர் கூடப் பாக்கி இல்லை; எல்லோரிடமும் வாங்கியாகிவிட்டது. புதிதாக யாரையாவது பிடிக்க வேண்டும். யாரைப் பிடிப்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன். இந்தச் சமயத்தில் வந்து நீ என்கழுத்தை அறுக்கிறாயே!” என்று எரிந்து விழுந்தார் வாத்தியார்.
“உங்களுக்கு ஏன் பெண்டாட்டியும் பிள்ளையும் என்று எனக்குத் தெரியவில்லை!” என்றாள் அவள்.
“உனக்கு ஏன் புருஷனும் பிள்ளையும் என்று எனக்கும் தெரியவில்லை!” என்றார் அவர்.
***
இந்தச்சம்பவம் நடந்து ஏறக்குறைய ஒரு மாதம் ஆகியிருக்கும். என்றுமில்லாத திருநாளாய் அன்று வாத்தியார் பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போதே ஆனந்த பரவசத்துடன் வந்தார். இந்தக்கோலத்தில் அவரைக் கண்டதும் மங்களம் “என்ன விசேஷம் ?”என்று உற்சாகத்துடன் கேட்டுக் கொண்டேசமையலறையிலிருந்து வெளியே வந்தாள்.
“ஏதாவது விசேஷம் இல்லாமல் நான் இப்படியிருப்பேனா? நீயுந்தான் இத்தனை வருஷங்களாக என்னுடன் குடித்தனம் செய்துகொண்டு வருகிறாயே, என்னைப் பற்றிக் கொஞ்சமாவது தெரிந்து வைத்துக்கொண்டிருக்கிறாயா? வாழ்க்கையில் என்றைக் காவது ஒரு நாள் நான் சந்தோஷமாயிருக்கிறனென்றால், அன்று எங்கேயாவது பத்தோ, இருபதோ கடன் வாங்கியிருப்பேன்….!”
“பேசுகிறீர்களே, நீங்களும் ஒரு ஆண்பிள்ளை மாதிரி! பையனின் அக்ஷராப்பியாசத்திற்கு ஏதாவது ஏற்பாடு செய்து விட்டீர்களாக்கும் என்று நான் கேட்க வந்தால்…”
“கவலைப்படாதே; அதற்கும் ஏற்பாடு செய்துவிட்டேன்….”
“என்ன பணத்திற்கா?”
“ஆமாம்; அப்படித்தான் வைத்துக் கொள்ளேன்!”
“எவ்வளவு?”
“மாதம் பதினைந்து ரூபாய்!”
“என்ன பிதற்றுகிறீர்? மாதம் பதினைந்து ரூபாய் வாங்கி அக்ஷராப்பியாசம் எப்படிச் செய்வதாம்?” “அக்ஷராப்பியாசம் என்னடி, அக்ஷராப்பியாசம்! இதோ பார், அடேய் சுந்தர்! அடேய் சுந்தர்…!
“பையன் வந்தான்; “என்ன அப்பா?”என்று கேட்டான்.
“கோடி வீட்டுக் கோடீஸ்வர ஐயரை உனக்குத் தெரியுமா?”
“தெரியுமே!”
“நாளையிலிருந்து நீ அவருடன் போ! அவர், தம் ஆபீஸில் உனக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுப்பார்.என்ன வேலை தெரியுமா? மானேஜர் மேஜையின் மேலிருக்கும் மணி ‘டங்’ என்று ஒலித்ததும், அவருக்கு முன்னால் நீ போய் பயபக்தியுடன் நின்று, “ஏன் ஸார்?” என்று கேட்க வேண்டும்; அவர் வருவதற்கு முன்னால் அவருடைய மேஜை, நாற்காலி முதலியவற்றை துடைத்து வைக்க வேண்டும், என்ன தெரிந்ததா?”
“தெரிந்தது அப்பா!”
பையன் போய்விட்டான். அவன் சென்றதும் மங்களம் இடுப்பில் கையை வைத்துக்கொண்டு ‘இதுதான் அக்ஷராப்பியாசமா? இல்லை, கேட்கிறேன்!” என்று இன்னொரு கையை வாத்தியாருக்கு முன்னால் நீட்டிக் கேட்டாள்.
“யார் சொன்னது? – இது ஆபீஸாப்பியாசண்டி, ஆபீஸாப்பியாசம்”!என்றார் சிரித்துக் கொண்டே.
– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.