சிவா இப்ப என்ன பண்ணிட்டிருக்கீங்க என்று ஆரம்பித்த ஜானகியின் கடிதத்தை படித்துக் கொண்டிருந்தேன்.
ஸ்கூலிருந்து வந்ததும் யூனிபார்மைக் கூட கழற்றாமல் அம்மா இன்னைக்கு ஸ்கூல்ல என்று ஆரம்பிக்கும் குழந்தை மாதிரி ஆர்டர் செய்யப்பட்ட காபி, குவளைகளின் நுண்ணிய துளைகள் வழியாக வெப்பத்தை இழந்து கொண்டிருக்க,காது வளையங்கள் அசைய அசைய நேரில் அமர்ந்து பேசுவது போல,அன்புள்ள,நலம் நலமறிய ஆவல் போன்ற சம்பிரதாய வார்த்தைகளற்று கடிதமெழுத ஜானகியால்தான் முடியும்.
சிவா எப்படி இருக்கீங்க?பாக்கணும் போல இருக்கு. சிவா இந்த வரியை எழுதும்போது ஸ்கூல் குழந்தைகள் போறது ஜன்னல்ல தெரியுது.
ததும்பி வழியும் பூக்குடலையாய் கான்வென்ட் பஸ் அவிழ்ந்து பரவும் குவியலில் எது எனது மலர்?ன்னு நீங்க எழுதினது ஞாபகத்துக்கு வருது.
சிவா, குட்டிக் குழந்தைகள், மழை, ஜேசுதாஸ் பாட்டு,ட்ரெயின்,யானைன்னு உங்கள ஞாபகப்படுத்த எத்தனை விஷயங்கள் இருக்கு. சரி,அங்க எப்பவாவத என் ஞாபகம் வருமா? இல்ல பஸ்ல ஏறி கையசைத்ததும் அப்படியே மறந்துட்டீங்களா?
சும்மா வா வான்னா உடனே வர முடியுமா? வீட்ல எத்தன பொய் சொல்லணும் எத்தன பேர சமாளிக்கணும் வழியில யாராவது பாத்துருவாங்களோன்னு திக்திக்குனு இருக்கும். இதெல்லாம் புரியாது. வரலலேன்னா கோபம் மட்டும் அப்படி வருது. எப்பத்தான் புரிஞ்சுக்க போறீங்களோ.
சரி ஊர்லருந்து கெஸ்ட் வந்திருக்காங்க.எப்படி வரமுடியும்னு தெரியல. நானே போன் பண்றேன். அதுக்கப்புறம் நீங்க கிளம்பினா போதும். இல்லேன்னா வெயிட் பண்ணேன் நீ வரல்லேன்னு வழக்கம் போல குதிப்பீங்க சரியா?
ஜானகி.
கடிதத்தை குழந்தையைப் போல் மார்பில் சாய்த்தபடி என் உயிரில் கலந்த ஜானகியின் நினைவுகளில் முழ்கினேன்.
எத்தனை யுகங்களோ அலைபேசி அதிர்ந்து அழைத்தது.
ஹலோ என்றேன்.
நான்தான். இன்னும் ரெடியாகாம என்ன பண்ணிட்டிருக்கீங்க,பங்ஷன் ஆரம்பிக்கப் போகுது.இன்னும் உன் விட்டுக்காரர் வரலையான்னு எல்லாரும் கேட்கறாங்க.
வர்றேன்.
சிக்கிரம் வாங்க என்றாள் எதிரில் இருந்த புகைப்படத்தில் கழுத்து நிறைந்த மாலையுடன் என்னருகில் சிரித்துக் கொண்டிருந்த பவித்ரா.
சரி என்றபடி திரும்பினேன்.
ஒரு மலரைப் போல மின்விசிறியின் காற்றில் மெல்ல அசைந்து கொண்டிருந்தது ஒரு இனிமையான கனவைப் போல இனி மீளவே முடியாதபடி என் வாழ்வை விட்டு விலகிப் போய்விட்ட ஜானகியின் கடிதம்.