‘‘யமுனா… மனோவை ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போற ஆட்டோவை நாளையிலிருந்து வர வேணாம்னு சொல்லிட்டியாமே..?’’ – அலுவலகத்திலிருந்து வந்ததும் வராததுமாய் கோபமாகக் கேட்டான் மணி.
‘‘ஆமாங்க!’’
‘‘ஏன் வேண்டாம்னு சொன்ன?’’ – இன்னும் கோபமானான்.
‘‘ஆட்டோவுக்கு மாசம் ஐந்நூறு ரூபா ஆகுது. அதுவுமில்லாம உங்கம்மா வீட்ல சும்மாதானே இருக்காங்க. ஸ்கூல் கூட நாலு தெரு தள்ளிதானே இருக்கு. அவங்களே குழந்தையை ஸ்கூல்ல விட்டுட்டு வரட்டும்’’ என்றாள், எல்லோருக்கும் கேட்கும் குரலில்.
‘‘ஏண்டி ஐந்நூறு ரூபா மிச்சம் பண்ணி என்ன பண்ணப் போறோம்? எங்கம்மாவுக்கு எதுக்கு கஷ்டம் கொடுக்கற…’’ என்று அவன் எகிறியபோது குறுக்கிட்டாள் யமுனா.
‘‘ஷ்… சும்மா இருங்க. அவங்க நன்மைக்காகத்தான் சொல்றேன். அவங்களுக்கு சர்க்கரை பிரச்னை இருக்குது. டாக்டர் தினமும் ரெண்டு கிலோமீட்டர் நடக்கச் சொன்னார். ஆனா, அவங்க எங்க நடக்கறாங்க! டி.வி பார்த்துக்கிட்டே உட்கார்ந்துக்கிட்டு இருக்காங்க. இப்போ அவனைக் கூட்டிட்டுப் போற சாக்குலயாவது நடப்பாங்க. இன்னொரு நன்மை என்னன்னா, ஆட்டோவுல பத்துப் பதினைஞ்சு பேரோடு மூட்டை மாதிரி திணிச்சு அவனை அனுப்பிட்டு நாம பயந்து கிடக்கறதை விட, உங்கம்மா கூட அனுப்பறது பாதுகாப்பா இருக்கும்…’’
மனைவியின் புத்திசாலித்தனத்தைக் கண்டு சாந்தமானான் மணி.
– 08 ஜூலை 2013