அவசரப் புத்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 11, 2012
பார்வையிட்டோர்: 9,999 
 
 

நரசிம்மன் சொன்ன அந்த தகவல் திவாகரனை லேசாக அதிரச் செய்தாலும், அதை வெளிக் காட்டி கொள்ளாமல் வெகு இயல்பாக பேசி விட்டுக் கிளம்பினான்.

பஸ்சில் வரும் போது கூட நரசிம்மன் பேசிய வார்த்தைகளே திரும்ப திரும்ப ஞாபகத்தில் வந்து போயின. “ஹல்லோ மிஸ்டர் திவாகரன்…எப்படி இருக்கீங்க?…ம்…உங்களுக்கென்ன?…மனைவி பெரிய கம்பெனில மேனேஜர் ஆயிட்டாங்க!…பதினஞ்சாயிரம் சம்பளம் வரும்!…நாங்களும் அந்தக் கம்பெனிலதான் வேலை பார்க்கறோம்…என்ன பிரயொஜனம்?…நானூறு ரூபா இன்கிரிமெண்ட் வாங்கறதுக்குள்ள நாக்குத் தள்ளிடுது…உங்க மனைவிக்கு..ஒரே ஹைக்குலே ஏழாயிரத்துக்கும் மேல இன்கிரீஸ்…ஹும் நீங்க பெரிய அதிர்ஷ்டசாலி சார்!…பின்னெ..சும்மாவா சொன்னாங்க..மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு!”

“என்னது…சுமதி மேனேஜராயிட்டாளா?…சம்பளம் பதினைஞ்சாயிரமா?…என்கிட்ட சொல்லவேயில்லையே அவள்!” வாய் வரை வந்து விட்ட வார்த்தைகளை தொண்டைக் குழியிலேயே அழுத்திப் புதைத்து விட்டு, சிறிது நேரம் வேறு எதேதோ விஷயங்களை பேசி விட்டு, இறுதியாக கிளம்பும் போது நாசூக்காக கேட்டுத் தெரிந்து கொண்டான், சுமதி மேனேஜராகி ஆறு மாதங்களாகி விட்டதென்று.

“சம்பளம் பதினைந்தாயிரம்னு இந்த நரசிம்மன் சொல்றான் ஆனா ஆறு மாசமா சுமதி என்கிட்டே வெறும் எட்டாயிரம் மட்டும்தானே கொடுக்கறா..மீதி ஏழாயிரம் என்னாச்சு?…எங்க போச்சு?” மண்டைக்குள் சிந்தனைச் சிலந்தி தாறுமாறாக எண்ணக்கூடு கட்ட, குழப்பமானான்.

அந்தக் குழப்பம் சிறிது நேரத்தில் சந்தேகமாக நிறம் மாற, “ஒரு வேளை..அவ அம்மா வீட்டுக்கு அனுப்பிடறாளா?…இல்லை ஏதாவது கள்ளக் காதல்…கீதல்…! சேச்சே!…சுமதி அப்படிப் பட்டவளல்ல!” மனதில் ஆழத்திலிருந்து ஒரு குரல் சுமதிக்கு ஆதரவாக பேசியது.

“அப்படின்னா…புரமொஷன் கிடைச்சதையும்….சம்பளம் உயர்ந்ததையும் ஆறு மாசமா ஏன் மறைக்கணும்?..” மனதின் வேறொரு மூலையிலிருந்து இன்னொரு குரல் சுமதிக்கு எதிராக கூவியது.

“அய்யோ என்னை இப்படி குழப்பத்தில் ஆழ்த்திட்டாளே…ஒவ்வொரு மாசமும்…சம்பள தினத்தன்னிக்கு ரெண்டு பேரும் ஒண்ணா உக்காந்து அவ சம்பளத்தையும் என் சம்பளத்தையும் ஒண்ணா சேர்த்து கூட்டி அந்த மாசத்துக்கான் செலவு பட்ஜெட் போட்டு, அதன்படி செலவு பண்ணிட்டு, வெளிப்படையாத்தானே இருந்திருக்கோம் இத்தனை நாளா?…இப்ப மட்டும் ஏன் சுமதிக்கு புத்தி இப்படிப் போச்சு?”

வழி முழுவதும் யோசனை செய்தபடியே வீட்டையடைந்த திவாகரனை வரவேற்றது கதவில் தொங்கிய பூட்டு. “மணி ஏழாகப் போவுது..இன்னுமா இவ வரலை ஆபீஸிலிருந்து?”

தன்னிடமிருந்த மாற்றுச்சாவி கொண்டு வீட்டைத் திறந்து உள்ளெ சென்ற திவாகரன் ஹால் ஷோபாவில் சாய்ந்தமர்ந்து கண்களை மூடிக் கொண்டான்.

“என்னங்க…என்னாச்சு…தலை வலியா?” கேட்டபடியே சுமதி அவள் நெற்றியைத் தொட, கண் விழித்தவன் அவளையே ஊடுருவிப் பார்த்து விட்டு, சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தான். அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட சுமதி, “ஏன் லேட்டுன்னு கேட்க வ்ர்றீங்க?..அதானே?…இருங்க…இருங்க சொல்றேன்…அதுக்கு முந்தி ஒரு கப் காபி போட்டுக் கொண்டாரேன்” என்றபடி சமையலறையை நோக்கி நடந்தாள்.

சுமதி கொண்டு வந்து நீட்டிய காபியை கையால் வாங்காமல் டீப்பாயின் மேல் வைக்கச் சொல்லி ஜாடை காட்டினான். அவன் முக பாவத்தை கொண்டே அவன் ஏதோ கோபத்திலிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட சுமதி. “மகாராஜா ஏதோ கோபத்திலிருக்கிறார் போல் தெரிகிறதே!..என்ன காரணமோ?…யார் மேல் கோபமோ?…இந்த அபலையிடம் சொல்லலாமே!” அவனை சமாதானப் படுத்தும் விதமாய் தமாஷ் பேசினாள்.

“அபலையா?…யார் நீயா…?” வாய் விட்டு சிரித்து விட்டு “நானும் அப்படித்தான் இத்தனை நாளும் நினைச்சிட்டு இருந்தேன்”

“என்னங்க…என்னாச்சு உங்களுக்கு?..ஏன் ஒரு மாதிரியாப் பேசறிங்க?”

ஒரு நிமிடம் அவளையே கூர்ந்து பார்த்தவன், “நீ..மேனேஜராயிட்டியாமே!..சம்பளம் கூட பதினஞ்சாயிரமாமே!…கேள்விப் பட்டேன்”

“அது வந்து…ஆமாங்க!..நானே உங்க கிட்டே சொல்லலாம்னு இருந்தேன்…அதுக்குள்ளார நீங்களே கேட்டுட்டீங்க!” சமாளித்தாள்.

“என்னது…என்கிட்ட சொல்லலாம்னு இருந்தியா?…ஓ…ஆறு மாசமா அதுக்கு நேரமே கிடைக்கலை அப்படித்தானே?”

முழு உண்மையும் அவனுக்குத் தெரிந்து விட்டதென்பதைப் புரிந்து கொண்ட சுமதி, “ஆமாங்க..நீங்க கேள்விப்பட்டதெல்லாம்…உண்மைதான்…எனக்கு மேனேஜராப் புரமோஷனும்…கூட இன்கிரிமெண்ட்டும் கிடைச்சு..ஆறு மாசமாச்சு…அனாலும் அந்த விஷயத்தை உங்க கிட்ட சொல்லாம மறைச்சேன்”

“பரவாயில்லை…நல்லாவே சமாளிக்கறே”

சடாரென்று தலையைத் தூக்கி அவனுக்கு பதில் சொல்ல முனைந்தவளைக் கையமர்த்திய திவாகரன், “ஆறு மாசமா பதினஞ்சாயிரம் சம்பளம் வாங்கிட்டு என்கிட்டே வெறும் எட்டாயிரத்தை மட்டும் குடுத்துட்டு மீதி ஏழாயிரத்தை எங்க…எவனுக்கு அனுப்பிச்சே?..இப்ப இந்த நிமிஷம் எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்!” தாவி வந்து அவள் தோள்களைப் பற்றி உலுக்கியவனை நாசூக்காக விலக்கிய சுமதி, கண்களைத் துடைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.

“ஆறு மாசத்துக்கு முன்பு கிடைச்ச புரமொஷனும்…சம்பள உயர்வும் என்னைப் பொருத்தவரையில் ஒரு மகிழ்ச்சியான விஷயமே அல்ல!…உண்மையில் அதைக் கேட்டதும் எனக்கு முதல்ல சந்தொஷத்துக்கு பதிலா அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஏன்னா…என்னொட சம்பளம் ஒன்பதாயிரமாகவும் உங்களோட சம்பளம் பனிரெண்டாயிரமாகவும் இருந்தாத்தான் இந்த குடும்பம் ஒரு இனிமையான குடும்பமாக இருக்கும்!…என்னொட சம்பளம் உங்களொடதை விட அதிகம்னு ஆயிட்டா…என்னதான் நீங்க பக்குவப்பட்ட ஆணாயிருந்தாலும் நிச்சயம் ஒரு கட்டத்துல உங்க மனசுல சின்ன வருத்தம் வரும்….முடியாதுங்க…என்னால நீங்க சின்ன வருத்தப்படறதைக் கூட தாங்க முடியாதுங்க!…”

திவாகர் அவளை விழியிமைக்காமல் பார்த்தபடியே நிற்க.

“அது மட்டுமில்லைங்க…உங்களுக்குள்ளார ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து…அது உங்க உடல் நிலையைப் பாதிச்சிடுமோன்னு நான் ரொம்ப பயந்துட்டேங்க!…அந்த அக்கறைலதான் நான் உங்க கிட்ட எல்லாத்தையும் மறைச்சேன்!”

சொல்லிக் கொண்டேயிருந்தவள் திடீரென்று உள் அறையை நோக்கி நடந்தாள். அடுத்த நிமிடமே திரும்பி வந்தவள் கையில் தபால் ஆபீஸ் சேமிப்புக் கணக்கு புத்தகம்.

“கேட்டீங்கல்ல?…அந்த ஏழாயிரம் ரூபா மாசமாசம் எங்க போச்சுன்னு?…இந்தாங்க உங்க பேர்ல தபால் ஆபீஸ்ல பத்திரமா இருக்கு”

அவள் நீட்டிய அந்த பாஸ் புத்தகங்களை வாங்கிப் பார்த்த திவாகரன் நெகிழ்ந்து போனான். “ச்சே!..என்னோட மனசு நோகக் கூடாதுன்னு தன்னோட சந்தோஷத்தைக் கூட மூடி வெச்சுக்கிட்டு ஆறு மாசமா அமைதியா நடமாடிய இந்தப் பொன்னான மனசை புண்ணாக்கிட்டேனே! எனக்கு ஏன் இப்படியொரு அவசரப் புத்தி”

“போதுமா…சந்தேகம் தீர்ந்ததா?…அடுத்தது இன்னிக்கு லேட்டா வந்ததுக்கான காரணத்தையும் சொல்லிடறேன் கேட்டுக்கங்க!…வர்ற வழில லேடி டாக்டர்கிட்ட போய்ட்டுத்தான் வந்தேன்…உறுதிப் படுத்திட்டாங்க…நான் உண்டாயிருக்கேன்!”

“அய்யோ ஸாரி சுமதி…என்னை மன்னிச்சிடு…இந்த நேரத்துல உன்னைய…”

தன் கைகளைப் பற்றிக் கொண்டு கெஞ்சலாய்க் கேட்ட கணவனின் மார்பில் அழுகையுடன் புதைந்தாள்.

அவன் மார்பில் பட்டுத் தெறித்த கண்ணீர்த்துளிகள் அவன் மனதில் இருந்த சந்தேகக் கறையை சுத்தமாக அழித்து விட்டுத்தான் காய்ந்தன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *