கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 15, 2021
பார்வையிட்டோர்: 15,874 
 
 

மண்சுவரால் கட்டப்பட்ட கூரைவீடு, மழை பெய்தால் ஆங்காங்கே ஒழுகும், கரும்புத் தோகைகளை கத்தையாக கட்டி அந்த வீட்டின் மேல் வேயப்பட்டிருந்தது. ஓரளவு இந்த கரும்புத் தோகை ஒழுகாமல் மலைக்கொழுந்தையும் ஆரியையும் பாதுகாத்தது.

ஒரு நாள், வேப்பமுத்து பொறக்கும் போது எதையோ பாத்துப்புட்டு திடுக்கிட்டு வாய்க்காலில் விழுந்தவளுக்கு இடுப்பு காலு கையினு எல்லா இடமும் பயங்கர வலி. அன்று இரவே காய்ச்சலும் தொற்றிக்கொண்டது. வயதான ஆரியால் வலிதாங்க முடியவில்லை. இராமன் பூசாரிக்கிட்ட மந்திருச்ச கயிரும் விபூதியும் வாங்கி ஆரி கையில் கட்டிவிட்டு அவள் நெற்றியில் விபூதியைப் பூசிவிட்டு தானும் பூசிக்கொண்டார்.

“ஏம்புள்ள முனுச்சாங் கோயிலுக்கிட்ட பயந்துருக்கியாம். அந்தக் கோயிலுக்கு ஒன்னேகால் பணம் காணிக்கை குடுத்துட்டு திரும்பிப்பாக்காம வரணுமாம். நா போயி செஞ்சுட்டு வந்தர்றேன். கட்டில்லேயே இரு” கட்டிலில் கிடந்த சிகப்புத் துண்டை கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

“பாத்துப்போயா”

ம்… ம்… நீ பத்தரமா இரு நடை போட்டார் மலைக்கொழுந்து.

“ஈசனே! ஏந்தான் இந்தச் சோதனையோ ஏ வயித்துலயும் புள்ளக்குட்டியே கொடுக்கல வயசும் போச்சு. ஒனக்குத் தான் வெளிச்சம். மேல் மூச்சு, கீழ் மூச்சு விட்டவளாய் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.”

முனிச்சாங்கோயிலுக்கு காணிக்கை செலுத்திவிட்டு வரும் போது சின்னான் கூப்பிடுவது தெரிந்தும் கேட்காதது போல் வீடு வந்து சேர்ந்தார், எழுபதைக் கடந்த மலைக்கொழுந்து.

“ஆமாபுள்ள எதும் வேணுமா”

“இல்லய்…யா வயிறு போறது மாறி தோணுது”

தோள்பட்டய புடிச்சிக்கிட்டு மெதுவா நட என்றார் ஒருகையில் வாளியுடன்.

“ஆசுப்பத்திரிக்குப் போகனும்னாலும் கைசெலவுக்கே இல்லயே. வச்சுருந்ததையும் வட்டி கடைக்காரனுக்கு கொடுத்துட்டோம். இருக்குற அரிசி ரெண்டு நாளக்கித்தான் வரும். என்னய்யா பண்றது” என்றவள் “இந்தக் கருவத்தூருக்கிட்டேயே இருக்குறய்யா. கூப்புடும்போது வா”

“தண்ணி வாளிய வச்சுட்டுப் போறேன். மெதுவா காலக்கழுவிடு”

“காலக் கழுவிட்டேன் வாயா”

“இந்தா வர்றேன்” மெதுவாக நடக்க வைத்து வீட்டுக்குள் உட்காரவைத்தார்.

நாளும் பொழுதும் இப்படித்தான் சென்றது. ஆரியின் உடல்நிலை மோசமானது. நடப்பது என்பது கனவாகிப் போனது.

“இங்கேருய்யா… வாயிக்கே ஒரு மாறியா இருக்கு. ஆட்டுக்கறி திங்கனும் போல இருக்குயா.காசு இருந்தா கசாப்புக் கடைக்குப் போயிட்டு வாயா” என்றாள் ஏக்கத்தோடு.

“நானும் மறந்தே போயிட்டேன். இன்னக்கி தலைவரம்மா… தர்ஹாவுல கடாய் வெட்டி கந்திரி போடுறாங்க.”

“இருபுள்ள, ஒரு குண்டான் சட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினார்”

ஆட்கள் உட்கார ஆரம்பித்தார்கள்.

“மலக்கொழுந்து இப்புடி உக்காரு” யாரோ சொல்லவும் அந்த இடத்தில் உட்கார்ந்தார்.

இலை நிறைய சோறும் அஞ்சாறு கரித்துண்டும் போட்டு கொழம்பு ஊத்தினார்கள். சாப்பிடாமல் சட்டியில் எடுத்து வைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார்.

“என்னய்யா, எதுவாச்சும்” ஆவலோடு கேட்டாள்.

“ஆண்டவன் நமக்கு நெறயக் கொடுத்துருக்கான். ஊட்டி விடுறேன் சாப்புடு”

“சாமி சோற குளிச்சுட்டு சாப்புடுறய்யா” அப்புறம் ஒன்னோட யோசனை. நடக்க முடியாத அவளை தூக்கிக்கொண்டு வீட்டின் பின்புறம் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்.

வீட்டுக்குள் ஏதோ உருட்டும் சத்தம்.

அவளை தூக்கியவாறு மலைக்கொழுந்து ஒடிச்சி ஒடிச்சி கத்தினார். சட்டியை வாசலில் இழுத்துக்கொண்டு மும்மரமாகத் தின்று முடித்தது தெரு நாய். கையில் நடக்க சிரமப்படும் மனைவி, எதிரே நாய். அவளை இறக்கிவிடவும் முடியாமல் தெருநாயை விரட்டவும் இயலாமல்

மிஞ்சியிருந்த ஒன்றிரண்டு பருக்கைகளை கோழிகள் வேட்டையாடின. அவரின் கண்கள் அதிகமாகவே கசிந்தன.

இருந்த பழைய கஞ்சியை அவளுக்கு ஊட்டிவிட்டார்.

“நீயாவது சாப்புட்டியா”

“ம்.. பொய்யாக தலை அசைத்தது. அவளுக்கும் தெரியும்” நீராரத்தை குடித்துவிட்டு வீட்டு சுவற்றில் சாய்ந்தார். கரிதின்ற மயக்கத்தில் தெருவில் ஓய்வெடுத்தது அந்த தெருநாய்.

– 6-12 ஆகஸ்ட் பாக்யாவில் வெளியானது.

– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.

என் இயற்பெயர் தீ.திருப்பதி. சோலச்சி என்பது யார்......? இதற்கான விளக்கத்தை எனது "முதல் பரிசு " சிறுகதை நூலில் என்னுரையில் பதிவு செய்துள்ளேன். நான் புதுக்கோட்டை மாவட்டம் இராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி , நச்சாந்துபட்டியில் பத்தாம் வகுப்பு (1997-1998) படிக்கும்போது எனக்கு அறிவியல் ஆசிரியராக இருந்தவர் தான் திருமதி. எஸ்.சோலச்சி அவர்கள். என் குடும்பம் சோற்றுக்கும் துணிக்கும் தங்குவதற்கும் வழியில்லாமல் ஊர் நடுவிலே இருந்த புளியமரத்தடியில் வாடி வதங்கிய…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *