ஆனந்தியம்மா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 23, 2013
பார்வையிட்டோர்: 10,203 
 

“ஏன் டா இப்படி ஏன் உசுர வாங்குற…. இதுக்கு பேசாம ஆனந்தி கிட்டையே உன்ன விட்டுட்டு வந்துர்கலாம்…” எனக்கு விவரம் புரியாத வயதில் இருந்தே என் அம்மா என்னை திட்டுவதென்றால் இந்த வார்த்தையை உபயோகிக்காமல் இருந்ததில்லை. என்னை திட்டும்போது மட்டுமல்லாமல் எங்களை பற்றி நாங்கள் என்ன பேச ஆரம்பித்தாலும் கடைசியில் ஆனந்தியோடு தான் எங்கள் பேச்சு முற்று பெறும். தாய் மகன் என்ற எங்கள் உறவிர்க்கிடையில் ஆனந்தி என்பவளின் பங்கு மிகப்பெரிது என்பதை என் அம்மா சொல்லி நான் மிகத்தெளிவாகவே புரிந்துகொண்டேன்.

அப்படிப்பட்ட ஆனந்தியை நான் பார்த்ததாக சிறு நினைவு கூட இல்லை. ஆனால் அவளுக்காக என்னுள் ஒரு உருவமே வடித்திருந்தேன். எங்கள் மூவருக்கும் இடையேயான நிகழ்வுகளை என் அம்மா சிலாகித்து கூறும்போதெல்லாம் நான் அறியாத காலத்திற்கு பின்னோக்கி செல்வேன் கற்பனை குதிரை மீதேறி.
பிறக்கும்போதே தாயை இழந்து வறுமையின் சதியால் பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்காமல் கிடைத்த வேலை செய்யும் ஒரு அண்ணனும் ஊதாரியான இன்னொரு அண்ணனும் ஒருபுறமிருக்க மூடை தூக்கி பிழைக்கும் தனது தந்தைக்கு உறுதுணையாய் பக்கத்து வீடுகளில் சிறு சிறு வேலை செய்து காலம் கழித்த ஆனந்திக்கு அவள் இருந்த காம்பவுண்டு குடியிருப்பிற்குள் புதிதாய் குடியமர்ந்த எனது பெற்றோரை ஏனோ பார்த்தவுடன் பிடித்துவிட்டது. அதுவும் தன்னை விட இரண்டு வயது மூத்தவளான எனது அம்மாவை அவளது பாதியாக, சொந்த அக்காவாய் பார்த்தாள். என் தந்தையை அண்ணனென்றும் என் தாயை அக்காவென்றும் அழைத்து அவர்களே அறியாமல் ஒரு சகோதர பந்தத்திற்குள் பிணைத்திருந்தாள்.
எண்பதுகளின் மத்தியில் கல்யாணம் செய்த கையோடு என் அம்மாவை எனது தந்தை தூத்துக்குடிக்கு அழைத்து வந்த போது அவளது வயது பதினாறு. சிறு வயது என்பதால் எதை பார்த்தாலும் பயமும் பிரம்மிப்பும் கலந்த கலவையில் இருந்த என் அன்னைக்கு ஆனந்தியின் வருகையால் தூத்துக்குடி சீக்கிரம் பழக்கப்பட்டது.
தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை பார்த்தாலும் சொற்பமான சம்பளமே பெற்றுகொண்டிருந்த எனது தந்தைக்கு மூணு வேலை சாப்பாட்டிற்கு மட்டுமே சம்பாதிக்க முடிந்திருந்தது. அதனால் அவர் வேலைக்கு சென்றுவிட்டால் தனது நேரம் போக்க ஒரு ரேடியோ கூட வீட்டில் இல்லாத நிலை. எங்கள் வீட்டிலேயே இந்த நிலை என்றால் ஆனந்தி வீட்டின் நிலை சொல்லவே வேண்டாம்.

ஆனால் இவர்கள் இருவருக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் தேவை இல்லாமல் போனது. என் தந்தை வேலைக்கு சென்றபிறகு இவர்கள் இருவரும் தங்கள் கஷ்டங்களை சந்தோஷங்களை உறவுகளை என ஏதாவது பேசி தங்களுக்குள் இருந்த வெறுமையை அகற்றினர். அதுவும் போக குடியிருப்பின் பக்கத்திலேயே இருந்த ராஜ் திரையரங்கத்தில் இருந்து வெளியேறும் சப்தங்கள் இவர்களுக்கு வானொலியாகி போனது.

தனக்கென எந்த ஆசையும் இல்லாமல் சுற்றி திரிந்த ஆனந்திக்கு என் அம்மாவுடன் காலம் கழிக்க வேண்டும் என்ற ஆசை இப்போது அவளுக்குள் உருவானது. தனக்கென தனது வீட்டில் வாங்கி வரும் தாவணிகளை முதலில் என் அம்மாவை போட்டு பார்க்க சொல்லி அழகு பார்த்து பிறகே தனதாக்கி கொள்வாள். “எவ்வளவு இருந்தாலும் உங்களுக்கு அழகா இருந்த மாத்ரி இல்லக்கா…” என்று தன்னை மட்டப்படுத்தி கூறும்போது கூட அவளுக்கு அவ்வளவு சந்தோஷம் இருக்கும்.

எனது தந்தையும் அவளை தங்கையாகவே பார்த்தார். தான் இல்லாத நேரம் வீட்டில் தனியாக இருக்கும் தன் மனைவிக்கு இப்போது ஒரு துணை இருக்கிறது அவளை பாதுகாக்க ஒரு அணை இருக்கிறது என்கிற நம்பிக்கை அவருக்குள் நிம்மதியை தந்தது. எங்கள் வீட்டில் எந்த விசேஷம் ஆயினும் இவளை அழைக்காமல் இருந்ததில்லை. ஆனந்தி எந்த அளவு என் பெற்றோருடன் பற்றோடு இருந்தாலோ அதே அளவு இவர்களும் இருந்தனர்,

வறுமையிலும் சந்தோஷமாய் காலம் கழிந்த நேரத்தில் என் அம்மாவிற்குள் நான் துளிர் விட ஆரம்பித்தேன். செய்தி கேட்ட ஆனந்திக்கு அளவிலா ஆனந்தம். அந்த குடியிருப்பின் அனைத்து வீட்டிற்கும் சென்று இனிப்பு வழங்கி சந்தோசம் கொண்டாள். என் அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது, முடியாத நேரங்களில் என் தந்தைக்கு அவள் சமைப்பது என என் அன்னைக்கு அன்னையாய் இருந்து அனைத்து பணிவிடைகளும் செய்தாள்.
அம்மாவின் மருத்துவ செலவுகளினால் வாடகை கொடுக்க முடியாத கஷ்டம் உதித்த போது வீட்டின் உரிமையாளர் வீட்டில் சம்பளமில்லாமல் வேலை பார்த்து என் தந்தை தர முடியாத வாடகை அவள் ஈடுகட்டினாள். ஆனால் அதை மீட்டு திருப்பி தந்த போது வாங்க மறுத்து எனது தந்தையின் கண்களில் தெய்வமாய் காட்சியளித்தாள்.
“வரும்போது நம்ம குழந்தைய பத்திரமா கூட்டிட்டு வந்துரு கா…”வளைகாப்பு முடிந்து பிரசவத்திற்காக மதுரை பக்கமிருந்த எங்கள் கிராமத்திற்கு சிறு கண்ணீருடன் வழியனுப்பினாள் ஆனந்தி. அவளால் என் அன்னையுடன் இருக்க முடியவில்லையே என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும் வரும்போது குழந்தை என்கிற சந்தோஷத்துடன் அல்லவா திரும்பி வருவாள் என்ற ஆவல் அவளுக்குள் அதிகமாகியது.

எனது அம்மாவிற்கு அதிக சிரமம் கொடுக்காமல் சுகமாய் பிறந்த நான் சரவணன் என்ற பெயருடன் தூத்துக்குடிக்கு அழைத்துவரப்பட்டேன். ஆனந்தி எங்களை வரவேற்க பேருந்து நிலையத்திற்கே வந்திருந்தாள். என் அன்னையிடம் என்னை வாங்கியவளுக்கு தான் எவ்வளவு ஆனந்தம். தானே குழந்தை பெற்றது போல் என்னை வாரி அனைத்து கொண்டாள். அன்றில் இருந்து என் தனது சொந்த குழந்தையாகவே பாவித்தாள். பால் ஊட்டும் வேலை மட்டும் தான் எனது அம்மாவிற்கு மற்ற அனைத்தையும் இழுத்து போட்டுக்கொண்டு எனக்காகவே செய்தாள் ஆனந்தி.

“என்ன டி போற போக்க பாத்தா இந்த அக்காவ மறந்துருவ போலயே..” என கேட்கும் என் அம்மாவின் கேள்விக்கு வெறும் சிரிப்பை மட்டும் பதிலாக தந்து தப்பிப்பாள். ஏனெனில் என் அம்மா கேட்ட கேள்விக்கு நிஜமாகவே அவளிடம் பதில் இல்லாமல் தான் இருந்தது. என் அம்மாவை விட என்னையே அதிகம் கவனிக்க ஆரம்பித்தாள். என் அம்மா எப்போது துணி துவைக்கவோ இல்லை சமைக்கவோ போவாள் என காத்திருந்து அவள் போனவுடன் என்னை தூக்கிக்கொண்டு அவளுக்கு தெரிந்த தூத்துக்குடியை என்னை சுற்றி காண்பிப்பாள்.
என்னுடன் நேரம் அதிகம் செலவு செய்ய தான் வேலை செய்யும் வீடுகளில் இரண்டு மூன்றை குறைத்துக்கொண்டாள். அவள் சம்பாதிக்கும் சொற்ப பணத்தில் மாதம் ஒரு முறை எதாவது விளையாட்டு சாமான் வாங்கி கொடுப்பதாகட்டும் தினமும் குருவிரொட்டி வாங்கி அதை மாவாய் நசுக்கி தன் விரகளால் எனக்கு ஊட்டிவிடுவதாகட்டும் நிலா காட்டி சோறு ஊட்டுவதாகட்டும் என் எச்சில் கலந்த சாப்பாட்டை விரும்பி தானும் என்னுடன் சேர்ந்து சாப்பிடுவாதட்டும் எதோ தானே பெற்றது போல் யார் கேட்டாலும் “என் புள்ள” என் சொல்வதிலாகட்டும் சம்மணமிட்டு தன் தாவணி பாவாடையில் என்னை படுக்க வைத்து தாலாட்டுவதாகட்டும் முழுமையான தாயாகவே மாறி போயிருந்தாள்.

“ஏய் ஏன் டி புள்ள பொறந்த நாளும் அதுமா அழுதுட்டு இருக்க…” நான் பிறந்து பன்னிரு மாதம் முடிந்து என் பிறந்தநாள் விழாவின் போது யாருக்கும் தெரியாமல் கிணற்றடியில் அழுதுகொண்டிருந்த ஆனந்தியை கண்ட என் அம்மா கேட்டபோது.

“அக்கா எல்லோரும் என்னென்னமோ நெறய வெல கொடுத்து வாங்கிதந்தாங்க என் புள்ளைக்கு நான் வாங்கி தரமுடிஞ்சது அந்த சின்ன கிளுகிளுப்ப தான கா…” என் அவள் சொல்லிமுடிக்கும் முன்பே கதறி அழுது என் அன்னையை கட்டிக்கொண்டாள்.

“இதுக்கா டி அலுவ யார் எது வாங்கிதந்தாலும் நீ வாங்கிகொடுத்த பரிசுக்கு வெல கெடயாது டி…”

“இல்ல கா நீ எவ்ளோ சொல்லு நான் எம்பையனுக்கு பெருசா ஏதாவது வாங்கி தராம விடமாட்டேன்…” என்ற அவள் சொல்லில் வைராக்கியம் மிகுந்திருந்தது. சொல்லியது போலவே எனது அடுத்த பிறந்தநாளில் எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாய் கால் பவுனில் தங்க சங்கிலி வாங்கிகொடுத்து அனைவர் மூக்கிலும் விரல் வைக்க வைத்தாள்.
“ஏன் டி உங்க அப்பா தனி ஆளா இருந்து எவ்ளோ கஷ்டப்படறாரு… அவர்ட குடு டி இத…” என என் அம்மா கடிந்து கொள்ள
அவளோ “என் புள்ளைக்கு நான் போடுறேன் உங்களுக்கு என்ன…” என கோபமானாள். இதை கவனித்த என் தந்தை அவள் மனம் கஷ்டப்படாமல் அவள் அறியாமல் அவள் தந்தையிடம் அந்த தங்க செயினை கொடுத்தார்.

“தம்பி… காசில்ல தான் வீட்ல… ஆனா அந்த கழுதைக்கு உங்க பையன்னா அவ்ளோ உசுரு தம்பி….” என அவளின் தந்தை கூறியதை சிறிதும் எதிர்பார்கவில்லை எனது தந்தை.

“இல்லங்க இருந்தாலும்…”

“உங்களுக்கு உங்க புள்ள சந்தோசம் புடிக்கும்ல…. அதே மாத்ரி தான் எனக்கும்…. தாயில்லாம பிறந்த புள்ள தம்பி அது… இன்னைக்கு அது முகத்துல அவ்ளோ சந்தோசம் பார்த்தேன்… இத தெரியாம வாங்குனா கூட அவ சந்தோஷத்துக்கு அர்த்தம் இல்லன்னு எனக்கு தோணும் அதனால வேண்டாம் தம்பி….”

அவளை கண்டு அடிக்கடி ஆச்சர்யப்படும் என் தந்தை இம்முறை அவளது தந்தை பார்த்து சொல்லமுடியா ஆச்சர்யத்தில் முல்கிபோனார். ஏதும் சொல்லாமல் ஒரு சிரிப்பை மட்டும் பதிலாக தந்து திரும்பியவரை “தம்பி” என அவளது தந்தை அழைக்க
“ஏதும் மனசுல போட்டு குழப்பிக்காதிங்க… இது அவ புள்ளைக்கு அவ போட்டது… அதாவது என்னோட பேரனுக்கு…” என சொல்லும்போது என் தந்தை அழுதேவிட்டார்.

எனது இரண்டரை வயதில் ஆனந்தியின் உதவியுடன் தத்தி தத்தி நடை பழகி கொண்டிருந்த நேரம் என் அன்னை இரண்டாம் முறையாய் கர்ப்பமுற்றாள். இம்முறை ஆனந்திக்கு என்னை மற்றும் எனது அன்னை இருவரையும் கவனிக்கும் நிலை. ஆனால் தனது வேலைப்பளு அதிகமானதாய் அவள் நினைக்கவே இல்லை. இதெல்லாம் அப்போதே எனக்கு புரிந்ததோ என்னமோ என் மீது அவளை போலே நானும் அவளிடம் மயங்கி போயிருந்தேன் சரவணா சரவணா என் வாய் நிறைய என்னை அழகாய் அழைத்து என்னை அவள் வசம் மாற்றியிருந்தாள். அவளிடமிருந்து என்னை யாராவது வாங்கிக்கொள்ள ஆசைப்பட்டால் எளிதில் சென்றுவிடமாட்டேன் என் தாய் தந்தை உட்பட. எனது சுட்டித்தனமும் சேட்டைகளும் அவளால் மட்டுமே அடக்கமுடியும். சமயத்தில் அவள் மடியில் படுத்துக்கொண்டு நான் செய்யும் சேட்டைகள் அவளால் கூட கட்டுபடுத்த முடியாது. ஏனெனில் அவளது மடி எனது தொட்டில்.

“சரவணா… அம்மாவ தொந்தரவு பண்ணாத… இந்த ஆனந்தி அம்மாட்ட வா பாப்போம்…” என அவள் கூறினால் போதும் புதிதாய் முளைத்த இரண்டு பற்களை வாய் திறந்து அகல காட்டி சிரித்தபடி தத்தி தத்தி ஓடி அவள் தாவணி பற்றிக்கொள்வேன்

“சரி தான்…. போற போக்க பாத்தா இந்த பய என்னைய மறந்துருவான் போல இருக்கே…” என் அம்மா பொய்யான பொறாமையில் வினவினால்

“அதான் ரெண்டாவது ரெடி ஆயிருசுள்ள கா… பேசாட்டி சரவணன எண்ட கொடுத்துருங்க… நான் பாத்துக்குறேன்” என என் அன்னைக்கு பதில் சொல்லி “என்ன சரவணா இந்த அம்மா கூட வந்துர்ரியா” என என்னிடமும் கொஞ்சலாய் கேட்பாள்.

இப்படியாக காலங்கள் கடக்க என் அம்மா என் தம்பியை பெற்றெடுத்தாள். என் தந்தையும் சில பதவி உயர்வுகள் கண்டு கொஞ்சம் சேமிக்கவும் ஆரம்பித்தார்.ஆனந்தியின் அண்ணனில் ஒருவருக்கு நல்ல வேலை கிடைக்க அவர்கள் வீட்டிலும் வசதிகள் பெருகின. வீட்டு வேலை எதற்கும் ஆனந்தி செல்ல வேண்டாம் என்றதால் என்னுடனும் புதுவரவான என் தம்பியுடனுமே தன் முழு நேரத்தையும் போக்கினாள்.

எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருக்கும் போது என்னையும் என் ஆனந்தியையும் பிரிக்க காலம் சதி செய்தது அவளது திருமண செய்தி மூலமாக. சென்னையில் நல்ல வேலையில் இருக்கும் அவள் அண்ணனின் நண்பனையே அவளுக்கு கட்டிவைக்கலாம் என முடிவு செய்தபோது முடியவே முடியாது என வீட்டில் பெரிதாய் சண்டை பிடித்தாள். “என் பையனை விட்டு நான் எங்கையும் போக முடியாது” என அழுது ஆர்பாட்டம் செய்தாள்.

“எங்க போக போற இந்தா இருக்கு சென்னை மாசம் ஒரு தடவ வந்து பாத்துக்க போற… ” என ஏதேதோ என் பெற்றோர் மற்றும் அவரது தந்தை மற்றும் அண்ணன்கள் காரணங்கள் சொல்லி அவளை சம்மதிக்க வைத்தனர். அரைமனதுடன் சம்மதித்தாள். ராஜ் திரையரங்கம் அருகே உள்ள மண்டப்பத்தில் திருமணம் என்று உறுதியும் செய்யப்பட்டது.

திருமண நாளும் வந்தது . தன் சொந்த தங்கையின் திருமணம் போல் என் தந்தை அவளது திருமணத்தில் பெரிதுமாய் கலந்திருந்தார். என் அன்னை மூத்த அக்காள் பெண்ணிற்கு செய்யும் அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்தாள். நானோ திருமண மேடையில் அவளது மடியிலேயே அமர்ந்திருதேன். தன்னை இன்னும் சிறு நேரத்தில் பிரியப்போகிறாள் என்பதை அறியாமல் அவள் அணிந்திருந்த நகைகளில் என் கை விட்டு விளையாடிக்கொண்டிருந்தேன். அவளோ என் விளையாட்டுத்தனம் கண்டு யாரும் அறியாமல் தன தலை கவிழ்ந்து கண்ணீரை என் மேல் மழையாய் பொழிந்துகொண்டிருந்தாள்.

நல்ல நேரம் சங்கமிக்க அவளது கழுத்தில் தாலி ஏறியது. எங்களது பிரியும் நேரமும் உறுதியானது. என்னை அவள் மடியில் இருந்து என் அன்னை தூக்கியபோது கத்தி ஆர்ப்பாட்டம் செய்து மண்டபம் அதிரும் அளவு கூப்பாடு போட்டேன். என் தந்தை என்னை மண்டப்பத்தின் வெளியே அழைத்துச்சென்று ராஜ் திரையரங்கத்தில் உள்ள ரஜினியின் போஸ்டர் காட்டினார். நானோ என் கண்களை மண்டபத்தின் பக்கமே திருப்பியிருந்தேன்.

மாப்பிள்ளை வீட்டிற்கு செல்வதற்கான காரில் அமரும் முன்பு என் அன்னையும் அவளும் கண்ணீரில் நனைந்தனர். “ஏன் டி அவள எதுக்கு அழ வைக்குற” என அதட்டலாய் சொன்ன என் தந்தையின் குரல் உடைவில் அது பொய்யென புலப்பட்டது. கடைசியாக என்னை தனது கையில் வாரி அணைத்தவள் அடக்க முடியாமல் அழுதாள். என் கன்னங்களில் முத்தங்கள் பல பதித்தாள். என்னை என் அம்மாவிடம் திருப்பி கொடுத்தபோது அவளை விட்டு நீங்காமல் அவளது தாலிக்கொடியை பிடித்துகொண்டு அழுதேன். அதை பார்த்ததும் எப்போதும் விளையாட்டாய் கேட்ட கேள்வியை நடக்காது என தெரிந்தும் உண்மையாகவே என் அம்மாவிடம் ஆற்றாமையில் கேட்டாள்.

“அக்கா அதான் ரெண்டாவது பையன் இருக்கானே…. பேசாட்டி சரவணன எண்ட கொடுத்துருங்க கா.. நான் பாத்துக்குறேன்… ”

அவள் இதை சொன்ன நேரம் என் தாய்க்கு தர்மசங்கட நிலை. அவளது அப்பா தான் “எ கழுத அதான் மாசம் ஒரு தடவ இங்க வருவேய்ள அப்போ பாத்துக்கலாம்” என சொல்லி சமாதானப்படுத்தினார். கடைசியாய் அவள் என் கன்னங்களில் கொடுத்த அழுத்த முத்தத்தை கூட அறியாமல் போய்விட்டேனே என அம்மா அவளை கடைசியாய் பார்த்தது வரை சொல்லிய போது கண்களில் நீர் கோர்க்கும். நெஞ்சில் இனம் புரியா பாரம் ஏறும்.

என்னை பெற்றேடுத்தவளை விட பெரிய மனதுக்காரி. தான் பெற்ற பிள்ளை என்கிற ஒரு சுயநலமாவது இருக்கும் என் அன்னைக்கு ஆனால் அதுவும் இல்லாத ஆனந்தி தான் எவ்வளவு பெரியவள். என்னை பெற்றெடுக்காத தாய் அவள். என் ஆனந்தியம்மா எனக்கே எனக்காய் கடவுளால் அனுப்பிவைக்க பட்ட தேவதை என் ஆனந்தியம்மா.

அதன் பிறகு காலத்தின் ஓட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் கணவரின் உதவியுடன் கடிதம் மூலம் ஓரிரு வருடங்கள் எங்களோடு தொடர்பில் இருந்தவள் தூத்துக்குடி மட்டும் வர மறுத்தாள். எங்கே வந்தால் என்னை பிரியாமல் என்னை என் அம்மாவிடமிருந்து பிரித்துவிடுவேனோ என்கிற பயத்தில் வரவே இல்லை. இதை என் அம்மாவிடமே கடிதத்தில் தெரிவித்தாள். அதன் பிறகு அந்த குடியிருப்பை வேறு எவரோ வாங்கிவிட அங்கிருந்த குடும்பங்கள் அனைத்தும் கலைந்துபோயின.

பணம் பெருக்கும் ஆசையில் வருங்காலத்தை நிலைநாட்டிகொள்ளும் முனைப்பில் பெற்ற பிள்ளைகளை நல்லவிதமாய் படிக்க வைக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் அனைத்தையும் நினைவுகளாய் மனதில் மட்டும் வைத்துக்கொண்டு நிரந்தரமாய் பிரிந்தனர் இரு வீட்டாரும்.

கிட்டத்தட்ட 25 வருடங்கள் கடந்துவிட்டன. இப்போது நாங்கள் தூத்துக்குடி துறைமுக குடியிருப்பில் வசதியான ஒரு வீட்டில் குடியிருந்தாலும் அந்த வீட்டில் என் அன்னைக்கு கிடைத்த சந்தோஷம் எங்கும் கிடைத்ததில்லை என ஏக்கம் கொள்வாள்.

அவளாவது அனுபவித்த சந்தோஷத்தை நினைத்துக்கொள்ள முடிகிறது. எனக்கோ அதுவும் இல்லை. என்னை தூக்கி வளர்த்த என் ஆனந்தியம்மாவை பார்க்க முடியாமல் அவளோடு பகிர்ந்த சந்தோஷ நாட்கள் தெரியாமல் என் அம்மா சொல்லும் கதைகள் கேட்டு கற்பனையிலேயே சந்தோசம் கொண்டேன்.

எத்தனையோ படங்கள் ராஜ் திரையரங்கத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் படம் பார்க்கும் பாதி நேரத்திலேயே முழுதாய் மாறியிருக்கும் இந்த இடத்தில் எந்த குடியிருப்பு அது என்கிற நினைவு மேலோங்கும். எங்கெல்லாம் எனக்கு என் ஆனந்தியம்மா சுற்றி காண்பித்திருப்பாள் என்கிற எண்ண அலைகள் என்னுள்ளே ஊடுரும். என்றாவது ஒரு நாள் என் ஆனந்தியம்மாவை பார்த்துவிடுவேன் என்கிற நம்பிக்கை மட்டும் என்னுள் எந்நேரமும் இருந்துகொண்டே இருந்தது.

“டேய் நீ ஆனந்தி அண்ணன் தான….” எங்கோ பேருந்துநிலையம் பக்கம் நானும் எனது தந்தையும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கும்போது அந்த பக்கமாய் வந்த ஒருவனை கண்டுகொண்டு என் அப்பா கேட்டதும் என்னுள் சந்தோஷ மின்னல்கள்.

“ஆமாங்க.. நீங்க எப்டி இருக்கீங்க….” அவர் சொன்னதிலேயே என் தந்தையை கண்டுகொண்டார் என புரிந்தது,

“நல்லா இருக்கேன்… ஆமா ஆனந்தி எப்படி இருக்கா…” என்னை போலவே மலர்ச்சியுடன் என் தந்தை வினவ

“அவ இறந்து 15 வருஷம் ஆச்சுங்களே… என் அம்மா மாதரியே ஒரு பையன பெத்துபோட்டு செத்துப்போய்ட்டா..”

என் நம்பிக்கைகள் என் கண் முன்னே உடைந்தது. என் தந்தையின் முகம் முழுவதும் சோகம் அப்பிக்கொள்ள “ஒரு நிமிஷம் வந்துர்றேன் தம்பி… டேய் மாமாகூட பேசிற்று…” என சொல்லி விறுவிறுவென எங்கோ நடந்துபோனார். அவரது பழக்கம் அதுவே. தன சோகத்தை எவரிடமும் காட்டாமல் தனியே போய்விடுவார்.

கதறி அழ வேண்டுமென்ற நெஞ்சத்தில் ஏதும் பேசாமல் அவரிடம் நின்று கொண்டிருந்த என்னை பார்த்த அவர் “நீ தான் சரவணனா தம்பி” என கேட்டார்.

“ஆனந்தியம்மா நிஜமாவே இறந்துட்டாங்களா..” என அவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் இதை நான் சொல்லிமுடிக்கும் முன்னே எனக்கு அழுகை முட்டிக்கொள்ள பின்னாலேயே அவரை மாமா என கூப்பிட்டுக்கொண்டு வந்தான் என் ஆனந்தியம்மாளின் மகன். அவனிடம் தனது மாமா என்னை பற்றி கூற என் பக்கம் வந்து என் கைகளை பற்றிக்கொண்டான்.

“அண்ணே… இத்தன வருஷம் கழிச்சு அவள நெனச்சு அழுகுறதுல அர்த்தம் இல்லன்ன…” என என்னை சமாதான படுத்தினான். ஏதும் பேசாமல் நின்றிருந்த எனை பார்த்து மேலும் அவனே தொடந்தான்.

“உன்ன எப்படியெல்லாம் என் அம்மா கவனிச்சானு என் தாத்தா சொல்லிட்டே இருப்பாரு… உன்ன பாத்ததுல எனக்கு ரொம்ப சந்தோசம்ண்ண…” என கூறிய அவன் முகத்தில் அவ்வளவு ஆனந்தம். இப்படித்தான் என் ஆனந்தியம்மாவும் ஆனந்தபடுவாளோ என அப்போதும் எனக்கு நினைக்க தோணியது.

“சரிங்க அப்போ நான் கெளம்புறேன்… ” என மனதில் பாரத்துடன் இருவரிடமும் விடை கூறி பிரிந்து என் தந்தை சென்ற திசை நோக்கி என்னை திருப்பிக்கொள்ளும் முன் “தம்பி உன் பேரென்ன…” என என் ஆனந்தியம்மாளின் மகனிடம் கேட்டேன்.

“உங்க பேரு தாண்ண….. சரவணன்…” என்றான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *