அவனைச் சுற்றியே!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 5, 2023
பார்வையிட்டோர்: 2,157 
 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அல்லாஹ் அக்பர்… அல்லாஹு அக்பர்… அல்லாஹஹ அக்பர் – ஹஜ்ரத்தின் குரல் இனிமையாக அதிகாலை நேரத்தில் சங்கீதம் போல காதுகளில் நுழைந்தது.

அந்த வீட்டின் திண்ணையில் பாய் நெசவு செய்து கொண்டிருந்த பீவீ பாத்துமாள் சேலைத் தலைப்பைத் தலையிலே போட்டுக் கொண்டார். பாயை மீண்டும் பின்ன ஆரம்பித்து, ’சேக்கு பாங்கு சொல்லியாச்சு…. எழுந்திரு’பக்கத்து அறையில் படுத்திருந்த மகனுக்குக் குரல் கொடுத்தார்.

தூக்கத்திலிருந்தாலும் பாங்கு ஒலிக்கின்றதை அவன் செவிகள் பின் உணர்ந்து கொண்டுதான் இருந்தன எழுப்பிய குரலும், பாய் நெசவு ஓசையும் அவனை விழிப்புறச் செய்தன. படுத்திருந்த பாயிலேயே அமர்ந்தான். கண்களைக் கசக்கி, இரு கைகளையும் முறித்துக் கொண்டான். மேல்நோக்கித் தூக்கி, உடம்பை நெளித்துச் சோம்பலை

’அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ்-

’அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ்….

ஹஜ்ரத்தின் ஓசை முன்னை விடச் சற்று அதிகமாக உரத்தது. அந்த நிசப்தமான நேரத்தில் பாங்கின் ஓசை உற்சாகத்தைக் கொடுத்தது. தலையிலிருந்து நழுவப்பார்த்த துண்டைச் சரி செய்து கொண்டான்.

அவள் கைகள் கோரையை எடுத்து ‘குச்சு ஆளி’யில் கொருத்து பாயைச் சற்று வேகமாகப் பின்னியது. பாங்கு நிறுத்தி நிதானமாக ஒலித்தது. மனதிற்குள் அவளும் ’ஜவாபு’ சொல்லிக் கொண்டாள். அடுத்த வார்த்தையைக் கூறுமுன் இரு தடவை பாய் நெசவு ’தடக்… தடக்’என ஓசையை எழுப்பியது. மிகக் கூர்மையாக சேக் பாங்கை கிரகித்துக் கொண்டிருந்தான்.

‘அஸ்ஸலாத்து கைரும்மினன் நவ்ம்’ – என இருமுறை சற்று லேசான குரலில் நீட்டி ஒலித்தது. திண்ணையை அடுத்த அறையில் பாய் நெசவு செய்து கொண்டிருந்த சேக்கின் தங்கை சுபைதா, ‘ஸதக்(த்)தவ பார்த்து வபில் இக்கி நகர்த்த’என்று கொண்டாள். தன்னுடைய இனிமையான குரலால் அழகாக ’ஜவாபு’ கூறிக்கொண்டிருக்கிறது.

ஹஜ்ரத் சற்று உரத்த குரலில் ஓங்கி, ‘அல்லாஹு அக்பர்! அல்லாஹு’ அக்பர்! எனக் கூறி, சற்று நிறுத்தி சன்னமான குரலில், ’லா, இலாஹ இல்லல்லாஹ்’என்று முடித்தார்.

மூவரும் மிக அமைதியான குரலில், அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹி’என்று ஆரம்பித்து ’கியாமத்தி இன்னக்கவா துக்லிபுல் மீ ஆத்’என்று முடியும் ’துவா’வை ஓதிக் கண்களில் ஒற்றிக்கொண்டார்கள். பள்ளிவாசல் மைக்கில் ஹஜரத்தும் ’துவா’வை முணுமுணுத்து முடித்துக் கொண்டார்.

இப்போது வேறு எந்தச் சப்தமும் இல்லை, ’குச்சாளி’நூலின் இடையினிலே ஓடுகின்ற சப்தமும், பாய் அச்சு கோரையினைக் கோரையோடு சேர்க்கின்றபோது ஏற்படுகின்ற எத்தனை வேகம்! ’தடக்’என்ற சப்தமும்தான் இருந்தது. அந்தக் கைகளுக்குத்தான் எத்தனை வேகம்!!

இருள் சூழ்ந்திருந்த வீட்டினில், சிறு சிம்னி விளக்கினை, குச்சாளியில் கோதை செருகப்படும் இடத்தில் வைத்து, அந்த வெளிச்சத்தில் வயதான தாயாரும்… வயது வந்த தங்கையும் அதிகாலையிலேயே உழைக்கின்ற உழைப்பு … நினைத்துப் பார்த்தான். பாய் அச்சினை அவர்கள் ’தடக் தடக்…’என்று அடிப்பது நெஞ்சினில் அடிப்பது போன்று இருந்தது. பாய் நெய்தே சற்று கூனாகிவிட்ட தாய்….. அழகுப் பதுமை போலிருக்கும் தங்கையும் இப்படி ஆவதா? இவையெல்லாம் மனக்கண் முன் எழும் அன்றாடப் பிரச்சினைகள்தான்! ஏனோ இன்று அதிகமான பளு போன்று தோன்றியது.

வீட்டை ஒட்டியிருந்த யூசுப் வாத்தியார் தொழுவில் மாடோடு மாடு மோதிக் கொண்டது. லேசான காற்று வீசி பூவரசு மரத்தின் இலைகள் சலசலத்தன.

பாயின் ’தடக்… தடக்..’என்ற சப்தம் ஆக்ரமித்திருந்தது.

இந்தச் சப்தம் அதிகாலை எழும்புவதிலிருந்து இரவு படுத்து நன்றாகத் தூங்கும் வரை அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கும். ஆனாலும் இன்று ஏனோ அது அகோரமாகப்பட்டது.

மழலை மொழி பேசும் நாளிலிருந்தே ’அத்தா’என்ற சொல் அவசியமில்லாமலே போய் விட்டது. ஒரு தந்தையின் பாசம் எப்படி இருக்கும் என்ற அனுபவம் கிடையாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் தாயும், சகோதரியும்தான்!

தாயும் அவள் சக்திக்கு ஏற்ப செல்லமாகத்தான் வளர்த்தாள். ஏதோ, கணவர் சிறுகச் சிறுகச் சேர்த்த வீட்டையும், பத்து மரக்கா வயலையும் பேணி இந்தக் கைத் தொழிலையும் செய்து இரு குழந்தைகளோடு அருதலி வாழ்க்கையைத் தொடங்கியவளுக்கு ஆரம்பத்தில் உதவிகரமாக இருந்த சகோதரர்களும் ’குழந்தை குடும்பம்’என்று வந்தவுடன் ஒதுங்கிக் கொண்டனர்.

சுபைதா எட்டாவது வகுப்பு படிக்கும்போது ‘பெரிய மனுசி’ ஆகி வீட்டோடு இருந்தாள். சேக்கை மட்டும் கல்லூரிவரைக்கும் படிக்க வைத்தாள்.

கல்லூரியும் இந்த வயலை விழுங்கி, ஒரு பட்டத்தைக் கொடுத்து வெளியே அனுப்பியது.

வீட்டை அடுத்து தென்புறத்திலிருந்த வைக்கோல் படப்பின் மேலிருந்து ஒரு சேவல் ’கொக்கரக்கோ’எனக் கூவியது.

தொடைப் பகுதிவரை இழுத்து வைத்திருந்த சேலையைச் சரிசெய்து கொண்டாள் சுபைதா! அடிப்பலகையை முன்னுக்கு இழுத்துக் கொண்டே, ’அண்ணே தொழுகைக்கு நேரமாச்சு எழுந்திரிங்க’என்றாள்.

காதில் விழுந்தாலும் விழாதது போலப் பேசாமல் இருந்தான்.

சுபைதா பெரிய மனுசி ஆகி ஐந்து வருடங்களுக்கு மேலாகியது. நிறைய பேர் பெண்ணை பிடிக்கிறது என்றாலும், ’எல்லாம் என் மவன் வேலைக்கு போன பிறகுதான்’என்பாள் பீவி.

சுபைதாவுக்கு அண்ணன் பெரிய ஆபீசர் வேலைக்கு போகும், நமக்கு நிறைய நகைநட்டு போட்டு சீர் வரிசையெல்லாம் கொடுத்து பெரிய வசதியுள்ள இடத்துல கட்டி கொடுக்கும் என்ற நம்பிக்கை நிறைந்திருந்தது. அடிக்கடி இப்படிக் கனவு கண்டு கொண்டிருப்பாள். பாயில் உள்ள நூல் ஒன்று அறுந்தது. ’சே.. இந்த எழவு பாயி எப்பந்தான் ஓயப் போவுதோ சபித்தவாறு நூலை முடிச்சுப்போட்டு முறுக்கி விட்டாள். அடுத்த அறையில் இருந்தவனை எட்டிப் பார்த்து, ’என்னண்ணே இப்படியே இருக்கப் போறியளா.. எந்திருச்சி முகத்தை கழுவிட்டு பள்ளிக்கு போங்க’என்று கூவியவாறு தறியில் அமர்ந்து பின்ன ஆரம்பித்தாள்.

தெருவில் குளிப்பதற்காகக் கூட்டத்தோடு சென்ற டிரைவர் அப்துல் காதர் பொண்டாட்டி வருசை பாத்து, ஏ, பீவி அக்கா குளிக்க வரலியா?’என்று கேட்டாள்.

‘இந்த பாய முடிச்சுட்டு வாரேன்’- பீவி. ’சரி.-

சுபைதாவ வரச் சொல்லுங்க – அடுத்து கேட்டாள்.

’அவ நேத்து தான் குளிச்சா, உடம்புக்கு சரியில்ல.. பனி வேற அடிக்கு… நாளைக்கு பாப்போம்’ பதில் சொன்னாள் பீவி.

பின், ’ஏல சேக்கு பொம்பள பிள்ளையல்லாம் குளிக்கப் போயிட்டுவோ! நேரமாயிடுச்சி பள்ளிக்கு போப்பா!’ அந்தக் குரலில் எவ்வளவு மெளனம்!

மென்மையான குரல் உள்ளத்தைத் தொட்டாலும் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

அந்த அதிகாலை வேலையில் உழவுக்குச் செல்பவர்களின் பேச்சுக் குரல்களும், அவர்களைத் தொடர்ந்த உழவு மாடுகளின் சலங்கை ஒலியும் ரோட்டில் கேட்டது. சலங்கை சப்தத்தைக் கேட்டுத் தொழுவத்தில் கட்டியிருந்த பசுமாடு ’அம்மே’எனக்குரல் கொடுத்தது. இருள் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பலத்தை இழந்து வந்தது.

அவன் மனதில் பலவாறு சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தன. தன்னை நம்பித் தாயும் தங்கையும்! நமக்கு எப்போதுதான் வேலை கிடைக்கப் போகிறதோ? கஷ்டங்கள் என்றுதான் தீரப்போகிறதோ?

சுபைதா முழு மவுனத்தையும் பாய் நெசவில் செலுத்திக் கொண்டிருந்தாள்.

பீவிபாத்துமாள் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். சில நேரங்களில் குரானின் வாசகங்களை முணுமுணுப்பதுண்டு! சில நேரங்களில் தன் தரித்திரங்களை முணுமுணுப்பதுண்டு! இது என்னவென்று புரியவில்லை!

இருள் மறைந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் படர ஆரம்பித்தது.

’சேக் உனக்கு என்னப்பா வந்தது… இப்படி படுத்த பாயிலேயே இருக்கியே.. பள்ளிக்கும் போவல’எட்டிப் பார்த்துக் கொண்டே கேட்டார் பீவி. தெருவில் ஜனங்கள் நடமாட்டம் ஏற்பட்டது. அவன் தாயார் கேட்டதற்கும் பதிலேதும் சொல்லவில்லை.

சுபைதா எழுந்து, முன் வாசலைப் பெருக்கி, தண்ணீர் தெளித்து விட்டுப் பாய் நெசவில் வந்து அமர்ந்தாள்.

தடக்…தடக்! ஓசை மீண்டும் அந்த வீட்டில் பரவியது.

’ஏம்மா! பாயில போயி திரும்பவும் இருக்க… அந்த பாத்திரங்களை அள்ளிப் போட்டு கழுவு., குழாயில் தண்ணீ வருதான்னு பாத்து இரண்டு குடம் புடிச்சு வையி… நீயும் அவன மாதிரி உம்முனு இருக்காத… பொட்டப்புள்ள ஓடி சாடி வேலை பார்த்தாதான் ஒருத்தரு ஊட்டுல போயி காலந்தள்ள முடியும்!” கொஞ்சம் உரத்தே கூறினாள் பீவி.

பதிலுக்கு ஒன்றுமே சொல்லவில்லை சுபைதா பாய் நெய்வதிலேயே கவனமாக இருந்தாள்.

மீண்டும் பீவியே, ’இந்த எழவு பாயி எவ்வளவு நேரம் நெய்தாலும் தொலையவே மாட்டுக்கு, இப்ப வந்து நிப்பான் பாய்

வியாபாரி தங்கமீறான்… இன்னும் அவனுக்கு நாப்பது ரூபா கொடுக்கணும்… தினம் தின்னு தொலைக்க வேண்டியது இருக்கே… திரும்ப திரும்ப அவன் கிட்டதான் கேட்கணும்! கோரை விலை கூடியிருச்சு, நூலு – சாயம் எல்லாம் கூடியிருக்கு! கூலி மட்டும் கூடல.. அதுக்கு என்ன பேதி எடுக்கோ … தெரியலை! குறுக்கு மொடிய நெஞ்சாதான் முக்கா ரூபா கொடுக்கான். அவன் மாடிக்கு மேல் மாடி கட்டிட்டான். நாம் இருக்குறதையும் வித்து தின்னுட்டு அலையுதோம். எல்லாம் நான் செஞ்ச பாவம்… என் வீட்டையே சுத்தி சுத்தி வருது!’ – புலம்பியவாறு அச்சினை ஓங்கி தடக்… தடக்…. என்று அறைந்து கோபத்தைத் தணித்துக் கொண்டாள்.

அம்மாவுக்குப் புலம்பல் ஆரம்பித்து விட்டால் அவனும் சரி அவளும் சரி ஒன்றுமே பதில் பேச மாட்டார்கள் அதற்குக் காரணம் தாய் மேல் வைத்து இருக்கும் மரியாதைதான்!

பெரிய மாமா ஒரு தடவை சொன்னார்! இவர்களுடைய தந்தை இறந்தபோது, அம்மாவுக்கு வயது இருபத்தி மூன்றுதானாம்! இந்தச் சின்ன வயதிலேயே தாலி அறுத்திருந்த சகோதரிக்கு, வேறு கல்யாணம் முடிக்க ஏற்பாடு செய்தாராம். அம்மா எனக்கு எதுக்கு கல்யாணம்! என் கழுத்து புருஷன் போயிட்டாரு… ஆனால்? என் வயித்து புருஷன் இருக்காரு! இதுகள வளத்து ஆளாக்குனா போதும்! அப்படின்னு உறுதியாக சொல்லிட்டாங்களாம்.

தாய் மனதை நோக வைப்பதே ’பாவமான செயல்’என்று இருவரும் எண்ணினார்கள்.

சுபைதா குடத்தை எடுத்துக்கொண்டு தெருவிலுள்ள குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்றாள்.

‘சேக்கு அந்த நடையில் ஐம்பது பைசா இருக்கு எடுத்துட்டு போயி கருப்பட்டியும் தூளும் வாங்கிட்டு வா, சாயா போட்டு தாரேன்’ – மகனின் காதில் விழும்படியாகக் கூறினாள்.

சுபைதா கொண்டு வந்த தண்ணீரைப் பானையில் ஊற்றி மீண்டும் தண்ணீர் பிடிக்கச் சென்றாள்.

மகன் பேசாமலிருப்பதைப் பார்த்து, ‘ஏப்பா என்ன செய்யுது! உடம்புக்கு சரியில்லியா?’ என்று கேட்டாள்.

அதற்கும் அவன் செவி சாய்க்கவில்லை, பாயை விட்டு எழுந்து, மகன் அருகில் வந்து நெற்றியிலும், மார்பிலும் கை வைத்துப் பார்த்தாள்.

’அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா! மனசுக்குத்தான் சரியில்லை ’என்றான் சேக்.

‘ஏன்? நான் ஒண்ணும் பேசலிய சுபைதா என்னமும் பேசுனாளா!’- ஆதங்கத்தோடு கேட்டாள்.

‘இல்லம்மா, உங்கள எல்லாம் வேலை செய்ய வச்சு நான் மட்டும் சும்மா இருந்து சாப்பிடுதேன். அதான் ஒரு யோசனையா இருக்கு’

‘நீ, என்ன செய்வே… நம்ம நேரம் சரியில்லை. ஆண்டவன் எப்பதான் கண் திறந்து பாக்கப் போறானோ? இவ்வளவு சங்கடத்தையும் கொடுத்து சோதிச்சு பாக்கான்! இதுக்கு ஒரு விடிவு காலம் வராமலா போயிரும்?’

‘விடிவு காலம் வந்துதான் தீரும்! அதுக்காக சும்மா இருந்தால் முடியுமா? என்னை முஸ்தபா அவன் கூட பம்பாயிக்கு கூப்பிடுதான்… நான் போகட்டுமா.’

சற்று நேரம் பேசாமலிருந்த பீவி, “வேண்டாப்பா! தூரா தொலைக்கெல்லாம் போக வேண்டாம். இங்கேயே முயற்சி செய்து பாரு. நானும் நம்ம ஆடிட்டர் தம்பி கான்சா துரைகிட்ட சொல்லியிருக்கேன்… பார்த்து செய்றேன்னு சொன்னாரு! அவரைப் போயி பாரேன்!’’

விரக்தியாகச் சிரித்துவிட்டுப் பேசாமலிருந்தான்.

’சரி எழுந்திரு, போயி கருப்பட்டி வாங்கிட்டு வா! வெறும் வயித்துல எனக்கும் வேலை செய்ய முடியல’அமைதியாகச் சொல்லிவிட்டுப் பாய் தறியில் போய் அமர்ந்தாள்.

சுபைதா இதுவரை நடந்த பேச்சுக்களைக் கவனித்தவாறே பாத்திரங்களை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தாள்.

வேலை இல்லை. வெளியூர்களுக்கும் போக வேண்டாம்! என்ன செய்யலாம். மனம் குழம்பிக் கொண்டிருந்தான்.

பாயை முடித்து, முக்காலியை ஓரமாக வைத்துப் பின் நூல்களை அறுத்துப் பாயைத் தறியை விட்டுத் தனியாக எடுக்கலானாள் பீவி. கழுவிய பாத்திரங்களை வீட்டினுள் அடுக்கிவிட்டு முக்கால் நெசவிலிருந்த பாயில் போய் இருந்து பின்ன ஆரம்பித்தாள். நடையிலிருந்து ஐம்பது பைசாவை எடுத்துக் கொண்டு தெருவில் இறங்கி நடக்கலானாள் பீவி.

‘ஏண்ண வெளியூருக்கெல்லாம் போறீங்களா! வேண்டாம்! இங்கேயே ஏதாவது ஒரு சோலி பாருங்க. வேலையா கிடைக்காட்டாலும் நமக்கு ஏத்தமாதிரி சின்னதா பாருங்க! ஏதோ கூழோ. மோரோ குடிச்சாலும் சேர்ந்தே குடிப்போம்’ – சோக இழை ஓடிய அந்தக் குரலில் பாச உணர்வைக் குழைத்து வைத்தாள் சுபைதா.

அவன் எதுவும் சொல்லவில்லை!

வீதியில் பள்ளிக்கூடம் செல்ல மறுக்கும் ஒரு குழந்தையின் அழுகுரலும், அதோடு சேர்ந்து ஒரு தாயின் பேச்சுக் குரலும் கேட்டது. ‘பள்ளிக்கூடம் போகணும்னா இவனுக்கு கொல்லையில் எடுக்கு! அப்பன மாதிரி ஊரை சுத்திக்கிட்டு இருக்கலாம்னு பார்க்கான்! இவனாவது நாலு எழுத்து படிப்பான்… கவர்மெண்டு வேலைக்கு போவான்னு பாத்தா, இப்பமே இந்த வயசுலேயே இவ்வளவு கள்ளத்தனம்! காலையிலேயே இந்த கயாத்தருவானை சேவிச்சு பள்ளிக்கூடம் அனுப்புறதுக்குள்ளே போதும். போதும்னு ஆயிருது’- அழுகின்ற குழந்தையின் முதுகில் அடிவிழும் சப்தம் கேட்டது. குழந்தை வீறிட்டு அழுதான்.

இவன் லேசாகச் சிரித்துக் கொண்டான். தனக்குத் தானே ஏதோ முணுமுணுத்துக் கொண்டான்.

கடைக்குப் போயிருந்த பீவி கருப்பட்டியோடு திரும்பி வந்தாள். இன்னும் சேக் எழுந்திருக்காமல் இருப்பதைப் பார்த்து, ‘எழுந்திருச்சி மூஞ்சை கழுவப்பா. சாயா போட்டு தாரேன்! குடிச்சுட்டு போயி குளிச்சுட்டு வா!’

பானையில் தண்ணீர் ஊற்றி அதில் கொண்டு வந்த கருப்பட்டியைப் போட்டு அடுப்பில் வைத்தாள். மண்எண்ணெய் பாட்டில் காலியாக இருப்பதைப் பார்த்து அங்கு கிடந்த பழைய துணியை நார் போலக் கிழித்து அடுப்பில் போட்டுப் பற்ற வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள் பீவி.

பஞ்சாயத்து போர்டு சங்கு ஒலித்தது. ‘மணி ஆறாயிடுச்சு! எந்திரிங்கண்ணா! எவ்வளவு நேரம்தான் இப்படியே இருக்கப் போறீங்க! இருந்தா மட்டும் வேலை கிடைச்சுரும்மா?’ – சுபைதா – ‘ஆமாப்பா! இப்படியே விரக்தி புடிச்ச மாதிரி இருந்தா. உங்க அத்தா மெளத்து வூட்டுல நானுந்தான் என்ன செய்யப் போறோம்னு தெரியாம. கண்ணை கட்டி காட்டுல உட்ட மாதிரி முழிச்சுகிட்டு இருந்தேன். வாழ்க்கையை சமாளிக்க பழகணும்! நிர்க்கதியா நிக்கிற நாமெல்லாம் எதிர்த்து போராடணும்’ – பீவியின் அனுபவம் பேசியது.

இந்த யதார்த்தமான வார்த்தைகளில் அவன் சிந்தனையை உரைப்பதுபோல் சில வார்த்தைகள் இருந்தாலும், எதிர்த்துப் போராடணுமானா அது யாரை என்று புரியவில்லை.

பக்கத்து வீட்டு மாடு ஒன்று திண்ணையில் ஏறிய ஓசை கேட்டது. எட்டிப் பார்த்த பீவி, ’சுபைதா மாடு வருது… கோரையை தின்னுறும் பத்து பாயை விட்டு எழுந்து மாட்டை விரட்டி விட்டுத் தறியில் வந்தமர்ந்தாள்.

’ஏன் இன்னும் பாய முடிக்கலியா ! சீக்கிரம் முடிச்சுட்டு உலைய வையி!

நான் பாய கொண்டு கொடுத்துட்டு ரூபா வாங்கி வாரேன்! அரிசிக்காரிக்கும் ரூபா கொடுக்கணும்… அவ நேத்தே அரிசி தரமாட்டேன்னு சொன்னா… இன்னைக்கு என்ன சொல்லுதாளோ!’சந்தேகத்தோடு பேசினாள் பீவி.

சாயாவை ஊற்றி மகனுக்கு ஒரு டம்ளரிலும், மக்களிடம் ஒரு சின்ன சொக்கிலும் கொண்டு வைத்தாள். மீதி இருந்த சாயாவைப் போணியில் ஊற்றிக் குடிக்க ஆரம்பித்தாள். தொட்டுப்பார்த்து நல்லா சூடா இருக்கு’என்றவாறு, தாவணியின் முகப்பை வைத்துப் பிடித்தவாறு ஊதி ஊதிக் குடிக்க ஆரம்பித்தாள் சுபைதா.

சேக் அருகில் வைத்த சாயா அப்படியே இருந்தது. மனதில் இப்படியே இருந்தால் மட்டும் வேலை கிடைத்திடுமா! அதுவுமில்லாமல் இன்றைக்கு ஒரு நாளிலேயே தீர்ந்து விடுகின்ற பிரச்சினையா இது எனக்குழம்பிக் கொண்டிருந்தான். அம்மா சொன்ன மாதிரி வாழ்க்கையைச் சமாளிக்கணும்… எதிர்த்து போராடணும்னு சொன்னாங்க.. யாரை எதிர்க்கிறது?

சுபைதா பாயை முடித்துத் தனியாகத் தறியை விட்டுப் பிரித்தெடுத்தாள். சாயா குடித்த போணியையும், மகள் குடித்துவிட்டு வைத்த சொக்கையும் எடுத்துக் கழுவி வைத்தாள். சேக் இன்னும் குடிக்காமல் இருப்பதைப் பார்த்து, ’சாயா குடிச்சுட்டு வா… ஆறிப்போயிடும் சற்று எரிச்சலுடன் சொன்னாள் பீவி.

பின் பாய்களை எடுத்துக் கொண்டு வியாபாரி வீட்டுக்குச் செல்ல முற்பட்டாள் பீவி. சாயா போட்ட அடுப்பில் பானையில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு வாரியலை எடுத்து அந்த அறையைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள் சுபைதா.

அவன் தாயைப் பார்த்தான் ‘யாரையம்மா எதிர்த்து போராடணும்னு சொன்னீங்க கேட்கலாம்’ என்று நினைத்தான். கேட்டாலும் அவர்களுக்கு என்ன தெரிந்து விடவா போகிறது? தெரிந்ததெல்லாம் புலம்புவதும் ஆண்டவனிடம் ’துவா’கேட்பதும்தான்! எண்ண அலைகள் அவனைச் சுற்றியே வட்டமிட்டன.

அறையிலிருந்த ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்தான்! வானம் சூரியன் வருவதற்கான அறிகுறிகளோடு நன்கு சிவந்து காணப்பட்டது.

– சலாம் இஸ்லாம், சமீபத்திய இசுலாமியச் சிறுகதைகள், திரட்டு: களந்தை பீர்முகம்மது, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 2002

– மின்னூல் வெளியீட்டாளர: http://freetamilebooks.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *