அழைப்பு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 2, 2022
பார்வையிட்டோர்: 2,298 
 
 

(1988 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“இந்திய அமைதிப்படை எல்லா ரையும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்குப் போகட்டாம், கெதியாய் வெளிக்கிடுங்கோ”

கதிரைவேற்பிள்ளை இந்தச் செய்தியைச் சொன்ன போது அவருடைய முகம் சாவெடிலடித்தது போல் காட்சி அளித்தது. அவரது உடல் அவரை அறியாமலே கிடுகிடு வென்று நடுங்கியது. கண்களிலே அளவிடமுடியாத பீதி! “எங்கையிருந்தாலும் நடப்பது நடந்துதான் தீரும். அண்டைக்கு எழுதின விதியை அழிச்செழுத ஏலுமே? என்ன வந்தாலும் ஒண்டாய் அனுபவிப்பம்” என்று காலை யிலே சொல்லிவிட்டு வெளியே சென்ற கதிரைவேற் பிள்ளை வேறு, இப்பொழுது இப்படிச் சொல்லும் கதிரை வேற்ப்பிள்ளை வேறு.

அவர் சொன்னதை நிரூபிப்ப்து போல வானத்தை மூடிக்கொண்டு ஹெலிகளும் விமானங்களும் பெரிய இரைச்சலோடு பறந்து கொண்டிருந்தன. இருந்திருந்து ‘ஷெல்’களின் இடிமுழக்கம் காதுகளைச் செவிடுபடுத்தியது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஆயுட்காலம் நிமிஷங்களாகக் குறுகிக் கொண்டிருக்கிறதோ?

“அப்பவே சொன்னன், அயல் அட்டையிலை இருந்ததுகளெல்லாம் போட்டது போட்டபடி ஓடிப் போகேக்கை வீராதி வீரன் போலை வீறாப்புப் பேசினாய். இப்ப…!” என்று பிள்ளையின் தாய் தனது தீர்க்க தரிசனத் தைப் பிரகடனப்படுத்திய பொழுது, அவளின் அசந்தர்ப்பப் பேச்சு, பிள்ளையின் நெஞ்சை நெருடியது. அவருக்கு எரிச்சல் எல்லை கடந்தது. “அம்மா! சும்மா விழல்கதை கதையாமல் கெதியாய் வெளிக்கிடுங்கோ” பிள்ளையின் அதட்டலான பேச்சு அம்மாவை மட்டுமல்ல, அவரின் மனைவியையும் குமர்ப்பிள்ளைகள் மூவரையும் பரபரப் படையச் செய்தது.

மத்தியான நேரம், சமையல் எல்லாம் அரைகுறை, அடுப்பில் சோறு வெந்து ‘ களகள்’ ஒலியை எழுப்பியது, இரண்டு கறிகளும் குழம்பும் ஏற்கெனவே தயாராகிவிட்டன. ஆனால் பிள்ளையின் அவசரமும் பதற்றமும் அவரது குடும்ப அங்கத்தவரையும் தொற்றிக் கொள்ள, அவர்கள் கைக்குக் கிடைத்த உடுப்புக்களைப் பெட்டிகளில் திணிப்ப தும் கதவுகளைப் பூட்டிச் சாவிகளை எடுப்பதுமாய் எவ்வளவு விரைவாக ஆயத்தமாக முடியுமோ அவ்வளவு விரைவாக ஆயத்தமாயினர். மனைவி நகைநட்டுக்களையும் பெட்டியுள்ளே மறைத்து வைத்திருந்த பணப்பையை யும் எடுத்து மார்புச் சட்டைக்குள்ளே செருகிக்கொண்டு ஆயத்தமாகிவிட்டாள்.

எல்லோருக்கும் முன்னால் தனது ஓரிருசேலை களைப் பொட்டளியாகக் கட்டிக்கொண்டு பிள்ளையின் அம்மா ‘றெடி’யாகி வாசல் கேட்டை அடைந்துவிட்டாள்.

அப்பொழுதான் கதிரைவேற்பிள்ளை கேட்டார் “அப்புவை என்ன செய்யிறது?” மற்றவர்கள் பதிலளிக்க முன்னமே அப்பு தமது கொட்டிலில் இருந்தபடி பதில் கொடுத்தார். “என்னைப் பற்றி யோசிக்க வேண்டாம். நீங்கள் தப்பி ஒட்டித் திரும்பி வந்தால் போதும். போயிட்டு வாங்கோ”

அந்த வார்த்தைகள் புறப்பட்டவர்களுக்குப் பெரும் ஆறுதலை அளித்தன. அப்புவுக்கு வயது எண்பதைக் கடந்துவிட்டது. நடையிலும் சொல்லிலும் தளர்ச்சி ஏற்பட்டு நாளின் பெரும் பகுதியைப் படுக்கையிலேயே கழித்துக் கொண்டிருப்பவர். ஆனாலும் மகா பிடிவாதக்காரர்! தாம் நினைத்ததையே செய்வார். அவரோடு விவாதம் செய்யவோ, அழைத்துச் செல்லவேர் அவர்களுக்கு இயலாது என்பது மட்டுமல்ல, அதற்கு வேண்டிய நேர அவகாசமும் இல்லை.

பிள்ளையின் தாய் அப்புவோடு ஐம்பது வருடங்கள் இல்வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டவள் மட்டும் சிறிது தயங்கி, அப்பு இருந்த கொட்டிலுக்குள் நுழைந்தாள்.

“பிள்ளையள் போகட்டும். நானும் நீங்களும் மெல்ல மெல்ல நடந்து அவைக்குப் பின்னாலை போவம், வாறியளோ”?

அப்பு சிரித்தார் “நீ போ, பிள்ளையளுக்கு உதவி யாயும் ஆறுதலாயும் இருக்கும். நான் வந்தால் எல்லாரு க்கும் அவஸ்தைதான். வீட்டைப் பாக்கிறத்துக்கும் ஒரு ஆள் தேவைதானே? எல்லாரும் போயிட்டு வாருங்கோ. தப்பிப் பிழைச்சால் உங்களின்ரை முகத்திலை முழிக் கலாந்தானே?” அம்மாவுக்கு விம்மல் பொருமலுடன் அழுகை வந்தது. ஆனால் கணவர் சொல்வதும் நியாயமாகவேபட்டது.

மகன், மருமகள், பேரப்பிள்ளைகளுடன் ஒழுங்கையில் இறங்கி அவள் கிடுகிடுவென்று நடக்கத் தொடங் கினாள்.

அப்பு பெரிய கமக்காரன். அவர் அப்புவாகவே அவதாரம் எடுக்கவில்லை. கந்தப்பசேகரம் என்ற பெயரோடு பிறந்து, எல்லாரையும் போலவே வளர்த்து, இளமைத் திருவிளையாடல்கள் பலவற்றில் ஈடுபட்டு, ‘சண்டியன் கந்தன்’ என்ற பட்டப் பெயரைத் தமக்கு உரித்தாக்கி, ஊரே நடுநடுங்க வாழ்ந்து, பொன்னம்மாவை மனைவி – யாக்கி, காலகதியில் அவளை ஐந்து பிள்ளைகளுக்குத் தாயாக்கி, அந்தப் பிள்ளைகளையெல்லாம் வளர்த்தெடுத்து, உரியகாலத்தில் அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமை களையெல்லாம் செய்து முடிக்க அவர் தவறவில்லை.

ஆனால் அவர் கடவுளைப் போலக் காலாதீகர் (காலங்கடந்தவர்) அல்லர். சண்டித்தனங்களெல்லாம் அவரது நாற்பது வயதிலேயே அவரைவிட்டுக் குடிபோய் விட்டன. மாட்டுவண்டிச் சவாரியும், கள்ளுக்கொட்டில் வாசமும், திருவிழா உபயங்களும், ஊர்நாட்டாண்மையும் முன்பே கைதவறிப் போய்விட்டன.

பற்று நிறைந்த கணவர், பொறுப்புள்ள தந்தை, பாசமுள்ள பேரர் என்ற தரங்களையெல்லாம் கட்டிக் காத்து இன்று அவற்றையும் கடந்து, நரைதிரை மூப்புக் களோடு ‘என்று வருவன் எமனென்று எதிர்நோக்கி நின்று தளர்கின்ற’ கிழவராக, பழசாக, C90 ஆக அவர் ஆகிவிட்டார்.

அவர் யாருக்கும் துணையல்லர். அவருக்கும் அவரது பொல்லைத் தவிர-மனைவி உட்பட எவரும் துணையல்லர்!

அப்புவின் வாய் முணுமுணுக்கிறது.

“ஊருஞ் சதமல்ல, உற்றார் சத்தமல்ல, உற்றுப் பெற்ற பேரும் சதமல்ல, பெண்டிர் சதமல்ல”

ஒரு காலத்தில் அவர் ஆடாத வழக்குகள் இல்லை . தமது காணி எல்லையைக் கடந்து வேலி போட்டதற்காக, அடுத்தவீட்டு அப்புத்துரையின் தலையை அவரின் மண்வெட்டி பதம் பார்த்தது. அதன் காரணமாக ஐந்து வருடக் கடூழியச் சிறைவாசம் அனுபவித்த மகாவீரர் அவர்! கதிரைவேற்பிள்ளைக்குத் தருவதாகச் சொன்ன சீதனப்பணத்தில் ஆயிரம் ரூபா குறைகிறது என்று கலியாணத்தையே குழப்பி, அடுத்த முகூர்த்தத்திலேயே மேலும் அதிக சீனத்தோடு மகனுக்குக் கலியாணம் செய்துவைத்த விடாக்கண்டர்! அன்றைக்கு, ‘இட்ட அடிநோவ எடுத்த அடி கொப்பளிக்க’ வீட்டினுள் அடியெ டுத்து வைத்த கதிரைவேற்பிள்ளையின் மனையாட்டிதான். இன்று அடிக்கடி ‘ஷெல்’லடி போலச் சொல்லடிகளால் அவரை வருத்திக் கொண்டிருக்கிறாள்!

மனைவி பொன்னம்மா மட்டும் என்ன குறைச்சல்? “வாக்குமாறி வயசுபோன காலத்திலை தாறதைத் திண்டிட்டு மூலையிலை ‘சிவனே எண்டுகிடக்காமல் எந்நேரமும் புறணியளப்பு. இது ஏன் இன்னம் கவிண்டு போகாமல் கிடந்து இளசுகளின்ரை உயிரை எடுக்குது? சனியன்!” – பொன்னம்மாவின் மந்திரம் போன்ற சொல்லின் பத்தின் அமுதத்துளிகளில் இவை சில!

கதிரைவேற்பிள்ளை தகப்பனுடன் கதைப்பதே இல்லை. பேர்த்திகளுக்கு அப்பு என்றால் பெரிய இளக்காரம்!

இந்நிலையில் ஒருசில நாள்களாவது அவர்களிட மிருந்து விடுதலை பெற்று, அவர்களுக்குத் தாமும் விடுதலையளித்து நிம்மதியாக இருக்கக் கிடைத்ததை யிட்டு அவர் அடைந்த மனநிறைவுக்கு அளவேயில்லை.

‘ஹெலியும், விமானங்களும், ‘ஷெல்’சத்தங்களும், கண்ணிவெடி ஓசைகளும் அவரின் மன அமைதியைக் குலைக்கச் சத்தியற்றுப் போயின.

“நல்லூர்க் கந்தசுவாமி கோயில் கோயில் போலவே இருக்கு? வெளிவீதியெல்லாம் பொதுமலகூடங்களாய்ப் போச்சு. ஆண், பெண் கூச்சமெல்லாம் காத்திலை பறந் திட்டுது. கோயிலுக்கை சட்டையளும் செருப்புக்களும் தாராளமாக நடமாடுது. நண்டுக்கறிச் சோற்றையும் முட்டைப் பொரியலையும் சனங்கள் கோயிலுக்குள்ளையே வைச்சுச் சாப்பிடுதுகள், வாந்தி, பேதி உபத்திராவம் வேறை. அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கும் அங்கை தட்டுப்பாடு! விசுக்கோத்துக்கூட ஆனைவிலை குதிரை விலை! அது ஒரு நரகம். அங்கை ஆர் போறது? எப்படிக் காலம் தள்ளுறது? சும்மா கிடவுங்கோ . நடக்கிறது நடக்கட்டும்” என்று வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டி ருந்த அவரின் மகனும் ஓய்வு பெற்ற அதிபருமான கதிரை வேற்பிள்ளை அவர்களே இன்று தமது குடும்பத்தோடு அங்கே போகிறார். அகதிகளின் கூட்டத்தில் ஆறுபேரின் தொகை அதிகரிப்பு!

கந்தப்பசேகரம் என்ற கந்தப்பர் அல்லது கந்தர்(ன்) மனம், என்றும் இல்லாத வகையில் தெளிவாகச் சிந்திக்கத் தொடங்கி இருந்தது. “நான் யார், என் உள்ளம் யார், ஞானங்கள் யார்” என்ற கேள்விகள் அவர் சிந்தையில் அலையலையாக எழுந்தன. குசினி ஈறாகப் பூட்டிவிட்டுத் தங்கள் உயிரைக் காப்பது ஒன்றே குறியாகச் சென்ற மனைவி, மகன், மருமகள், பேர்த்திகள் “அப்பு சாப்பாட்டுக்கு என்ன செய்வாரோ? என்று யோசிக்கவில்லையே” என்று தொடக்கத்தில் அவர் மறுகியது உண்மைதான். ஆனால் அன்று பின்னேரம் பக்கத்துவீட்டு அப்புத்துரை அவரைத் தேடி வந்து ஒரு கலயத்திலே கஞ்சியைக் கொடுத்ததோடு அந்த மறுகலுக்கும் அவர் பிரியாவிடை அளித்துவிட்டார். அப்பத்துரை வேறு யாரும் அல்லர்! ‘சண்டியன் கந்தனாய்க்’ கந்தப்பர் இருந்த காலத்தில் அவரது மண்வெட்டிக்குத் தலையைக் குனிந்து கொடுத்துத் தலையோடு வந்ததை மயிரிழையில் தடுத்து உயிர் பிழைத்தவர்!

அவருடைய வீட்டிலும் எல்லாரும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்குச் சென்றுவிட, அவர்மட்டும் வீட்டுக்குக் காவற் பிராணியாக மாறிக் கந்தப்பர் போல இருந்து வருபவர்தாம்!

கந்தப்பர் கஞ்சியைக் குடித்தபடி தம் வீட்டாரின் நன்றி கெட்ட செயலை ஒருபாட்டம் கொட்டித் தீர்த்தார். ஆனால் அப்புத்துரையோ சற்றும் அசையவில்லை. “இங்கை பார் கந்தர் ! எங்கடை காலம் இன்னும் ஒருமாத மோ, ஒருவருசமோ? நாங்கள் எங்கடை காலத்திலை அநுபவிக்க வேண்டியதை எல்லாம் அனுபவிச்சுத் தீர்த் திட்டம். இனி எங்களுக்கென்ன? எங்கடை பேரைச்

சொல்லிக்கொண்டு எங்கடை பரம்பரையாவது இந்த மண்ணிலை உரிமையோடை வாழட்டும். அதுகளை நோகிறது பெரும் பாவம்” என்று அப்புத்துரை சொன்ன அந்தக் கணத்திலிருந்து…

கந்தப்பர் முற்றிலும் புதிய மனிதராகி விட்டார். அப்புத்துரை கேட்டுக்கொண்டபடி வளவுப் பொட்டுக் குள்ளால் நுழைந்து அவர் அப்புத்துரை வீட்டிலேயே சென்று இருக்கத் தொடங்கினார்.

அங்கே, அப்புத்துரையும் கந்தப்பரும் அப்புத் துரையின் பொன்னம்பலம் என்ற நாய், கொட்டிலில் கட்டப் பட்டு ‘ஷெல்’ அடிச்சத்தம் கேட்கும் ஒவ்வொரு சமயத் திலும் துள்ளி மிரண்ட நிறைமாதக் கன்றுத்தாய்ச்சியான பசு ஆகியவற்றோடு புதியதொரு வாழ்வைத் தொடங்கினர்.

இருவரும் காலையில் எழுந்திருப்பார்கள். காலைக் கடன்களை முடித்துக்கொண்டு தங்கள் துணிமணிகளைத் துவைத்து உலர்த்தி, ஸ்நானம் செய்வார்கள். பின்பு அங்குள்ள சாமிபடத்துக்கு முன்பு விளக்கேற்றித் தேவார திருவாசகங்களை உருக்கமாகப் பாடுவார்கள். அப்புத் துரைக்குப் புராணபடன அனுபவம் இருந்தது. கந்தப் பருக்கும் ஓரளவு கேள்விஞானம் உண்டு. இருவரும் கந்தபுராணத்தை உற்பத்தி காண்டத்திலிருந்து நாள் தோறும் நூறு நூறு பாடல்களாகப் படித்து உரை சொல்லி மகிழ்ந்தார்கள்; புதியதொரு பக்தி அநுபவத்தில் திளைத்தார்கள்.

அது நாள் வரை தமது இளைய பரம்பரையினர் அநுபவித்து வரும் துன்பங்களை நினைத்து நினைத்து ஏக்கப் பெருமூச்சும், மௌனக் கண்ணீரும் விட்டுத் தனிமை யிலே குமைந்து வந்து உணர்வுகள் கந்தப்பரை விடுத்து மெல்ல மெல்ல அகன்று போயின.

“சூரபன்மனிடமும் அவன் உடன் பிறப்புக்களிடமும், படைகுடி பரிவாரங்களிடமும் தேவர்கள் பட்ட அல்லல் களிலும் அதிகமாகவா நாங்களும் எங்கள் சந்ததியும் படுகிறோம்? முருகப் பெருமானின் ஞான வேலினால் தேவர்கள் துயர் களையப்பட்டது போல, அவன் அருளாலே எங்களுக்கும் விடிவுகாலம் ஏற்படாமலா போகப் போகிறது? அந்த விடிவின் பொழுது நாங்கள் இந்த உலகில் இல்லாமல் போய்விடலாம். ஆனால் எமது சந்ததியினர் நிச்சயம் அமைதியும் இன்பமும் நிறைந்த வாழ்க்கையை நடத்தாமல் போகார்கள்” என்ற மனத்திடம் கந்தப்பருக்குப் படிப்படியாக ஏற்பட்டு வந்தது.

அவருக்கு இப்பொழுது யாரிலும் வெறுப்புக் கிடையாது. ஒரு கிழமைக்கு முன்வரை பேச்சுப் பறைச்சலின்றி ஒருவரைக் கண்டால் மற்றவர் மறுபக்கமாக முகத்தைத் திருப்பிச் சென்ற அவரும் அப்புத்துரையும் இப்பொழுது உயிரொன்றிய நண்பர்களாகிவிட்டார்கள்.

“அப்புத்துரை நண்பனா? இல்லை! இவன் என் குரு. நாங்கள் இருவரும் ஒன்றாய்ப் படித்த காலத்தில்

‘மொக்கன் அப்புத்துரை’ என்று பெயரெடுத்த இவனா இப்பொழுது இத்தனை ஞானம் பேசுகிறான்?’

அப்புத்துரை ஒருநாள் சொன்னார்

“கந்தர், நான் பகவத்கீதை படிச்சிருக்கிறன். அருச்சுனன் குருசேத்திரப் போர்க்களத்திலை வீட்டுமர் முதலான தன்ரை உறவினரைக் கண்ட வேளையிலை ‘இவையோடை நான் எப்படிப் போராடுகிறது? இவையைக் கொண்டுதான் நாட்டை அடையவேண்டுமெண்டால் அந்த நாடு எனக்கு வேண்டாம். நான் காட்டிலை போய் இலைகுழையைத் திண்டு தவம் செய்யப்போறன்’ எண்டு வெளிக்கிட்டானாம். அந்த வேளையில் அவனுக்குத் தேர்ச்சாரதியாயிருந்த கிட்டிணர் என்ன சொன்னாராம் தெரியுமே? “மடையா, உன்ரை சொந்தக்காரர் எண்டு நீ நினைக்கிறதெல்லாம் உவையின்ரை உடலைத்தான். உயிரை அல்ல. உயிர் அணிஞ்சு கொள்ளுற சட்டைதான் உந்த உடலுகள். ஒரு உடல் போனால் இன்னொரு உடல். ஒரு பிறவி போனால் இன்னொருபிறவி. உன்னாலை ஒருதன்ரை உயிரை ஆன்மாவைக் கொல்ல ஏலாதடா. நீ இராசா. உன்ரை கடமை போர் செய்யிறது. உன்மூலமாய்த் தருமத்தைக் காக்கிறது என்ரை கடன். ஆனபடியால் உந்த மயக்கத்தை விட்டுவிடு. ஒரு இராசா செய்ய வேண்டிய தருமத்தை, கடமையை, போரை, நீ செய் ‘இது தான் கிட்டிணர் சொன்னது. நாங்கள் இதுவரை எத்தினை பிறப்பெடுத்திருப்பம்? எங்களுக்குத் தான் எத்தனை. தாய், தகப்பன்! யோசிச்சுப்பார். இது ஒரு நாடகம் அப்பா! அஞ்ஞானந்தான் இந்த நாடகத்துக்கு ஆதிமூலம். பேசாமல் இருக்கிற இன்னும் கொஞ்ச நாளைக்கு ‘அப்பு, சாமி எங்கடை இனத்தை காப்பாற்று’ எண்டு மண்டாடிவிட்டுப் போறவழியைப் பாப்பம்!”

இதற்குப் பிறகும் பாசபந்தங்களில் கட்டுண்டு கிடக்க அவ்வளவு மடையரா கந்தப்பர்?

அப்புத்துரை, கந்தப்பர் இருவரது முகங்களிலும் முன் எப்பொழுதும் இல்லாத ஒரு . மலர்ச்சி. வளவில் நின்ற தூதுவளை, குறிஞ்சா, முருங்கை, முல்லை, முசுட்டை இலைகளைப் பிடுங்கி அரிசியோடு வேக வைத்து, கொஞ்சம் உப்பும் புளியும் சேர்த்து ஒருநேரக் கஞ்சியாக்கி இருவரும் குடித்துவிட்டு வீதிகளிலே உல்லாசமாகத் திரிந்தார்கள்.

கன்றுத்தாச்சிப் பசுவுக்குத் தவிடு, வைக்கோல் கொடுப்பது, நாய்க்குத் தங்கள் கஞ்சியில் பங்களிப்பது அவர்களின் ஓய்வு நேரப் பொழுதுபோக்குகள்.

“என்ன அப்புமாரே! உங்களுக்கு விசரே? உயிரை வெறுத்துத் தெருக்களிலை திரியிறியள்! பேசாமல் நல்லூரிலை போய் அங்கினைக்கை கிடவுங்கோ” என்று வீதிகளிலே ஆசை அருமையாகக் காணப்பட்ட இளசும், நடுவயதும் புத்தி சொன்னார்கள். கிழவர்களோ கலகல என்று சிரித்துவிட்டுத் தம் போக்கிலே சென்றார்கள்.

எல்லாம் குறைப்பிரசவ நிலை…

ஆனால்….

நல்லூர்க் கந்தசுவாமி கோயில் மட்டும் பழையபடி கோயில் ஆகக்கூடிய சூழ்நிலை உருவானது, அவன் அருள் என்றுதான் கூறவேண்டும்.

கந்தப்பர் குடும்பமும், அப்புத்துரை குடும்பமும் சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு தங்கள் மூட்டை முடிச்சுக்களோடு வீடுகளுக்குத் திரும்பிய வேளையில்… அப்புத்துரை வீட்டு முற்றத்தில்…

மாஜி அப்புத்துரையினதும், முன்னாள் கந்தப்ப சேகரத்தினதும் உடற்சட்டைகளின் எஞ்சிய பாகங்கள் எலும்புக் கூடுகளாயும் மண்டை ஓடுகளாயும் கிடந்து அவர்களை வரவேற்றன.

– ஆலயமணி (ஆனி 1988), சொக்கன் சிறுகதைகள், வெளியீடு: நயினை கி.கிருபானந்தா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *