கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் சமூக நீதி
கதைப்பதிவு: May 4, 2012
பார்வையிட்டோர்: 9,164 
 
 

‘சரி சொல்லு..’ என்றேன்.

‘என்னத்தைச் சொல்ல.. அதாங் கேக்கிறனே.. பொண்ணு வயசுக்கு வந்துட்டா, என்ன சேத்து வைச்சிருக்க?’ என்றாள் என் மனைவி.

நான் எதனையும் சேர்த்து வைக்கவில்லை. வாடகை வீடு இருக்கிறது. சாப்பாடு இருக்கிறது. கடையிருக்கிறது. மகள் படிக்கிறாள்.

‘ஒன்ன நம்பி புள்ள பெக்க முயாது’ என்று என் மனைவி மூன்று குழந்தைகளைக் கலைத்ததை தலையசைப்பில் ஒப்புக்கொண்டிருந்திருக்கிறேன். ‘அவள்தானே சுமக்க வேண்டும். பிள்ளையா முக்கியம்.. அதற்கு முன்பு தாய் முக்கியமில்லையா?’ என்று யோசித்திருக்கிறேன்.

‘அவ அவளோட தொணைய தேர்ந்தெடுத்துக்குவா.. அவளோட வாழ்க்கை அவ கையில.. படிப்புல கொற வைச்சனா?’ என்று நான் கேட்டேன்.

‘படிப்பு என்ன மசுத்துக்கு ஆவும்? கல்யாணம் பண்ணும்போது எத்தனை பவுனு போட்டம்னுதா சனமெல்லாம் கேக்கும்’ என்றாள் என் மனைவி ஆங்காரத்துடன்.

நான் அசந்துபோய் உட்கார்ந்து விட்டேன். எப்படி புரியவைப்பது? இந்த உலகத்தோடு ஒட்டி வாழும் தகுதி நமக்கில்லை என்று எப்படி புரிய வைப்பது?

எதிர்கால உலகத்திற்கு எமது பிள்ளையை தயார் செய்ய வேண்டும் என்பதை எப்படி புரிய வைப்பது? நகையல்ல, பணமல்ல, மனிதம் முக்கியம் என்று எப்படி புரியவைப்பது?

எங்களின் சண்டையில் எங்கள் மகள் விழித்துக்கொண்டு விட்டாள். எங்களை நிமிர்ந்து பார்த்தாள். அப்புறம் கவிழ்ந்து படுத்துக்கொண்டாள். அவள் முதுகு எழுந்து எழுந்து தாழ்ந்தது.

மௌனமாக அழுகிறாள் என்று தெரிந்தது.

அதற்கு மேல் தாங்க முடியாமல் நான் எழுந்து வீட்டுக் கதவைத் திறந்தேன்.

‘எங்க போற இந்த நடு ராத்தியில’ என்று என் மனைவி அலறினாள். நான் கதவை அடித்துச் சாத்தினேன்.

பக்கத்து வீட்டுக்காரர் கதவைத் திறந்து ‘என்ன பிரச்சனையா?’ என்றார். அவர் டீவிஎஸ்சில் வேலை பார்க்கும் மூத்த தொழிலாளி.

‘ஒன்னுமில்ல..’ என்று காம்பவுண்ட்டுக்கு வெளியே வந்து சிகரெட் பற்ற வைத்தேன். எரிந்த மனதுக்குப் போட்டியாக புகை எரிந்துகொண்டு உள்ளே சென்றது. நடந்தேன். சென்னையின் வீதிகள் உறங்கும் நேரம் அது. ஒற்றை ஆட்டோ ‘டப டப’வென்று என்னைத் தவிர்த்துவிட்டுச் சென்றது. ‘சாவு கிராக்கி’, என்ற டிரைவரின் குரல் கேட்டது. என் கால்கள் தள்ளாடுவது எனக்குத் தெரிந்தது.

என்ன தப்பு செய்தேன் நான்? நான் சென்னைக்கு அருகாமையில் உள்ள இன்டஸ்ட்ரீயல் எஸ்டேட்டில் தொழிற்சங்கத் தலைவன். காலையில் நான் ஒரு கம்பெனியில் தொழிற்சங்கப் பேச்சு வார்த்தைக்காகச் சென்றிருந்தேன். வழக்கமான தொழிற்சங்க கூலி உயர்வுப் பேச்சுவார்த்தை.

குறைந்தபட்ச கூலிக்குக் கீழே ஒப்புக்கொள்வதில்லை என்பதில் சங்கம் உறுதியாக இருந்தது. குறைந்தபட்ச கூலி கட்டுப்படியாகாது என்பது நிர்வாகத்தின் நிலை. ஒரு கட்டத்தில் நிர்வாகத்தினர் யோசிக்க நேரம் வேண்டும் என்று கேட்டதால் நான் வெளியே வந்தேன். பலமுறை பேச்சுவார்த்தை நடந்தது.

மாலையாகும்போது நிர்வாகத்தினர் மேலும் நேரம் கேட்டதால் கம்பெனி வாசலில் உலாத்தியபடியே புகைபிடித்துக்கொண்டிருந்தேன்.

என்னைப் பார்த்த கனகா, தனது வேலையை நிறுத்திவிட்டு வந்தார். அவர் அந்த கம்பெனி தொழிற்சங்கத்தின் உப தலைவர். ஆனால், அவர்தான் உண்மையில் தலைவர். அத்தனை கூர்மதி அவருக்கு.

அவர் மட்டுமல்ல; பெரும்பான்மை தொழிலாளர்கள் தலித்துகள். ஆனால் ஆண் தலித் பாண்டியன் தான் தலைவராக வந்தார். எல்லா பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு முன்பும் பாண்டியன், கனகாவிடம் ஐடியா கேட்டுக்கொள்வார் என்பது எனக்குத் தெரியும்.

கனகா, ‘தோழரே ஒரு பிரச்சனை’ என்றார்.

‘சொல்லுங்கம்மா’ என்றேன். ஏனென்று எனக்குத் தெரியாது. நான் பொதுவாகப் பெண்களை அம்மா என்றுதான் அழைப்பேன். அப்படிப் பழகிவிட்டது. பெண் தோழர்கள் கூட எனக்கு அம்மாதான்.

‘எப்புடி சொல்றதுன்னுத் தெரியல. இது ரொம்பநாள் பிரச்சனை. வாங்களேன் போய்ப் பார்க்கலாம்’, என்று கனகா நடந்தார்.

அவருக்கு 20 வயது இருக்கலாம். திருமணமாகாத பெண். கருப்பாக நெடுநெடுவென்று இருப்பார். நிமிர்ந்த நெஞ்சும் நேர் கொண்ட பார்வையும் அவரின் அடையாளங்கள்.

கம்பெனி வளாகத்தின் ஓரத்தில் இருந்த இரட்டை அறையில் ஒன்றைத் திறந்தார். குடலைப்புரட்டும் நாற்றம் தாக்கியது. அறைக்குள் கழிவு நீர் நிறைந்திருந்தது. மலம் மிதந்துகொண்டிருந்தது. நான் பார்வையைத் திருப்பிக்கொண்டேன்.

‘அடுத்த அறையும் இந்த மாதிரிதான் இருக்கும்’, என்றார் கனகா.

எனது நினைவுகள் பின்னோக்கி ஓடின. கல்லூரியில் சுற்றுலாச் சென்றிருந்தோம். ஒரு நாள்தான். ஆனால், ‘பெண் ஆசிரியர் வரவில்லை என்றால் பெண் மாணவிகள் போகக் கூடாது’, என்றார் கல்லூரி முதல்வர். எந்தப் பெண்ணாசிரியரும் எங்களுடன் வரத் தயாரில்லை. மாணவிகளோ சுற்றுலாவிற்கு வராமல் இருக்கவும் தயாரில்லை. இறுதியில் பெண்ணாசிரியர் இல்லாமல் மாணவிகளுடன் சுற்றுலா புறப்பட்டுவிட்டோம். எல்லாம் முடிந்து மாலை திருச்சி மலைக்கோட்டை அருகே நான் நின்றுகொண்டிருந்தேன். மாணவர்கள் பொருட்கள் வாங்க விரைந்திருந்தார்கள். எந்தப் பொருளையும் வாங்க வக்கற்றவன் நான்.

அப்போது ரோசி என்னை நெருங்கி வந்தாள். தயங்கி தயங்கித் பிரச்சனையைச் சொன்னாள். காலையிலிருந்து பெண்கள் யாரும் சிறுநீர் கழிக்கவில்லையாம்.

‘சீக்கிரம் பொதுக் கழிப்பிடம் எங்கிருக்கிறது என்று கண்டுபிடித்துச்சொல். உன்னிடம் சொன்னால்தான் பிரச்சனை வராது என்று உன்னிடம் சொல்வதாக எல்லோரும் முடிவெடுத்தார்கள்’, என்றாள்.

மனசுக்குள் என் பின்னந்தலையில் தட்டிக்கொண்டு, உடனே அவசரமாக ஒடி ஒரு பொதுக் கழிப்பிடத்தைக் கண்டுபிடித்து, நல்ல வேளை அது அருகாமையிலேயே இருந்தது, மாணவிகளை அழைத்துச் சென்று விட்டுவிட்டு விலகினேன். அப்புறம்தான் புரிந்தது பெண் ஆசிரியர் ஏன் வேண்டும் என்று. பெண்களின் பிரச்சனைகளைப் புரியாதவர்கள் ஆண்கள் என்பதும் முதலில் எனக்கு அப்போது புரிந்தது

இந்தக் கம்பெனியின் நிர்வாகிகள் மட்டுமல்ல, நானும் உணர்வற்று இருந்திருக்கிறேன் என்று இப்போது புரிந்தது.

‘என்ன தோழரே, மலைச்சுப்போய் நின்னுட்டிங்க?’, என்றார் கனகா.

‘ஏந்தோழர்,. இதெ மொதல்லயே சொல்லல? டிமாண்ட்லேயே சொல்லியிருக்கலாமே, இப்ப மூணு மாசமாயிடுச்சே’, என்று கேட்டேன்.

‘எப்படி சொல்ல முடியும் தோழரே? என்னத்தைச் சொல்ல முடியும்? எத்தனைக் கேள்வி வரும்? அப்புறம் யாரு நக்கல வாங்கிக்கிறது? நீங்கங்கறதால சொல்றேன்.. வேலைக்கு வந்து பீரியட்ஸ் ஆயிட்டா இங்கதான் நாங்க துணி மாத்தனும்..’

ஒரு பெண்ணின் தந்தையான நான் அதிர்ந்துபோனேன். புரிந்தது… செருப்பால் அடித்தது போல புரிந்தது. எனக்கு அது எப்படியிருக்கும், என்ன வகையான பிரச்சனைகளைக் கொண்டுவரும் என்று தெரியும்.

அங்கே நின்றவாறு பெர்சனல் மேனேஜரை அழைத்து வரும்படி சொன்னேன். கனகா ஓடிச்சென்று அழைத்து வந்தார்.

‘என்ன சார்… இங்க நிக்கிறிங்க?’, என்றார்.

டாய்லட் அறையின் கதவைத் திறந்து காட்டினேன். மூக்கைப் பொத்திக்கொண்டார். அவர் ஆச்சாராமான திருநெல்வேலி பார்ப்பனர் என்பது எனக்குத் தெரியும்.

அவர் முகத்தைப் பார்த்தேன். ‘ஒங்க சம்சாரம் இதுல டாய்லட் போவாங்களா?’, என்று கேட்டேன்.

அவர் முகம் விகாரமானது. இதுபோன்ற கேள்வியை அவர் வாழ்க்கையில் எதிர்கொண்டிருக்க மாட்டார். கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டார். ‘சார்.. பெர்சனல் பேசக்கூடாது’, என்றார்.

’ஓகோ.. பெர்சனல் பேசக்கூடாதோ..? இது இந்த பெண் தொழிலாளர்களின் பெர்சனல் இல்லியோ? தொழிலாளியின் பிரச்சனையை நான் பேசக்கூடாதோ..? இது. இந்தக் கழிப்பிடப் பிரச்சனை சரியாகலன்னா… பேச்சுவார்த்தையே கெடயாது’, என்று நடந்தேன். சற்று யோசித்தவனாகத் திரும்பி, ‘பெண்களுக்கான தனி ஓய்வறையும் வேண்டும்’, என்று சொல்லிவிட்டு வெளியேறினேன்.

அவ்வாறு வெளியேறி வீட்டுக்கு வந்த என்னைத்தான் என் மனைவி கேட்டாள். ‘எத்தனை மணி நேரம் ஒன்னுக்க அடக்கி வச்சிக்கிறது.. அத்தோட பீரியட்சும்னா எவங்கிட்ட போயி சொல்றது?’

அந்தக் கேள்வி என் முகத்தில், நடு மூக்கில் விடப்பட்ட குத்துபோல இறங்கியது.

எங்கள் கடையிருந்த இடத்தில் டாய்லட்டே இல்லை. 10க்கு 20 கடை. அவ்வளவுதான்.

அவள் கேள்வி என் ஆண்மையின் அறியாமையைத் தோலுரித்துக் காட்டியது. எனக்குக் கோபம் வந்தது. சற்று நேரம் யோசித்த பின்னர், என்னை நான் நொந்துகொண்டேன்.

எத்தனை முட்டாளாக இருந்திருக்கிறேன்? பெண்கள் பிரச்சனையை நான் புரிந்துகொண்டது இவ்வளவு தானா? கம்பெனியிலும் ஒரு பெண் கதவைத் திறந்து காட்ட வேண்டியிருந்தது. எங்கள் சொந்தக் கடையில் வேலை செய்யும் என் மனைவி என் கண்ணைத் திறக்க என்னைச் சாட வேண்டியிருக்கிறது.

ஆனால், நான் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை.

ஆண் என்ற என் அகந்தை அடுத்தடுத்த வாதத்திற்கு இழுத்துச் சென்று, அவள், அவள் உலகத்திலிருந்து கேள்வி கேட்க… இப்போது நான் நள்ளிரவில் புகைபிடித்தபடி தெருவோரத்தில்..

ஆண் என்ற அகந்தை என்னிடம் தோற்ற பின்னர், திரும்பி வீட்டுக்கு நடந்தேன்.

கதவைத் திறந்து உள் நுழைந்தபோது இருட்டாக இருந்தது. கண்களை இருட்டுக்குப் பழக்கிக்கொண்டேன். மகள் தூங்கியிருப்பது தெரிந்தது. அவள் கட்டிலில் படுத்திருந்தாள். என் மனைவியோ, வெறும் தரையில் படுத்திருந்தாள்.

எங்கள் வீடு என்பது ஒரு சமையலறை..அப்புறம் ஓர் அறை. அவ்வளவுதான். வீடு கட்டும்போது அடைபட்ட காற்று இன்று வரை அங்கேயே இருக்கிறது. சொல்லப்போனால், சின்னதொரு சிறை.

கதவைச் சாத்திவிட்டு அவள் அருகே படுத்தேன். நிமிடங்கள் ஒடிக்கொண்டிருந்ததை சுவர்க்கடிகாரம் சொல்லிக்கொண்டிருந்தது.

அவள் பக்கத்தில் அசைவில்லை. திரும்பிப்படுத்து, அவளை இழுத்து அணைத்துக்கொண்டேன். அதற்காகக் காத்திருந்தவள் போல என்னோடு ஒட்டிக்கொண்டாள்.

என் மார்பில் தலை வைத்துக்கொண்டு ‘தூங்கனும்’, என்றாள்.

‘சரிம்மா’. என்று அவளை இறுக்கிக்கொண்டேன்.

‘வவுத்த அழுத்தி உடுடா.. வலிக்கிது.. மொத நாள்னா ரொம்ப வலிக்கும்’, என்றாள்.

செய்தேன்.

அவள் உறங்கிவிட்டாள் என்று தெரிந்ததும், எழுந்து விலகி நடந்தேன். திரும்பவும் மஞ்சளில் குளிக்கும் சென்னைத் தெருக்கள். என்ன யோசித்தேன் என்று சொல்வது அவசியம். தத்துவார்த்த கேள்வி அல்லது நடைமுறை கேள்வி அல்லது ஆம்பிளையா இல்லாட்டா இப்பிடித்தான் என்று நீங்கள் என்ன சொன்னாலும்.. நான் இதனை எழுதியே ஆக வேண்டும்…

என்னுள் ஒரு கேள்வி எழுந்தது.. ‘என்னுடைய பெண்ணிற்கான என்னுடைய கடமையை ஆற்றுவது, நம்முடைய பெண்களின் வலியை அகற்றப் பணி செய்வ‌து என்ற இரண்டையும் இணைப்பது எவ்வாறு? ஆண் என்ற அகந்தையை அடியோடு ஒழித்து மனித ஜீவனாக, யோசிப்பது எப்போது சித்திக்கும்?

எனக்குத் தெரியவில்லை. ஒரு பாக்கெட் சிகரெட் ஆவியானதுதான் மிச்சம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *