“இந்த லக்கேஜை தூக்கி டிக்கியில் வைப்பா’ என்றாள் காலேஜ் படிக்கும் நீரஜா தன் அப்பாவின் டிராவல்ஸ் கார் டிரைவரான கதிரேசனைப் பார்த்து.
அதை கேட்டுக் கொண்டிருந்த செல்வநாயகம் மகளிடம், “நீரஜா டிரைவர்கிட்ட சாரி கேளு!’ அதிர்ச்சியான நீரஜா,
“எதுக்குப்பா? ஆஃப்ட்ரால், உங்ககிட்ட கைநீட்டிச் சம்பளம் வாங்கும் ஒரு டிரைவர்கிட்ட நான் ஏன் சாரி கேட்கணும்?’
செல்வநாயகம், “ஆஃப்ட்ரால் ஒரு டிரைவர் இல்லை. காருக்குள்ள ஏறுனா நம்ம உயிர் அவர் கையில! ராத்திரி- பகலா கண்முழிச்சு நமக்காக அவங்க வேலை பார்க்கறாங்க! ராத்திரியோ, பகலோ கூப்பிட்ட நேரம் நமக்கு அவங்க வேலை செய்யறாங்க!
அவர் உன்னைவிட வயசுல மூத்தவர்! அவரை நீ வா போன்னு கூப்பிடுறது சரியில்லை. சோ, சே சாரி!’ மகளுக்கு உத்தரவிட்டார்.
தந்தையே தன்னுடைய ஊழியனை “அவர்’ என்று கூப்பிடும் போது, தான் “வா, போ’ என்று அழைத்தது தவறுதான் என்று உணர்ந்தவள், “டிரைவர் அண்ணா, சாரி’ என்றாள். டிரைவர் புன்னகைத்தார்.
மகள் தனது தவறை உணர்ந்த உடனே மன்னிப்பு கேட்டதும், “முன்னாள் டிரைவரும், இன்னாள் டிராவல்ஸ் ஓனருமான’ செல்வநாயகம் முகத்தில் மகிழ்ச்சி மலர்ந்தது.
– வி.சகிதா முருகன் (மார்ச் 2014 )