ஆகாய உசரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 7,584 
 
 

நம்பமுடியாத கதை புளுகுபவள் என்று ஊரில் நல்ல பெயர் எடுத்து வைத்திருந்த நான் ஏழு தலைமுறைக்கு எவ்வளவு தேவைப்படுமோ அவ்வளவு அவமானப்பட்டுவிட்டேன். இனியும் அப்படி அவப்பெயர் எடுத்தால் எட்டாம் தலைமுறைக்கும் அவமானம் வந்துவிடும் என்பதால் ஒரு முடிவு எடுத்தேன். இனி சாப்பிடும் சாப்பாட்டில் கல் இருந்தாலும் இல்லாமல் போனாலும் சரி, நாலு பேருக்கு முன்பாக எதைச் சொன்னாலும் நம்பும்படி உண்மையைத்தான் சொல்லவேண்டும் என்பது என் முடிவு. அதன்படிதான் இப்பொழுது நம்பத்தகுந்த விதத்தில் நான் பேசியும் வருகிறேன். மீனுக்கு நாலு கால் என்று நான் புளுகிச் சொன்ன காலத்தை மனசில் வைத்துக்கொண்டு இப்பொழுது நாய்க்கு நாலு கால் என்று சொன்னாலும் நம்பமாட்டேன் என்று அடம் பிடிப்பது கைகால் அத்தனையும் முழுசாகவும், மூளை மொத்தமும் அறிவாகவும் இருக்கிற மனுஷர்களுக்கு எப்படி அழகானதாய் இருக்கும்?

நான் ஒரு பரம்பரைப் புளுகுணித்தாய் என்று ஆளாளுக்கு அவர்களாகவே நினைத்துக் கொண்ட ஒரே காரணத்துக்காக நான் சொல்வதை நம்பவே மாட்டேன் என்கிறார்கள். நம்பவில்லையென்றால் நாலுகாசு நஷ்டமில்லை, முதலுக்கு லாபம் என்று விட்டுவிடுவேன். ஆனால் நான் ஒரு புளுகுணித்தாய் என்பதற்காக எனக்கு எதிலும் எந்தவிதத்திலும் சந்தேகமும் வரக்கூடாது, எந்த கேள்வியும் யாரிடமும் கேட்கக்கூடாது என்று சொன்னால் என்ன அர்த்தம்? சில ஆட்களிடம் நான் தேவையற்ற விபரீதக் கேள்விகளை கேட்டு அவர்களை திகைப்பூண்டு மிதித்த நிலைமைக்குத் தள்ளி நினைப்பு நிலவரம் இல்லாமல் செய்துவிடுகிறதாக கதைகட்டி விட்டிருக்கிறார்கள் ஊரில். அதனால் நான் சொல்வதை கேட்காமல் போனதுமில்லாமல் நான் கேட்பதற்கு பதில் சொல்லாமலும் போய்விடுகிறார்கள் சில திகைப்பூண்டு மிதித்து நினைப்பற்றுத் திரிபவர்கள்.

என் புருசன்காரன்தான் பாவம், தண்ணி போட்டுவிட்டு வந்து நடுத் தெருவில் என்னை அடித்தாலும் எனக்கு சரிக்கு சமமாய் உட்கார்ந்து தைரியமாய் என் சந்தேகங்களுக்கும், நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாவிட்டாலும் எதிர்க்கேள்வியாவது கேட்டுக்கொண்டு இருந்தான்.

அப்படி எனக்கு சமீபத்தில் வந்த சந்தேகத்தை என் புருசன்காரனிடம் கேட்டேன். “கருவாட்டுக்கு குழந்தை பிறந்தால் அதுவே நீந்துமா, இல்லை நீச்சல் கத்துத் தரணுமா?” இந்தக் கேள்வி, கிறுக்கிக்கு பித்தமேறிக் கொண்டால் படுத்தவாக்கில் இருந்துகொண்டு கேட்கும் கேள்விபோல கிறுகிறுப்பாய் இருந்தாலும் என் புருசன்காரன் திடமாய் ஆடாமல் என் முன்னால் உட்கார்ந்திருந்தான்.

என் புருசன்காரனிடம் ஒரு சந்தேகத்தைக் கேட்டுவிட்டால், அந்த சந்தேகத்தின் மேல் அவனுக்கு ஏழேட்டு சந்தேகம் வந்துவிடும். அந்த சந்தேகத்தை சந்தேகம் கேட்டவரிடமே திருப்பிக் கேட்டு, கேட்டவருக்கு தான் கேட்ட அந்த சந்தேகம் என்ன சந்தேகம் என்பதே மறந்துபோகும்படி சந்தேகமில்லாமல் செய்துவிடுவான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமே கிடையாது. அதன்படி என் சந்தேகத்திற்கு எதிர் சந்தேகத்தை என்னிடம் கேட்டான். “கருவாடுன்னா எந்த கருவாடு? குழம்பு வெச்ச கருவாடா, சுட்ட கருவாடா? காயவெச்ச பச்சைக் கருவாடா? பச்சைக் கருவாடுன்னா, காசு போட்டு வாங்கின கருவாடா, ஆளுக்குத் தெரியாம திருடின கருவாடா? கருவாட்டுக்கு போய் குழந்தை பிறக்குமா? குழந்தை பிறக்கும்ன்னா கல்யாணத்துக்கு முந்தியா இல்ல கல்யாணமான பிறகா? குழந்தை என்றால் அது ஆணா இல்ல பெண்ணா? கருவாடு நீந்துகிறதுன்னா குளத்திலயா இல்லை குழம்பிலயா? குழம்புன்னா சூடான குழம்பா இல்லை நேற்றைய பழைய குழம்பா? பழைய குழம்பு என்றால் நேற்று நீ வைத்த கருவாட்டுக் குழம்பு மீதி இருந்ததே அது என்ன ஆச்சி?” இப்படி இடைவிடாமல் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பான். காரணம் அவன் குடித்திருக்கிறான்.

அந்த கருவாட்டுக் குழந்தை நீந்தும் விசயத்தை பிறகு பேசலாம். அதற்கு முன் பெண்கள் பற்றி சிலர் பேசுவது என்னவென்று பார்க்கலாம். பெண்கள் மலர் போன்றவர்கள்; நெல் நாற்று போன்றவர்கள் என்று சிலர் சொல்கிறார்கள். பெண்கள் நாற்று போன்றவர்கள்தான். தளதளவென்று வளர்ந்ததும் வேறு இடத்தில் பிடுங்கி நடப்பட்டு கொழித்து கதிர்விட்டு பூரிப்படைகிறாள் பெண் என்பதை பச்சை பச்சையாய் குளிர்ந்த காற்று வீச நான் ஒப்புக்கொள்கிறேன். மாமியார் வீட்டுக்கு மகளைத் துரத்தி கைகழுவி நிம்மதி அடையும் வித்தைக்கு இத்தனை பசுமையான உதாரணம் என்றால் நான் ஒப்புக்கொள்கிறேன். ஐயோ மகளே…!

ஆனால் என் போன்ற சில பெண்கள் முழங்கால் அளவு நீரில் மீனாகப் பிறந்தவர்கள் என்று சொன்னால் நம்பமாட்டேன் என்கிறார்களே! அப்படி மீனாகப் பிறந்து, பின் வளர்ந்து கலக்கமற்று விளையாடிக்கொண்டிருக்கும் போது வலைபோட்டு பிடித்து (வலையை தாலி என்றும், மோதிரம் என்றும் வேறு பெயர்களில் சொல்கிறார்கள்.) பிறகு பாறை மீது காயப்போட்டுவிடுகிறார்களே… பாறைமீது காயப்போடப்பட்ட அதன் பெயர்தானே கருவாடு? அந்த கருவாட்டுக்குத்தான் குழந்தை பிறந்தால் தானே நீந்துமா என்று கேட்கிறேன். பெண்களை கருவாடு என்று சொன்னால் முகச் சுளிப்போடு நம்ப மறுப்பவர்கள் தைரியமிருந்தால் ஒவ்வொரு வீட்டுக் கதவாகத் தட்டித் தட்டி எட்டிப் பார்த்து உங்கள் வீட்டில் மொத்தம் எத்தனை கருவாடுகள் இருக்கிறது என்று கேட்டு தெரிந்து கொள்ளட்டும்.

பூமியெல்லாம் நீரென நிறைந்திருக்கும் காற்றுக் கடலில் தப்பிதமாய் அவதரித்துவிட்ட சில பிள்ளைகள் வாழமுடியாமல் தத்தளிப்பதைப் பார்த்தால் எனக்கென்னவோ அந்த பிள்ளைகளுக்கு வாழ்வின் எதிர் நீச்சல் கற்றுத்தரவேண்டியது அவசியம்தான் என்று தோன்றுகிறது. இந்தக்காலத்தில் பெண்ணுக்கு குஷ்டமும் கிடையாது கஷ்டமும் கிடையாது என்று சிலபேர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். கருவாட்டைக் காயப்போட்டவர்கள் கருவாட்டுக்கு வலிக்கும், அது நாறும் என்று ஒத்துக்கொள்வதில்லை. ‘நன்றாக எண்ணை விட்டு மொறுமொறுப்பாக வனக்கிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்’ என்றுதான் சொல்கிறார்கள். பிடிபட்ட கருவாட்டுக்கு ஒரு அகல் விளக்கேற்றி வைத்து அதன் முன்பாக உட்கார்ந்து பிடிபட்டக் கருவாட்டின் தாய் வருசமானால் தண்ணீருக்கடியில் கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பாள் என்று என்னால் எப்படி நிருபிக்க முடியும். சொல்லத்தான் முடியும். இதைச் சொன்னாள் புளுகுணித்தாய் என்கிறார்கள்.

ஒரு உதாரணத்தை என்னால் சொல்ல முடியும். விமலா என்ற என் எதிர்வீட்டுக்காரி கருவாட்டு ரகத்தில் பிறந்த பெண் என்பதற்கு இன்று உலகத்தில் செத்து நாறும் அத்தனை கருவாட்டு மீன்களும், அதில் வைக்கப்பட்ட குழம்புகளுமே சாட்சி. என்னை மீன்காரி என்று நினைத்தாலும் பரவாயில்லை, சொல்லிவிடுகிறேன். உலகத்தில் எந்த கருவாடும் பிறக்கும்போதே கருவாடாகப் பிறப்பதில்லை. அப்படித்தான் விமலாவும் பிறக்கும்போதே நரகத்தில் பிறக்கவில்லை. நல்ல செல்வச் செழிப்பும், சொத்து பத்து சுகமும், ஆள் படை சேனையும், அதிகாரமும் இல்லாத ஒரு ஆதரவற்ற வீட்டில் விமலா பிறந்தாள். விமலா அப்பன் வறண்ட நிலத்தின் மேல் ஆழமற்ற கீறல்போடும் ஏருக்குப் பின் மூன்றாவது எருதாக வியர்வை சிந்திக்கொண்டிருந்த அப்பாவி.

விமலா ஏழை குடும்பத்தில் பிறந்தாலும் ஒரே பிள்ளை என்பதால் அதிகாரமாய் வளர்ந்தவள். ஒரு வாயும் ஒரு வயிருமாக ஒல்லியப்பனுக்கும் ஒல்லி அம்மாவுக்கும் பிறந்தவள். ஒரு வாயோடு பிறந்ததால் அன்று அவளுக்கு கிடைத்ததும் ஒரே வேளை உணவுதான். ஆனாலும் அதையே தின்று சந்தோசமாக வளர்ந்தாள். கல்யாணம் ஆன பிறகுதான் அவள் பிழைப்பு, பசியெடுத்தால் நமட்டிச் சுவைக்க புளியமரத்தைச் சுற்றி பழங்களைத் தேடும் பிச்சைக்காரியின் பிழைப்பாகிவிட்டது.

கல்யாணம் ஆன பிறகு விமலா ஆறு பிள்ளைக் கரு சுமந்தாள். முதலில் கருவான இரண்டு பிள்ளைகள் வயிற்றிலேயே சமாதியாகிவிட்டது. பட்டு வயிறு என்று சொல்கிறார்களே அந்த வயிறுதான் இரண்டு பிள்ளைகளை உள்ளுக்குள்ளேயே தின்ற மயான மண்ணாக ஆயிற்று. இரண்டு வருடம் அவள் வாழையிலை வயிறு சுடுகாட்டு பாறைபோல வறண்டு இருந்தது. பிறகு, ‘அம்மாடி, மலடி இல்லை!’ என்று பெருமூச்சு விடுவதற்காக ஒரு பிள்ளை பிறந்தது. அந்தப் பிள்ளை பிறந்து ஒருவாய் பால் குடிப்பதற்குள்ளாகவே இறந்தும் போயிற்று.

பிள்ளை செத்த துக்கம் மறைவதற்குள் மூச்சுவிட நேரமில்லாமல் மூன்று பிள்ளைகள் பிறந்து, ‘யம்மா, யம்மா’ என்று கத்தத் தொடங்கின. விமலாவின் கெட்ட நேரமோ இல்லை அந்த பிள்ளைகளின் கெட்ட நேரமோ மூன்று பிள்ளைகளும் அன்று சாகாமல் பிறகு சோற்றுக்கு இல்லாமல் இன்று செத்தன. (செத்தன என்றால் உடனே ஈமச்சடங்கு செய்பவனுக்கு ஆள் அனுப்பி குழி தோண்டிவிடக்கூடாது. சோற்றுக்கு இல்லாமல் செத்துப் பிழைத்தன என்று சுமாராக அர்த்தம் புரிந்துகொள்ள வேண்டும்.)

கடும் கறுப்பு நிறத்தில் இருந்த ஒருத்தன் கட்டும் தாலிக்கு தோதாக கழுத்தைக் காட்டி உட்கார்ந்திருந்த விமலா கல்யாணத்திற்கு எடுக்கப்பட்ட மட்ட விலைப் புடவை ஒன்றை சுற்றிக்கொண்டு ஒல்லியாகத்தான் கல்யாண மனையில் உட்கார்ந்திருந்தாள். ஆனாலும் பிடுங்கித் தின்னும் அழகோடு இருந்தாள் என்று புருசனால் கல்யாணமாகி வந்த புதிதில் மெச்சப்பட்ட விமலா இருபத்தைந்து வயதில் பெற வேண்டியதைப் பெற்று எமனுக்கு தரவேண்டியதை தந்து இடி இறங்கிய பனைமரம் போல கறுகறுத்துப் போனாள். ஒரு விரக்கடை துணியில் மறைக்கப்பட வேண்டிய அவள் பிள்ளைகளின் மானம் இரண்டு விரக்கடை அளவுக்கு கிழிந்திருந்தது.

அவள் பிள்ளைகளின் செந்நிற பறட்டை முடிகளை நல்ல சுத்தமான வாசனைமிக்க எண்ணை தடவி, சீவி சிக்கலெடுக்க எந்தக் கடவுளிடமும் திறமையான சீப்பு இல்லை. பிறகு எப்படி விமலா புருசனிடம் சிக்கலெடுக்கும் சீப்புக்கு சண்டைச் சத்தம் போட்டிருக்க முடியும் விமலாவால். சுரண்டி எடுத்தால் ஒரு கரப்பான் பூச்சி அளவுக்கு மாமிசம் கொண்டவைகளாக அவள் பிள்ளைகள் இருந்தன. சுகமாய்த் தின்ன ஒரு வாய் சோறு வாய்க்காத விமலாவே எட்டு கரப்பான் பூச்சி அளவுக்குத்தான் சதையோடு இருந்தாள். கல்யாணத்திற்குப் பிறகு விமலாவின் சந்தோசம் இப்படி கரப்பான் பூச்சியின் மாமிச அளவுக்குத்தான் இருந்தது.

இப்படி ஒருத்திக்கு சோற்றுப் பஞ்சம் வந்திருக்கிறதென்றால் அதற்குக் காரணம் ஊருக்கே தெரிந்திருக்கும். அவள் புருசன் ஒரு உதவாக்கரை; குடிகாரன்; வைத்திருப்பவன்; நாடோடி; சில்லறைப் பயல் என்று. உலகத்தின் எல்லாப் பெண்களின் வயிற்றுக் கொடுமையும் அவளின் புருசனால்தான் வருகிறது என்ற தப்புக் கணக்கு சில பெண்களின் புருசர்களால் போடப்படுகிறது. அந்த புருஷர்களையும் புருஷர்களின் புருஷிகளையும் நான் ஒரு சேர அவர்களுக்குத் தெரியாமலேயே மன்னிக்கிறேன். மன்னிப்பதற்கு ஒரே காரணம் அவர்களை திருத்தி, அவர்களின் தப்பு எண்ணங்களை மாற்றி சரியாக யோசிக்கக் சொல்லவதற்கு எனக்கு நேரமில்லை என்பதுதான்.

மன்னிக்கப்பட வேண்டியவர்கள் நினைத்தது போல விமலாவின் புருசன் அப்படிப்பட்டவன் இல்லை. அவன் படித்தவன்; நல்லவன்; காசு சம்பாதிக்கும் வேலையில் இருப்பவன்; பிறத்தியார் புடவை மற்றும் உள்பாவாடைகளை ஏறெடுத்துப் பார்க்காதவன்; சுத்தமான யோக்கியன்; சாயிந்தரமானால் சாமியாட வந்து வாய்நாற மனைவியிடம் பேசாதவன்; உடையவிழ தெருவில் விழாதவன்; மனைவி பிள்ளைகள் தலையை அன்போடு தடவுபவன். அப்படித் தலையை அன்போடு தடவ ஆரம்பித்தால் பிள்ளைகள், மற்றும் மனைவியின் தலைமுடி மொத்தமும் கொட்டிப்போகும் வரை நீவி விடுவான். அப்படி என்றால் அவனின் அன்பை ஒழுங்காக புரிந்துகொள்ள முடியும்.

சரி. இப்படி, எல்லாம் நல்லவன்தான். எதனால் விமலாவுக்கு அப்படி ஆயிற்று? அவள் புருசனுக்கு ஒரே ஒரு குறை. லொக்கென்று இரும ஆரம்பித்துவிட்டால் எட்டு மணி நேரம் இடைவிடாமல் இருமிக்கொண்டிருக்கும் ஒரு திவ்விய நுரையீரல் நோயாளி. அவன் இரவு நேரத்தில் இரும ஆரம்பித்தால் ‘சனியன் செத்துத் தொலையட்டும்… நோவு வந்த கோழி’ என்று பக்கத்து வீட்டில் பதிவிசாய் இருக்கும் ‘சாகும்வரை நோய் வராத ஆரோக்கிய சாமிகள்’ கொடுக்கும் சாபத்திற்கு ஆளானவன். போச்சா, எல்லாம் போச்சா! வாழ்க்கை தோசைத் திருப்பிக்கொண்ட கரப்பான் பூச்சி ஆச்சா? இனி சாகும்வரை வானத்தைப் பார்த்து கால்களை உதைத்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும் ஒரு கரப்பான் பூச்சியால்?

புருசனின் வாயில் ஒற்றை இருமல் சத்தத்தோடு ஆரம்பித்த விமலாவின் கெட்ட காலம் பிறகு நாளெல்லாம் லொக்கு, லொக்கு என்று பெரும் சத்தத்தோடு இருமி, நடு வீட்டில் நீட்டிப் படுத்துக்கொண்டது. புருசனுக்கு ஆஸ்துமா! அடிச்சதுடி அதிர்ஷ்டம்…! யாருக்கு? பீடைக்குதான்.

விமலா புருசனை சும்மா சொல்லக்கூடாது, பாவம். வாரத்திற்கு ஏழு நாள் சளி துப்பும் வேலை இருந்தாலும் உடம்பு ஒத்துக்கொள்ளும் நாளில் வேலைக்கு போய் வரத்தான் செய்தான். வயிற்றுக்கு சோறு, நுரையீரலுக்கு பீய்ச்சிக்கொள்ள மருந்து, எலும்புக்கூடு மறைக்க துணி இவற்றுக்கு சம்பாதித்துத்தானே ஆகவேண்டும். அவன் சம்பாதித்தான். ஆனால் சம்பாதித்தது அவன் மருந்துக்கே போதவில்லை. செத்துத் தொலைக்கலாம் என்று எண்ணம் எழும்படி ஒரு துக்கம், தின்று செரிக்க முடியாத அளவுக்கு வறுமை.

இப்பொழுது எதை, யாரை நோக்கி தன் எலும்பும் தோலுமான குற்றக் கையை நீட்டிக் காட்டுவாள் விமலா? புருசனை குற்றம் சொல்ல முடியுமா? புருசனுக்குள் கதிகலங்கிப்போய் வீங்கி இருக்கும் நோய் வந்த நுரையீரலை குற்றம் சொல்ல முடியுமா? புருசன் கட்டிய தாலியில் பூசிய மஞ்சளில் கலப்படம் என்று மஞ்சள் விற்றவனை குற்றம் சொல்ல முடியுமா? பிறந்த பிள்ளைகளில் ஏதோ ஒன்று தரித்திர நாராயணனாகப் பிறந்தது என்று அவற்றை குற்றம் சொல்ல முடியுமா?

விமலா பிறந்தபோது எழுதப்பட்ட ஜாதகக் கட்டத்தில் ஒரு கோடு மட்டும் கோணலாக இருப்பதால் அந்த கோட்டை குற்றம் சொல்ல முடியுமா? அந்தக் கோட்டை கோணலாகப் பொட்ட அரைக்கண் கணி பார்ப்பவனை குற்றம் சொல்ல முடியுமா? குடியிருக்கும் வீடு ஒரு வேளை தலைகீழாக தப்பாக கட்டப்பட்டிருக்குமா? வீட்டு குபேர மூலையில் திமிர் பிடித்த பல்லி தப்பான சகுனத்தோடு மூத்திரம் பெய்திருக்குமா? வாழ்க்கை தப்பாகிவிட்டால் எதிர்ப்பட்ட எல்லோரையும் எல்லாவற்றையும் குற்றம் சொல்ல வேண்டியதுதான். வேறு என்ன செய்ய முடியும்?

“ஏன்? தன்னைத் தானே குற்றம் சொல்லிக் கொள்ள முடியாதா? விமலா வேலைக்குப் பொனால் கஷ்டம் தீருமில்லையா? வேலைக்குப் போகாத அவள் மேல் குற்றம் சொல்லலாமே…” என்பார்கள் சிலர். ஆஹா எத்தனை பெரிய பிரச்சனைக்கு இத்தனை சின்ன யோசனை? ஆனால் அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆயிரத்தி ஓர் இரவு அரபுக் கதைகள் கேட்பதற்கு முன்பே கதை சொல்லப்படாத ஒரு இரவில் அயிரத்தி இரண்டாவது முறையாக அவளுக்கு அந்த யோசனையை சொல்லிவிட்டார்கள் சில கடவுள்கள். தெருவே போகும் கடவுள்களில் பல கடவுள்கள் “புருசனுக்கு முடியல. நீ வேலைக்கு போகலாமில்ல?” என்று ஆசி சொல்லிச் சென்றார்கள். அதில் ஒரு பிரயோஜனம் இல்லை. அவள் இன்றைய நிலைமையில் ஆறு கரு சுமந்த ரத்தமற்றக் கருவாடு. வறுமை அவளை தின்று எப்பொழுதோ துப்பிவிட்டது.

‘நானும் வேலைக்கு போவேன்…’ என்று புது மனைவியாக வீட்டுக்கு வந்தபோது தன் புருசனிடம் தினாவெட்டில் முரண்டு பிடித்து பேசியிருக்கிறாள். அவளும் கொஞ்சம் படித்துவிட்டாளே… படித்தவள் பேசினாலே பேச்சென்பது திமிர் என்றுதானே அர்த்தமாகிறது. அப்பொழுது புருசன் தன் திமிர்பிடித்த மனைவிக்கு என்ன சொன்னான்? “போடீ மயிறாளே… பொட்டச்சி வருமானத்தை தின்ன நானு என்ன பன்னியா?”

அந்த திமிர் இல்லாத புருசன் மிக்க அன்போடு, அதிரடியாக பேசி கத்தி கலாட்டா செய்த அன்று இரவுதான் விமலாவுக்கு வயிற்று முதல் கரு தொடை வழியே கலைந்து ரத்தமாய் போயிற்று. அப்படி என்றால் அவன் விமலாவை எங்கே உதைத்திருப்பான் என்று ரத்தத்தைப் பார்த்தால் மயக்கம் போட்டு விழாத தைரியசாலிகள் யோசித்துப் பார்க்க வேண்டும். இன்று தலைமுடி கொட்டுமளவுக்கு தலை தடவும் ஆஸ்துமாக்காரனும் அன்று ஆம்பிளை பவிசு காட்டியவன்தான். ஆக, விமலா வாழ்வுத் துயரத்திற்கு அவன்தான் காரணமென்று பலமற்று நடுங்கும் கரத்தால் தைரியமாக கை நீட்டிக் காட்டலாம். ஆனால் அப்படி குற்றக் கரத்தை நீட்டினாலே அதுதான் சாக்கென்று செத்துவிடத் தயாராக ஆஸ்துமாக்காரன் இருப்பதால் அப்படி குற்றம் சாட்டுவதும் இப்பொழுது சரியான விசயமாக இருக்காது.

அப்படி அன்று வேலைக்கு அனுப்புவது எதையோ தின்னும் பன்றிக்கு ஒப்பாகும் என்று சொன்னவன் பிறகு மருந்து வாங்க காசில்லாத மூச்சுத் திணறும் காலத்தில் “ஒரு வேலைக்கு போகக்கூடாதா, விமலா!” என்று திக்கித் திணறி கேட்கிறானே, இது நியாயமா? அவனை ஒரு கேள்வி கெட்காமல் விடுவது எப்படி?

“ஏன்டா சளி புடிச்சவனே! உனக்கு வந்த நோவுக்கு நாலு எட்டு வெச்சாதான்டா இருமல் வரும். நீ அவளுக்கு தொத்தி விட்ட நோயால ரெண்டு எட்டு வெச்சாவே இருமல் வந்து மூச்சு வாங்கறாளே. இப்ப வேலைக்கு போகச்சொன்னா அவ எந்த வேலைக்குடா போவா?” கேக்கறது நியாயமா, இல்லையா?

கோரம், அகோரம், மகா கோரம் என்று சொல்வார்களே அப்படித்தான் விமலாவும் அவள் பிள்ளைகளும் கட்டிக்கொண்ட புருசனும் இருந்தார்கள். அவர்களைப் பார்த்தால் எல்லோருமே பாவம் என்றுதான் சொல்வார்கள். அப்படிச் சொன்னால் சொன்னவர்களைப் பார்த்து யாரும் சிரிக்க மாட்டார்கள். அதனால் சொல்லிவிட்டுப் போகட்டும். வசதியுள்ளவன் தருமம் செய்கிறான். வசதியற்றவன் அனுதாபத்தை திருவோட்டில் போட்டுவிட்டு போகிறான். ஆனால் விமலாவின் அகோரத்தைப் பார்த்து என் புருசன்காரனும் பிள்ளைகளும் ‘ஐயோ பாவம்!’ என்று சொன்னார்களே அன்றுதான் எனக்கு அடக்கமாட்டாமல் கட புட தட தடவென்று சிரிப்பு வந்துவிட்டது. வராதா பிறகு… இங்கே என் கதையை, அதன் அகோரத்தை ஒரு நூல் கண்டிப்பாக சொல்ல வேண்டும்.

என் வீடு இருக்குமிடத்தை நான் யாருக்கும் சொல்லமாட்டேன். ஆனால் கஷ்டப்பட்டு கண்டு பிடித்து என் வீட்டுக்கு வருபவர்கள், வந்து என் பிள்ளைகள் கடைசியாக சாப்பிட்ட நல்ல சாப்பாடு எது என்று கேட்டுப் பாருங்கள்! என் பிள்ளைகள் கடைசியாக புதுத் துணி உடுத்தியது எப்பொழுது, கேட்டுப் பாருங்கள்! என் புருசன் சம்பாதித்த கடைசி காசு எவ்வளவு, எண்ணிப்பாருங்கள்? எனக்கு மொத்தம் எவ்வளவு கடன் இருக்கும், எழுதிப்பாருங்கள்! கடைசியாக வீட்டுப் படியேறிய கடன் கொடுத்தவன் என்னையும், என் அம்மாவையும் குறித்து என்ன வார்த்தை சொன்னான், விசாரித்துப் பாருங்கள்.

சுமக்கமாட்டாத என் துக்கத்தை ஒரு முறை சுமந்து தனிமையில் நீங்கள் அழுது பாருங்கள். விமலா புருசன் கிடக்கிறான். அவன் வெறும் படுக்கை நோயாளிதான். அவன் இருமினால் வேதனையோடு சளி துடைக்கலாம். அது போய்விடும். எம் புருசன்காரன் குடிகாரன். அவன் வாந்தி எடுத்தால் அடுத்தவள் வீட்டுக்குப் போய் என்னால் சுத்தம் செய்ய முடியாது. விமலாவின் பிள்ளைகள் கருவாடு. என் பிள்ளைகள் சுடுகாட்டில் முளைத்த காளான்கள்.

தினமும் குடித்து, என்னையும் என் பிள்ளைகளையும் அடித்து, சம்பாதிக்கும் பணத்தை ஒரு கறுப்பியோடு சேர்ந்து குடித்து கும்மாளமடித்து ராட்சசன் வாழ்க்கை வாழ்கிறான் என் புருசன்காரன். எனக்கும் விமலா போலவே வயிற்றுக்கு தின்னக் கிடைக்காத வாழ்க்கைதான். அப்படி இருக்க பீடையில் போகிற அவளைப் பார்த்து பாடையில் போகிற நாங்கள் ‘ஐயோ பரிதாபம்!’ என்று சொன்னால் சிரிப்பு வராதா?

ஊரில் இருக்கும் இரண்டே இரண்டு பீடைகள் நாங்கள்தான் என்று ஒண்ணும் ஒண்ணுமாய்ச் சேர்ந்து புலம்பிக்கொண்டிருந்தோம் நானும், விமலாவும். வருசத்திற்கு முன்பு வரைதான் இந்த புலம்பல் கதை எல்லாம். இப்பொழுது கதையே வேறு. விமலா இன்று பெரும் பணக்காரி. ஒரே வருசத்தில் மூதேவி ஸ்ரீதேவி ஆன கதை விசித்திரமானது.

‘விமலா ஒரு பெண், ஒரு பெண் ஒரு வருசத்தில் பணக்காரி ஆவது அத்தனை கஷ்டமில்லை, விமலா புருசன் ஒரே வருசத்தில் பணக்காரனாக ஆனால்தான் அது விசித்திரமான கதை’ என்று வில்லங்கமாக பேசக்கூடாது. திரும்பவும் சொல்கிறேன் விமலா அழகும் ஈர்ப்பும் இல்லாத ஒரு கவர்ச்சியற்ற நோயாளி. எட்டுக் கரப்பான் பூச்சி அளவுக்குத்தான் அவள் உடம்பில் சதை இருந்தது என்பதை மறந்துவிடக்கூடாது.

பின்னர் விமலா பணக்காரியாக எப்படித்தான் ஆனாள். ரேஸ் குதிரைகள், லட்டரி சீட்டுக்கள் ஒழிக்கப்பட்டுவிட்ட காலம் இது. கோடீஸ்வரப் பாட்டிகளுக்கு உயிர் உதவி செய்தால் சொத்து முழுவதையும் அந்தப் பாட்டி எழுதிவைத்துவிட்டு செத்துவிடுவாள் என்ற கதைகளும் வெகு காலத்திற்கு முன்பே முடிந்துபோயிருந்தது. கடவுள் கல்லாப் பெட்டியோடு வந்து வீட்டுக் கூரைகளை பிரித்துக்கொண்டிருக்கும் குறுக்கு வழிகள் கரண்ட் கம்பத்தின் வெளிச்சத்தில் சாத்தியமில்லாமல் ஆகிவிட்டது இப்பொழுது. மண்ணுக்கு அடியில் மகாராஜாக்கள் புதைத்துப்போன அத்தனை புதையல்களையும் வெகு காலத்திற்கு முன்பே வெளியே எடுத்து அரசாங்கத்து காட்சிக் கூடத்தில் வைத்துவிட்டார்கள்.

விமலாவுக்கு மீதிருக்கும் பிள்ளைகளில் ஒன்றுகூட தத்து கொடுக்கப்படவில்லை. விமலாவின் கையில் இருக்கும் காசு அளவிற்கு சமமான காசு களவு போனதாய் யாரும் தூங்கி எழுந்த மறுநாள் ஒப்பாரி வைத்து சொல்லவில்லை. விமலா திடீர் அரசியல்வாதியாகி தாரில்லாமல்; ரோடு, மணல் இல்லாமல் கட்டடம் எதுவும் கட்டவில்லை. உண்மையில் விமலாவுக்கு ஒரு ஆணின் மூலமாகத்தான் அத்தனை காசும் வந்தது.

விமலா பணக்காரி ஆனது அவளின் புருசனாலேயேதான். அவன் தன்னுடைய உள் உறுப்புகளில் ஒன்றை விற்றுவிட்டானா? அதுவும் இல்லை. அவன் நோய் வந்த உடம்பில் சேதாரமில்லாமல் ஒரு உறுப்பும் கிடையாது. யாருக்கும் அது உதவாது. வேண்டுமென்றால் தெரிந்த அப்பாவி கசாப்புக் கடைக்காரனிடம் கொடுத்தால் அவன் அதை ஆட்டுக்கறியின் விலைக்கு எடைபோட்டு எடுத்துக்கொள்வான். அத்தனை சேதாரம் அவன் உள் உறுப்புகளில். பிறகெப்படி காசு வந்தது? அதைத்தான் விசித்திரமான கதை என்கிறேன்.

அவன் ஒரு நாள் வேலை முடித்துவிட்டு இருமிக்கொண்டே வீட்டுக்கு வந்தான். (மனசை திடப்படுத்திக் கொள்ளுங்கள்.) அப்படி வந்த மகராசன் நடுரோட்டில் விழுந்தான். (பயமுள்ளவர்கள் கண்ணை மூடிக்கொள்ளுங்கள்.) விழுந்த மகராசன் சும்மா விழாமல் ஒரு பணக்காரனின் கார் சக்கரமாகப் பார்த்து தவறி விழுந்தான். (ரத்தம் பார்த்து அலறுபவர்கள் ஓடிப்போய்விடுங்கள்.) பிறகு அந்த மகராசனின் கார் சக்கரத்தில் தலை நசுங்கி நீங்கள் நினைத்தபடியே நூற்றுக்கு நூறு சதவீதம் செத்தான்.

“அதெப்படி? கார்ல அடிபட்டுச் செத்தா பொணம் ஆஸ்பிடல் போகும், காசு எடுக்க கூட்டுறவு பேங்குக்கா போகும். எப்படி காசு வந்துச்சி. அதை சொல்லு.” நான் அப்பொழுதே சரியாகத்தானே சொன்னேன்? புருசனின் தலை நசுக்கிய சக்கரத்திற்கு சொந்தமான காருக்குச் சொந்தக்காரன் ஒரு பணக்காரன் என்று. கார் ஏற்றிய பணக்காரன் கோர்ட்டுக்கு பயந்து நிறைய காசு கொடுத்தான். எதனால் கொடுத்தான் என்றால் அந்தக் கார் பணக்காரன் அப்பொழுதுதான் புதிதாக கார் வாங்கி ஓட்டப் பழகிக்கொண்டிருந்தான். உரிமம் இல்லாத காசுள்ள கோடீஸ்வரன். அக்கம் பக்கதில் அடித்துப் பேசவும் சட்டம் பேசவும் ஆளிருந்ததால் பெரும் காசு பெயர்ந்தது. புருசன் செத்ததால் பரிதாபப்பட்ட மில் முதலாளி ஆனாதைகளுக்கு ஆதரவாக காசு கொடுத்தார். இழுபறியானாலும் கட்டி வைத்ததால் இன்சூரன்ஸ்காரன் செத்தவனுக்கு டபுள் காசு கொடுத்தான். இப்படி நாலா திசையிலிருந்தும் சுழற்றியடித்துக் கொண்டு லட்சமாய் கொட்டியது விமலாவுக்கு. புருசன் தலை நசுக்கிய அந்த கார் சக்கரத்துக்கு அடியில்தான் ரத்த வெள்ளத்தில் அந்த மூதேவி விமலா ஸ்ரீதேவி ஆனாள். இப்பொழுது சொகுசாக இருக்கிறாள்.

இந்தக் கதை அபத்தக் கதையாக இருக்கிறதே. புருசன் செத்ததால் வந்த காசில் ஒரு மனைவி சுகமாகவும் சந்தோசமாகவும் இருக்கிறாள் என்று சொல்வது சுத்த காட்டுமிராண்டித் தனமாக இருக்கிறதே. புருசன் செத்து வந்த காசில் உயிர் வாழ மனைவி ஆசைப்படலாமா? அந்த வாழ்க்கையை சுகம் என்று சொல்லலாமா? இந்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள். இன்சூரன்ஸ் எடுங்கள் என்று வருவார்களே ஏஜென்டுகள் அவர்களிடம் கேளுங்கள். ‘உங்கள் மரணத்திற்குப் பின் உங்கள் குடும்பம் சுபிட்சமாய் இருக்கும்.’ என்று அவர்கள்தானே சொல்கிறார்கள்.

விமலாவும் நானும் கஷ்டத்தில் கூடி கண்ணீர் விட்டோம். இப்பொழுது பணக்காரி ஆகிவிட்டாள். காசு கிடைத்ததும் விமலா செய்த முதல் காரியம் என்னிடம் பேசாமல் விட்டதுதான். அப்படி பேசினால் ஒட்டிக்கொள்ள என்னுடைய பீடை அவள் புருசனின் ஆஸ்துமா என்று பயந்து போனாளோ என்னவோ?

அடுத்து அவள் செய்தது அதிரடியான சில வேலைகள். குடியிருந்த வீட்டை வசதியாக கட்டிக்கொண்டாள். வீட்டின் முன்பாக ஒரு பெட்டிக்கடை வைத்தாள். புருசன் செத்த நல்ல நேரம் பெட்டிக் கடை பிய்த்துக்கொண்டு ஓடியது. எட்டு மாசத்தில் அது மளிகைக் கடையாக மாறியது. தன் உடம்புக்கு மருந்து மாத்திரை சாப்பிட்டு ஆரோக்கியமாக ஆகிவிட்டாள் விமலா. ஒரு சினை ஆட்டின் அளவுக்கு அவள் உடம்பில் தசை வந்துவிட்டது. தினுசு தினுசான சாப்பாடு தின்றதில் கருவாட்டுப் பிள்ளைகள் கிள்ளும் அளவுக்கு சதை பிடித்திருந்தன. அதில் ரத்தம் வேறு அதிசயமாய் ஓடுகிறது. விதவிதமாக துணி எடுத்து உடுத்தினாள். நகை நட்டுகள் வாங்கினாள். இப்படி அவள் வசதியோடு துன்பம் இல்லாமல் இருப்பதில் எனக்கு ஒன்றும் பொறாமை இல்லை… சந்தோசம்தான். ஆனால், என்னைப் பார்த்து ஒருநாள் அவள் ‘ஐயோ பாவம்’ என்றாளே! அதை நினைத்தால்தான் வயிற்றெரிச்சலாக இருக்கிறது.

பணக்காரி ஆகி என்னிடம் சரிவர பேசாததால் நான் அவள் மளிகை கடைக்கு என்றைக்கும் போனதில்லை. அவசரம் என்றால் பிள்ளைகளை அனுப்புவேன். ஏதோ அன்றைக்கு என் தலையெழுத்து, கஷ்டம் என்று ஒரு கிலோ அரிசி கடனாக கேட்க மானங்கெட்டுத்தான் போனேன். அதற்காக என்னைப் பார்த்து “ஐயோ, உன்ன நெனைச்சா பாவமா இருக்கு… உன் பீடை என்னைக்கு உன்ன விட்டுப் போகுமோ தெரியலையே…” என்று விமலா பரிதாபப்பட்டு கண்ணீர் விட்டதுதான் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் எனக்காக, என் துக்கத்திற்காக கண் கலங்கியது ஊரிலேயே அவள் ஒருத்திதான். அது தெரிந்த பிறகு நான் என் ஆயுசில் முதல் முறையாக என் குறையை வாய்விட்டுச் சொல்லி அழுது தீர்த்தேன்.

அவள் என்னை சமாதானம் செய்து எனக்கு நல்ல வழி பிறக்கும் பொறுமையாக இரு என்றாள். “கஷ்டத்தில் இருந்த என்னை சவுகரியமாக்கினது அந்த கடவுள்தான், கடவுளை வேண்டிக்கோ” என்றாள். கடவுள் பெயரை கேட்டதுமே எனக்கும் தெம்பாகிவிட்டது. அதுதான் கடவுள். கேட்ட வரம் கிடைக்குமோ இல்லயோ, தெரியாது. பெயரைக் கேட்டாலே ஒரு நம்பிக்கை, சந்தோசம், தெம்பு. கோம்பை நல்ல முனீஸ்வரன் சாமிதான் அவளின் கஷ்டங்களை நீக்கியது என்று அவள் சொன்னதும் எனக்கும் மீண்டும் புதுத் தெம்பு வந்துவிட்டது. இத்தனை நாள் கஷ்ட காலத்தில் கடவுளை கும்பிடாமல்விட்ட என் திமிருக்காக நான் வருத்தப்பட்டேன்.

விமலாவைப் போல நானும் கோம்பை நல்ல முனீஸ்வரனை கும்பிட்டிருந்தால் விமலாவுக்கு முன்பாகவே என் கஷ்டம் தீர்ந்து சுகவாசி ஆகியிருப்பேன். அந்த கோம்பை முனீஸ்வரனுக்கு அத்தனை பெரிய சக்தி என்று அவள் சொன்னாள். எல்லா சாமியையும் ஒன்று போலவே கும்பிட்டால் அதற்கு சந்தோசம் வராது, நமக்கு நல்ல காலமும் வராது என்று அவள் சொன்னாள். கோம்பை முனியை எப்படி கும்பிட்டால் அந்த சாமி சந்தோசப்படும், நமக்கு வரம் தரும் என்றும் அவள் வழி சொன்னாள்.

நல்ல ஒச்சமில்லாத கறுப்புக் கோழியை அறுத்து பலியிட்டு, பச்சரிசி பொங்கலிட்டு முனீஸ்வரனுக்கு படைக்க வேண்டும் என்பதுதான் அவள் சொன்ன வழி. அந்த ஆக்ரோச முனீஸ்வரனுக்கு கோழி அறுப்பதென்று அன்றைக்கே நான் முடிவு செய்தேன். கண் முன்னால் முனீஸ்வரனின் சக்தி தெரிகிறதே. நேற்றுவரை கரப்பான் பூச்சியாக இருந்தவள் இன்றைக்கு பணக்கார பல்லியாக உருமாறியிருக்கிறாளே… அந்த சாமியால்தான் நான் பணக்காரி ஆனேன் என்று விமலாவே சாகாத சாட்சியாக சொல்லும்போது எனக்கு எப்படி சந்தேகம் வரும்.

முனீஸ்வரனை வேண்டிக் கொள்வதற்காக ஒரு கறுப்புக் கோழியை பிடித்துக்கொண்டு என் புருசன்காரனையும் கூட்டிக்கொண்டு மறுநாள் விடியற் காலையிலேயே நான் கோம்பை கோயிலுக்கு கிளம்பிவிட்டேன். கோயிலுக்கு போகும்போதும் குடித்துவிட்டு வந்த என் புருசன் மீது எனக்கு கோபமே வரவில்லை. கோபம் வராததற்கு காரணம் நான் நல்லமுனி அருளால் இனி கஷ்டமற்ற பணக்காரி ஆகிவிடுவேன் என்ற நம்பிக்கை மட்டுமல்ல. குடித்துவிட்டு வந்த புருசன் நல்ல வேளை அந்த கறுப்பியையும் இழுத்துக்கொண்டு வராமல் போனானே என்ற சந்தோசம்தான்.

“எதுக்குய்யா கோயிலுக்கு வரும்பொதும் குடிச்சிட்டு வரே?” என்று ஒரு கேள்வியை மட்டும் ஒப்புக்கு கேட்டு வைத்தேன். அதற்கு அவன், “கோழி அறுத்து முனீஸ்வரனுக்கு படைக்கப்போறே… பிறகு அதை கொழம்பு வெச்சா முனீஸ்வரனா தின்னப்போறான். நாந்தானே தின்னனும். குடிக்காம கோழிக்கறி திங்கறதுக்கு நான் என்ன பைரவன் சாமியா?” சிரிக்கிறான்.

சாராயம் குடிக்காமல் கறிதின்னவேண்டிய நாய்களின் கஷ்டகாலம் குறித்து அவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு. நாமெல்லாம் நாய் இல்லை என்ற நினைப்பு. சரி குடித்துவிட்டுத்தானே வருகிறான் கடித்துவிட்டுப் போகாமல் இருந்தால் சரி என்று நான் வாய் மூடிக்கொண்டு வந்தேன். இந்த நல்லமுனியும் நாட்டுச் சாராயம் குடிக்கிற ஆள்தானே, குடித்துவிட்டு முட்டைக் கண் உருட்டி நாலு பேய்களை அடிக்கிற ஆள்தானே. தப்பாக நினைத்துக்கொள்ள மாட்டார் என்ற நம்பிக்கையும் எனக்கு இருந்தது.

ஒரு மலைபோல உட்கார்ந்திருந்த அந்த கோம்பை நல்லமுனீஸ்வரன் சாமியை பார்க்கவே பயங்கரமாய் இருந்தது. பக்கத்தில் கால் தூக்கி கணைத்துக்கொண்டிருந்த ராட்சச வெள்ளைக் குதிரைக்கு தங்கக் கடிவாளம் போட்டிருந்தார்கள். அதை மேய்க்க இரண்டு போலீஸ்காரன் கையில் வெடிக்காத துப்பாக்கியோடு இருந்தான். பேய் ஓட்டும் ஒருத்தனும் உடுக்கை அடிக்கும் ஒருத்தனும் சிமெண்ட் பொம்மையாக நின்றார்கள். சாட்டை அடிபட்டு நின்ற பேய் பிடித்த பொம்மைப் பெண் ரத்தமும் சதையுமாகி வலி பொறுக்காமல் ஐயோ என்று கத்துவது என் காதுக்கே கேட்டது.

பாம்புக்கு மகுடி ஊதும் ஒருத்தன் வாய் எடுக்காமல் முட்டியிட்டு உட்கார்ந்து மகுடி ஊதிக்கொண்டே இருந்தான். அவனுக்கு எதிரில் படமெடுத்து ஆடிய நாகப் பாம்பின் நாக்கில் சிமெண்ட் உதிர்ந்து போய் கம்பி தெரிந்தது. இப்படி பெரிய பெரிய சிலைகளாக நின்று பயமுறுத்தின சாமிகள். உட்கார்ந்தபடி உலகைக் காக்கும் நல்ல முனீஸ்வரனுக்கு நான் கொண்டுவந்திருந்த கறுப்புக் கோழி அறுத்து பச்சரிசி பொங்கலிட்டு படைத்தேன். கண்மூடி கும்பிட்டேன்.

பிறகு பலிபோட்ட கோழியை அறுத்துக் குழம்பு வைத்து மொத்தத்தையும் என் புருசன்காரனுக்கே தின்னப் போட்டேன். இடுப்பிலிருந்து சாராய பாட்டிலை திறந்து வைத்துக்கொண்டு அவன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கோழிக்கறியை தின்ன ஆரம்பித்தான். நான் முன்பு வேண்டிக்கொண்டது நல்லமுனிக்கு சரியாக கேட்டிருக்காதோ என்று எண்ணிக்கொண்டு திரும்பவும் வந்து உயரமாய் உட்கார்ந்திருந்த சாமியிடம் கண் மூடி வேண்டிக் கொண்டேன், “கடவுளே, நல்லமுனியப்பா…! விமலாவ பணக்காரி ஆக்கினது நீதானே! அதே மாதிரி என்னையும் பணக்காரி ஆக்கு”

“ஒரு பொண்ணு பணக்காரி ஆகிறது உலகத்தில அத்தனை சுலபமான வேலை கிடையாது மவளே… ” நல்லமுனி பேசியது.

நான் பொய்க் கதைகளை பேசி வெகுகாலம் ஆகிறது என்றால் நம்புங்கள். பேசியது நல்லமுனிதான். அது பேசியது பக்கத்தில் நின்றிருந்த பெரிய குதிரைகளுக்கு, அதை மேய்க்கும் போலீஸ்காரன்களுக்கு, உடுக்கை அடிப்பவனுக்கு, பாம்புப் பிடாரனுக்கு, பாம்புக்கு, சவுக்கு சுழற்றுபவனுக்கு, பேய் பிடித்த பெண்ணுக்கு கேட்டிருக்காது. காரணம் அவர்கள் சிமெண்டும் கம்பியும் ஜல்லியும் கொண்டு கட்டப்பட்டவர்கள். மரத்தடியில் உட்கார்ந்து சாராய போதையோடு கறுப்புக் கோழிக்கறி தின்னும் என் புருசன்காரனுக்கும் கேட்டிருக்காது. அவன் குடித்திருக்கிறான். ஆனால் எனக்கு கேட்டது. நான் நல்லமுனீஸ்வரனை நம்புகிறேன். அதனால் அந்த சாமி பேசியது எனக்கு கேட்டது.

நீங்கள் நம்பாவிட்டால் என்ன! நல்லமுனி பேசியதை அந்த நல்லமுனி நம்புகிறதே அதுவே போதும். நான் திருப்பிக் கேட்டேன். “விமலா மட்டும் பணக்காரி ஆனாளே சாமி. அப்ப ஒரு பொண்ணு பணக்காரி ஆகிறது சுலபம்தானே… உனக்கு நெறைய சக்தி உண்டு. உன்னால முடியும். என்ன பணக்காரி ஆக்கு.”

“அது எப்படி முடியும்?”

“என் புருசன்காரனும் ஒரு பணக்காரனோட கார் சக்கரத்தில விழுந்து செத்துட்டா நான் பணக்காரி ஆகிடமாட்டேனா?”

ஆகாயம் உயரத்திற்கு உட்கார்ந்திருந்த அந்த நல்ல முனி என் வேண்டுதலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து ஏழு ஆகாயம் உயரத்திற்கு எழுந்து நின்று, “அடிப்பாவி மவளே… புருசனுக்கு கோழிக்கறி குழம்பு ஊத்தி மரத்தடி நிழல்ல உட்காரவெச்சி திங்கச் சொல்லிட்டு வந்து என்கிட்ட அவனை சாவடிக்கச் சொல்லுறீயே! ஒரு பொண்ணு செய்யற காரியமா இது?” என்று கத்தியது. அதுவரை ‘உட்கார்ந்த முனி’யாக இருந்த சாமி அதிர்ச்சியில் ‘நின்ற முனி’ ஆனது.

என் புருசன்காரனோ தலைபோதை கிறுகிறுத்து சந்தோசமூட்ட கறுப்புக் கோழியின் கால்களை கடைவாய்ப் பல்லில் வைத்து நறுக்கென்று தின்றுகொண்டிருந்தான். அவன் தின்கிற வேகத்தைப் பார்த்தால் இன்னும் என்பது வருசத்திற்கு ஆடாமல் குடிப்பான் என்று தோன்றியது.

“ஆஹா. சாமி தப்புத்தான் பண்ணிட்டேன். சரி விடு. எனக்கு விடிவு காலம் வராது. ஒரு குடும்பம் நல்லா இருக்க ஒரு ஆளை தியாகம் பண்ணலான்னு ஏட்டுப் புத்தகத்தில எழுதி வெச்சிருக்காங்களே… அதை படிச்சிட்டு மனசுக்கு தோணுச்சி. சரி. என் கஷ்டத்தை இத்தினி நாள் பாத்தியே, நீ தீத்தியா? அவன் குடிக்கிறான். தடுத்தியா? அது போவட்டும், அவன்தான் ஒழுக்கமா வேலைக்கு போகல. காசு சம்பாதிச்சி வீட்டுக்கு தரலே. நான் வேதனையோட இருந்தேன் நீ வந்து ஆறுதல் சொன்னியா?

“சரி, அவன் செய்யிற வேலைக்கு நான் போறேன்னு அவன்கிட்ட கேட்டேன். அவன் புத்தியில நீ புகுந்து சரி போன்னு ஒரு வார்த்தை சொல்ல வெச்சிருக்கலாமில்ல. அவன் அந்த வேலைக்கு போகக்கூடாதுன்னு சொல்லிட்டானே. ஆம்பளைங்க கட்டண கழிப்பிடத்து முன்னாடி உட்கார்ந்து டிக்கெட் குடுக்கிற வேலை பொம்பளைக்கு ஆகாதுன்னு அவன் சொல்லிட்டானே. அவன் இல்லாட்டி நான் அந்த வேலைக்கு போவேனே. புள்ளைங்கள காப்பாத்தறது அப்பன் கடமை. அவன் சாகாம காப்பாத்தல செத்தாவது காப்பாத்தட்டும்.” என்று நான் சொன்னேன்.

“ஆயிரம் இருக்கட்டும். நீ ஒரு பொம்பளை. புருசன் சாகட்டும், நான் சொகமாய் இருக்கிறேன்னு வரம் கேட்ட பொம்பளைய நான் பாத்ததில்ல. உனக்கு நான் வரம் தரமாட்டேன் போ…” என்று கண் உருட்டி மிரட்டியது நல்ல முனி.

“நீ வரம் தராட்டி போ… என் வீட்டுல ஆட்டாத உரலிருக்கு. அதில ஒரு குளவி இருக்கு. குடிகாரன் தடுக்கி உரலுமேல விழுந்திட்டான்னு சொன்னா நம்ப ஊரில ஆள் இருக்கு. குடிகாரன் தூங்கட்டும். கல்ல தலைமேல போட்டு கதை முடிச்சிடறேன். துக்கம் முடிஞ்ச மறுநாளே ஆட்டுக் கல்லுக்கு பொட்டு வெச்சி ‘உரலு முனி’ன்னு நான் கும்பிட்டுக் காட்டறேன்” என்று நான் சொன்னதும் ஏழு ஆகாய உசரத்திற்கு எழுந்து நின்ற முனி பொதக்கென்று உட்கார்ந்து ‘யம்மாடி’ என்றது. அதுவரை நின்ற முனியாக இருந்தது இப்பொழுது அசதியில் உட்கார்ந்த முனி ஆனது.

அதன் பிறகு நான் வெகு நேரம் முனியிடம் பேசினேன். என்னிடம் நின்ற முனியும் பேசவில்லை, உட்கார்ந்த முனியும் பேசவில்லை. முழுக் கோழியை தின்று முடித்துவிட்டு தள்ளாட்டமாக வந்த என் புருசன்தான் பேசினான். ‘கடவுள்கிட்ட என்னாடி வேண்டிகிட்ட…?”

நான் கண்ணில் கண்ணீர் விட்டுக்கொண்டு சும்மாயிருந்தேன். மாலை போட்டு பொட்டு வைத்து அழைத்து வரப்பட்ட ஆடு என்னிடம் கேட்கிறது. பலி கொடுப்பதற்கு முன்புகூட ஒரு வாய் தலை தின்ற ஆடு துள்ளிக் குதித்து என்னிடம் கேட்கிறது. நான் என்ன சொல்வேன். அவன் விடவில்லை “சொல்லு சொல்லு” என்றான்.

நான் சொன்னேன். “நீ கார்ல அடிபட்டு செத்தா எனக்கு காசு வரும். நீ பாத்திட்டு இருந்த வேலைக்கு நான் போனா கூலிவரும். காசு வந்தா என் கஷ்டம் தீரும். கடவுளே என் புருசன்காரன் கார்ல அடிபட்டு சாகட்டும்னு வேண்டிக்கிட்டேன்”

அவன் கடகடவென சிரித்து “சாமியாவது பூதமாவது. எல்லாம் பொய். என்னை அந்த சாமி கார் ஏத்தி கொன்னுப்புடுமா? அதுக்கு கார் ஓட்டத் தெரியுமாடி? மொதல்ல அதை சொல்லு” என்றான்.

“அந்த சாமிக்கு கார் ஓட்டத் தெரியாது. ஆனா எனக்கு குறிபாத்து சரியா அம்மிக்குளவிய தலையில போடத் தெரியும். உன் வேலைக்கு எப்படி போய் சேர்றதுன்னு தெரியும்” என்றேன். அப்பொழுதும் எனக்கு கண்ணீர் முட்டிக்கொண்டுதான் வந்தது. நான் முழுசுமாக சொல்லி முடிப்பதற்குள் அவன் எட்டி ஓட்டம் பிடித்தது என் கண்ணீர் கலங்களுக்கு நடுவே தெரிந்தது. அவன் ஓடிய சீரைப் பார்த்தால் அவன் போதை முற்றிலுமாக இறங்கியிருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.

அதன்பிறகு அந்த நல்லமுனியிடம் நான் திரும்பத் திரும்ப சொன்னேன். “சாமி, என் பஞ்சக் கோலத்திற்காக படுபாதகமா சிந்தித்தேன். தேவையத்த வரத்தை தெரியாமக் கேட்டேன். புருசன் இல்லாத நான் எப்படி பொண்டாட்டியா இருக்க முடியும். புருசன் இருந்தாத்தான் பொண்டாட்டி. இல்லேன்னா நான் யாருக்கு வப்பாட்டியோ. அவன் குடிப்பான் சம்பாதிக்க மாட்டான். குடும்பத்தை நடுத் தெருவில நிறுத்துவான். இருந்தாலும் பரவாயில்ல. அவன்னா எனக்கு உசிர்தானே. நான் சும்மா கோபத்தில வரம் கேட்டுட்டேன். தமாசுக்கு கேட்டேன். பொழுது போகாம கேட்டேன். வாய் உளறி கேட்டேன். பயித்தியத்தாலே கேட்டேன். நீ இப்ப ஓடிப்போன புருசனை காப்பாத்திக்கொடு” என்று எத்தனையோ கேட்டேன்.

முட்டைக் கண்ணை சிமிட்டாமல் உருட்டிக்கொண்டிருந்த அந்த நல்ல முனி என்னிடம் அதன்பிறகு பேசவேயில்லை. இதை நான் ஊரில் சிலபேருக்குச் சொன்னேன். யாரும் நம்பவில்லை. பொய்க் கதை சொல்பவள் புளுகுணித்தாய் என்கிறார்கள். நல்ல முனியாவது பேசறதாவது என்கிறார்கள். ஆனால் நான் என் புருசன் சாகவேண்டும் என்ற வரம் கேட்டிருப்பேன் என்று மட்டும் நம்புகிறார்கள். நான் அப்படிப்பட்ட துக்கிரிப் பெண்ணாம். இல்லை நான் சும்மா ஒரு சிரிப்புக்குத்தான், என் புருசனுக்கு ஒரு அதிர்ச்சி தருவதற்காகத்தான் கேட்டேன் என்று சொன்னால் நம்பமாட்டேன் என்கிறார்கள். இவள் பொய் சொல்பவள் புளுகுணித்தாய், புருசன் சாகட்டுமென்று நிசமாகவே மனசு வந்து கேட்டிருப்பாள் என்கிறார்கள்.

ஓடிப்போன என் புருசன் இரண்டு நாள் கழித்து கை நிறைய காசோடும், வாய் நிறைய சிரிப்போடும், குடிக்காமலும் வந்தான் என்று சொன்னால் அக்கம் பக்கம் இருப்பவர்களும் நம்பமாட்டேன் என்கிறார்கள். என் புருசன் அந்த அதிர்ச்சியில் திருந்தி குடிக்காமல் சம்பாதிக்கிறான் என்பதையும் எனக்கு வயிற்றுப் பசி இல்லாத வாழ்க்கை வந்தது என்பதையும் நல்லமுனி சாமி என்னிடம் பேசியது என்பதையும் நம்பாவிட்டாலும் பரவாயில்லை நான் கறுப்புக் கோழி அறுத்து பச்சரிசிப் பொங்கல் வைத்து வேண்டியபோது ஆகாயம் உயரத்திற்கு உட்கார்ந்திருந்த நல்லமுனியப்பன் விசுக்கென்று எழுந்து பின் பொசுக்கென்று உட்கார்ந்தான் என்பதை மட்டுமாவது யாராவது நம்பித் தொலைத்தால் பரவாயில்லையே என்று தவித்துக் கொண்டிருக்கிறேன் நான். என்னை இன்னும் புளுகுணித்தாய் என்றுதான் சொல்கிறார்கள் சிலர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *