“ஒங்கப்பனையும் ஒரு மனுசனா மதிச்சு, பொண்ணு கேக்கப்போனேன் பாரு!” மேற்கொண்டு அவன் உறுமியது ரயில் விட்ட பெருமூச்சில் அடிபட்டுப்போயிற்று.
சிறிது பயம் கலந்த பார்வையைக் கணவன்மீது ஓடவிட்டு, தலையைக் குனிந்துகொண்டாள் மீனாட்சி. டிக்கட் வாங்காமலேயே ஜன்னலூடே நுழைந்த காற்று அவள் மேல்புடவையை அலைக்கழைத்தது. அவசரமாக அதை இழுத்துப் போர்த்துக்கொண்டபோது, முதுகில் கை உரச, `முணுக்’கென்று ஒரு வலி.
வடுகூட வலிக்குமா, என்ன?
அது என்னவோ, அவளுக்கு வலித்தது.
அன்றுதான் பட்ட காயம்போல், மேல்முதுகின் அடிப்பாகத்தில் ஒரு கோடியிலிருந்து மறு கோடிவரை படர்ந்திருந்த அது – அந்த நலிந்த உடலுக்குள்ளும் உணர்ச்சிகள் இருக்கலாம் என்பதையே மறுப்பவனாய், தன் ஆக்கிரமிப்பை முழுமையாக நிலைநாட்டிக்கொள்பவனாக, ஒரு மஞ்சள் கயிற்றால் அவளைத் தன் உடைமையாக்கிக்கொண்டவனது கைங்கரியம்.
தொந்தியின்மீது நிலையாக நிற்காது, நழுவுவதிலேயே குறியாக நிற்கும் கால்சராயை கட்டுப்படுத்தும் தோல் சாதனத்திற்கு மற்றொரு உபயோகத்தை அவன் கற்பித்திருந்ததின் நிதரிசனம்.
தனது ஆண்மையின் வீரியத்தை அவளுக்கோ, இல்லை தனக்கேதானோ, உணர்த்த முயன்றதன் காட்சிப்பொருள்.
ரயிலின் ஒரே சீரான அசைவுதான் தாலாட்டாக அமைந்ததோ, அல்லது மனக்கொதிப்பு தாங்கமுடியாது உடல்தான் களைத்துப்போயிற்றோ, உட்கார்ந்த நிலையிலேயே முத்தையன் கண்ணயர்ந்து இருந்ததைக் கவனித்தாள் மீனாட்சி. அவ்வளவுக்கு அவ்வளவு நிம்மதி.
அவனுடைய எடை மாறி மாறி இருபக்கமும் சாய, மற்றபடி காலியான அந்த இருக்கை மட்டும் சற்று லேசாக இருந்திருந்தால், மேலும் கீழுமாக ஆடியிருக்கும். அப்படி ஒரு ஆகிருதி.
எங்காவது யானைக்கும், சுண்டெலிக்கும் முடிச்சுப்போடுவார்களோ!
புதிதாகக் கல்யாணமான சமயத்தில்கூட கணவனின் மிருக பலத்திற்கு தன்னால் ஈடுகொடுக்க முடியாது போயிற்றே!
என்ன உறவு இது! நினைக்கும்போதே கசப்புதான் பெருகியது. எந்த வகையிலும் சற்றேனும் பொருத்தமில்லாத ஒருவருடன் ஆயுள் முழுவதும் இருந்து தீரவேண்டிய கட்டாயம்!
பல பெண்களுடன் அவன் தகாத உறவு வைத்திருந்தது தெரிந்தபோதும், கேவலம், இந்தப் பிணைப்பும் அறுந்துவிடக்கூடாதே என்று எவ்வளவு அஞ்சினோம்!
“என்னை நிர்க்கதியா விட்டுடாதீங்க!” என்று, அவன் காலைப் பற்றிக்கொண்டு – பண்டைக்கால சினிமா கதாநாயகியிடமிருந்து கற்றதுபோல் – கண்ணீர் வடியக் கெஞ்சியதால்தானே அவனுக்கு அவ்வளவு அலட்சியமாகப் போய்விட்டது!
கணவன் உறங்குகிற தைரியத்தில், மீனாட்சி அவனை உற்றுக் கவனித்தாள்.
அந்தக் கால்கள்!
ஒரு மனிதனின் உடலிலுள்ள எல்லா ரத்தத்தையும் உறிஞ்சிவிட்ட இரு அட்டைப்பூச்சிகளின்மேல் அடர்ந்த ரோமம் வளர்ந்தால் இப்படித்தான் இருக்குமோ!
“என்னாடி, சிரிப்புப் பொங்குது!”
தனது ரகசிய எண்ணப்போக்கினால் அவமானமும், பிடிபட்டுவிட்ட அதிர்ச்சியும் ஒன்றுசேர, தோளையும் முதுகையும் மட்டுமின்றி, வாயையும் சேர்த்து மூடிக்கொண்டாள் புடவைத் தலைப்பால். அவளுடைய தாடை நெஞ்சுக்குள் மறைய முயற்சி செய்தது.
உடல் பூராவும் பாறையின் வெடிப்புகளாக வடுக்கள் உருப்பெறத் தொடங்கியபோது, வேறு சில மறைந்துபோயின — `நீ சிரிப்பாய் சிரிக்கும் லட்சணத்திற்கு நாங்கள் ஒரு கேடா!’ என்பதுபோல், அகாலமாக உதிர்ந்துவிட்ட, உதிர்க்கப்பட்டுவிட்ட, முன்பற்கள்.
அரைகுறைத் தூக்கம் கலைந்த நிலை. எப்போதும்போல், அவளுடைய ஒடுங்கிய உடல் அதீத பலத்தை அளிக்க, “ஒன் தங்கச்சிக்கு என்னாடி இருக்கு, படிப்பா, பணமா? ஒடம்பு மட்டும் சும்மா `திமு திமு’ன்னு வளர்ந்திருந்தா ஆயிடுச்சா? இதை எனக்குக் கட்டிக்குடுக்க கசக்குதாமோ?” என்று பொரிந்தான்.
கணவனுடன் தங்கையை வைத்துப் பார்த்தாள் மீனாட்சி, அது நடக்காத காரியம் என்று உறுதியாகத் தெரிந்துவிட்டதால் தயக்கம் ஏற்படவில்லை.
அச்சோடியின் உருவப் பொருத்தத்தை அவளால்கூட மறுக்க முடியவில்லை.
ஒரு சிறு நப்பாசை தலைகாட்டியது: `பொருத்தமா, மனசுக்குப் பிடிச்சமாதிரி நான் இருந்தா, கண்ணுக்குள்ளே வெச்சுக் காப்பாரோ!’
சற்றுக் கவனத்துடன் உடலைப் பார்த்துக்கொண்டு, அப்படியே சிறிது தைரியத்தையும்… — நினைக்கையிலேயே தோள்கள் சரிந்தன.
ஊகும். `நான் யானைக்கு நிகராவேன்!’ என்று சுண்டெலி வீறுகொண்டு எழுவது முடியாத காரியம் மட்டுமல்ல; முழுப் பைத்தியக்காரத்தனமும்கூட.
`பெண்’ என்ற வார்த்தைக்கே `ஆணின் அடைக்கலப்பொருள்’ என்று கற்பிக்கப்பட்ட, குடும்பத்தின் மூத்த பெண் ஆயிற்றே! அவளுடைய பாங்கான நடத்தையில்தான் குடும்ப மானமும், தம்பி தங்கைகளின் எதிர்காலமும் இருந்தன.
கணவனை ஏறிட்டவளின் நோக்கில் ஒரு அலாதியான கனிவு. “என் தங்கச்சி கிடக்கா! ஒங்களுக்கென்னங்க குறைச்சல்? ஒங்க அழகுக்கும் பலத்துக்கும் வேற பொண்ணு கிடைக்காமலா போயிடும்!” என்று சமாதானப்படுத்தினாள்.
தனது பசிக்கு இரையாக்க எப்படிப்பட்ட தீனியைக் கொண்டுவரலாம் என்ற கற்பனையில் அந்த ஆண்மகன் ஆழ்ந்துபோக, கொண்டவனின் ஆத்திரத்தை அடக்கி, சிறிதளவேனும் இன்பத்தைக் கொடுத்துவிட்ட தன்னைப் பார்த்துத் தானே பெருமைப்பட்டுக்கொண்டாள் அந்த மனைவி.
(1986)