கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 5, 2024
பார்வையிட்டோர்: 117 
 

(1962ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

காட்டுத் தீப் போலப் பரவிவிட்டது என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். அது வேகமாகப் பரவுமோ என்னவோ, எனக்கு அவ்வளவு நன்றாகத் தெரியாது. ஆனால், உமா – சஞ்சீவி பற்றிய செய்தி கல்லூரி மாணவர் களிடையே பரவிவிட்ட வேகம் வேறு ஒன் றுக்கும் இராது என்றுமட்டும் திட்டமாகச் சொல்லலாம். 

உமா பாடுகிறாள் என்றால் போதும், கல்லூரிக் கட்டிடத்தின் மூலை முடுக்குகளில் உள்ள எல்லோரும் ஒரே இடத்தில் வந்து குவிந்துவிடுவார்கள். அவளுடைய உடல் அழகு கவர்ச்சி மிக்கதா, குரல் இனிமை கவர்ச்சி மிக்கதா என்று ஒரு கேள்வியைக் கிளப்பி விட்டால், பையன்கள் பாடு பெருந் திண்டாட்டம் தான். ‘ஆடவர் பெண்மையை அவாவும் தோளினான்’ என்று ஆண் அழகுக்குப் புலவர்கள் சிறப்புச் செய்திருக்கிறார்கள். அது உண்மையாகக்கூட இருக்கலாம் போல்தான் தெரிகிறது. இல்லையென்றால், அந்தக் கல் லூரியில் படித்த பெண்களிடையே அவளோடு பேசுவதற்கோ பழகுவதற்கோ அவ்வளவு போட்டி எப்படி இருக்க முடியும் ! அவளைப் பற்றிச் சில பெண்களைப் பேசச்சொல்லிக் கேட்கவேண்டுமே! தங்களை ஏதோ காதல் கட்டத்தில் நடிக்கும் ஆண்களாகவே எண்ணிப் பேசுவதைப்போல் இருக்கும். 

பாரதிதாசன் பாட்டுக்களில் பயித்தியம் பிடித்த ஒரு மாணவருக்கு ஒரு பெரிய சந்தேகம், பாரதிதாசன் உமாவை எப்போது பார்த்தார் என்று. அவளைப் பார்க்காமல், 

மின்னலிடை ; கன்னல்மொழி ;
இன்னும் சொன்னால், விரிவுலகில்
நீ ஒருத்தி; அழகின் உச்சி 

என்று எப்படி அவரால் பாடியிருக்க முடியும் ! இப்படி மற்றக் கவிஞர்களிடம் ‘பிச்சை’ எடுப்பதா என்று எண்ணிய சில மாணவச் சுடர்கள் தாங்களே ‘கவி ‘களாக அவதாரம் எடுக்கவும் தயங்கவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், உமா அந்தக் கல்லூரிக்கே உயிரூட்டி வந்தாள். அங்கே இருந்தவர்களை யெல்லாம் கிரங்க வைத்துக்கொண் டிருந்தாள். 

புதுமையான நாகரிகச் சுழலிலே முக்குளித்துத் திளைப்பதிலே ஒரு பெருமிதம் கொண்டவள் உமா. நல்ல உடற்கட்டும் நெஞ்சுத் துணிச்சலும் கொண்டவன் வெள்ளப் பெருக்கின் சுழிகளிலே மூழ்கித் திளைப்பதில் பெருமையடைவதுபோல அவள் நிலைமை இருந்தது. அதிலே ஆபத்து நிறைந்திருக்கலாம். ஆனால், நிறைந்த ஆபத்தைக் கடப்பதில்தானே பெருமை இருக்க முடியும் ! நவ நாகரிகத்தின் சரியான பிரதிநிதியாகத் தன்னை ஆக்கிக் கொண்ட உமா, பாரதியாரும் பாரதிதாசனும் கனவிலே கண்ட புதுமைப் பெண்ணின் நேர் உருவம் என்று சொல்லத்தக்க வகையில் விளங்கினாள். 

“ஏன், உமா, பாரதியார் உன்னைப் பார்த் துத்தான் பாடினாராமே …….. 

சுட்டும் விழிச் சுடர்தான்-கண் உமா 
சூரிய சந்திரரோ.. 

என்ற அடி தமக்காகவே பாடி வைத்ததாகச் சில பைத்தியங்கள்….” 

உமாவுக்கு இந்த மாதிரியான நம்பத் தகுந்த வட்டாரத்தி லிருந்து வருகிற செய்திகள் எத்தனையோ உண்டு. இவற்றை யெல்லாம் கேட்டால் அவளுக்கு ஆவேசமே வந்துவிடும். இந்த ஆடவர்களே நம்பத்தகாதவர்கள். அவர் களால் பெண் இனம் பட்ட பாடு போதும். ஆகா ஒகோ என்று வானத்தை வில்லாக வளைத்துப் பேசுவார்கள். எல்லாம் பசை உள்ளவரையில் தான். அப்புறம் அடுப்பூதும் வேலைக்கு அனுப்பி விடுவார்கள். கண்ணே மூக்கே என்று அளந்த வாய், கழுதையே குட்டிச் சுவரே என்று அர்ச்சிக் கும்….” என்று அல்லி மகாராணியின் தர்பார்ப் பாணியில் பேச ஆரம்பித்துவிடுவாள். ஆண்கள் தன்னைப் புகழ்கிறார்கள் என்பதை அறிவதிலே அவளுக்கு எவ்வளவோ இன்பம் இருக்கத்தான் செய்தது. அந்த இன்பம் இல்லையென்றால் அவள் பெண்ணாக இருக்கமுடியாதே! ஆனால், அவள் எடுத்துக்கொண்ட ‘நாகரிக அவதாரம்’ தன் மன உணர்ச்சியை அவ்வளவு எளிதிலே காட்டிக் கொள்ள விடுமா ? இந்த ஆண்களை ஆட்டிப் படைப்பதே நம் வேலையாக இருக்கவேண்டும். இந்த நாட்டின் ஒவ்வொரு பெண்ணும் எந்த அருச்சுனனுக்கும் பணியாத அல்லியாக மாற வேண்டும்.” “நம்மைக் குரங்காக ஆட்டிவைத்த காலம் மறைந்துவிட்டது. நம் மனம்போல் ஆடுகிற சூத்திரப் பாவைகளாக ஆண்களை ஆக்குவதே நாகரிகமான சமூகத்தைப் படைக் கச் சிறந்த வழி.” “சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே என்பது ஆண் இனத்துக்கே ஏற்பட்டுள்ள தோல்வியின் முதல் அடையாளம்; பெண்ணினத்தின் எதிர்கால வெற்றிக்கு வழிகாட்டி ‘ இந்த மாதிரியான சட்டங்களை உருவாக்கிக் கலையகம் என்ற மாண வியர் விடுதியில் நம் அல்லி அரசாணை செலுத்தி வந்தாள். அவசரச் சட்டங்களும் அவ்வப்போது பிறப்பதுண்டு. கல்லூரிச் சங்கங்களில் நடைபெறும் விவாதங்களில் ‘ஆண் இனத்தை’ அடக் குவதற்காக அவை பிறப்பிக்கப்படும். அந்தச் சட்டங்களைக் கூட்டத்தி லுள்ள பெருவாரியான ‘ஆணினம்’ தன் கைதட்டலால் ஆமோதித்து நிறைவேற்றும். எல்லாம் அந்தப் பன்னிரண்டு முழப் புடைவையின் மகாத்மியம்தான்! வெறும் புடைவையா! அழகு! குயிலின் குயிலின் குரல்…….. அப்புறம்…… அடேயப்பா…….. 


இப்படி யெல்லாம் வெற்றிக் கொடி பிடித்தே பழகிவிட்டவளுக்குத் திருமணம் என்று சொன்னால், யார்தான் ஆச்சரியப்படமாட்டார்கள்! அதுவும் சஞ்சீவி மணமகன் என்றால்….! 

இந்தச் சஞ்சீவியின் மகிமை என்னவா யிருக்கவேண்டும்! உமா-சஞ்சீவி திருமணம் கல்லூரி இளைஞர்களிடையே ஒரு பரபரப்பான செய்தி. 

பரமசிவம் பிள்ளை தம் மகளைப் படிக்க வைக்க நினைத்ததில் பெரிய பெரிய ஆகாயக் கோட்டைகளுக்கு இடம் இருந்தது என்று சொல்ல முடியாது. அவரிடம் பூர்விகச் சொத்து என்ற சோம்பல் மருந்தோ, செல்வாக்கு என்ற சமூகத்தின் கருந்திரையோ இல்லை. உழைத்தால் பிழைக்கலாம் என்ற இயற்கை விதியினை வேறு வழி இல்லாமல் கடைப்பிடிக்கிறவர். சாதாரண மான வருவாயுள்ள வக்கீல் நரசிம்மாசாரியாரி டம் குமாஸ்தாவாக அமர்ந்து வயிறு கழுவி வந்தார். உமா ஒரு பி.ஏ. ஆகிவிட்டால் தொல்லை இராது என்று நினைத்தார்; படிக்க வைத்தார். 

ரூபாய் அணாப் பைசாவிலே அவர் வளமாக வாழவில்லை யென்றாலும், செத்த எழுத்துருவில் சாகாமல் வாழ்ந்துவருகிற அறிவுப் பரம் பரையில் நிரம்பவும் ஊற்றம் கொண்டவர் அவர். தம்மைப் போலவே தாம் காணும் சமூகத் தில் எத்தனையோ பேர் வேறு பல சமூக ஆற்றல்களுக்கு அடிமைகளாய்ப் புழுங்குகிற புழுக்கத்தை உணர்ந்திருக்கிறார். திறமையும் தகுதியும் சமூகத்தில் பெறுகிற இடம் என்ன என்று எண்ணி எண்ணிக் குமுறிய அவர் ஆத்மாவின் விளைவுதான் உமா ! சமூக மேடு பள்ளங்களிலே புரண்டு வீழ்ந்து குமுறிக் கொந் தளித்துப் பாய்ந்த அவருடைய ஆத்திர வெள்ளத்தின் விளைச்சல்தான் உமாவின் அல்லி அரசாணை. 

உமாவுக்குத் தம்பி தங்கைகளைக் கொடுத் துப் ‘பெரிய குடும்பஸ்தர்’ என்ற குசேலப் பட்டத்தைக் கொடுக்காமல் இருப்பதற்காகத் தான் பரமசிவம் பிள்ளையின் மனைவி ‘கைலாச பதவி’ அடைந்துவிட்டாள்போல் இருக்கிறது. உடலின் நைப்பாசை பரமசிவம் பிள்ளையைப்படாத பாடு படுத்திவைத்த துண்டு. அதெல்லாம் வாலிபத்தின் முறுக்கு முடுக்காக இருந்த காலத்தில். அந்த வேளைகளில்கூடத் தன் ஆன்ம விளைச்சலான உமாவின் நினைவால் தம் இச் சையை நசுக்கிவிட்டிருக்கிறார். 

ஒரு குறையும் இல்லாமல் இந்த ஒரு பெண் வளர்ந்தால் போதும்’ என்று அடிக்கடி சொல்லிக்கொள்வார். ” அம்மா உமா! நீ எவனையும் நம்பி அவனுக்கு அடிமையாக வாழக் கூடாது. இந்தப் பாழ்பட்ட சமூகத்தில் தன்னம் பிக்கையோடு நீ வாழத் தெரிந்துகொண்டால் அது போதும்……..” என்றெல்லாம் அவர் சொல்லிவைத்த பாடங்களே உமாவின் உறுதிப் பாட்டை உருவாக்கி வளர்த்துவிட்டன. அந்தத் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதற்காகத்தான் அவள் ஆண்கள் படிக்கும் கல்லூரியில் படிக்க வேண்டும் என்று அனுப்பினார். “எனக்கு இந்த முட்டாக்குப் பள்ளிக்கூடம் தேவையில்லை. எதிர்நீச்சு இல்லாமல் அடிபணியவே பழக்கி வைக்கும் இந்தச் சிறைக்கூடத்தில் படிக்கவா வது!” என்று அவளே சொன்னபோது பிள்ளை யவர்களின் உச்சிமட்டு மென்ன, உள்ளமே குளிர்ந்துதானே போயிருக்கும் ! 

அப்போது குளிர்ந்த மனம் அவளுடைய ஒரு கடிதத்தைப் பார்த்தபோது கொதிப்படைநதது 

சென்னை….. 

அன்புள்ள அப்பா, 

வணக்கம். தாங்கள் எழுதியுள்ள கடிதம் ஜப்பானியன் தலையில் விழுந்த அணுக் குண்டைப்போல் திடீரென்று வந்து என் வாழ்வைக் குலைக்கப் பார்க்கிறது. என்னை மன்னிக்க வேண்டும். தங்களிடம் பயிற்சி பெற்ற நான் இந்த அடிமைத் தளையில் சிக்க மறுக்கிறேன். 

சொத்து இருந்தால் அவனோடு இருக்கட்டும்….. 

தங்கள் உமா. 

இப்படிப்பட்ட உறுதியை அவள் உள்ளத்தில் வளர்த்துவிட்ட பிறகு வீணிலே கொதித்துப் பலன் என்ன! 

அவர் கொதித்தார். பயனில்லாமல் கொதித்தார். அவள் மறுத்துவிட்டாள். 


‘கடலோர மனை’ என்பது மயிலாப்பூரில் அழகான மாளிகை. அங்கே இளமைத் திருக்கோலம் களிநடம் புரிகிறதோ என்று சொல்லும் வண்ணம் சஞ்சீவி வசித்துவந்தான். சொத் தோடு சேர்த்துப் பொதுவாக வருகிற சொத்தை உள்ளம் அவனிடம் இல்லாம லிருந்தது பெரிய வியப்புத்தான். மாசுமறுவற்ற அவன் வாழ்க் கையே ஒரு கலை வாழ்வுதான். கல்லூரி நேரம் தவிர மற்ற நேரத்தில் அவனைக் கலைச்சூழலிலே தான் காணமுடியும். அவனுக்கு வேறு நண்பர் களும் இல்லை. மற்றவர்களோடு பழகுகிற இயல்பு அவனுக்கு அடியோடு இல்லாமல் போயிற்று. அவன் சொத்துக்காரன் என்பதால் வலிய அவனோடு ஒட்டிக்கொள்ளப் பார்த்தவர்களுக் கும் அவன் இடம் தரவில்லை. தன் கலை வாழ்வை அவர்கள் பழக்கம் கலைத்துவிடக் கூடாதே என்பதற்காக யாரையும் அவன் நெருங்கவிடவில்லை. 

“சஞ்சீவி ஒரு அப்பாவி ” ” அவன் சுத்தச் சூனியம் ! சொத்து இருந்து என்ன பண்ண!” சுத்தச் சூனியம் மட்டுமா? வடிகட்டின கஞ்சன்! நாலு பேரோடு பழகினால் எங்கே செலவு வந்துவிடுகிறதோ என்று பயப்படுகிறான்!” -இப்படி எத்தனையோ வகையாகக் கல்லூரி மாணவர்கள் பேசிக்கொண்டார்கள். “எல்லோரும் போனாப்போலே நானும் போனேன் மாங்காத் தோப்பு என்றதுபோல இந்தச் சஞ்சீவிப் பயலும் விவாதக் கூட்டத்துக்கு வருகிறானே, என்னடா இது !” என்று பெரு வியப்போடு அவனைப் பார்க்கிற பார்வைகளும் உண்டு. 

“இந்த அப்பாவி எப்படி’டா பிடித்தான் அந்த அல்லியை !” 

வெறும் கட்டுக் கதை என்று ஒதுக்கிவிட யாராலும் முடியாத வகையில் அல்லவா செய்தி வந்திருக்கிறது! 

பரமசிவம் பிள்ளையின் வற்புறுத்தலால் உமா ஊருக்குப் புறப்பட்டு வந்தாள். அவருடைய உடல் நிலை மோசமா, உள்ள நிலை மோசமா என்று உமாவால் நிச்சயிக்க முடிய வில்லை. வீட்டுச் சமையல் இல்லாமல் எங்கேயோ காசு கொடுத்துச் சாப்பிட்டதன் பயனாக க்ஷயரோகத்தையும் விலை கொடுத்து வாங்கிக் கொண்டார். நெடுநாளாக உள்ளூர இருந்து வந்ததைத் தந்தையும் அறியவில்லை ; மகளும் அறியவில்லை. திடீரென்று அது தன் ஆதிக் கத்தை வெளிப்படையாகச் செலுத்த ஆரம் பிக்கவே, பரமசிவம் பிள்ளையின் உடம்பால் அதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இந்த நிலை யில் மகளின் படிப்பு முடியவில்லையே என்ற கவலையும் புகுந்துகொள்ளவே க்ஷயரோகத்தின் பாடு கொண்டாட்டமாகிவிட்டது. 

ஆண்டுத் தொடக்கத்தில் சென்னைக்குப் போன உமாவுக்குத் தந்தையின் உடல்நிலை பற்றி ஒன்றும் தெரியாது. ‘ கல்விக்கு விசாரங் களை’ என்ற பாடம் படித்த பரமசிவம் பிள்ளை யும் மகளுக்குக் கவலை வேண்டாம் என்று எழுதவில்லை. 

சஞ்சீவி, உமாவின் பொருட்டு அவரைக் காண வந்தபோது அவர் இருந்த நிலை அவனுக்குப் பெரிதும் சாதகமா யிருந்தது. தளர்ந்த உடலில் தளராத உள்ள உறுதி இல்லை. தம்முடைய அறிவுச் செல்வத்தை யெல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக் காயாக்கி விட்டார். தம் மகளின் நல்வாழ்வுக் கேற்ற சமய சஞ்சீவியாகவே அவனைக் கருதினார். 

நல்ல குடும்பம். செல்வச் செழிப்பு. ஏழை யென்றும் பாராமல் உமாவின் கலைச் சிறப்பையே பெரிதாகக் கருதி வரும் உள்ளம். போதாக் குறைக்கு, ‘நேர்மை’ யான வழியில் பெற்றெடுத்த தந்தையாரையே நாடியிருக்கிறான்! வேறென்ன வேண்டும்! ‘சரி ‘ என்ற விடை கிடைத்த எக்களிப்பிலே ஆகாயத்தில் மிதந்து வந்தோமா, ரயிலில் வந்தோமா என்று தெரியாமல் சென்னைக்கு வந்துவிட்டான் சஞ்சீவி. 

அவளை நேராக நெருங்கும் துணிச்சல் அவனுடைய பரம்பரையிலேயே இருந்திருக்குமா என்பது சந்தேகம். எப்படியோ வந்த துணிச்சலைக் கொண்டு பரமசிவம் பிள்ளையை நெருங்கினான். 

குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்து விட்டது! இலவு காத்த கிளிகள் ஏமாந்து போயின. 

பரமசிவம் பிள்ளையின் உடம்பும் உள்ள மும் தன்னுள் கரந்து வைத்திருந்த தாய்மையை இதுவரை வெளிப்படுத்த நேரவில்லை. துருப்புச் சீட்டை எப்போதுமா காட்டுகிறார்கள்! உமா தோற்றுப்போனாள். 

உமா தன் தோழி ஒருத்திக்குக் கடிதம் எழுதினாள் : தாயற்றவள் நான். தந்தையின் உள்ளம் என்னை என்னவோ செய்கிறது. என்ன செய்கிறோம் என்ற விளக்கமில்லாமலே அவரிட முள்ள தாய்மை உணர்ச்சியாகிய மந் திரக் கோலுக்குப் பணிகிறேன். ஒரு வேளை என் திருமணம் என்பது என் உள்ளத்தைப் பொறுத்தவரையில் தற்கொலையாகக்கூட இருக் கலாம்…….. இந்த முகத்தோடு கல்லூரியில் படிக்கும் துணிச்சல் எனக்கு இல்லை……… அல்லியை வஞ்சகத்தால்தான் அருச்சுனன் வென்றிருக்கவேண்டும்……..” என்று எழுதிய உமாவின் கடிதமே அப்பாவி சஞ்சீவியின் அதிர்ஷ்டத்தைக் கண்டு எல்லோரையும் வியப் புக் கடலில் மூழ்கடித்தது. செய்தி–‘காட்டுத்தீப் போல’ அல்ல-தன்னையே வெல்லும் வேகத்தில் பரவி விட்டது. 


சஞ்சீவியின் பணம் உமாவைத் திருமணம் செய்துகொண்டது. அவள் முக மலர்ச்சியும் அக மலர்ச்சியும் எங்கோ மறைந்துவிட்டன. துள்ளித் திரிகின்ற மான்! பாடிப் பறக்கின்ற குயில்! ஆடிக் களிக்கின்ற மயில் ! வானம்பாடி!-இவை இந்த உமாவைப்பற்றி எழுந்த பேச்சுக்கள்தாமே! 

என்ன மாறுதல்! ஆட்டம் எங்கே ? கல கலத்த சிரிப்பெங்கே ! பேச்சு……..? 

அழகு இருந்தது; மலர்ச்சி இல்லை. வளம் இருந்தது; வாழ்க்கை இல்லை. நடைப்பிணம் என்கிறார் களே, அது இப்படித்தான் இருக்குமோ ! 

சஞ்சீவி எல்லையற்ற துயருக்கு ஆளானான். என்னதான் தன்னலம் கொண்டவ னாயினும் அவனும் கலை உள்ளம் படைத்தவன் அல்லவா? கலை வாழ்வுக்கு அவள் தக்க துணையாவாள் என்றல்லவா எதிர்பார்த்தான்! அவள் தன் கலையையே கொன்றுவிட்டாளே ! ஒரு பாட்டு ! மருந்துக்கு ஒரு பாட்டு !-ஊஹும், அதுதானே கிடையாது. 

எந்தச் சஞ்சீவி தன் மகளுக்குச் சமய சஞ்சீவி யாவான் என்று கருதினாரோ, அந்தச் சஞ்சீவியே அவள் வாழ்வுக்கு நஞ்சாகி விடுவானோ என்று எண்ண வேண்டிய நிலை வரும்வரையில் பரமசிவம் பிள்ளை வாழவில்லை. க்ஷயரோகத்தின் இறுகிய அணைப்பிலே ஒன்றி ஒடுங்கி இரண்டறக் கலந்துவிட்டார். 

சஞ்சீவி-உமா வாழ்க்கை இயந்திரம் போல் சென்றது. அவனுக்கோ, நண்பர்களும் இல்லை. அவளோ, இப்போது யாரையும் நாடுவதில்லை. வழி துறை துலங்காத காரிருளில் அந்த இரண்டு உயிர்களும் பயணம் செய்தன. அவள் மகிழவில்லையே என்ற ஏக்கம் சஞ்சீவிக்கு. தனக்கு இந்தக் கேடு செய்தானே 

என்ற ஏக்கமும், அந்த ஏக்கத்தினூடு அவனுடைய கலையுள்ளத்தைக் கண்டதால் பிறந்த அனுதாப மும் கொண்டு இரண்டு துருவங்களிடையே ஊசலாடினாள் அவள். எப்படியோ நடந்தது அவர்கள் வாழ்க்கை! 

மனம் விட்டுப் பேசும் வழக்கம் இருந்தாலும் இருவருக் கிடையே இருந்த திரை கிழிபட் டிருக் கக்கூடும். அப்படி மனங்கலந்து பேசும் வாய்ப்பு அவர்கள் வாழ்விலே முன்னே இருந்ததில்லை. இப்போதோ அது எப்படி வரும்? 

மண வாழ்வு மணமற்ற வாழ்க்கையாகச் சுழன்றது. 


காற்றடித்தது; மழை பெய்தது- 

கடலோரமனையின் உள்ளிருந்து இசை வெள்ளம் பெருக்கெடுத்துப் பரவுகிறது. நிகழாத நிகழ முடியாத— அற்புதம் என்று எந்தக் காரியத்தைச் சஞ்சீவி நினைத்தானே அந்தக் காரியம் தன் கருத்துக்கும் கண்ணுக்கும் எதிரே நிகழ்வதைக் கண்டு எல்லையற்ற வியப்பிலே மூழ்கிக் கிடக்கிறான். கையிலிருந்த புத்தகத்தை மெல்ல மூடிவைத்துவிட்டுச் சோபாவிலே சொகுசாகச் சாய்ந்து இரு கண்ணையும் மூடி இசையலையில் மிதந்து வான யாத்திரை செய்யத் தொடங்கிவிட்டான். 

தாலாட்டு, குழந்தைக்கா, தன் புது வாழ்வுக்கா! 

சஞ்சீவிக்கு ஒன்றும் புரியவில்லை. உமாவின் இந்த மாறுதலை எப்படி விளக்குவது என்று அவனுக்குப் புரியவில்லை. மறுமலர்ச்சியா? புதுப்பிறப்பா? 

தொட்டிலில் கிடந்த குழந்தை ஏதோ உளறிற்று. “இது புதுப் பிறப்பு. தாய் இன்று தான் பிறந்தாள் ” என்று அது சொல்லியதாகச் சஞ்சீவிக்கு எதிரே இருந்த ஒரு படம் விளக்கவுரை சொல்லியது. அந்த ஓவியத்தில் தாய் ஒருத்தி தன் சேய்க்குப் பாலூட்டும் காட்சி சித்தரிக்கப்பட்டிருந்தது. அந்தக் கணத்திலேயே குழந்தைக்கு ‘ஆண்டாள்’ என்று பெயரிட்டான் சஞ்சீவி.

– இடமதிப்பு, முதற் பதிப்பு: 1962, மல்லிகா வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *