ஆனைத் தீ

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 8, 2023
பார்வையிட்டோர்: 1,477 
 
 

(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஊட்டுப் போட்டுத் தரணு மின்னான் 
ஒத்த பிள்ளை சுடலையாண்டி! 

என்று பாடிக் கொண்டு, வில்லுப் புலவன் வீராசாமிப் படையாச்சி பிடரியில் விழுந்து புரளும் தலைமயிரை அள்ளிச் செருகிக் கொண்டே, கட்டாரித் தேவன் வீட்டு வாசலில் கால் வைத்தான். 

உள்ளே, மார்பின் மேல் வரிந்து கட்டிய சேலை நெகிழாமல், உடற்கட்டின் ஒவ்வொரு அங்கமும் பின்னி விட்ட சாட்டையைப் போல் துவண்டு துவண்டு திமிற, மாடத்தி முற்றத்திலுள்ள கற்குழியில் நெல்லையிட்டு உலக்கைக் கொண்டு குத்திக் கொண்டிருந்தாள். இரண்டு கையும் மாறி மாறி நெல்லைக் குத்த, பாதத்தால் குழியை விட்டு வெளிவரும் நெல் மணியை ஒதுக்கித். தள்ளிக் கொண்டிருந்தாள். 

வீராசாமியைக் கண்டதும் குத்துவதை நிறுத்திவிட்டு, உலக்கையை மார்பின்மேல் சாத்தியவாறே, “என்னா கொளுந்தப்பிள்ளே, கோயிலுக்குப் போவெலே? இன்னிக்கி உங்க வில்லுதானே” என்று கேட்டாள். 

“ஆமா, மதினி. எல்லாம் நம்ப சொதைதான். அது சரி. அண்ணாச்சியை எங்கே? வெளியே போயிருக்.காகளா?” என்று கேட்டான் வீராசாமி. 

“நல்லாத்தான் கேக்கிய? கோயில்லே கொடையும் நாளுமா வீட்டிலியா இருப்பாக. அதுவும் இன்னிக்கி ஊட்டுப் போட்டுத்தார நாளு. கோவிலுக்குப் போற தாவத்தான் சொல்லிட்டுப் போனாக” என்று சொல்லி விட்டு, மாடத்தியம்மா உலக்கையைப் பிடித்தாள். 

“சரிதான். கோயிலுக்குத்தான் போயிருப்பாக. நானுந்தான் போகனும். வரட்டுமா?” என்று கூறிவிட்டு நடையிறங்கினான், வீராசாமி. 

மாடத்தியம்மாவின் உலக்கைச் சப்தம் மீண்டும் கேட்டது. 

படியிறங்கிய வீராசாமி, “அண்ணாச்சி கோயிலுக்கா போயிருப்பாரு? கோயில் குளத்தான் கடைக்குத்தான் போயிருப்பாரு!” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே நடையைக் கட்டினான். 

கருப்பன் துறை சுடுகாட்டுப் பிராந்தியம். அந்தப் பிராந்தியம் முழுவதும் ஒரே பனங்காடு. ஆற்றங்கரையை ஒட்டிப் பிடித்தாற்போல் உயரமாக வளர்ந்து, கரையில் வேரோடி நிற்கும் மருத மரங்கள் தாமிரபருணி நதிப் போக்கிற்கு பாரா கொடுப்பது போல் நிற்கும். பனங் காட்டு வரிசையைக் கடந்துவிட்டால், விளாகத்துறையின் பக்கம் நாலைந்து மாமரங்கள் கொண்ட தோப்பும், அதை யொட்டிய துரவுகளும், குடிசைகளும், ரோட்டை யடுத் துள்ள கோயில் குளத்தான் சாராயக் கடையும், செங்கல் சூளையும் ஊழிக்குப் பின் முளைத்தெழுந்த உலகம் போல் புது மேனியுடன் நிற்கும். ஆற்றங்கரை யோரத்தில், மாந்தோப்புக்குச் சமீபமாக, சுடுகாட்டுப் பிராந்திய எல்லைக்குள் சின்னக்கல் கட்டிடம் ஒன்று தெரியும். முன் புறமும் மேல் புறமும் அடைப்பற்றிருக்கும் அந்தக் கட்டிடந்தான் சுடுகாட்டுச் சுடலைமாடன் கோயில். 

கருப்பன்துறைச் சுடலைமாடன் என்றால் அந்தப் பக்கத்து ஜனங்களுக்கு பயமும் பக்தியும் அதிகம். இருட்டுக் காலங்களில் அந்த வழியாய்ப் போகின்றவர்கள் சுடலை மாடசாமியை ஏறிட்டுக் கூடப் பார்க்க மாட்டார்கள். கோயில் முன் வந்தவுடன் கண்ணை மூடிக் கொண்டு தம் வழியே நடையை எட்டிப்போடுவார்கள். காரணம் அந்தச் சாமி துடியானது மட்டுமல்ல. அதை ஏறிட்டுப் பார்ப்பதற்கே யாருக்கும் தைரியம் இருக்காது. 

நல்ல கருங்கல்லில் வடித்து, மழமழப்பேறிய சுடலை மாடசாமி சிலையின் முகத்தில் குந்தம் தள்ளியது போல் உள்ள உருண்டையான முண்டக் கண்களும், கடைவாயி னின்று கிளம்பி, தாடை வரையிலும் ஓடியுள்ள வீரப் பல்லும், இளித்த வாயில் இடைவெளி தெரியும் பல் வரிசையும் குரூரமாகவும் பயங்கரமாகவும் இருக்கும். சிலை யின் ஒரு கரம் ஒடிந்து ஊனமாயிருந்தது. எவனோ ஒரு மலையாள மாந்திரிகன் விழத் தட்டியது என்று சில பேர் சொல்லுவார்கள். எனினும், ஜனங்களுக்கு அதில் நம் பிக்கை அவ்வளவு லேசில் வராது. காளியப் புலையனை வெற்றி கண்ட கரமா, மந்திரத்தில் முறிந்து விழுந்து விடும்?’ என்பதுதான் அவர்களது நம்பிக்கை. பிறை நிலாக் காலங்களில், இருளில் முகடற்ற மேல்புறத்தின் மூலம் மங்கிய சந்திர ஒளி சிலையின் மீது வழிந்தோடு வதைப் பார்த்துவிட்டால், அங்கேயே பயமடித்து ரத்தம் கக்கிக் செத்துப் போவார்கள் என்றும் சொல்வதுண்டு. சிலை அத்தனை கோர ரூபத்துடன் இருக்கும். மேலும், அது பிணந் தின்னிச் சுடலை. 

எனினும், சுடலையையே குல தெய்வமாகக் கொண்ட வர்கள் நாலைந்து வருஷங்களுக்கு ஒரு முறை சுடலைக்குக் காவு கொடுத்துக் கொடை நடத்துவார்கள். கொடைக் காலத்தில் மட்டும் சுடுகாடு, சுடுகாடாகவே தோன்றாது. பறை மேளமும், தப்பறையும் மூன்று நாளும் கும்மென்று எதிரொலித்து விம்மிக் கொண்டிருக்கும். சுடலை மாடனை யும் ஜனங்கள் அப்போதுதான் ஏறிட்டுப் பார்க்கத் துணிவார்கள். பூசாரியின் அலங்காரத் திறனில் சிலையின் பயங்கரம் ஓரளவு மாறிப் போயிருக்கும். 

கொடைக் காலம் மட்டுமல்லாது, மற்றக் காலங் களிலும் சுடலையை நேர் நின்று தரிசிக்கும் தெம்பும் திராணி யும் பெற்றவன் ஒருவன் தான் உண்டு. அவன்தான் கட்டாரித் தேவன். கோழைப்பட்ட மனசுடையவர் களுக்குக் கட்டாரித் தேவனைக் காணவே தைரியம் வேண்டும். சுடலையே உயிர் பெற்று உலாவுவது போலி ருக்கும், அவனுடைய தோற்றம். கரு மெழுகிலே திரட்டிச் செய்த யவனப் பொம்மைபோல், அடிக்கொரு அசைவும், திமிரும் காட்டி, வரிந்து கட்டிய நரம்பு முடிச்சுக்களிடையே திருகி விறைப்பேறும் தசைக்கூட்டம் அவனுடைய மேனி வளத்தை எடுத்துக் காட்டும். கத்தியைக் கொண்டு குத்தினாலும் உள்ளே இறங்காது என்னும்படி இருக்கும், அவனது தேக வலிமை. அவன் வாயிலிருந்து எப்போதும் சாராய நாற்றம் அடித்துக் கொண்டிருக்கும். ரத்தத்திலே தோய்த்தது போன்ற சாயவேட்டியை தார் பாய்ச்சிக் கட்டியிருப்பான். நெற்றியில் வெட்டப்போகும் கிடாவுக்கு வைத்த அரக்கு சீலைப் போல், கோயில் குங்குமம் தீயாய்த் தெரியும். 

கட்டாரித் தேவன் சுடலை மாடசாமி கொண்டாடி. அவனுடைய குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக இருந்துவரும் வழக்கம் அது. அதனால் தான் எந்த ராத்திரி யானாலும் சுடலையைத் தரிசிக்காமல் கட்டாரி வீடு திரும்பு வதில்லை. மேலும், அவனுடைய நில புலங்களும் அந்தப் பத்திலேயே இருந்ததால், அந்தப் பிராந்தியத்திலேதான் சுற்றிக் கொண்டிருப்பான். கோயில் குளத்தான் சாராயக் கடையும் சமீபத்திலேயே இருந்தது அவனுக்குச் சௌகரிய மாயிருந்தது. மேலும் கட்டாரித் தேவனின் தினசரிப் பொழுது ஆற்றங்கரையிலேதான் கழியும். வயலில் உழைத் தலுத்து வரும்போது, பேச்சுத் துணைக்கு ஒருவரும் கிடைக் காவிட்டால், மாந்தோப்பைக் காவல் புரியும் இசக்கியிடம் வந்து பேசிக் கொண்டிருப்பான். 

இசக்கி நாட்டாண்மைக்காரத் தேவரின் மனைவி. நல்ல மஞ்சள் கடம்புக் கட்டையில் செதுக்கி நிறுத்திய சித்திரப் பாவை போலிருப்பாள். தலையை அள்ளிச் செருகி கோழிவால் கொண்டை போட்டிருப்பாள். நெற்றியின் நடுவே ஓடி, உச்சி வகிடோடுமுடியும் பச்சை குத்திய நாமம் அவள் கண்களின் பாய்ச்சலை அளக்க உதவும் கேந்திரமாகத் துலங்கும். மழமழப்பான அவளது அவ யங்கள் யார் மனசையும் தடுமாடச் செய்யும். மாம்பழக் காவலுக்கு அவள்தான் தோட்டத்திலிருப்பாள். கட்டாரித் தேவனுக்கு அவளோடு பேசுவதில் தனி இன்பம். மஞ்சள் பூசிய முகத்தில் துலாம்பரமாய் விளங்கும் வெற்றிலைக் காவி உதடுகளில் புன்னகை பூக்க, யாரிடமும் சிரித்துச் சிரித்துப் பேசுவாள் இசக்கி. 

இசக்கியிடம் பழகிய நாளிலிருந்தே கட்டாரித் தேவனின் மனம் அவள் உடம்பில் லயித்தது. என்றைக் காவது ஒரு நாள் இசக்கியை அனுபவித்துத் தானாக. வேண்டும் என்ற பேயாசை அவனை உலுப்பி வந்தது. கட்டாரி எதற்கும் துணிந்தவன். எனினும் மானாபிமானத் துக்குப் பயந்து நடப்பவன். ஆதலால், அவளிடம் எப்போதும் ஒரு முழம் தள்ளியே பழகி வந்தான். கலியாண மானவன்தான். எனினும், மனசில் எழும் குரூர ஆசையை அவனால் கொல்ல முடியவில்லை. ஆசையை மறப்பதற் காக, சாராயத்தை அதிகம் குடித்தான். சாராயக் கடையை விட்டு வெளியேறியவுடன், “இவளா மாந்தோப்புக்குக் காவல் இருக்கது? இவளே சாதி மாம்பளம் மாதிரி இருக்காளே. உடம்பிலே அரைச் சேரு கறி அறுத்துத் திங்கலாம் போலிருக்கு” என்று முனகிக் கொள்வான். மனசிலும் உடம்பிலும் அத்தனை பசி. உடம்பு குறு குறுத்தால் இன்றும் ஒரு டிராம் அவன் நெஞ்சுக் குழாயை எரித்துச் செல்லும்.

அன்றும் அவன் கோயிலுக்குச் செல்லும்முன் நேராகக் கோயில்குளத்தான் கடைக்குத் தான் சென்றிருந்தான். 

3 

முன்னே இருந்த கிளாஸ் சாராயத்தை வாயெடுக்காமல் குடித்துக் காலி செய்துவிட்டு, குச்சிக் கறித்துண்டு ஒன்றை எடுத்து, கடைவாயிலிட்டுச் சுவைத்தான் கட்டாரி. 

”என்ன அண்ணாச்சி, தேரத்தோடேயே வந்துட்டி யளா? வார வளியிலே வீட்டுக்குப் போயிட்டு வந்தேன்” என்று விசாரித்துக்கொண்டே, வீராசாமிப் படையாச்சி உள்ளே நுழைந்தான். 

ஏற்கெனவே அளவு தாண்டி, ‘கிறிச்சி’ கிளம்பி தலை சுற்றியாடும் கட்டாரி, வீராசாமி வந்ததை உணர்ந்து கொண்டான். மரத்துப் போன உதடுகளைப் புறங்கையால் உரசித் துடைத்துக் கொண்டு, ‘யாரது, வீராசாமியா? வாடா. வந்து உட்காரு” என்று அருமையாய் அழைத் தான். பிறகு கடைக்கார நாடாரைப் பார்த்து, ‘நாடாரே, இன்னம் ரெண்டு கொண்டாரும். முட்டை இருக்குதா? இருந்தா அதுவும்….. ஒண்ணுமில்லியா? சர்த்தான், ஏதாவது கொண்டாரும்” என்று உத்திரவிட்டான். 

நாடார் கொண்டு வைத்த சாராயத்தை இருவரும் மடக்கு மடக்கென்று குடித்தார்கள். குடித்து விட்டு, சுவாசத்தை அடைக்கும் கசப்புக் கமறலைத் துடைக்க, உடனே இரண்டு கறித் துண்டுகளை எடுத்துக் கடித்துக் கொண்டார்கள். 

குடித்துக் குடித்து இருவருக்கும் போதை கிளம்பி கண் வெள்ளை சிவந்தது. உடல் முழுவதும் வெறி பரவி, மரத்துப் போகும் உணர்ச்சியினால் ஏற்படும் சிலுசிலுப்பும், மயக்க நிலையில் சொக்கி வரும் இன்பமுமாக அவர்களுக்கு, இருந்தது. 

இனிமேலும் மேலே சென்றால் வண்டி குடை சாய்ந்து விடும் என்று உணர்ந்த கட்டாரித் தேவன் எழுந்து நடக்க ஆரம்பித்தான். வீராசாமியும் கட்டாரியின் கைத் தாங்கலில் எழுந்து கடையை விட்டு வெளியே வந்தான். இவர்கள் கடையை விட்டு வெளியே வருவதற்கும், பனங் காட்டு ஒற்றையடித்தடத்தின் மேலாக இசக்கி மாம்பழக் கூடையைச் சுமந்து கொண்டு ஒய்யாரமாக நடை போட்டுச் செல்வதற்கும் சரியாயிருந்தது. 

“அண்ணேன், அன்னா பாருங்க” என்று இசக்கி வந்து திக்கைக் காட்டினான் வீராசாமி. 

கனத்துப் போய் விழிகளோடு பசைபோல் ஒட்டும் இமைகளைத் திறக்க முயன்று கொண்டே, ”சிறுக்கி நடை. யைப் பாரேன். அப்படியே அவளைக் கடிச்சி முளுங்கிற லாம் போலிருக்கு” என்று வாய்விட்டுக் கூறிவிட்டுப் பற்களை நெரித்தான் கட்டாரி. 

“ஆமாண்ணேன். கிளியாட்டந்தான் இருக்கா .எங்கே போவா? போயிட்டு, கோயிலுக்கு வராமலாப் போவா?* என்று கூறிவிட்டு, அவிழ்ந்து விழுந்த தலைமயிரை அள்ளி முடிக்க விரல்கள் வளையாததால் அதைப் பிடரியில் ஒதுக்கினான். 

“இந்தக் கட்டாரித் தேவன்கிட்டெ அவ வராமப் போறதாவது? பாத்துக்கிடுதேன்’ என்று மீசையில் கை போட்டுக் கொண்டு கோயிலைப் பார்க்க நடந்தான் கட்டாரி. 

அன்றிரவு சுடலைமாடனுக்கு பிரமாதமான அலங் காரம். துருவகற்றி, பளபளவென்று மின்னும் இரும்பு வாளைக் சையில் ஏந்தி நின்றது சிலை. முகத்தில் வழிந் திருந்த எண்ணெய் சுடலைமாடனின் கருமையையும் கோர ரூபத்தையும் கூட்டிக் காட்டிற்று. சிலை முகத்தில் பட் டிருந்த சுண்ணாம்புக் கீறல் அதன் விகாரத்தையும் குரூரத் தையும் கோடிட்டுக் காட்டுவது போலிருந்தது. 

நடுச்சாம வேளை நெருங்கிக் கொண்டிருந்தது. கோயி லின் முன் பல திக்குகளிலும் நாட்டியிருந்த தீவட்டிப் பந்தங்கள் பசி நாக்குகளைச் கொண்டிருந்தன. பம்பையும் சுழற்றிச் சுழற்றி எரிந்து பறைமேளமும் கணகணவென இரைந்து குமுறும் ஒலி அக்கரை நத்தத்து வயல் வெளியில் மோதித் திரும்பி, மீண்டும் கருப்பன்துறை பனை வினைக்குள்ளேயே எதிரொலித்துக் கொண்டிருந்தது. 

சாராயக் கடையிலிருந்து வந்த கட்டாரித் தேவன் கடலையின் கோயில் முன் சென்று உட்கார்ந்தான் 

சுடலையின் முன் சாராயப் புட்டியும், காரப் புகை யிலைச் சுருட்டும் இருந்தன. பொங்கிப் பொரித்துப் படைத்த சோறும் கறியும் ஆவி வர, புலால்மணம் வீசிக் கொண்டிருந்தது. பலி கொடுத்த ஆடு கோழிகளின் ரத்தம் கோயிலின் முன்னுள்ள மண்ணில் உறைந்து பொருக்காடிப் போயிருந்தது. 

கட்டாரித்தேவன் அசையாமல் உட்கார்ந்திருந்தான். சுண்களின் கிறக்கம் சாராய வேகத்தைக் காட்டியது. மட்டச் சாம்பிராணிப் புகையும், ஊதுவத்தி மணமும், படைப்புச் சோற்றிலிருந்து எழும் புலாலின் நாற்றமும் அவனை மயங்கச் செய்துவந்தன. 

பம்பையின் டங்காரமும், உறுமி மேளத்தின் குமைந்து வரும் சிலுசிலுப்பும், தப்பறையின் ஓலமும் அவன் செவி களைத் தாக்கி, காதுச் சவ்வுகளை மரத்து அடைத்துப் போய் இரையச் செய்தன. 

தலையாட்டம் கொடுத்துக் கொண்டே கட்டாரித் தேவன் கண்களை ஒரு சுழற்று சுழற்றினான். தூரத்தில் இசக்கி பச்சை நிறக் கண்டாங்கிச் சேலையைச் சரிபண்ணிய வாறே சிரித்துக்கொண்டு நின்றாள். இசக்கியின் வனப்பு கட்டா ரியின் கண்களை ஈர்த்தன. கட்டாரிக்கு தலைக் கிறக்கம் அதிகமாயிற்று. சுடலையையும் இசக்கியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டேயிருந்தான், 

திடீரென ஒரே ஆகாகாரம் செய்து கொண்டே துள்ளி யெழுந்தான் கட்டாரி. அவன் உடல் கிடுகிடென்று ஆடியது. கையெடுத்துச் சுடலையைக் கும்பிட்டான் அவன். உயர்ந்து உயர்ந்து செல்லும் கட்டை நாதசுரத்தின் விறு விறுப்பும், மேளதாளங்களின் ஸ்தாயியும் அவனை உலுப்பின; உணர்வை மறக்கச் செய்தன. 

பூசை முடித்துவிட்டுத் திரும்பிய பூசாரி எரிந்து கொண்டிருந்த கற்பூரத் தட்டை கட்டாரியிடம் நீட்டினான். எரிந்துகொண்டிருந்த கர்ப்பூரத்தை உள்ளங்கையில் வாங்கி வாயில் போட்டான். உடனே பூமி அதிரும்படி விட்டான் திங்கு திங்கென்று குதித்தாட ஆரம்பித்து கட்டாரி! 

சுடலை குடி புகுந்துவிட்டான் என்று ஜனங்களெல்லாம் கட்டாரியைக் கையெடுத்துக் கும்பிட்டார்கள். 

கட்டாரி ஆடினான், சத்தமிட்டான், துள்ளினான், பாய்ந்தான்! ஆடிக்கொண்டே கட்டாரி நடந்தான். நட்டு வைத்திருந்த பந்தம் ஒன்றை எடுத்துக்கொண்டு, கட்டாரி யின் முன்னால் பூசாரி பின் காட்டி நடந்தான். 

சுடுகாட்டை நோக்கி ஆடிக்கொண்டே நடந்தான் கட்டாரி. கொள்ளிவாய்ப் பிசாசு போல, பூசாரி அந்த ஒற்றைத் தீவட்டியை ஏந்திச் சென்றான். தீவட்டியின் ஒளி எல்லைக்குள்ளாக, படமெடுத்தாடும் கருநாகத்தைப் போல் இருள் கவிந்து நிற்க, கட்டாரி பூதாகாரமாய் நடந்தான். 

தீவட்டிப் பந்தத்தின் அசைந்து அசைந்தாடும் மங்கிய ஒளியிலே, சுடுகாட்டு ஆலமரத்தின் தரையோடிப் பாய்ந்து நின்ற விழுதுக் கூட்டங்கள் ஒளியும் நிழலும் கொடுக்கும் பைசாச ரூபத்தோடு, தரை கீறிக் கிளம்பிய கூளிக்கணங் கள் களியாட்டம் ஆடுவதைப்போல் தோன்றின. இருள் சூழ்ந்த அந்தப் பிரதேசத்தில், மங்கிய ஒளி கொண்ட புகைமூட்டம் இருளையும் விடப் பயங்கரமா யிருந்தது. கோயிலில் ஒலிக்கும் வாத்திய ஒலி மங்கி உள்வாங்கி ஒலித்தது. பக்கத்து மருத மரத்திலிருந்து சரசர வென்று இறங்கி, விகாரமாய் அழுதுகொண்டே குறுக்கே தாவியது ஒரு மரநாய். 

சாமி குடிகொண்ட கட்டாரி நடந்தான். பூசாரியும் கட்டாரியும் சுடுகாட்டுக்குள் நுழைந்தனர். 

நாலைந்து பிணங்கள் கங்குதெறித்து விழ, எரிந்து கொண்டிருந்தன. மங்கிய செந்நெருப்புத் தழல் காட்டி, எரிந்து கொண்டிருந்த பிணத்தைக் கண்டு ஓடியது, கட்டாரியிடம் குடி கொண்ட சுடலை! 

ஈரம் காய்ந்து பொருக்காடிப் போன சிதை மூட்டத்தை முஷ்டியால் ஓங்கி உடைத்தது கூடலை. ஓடாய்ப்போன மூட்டம் உடைந்து பிலவாய் போல் திறந்து விழுந்தது. சிதையினுள் சுட்ட கத்தரிக்காயைப் போல், பிணம் கருமை யெய்தி கருகிக் கொண்டிருந்தது; அடியிலே இளகி வடியும் கொழுப்பின் துர்நாற்றம் மெல் லிய புகைக் கொடியாக இழைந்து கிளம்பிக் கொண் டிருந்தது. 

ஆடிக்கொண்டே நின்ற சுடலை, உடைபட்ட பாகத் துக்கு நேராயிருந்த பிணத்தின் வயிற்றுக்குள் கூச்சலிட்டுக் கொண்டே இரண்டு கைகளையும் நகம் போல் சொருகியது! 

பக்கத்து ஆலமரத்தில் இரண்டு ஆந்தைகள் ஒன்றுக் கொன்று அடித்துச் சத்தமிட்டுக் கொண்டு சிறகடித்துக் கீழே விழுந்தன. தூரத்தில் எங்கோ குழி பறிக்கும் நரி யின் ஊளை சுடுகாட்டில் எதிரொலித்தது! 

சொருகிய விரல்களால் பிணத்தைக் குடைந்து குடைந்து, உள்ளேயுள்ள குடலை உருவி இழுத்து, வாயில் வைத்துத் திணித்தது சுடலை! குடற்கொடி முழுவதும் வாயினுள் செல்லாமல் மார்பிலும் கழுத்திலும் அடித்துப் போட்ட பாம்பைப்போல் சுற்றி விழுந்தன. ஆவேசம் தீராமல் உள்ளேயிருந்து பிறாண்டி எடுத்த மாமிசத்தை, அரைகுறையாய் வெந்து பச்சை நெடி வீசும் மாமிசத்தை. வாயில் வைத்துத் திணித்தது. முகத்திலும் மார்பிலும் பலாச் சடை போல் ஒட்டியிருந்த சவ்வையும், கொழுப்புத் திரைகளையும் பூசிக்கொண்டது! 

முகத்தில் ஒட்டியிருந்த மாமிசப் பசைத் திரைகள் பயங்கரத்தைக் கூட்டிக் காட்டியது. ஆவேசமும் ஆங்கார மும் கொழுந்து விட்டெரியும் முகத்தில் ரத்தப் பசி தலை தூக்கி நின்றது. 

பிணத்தைப் பட்சித்த பின் வாரியடித்துப் பூசிய புலா லும் கொழுப்பும் ஒட்டிக் கிடக்க, பூசாரி காட்டிய வழியில் நடந்தது சுடலை! 

பசிப்புலி போல் பாய்ந்து வந்த கட்டாரியைக் கண்ட வுடன் ஜனங்கள் கையெடுத்துக் கும்பிட்டனர். நிணமும் சதையும் வாய்க் கடையில் பிதுங்கி வெளிவர, கோயிலில் முன் நின்று ஆடினான் கட்டாரி. 

வில்லுக்கார வீராசாமி வாய் உரக்கப் பாடினான்: 

தோளிலே சில பிணத்தைத் 
துங்க மாலை போட்டுக் கொண்டான் 
கையதிலே சில பிணத்தைக் 
கட்டியாக எடுத்துக் கொண்டு 
வாயதிலே ஊன் வடிய 
வாரானே சுடலைக் கண்ணு! 

சப்த அலைகளை அடக்கி அடக்கி விடும் வில்லுக் குடத் தின் குமைவும், வில்லில் கட்டிய மணியின் கலகலப்பும், நாணின் டங்காரமும் வீராசாமியின் பாட்டுக்கு வேகம்: கொடுத்தன. 

கட்டாரித் தேவன் ஆடிக்கொண்டே இருந்தான். 

வீராசாமி, பெண்கள் கூட்டத்தின் முன் வரிசையில் இசக்கி உட்கார்ந்திருப்பதைக் கண்டான். உடனே, கதை யில் வரும் காளியப் புலையன் மகள் இசக்கியை, இந்த இசக்கியைப் பார்த்துக் கொண்டே, இவளை வருணித்துக் கொண்டே பாட ஆரம்பித்து விட்டான்: 

ஏந்து நல்ல ஸ்தன மிரண்டாம் 
இந்திராணி மார்பழகாம் 
இசக்கி! 
ஆறு முழம் நூறு பணம் 
அருவங் கோட்டுக் கண்டாங்கி 
இசக்கி! 
சித்துடுக்குக் கழிந்தது போல் 
சேலைக்கட்டும், இடையிறுக்கும் 
இசக்கி! 
பின்னழகைக் கண்டவர்கள் 
பிரமித்து நின்றிடுவார் 
இசக்கி! 
முன்னழகைக் கண்டாளோ 
மோகிப்பார் ஆயிரம் பேர்! 
இசக்கி! 

பாட்டின் வருணனை அழகும் இசக்கியின் பெயரும் வேகமிறங்கி வரும் கட்டாரியின் காதுகளில் விழுந்தன. கட்டாரி திரும்பி இசக்கியைப் பார்த்தான். 

கட்டாரி இசக்கியின் பக்கம் திரும்புவதைக் கண்ட வீராசாமிக்கு உற்சாகமும் குறும்பும் வளர்ந்தன. 

சுடலைமாடனுக்கும் இசக்கிக்கும் உள்ள தொடர்பை, இசக்கியைக் கன்னியழிப்பதாகச் சத்தியம் செய்யும் சுடலை இசக்கி சம்வாதத்தை, கட்டாரியையும் இசக்கியையும் இணைத்துத் தன் சொந்தப் பாட்டில் பாட ஆரம்பித்து விட்டான். உடனே கட்டாரிக்கு அப்படியே அங்கிருந்து தாவிப் பாய்ந்து இசக்கியை அணையவேண்டும் என்றிருந்தது. 

உள்ளுக்குள்ளேயே கிடந்து குமுறும் காமவெறி மனசைப் பிடித்து உலுப்பி வெறியூட்ட, ஒன்றும் புரியா மல் குதித்தாட ஆரம்பித்தான் கட்டாரி. பிறகு சுடலை மாடசாமியின் முன் படைத்திருந்த சாராயபுட்டியை எடுத்து, கடகடவென்று குடித்தான். படைப்புச் சோற்றின் முன் மண்டியிட்டு அமர்ந்தான். பற்றி எரியும் வயிற் றின் காந்தலும், உடலிலுள்ள அனற்கொதிப்பும் அவனை அலைக்கழிக்க, படைச் சோற்றை அள்ளி அள்ளித் தின்றான். எலும்பும் கறியும் தெரியாமல் நறநறவென்று கடித்தான். முருந்து எலும்புகள் முறுக்கு மாதிரி கடைவாயில் நொறுங்கின. எலும்புக் குழலுக்குள் இளகி நிற்கும் குறுத்துக் கோழை, வாய்க்கடை யோரம் வழிந்தோடிற்று. ஒரே பசி! ரத்தப் பசி! 

தின்று குடித்துச் சலித்தவுடன் முன்னிருந்த சுருட்டை எடுத்து தீப்பந்தத்தில் பற்றவைத்துக் கொண்டு ஆடினான். புதிதாக வயிற்றினுள் சென்ற சாராயம் போதை எழுப்ப, தளரும் கால்களை அதிகம் ஊன்றாமல் துள்ளித் துள்ளியாடி னான் கட்டாரி. 

ஜனங்கள் அவனைக் கையெடுத்து வணங்கினர். இசக்கி மட்டும் கும்பிடாமல் கையால் நாடியைத் தாங்கியவாறே அவனை வியப்புடன் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தாள். 

வீராசாமியின் பாட்டும் சுற்றிச் சுற்றி இசக்கியிடமே வந்து நின்றது. 

போதை உச்சிக்கேறிய பின் கட்டாரி தன்னிலை தவறி ஆடினான்; தடுமாடினான். திடீரென்று கொண்டா இசக்கியை!” என்று கத்த ஆரம்பித்தான். ஆனால் நாக்கு சொல்லுக்கு வளையாமல் உள்ளிழுத்துச் சுருண்டது. கால் கள் ஒன்றோடொன்று பின்னி முடைந்தன. கண்கள் மேலேறிச் சொருகின. அப்படியே தொப்பென்று சாய்ந் தான்! ஆட்டபாட்டம் ஓய்ந்து சவமாய்க் கிடந்தான்! 

பூசாரி மீண்டும் சுடலைக்குப் பூசை பண்ணினான். “சாமி மலையேறி விட்டது!’ என்றனர் ஜனங்கள். 

பூசாரி ஏந்திய கர்ப்பூர ஒளியில் சுடலையின் உதட்டி லுள்ள வெள்ளைச் சுண்ணாம்புக் கீறலில் ஒரு சொட்டு பச்சை ரத்தம் இருந்தது! 

‘ஊட்டை சாமி ஏற்றுக் கொண்டது’ என்ற திருப்தி யால் கற்பூரத் தட்டை உயர்த்தினான் பூசாரி. 

ஜனங்கள் கையெடுத்துக் கும்பிட்டனர்! 

கட்டாரித் தேவன் வாயிலிருந்து கொழுப்புக் கூழும், கோழையும், நுரையும் வடிந்து கொண்டிருந்தன. கருங் கல் போன்ற அவனுடைய தசைக்கோளங்கள் தளர்ந்து தொளதொளத்துக் கிடந்தன. உணர்வற்றுக் கிடந்த கட்டாரித்தேவன் வெகு நேரம்வரை எழுந்திருக்காததி லிருந்து, ஜனங்கள் கட்டாரியின் போதையை உணர்ந்து கொண்டார்கள். 

அதன்பின் கட்டாரித் தேவனை வண்டியில் போட்டு போதை தெளியுமுன் வீடு கொண்டுவந்து சேர்த்தான் வீராச்சாமி. 

சேர்த்துவிட்டு, “ஒன்றுமில்லை. கிறக்கம். இன்னைக்கி அண்ணாச்சி பெரிய ஆட்டமில்லா ஆடிட்டாக” என்று மாடத்தியிடம் சொல்லிவிட்டுப் போனான் 

படுக்கையில் கிடந்த கட்டாரித் தேவனை மங்கிய விளக்கொளியில் பார்க்கச் சவம் போலவே யிருந்தது, 

மாடத்தி நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். நெற்றி கொதித்தது. உடம்பிலிருந்து கருகிய மாமிச நாற்றமும், சாராய வீச்சமும் கலந்தடித்தன. 

போதை தெளிந்து புரண்டு கொடுத்த கட்டாரி “சிறுக்கி, என்னமாயிருக்கா? அப்படியே கடிச்சி முளுங்கிறலாம் போலிருக்கு” என்று முணுமுணுத்தான். 

“என்ன புலம்புதிய? உங்களைத்தானே. நானிருக்கது தெரியலெ” என்று மெல்லக் கேட்டாள் மாடத்தி. தலை மயிரையும் நெற்றியையும் தடவிக் கொடுத்தாள். 

ஸ்பரிச உணர்ச்சி பெற்று விழித்த கட்டாரி அந்த மங்கிய இருளின் ஒளி மூட்டத்தில் மாடத்தியைப் பார்த்தான். 

”வந்திட்டியா? நீ வருவேன்னு எனக்குத் தெரியுமே” என்று சொல்லிக்கொண்டே மாடத்தியை இழுத்து அணைத்தான். 

“விடுங்கன்னா!” என்று திமிறினாள் அவள். 

கட்டாரி விடவில்லை. அவளைக் கட்டிப் பிடித்துக் கட்டிலில் உருட்டிப் புரண்டான். 

கட்டாரியின் மேனி முழுவதும் பிணத்தின் நிண நாற்றம் அடித்தது. பிண நாற்றம் மாடத்தியின் புலனைத் தாக்கியது கட்டாரி தன் முகத்தை மாடத்தி முகத்தின் யக்கம் நெருக்கியபோது, மாடத்தியின் உடம்பு குளிர்ந்து புல்லரித்தது. தாங்கமுடியாத நாற்றத்தின் கமறலால் குமட்டல் எடுத்து ஓங்கரித்தாள். எனினும் வெறும் ஒங்கரிப்பு! தொண்டைக் குழிதான் வற்றிப் புண்ணாயிற்று! 

6 

மாடத்தியின் இந்தக் கர்ப்ப மாசங்கள் எல்லாம் மிக வும் கஷ்டத்துடன் கழிந்தன. பத்து மாசமும் ஒரே ஓங் கரிப்பும், குமட்டலும், வாந்தியெடுப்புந்தான். எந்தப் பொருளும் வாய்க்குக் கசந்தது; நாற்றமடித்தது! அன் றைய இரவின் அருவருப்பு அத்தனை வைரம் பாய்ந் திருந்தது! 

பத்தாவது மாசம் ஓரிரவில் கடைச் சாமத்தில் மாடத்தியம்மா பிரசவித்தாள். முதன் முதலாக. பிள்ளை யைப் பார்ப்பதற்காக, பக்கத்தில் கழுவிப் போட்டிருந்த பிள்ளையின் பக்கம் முகத்தை நெருக்கினாள் மாடத்தி. உடனே பயங்கரமான ஓங்கரிப்பு வந்து அவள் வயிறு நொந்தது. 

ஒரே நாற்றம்! பெற்றெடுத்த பிள்ளையின் உடம்பி லிருந்து பிண நாற்றத்தின் தாங்கமுடியாத நெடி அடித்தது! 

கட்டாரியின் மூத்த மகள் மாகாளி ஓடோடியும் வந்து தெருத் திண்ணையில் முட்டைக் கட்டியிருந்த கட்டாரியிடம் அய்யோவ், தம்பி புறந்திருக்கான்!” என்று கூச்சலிட்டாள். 

“எல்லாம் என் அப்பன் கிருபை. சுடலைன்னு பேரு வைக்கணும்” என்று தனக்குள் முனகினான் கட்டாரி. 

எதிர் வீட்டுத் தாழ்வாரத்தில் படுத்திருந்த வீராசாமி விடிவெள்ளி முளைத்துவிட்டதை உணர்ந்து, துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு, 

வாருமையா சிவனாரே, வார்த்தை 
யொன்று சொல்லக் கேளும் 
பிள்ளை வரம் கேட்டதுக்கு 
பிணந்தின்னியைத் தந்தீரோ 
என்று சொல்லும் வேளையிலே 
ஏது சொல்வார் சிவனாரும்.. 

என்று பாடிக்கொண்டே வயல் வெளிக்குச் செல்லும் பாதையில் நடக்க ஆரம்பித்தான். 

– 1946 – ரகுநாதன் கதைகள் – முதற் பதிப்பு: அக்டோபர், 1952 – மீனாட்சி புத்தக நிலையம், 60, மேலக் கோரத் தெரு : மதுரை கிளை : 228, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை

தமிழ்ப் படைப்பாளி தொ.மு.சிதம்பர ரகுநாதனின் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: • ‘தினமணி’யில் உதவி ஆசிரியர், வை.கோவிந்தன் நடத்திய ‘சக்தி’ இதழின் ஆசிரியர், ‘சோவியத் நாடு’ இதழின் ஆசிரியர் போன்ற பொறுப்புகளில் செயல்பட்டார். • ‘சாந்தி’ என்னும் முற்போக்கு இலக்கிய மாத இதழைத் தொடங்கி நடத்தியவர், அதன் வாயிலாக டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் உள்ளிட்ட அன்றைய இளம் எழுத்தாளர்களை தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமும் செய்தார்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *