கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 22, 2020
பார்வையிட்டோர்: 4,788 
 

அன்று எங்களின் முதலிரவு.

ஆயிரம் ஆயிரம் ஆசைகளுடனும், கனவுகளுடனும் நான் அலங்கரிக்கப்பட்ட அந்தப் படுக்கை அறைக்குள் சென்றேன்.

பதின் பருவத்தில் உடலுறவு பற்றி என் தோழிகள் வட்டத்தில் நாங்கள் பேசிக் கொண்டதும், பாலியல் தொடர்பான வீடியோக்களை அவர்கள் கட்டாயப் படுத்தியதால், ரகசியமாகப் பார்த்து உடலுறவுக்காக நான் ஏங்கியதும் என் கண்கள் முன் வந்து போயின.

கையில் வெள்ளி பால் சொம்புடன் தலையைக் குனிந்தபடி அறைக்குள் மெதுவாகச் சென்றேன். அங்கு எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதை மிகப்பெரிய ஏமாற்றம் என்றுதான் சொல்ல வேண்டும்.

என்னைக் கட்டி அணைத்து முத்த மழை பொழிந்து விடிய விடிய கண்ணுறக்கம் பாராமல் காமத்தில் ரசனையுடன் ஈடுபடுவார் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அறைக்குள் நான் வருவதற்கு முன்பே அவர் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்.

நான் முப்பது வயது நிரம்பிய கன்னி. அவர் ஏன் முதலிரவில் இப்படிச் செய்தார்..? எதுவுமே எனக்குப் புரியவில்லை.

கல்லூரி நாட்களிலும், பணி புரிந்த இடங்களிலும் என் சக தோழிகளெல்லாம் தங்களுக்குப் பிடித்த துணையைத் தேடிக்கொண்டு அவர்களின் தோளில் சாய்ந்துகொண்டும், கரத்தைப் பற்றிக்கொண்டும் மிடுக்காக நடப்பதைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும். எனக்கும் இப்படி ஒரு துணை கிடைக்க வேண்டும் என்கிற ஆசையும் ஏக்கமும் என்னுள் பீறிட்டுக் கிளம்பும்.

எங்கள் குடும்பம் ரொம்ப பெரிசு. இருப்பினும் நான் தனியாகவே உணர்ந்தேன். இத்தனை ஆண்டுகளாய் நான் அனுபவித்த தனிமையை போக்க, நான் சேமித்து வைத்திருக்கும் அன்பையெல்லாம் வெளிப்படுத்த ஒரு நல்ல ஆண் துணையை தேடிக்கொண்டிருந்தது என் மனம்.

நான் சற்றுக் குண்டாக இருப்பேன். நான் குண்டாக இருப்பதால்தான் எனக்கு திருமணம் தள்ளிப் போயிற்றோ? என்னை எவரும் மணந்துகொள்ள மாட்டார்களோ? என் பெண்மை அர்த்தமற்றுப் போய்விடுமோ? இப்படியெல்லாம் அடிக்கடி விடை தெரியா கேள்விகளாக என் மனதிற்குள் பயத்துடன் ஓடிக் கொண்டிருக்கும்.

எனது முப்பதாவது வயதில் இதெற்கெல்லாம் விடை கிடைத்தது. எப்படியோ என்னையும் திருமணம் செய்துகொள்ள ஒருவர் வந்தார். என்னைப் பெண் பார்க்க வந்தபோதே என் மனதில் உள்ள ஆசைகளையெல்லாம் அவரிடம் கொட்டித் தீர்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அவரிடம் பேசச் சென்றேன்.

ஆனால் அவர் நான் பேசுவதையெல்லாம் சரியாகக் கவனிக்கவில்லை. பதில்கூட பேசவில்லை. பதற்றமாகவே இருந்தார். நான் பேசப் பேச எல்லாவற்றிற்கும் தலை குனிந்தபடி “ம்.. ம்” என்று மட்டுமே சொன்னார்.

இந்தக் காலத்தில் ஆண்கள்தான் பெண்களைக் கண்டு வெட்கப் படுகிறார்கள். இதில் என் வருங்காலக் கணவர் மட்டும் விதி விலக்கா என்ன என்று எனக்குள் நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.

இறுதியாக நான் இத்தனை ஆண்டுகளாய் எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருந்த அந்த நாள் வந்தது. அனைவரின் ஆசியுடனும் நல்லபடியாக எங்கள் திருமணம் நடந்தது.

ஆனால் முதலிரவில் அவர் ஏன் இப்படிச் செய்தார்? என்ன நடந்தது? என்று எதுவுமே எனக்குப் புரியவில்லை. அடுத்த நாள் நான் இதுபற்றிக் கேட்டபோது புகை மணடலத்தில் அதிக நேரம் இருந்ததால் உடல்நிலை சரியில்லை என்று மழுப்பிவிட்டார். அதன் பிறகு எங்களுடைய இரண்டாவது இரவு, மூன்றாவது இரவு என எல்லாமே இப்படித்தான் முடிந்தது.

சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு என் மாமியாரிடம் இதுபற்றிக் கேட்டேன். “அவனுக்கு கூச்ச சுபாவம், சிறு வயதிலிருந்தே பெண்களிடம் பேசத் தயங்குவான். படிச்சதெல்லாம் ஆண்கள் பள்ளியில். அக்கா, தங்கைன்னு யாரும் இல்லை. போகப்போக சரியாகி விடுவான்.” என்று மிக இயல்பாகச் சொன்னார்.

கேட்பதற்கு ஆறுதலாக இருந்தாலும் என் மனதிற்குள் நெருடலாகவே இருந்தது. நாளுக்கு நாள் என்னுடைய எதிர்பார்ப்பு உடை பட்டுக்கொண்டே வருவதை என்னால் உணர முடிந்தது. காமம் மட்டுமே முக்கியம் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவர் என்னிடம் அன்பாக முகம் கொடுத்துக்கூடப் பேசியதில்லை. என் கையைக்கூட வாஞ்சையாகப் பற்றியதில்லை.

தன்னுடன் பணிபுரியும் பெண்ணொருத்தி தன் ஆடையை சற்று சரி செய்தாலே ஆசையுடன் பார்க்கின்ற ஆண்கள் மத்தியில், தான் தாலி கட்டிய மனைவி உடை மாற்றும்போது கூட அவர் கண்டுகொள்ளவில்லை.

இதையெல்லாம் யாரிடம் போய்ச் சொல்லுவது என்று தெரியாமல் நான் தவித்தேன். என்னைக் கரை சேர்த்து விட்டோம் என்ற நம்பிக்கையில் என் பெற்றோர்களும் உடன் பிறந்தோரும் நிம்மதியாக இருக்க, அவர்களிடம் இதையெல்லாம் சொல்லக்கூடாது என்று முடிவு செய்தேன்.

ஒருவேளை அவரைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து விட்டார்களோ? இல்லை நான் சற்றுக் குண்டாக இருப்பதுதான் அவருக்குப் பிடிக்கவில்லையோ? என்று மீண்டும் மீண்டும் எனக்குள் பல கேள்விகள் எழுந்தன. இதை எப்படியாவது முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று நான் உறுதி பூண்டேன்.

அன்று அவருக்கு விடுமுறை. வீட்டில் இருந்தார். எனது மாமியாரும் மாமனாரும் ஒரு திருமண விழாவிற்குச் சென்றிருந்தனர். இதை விட்டால் வேறு வாய்ப்பு கிட்டாது என்ற எண்ணத்தில் அவரிடம் போனேன்.

அவர் லுங்கி கட்டிக்கொண்டு படுக்கையின் மீது அமர்ந்துகொண்டு தனது லேப்டாப்பில் மூழ்கியிருந்தார். நான் அறைக் கதவைச் சாத்தி தாழ்ப்பாள் இடுவதைக் கண்டு பதறி எழுந்தார். அவரிடம் நான் நிதானமாக, “என்னை உங்களுக்குப் பிடிக்கவில்லையா? நமக்கு முதல் இரவுகூட இன்னமும் நடக்கவில்லை… அதுகூட பரவாயில்லை என்னிடம் நீங்கள் சரியாகப் பேசுவதில்லை. உங்கள் பிரச்சினைதான் என்ன?” என்றேன் குரலில் ஆழ்ந்த வருத்தத்துடன்.

அவர் “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை” என்று மழுப்ப எனக்கு திடீரென்று ஓர் எண்ணம் தோன்றியது.

அவரை வலுக்கட்டாயமாக படுக்கையில் தள்ளி அவருக்கு என் மீது மோகம் ஏற்படும் வகையில் அவரைக் கட்டி அணைத்தேன். இதன் உச்சமாக லுங்கியைத் தூக்கி அவரது ஆணுறுப்பை தொட்டுப் பார்க்கலாம் என்கிற முயற்சியில் ஈடுபடும்போதுதான் தெரிந்தது அவருடைய ஆணுறுப்பு மிகவும் சிறியது என்று.

இதைச்சொல்ல பெண்ணான எனக்குக் கூச்சமாக இருந்தாலும், பெண்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு என அனைவரும் அறிவதற்காக இதைக் கூறுகிறேன். முதன் முதலில் ஆணுறுப்பைத் தீண்டப் போகிறேன்… என் கரம் பட்டதும் அந்த உறுப்பு வீறு கொண்டு எழும்; என் பெண்மை முழுதாய் மலரும் என எண்ணற்ற கற்பனையில் இருந்த எனக்கு, என் சுண்டு விரலில் பாதிகூட இல்லாத அவரின் ஆணுறுப்பை பார்த்தபோது ஷாக்காகிப் போனேன்.

தோழிகள் பலர் சொல்லக் கேட்டும்; பல வீடியோக்கள் பார்த்தும், ஒரு பெரிய வாழைப்பழம் போன்று இருக்கும் என நினைத்து பொங்கிவந்த என் உணர்ச்சிகள், திராட்சைப்பழ அளவே இருந்த அதைத் தொட்டவுடன் புஸ் வாணமாகிப் போனது. என் மனதில் மீண்டும் குழப்பம். உண்மையில் ஆண்குறி இந்த அளவுதான் இருக்குமா? வலைத் தளங்களில் நான் பார்த்ததெல்லாம் வெறும் கிராபிக்ஸ்தானா? இதை யாரிடம் போய்க் கேட்பது என்று ஏகப்பட்ட குழப்பம்…

நான் ‘அதை’த் தீண்டியதில் உண்மை வெளியான அத்ரிச்சியில் அவர் கூனிக்குறுகிப் போனார். அதன்பிறகு மெல்ல மெல்ல உண்மை வெளிவரத் தொடங்கியது. அவர் திருமண வாழ்விற்கு தகுதியற்றவர், ஆண்மையற்றவர் என்பது எங்கள் திருமணத்திற்கு முன்பே அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் தெரிந்து இருக்கிறது.

ஒட்டு மொத்த குடும்பமும் சேர்ந்து என்னை ஏமாற்றிவிட்டது. ஒரு பெண்ணிடம் சிறு குறை இருந்தாலும் அதை பூதக்கண்ணாடி கொண்டு பார்த்து அவளைத் தண்டிக்கும் இந்தச் சமூகம், ஒரு ஆணின் பெரிய குறைக்கும் பெண்ணையே தண்டிக்கிறது.

இது வெளியே தெரிந்தால் நம் குடும்பத்துக்குத்தான் அவமானம் என்றனர் என் கணவர் குடும்பத்தினர். உன் விதி அவ்வளவுதான் என்ன செய்ய? என வருந்தினர் என் குடும்பத்தினர்.

ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்துக் கொள்ளலாமே, உடல் சுகம் மட்டுமா வாழ்க்கை என அறிவுரை கூறினர், அறுபதிலும் ஆசை அடங்காமல் மறுமணம் செய்த பெரிய மனிதர்கள். ஆனால் திருமணம் ஆகியும் கன்னி கழியா என் மனக் குமுறல் யாருக்கும் புரியவில்லை.

என் கணவன் என் காலில் விழுந்து அழுதான். “என்னோட நிலையை வெளியே சொல்லி விடாதே… என்னை விவாகரத்தும் செய்து விடாதே, என் மானமே போய்விடும். உன் விருப்பப்படி நீ யாரிடம் வேண்டுமானாலும் சென்று அனுபவி. நான் எதையும் கண்டுகொள்ள மாட்டேன். உனக்கு எவன் மூலமாக குழந்தை பிறந்தாலும், நானே அதற்கு தந்தை என்று சொல்லிக் கொள்கிறேன்..” என்றான்.

காதில் ஈயம் கொட்டியதுபோல் இருந்தது எனக்கு. கட்டிய கணவனிடமிருந்து எந்தப் பெண்ணும் கேட்கக்கூடாத அந்தச் சொற்கள் என்னை வதைத்தது. ஊருக்கு நல்லவளாக வெளிவேடம் போடவா? அல்லது உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து விவாகரத்து நாடவா? என் மனதில் பெரும் போராட்டம். இறுதியில் என் உணர்ச்சிகளே வென்றது.

ஆண்மையற்ற ஒருவனுக்காக என் ஆசைகளைத் துறக்க நான் தயாரில்லை. கணவன் வீட்டை விட்டு வெளியேறினேன். பிறந்த வீட்டிலும் என்னை ஏற்கவில்லை. தோழிகள் உதவியுடன் மகளிர் விடுதியில் சேர்ந்தேன். ஒரு நல்ல வேலையும் தேடிக்கொண்டேன். விவாகரத்து வழக்கு தொடர்ந்தேன்.

கணவன் வீட்டில் என்மீதே பழி சுமத்தினர். நான் கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறேன், அதனால்தான் விவாகரத்து கேட்கிறேன் என்றெல்லாம் கதை கட்டினர்.

நீதிமன்றத்தில் நான் போராடி மருத்துவப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தேன். உண்மை வெட்ட வெளிச்சமாகியது. மூன்றாண்டுகள் போராட்டத்திற்குப் பின் விவாகரத்து கிடைத்தது. புதிதாகப் பிறந்தது போன்ற மகிழ்ச்சி என் உள்ளத்தில் பொங்கியது.

முப்பத்தைந்தை நெருங்கியிருந்தாலும் நான் இன்னமும் கன்னிதான். கணவனைப் பிரிந்தவள்; உடலுறவுக்காக ஏங்குபவள் என எண்ணி ஆண்கள் கூட்டம் என் மேல் வலை வீசத் தொடங்கியது. அவர்கள் என்னுடன் மஞ்சத்தைப் பகிர விரும்பினார்களே தவிர, மனைவியாக்கிக் கொள்ள விரும்பவில்லை. கெட்ட எண்ணங்களுடன் என்னை அணுகியவர்களை பார்வையிளாலே சுட்டெரித்தேன்.

எனக்கும் ஆசையுண்டு; காம உணர்ச்சியுண்டு. அதைக் கணவனுடன் பகிரவே விரும்புகிறேன். ஆணினத்தை நான் வெறுத்து விடவில்லை. எனக்கு நம்பிக்கையுண்டு. என் ஆசைக்கேற்ற என் உணர்ச்சிகளைத் திருப்திப்படுத்த ஒருவன் வந்து என்னை மணப்பான். அவனுடன் சேர்ந்து என் மன, உடல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்வேன்.

அதுவரை தோழிகளுடன் அந்தரங்க விஷயங்கள் பேசுவதிலும்; வலைத் தளங்கள் மூலமும் திருப்தியடைந்து கொள்வேன். என்னை விமர்சிப்பவர்கள் தயவுசெய்து ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்.

பெண்கள் உயிரற்ற ஜடமல்ல; உணர்ச்சிகள் நிறைந்த ஜீவன்…

Print Friendly, PDF & Email

நிழல் பேசுகிறது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

பர்ஸனல் ஸ்பேஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)