கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 13,979 
 

மூலம் : ஆண்டன் செகாவ் | தமிழில்: க. ராஜம் ரஞ்சனி

அப்பொழுது நள்ளிரவு மணி பன்னிரெண்டு.

மித்யா குல்டாராவ் உற்சாகமான முகத்துடனும் கலைந்த கேசத்துடனும் தன் பெற்றோரின் அடுக்குமாடி வீட்டில் நுழைந்து எல்லா அறைகளுக்கும் துரிதமாய் ஓடினான். அவனது பெற்றோர் படுக்கைக்குச் சென்றுவிட்டனர். அவனது சகோதரி படுக்கையில் நாவலின் கடைசி பக்கத்தை முடித்துக் கொண்டிருந்தாள். பள்ளியில் பயிலும் அவனது சகோதர்கள் உறங்கிக்கொண்டிருந்தனர்.

“நீ எங்கிருந்து வர்ற?” அவனது பெற்றோர் திகைத்தனர். “என்ன விசயம்?”

“ ஓ.. கேட்காதீங்க… நான் இத எதிர்ப்பாக்கவே இல்ல; இல்ல, நான் இத எதிர்ப்பாக்கவே இல்ல ! இது… இது நம்பவே முடியாத விஷயம்!”

மித்யா சிரித்தவாறே நாற்காலியில் தஞ்சம் புகுந்தான், அவனது சந்தோஷத்தால் அவனது கால்கள் நிற்கவில்லை.

“இது ஆச்சர்யம்! உங்களால கற்பனை பண்ணிகூட பாக்க முடியாது! பாருங்க!”

அவனது சகோதரி கட்டிலிருந்து குதித்தவாறே அவளைச் சுற்றியிருந்த மெல்லிய மெத்தையை எறிந்துவிட்டு சகோதரனிடம் சென்றாள். சகோதர்களும் எழுந்து விட்டனர்.

“என்ன விசயம்? உனக்கு ஒன்னமோ ஆச்சு!”

“நான் சந்தோசமா இருக்கேன் அதான்மா! உங்களுக்கு தெரியுமா, இந்நேரம் ரஷியா முழுசும் என்னை பத்தி தெரிஞ்சுருக்கும்! இப்ப வரைக்கும் உங்களுக்கு மட்டும்தான் ட்மித்ரி குல்டாராவ் அப்படின்ற ரெஜிஸ்டர் கிளார்க் இருக்கறது தெரியும், ஆனா இப்ப அது ரஷியா முழுக்க தெரிஞ்சுருக்கும்! அம்மா! ஓ மை கோட்!” மித்யா குதித்தான், எல்லா அறைகளுக்கும் அங்குமிங்கும் ஓடியபின்னர் மீண்டும் அமர்ந்தான்.

“ ஏன், என்ன நடந்துடுச்சி ? எங்களுக்கு புரியறமாதிரி சொல்லு!”

“நீங்களெல்லாம் இன்னும் காட்டு பூச்சியாவே இருக்கீங்க, பேப்பர் படிக்கறதில்ல அதுல என்ன வெளியாவுதுனு பாக்கறதில்ல, அதுல சுவாரஸ்யமான செய்திலாம் வருது. ஏதாச்சும் நடந்துட்டா உடனே எல்லாத்துக்கும் தெரிஞ்சுடுது! நான் இப்ப எவ்ளோ சந்தோஷமாயிருக்கேன்! கடவுளே! எப்பயும் பிரபலமானவங்க பேருதான் பேப்பர்ல வெளியாவும்னு உங்களுக்கு தெரியும், இப்ப அதெல்லாம் முடிஞ்சி என் பேரு பேப்பர்ல வெளியாயிருக்கு!”

“நீ என்ன சொல்ற? எப்ப?” அப்பாவின் முகம் வெளிறியது. அம்மா தெய்வீக உருவப்படத்தைப் பார்த்து சிலுவை அடையாளத்தை இட்டுகொண்டார். சகோதரர்கள் தாங்கள் அணிந்திருந்த குட்டையான இரவு உடையுடன் கட்டிலிருந்து துள்ளி குதித்து அவனிடம் வந்தனர்.

“ஆமா! என் பேர் வெளியாயிருக்கு! இந்நேரம் ரஷியா முழுசும் என்னை பத்தி தெரிஞ்சுருக்கும்! பேப்பர ஞாபகமா வச்சிக்கங்கம்மா! எப்பனாச்சும் தோணுச்சினா படிக்கலாம்! பாருங்க!” மித்யா தன் சட்டைப்பையிலிருந்து ஒரு பேப்பரை உருவி எடுத்தான், தந்தையிடம் அதைக் கொடுத்து நீலப்பென்சிலால் குறியிடப்பட்டிருந்த பத்தியை தன் விரலால் சுட்டிகாட்டினான்.

“ படிங்க!“

அப்பா தன் மூக்கு கண்ணாடியை அணிந்துகொண்டார்.

“படிங்க!”

அம்மா தெய்வீக உருவப்படத்தைப் பார்த்து சிலுவை அடையாளத்தை இட்டுகொண்டார். அப்பா தன் தொண்டையைக் கனைத்துவிட்டு படிக்க தொடங்கினார்: “டிசம்பர் 29ம் நாள் இரவு மணி பதினொன்றுக்கு, ட்மித்ரி குல்டாராவ் எனும் பதிவதிகாரி….”

“பாத்தீங்களா, பாத்தீங்களா! படிங்க!”

“…ட்மித்ரி குல்டாராவ் எனும் பதிவதிகாரி, லிட்டல் ப்ரோன்னையாவிலுள்ள கோஷிஹின் கட்டிட மதுபானகடையிலிருந்து போதையுடன் வெளியானபோது…”

“நானும் செம்யோன் பெட்ரொவிட்சும்…. அப்படியே சரியா இருக்கு! படிங்க! கேளுங்க!”

“…போதையுடன் வெளியானபோது வழுக்கி, யுனொவ்ஷ்காய் மாவட்டம் டுரிகினோ உழவர் கிராமத்தைச் சேர்ந்த இவான் ட்ரொதொவ் என்பவருக்குச் சொந்தமான இழுவை வண்டி குதிரையின் கீழ் விழுந்தார். அச்சமடைந்த குதிரை குல்டாராவ் மீதேறி, இரண்டாம் சங்க மோஸ்கோ வணிகர் என்றழைக்கப்படும் ஸ்தேபன் லுகோவ்வுடன் இருந்த இழுவை வண்டியையும் அவர் மீதேற்றி வீதிக்குள் ஓடியபோது வீட்டுக்கூலிகள் பிடித்தனர். உணர்விழந்த நிலையிலிருந்த குல்டாராவ் காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டார்.

“அவர் தலையின் கீழ் பட்டிருந்த அடி…”

“அது கணையால வந்ததுப்பா. படிங்க! இன்னும் மிச்சம் இருக்கறதையும் படிங்க!”

“…அவர் தலையின் கீழ் பட்டிருந்த அடி கடுமையானதில்லை என உறுதிப்படுத்தப்பட்டது. இச்சம்பவம் முறைப்படி புகார் செய்யப்பட்டுள்ளது. காயமடைந்தவருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டது.”

“என்கிட்ட தலை பின்னாடி ஐஸ் தண்ணியால ஒத்தடம் குடுக்க சொன்னாங்க. படிச்சிட்டீங்களா? ஆ! இப்ப பாத்தீங்களா. இப்ப இது ரஷியா முழுக்க! அத இங்க குடுங்க!”

மித்யா பேப்பரைப் பறித்து மடித்து தன் சட்டைப்பைக்குள் வைத்தான்.

“நான் மகாரோய்ஸ்க்கு ஓடிபோயி அவங்ககிட்ட இத காட்டபோறேன்….. கண்டிப்பா இவானிட்ஸ்காய்கிட்டயும் காட்டணும், நாதாஷ்யா இவானோவ்னா, அப்புறம் அனிசின் வஸ்ஸில்யிட்ச்… நான் இப்பயே ஓடறேன்! குட் பை!”

மித்யா தன் தொப்பியை அதன் சின்னத்துடன் அணிந்து கொண்டு ஆனந்தமாய் வெற்றிக்களிப்பில் தெருவுக்குள் ஓடினான்

– ஜூன் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *