அவன் எமனுக்கு எமன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 3, 2024
பார்வையிட்டோர்: 1,085 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

புரட்டாசித் திங்கள் தேய்பிறையில் ஒருநாள்….. 

“அம்மணத்தைப் பத்திக் கேட்கிறீங்களா…?” 

“எனக்குத்தான் பார்க்கக் கொடுத்து வைக்கலியே… அவங்க ரெண்டு பேரும் அந்தக் கோலத்து’ல எப்படி இருந்தாங்க’னு புட்டுப் புட்டு வைக்கணும்…” 

“புட்டு வைக்கிறது என்னங்க, ஒட்டு மொத்தமாவே சொல்லிடுறேனே. அட, அட அந்தக் கோலத்துல ஆறுமுகமும் ஆனந்தியும் எப்படி இருந்தாங்க’னு சொல் றேன் கேட்டுக்குங்க…” 

“சீக்கிரம் சொல்லேன்…” 

”அவசரத்தைப் பாருங்களேன்…போன வருசம் ஓவியர் மாதவன் வரைஞ்சதா சொல்லி, இரதி மன்மதன் ‘காலண்ட’ ரைக் கொண்டாந்து மாட்டுனீங்களே, அது கெட்டது போங்க……” 

“நான் என்னாத்த பண்ணுவேன், ஆராயி…போயும் போயும் வேலை நாளா பார்த்தா கலியாணத்தை வைக்கணும்? வேலை முடிஞ்சு எப்படியும் வந்து விழுத்திட லாம்’னு தான் நெனச்சேன். ‘அர்சண்டு’ வேலை’னு சொல்லி, பழுது பார்க்கப்பட்டக் கப்பலை ஓடவிட்டுப் பார்த்து, ‘ஓகே’னு கப்பல் இஞ்சினியர் ‘சர்டிபிக்கட்’ல கையெழுத்துப் போடறதுக்கும் பொழுது விடியிறதுக்கும் சரியா இருந்துச்சு…” அலுத்துக் கொண்டான் ஆதிமூலம். 

சூரோங் கப்பல் பட்டறையில் பழுதுபார்ப்பு ஊழிய னாகப் பணியாற்றும் ஆதிமூலம், மூன்று பிள்ளைகளுக்குத் தந்தை. மனைவி ஆராயியுடன் சொந்தமாக வாங்கிய அடுக்குமாடி வீட்டில் குடியேறிநான்கு ஆண்டுகளாகின்றன. அடிப்படைச் சம்பளம் குறைவுதான். மிகுதிநேர வேலை செய்வதால் நல்ல வருவாய் பெற்று வந்தான். 

ஆதிமூலத்தின் நண்பர் அருளப்பரின் மகனுக்குத்தான் நேற்று முன் தினம் திருமணம் நடந்தது. அம்மணத்தைப் பற்றித்தான் ஆராயியுடன் அந்த அதிகாலை நேரத்தில் உரையாடிக் கொண்டிருந்தான். 

அதிகம் படிக்காதவன் ஆதிமூலம். கைத்தொழில் நெரிந் திருந்ததாலும், உழைத்துப் பிழைக்க வேண்டும் என்ற ஆர்வ மிகுதியாலும், நீலச்சட்டைத் தொழிலாளியான அவனுக்குக் கைநிறைய ஊதியம் கிடைத்தது. 

காலை எட்டு மணிக்கு வேலைக்குச் சென்று, மாலை ஐந்து மணிக்கு வீடு திரும்புவதும், சனிக்கிழமை அரை நான் ஞாயிற்றுக்கிழமை முழு ஓய்வு என்பதெல்லாம் ஆதிமூலத் தைப் பொறுத்தவரை எப்பொழுதோ ஒரு வேளை அமையக் கூடியது. சீனப் புத்தாண்டாகட்டும், நோம்புப் பெருநாளா கட்டும், கிருசுமசு பண்டிகையாகட்டும், விசாக தினமாகட் டும், அவனுக்கு வேலை இருக்கத்தான் செய்யும். இதனால் அண்டை அயலார் கொண்டாடும் பெருநாள் வைபவங் களுக்கு ஆராயியும் குழந்தைகளும் சென்று வருவது வழக்க மாகிவிட்டிருந்தது. விருந்துகளில் கலந்துகொள்ளும் ஆசை ஆதிமூலத்துக்கும் இருக்கத்தான் செய்தது. சம்பாத்தியத்தில் குறிக்கோளாக இருக்கும் அவனுக்கு அண்டை அயலாரைப் பற்றி நினைப்பதற்கு நேரம்தான் ஏது? 

ஊரெல்லாம் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில், தன் சக தொழிலாளர்களுடன் வியர்வைக் குளியலில் வேலை செய்துகொண்டிருப்பான் ஆதிமூலம். திரைப்படம் என்றும், கடற்கரை உல்லாசப் பயணம் என்றும், திருமண நிகழ்ச்சி கள் என்றும் திட்டம் போட்டுக் காரியமாற்ற அவனது வேலை நிலைமை இடங்கொடுப்பதில்லை. 

பிள்ளைகளுக்கு ஆடை அணிகளைப் பூட்டி, தானும் சீவி சிங்காரித்துக் கொண்டு, பல தடவைகள் ஆதிமூலத்தின் வருகைக்காகக் காத்திருந்து ஏமாந்து போயிருக்கிறாள் ஆராயி. அவளுக்கும் வருத்தம் ஏற்படத்தான் செய்யும். வருத்தப்பட்டு என்ன ஆகப் போகிறது? 

சொந்தவீடு வாங்கியாகி விட்டது. மாதா மாதம் தவணைப்பணம் கட்டியாக வேண்டும். தண்ணீர், மின்சாரம் எரிவாயு போன்றவற்றுக்குக் கட்டணம் செலுத்தியாக வேண்டும். ஆண்டுக்கு இருமுறை சொத்துவரி கட்ட வேண் டும். தொலைக்காட்சி தொலைபேசி முதலியவற்றுக்கான கட்டணம்; முப்பது காசுக்கு அரிசியும், அறுபது காசுச்குப் பாலும் இருபத்தைந்து காசுக்குக் சீனியும் விற்கப்படுகின்ற கால கட்டத்திலா வாழ்ந்து கொண்டிருக்கிறாள்? அகவிலை ஏறிவிட்டது ஊதியமும் உயர்ந்து கொண்டேதான் இருக் கிறது. அடிப்படைச் சம்பளம் என்னும் சோம்பேறியின் மஞ்சத்தில் புரண்டால் கடைத்தேற முடியுமா? மிகுதிநேர வேலை எனும் துடிப்பு மிக்கவனுக்கு ஈடுகொடுத்தால் தானே பிழைக்க முடியும்? 

பள்ளிக்குச் செல்லும் மூன்று பிள்ளைகளுக்கு நாற்பது காசு கொடுத்து வந்தவளுக்கு இப்பொழுது எண்பது காசு தேவைப்படுகிறது. 

கடைக்குட்டிக்குப் பள்ளிப் பேருந்து கட்டணமாக திங்க ளுக்குப் பதினைந்து வெள்ளி; இடைவேளை சிற்றுண்டிக்குச் சில்லறை… 

போதாக்குறைக்கு, திங்களுக்கு இரண்டுமூன்று உறவினர் களின் படையெடுப்பு நிகழும்.பிறந்தநாள் விழா, திருமணம் காதுகுத்து, புதுமனை புகுவிழா, மருத்துவச் செலவுகள், மற்றும் அவசர அவசிய பொருளாதாரத் தேவைகள் இவ் வளவுக்கும் ஆதிமூலம் ஒருவனே உழைத்தாக வேண்டும். இயன்ற மட்டும் ஆசைகளை அடக்கிக் கொண்டும், தேவை களைக் குறைத்துக் கொண்டும், வாழ்க்கைப் படகைச் செலுத்திக் கொண்டிருந்தாள் ஆராயி. 

அன்று, ஆங்கிலத் திங்கள் பத்தின் பன்னிரண்டாம் நாள்; வியாழக்கிழமை……… 

ஆராயி எடுத்து வைத்திருந்த வெண்ணெய் தடவிய ரொட்டித் துண்டுகளையும் காபியையும் உள்ளே தள்ளிக் கொண்டிருந்தான் ஆதிமூலம். விடியற்காலை ஆறு மணி இருக்கும். மூத்தமகன் குளித்துக் கொண்டிருந்தான். இளை யவர் இருவருக்கும் பிற்பகல் பள்ளியாதலால்,உறங்கிக் கொண்டிருந்தனர். 

”ஆராயி, இன்றைக்குக் காபி பிரமாதம், போ..” தொடர்பில்லாமல் பேசினான் ஆதிமூலம். 

“கிண்டல் போதும். பெரியவன் குளிச்சிக்கிட்டு இருக் கான், மெதுவாப் பேசுங்க.” முத்துநகைப் பூத்தாள் ஆராயி. கடைக்குட்டிப் பயல் பிறந்தவுடன் கருத்தடை செய்து கொண்டவளின் கன்னக் கதுப்புகளில் நாணயிழை… 

“பரீட்சை நெருங்குது. பசியாறினதும் கொஞ்ச நேரம் பாடத்தைப் படிக்கச் சொல்லு.” 

“அதையெல்லாம் நான்பார்த்துக்கிறேன், நீங்க சீக்கிரமா கிளம்புங்க” 

“ஏன் என்னைத் தொறத்துற…எனக்கு இன்னும் நேரம் ஆக’ல. கெடிகாரத்துக்குச் சாவி கொடுக்கும் போது, கால் மணி நேரத்தை முன்னுக்கு வச்சிருக்கேன். இப்ப மணி ஆறு தான் ஆகுது” இளித்தான் ஆதிமூலம். 

“அதான் இம்புட்டு சவுடாலா?” பெருமைப்பட்டுக் கொண்டாள் கணவனின் சமயோசிதத்தை எண்ணி. 

“என்னமோ தெரியல ஆராயி, காபி பிரமாதமா இருக்கு. இன்னும் கொஞ்சம் ஊத்தேன்.” காலிக் கோப் பையை நீட்டினான். 

“நேரம் காலம் தெரியாம ‘ஐசு’ வைக்காதீங்க.” ஆராயி ஒரு கோணல் சிரிப்பைச் சிந்தியவாறே, காபியை ஊற்றினாள். கடந்த பதினேழு ஆண்டுகளாக ஆதிமூலத்தை அங்குலம் அங்குலமாக அளந்து வைத்திருப்பவளாயிற்றே… 

“மெதுவா…மெதுவா சிரி, உதடு சுளுக்கிக்கப் போவுது” என்று கூறிக்கொண்டே நகைத்தான். 

”ஊம். இன்னும் என்ன குந்திக்கிட்டு… கிளம்புங்க.” 

”வந்து ஆராயி, சொல்ல மறந்துட்டேன். இன்றைக்கு இரவு சாப்பாடு தோசையா இருக்கட்டும். வரும்போது. கொத்துன இறைச்சி வாங்கியாறேன். அருமையான ஒரு பெறட்டல்… என்ன?” சப்புக் கொட்டிக் கொண்டே சொன்னான். 

“முருங்கக்காய் போட்டு சாம்பாரையும் ஆக்கிடுறேன். நீங்க வந்த பிறகு பெறட்டலைக் கவனிப்போம்” என்று. ‘பெறட்டல்’ என்ற சொல்லை சற்றுச் அழுத்தமாகவே உச்சரித்தாள் ஆராயி. மாலை வருவதாகச் சொல்லிச் செல்பவன் மறுநாள் காலையில் வந்தாலும் வியப்படைவதற்கில்லை ஏனெனில், அவன் வேலை அப்படி. அவளுக்கு அது தெரியும், புரியும். 

“தோசை மாவை ரொம்பப் புளிக்க வச்சுடாதே” என்று கூறிக்கொண்டே நடந்தான் ஆதிமூலம். 

பிற்பகல் ஒன்றரை மணிக்கெல்லாம் மூத்தவன் இல்லம் திரும்பி விட்டான். இளையவர் இருவரும் பள்ளி சென்றிருந்தனர். ஆராயிக்குச் சமையல் வேலை குறைந்திருந்தது சோறு பொங்கி, நெத்திலி பொறித்திருந்தாள். பழைய வற்றல் குழம்பைக் கொண்டு மதிய உணவைச் சரிக்கட்டி விட்டாள். 

ஆட்டுக்கல்லை நிமிர்த்திக் கழுவிவிட்டு, ஊறப் போட் டிருந்த அரிசியையும் உளுந்தையும் நிரப்பி ஆட்ட ஆரம்பித்தாள். 

நாராயணியின் மகள் பூங்குழலிக்கு வரும் ஞாயிற்றுக் கிழமை ‘பூப்பு நீராட்டு’ச் சடங்கு. ஆதிமூலத்திடம் சொல்ல மறந்து விட்டாள். வந்தவுடன் மறக்காமல் சொல்லிவிட வேண்டும். இளையவனுக்குப் பிறந்தநாள் வருகிறது. துணிமணி எடுக்க வேண்டும். மறக்காமல் நினைவு படுத்த வேண்டும். பதினைந்தாம் தேதி, ‘சீட்டு’க்குப் பணம் கட்ட வேண்டும். மறந்துவிடாமல் அதையும் ஆதிமூலத்துக்கு நினைவு படுத்த வேண்டும் என்று பலவாறாக எண்ணிக் கொண்டே வேலையில் மூழ்கிப் போயிருந்தாள் ஆராயி. 

பிற்பகல் இரண்டு மணிக்கெல்லாம் ஆட்டுக்கல்லைக் கழுவிக் கவிழ்த்துவிட்டு நிமிர்ந்தாள். இரவு எட்டு மணிக் கெல்லாம் மாவு பதமாகப் புளித்துவிடும் என்கின்ற முடிவான முடிவோடு, புளி நீரை அளவோடு கலந்து ‘கட்டி’ வைத்தாள். 

ஈரத்துண்டால் முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டே தையல் வேலையைத் தொடங்கினாள் ஆராயி. அறுந்துபோயிருந்த ஆதிமூலத்தின் கால்சட்டைப் பொத்தான்களைத் தைக்கலானாள். தையலுக்கோ மனதுக்குள் இன்பக் கிளுகிளுப்பு. 

கொடியில் காய்ந்துவிட்டிருந்த துணிகளை எடுத்தாள். பிள்ளைகளின் பள்ளிச் சீருடைகளையும், ஆதிமூலத்தின் ஆடைகளையும் இரண்டு புடவைகளையும் ‘பெட்டி போட்டு முடித்தாள். 

மாலை மணி நான்கு. தேநீர் கலக்கினாள். வீட்டுப் பாடங்களைச் செய்துகொண்டிருந்த மூத்தவனுக்கும் கொடுத்து, தானும் குடித்தாள். 

“சாம்பார் வைக்கணும். தேத்தண்ணியைக் குடிச்சுட்டுப் போய்க்குளி.” என்றவாறே அடுக்களைப் பக்கம் நகர்ந்தாள் ஆராயி. 

ஐந்து மணிக்கெல்லாம் சாம்பாருக்கான முதற்கட்ட வேலைகள் முடிவுற்றன. ‘விடி வேலை’ இல்லாதிருந்தால் இன்னும் இரண்டு மணி நேரத்தில் ஆதிமூலம் வீடு திரும்பி விடுவான். இறைச்சிக்கடை ஆபிதீன் ஆதிமூலத்தின் ஊர்க்காரர். தொலைபேசி மூலம் ஒரு வார்த்தை போட்டு வைத்தால் போதும். இரவு பத்துமணி வரை காத்துக் கொண்டிருப்பார். குளிர் பதனப் பெட்டியில் ஆதிமூலத்துக்கு வேண்டிய இறைச்சியும் விழித்துக் கொண்டிருக்கும். 

ஆராயி குளித்து முடித்தாள். ஆயிற்று மணி ஆறு பத்து. இளையவர் இருவரும் இல்லம் திரும்பிவிட்டனர். பெரியவன் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னே அமர்ந்து கொண்டு கேலிப்படம் பார்த்துக் கொண்டிருந்தான். 

மாலை ஆறு இருபது. ‘உயிர்ப் போராட்டம்’ எனும் விளக்கப் படம். இளையவர் இருவரும் உடைமாற்றிக் கொண்டு, தேநீர்க் கோப்பைகளுடன் மூத்தவன் அருகே வந்து அமர்ந்தனர். அடுக்களை வேலைகளை முடித்துக் கொண்டு ஆராயியும் குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாள். 

றே முக்கால். தமிழில் செய்திகள். முழுநிலவின் ஒளி தவழும் செய்தி வாசிப்பவரின் முகத்தில் துயரத்தின் சாயல் இழையோடியிருந்தது. முக்கியச் செய்திகளின் தலைப்பு களை வாசித்தார். முதல் தலைப்புச் செய்தியே, “சூரோங் கப்பல் பட்டறையில் பழுது பார்க்கப்பட்டுக் கொண்டிருந்த “ஃசுபைரோஃசு” எனும் கிரேக்க எண்ணெய்க் கப்பல் இன்று பிற்பகல் வெடிவிபத்துக்குள்ளாகியது!” என்பதுதான். 

இதைக் கேட்டதும் ஆராயிக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஆதிமூலம் அங்கேதான் வேலை பார்க்கிறான். அவனுக்கு ஏதாவது.? அவளால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இதயம் கனத்தது. 

தொடர்ந்தது செய்தி அறிக்கை. இதுவரை மாண்ட வர்களின் எண்ணிக்கை நாற்பத்தொன்பது என்று அறிவிக் கப்பட்டிருக்கிறது. அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். மீட்புப்பணி தொடர்கிறது”. 

‘நாற்பத்து ஒன்பது பேர் இறந்துவிட்டார்கள்!’ என்ற செய்தியைச் செவி மடுத்ததும் அதிர்ந்து போனாள் ஆராயி. தன் கணவன் அவர்களில் ஒருவனாக இருந்துவிடக் கூடாதே என்று மனதுக்குள் பிரார்த்தனை செய்தாள். முடியவில்லை! கண்ணீரை அடக்க அவளால் முடியவில்லை! வாய்விட்டே கதறலானாள். குழந்தைகள் மருண்டு. மிரண்டு போயினர். 

“அம்மா…அம்மா…” என்று இளையவர் இருவரும் தாயின் அழுகைக்குக் காரணம் தெரிந்துகொள்ள முடியாமல் ஆராயியைக் கட்டிப்பிடித்துக் கொண்டனர். ஓரளவுக்கு விபரம் புரிந்த மூத்தவன் முகம் வெளிறிப்போயிருந்தது.

“அம்மா..! அப்பா?” மூத்தவனால் பேச முடியவில்லை. 

“உங்க அப்பாவும் அங்கதாண்டா வேலை பார்க்கிறாரு அய்யோ.. அவருக்கு எதுவும் நேர்ந்திடக் கூடாதே…’ புலம்பிக் கொண்டே,பெருகிவரும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அறையை நோக்கி விரைந்தாள். பிள்ளைகளும் அவளைப் பின் தொடர்ந்தனர். தொலைக்காட்சி இயங்கிக் கொண்டிருந்தது. 

குத்துவிளக்கின் திரியைச் சரிசெய்து, நடுங்கும் கரத்தால் எண்ணெய் ஊற்றி, பற்ற வைத்தாள் சுடர் அமைதியாக ஒளிவிட்டது. 

“அம்மா, தாயே… என் கணவரைக் காப்பாத்து…! இந்த மூணு பிஞ்சுகளையும் என்னையும் அனாதைங்களா ஆக்கிடாதே’ம்மா.. வெவரம் தெரிஞ்ச நாள் முதலா உன்னைத்தானே அம்மா நம்பிக்கிட்டு இருக்கேன் …செஞ்சு டாதே தாயே.! என் கணவரை உசிரோட என் கண்ணுக் குக் காட்டு ம்மா, என்னைப் பெத்த தாயே ..தங்கத்தா’ல தாலி செஞ்சு காணிக்கை செலுத்துறேம்மா. அவருக்கு எதுவும் நேராம எங்கிட்ட ஒப்படைச்சுடும்மா.” ஆராயியின் புலம்பலைக் கேட்டு பிள்ளைகளும் அழத்தொடங்கினர். தலைவிரி கோலத்துடன் குத்துக்காலிட்டு அமர்ந்தாள். 

நேரம் நகர்ந்து கொண்டிருந்தது…… 

மணி ஏழே கால் வாயிற்கதவு அழைப்புமணி ஒலித்தது. தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. 

மூத்தவன் கதவருகே சென்று கண்ணாடிக் குழாய் வழி யாகப் பார்த்தான். ஓர் உருவம் நின்று கொண்டிருந்தது தலை தெரியவில்லை. இலேசாக இருள் மண்டிக்கொண்டி ருந்த வேளை, மீண்டும் உற்று நோக்கினான். நீலநிறச் சட்டை தெரிந்தது…. 

திக்பிரமை பிடித்தவள் போல், ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தாள் ஆராயி. அழைப்புமணி ஓசை அவள் காதுகளில் விழுந்ததாகத் தெரியவில்லை. அவள் ஆழ்ந்த தவத்தில் மூழ்கிவிட்டாளோ? கணவனின் உயிரை மீட்க எமனுடன் போராடினாள் என்று புராணிகர்கள் சொல்வார் களே. அப்படிப்பட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக் கிறாளோ? 

”அம்மா, அம்மா…” தாயின் தோளைப்பிடித்து உலுக்கினான் மூத்தவன். 

திடுக்கிட்டு விழித்தாள் ஆராயி. 

“என்னடா என்ன?” குமுறினாள் அன்னை. 

“வந்தும்மா…வந்து, வெளியே வந்து’ம்மா… நீலச் சட்டை தெரியுது…” உளறிக் கொட்டினான் மூத்தவன். 

“நீலச் சட்டையா?” வெலவெலத்துப் போனாள் ஆராயி. 

வியர்த்துக் கொட்டியது. அவளுக்கு. நீலநிறச் சட்டையென்றால் போலீசுக்காரரா? இருக்காது. ஒரு காலும் இருக்கக்கூடாது. என் தாய் என்னை வஞ்சிக்க மாட்டாள் என்று மனதுக்குள் புலம்பிக்கொண்டே கதவருகே சென்று, நெடுமூச்சு இழுத்தவாறே கண்ணாடிக் குழாய் வழியாக நோக்கினாள். 

அங்கே……. 

ஆராயியின் உடல் நடுங்கியது. கால்கள் தடுமாறின. பொங்கி வரும் கண்ணீரை அவளால் தடுத்து நிறுத்தமுடியவில்லை. தட்டுத் தடுமாறிக்கொண்டே சாவிக்கொத்தை எடுத்துக் கதவைத் திறந்தாள். புன்னகை தவழக், கையில் இறைச்சிப் பொட்டலத்துடன் நின்று கொண்டிருந்தான் ஆதிமூலம். 

“அப்பா!” முக்குரல்களும் ஒரே நேரத்தில் முழங்கின. ஆராயிக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. அழுதேவிட்டாள் 

“ஏன் அழறீங்க… அதான் வந்துட்டேனே…” 

ஆதிமூலம் அமைதிப்படுத்தினான். உள்ளே அடியெடுத்து வைத்துக்கொண்டே… 

“தொடாதீங்க!” அலறினாள் ஆராயி. 

“என்ன சொல்ற ஆராயி?” திடுக்கிட்டான் ஆதிமூலம். “அப்பாவைத் தொடாதிங்க.” பிள்ளைகளைத் தன்னருகே இழுத்துப் பிடித்துக் கொண்டு.

“போங்க. போயி குளிச்சிட்டு வாங்க!” என்று கணவனுக்குக் கட்டளையிட்டாள் ஆராயி. கலங்கித் தவித்த பின்னர் அவள் காட்டிய வெற்றிக் களிப்பு அந்தக் கட்டளையில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. 

ஆதிமூலம் மூச்சு விடாமல் குளிக்கச் சென்றான். ஆராயி வேட்டி சட்டைகளை எடுத்து வைத்தாள். குளித்துத் துவட்டி, துண்டை இடையில் கட்டிக் கொண்டு வந்த ஆதிமூலம், உடைகளை அணிந்து கொண்டான். 

அல்லோல கல்லோலப் பட்டுக்கிடந்த வீட்டில் முழு அமைதி நிலவியது. பிள்ளைகளை முகம், கை, கால் கழுவச் செய்து, தானும் சுத்தம் செய்து கொண்டு, தலை வாரிக் கொண்டிருந்த ஆதிமூலத்தை குழந்தைகள் பின்தொடர இழுத்துச் சென்றாள் அறைக்குள்ளே. 

“ஊதுவத்தியைக் கொளுத்தி, தாயைக் கும்பிடுங்க…” என்று பணித்துக் கொண்டே, “ஏங்க, உங்களக் கேட்காம ஓரு காரியம் செய்துட்டேன், கோவிச்சுக்காதீங்க. உங்களுக்கு ஒரு வில்லங்கமும் நேர்ந்திடக் கூடாது’னு தாயைக் கேட்டுக்கிட்டு, ‘தங்கத்து’ல தாலி செஞ்சு உண்டியல்’ல போடுறதா நேந்துகிட்டேன்…” ஆராயியின் குரல் கம்மியது. ஆதிமூலத்தைப் பரிதாபமாகப் பார்த்தாள். 

”அதனா’ல என்ன… காணிக்கையைச் செலுத்திட்டா போவுது. அதுக்கு ஏன் அசடாட்டம் விம்மு’ற” சிரித்துக் கொண்டான். ஆதிமூலம். ஊதுவத்திகளைக் கொளுத்தி கும்பிடு போட்டான். 

விசித்திரங்கள் நிறைந்ததுதான் மனித வாழ்க்கை. கோடானு கோடி மனிதர்களைப் பன்னிரண்டே இராசிகள் ஆட்டிப் படைக்கின்றன என்கின்ற நம்பிக்கை படித்த மேதாவிகளையே பீடித்துக் கொண்டிருக்கிற இருபதாம் நூற்றாண்டில், ஆராயி போன்ற தற்குறிகள் கொண்டிருக்கும் நம்பிக்கையை மறுத்துரைக்க எவராலும் முடியாது தான். 

தங்கத்தாலி நேந்துதலின் விளைவாகத் தான் அவள் கணவன் உயிரோடிருக்கிறான் என்று நம்பிக் கொண்டிருக்கும் ஆராயிக்கு, ஆதிமூலம் விடுப்பு (லீவு) எடுத்துக் கொண்டு, வேலைக்குச் செல்லவில்லை என்ற உண்மை தெரியுமா? 

இறைச்சிக்கடை ஆபிதீனைச் சந்தித்த பிறகுதான் ஆதிமூலத்துக்கு விபத்து நடந்த செய்தியே தெரிய வந்தது. தான் வேலைக்குச் சென்றதாகவே காட்டிக் கொண்டான். அவன் வேலைக்குச் சென்றிருந்தால் அதே கப்பலில்தான் வேலை செய்ய நேர்ந்திருக்கும். அவனால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. குலை நடுங்கியது. 

ஆதிமூலம் உயிரோடு இருக்கிறான். காலனுக்கே அறைகூவல் விடுத்துக் கொண்டு, எமனுக்கே(!) எமனாக நடமாடிக் கொண்டிருக்கிறான். இதற்குக் காரணம் தனது பிரார்த்தனை தான் என்று நம்பிக் கொண்டிருக்கிறாள் ஆராயி. 

அந்த முட்டாள் தனமான நம்பிக்கையை ஆதிமூலத்தால் உடைத்தெறிய முடியாதா…? 

முடியாது!! ஏனென்றால்………. காலை முதல் மாலை வரையில், ஆரவல்லியின், அரவணைப்பில் அல்லவா கட்டுண்டு கிடந்திருக்கிறான்.! மதுக்கடைப் பணிப்பெண்ணான ஆரவல்லி, ஆதிமூலத்தின் வைப்பாட்டியாக வாழ்ந்து கொண்டிருப்பதை, ஆராயும் திறனற்ற வெகுளி ஆராயி எப்படி அறிவாள்?

– அவன் (சிங்கப்பூரன் சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 1993, நிலவுப் பதிப்பகம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *