அவர் வந்தார்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 25, 2023
பார்வையிட்டோர்: 2,462 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அடுக்கடுக்கான மலைத் தொடருக்குப் பக்கத்தில் வேப்பங் காட்டில் மூன்று நான்கு பிரம்மாண்டமான கட்டிடங்களில், உலகத்துச் சுகங்களை அனுபவிக்க நமக்கு உரிமை உண்டா என்று ஏங்கும் உள்ளங்களுடன் தவங்கிடந்தனர் அநேக க்ஷய ரோகிகள். கூப்பிடு தூரத்தில் தடதடவென்று ஓடும் ரெயிலின் ஓசையைத் தவிர ‘லோஷன்’ நாற்றம், டாக்டர்களின் நடமாட்டம் இவைகளைத்தாம் அறிந்திருந்தார்கள் அவர்கள்.

பூத்துக் குலுங்கும் ஒரு வேப்ப மர நிழலில் செல்லம் கண்ணை மூடிக்கொண்டு படுத்திருந்தாள். காலை நேரம்; மணி ஆறு இருக்கும். குளுகுளுவென்று காற்று இனிமையாக வீசிக்கொண்டிருந்தது. வேப்பமரத்துக்கு அடுத்த குண்டு மல்லிகைச் செடி ஒன்றில் ஏழெட்டு மலர்கள் பூத்திருந்தன. செல்லம் கண்ணைத் திறந்து பார்த்தாள். அவைகளைப் போல் தானும் ஒரு காலத்தில் யௌவனத்தோடும் அழகோடும் சோபித்தது அவள் ப மனத்தில் கனவைப் போல் தோன்றியது.

டக் டக்கென்று பூட்ஸின் சத்தம் கேட்டது. டாக்டர் ஸரளா அவள் பக்கத்தில் வந்து நின்றாள். மல்லிகையையும் தன்னையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டிருந்த செல்லத்தின் கடைவிழிகளில் நீர் முத்துப்போல் தேங்கி வழிய ஆரம்பித்திருந்தது.

“அம்மா, செல்லம்!” என்று கூப்பிட்டாள் ஸரளா. பரிவுடன் தன்னை அழைக்கும் குரலுக்குப் பதில் கொடுப்பவள் போல் செல்லம் நன்றாகக் கண்களைத் திறந்தாள்.

அழகே உருவாய், பரிபூரண ஆரோக்கியத்துடன் தன்னைக் காப்பாற்ற நிற்கும் ஸரளாவைப் பார்த்துச் சிரிக்க முயன்றாள் செல்லம். ஆனால் சிரிப்பு ஏனோ வரவில்லை.

“உடம்பு எப்படி இருக்கிறது, செல்லம்? ஏன் இப்படி அயர்ந்து படுத்துக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டுக்கொண்டே ஸரளா அருகிலிருந்த நாற்காலி ஒன்றில் உட்கார்ந்துகொண்டாள்.

‘உடம்பு எப்படி இருக்கிறது என்று சொல்ல? இந்த நோய் என்னை அரிக்கிற மாதிரி நாட்களையும் கால சக்கரம் அரித்துக்கொண்டே போகிறது’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டாள்.

“மருந்து சாப்பிட்டாயா அம்மா? வாய்க்கு ஆகாரம் பிடிக்கிறதா?” என்று விசாரித்தாள் ஸரளா.

“சாப்பிட்டேன் டாக்டர்! ஒரு குணமும் இல்லை” என்று சொல்லிவிட்டு, ”’அவரி’டமிருந்து ஏதாவது கடிதம் வந்ததா?” என்று விசாரித்தாள் செல்லம்.

‘அவர்’ என்றதும், ஸரளா தன் பர்ஸிலிருந்து ஒரு கடிதத்தை வெளியே எடுத்தாள். செல்லத்தின் முகம் ஆவலால் நிறைந்திருந்தது. ஆங்கிலத்தில் எழுதியிருந்த அந்தக் கடிதத்தை ஸரளா தனக்குள்ளாகவே இரண்டு தடவை படித்துவிட்டு, “உடம்பைப்பற்றித்தான் விசாரித்திருக்கிறார். சீக்கிரம் குணமாகி அவருக்குச் சந்தோஷத்தைத் தர வேண்டாமா?” என்று கேட்டாள் ஸரளா.

“ஆமாம், நான் குணமடைந்து திரும்பி வரவேண்டும் என்று அவருக்கு ரொம்ப அக்கறையோ? இந்த மாதத்துக்குச் சேர வேண்டிய பணத்தையே இன்னும் அனுப்பவில்லையே. நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள், டாக்டர்! எங்கே, கடிதத்தைக் காண்பியுங்கள், பார்க்கலாம்!” என்று பதற்றத்துடன் கட்டிலை விட்டு எழுந்தாள் செல்லம்.

“செல்லம், படுத்துக்கொள் அம்மா!” என்று சொல்லி விட்டுச் சட்டென்று ஸ்ரளா மற்ற நோயாளிகளைப் பார்க்கச் சென்றாள்.


நோயாளிகளைக் கவனித்துவிட்டு அலுப்புடன் நாற்காலியில் சாய்ந்துகொண்டே பத்திரிகை படிக்க ஆரம்பித்தாள் ஸரளா. பத்திரிகையில் வரும் கல்யாண விளம்பரங்களைப் பிறரிடம் சொல்லிச் சிரித்துக்கொண்டே பொழுது போக்குவது அவள் வழக்கம். அன்றும் ஒரு விளம்பரம் வந்திருந்தது. பிள்ளையின் ஊர் திருச்சி. சம்பளம் ரூபாய் இருநூறு. முதல் விவாகமாகி மனைவி நோயாளியாக இருக்கிறாள். உத்தியோகம் செய்யும் பெண்ணாகவோ, படித்த பெண்ணாகவோ இருந்தால் தேவலையாம். பிள்ளையின் பெயர் குமாரஸ்வாமி என்று இருந்தது.

ஸரளாவின் இருதயம் வேதனையால் துடித்தது. ‘அவரிடமிருந்து ஏதாவது கடிதம் வந்ததா?’ என்று செல்லம் கேட்டுக்கொண்டிருக்கும்போது அவள் புருஷன் இரண்டாம் மனைவி தேடுவது அவளை வருத்தியது.

செல்லம் இந்த ஆஸ்பத்திரிக்கு வந்து ஒரு வருஷம் ஆகிறது. வந்த அன்று அவளுடன் அவள் கணவனும் வந்திருந்தான். செல்லத்தின் வயசான தாயார் மௌனப் பதுமையாய் ஸரளாவைப் பார்த்துக்கொண்டே நின்றாள். கணவனும் டாக்டரும் மணிக் கணக்கில் இங்கிலீஷில் பேசினார்கள். இவர்களுடைய அரட்டைப் பேச்சுக்களைக் கேட்கத் தாயுள்ளம் அவ்வளவு பொறுமை உடையதாய் இல்லை.

“அம்மா! என் குழந்தை பிழைப்பாளா?” என்று இடையிடையே மாப்பிள்ளை இருப்பதையும் பொருட்படுத்தாமல் கேட்டாள்.

“பிழைக்காமல் என்ன அம்மா! என்னால் முடிந்த வரையில் பார்க்கிறேன்” என்று ஸரளா சொன்னதும் அவள் மனத்தில் இருந்த பளுவை யாரோ சற்று இறக்கிய மாதிரி இருந்தது.

“உங்கள் மனைவியின் வியாதி குணமாக வருஷக்கணக்கில் ஆகலாம்” என்று செல்லத்தின் கணவனிடம் முடிவாகத் தெரிவித்தாள் ஸரளா. அதைக் குறித்து அவன் எள்ளளவும் வருத்தப்படுபவனாகத் தோன்றவில்லை.

“ஆகுமா, ஆகாதா?” என்று இரண்டில் ஒன்றையே அவன் அறிய விரும்பினான். செல்லத்தை ஸரளாவிடம் அடைக்கலமாக விட்டுவிட்டு அவன் போய்விட்டான்.

செல்லத்தை முதல் முதல் பார்த்ததிலிருந்தே ஸரளாவுக்கு அவளிடத்தில் ஒருவிதப் பாசம் ஏற்பட்டுவிட்டது. அந்தப் பேதையின் கதையை அறிந்துகொள்ள அவள் ஆசைப்பட்டாள்.

அதற்காக ஸரளா செல்லத்தைத் தேடிப் போன போது அவள், “டாக்டர்! அவரிடமிருந்து கடிதம் வந்ததா?” என்று கேட்டாள்.

“வந்தது அம்மா, நீ அதையெல்லாம் நினைத்துக் கவலைப்படக் கூடாது. நான் ஒன்று கேட்கிறேன்: இந்த வியாதி ஆரம்பித்து எத்தனை மாதங்கள் ஆயின?”

“வியாதியா? முதல் பிரசவத்திலிருந்து இருக்கிறது. உடம்பு அப்பொழுதே துரும்பாய் இளைத்துவிட்டது. அவர் கவனிக்கவில்லை. அவருக்கு என்னைப் பிடிக்கவில்லையாம். நான் ‘பாஷனாய், ‘படித்தவளாய் இல்லையாம்.”

“ஹும்” என்றாள் ஸரளா.

“எனக்கு விவரம் தெரியாத வயசில் கல்யாணம் ஆயிற்று. பணத்துக்காக அவர் என்னைக் கல்யாணம் செய்துகொண்டார். பிறகு அவருக்கு என்னைக் கண்டால் வெறுப்பு ஏற்பட்டது. மாமியாரிடம் நான் பட்ட தொந்தரவுகளைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் எல்லாவற்றையும் நான் பொறுத்துக் கொண்டிருந்தேன். பிறகு ஒரு பிள்ளைக்குத் தாயானேன். அது பிரசவத்தின்போதே இறந்துவிட்டது. அதுமுதல் என் உடம்பு கேவலமாகிவிட்டது. அம்மா வந்தாள், என்னை அழைத்துப் போக. அம்மாவுடன் ஊருக்குப் போனேன்.

“பிறகு பிறந்தகத்திலிருந்து என்னை அழைத்துக் கொள்ளவில்லை. கஷ்டம் விடியாமல் வளர்ந்துகொண்டே வந்தது. ஆனால் புருஷன் என்ற பாத்தியதையுடன் அவர் வீட்டை அடைந்தேன். அங்கே அனுபவித்த அளவுக்கு மீறிய கஷ்டங்களால் வியாதியும் தானாக வளர்ந்து வந்தது. ஒரு மாதத்துக்கு முன்புதான் என் உடம்பு இளைத்திருப்பது அவர்களுக்குத் தெரிந்தது. இங்கே கொண்டு வந்து சேர்த்தார்கள். எப்படியாவது அவர் சௌக்கியமாக இருந்தால் போதும் ” என்று கூறி முடித்தாள் செல்லம்.

ஸரளா அங்கிருந்து பெருமூச்சுடன் எழுந்து சென்றாள்.


இந்தப் பழைய கதையெல்லாம் டாக்டர் ஸரளாவுக்கு ஞாபகத்துக்கு வந்தது. செல்லம் அடைந்த ஏமாற்றத்தை இன்னும் எத்தனை பெண்கள் அடைந்திருக்கிறார்களோ, அடையப் போகிறார்களோ என்று அவள் நினைத்துப் பரிதவித்தாள். செல்லம் வியாதி நீங்கிச் சுகம் அடைந்தவுடன் அவள் கணவன் வந்தால், தான் சொல்லக் கூடிய புத்திமதிகளைச் சொல்லவேண்டும் என்று ஸரளா எண்ணினாள்.

அந்த விளம்பரத்தை மறுபடி அவள் படித்துக் கொண்டிருந்தபோது தபாலில் ஒரு கடிதம் வந்தது. ஸரளாவின் தகப்பனார் அவளுக்காக ஒரு வரன் பார்த்து எழுதியிருந்தார். பிள்ளைவீட்டார் அவளைப் பார்க்க நேராக அவள் இருக்கும் இடத்துக்கே வரப் போவதாக அவர் தெரிவித்தார்.

“அப்பாவுக்கு இது ஒரு பெரிய கவலை. கல்யாணம், கல்யாணம் என்று பறக்கிறார். எனக்குக் கட்டோடு பிடிக்கவில்லை” என்று இஞ்ஜக்ஷன் குழாயில் மருந்தை ஏற்றிக்கொண்டே சொன்னாள் ஸரளா.

“உங்களுக்குக் கல்யாணமா? நல்ல வரனாய்த்தான் இருக்கும். பிள்ளையோடு பேசி, அவன் மனத்தை அறிந்து கொண்டு செய்துகொள்ளுங்கள், டாக்டர்! நாளுக்கு நாள் எனக்குப் பலஹீனம் அதிகரித்துக்கொண்டே வருகிறதே?” என்றாள் செல்லம்.

“பலஹீனமாய்த்தான் இருக்கிறாய் அம்மா. ஆனால், நீசதா, ‘அவர் அவர்’ என்று உருகுகிறாய். நான் சொல்கிறேன் என்று கோபித்துக்கொள்ளாதே செல்லம். உன் உடம்பு குணமானால், அவர் எங்கேயும் போகமாட்டார்” என்று கூறிப் போய்விட்டாள்.

செல்லத்தின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது.


பக்கத்தில் இருந்த தன் வீட்டு வராந்தாவில் உட்கார்ந்து, தன்னைப் பார்க்க வருபவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள் ஸரளா.

“அம்மா, செல்லத்திற்கு உடம்பு சரியில்லை” என்று அப்பொழுது ஒரு நர்ஸ் வந்து சொல்லிவிட்டுப் போனாள்

“போ, வருகிறேன்” என்றாள் ஸரளா.

“உடம்பு என்னவோ செய்கிறதாம். கணவனைப் பார்க்கவேண்டுமென்று ஆசையாக இருக்கிறதாம். தந்தி கொடுக்க வேண்டுமாம். உங்களை…”

ஸரளா அவசரத்துடன் வாயிற்படி இறங்கினாள். புதிதாக யாரோ சிலர் அவளை நோக்கி வந்தார்கள். செல்லத்தின் கணவனும் அவர்களுடன் இருந்தான்.

“அப்பாவிடமிருந்து கடிதம் வந்திருக்குமே?” என்று கேட்டாள் முதலில் வந்த வயசான ஸ்திரீ.

“வந்தது. அவசரக் கேஸ் ஒன்று. ரொம்ப ‘டேஞ்சராய்’ இருக்கிறது” என்று சொல்லி ஸரளா செல்லத்தின் கணவனைப் பார்த்தாள்.

“இவன்தான்” என்று பிள்ளையை அறிமுகப்படுத்தத் தொடங்கினாள் அந்த ஸ்திரீ.

ஸரளா திடுக்கிட்டாள்.

“நீங்களா?”

‘ஆம்’ என்பதுபோல் அவன் தலையசைத்தான். “உங்கள் அப்பா விவரமாய் எழுதவில்லையோ?” என்றான்.

ஸரளாவின் காதில் இதெல்லாம் விழவில்லை.

“இருங்கள், வந்துவிட்டேன்” என்று கூறிச் செல்லத்தைப் பார்க்கப் போனாள்.

செல்லம் வெருண்ட கண்களுடன் திரு திரு என்று பார்த்துக்கொண்டிருந்தாள்.

“செல்லம், என்ன அம்மா உடம்புக்கு?” என்று கேட்டாள் ஸரளா.

“அவருக்குத் தந்தி கொடுத்துவிட்டீர்களா? அவரைப் பார்க்கவேண்டும்போல் இருக்கிறது.”

“ஆகட்டும்.”

“உடனே கொடுங்கள் டாக்டர்.”

“கொடுக்கிறேன், அம்மா! அவரைப் பார்த்தால் உடம்பு குணமாகும் என்று நினைக்கிறாயா?”

“குணமாகாவிட்டாலும் திருப்தியுடன் பிராணனை விடுவேன்.”

செல்லம் மறுபடி கண்ணை மூடிக்கொண்டாள். அப்பொழுது அங்கே ‘அவர்’ வந்தார்.

“செல்லம்!” என்று ஒரு தரந்தான் கூப்பிட்டார்.

“வந்துவிட்டீர்களா?” என்று கேட்டுக்கொண்டே கண்ணைத் திறந்தவள், “உடம்பு துரும்பாய் இளைத்து விட்டதே?” என்று அவரை ஊடுருவிப் பார்த்தாள்.

கண் இமைகள் தாமாகவே மூடிக்கொண்டன. ‘அவர், அவர்’ என்று ஏங்கித் தவித்த ஆத்மா நிம்மதி அடைந்தது.

ஸரளாவின் உதடுகள் துக்கத்தால் துடித்தன. செல்லத்தின் கணவனை மறுபடி நிமிர்ந்துகூடப் பார்க்காமல் அவள் அங்கிருந்து போய்விட்டாள்.

– நவராத்திரிப் பரிசு, முதற் பதிப்பு: 1947 , கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *