ஆத்ம தாகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 12, 2023
பார்வையிட்டோர்: 887 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குழந்தை ஒன்று தெருஓரத்தில் வெறும் கோப்பையுடன் நிற்கிறது.

கமலா அந்தக் கிராமத்தை நோக்கி பைசிக்கிளில் வந்து கொண்டிருக்கின்றாள்.

உலகத்துத் துயரம் அனைத்தையும் தன்னகத்தே சுமந்து சோகமே உருவாய், பாசம் பொங்கிப் பிரவகிக்கின்ற மேரி மாதா பாலன் யேசுவை மார்புடன் அணைத்தபடியே, தெரு ஓரத்தில் வெறும் கோப்பையுடன் நிற்கின்ற குழந்தையைக் கருணையுடன் நோக்குவது போலிருக்கின்றது. இளஞ்சூரியன் கானல் அலைகளை வீசிக்கொண்டிருக்கின்றான்.

அந்த மீன்பிடிக் கிராமம் முன்பு எவ்வளவு செல்வச் செழிப்பாக இருந்தது!

எந்த நேரமும் ஹோ! ஹோ! என்று ஆனந்தமும் ஆரவாரமும் நிறைந்ததாக இருந்தது அந்தக் கிராமத்தின் கடற்கரை.

ஆண்கள், பெண்கள். சிறுவர்கள், பெரியோர்கள் எல்லோரும் விடிந்ததும் விடியாததுமாய் கடற்கரையில் வந்து ஒன்று குவிவார்கள்.

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற வள்ளங்களை பேராவலுடன் எதிர்பார்த்துக் காத்து நிற்பார்கள் அவர்கள்.

கடல் தாயை அடிவானம் முத்தமிடும் நெடும் தூரத்தில் கரும் புள்ளிகளாய்த் தோன்றும் வள்ளங்களைக் கண்டதும் அவர்களது ஆனந்தத்தைப் பார்க்க வேண்டுமே.

படகுகள் கரை தட்டியதும், அம்மக்கள் தங்கள் உடன் பிறப்புக்களைக் குதூகலத்துடன் வரவேற்று ஆசுவாசப் படுத்துவார்கள். பின்பு அவர்கள் கொண்டுவந்த கடல் செல்வத்தைப் பார்த்துப் பூரிப்படைவார்கள்.

ஒவ்வொருவரும் அவரவர் கொண்டுவந்த மீன்களை வள்ளங்களிலிருந்து எடுத்து கூறுகூறுகளாய் பெரிய மீன்கள் வேறாகவும் சிறியவை வேறாகவும் தெரிவு செய்வார்கள்.

சிலர் தமது மீன்களை கருவாட்டிற்குப் பதனிடுவார்கள். அங்கு வந்து கூடி நிற்கின்ற முதலாளிகளுக்குச் சிலர் தமது மீன்களை விற்பார்கள்.

கடற்கரை ஒரே அமர்க்களமாய் இருக்கும். மதிய வேளை சிறிது ஓய்வு.

மாலையில் மீண்டும் ஆரவாரம்.

தங்கள் உடன் பிறப்புக்களை ஆழ்கடலுக்கு வழியனுப்பி வைத்து விட்டு, அப்படகுகள் கரும்புள்ளிகளாய் மாறி அவை மறையும் வரை விழிவைத்துப் பார்த்திருப்பார்கள்.

ஞாயிற்றுக்கிழமைகளென்றால் சொல்லத் தேவை யில்லை. காலையும், மாலையும் வெள்ளையுடை உடுத்து, அன்னப் பறவைகளாய் பெண்களும் சிறுவர்களும் சில ஆண்களும் தேவாலயத்திற்குச் சென்று அன்னை மேரியை ஆராதனை செய்து வருவார்கள்.

ஆண்கள் சிலர் தங்கள் உடல் சோர்வகலக் குடித்து வெறியாடுவார்கள். சிலர் சீட்டாடுவார்கள்.

ஆண்டுக்கொருமுறை அவர்களது மேரிமாதா தேவா லயத்தில் கொடியேற்றி விழா நடக்கும் பொழுதும், கிறிஸ்மஸ், புத்தாண்டுப் பண்டிகைகளின் போதும், கூத்துக்கள், நாடகங்கள் பெருவிருந்துகள் எல்லாம் நடத்திக் கொண்டாடுவார்கள். கிராமமே விழாக் கோலமாயிருக்கும்.

அக் கிராம மக்களுக்கு வறுமையென்றால் என்னவென்று தெரியாது.

தங்கள் உடலை வருத்தி உழைக்கின்றார்கள். அந்த உழைப்பில் வரும் செல்வத்தையும் செழுமையையும் தாமே பூரணமாய் அனுபவிக்கிறார்கள்.

தார்மீக அரசின் இராணுவம் வடபகுதியிலுள்ள கடல் பிராந்தியத்தைப் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்திய பின் இக் கிராம மக்களின் வாழ்வு சூன்யமாகி விட்டது.

கடல் செல்வத்தை வாரிக் குவித்த படகுகள் எல்லாம் இப்பொழுது கடற்கரையிலுள்ள தென்னந் தோட்டங்களில் கவிழ்க்கப் பட்டு அநாதரவாய்க் கிடக்கின்றன.

கடற்கரை தூங்குமூஞ்சியாய் இருக்கின்றது. தமது ஊரே அநாதையாகிவிட்டதென்ற உணர்வு அக் கிராம மக்களின் மனதில் நிலைகொண்டு விட்டது.

மக்களுக்குத் தொழிலில்லை, வருவாயில்லை, அவர்கள் உடல் சோர்ந்து, உள்ளமும் சோர்ந்து, நடைப்பிணங்களாய்த் திரிகின்றார்கள். வாழ்க்கையில் பஞ்சம் பசி, பட்டினி, பலவித நோய்கள்.

குழந்தைகளின் நிலை சொல்லவே முடியாது. மரணம் சர்வசாதரணமாகிவிட்டது.

கிராமத்தில் மனிதத்தன்மையே மறைந்து விட்டது. கமலா போன்றவர்கள் இங்கு வந்து சேவை செய்ய ஆரம்பித்த பின்பு இக்கிராம மக்களின் வாழ்வில் ஒளிக் கீற்றுக்கள் தென்பட ஆரம்பித்தன.

தோட்ட நிலங்களைப் பிளந்து பனங்கூடலூடாக மலைப்பாம்பாய் வளைந்து நெளிந்து செல்கின்றது கிறவல் பாதை. பாதையின் இருமருங்கிலுமுள்ள நிலங்களுக்கு முருகைக் கற்கள் எல்லைக் கோடுகள் கீறி வேலிகளாய் அமைந்திருக்கின்றன. இடைக்கிடையே பள்ளந்திட்டிகள் நிரம்பிய அந்தக் கிறவல் பாதையால் வந்து கடற்கரை றோட்டில் மிதந்து, கிராமத்தின் எல்லைக்கோட்டிற்கு வருகிறாள் கமலா.

உவர்ப்பும் வெப்பமும் கலந்த கடற்காற்று அவளுடைய கண்களைக் கரிக்கின்றது. வீதி ஒரத்தில் நிற்கின்ற சவுக்கந் தோப்பினூடாக வருகின்ற கடற்காற்று சோக கீதம் இசைக்கின்றது.

நெற்றியில் முத்துக்களாய் நிற்கின்ற வியர் வைத் துளிகளை ஒரு கையால் துடைத்தபடியே, வேகமாக வந்து கொண்டிருக்கிறாள் கமலா. இன்று நேற்றல்ல நீண்ட நாட்களாகவே இந்தப் பாதையில் அடிக்கடி வந்து போகின்றாள் அவள்.

கமலா ஒரு தனிவார்ப்பு.

குறைந்த வார்த்தைகளில், ஆழ்ந்த கருத்துடன் அமைதி யாக அவள் பேசுவாள்.

வாழ்க்கையில் காணும் துன்ப துயரங்களையும் பொய்மை களையும் எதிர்த்துப் போராடி வருகின்றாள் அவள்.

ஜீவ சத்து நிரம்பிய அவளது வட்டமான குறுகுறுக்கும் கருவிழிகள் எந்த நேரமும் ஒளி வீசிக் கொண்டேயிருக்கும். அமைதியும் சாந்தமும் அவ்விழிகளில் குடிகொண்டிருக் கின்றன. அவளுக்குப் பிடிக்காத சம்பவத்தைக் கண்டால் அவள் நிந்தனையுடன் ஒரு சிறு வேதனைப் புன்னகை மட்டும்தான் செய்வாள். அவளது கண்களின் ஜீவ ஒளி அவளது மென்மையான வார்த்தைகளுக்கு, அதிக சோபை தருகின்றது. சேவை செய்ய வேண்டுமென்ற அவளது தியாக உணர்வைச் சுமந்து வருகின்ற கட்டுக்கடங்காத அவளது உத்வேகம் அவளுடைய விழிகளின் மூலமும் வார்த்தைகளின் வழியாகவும் வெளியே கட்டுக் கடங்காது பிரவகிக்கும்.

கமலாவின் தோற்றத்தில் எளிமை; செயலில் வலிமை. துன்பமும் துயரமும் நிறைந்த இந்தப் பரந்த உலகில் கமலா வயது வந்த ஒரு சிறு குழந்தை . உலகில் அன்பு பெருக வேண்டும். துன்ப துயரங்கள் அனைத்தும் அகல வேண்டும் என்ற இதய தாகத்தால் தன்னை அந்தரங்க சுத்தியுடன் சேவை செய்வதற்காகப் அர்ப்பணித்த புனிதமான மனித ஜீவன் அவள்.

எந்த நேரமும் அவள் சுறுசுறுப்புடன் செயற்பட்டுக் கொண்டேயிருப்பாள். நாங்கள் அவளைச் சிட்டுக்குருவி யென்றே அழைப்போம். அவளது தலையசைப்பு, வெட்டுப் பார்வை, செயற்பாடு எல்லாம் அவள் சிட்டுக் குருவியே தான்.

வெயில், மழையென்று பாராமல் ஹெலிச் சூடுகள், பொம்பர் அடிகள் ஒன்றையும் பொருட்படுத்தாமல், சேவை செய்யும் எமது தொண்டர்களின் முன்னணியின், ஒரு நிலையத்திலிருந்து மற்ற நிலையத்திற்கு சிட்டுக் குருவியாய் பறந்து திரிவாள் கமலா. வீட்டுத் தரிசிப்பு வேறு. அவள் தனது உணவைக் கூட நேரகாலத்திற்கு உண்பதில்லை.

“ஏன் இப்படி நீர் ஓய்வொழிச்சலின்றி வேலை செய்கின்றீர்? எந்தநேரமும் வெளியிலேதான் ஓடித் திரிகின்றீர், கொஞ்ச நேரமாவது ஓய்வெடுக்கலாமே. கந்தோரிலை இருந்து கொஞ்ச நேரம் வேலை செய்தாலென்ன? எந்த நேரமும் ஒரே ஒட்டம்தான்.என்ன உம்மடை காலிலை சில்லுப்பூட்டியிருக்கா?”

நாங்கள் அன்பு கலந்த கண்டனக் குரல் எழுப்புவோம் இடைக்கிடை.

“வெளிக்கள வேலையெண்டால் வெளியிலைதானே வேலை செய்யவேணும். கந்தோரிலிருந்து எப்படி வேலை செய்யிறது?”

சிரித்துக்கொண்டே எங்களைக் கேட்பாள்.

அவளுக்குக் கோபம் வந்ததை நாங்கள் ஒருபோதும் பார்த்ததில்லை.

வலது பக்கமாய் தலையைச் சாய்த்துக்கொண்டு சிரிப்பாள் அவள், அப்பொழுது அவளது விழிகளும் சிரிக்கும். கமலாவின் சேவை வியக்கத்தக்கது. அவள் அதை சேவையென்று செய்யாமல் தொண்டென உணர்ந்து செயலாற்றுகின்றாள்.

அவள் ஒரு போஷாக்கு நிலையத்திற்குப் பொறுப்பாகத் தான் இந்தச் சேவையை ஆரம்பித்தாள். சில நாட்களின் பின் மூன்று நிலையங்களை மேற்பார்வை செய்பவளாக அவள் வந்தாள்.பின்னர் ஜந்து நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பு அவளுக்குக் கொடுக்கப்பட்டது. தற்பொழுது ஏழு இருபத்தைந்து

கிராமங்களில் நடைபெறுகின்ற நிலையங்களை அவள் நிர்வகிக்கின்றாள்.

தன்னுடன் வேலை செய்கின்ற தொண்டர்கள் அனைவருடனும் தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல் பற்றுடனும் பாசத்துடனும் பழகுகின்றாள். அவர்களும் அவளைத் தமது உடன்பிறப்பு என்ற நினைப்புடன் உரிமை கொண்டாடுகின்றனர்.

ஒருநாள், அயல் கிராமத்திலுள்ள நிலையம் ஒன்றில் தாய்மார்களின் கூட்டம் ஒன்றில் பங்குபற்றுவதற்காக அவளும் ஒரு மேற்பார்வையாளரும் நானும் அவசர அவசரமாகச் சென்று கொண்டிருக்கிறோம்.

அவளது பைசிக்கிளின் பின் சில்லிலுள்ள காற்று திடீரெனப் போய்விட்டது.

கூட்டம் ஆரம்பிப்பதற்கு இன்னும் சிறிது நேரம்தான் இருக்கின்றது.

பைசிக்கிள் சீர்செய்த பின் தாமதித்துத்தான் புறப்படுகின்றோம்.

தூரத்தில் வெடிச்சத்தம் கேட்கின்றது.

கூடச் செல்கின்ற மேற்பார்வையாளருக்கு சிறிது தயக்கம்.

“பயப்பட வேண்டாம். சிறிது தூரம் போய்த்தான் பார்ப்போமே”

கமலா உற்சாகப்படுத்துகின்றாள்.

“ஸ்டேசன் பக்கம் தான் பிரச்சினை போலக் கிடக்கு. எதுக்கும் வாறவையைக் கேட்டுக் கேட்டு அவதானமாய்ப் போங்கோ மோனையள்.”

கிராமத்தின் தொங்கலில் வந்து கொண்டிருக்கின்ற வயோதிபர் ஒருவர் கூறுகின்றார்.

“ஸ்டேசனுக்குக் கிட்ட உள்ள நிலையத்தில்தான் கூட்டம். கூட்டத்திற்கு வந்த தாய்மாரின் கதி என்னவோ?”

ஆவல் மேலோங்க அவசர அவசரமாக மேற்பார்வை யாளரையும் உற்சாகப்படுத்திக் கொண்டு வேகமாகச் செல்கின்றாள் கமலா.

கிராமத்தின் மையத்திற்குச் செல்கின்றார்கள்.

ஸ்டேசனுக்கு இன்னும் சிறிது தூரம் தான்.

ஆள் நடமாட்டமேயில்லை.

ஒரு மனிதன் கூட கண்ணில் தென்படவில்லை.

ஊர் மௌனத் தியாகத் தீயாக நிற்கின்றது.

பதற்றத்துடன் நிலையத்திற்கு வந்து விட்டார்கள் அவர்கள், நிலையம் வெறுமையாக இருக்கின்றது.

“என்ரை ராசாத்தி! இப்ப ஏன் இஞ்ச வந்தனியள்?”

பயப்பீதி நிரம்பிய ஒரு நடுங்கும் குரல் கேட்கின்றது.

அவர்கள் நாற்புறமும் பார்க்கின்றார்கள்

ஒரு சிறு குடிசைக்குப் பக்கத்தில் உள்ள ஒரு பொன்னாவரசுப் பற்றைக்குள் பதுங்கியிருந்த மூதாட்டி வெளியே வருகின்றாள்.

“ஏன், என்ன நடந்தது?”

கமலா ஆவலுடன் கேட்கின்றாள்.

“ஆமிக்காரர் வரமுந்தி ஓடுங்கோ மோனையள், கெதியாய்ப் போங்கோ.” மூதாட்டி அவர்களை அவசரப் படுத்துகின்றாள்

“அம்மா பயப்படாதயணை. என்னணை நடந்தது. சொல்லணையம்மா”.

கமலா வாஞ்சையுடன் கேட்கின்றாள்.

“மூண்டு நாலு பொடியள் உந்தக் கோயிலுக்குப் பின்னாலை யுள்ள வேலியைப் பாஞ்சு ஓடினாங்கள்.”

“பிறகு?”

“கொஞ்ச நேரத்தில கோதாரியில போற ஆமிக்காறங்கள் வந்தாங்கள். திடீரென அவங்கள் கோயில் பக்கம் சுடுசுடென்று சுட்டாங்கள்.

“அதுக்குப் பிறகு?”

“அங்க பாருங்கோ கோயிலடியை. பாழ்பட்டுப் போவாங்கட வேலையை. ஆணும் பெண்ணுமாய் ஐந்து மலையள் கோயிலடியில சரிஞ்சு கிடக்குது.”

வயிற்றெரிச்சலுடன் கூறுகின்றாள் மூதாட்டி.

“நீங்கள் இஞ்சை மினக்கிடாதையுங்கோ மோனையள். கெதியாய்ப் போங்கோ. கெதியாய்…”

அவர்களை மூதாட்டி விரட்டுகின்றாள்.

கொஞ்ச நேரம் முந்தி வந்திருந்தால் நீங்களும் இந்த அமளி துமளியளுக்கை அம்பிட்டிருப்பியள். ஏதோ நல்ல காலம் அந்த முருகன் தான் உங்களைக் காப்பாற்றியவன்.

அந்த மூதாட்டி மனநிறைவுடன் கூறுகின்றாள்.

“மிச்சம் பெரிய உபகாரமம்மா. நாங்கள் போட்டு வாறம்.”

நன்றியுணர்வுடன் கூறிவிட்டு வெறிச்சோடிக் கிடக்கின்ற அந்தக் கிராமத்தை விட்டுச் செல்கின்றோம். எமக்கெல்லோ ருக்கும் ஒருவித மலைப்பு.

எந்த நேரமும் எமது கிராமப் புறங்களில் பதற்ற நிலை அதிகரித்து வருகின்றது.

கமலா நிதானமாக, அமைதியுடன் வேலை செய்கின் றாள். எங்களையும் அவள் தேற்றி ஊக்குவிக்கின்றாள்.

மீன்பிடிக் கிராமத்தின் எல்லைக்கோட்டிற்கு வந்ததும் கமலா சிறிது தயக்கத்துடன் பைசிக்களை ஓட்டுகின்றாள். “இந்தமாதம் இந்த நிலையத்திலே குழந்தைகளின் நிறை கூட எடுக்க முடியாமல் போச்சே. இஞ்சையுள்ள குழந்தைகளின் நிலை எப்படியோ?”

அவளது உள்ளத்தில் ஒருவித தவிப்பு, வேதனை.

சில நாட்களின் முன் வேறு ஒரு நிலையத்தில் குழந்தை களின் நிறை எடுப்பதற்கு நாங்கள் சென்று கொண்டிருக் கின்றோம்.

அந்த நிலையத்தை மேற்பார்வை செய்கின்ற சிவானி தயாரிப்பு வேலைகளைச் செய்வதற்காக சற்று முன்னரே சென்று விட்டாள்.

திடீரென துப்பாக்கி வேட்டுச்சத்தம் கேட்கின்றது.

எம்மை விலத்திக் கொண்டு மூன்று பொடியள் நனைந்த உடையுடன் ஓடிக்கொண்டிருக்கின்றார்கள்.

மீண்டும் துப்பாக்கி வேட்டுச் சத்தம் தொடர்ந்து கேட்கின்றது. நிலையப் பக்கம் தான் வேட்டுச்சத்தம் கேட்கின்றது.

“சிவானிக்கு என்ன நடந்ததோ” அங்கலாய்ப்புடன் கூறிக் கொண்டு நிலையப் பக்கம் செல்வதற்கு முற்படுகின்றாள் கமலா.

எதிர்த்திசையில் இருந்து ஓடி வருகின்ற மக்கள் எங்களைத் தடுத்து நிறுத்துகின்றனர்.

சிறிது நேரத்தில் அமைதி.

சற்று நேரத்தில் நாங்கள் நிலையத்திற்கு வந்து சேருகின்றோம்.

போஷாக்கு நிலையத்திற்குள் பதுங்கியிருந்த சிவானி எங்களைக் கண்டவுடன் வெளியே வருகின்றாள்.

அவளது முகம் பேயறைந்தாற்போல் இருக்கின்றது. உடலில் நடுக்கம்.

கமலா அவளை ஆவலுடன் அணைக்கின்றாள்.

சிவானி கதறி அழுகின்றாள். சென்ற வருடம் இராணுவத் தால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட தனது அருமை அக்காவை எண்ணி சிவானி அழுகின்றாளோ?

“சிவானி அழாதையம்மா. ஏன் இப்ப என்ன நடந்திட்டுது?”

அவளது முதுகைத் தடவிக் கொடுத்தபடியே சிவானியைத் தேற்றுகின்றாள் கமலா.

“கமலாக்கா! என்ரை கமலாக்கா!”

தாயின் அரவணைப்பிலுள்ள குழந்தையாய் சிவானி விக்கி விக்கி அழுகின்றாள்.

கமலாவின் கண்கள் கலங்குகின்றன.

“அக்காவைப் போல் சிவானிக்கும் ஏதாவது நடந்திருந்தால்?”

கமலாவின் உள்ளம் நடுங்குகின்றது.

“அந்தரங்க சுத்தியுடன் புனிதமான சேவை செய்கின்ற உங்களுக்கு ஒன்றுமே நடக்காது, ஆபத்து வேளைகளில் மறைந்திருந்து ஒரு கரம் உங்களை நிச்சயம் காப்பாற்றும்.”

அவர்களை விட்டுப் பிரிந்து சென்ற மேலதிகாரி அவர்களது சேவையைப் பாராட்டி இறுதியாகக் கூறிய வார்த்தைகள் கமலாவின் ‘ஞாபகத்தடத்தில்’ தோன்றுகின்றது.

ஆறுதலடைந்த கமலா ஆதூரத்துடன் சிவானியைத் தேற்றுகின்றாள்.

கடற்கரை வீதியில் சென்று கொண்டிருக்கிற கமலாவின் கண்களில், தென்னந்தோப்பில் கவழ்ந்து நிராதரவாய்க் கிடக்கின்ற படகுகள் தென்படுகின்றன.

“இந்தக் கிராமத்திற்கும் இப்படியும் ஒரு நிலையா?”

வேதனைப் பெருமூச்சு விடுகின்றாள் கமலா.

மதுபோதையில் தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருக் கின்ற சொலமன் கமலாவைக் கண்டதும் வெலவெலத்துப் போய், சாலை ஒரத்தில் ஒதுங்கி நின்று அவளுக்கு வழி விடுகின்றான்.

கமலா சொலமனைப் பார்த்ததும் பார்க்காதவளாகச் செல்கின்றாள்.

“என்ன மாதிரி உழைத்து தன்னுடைய ஏழு பிள்ளை களையும் மனைவியையும் கௌரவமாய்ப் பார்த்து வந்த மனிசன் இப்ப குடித்து அந்தக் குடும்பமும் சீரழிந்து திரியுதே” சொலமன் குடும்பத்தை நினைத்துக் கமலாவின் இதயம் அழுகின்றது.

“பாவம் அவன்தான் என்ன செய்வான்?”

சொலமனுக்காக அனுதாபப்படுவதைத் தவிர அவளால் எதைத்தான் செய்யமுடியும் ?

கமலா சேவை செய்கின்ற கிராமங்களிலுள்ள மக்கள் அனைவருக்கும் அவளையும் அவளது சேவையையும் பற்றி நன்கு தெரியும். அவளுக்கு அவர்கள் ஒருவித மரியாதை செலுத்துவதுடன், அவளைக் கெளரவமாக நடத்து கின்றார்கள். பெண்கள் மாத்திரமல்ல, ஆண்களும், சிறுவர்களும், வயோதிபர்கள் அனைவரும் கமலா மீது மட்டற்ற அன்பு செலுத்துகின்றார்கள்.

சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை எல்லோரும் கமலாவை ‘மாமி’ என்று பாசத்துடன் அழைக்கின்றார்கள்.

நிலையங்களிலுள்ள ஒவ்வொரு குழந்தையினதும் பெற்றோர்கள் அவர்களது குடும்ப விபரங்கள் பொருளாதார நிலை பற்றி சகல விபர விசயங்களையும் அவர்களது வீடு மனம் களுக்கு அடிக்கடி சென்று, அவர்களுடன் விட்டுக்கதைத்து, கலந்துரையாடி சேகரித்து வைத்து, இதன் அடிப்படையில் சேவையாற்றுகின்றாள் கமலா.

மக்கள் தமது இன்பதுன்பங்களை பிரச்சினைகளை அவளுடன் மனந்திறந்து கதைத்துப் பகிர்ந்து கொள்கின் றார்கள். அவர்களது குடும்பப் பிரச்சினைகள் தங்களுக் குள்ளேயுள்ள பிணக்குகள், சச்சரவுகள் ஆகியவற்றைத் தீர்ப்பதற்கு அவளை ஆலோசனை கேட்பார்கள். அவள் அவர்களது பல குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்து வருகின்றாள்.

குழந்தைகளும், சிறுவர்களும் அவளை ‘சத்துணவு மாமி” என்று அன்புடன் அழைக்கின்றார்கள்.

கண்ணுக்கெட்டிய தூரத்தில் தெரு ஒரத்தில் குழந்தை ஒன்று நிற்பது அவளுடைய கண்களில் தென்படுகின்றது. அவளுக்கு சிறு தயக்கம்.

குழந்தையை நெருங்குகின்றாள் அவள்.

குழந்தையின் கையில் வெறும் கோப்பை. ஏக்கத்துடன் கமலாவைப் பார்க்கிறது குழந்தை.

உலகத்துத் துயரம் அனைத்தையும் தன்னகத்தே சுமந்து சோகமே உருவாய். பாசம் பொங்கிப் பிரவகிக்க குழந்தையை

தனது மார்புடன் அணைத்தபடியே நிற்கின்ற மேரி மாதாவையும், வெறும் கோப்பையுடன் தெரு ஓரத்தில் நிற்கின்ற குழந்தையையும் மாறிமாறிப் பார்க்கின்றாள் கமலா.

மாதா கோவில் வளவிற்குள் குழந்தைகளும் சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள். சிறு குழந்தைகளின் கைகளில் வெறும் கோப்பைகள்.

தேவாலயத்தின் கிழக்கெல்லைக் கோடியில் போஷாக்கு நிலையம்.

போஷாக்கு நிலையத்திலிருந்து கஞ்சியின் மணமுமில்லை, கலவை மாவின் வாசனையுமில்லை.

அந்த நிலையம் எப்பொழுதுதான் திறக்கப்படுமோ?

கமலா தனது நீண்ட தளிர் விரல்களால் குழந்தையின் முதுகை அன்பாக வருடிக் கொடுக்கின்றாள்.

குழந்தையின் முகம் மலர்கின்றது.

அதன் உதடுகளில் சிரிப்பு மின்னொளியாய் மிளிர் கின்றது.

மாதா கோவில் வளவிற்குள் விளையாடிக் கொண்டி ருக்கின்ற குழந்தைகள் எல்லாம் கமலாவைக் கண்டதும் ஆரவாரித்துக்கொண்டு தெருவை நோக்கி சிட்டுக்களாய்ப் பறந்தோடி வருகின்றார்கள்.

குழந்தைகள் அனைவரும் கமலாவைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டு ஆனந்தத்துடன் ஆர்ப்பரிக்கின்றார்கள்.

“அஞ்சி மாமி வந்திட்டா!”

தனது பிஞ்சுக்கரங்களைத் தட்டியபடியே குழந்தை ஒன்று குதூகலமாகத் துள்ளிக் குதிக்கின்றது.

“அஞ்சி மாமியல்லடா, கஞ்சி. மாமி எண்டு சொல்லடா கண்ணா”

ஒரு சிறுவன் குழந்தையைத் திருத்துகின்றான்.

கமலா முறுவலிக்கின்றாள்.

குழந்தைக்கு ஒரே ஆனந்தம்.

அவர்கள் கைகொட்டி ஆர்ப்பரிக்கின்றனர்.

“மாமி நீங்கள் ஏன் எங்களுக்கு கனநாளாய் கஞ்சி தாறேல்லை?”

ஒரு குழந்தை ஏமாற்றம் நிறைந்த குரலில் கேட்கின்றது.

“நாங்கள் கலவை மா உருண்டை திண்டு கனநாளாய்ப் போச்சு. ஏன் நீங்கள் தரேல்ல மாமி?”

அவளை நோக்கி ஏக்க பாவத்துடன் கேட்கின்ற குழந்தையின் குரலில் சோர்வு.

“மேரி மாதாவே!”

இந்த வார்த்தைகளைத் தவிர கமலாவினால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

அவளது உள்ளத்தில் உணர்ச்சிக் கொந்தளிப்பு. கண்கள் பனிக்கின்றன.

“மாமி நாங்கள் இனிஒரு நாளும் வீட்டை கஞ்சி கொண்டு போகமாட்டம்”.

சில குழந்தைகள் ஒரே குரலில் கூறுகின்றனர்.

“நான் சாப்பிட முந்தி சவக்காரம் போட்டுக் கை கழுவிறனான் மாமி.”

ஒரு சிறுவன் கூறுகின்றான்.

“கக்காக்குப் போட்டு வந்த பிறகு நான் சவுக்காரம் போட்டு நல்லாய் உரஞ்சிக் கை கழுவிறனான் மாமி !”

இன்னொருசிறுவன் கூறுகின்றான்.

கமலாவின் உதடுகளில் சிறு முறுவல்.

‘அம்மாமாற்றை கூட்டங்களிலை நாங்கள் அடிக்கடி சொல்லிற சுகாதாரம் சம்மந்தமான விசயங்கள் வேலை செய்யத் துவங்கியிருக்குது போலை கிடக்குது !’

அவள் தனக்குள் கூறிப் பூரிப்படைகின்றாள்.

இதில் அவளுக்கு ஒருவித மனநிறைவு.

“இனி எங்களுக்கு எப்ப கஞ்சி தருவியள் மாமி”

ஒரு குழந்தை ஆவலுடன் கேட்கின்றது.

முருகன் கோயில் மணியின் நாதம் காற்றில் மிதந்து வருகின்றது.

“முருகா!”

கூறியபடியே கமலா நோக்குகின்றாள் வானத்தை.

“எடியே அன்னம், எங்கட கமலாக்கா வந்திட்டாவடி!”

ஆச்சரியத்துடன் கத்துகின்றாள் ஜீவா.

ஜீவாதான் அந்தப் போஷாக்கு நிலையத்திற்குப் பொறுப்பு.

“என்ன எங்கட கமலாக்காவோ? “

ஆவலுடன் கேட்டபடியே அன்னலட்சுமி வெளியே ஓடி வருகின்றாள்.

அவர்களுடைய விழிகளில் வியப்பு.

ஆரவாரம் கேட்டு தாய்மார்கள் வந்து கூடுகின்றார்கள்.

“எங்கட மாமி, எங்களிட்டை நிச்சயம் வருவ எண்டு எனக்கு நல்லாய்த் தெரியும்.

ஒரு கர்ப்பிணித்தாய நம்பிக்கையுடன் கூறுகின்றாள்.

“என்ன மாமி எங்களை அடியோட மறந்திட்டியளே !”

வேதனையுடன் கேட்கின்றாள் வேறொரு கர்ப்பிணித்தாய்.

“சரி நீங்கள் எங்களுக்கு இலைக்கஞ்சியும் தரவேண்டாம். கலவை மாவும் தரவேண்டாம். நீங்கள் இடைக்கிடை வந்து எங்களைப் பார்த்திருக்கலாமே மாமி’

இன்னொரு தாய் கூறுகின்றாள்.

“நாங்கள் என்ன தப்புச் செய்தம் மாமி. ? இப்ப ஏன் நீங்கள் இஞ்சை வாறேல்லை?”

அவர்களுடைய குரலில் ஏக்கம், வேதனை.

“சரி எங்களிட்டைத்தான் வரவேண்டாம். இந்தக் குழந்தை யளையாவது வந்து பார்த்திருக்கலாம் தானே. அதுகள் என்ன குற்றம் செய்ததுகள்?”

மீனாட்சி மனம் வெதும்பிக் கேட்கின்றாள்.

கமலாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“மாமி ஒவ்வொரு நாளும் சரியாய்ப் பத்து மணியெண்டால் குழந்தைகள் எங்களுக்குத் தெரியாமல் கோப்பையைத் தூக்கிக்கொண்டு உங்கட நிலையத்திற்கு வந்திடுங்கள். பிறகு ஏமாற்றத்தோடை வெறும் கோப்பையையும் கொண்டு வருதுகள்.”

மகேஸ்வரி முறையிடுகின்றாள்.

“அதையேன் கேட்கிறியள் மாமி, ஒவ்வொரு நாளும் இப்படித்தான் செய்யுதுகள். நாங்கள் மறிச்சாலும் கேக்குது களில்லை. அதுகளை என்ன செய்யிறதெண்டு எங்களுக்கே தெரியேலை. “

பிலோமினா பிரஸ்தாபிக்கின்றாள்.

கமலாவினால் இதற்கு ஒன்றும் கூற முடியவில்லை.

அவள் மெளனியாய் நிற்கின்றாள்.

ஊமையாகி விட்டாளா கமலா?

“இதற்கு ஒருதரையும் குற்றம் சொல்ல ஏலாது. எங்கட நிலையத்திலை வேலை செய்யிற பெட்டையளிலதான் பிழை. மரியம்மா அடியெடுத்து வைக்கின்றாள்.

“அதுகள் ‘சைவம்’, ‘வேதம்’ எண்டு புடுங்குப்பட்டதாலை தான் வந்த வினை பிலோமினா வெறுப்புடன் கூறுகின்றாள். “அதுகள் சண்டை பிடிச்சா அதுக்காக நிலையத்தை மூடுகின்றதோ?”

சினத்துடன் சீறுகின்றாள் முத்தம்மா.

“ஆர் மூடினது? மாமியா நிலையத்தை மூடினவ?”

மரியம்மாவின் கேள்வி.

கமலாவின் முகம் கறுக்கின்றது. அவளுடைய உதடுகள் துடிக்கின்றன. கண்கள் கலங்குகின்றன.

“எடியே மாமியை ஏன் இதுக்கை இழுக்கிறியள். இவ்வளவு நாளும் அவ எங்களுக்கு செய்த சேவைக்கு சன்மானமா?

மகேஸ் இடைமறித்துக் கேட்கின்றாள்.

“அடி ஆத்தே! மாமியை நான் இதுக்கை ஏன் இழுக்கிறன்? உண்மையிலை அந்த உத்தமிதான் எங்களை இந்த நிலைக்கு உயர்த்தி வைச்சவ.”

மரியம்மா மன நிறைவுடன் கூறுகின்றாள்.

“இப்ப இந்த நிலையம் மூடினதுக்கு ஆர் பொறுப்பு? முத்தம்மாவின் கேள்வி.

“இது அந்த ஜீவாவாலை வந்த வினை”.

“ஏன்?”

“ஏனா? அவள் தானே நிலையத்துக்குப் பொறுப்பு. சாப்பாட்டுச்சாமான் எல்லாம் அவளின்ரை பொறுப்பிலதானே இருந்தது.’

“அதுக்கென்ன?

பிலோமினா வினவுகின்றாள்.

“சாமானுக்குப் பொறுப்பான ஆளிட்டைத்தானே சாமான் வைக்கிற அறைத் திறப்பு இருக்க வேண்டும்?”

மீனாட்சி பொறுப்பை உணர்த்துகின்றாள்.

“ஏன் எங்கட ஆக்களிலை விசுவாசமில்லையோ?” ஜெனிற்றா விஸ்வாசம் பற்றிக் கூறுகின்றாள்.

“அது வேறை விசயம். சாமான் குறைஞ்சால் ஆர் அதுக்குப் பதில் சொல்லிறது? எதுக்கும் ஒரு ஒழுங்குமுறை இருக்குதல்லவா?

“எங்கட கோயிலுக்குச் சொந்தமான அறை விசயமாய் முடிவெடுக்கிற உரிமை எங்கட சாமியாருக்குத்தானே இருக்கு!” “அது சரிதான். ஆனால் அவர் என்ன சொல்லி அறைத் திறப்பை வாங்கினவர்?”

மகேஸ் கேட்கின்றாள்.

“தேவாலயத்திலை கொடியேற்றி திருவிழா நடக்க யிருந்தது. அதுக்கு வாற சாமியார் தங்க அறை தேவைப்பட்டது. அதுதான் குருவானவர் இடத்தை விடச் சொன்னவர்.”

“சரி திருவிழா முடிஞ்சாப்பிறகு திறப்பை திருப்பிக் கொடுத் திருக்கலாமே?”

முத்தம்மாவின் கேள்வி இது.

“வேறை மதத்தைச் சேர்ந்த ஆளுக்கு எங்கடை மாதா கோயிலுக்குச் சொந்தமான அறைத் திறப்பை வைத்திருக்க என்ன உரிமைஇருக்கு? பங்குத்தந்தை அதுக்கு எப்பிடி உடன் படுவார்?”

ஜெனிற்றாவின் உரிமை பற்றிய பேச்சு முத்தம்மாவுக்குச் சினமூட்டுகின்றது.

“வேறை மதத்தைச் சேர்ந்தவர்களும் மனிதர்தானே. தேவனுக்கு முன்னால் மனிதர்கள் எல்லாம் சமம் என்று ங்கடை மதம் போதிக்குது. பிறகேன் வேற்றுமை காட்டிறியள்?”

முத்தம்மா விட்டுக்கொடுக்காமல் கேட்கின்றாள். ஜெனிற்றா அவர்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“ஏன் உங்கடை ஆக்கள் என்ன செய்தவை?”

“உங்கடை முருகன் கோயிலுக்குப் பக்கத்திலை கிடக்கிற கொட்டிலை போஷாக்கு நிலையம் நடத்திறத்துக்கு தாற மெண்டினை. நாங்கள் நம்பி அந்தக் கொட்டிலைக் கூட்டிச் சுத்தம் பண்ணி மெழுகின பிறகு அவை கை விரிச்சுப் போட்டினையே”

மரீனா விரக்தியுடன் சொன்னாள்.

“அது முருகன் கோயிலிலை கும்பாபிஷேகம் நடக்கேக்கை ஆக்கள் தங்கிறதுக்கும் இடம் தேவைதானே? அதுக்குத்தான் அந்தக் கொட்டிலை மறிச்சவை”.

மீனாட்சியின் ஞாயம் இது.

அது சும்மா சாட்டு. அதுக்கை வேறை விசயமிருக்கு. நான் புட்டுக்காட்டட்டோ?

பிலோமினா புதிர் போடுகின்றாள்.

“இதுக்கை என்ன புட்டுக் காட்டக் கிடக்கு? எங்கடை கோயிலை கிடக்கிற கொட்டிலுக்கைப் போஷாக்கு நிலையம் நடத்தினா கண்ட நிண்ட சாதியள் எல்லாம் வந்து கொட்டிலு க்கை இருப்பினை. பிறகு குறைஞ்ச சாதிக்காரர் எங்கடை கோயிலுக்கை உள்ளடுவினை. உதுகள் எல்லாத்துக்கும் நாங்கள் இடங் குடுப்போமே?

பெருமையுடன் கூறுகின்றாள் மகேஸ்.

எல்லோருக்கும் வியப்பு.

பிலோமினாவுக்கு ஆத்திரம்.

“ஏன் உங்கடை சாதி உயர்ந்ததோ? குறைஞ்ச சாதியளுக்கை உங்கடை சாதியும் ஒண்டுதானே?”

பிலோமினா கொதிப்புடன் கேட்கின்றாள்.

அதிர்ச்சியுடன் எல்லோரும் பிலோமினாவைப் பார்க்கின்றனர்.

“உங்கடை தேவாலயக் கொடியேத்தத்தாலையும் முருகன் கோயில் கும்பாபிஷேகத்தாலையும் எங்கடை குழந்தையளின்ரை வாயிலை மண்ணைப் போட்டியளே”

இவ்வளவு நேரமும் பேசாமல் இருந்த செல்லம்மா வயிற்றெரிச்சலுடன் கூறுகின்றாள்.

“நீங்கள் ஏன் வீணாய்ச் சச்சரவுப்படுறியள்? நடந்தது நடந்து போச்சு. இனி நடக்க வேண்டியதைப் பாப்போம்.”

கமலா இடைமறித்துக்கூறுகின்றாள்.

“இனி என்ன மாமி பார்க்கக் கிடக்கு. இரண்டு பகுதியும் சேர்ந்து எல்லாற்ரை வாயிலையும் மண்ணைப் போட்டிட்டின”

மீண்டும் வலியுறுத்திக்கூறுகின்றாள் செல்லம்மா.

“ஏன் வீணாய் குழப்பமடையிறியள். இனி எல்லாம் சரிவரும்”.

நிதானமாகக் கூறுகின்றாள் கமலா.

“என்ன சொல்லிறியள் மாமி, எங்களுக்கொண்டும் புரியேல் லையே?” மீனாட்சி கேட்கின்றாள்.

எல்லோரும் கேள்விக் குறியுடன் கமலாவைப் பார்க்கின்றனர்.

“நிலையம் நிச்சயம் நடக்கும்.”

அவளுடைய வார்த்தைகளில் உறுதி

சிலருக்கு இதை நம்ப முடியவில்லை.

“எனக்கு அப்பவே தெரியும். எங்கடை மாமி சும்மா வராவெண்டு.”

“மூடின நிலையத்தை எப்படித் திறக்கிறது?”

சிலரது உள்ளத்தில் கேள்விக்குறி.

“வேம்படி வாசிகசாலைக்காரரோடை நாங்கள் கதைச் சிருக்கிறம். அவையளும் நாங்களும் சேர்ந்து நிலையத்தைத் திறக்கிறதுக்கு ஏற்பாடு செய்யிறம்.”

கமலா அமைதியாகக் கூறுகின்றாள்.

“அதுக்கை எப்பிடி நடத்தேலும்? அங்கை பாலர் பாடசாலை நடக்குதே?”

“உணவு சமைத்து எல்லாரும் வசதியாயிருந்து சாப்பிடு கிறதுக்கு ஒரு கொட்டில் போட்டுத் தருவினை.

“அப்ப சாமான் எங்கை வைக்கிறது?”

“அந்த வாசிகசாலை அறையுக்கைத்தான். அறைத் திறப்பைத் தாறன் எண்டு சொல்லியிருக்கினை.’

“பொதுச்சேவையெண்டால் இப்படியெல்லோ இருக்க வேணும்.” திருப்தியுடன் கூறுகின்றனர் சிலர்.

“வாற முதலாம் திகதி உங்கடை நிலையத்தை அங்கை நிச்சயம் திறப்பம்”.

எல்லோருடைய முகங்களிலும் மலர்ச்சி.

சிறுவர்களும், குழந்தைகளும் ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்கின்றனர்.

உலகத்துத் துயரம் அனைத்தையும் தன்னகத்தே சுமந்து சோகமே உருவாய், பாசம் பொங்கிப் பிரவகிக்க, கண்களில் கருணை ஒளி வீச, குழந்தையைத் தனது மார்புடன் அணைத்த படியே தியாகத்தின் சின்னமாய் நிற்கின்றாள் மேரிமாதா.

“சரி நான் போட்டு வாறன்”.

அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு கமலா வேம்படி சனசமூக நிலையத்தை நோக்கி வேகமாய்ச் செல்கின்றாள். அவளை எல்லோரும் மனதுள் வாழ்த்தி வழியனுப்பி வைக்கின்றனர்.

அவள் செல்கின்ற திசையை நோக்கி எல்லோரும் பார்த்தபடியே நிற்கின்றனர்.

முருகன் கோயில் மணியின் நாதம் காற்றில் மிதந்து வருகின்றது.

இதயத்தில் இருந்து ஒரு பாரிய சுமை இறங்கியது போன்ற உணர்வு அவளுக்கு.

வானத்தை நோக்குகின்றாள் கமலா.

நீலவானத்தில் கூட்டம் கூட்டமாய்க் கடல்ப்பறவைகள் பறந்து கொண்டிருக்கின்றன.

– 1993, வேட்கை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2000, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *