(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அன்புமிக்க சுஜாதா,
பெண்கள் ஒருவருக்கொருவர் எழுதும் கடிதத்தில் ஆடை, ஆபரணத்தைப் பற்றி ஒன்றுமே வரவில்லையே யென உன் கணவர் கேலியாகக் கேட்டதாக எழுதியிருந்தாய். காலம் மாறிப் போய்விட்டது என்று அவரிடம் சொல்லு, பெண்களுக்கு அவற்றைத் தவிர அநேக விஷயங்கள் தெரியும். இன்றையப் பெண்கள் அறிவு ஆற்றலில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். மிகச் சிறிய அளவில் குறைகள் இருப்பதைப் பெரிதாக நினைக்கக் கூடாது. பெண்களைப் பற்றி எழுதுவதென்றால் சிலர் நகைக்கடை, புடவைக்கடை இவைதான் தெரியுமென நினைத்து அதைப் பெரிய ஹாஸ்யமாக எழுதுகிறர்கள். அது வருந்தத்தக்கது.
பெண்களுக்கு நகை கொடுக்கும் அழகை விடப் புன்னகைதான் அழகை அள்ளிக் கொடுக்கும். விலைமதிப்புள்ள ஆபரணங்களைப் போட்டுக் கொண்டு கோபமாக, சிடுசிடுப்பாக இருப்பது நன்றாக இல்லை. எவ்வளவோ அலங்காரம் இருந்தும் அந்தத் தோற்றத்தில் ஒரு குறைவைக் காண்கிறேம். திருவள்ளுவர் துன்பத்திலும் நகைக்கும்படி கூறினார். விவேகானந்தர் கஷ்டம் வந்தபோது கூடச் சிரிக்கச் சொன்னார். சகுந்தலையின் முகத்தில் மலர்ச்சி இருந்ததால், காட்டுமலர்கள் கூட அவளுக்கு அழகைக் கொடுத்தன.
நகைகள் போட்டுக் கொள்வதை நான் தவறாகச் சொல்லவில்லை, மங்களகரமாக இருப்பதற்காக நகைகள் ஓரளவு போட்டுக் கொள்ளலாம். வசதியுள்ளவர்கள் நிறையப் போட்டுக் கொள்ளட்டும்! ஆனால் வசதியில்லாதவர்கள் நகைகள் இல்லையே என ஏங்கித் தவிக்க வேண்டிய அவசியமில்லை யல்லவா? ஒரு பெண் தன் வாழ்க்கையில் இன்றியமையாத பொருள் நகைகள்தான் எனக் கருதும் மனப்பான்மை ஒழிய வேண்டுமானால், பெண் சமூகம் அந்த மனப்பான்மையை மாற்ற முயல வேண்டும்.
மதிப்புக்குரிய ஒரு சகோதரி மிகவும் வருத்தத்துடன் ஒரு அநுபவத்தைச் சொன்னார், ஒரு வீட்டில் நடந்த பெரிய விசேஷத்தில் வைரத் தோடில்லாத ஒரு அம்மாவைக் காவற்காரன் வெளியே பிடித்துத் தள்ளிவிட்டானாம். அந்த அம்மாள் நகையில்லாத குறையினால் தனக்கு இவ்வளவு அவமதிப்பு ஏற்பட்டது என்றாராம். இதைக் கேட்டு இந்தச் சகோதரிக்கு மனம் புண்ணாகியது. இதை மிகுந்த வேதனையுடன் என்னிடம் அந்தச சகோதரி கூறினார்.
நான் வற்புறுத்திச் சொல்வதெல்லாம் நகைகள் விசேஷமாக இல்லாதவர்கள், நிறைய இருப்பவர்கள் அனைவரும் சமூகத்தில் சமநிலை பெற வேண்டும் என்பதுதான். இல்லாதவர்களுக்கு அவமதிப்பு ஏற்படும் போது எப்பாடு பட்டாவது நகை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது. அதை ஒட்டிப் பல குடும்பங்களில் பல தவறுகள் நேர்த்திருக்கின்றன.
இந்த ஒரு காரணத்தில் சிலர் போலி நகைகளை வாங்கிக் குவிக்கிறார்கள். அது அநாவசியச் செலவு. விலை மதிப்புள்ள ஆபரணங்களாவது ஆபத்தில் உதவும். படாடோபத்துக்காகப் போலிகளை வாங்குவது நாகரிக உலகில் இடம் பெறுகின்றன.
வயதுக்கேற்ற அலங்காரம் என ஒன்று இருப்பதை மறந்து விடுவது கேலிக்கூத்தாகிறது. அவங்காரம் மனத்துக்கு ஒரு வித திருப்தி அளிக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அதே சமயம் பிறகுக்கும் பார்க்க ரம்மியமாக இருக்க வேண்டும் அல்லவா? பெண்கள் வயதை மறைக்க விரும்புவது இயல்புதான். அது அமெரிக்கா போன்ற முற்போக்கான நாடுகளிலும் இருக்கிறது.
குடும்பத் தலைவி, குழந்தைகளுடைய தாய், மதிப்புள்ள கணவனின் மனைவி என்றெல்லாம் அந்தஸ்தை அடைந்த ஒருவர் தன் அலங்காரத்தையும் மதிப்புக்குரியதாகச் செய்து கொள்வதுதான் சரியாகும். சில பெண்கள் புது மோஸ்தருக்காக நகைகளை அடிக்கடி மாற்றிச் செய்து கொள்ளுகிறர்கள். அதுவும் அவசியமான செலவல்ல.
பெற்றோர்களுக்குத் தங்கள் குழந்தைகளிடம் அன்பு இருப்பது இயல்புதான். ஆனால் குழந்தைகளிடம் வைத்திருக்கும் அன்பை மானசீகமாக வைத்துக்கொள்ள வேண்டும். அன்பு மிகுதியில் கண்மூடித்தனமாகப் பணத்தைக் கொட்டிப் பல நகைகளைச் செய்து குழந்தைகளுக்குப் போட்டு அழகு பார்க்க விரும்புவது அந்தக் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக முடிகிறது என்பதை நாம் கண் கூடாகக் காண்கிறேம். அதுவும் குழந்தைகளுக்கு நகைகளை நிறையப் போட்டுப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவதனால் விளையும் விபத்துக்களைப் பத்திரிகைகளில் அடிக்கடி பார்க்கிறோம். அந்த விஷயத்திலும் சகோதரிகள் ஆசையை மட்டுப் படுத்திக் கொள்ளத்தான் வேண்டும்.
வடநாட்டுச் சகோதரிகளிடையே நகை மோகம் குறைவாக இருப்பதை நீயும் குறிப்பிட்டு எழுதி யிருந்தாய், நானும் சில வடநாட்டுச் சகோதரிகளிடம் பழகி வருவதால் உன் கருத்தை முழு மனத்துடன் ஆமோதிக்கிறேன்.
இப்படிக்கு,
பூமாதேவி
– தேவியின் கடிதம், கல்கியில் 1956-இல் தொடங்கிய தொடர்.