கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 17, 2023
பார்வையிட்டோர்: 2,363 
 
 

(2007ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1 -5 | 6 – 10 | 11-15

6 

கம்பளிப் போர்வைக்குள் புகுந்துகொண்டு விடிந்ததே தெரியாமல் ரிக்கி தூங்கிக்கொண்டிருந்தான் ஆவி பறக்காத, ஆனால் சூடான காபியுடன் டாக்டர் வந்து எழுப்பியதும்தான் கண் திறந்தான். “குட்மார்னிங் ரிக்கி” என்று டாக்டர் சொன்ன பொழுது ரிக்கியின் நரம்புகள் ஜில்லிட்டுவிட்டன. “என் பெயர் உங்களுக்கு எப்படித் தெரியும் டாக்டர்?” -குழறினான். “நான் பல்ஸ் பார்த்தவுடனேயே பேஷண்ட்டோட உடம்புல என்ன வியாதின்னு கண்டுபிடிச்சிருவேன். உன்னோட பல்ஸ், உன் ப்ளூட் இசைதான், உன்னுடைய இந்தத் திறமையைப் பத்தித்தான் நான் கோயம்புத்தூர் வரும்போதெல்லாம் ஜெனரேஷன்ஸ் அபார்ட் மெண்ட்ஸ்லெ இருக்கிற என் ஃப்ரண்ட்ஸ் எல்லோரும் அப்படிப் புகழ்ந்திருக்காங்க. பயப்படாதே. காபியைக் குடி உன்னை உங்க வீட்டுக்கு நான் காட்டிக் கொடுத்திரமாட்டேன். நீ பட்ட கொடுமைகளை நான் கேள்விப்பட்டிருக்கேன். இப்ப எந்த நிலைமையிலே நீ வீட்டை விட்டு வந்திருக்கே எல்லா விபரமும் எனக்குத் தெரியும். நீ செய்தது நியாயமான காரியம். ஆனா ஒண்ணு. நீ லெட்டர்ல எழுதி வச்சிட்டு வந்த மாதிரி தற்கொலை முயற்சியிலே மட்டும் ஈடுபடக்கூடாது. நீ உயிர்விட்டா உனக்குள்ள இருக்கிற அற்புதமான இசைஞானம் செத்து மடிஞ்சிடும். அதுக்கு உன்னை அனுமதிக்கமாட்டேன்” 

டாக்டர் பேசப்பேச ரிக்கியால் பதில் தர முடியவில்லை. 

டாக்டரின் பேச்சு அவனது புல்லாங்குழல் இசைக்குச் சமமாக இருந்தது. அவரது இனிமையான பேச்சே அவருடைய சந்தன உள்ளத்தை உரைத்துக் காட்டிவிட்டது. கண்களில் ஒதுங்கிய நீரைத் துடைத்தபடி “டாக்டர், நான் சாக விரும்பலே, அந்த எண்ணம் எனக்கு இருந்திருந்தா எங்க வீட்டுலேயே நான் இருந்திருப்பேன். ஏன்னா, சாகுறதுக்குச் சௌகரியமான இடம் எங்க வீடுதான். அந்த வீட்டும் எரியற நெருப்போட சூடு பொறுக்காமத்தான் ஓடிவந்தேன்” 

டாக்டர், ரிக்கியின் பறக்கும் தலைமுடியை ஒதுக்கிவிட்டார். அவனுடைய சுவலைகளை ஒதுக்கிவிடும் உத்திரவாதத்துடன்.

டாக்டரின் வீட்டோடு அவருடைய க்ளினிக்கும் இணைந்திருந்தது. இங்கே ராமய்யா போல ஒரு சமையல்காரர் பிரான்சிஸ். ‘டாக்டர் ஹரிஹரன்’ என்று உலோகத் தகட்டில் பெயர் பளிச்சென்று பிரகாசிக்கிற மாதிரி, அந்த வீட்டையும் அவ்வளவு சுத்தமாக வைத்திருந்தார் பிரான்சிஸ். பகலில் வரும் கம்பவுண்டர் மாரா, டாக்டர் ஹரிஹரனால் படித்து ஆளான ஒரு இருளர் இனத்து இளைஞன். இந்த இரண்டுபேரைத் தவிர, அவருக்கு மனைவியோ, பிள்ளைகளோ கிடையாது என்றுதான் முதல் நாள் சாயந்தரம் வரை நினைத்துக்கொண்டிருந்தான் ரிக்கி.

காலை டிபன் முடிந்ததும், “பிரான்சிஸ் துணையோடு ஊட்டியை முடிந்தவரை கொஞ்சம் சுற்றிப் பார்த்துவிட்டு வா, மிச்சத்தை எல்லாம் சாயந்தரம் பேசுவோம்” என்றார் ஹரிஹரன். 

லேக் ஏரியாவைச் சுற்றிப் பார்ப்பதற்குள்ளாகவே இருட்டத் தொடங்கிவிட்டது; “நான் இங்கேதானே இருக்கப் போறேன். மத்த இடங்களை சாவகாசமாகப் பார்த்துக் கொள்ளலாம். நீங்க ‘குக்’ பண்ணணும் இல்லையா” என்று பிரான்சிஸை இழுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டான் ரிக்கி. 

கம்பவுண்டர் மாராவை ரிக்கிக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவனுடைய சுறுசுறுப்பு, நோயாளிகளிடம் காட்டும் உண்மையான சுனிவு, டாக்டர் ஹரிஹரனைத் தன் தந்தைபோலக் கருதி அவன் நடந்துகொள்ளும்விதம் எல்லாமே அலாதிதான். “இன்னைக்கு ராத்திரி ரிக்கி நமக்கு எல்லாம் மியூசிக் ட்ரீட் கொடுக்கப் போறான், மாரா, நீ இன்னைக்கி மட்டும் லேட்டா வீட்டுக்குப் போ” என்று ஹரிஹரன் சொல்லிவிட்டார். 

ரிக்கியின் புல்லாங்குழலிலிருந்து காற்று வருகிறதா, இல்லை மலைத்தேன் சொட்டுகிறதா என்று மயங்கிவிட்டான் மாரா, “ரிக்கி பாபு, நீங்க ஒரு நாளைக்கு எங்க எடத்துக்கு வந்து எங்க சாதிக்காரங்களுக்கு இதே மாதிரி புல்லாங்குழல் வாசிச்சுக் காட்டணும்” என்று ரிக்கியிடம் நூறு தடவை சத்தியம் வாங்கிய பிறகே வீட்டுக்குப் புறப்பட்டான். 

டாக்டர் ஹரிஹரன், தான் வாங்கி வந்த புது ஸ்வெட்டரை ரிக்கியைப் போட்டுக்கொள்ளச் சொன்னார். அதற்கு மேல் ஒரு ஷால், அதற்குப் பாதுகாப்பாக ஒரு கம்பளிப் போர்வை. ரிக்கி ஊட்டி குளிருக்குப் புதியவன். அவனுக்கு ஸ்வெட்டர் மட்டும் போதுமானதாகத் தோன்றவில்லை. 

சாப்பாடு முடிந்து ரிக்கியுடன் உட்கார்ந்து பேசத் தொடங்கினார் டாக்டர் ஹரிஹரன்: அப்பொழுதுதான் அவருடைய வாழ்க்கையில் அவருக்குள்ள உறவுகளையும் அந்த உறவுகளால் பிறந்த மன உளைச்சலையும் ரிக்கியால் தெரிந்துகொள்ள முடிந்தது. 

“ரிக்கி! நான் தினம் தினம் பூஜிக்கிற தாரக மந்திரம் என்ன தெரியுமா? எதிர்பார்ப்பு இல்லாத அன்பை ஒருத்தருக்கொருத்தர் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்பதுதான். உலகத்திலேயே மிக மிக விலை உயர்ந்தது அன்பு ஒன்று தான். அதே நேரத்தில் மிகவும் எளிதாகக் கிடைக்கக் கூடியதும் அந்த அன்புதான். அந்த அன்பு கிடைக்கப் பெறாமல் தவிப்போர் ஒரு பக்கம். அந்த அன்பைத் தருவதற்கு மறுப்போர் இன்னொரு பக்கம்”. அவர் பேசுவது எல்லாம் தன்னை நினைத்துப் பேசுவதுபோல உணர்ந்தான் ரிக்கி. 

“இன்றைய உலகில் நடக்கும் யுத்தங்கள் முதல், குடும்பங்களில் இடம்பெறும் விரிசல்கள் வரை. இந்த இரு தரப்பினருக்கும் இடையே ஏற்படும் மோதல்களுக்கு எல்லாம் இந்த பரஸ்பர பிரச்சினைதான் காரணம். உன்னையே எடுத்துக்கொள். நீ அன்புக்காக ஏங்குகிறவன். உன் தகப்பனோ அந்த எளிய அன்பைக் கொடுக்க மறுக்கிறவர். மற்றவரிடம் அன்பைக் காட்டுவதனால் நாம் எதை இழக்கிறோம்? ஒன்றுமே இல்லை. இதை மட்டும் புரிந்து கொண்டால் ஒவ்வொரு மனிதனும் எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ முடியும் தெரியுமா? ஒன்றும் வேண்டாம்; ஒருவர் இன்னொருவரைப் பார்த்து, ஆத்மார்த்தமாக- முகத்தில் நிஜமான புன்னகையுடன், ‘சௌக்கியமா இருக்கீங்களா?’ என்று கேட்பதன் மூலம், கேட்கப்படுகிறவர் மனம் எவ்வளவு பூரிப்பும் ஆறுதலும் அடைகிறது! எந்தச் செலவும் இல்லாமல் மற்றவரை நாம் மகிழ்ச்சிப்படுத்த இந்த எளிய அன்பு ஒன்றே போதும். இதை நாம் மறப்பதாலும் மறுப்பதாலும் அத்தனை அதர்மங்களும் மனிதர்களுக்குள் ஊடுருவிக்கொண்டு நிம்மதியைக் கெடுக்கிறது”. கொஞ்சம் நிறுத்தி, எதையோ நினைத்தபடி மௌனமானார் டாக்டர். 

அவர்மீது பெருகிவரும் மரியாதையால் ஹரிஹரனை மனதிற்குள்ளாக வணங்கினான் ரிக்கி வேடிக்கையாகவும், எதிலும் ஒட்டுதல் இல்லாதது போலவும் பேசுபவராகத் தோன்றிய டாக்டரா இப்படிப் பித்தளைச் சுவடியில் செதுக்குவது போலப் பேசுகிறார்? வாழ்க்கையின் அர்த்தத்தை முழுமையாகப் புரிந்து வைத்திருக்கும் அந்த மனிதர் மீண்டும் பேசத் தொடங்கியபோது, குருகுலத்து மாணவன் போல பக்தி சிரத்தையுடன் கேட்கத் தொடங்கினான் ரிக்கி. “ரிக்கி. இதே ஊட்டியில்தான் என் மகள் கீதா குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறாள்.” 

ரிக்கி ஆச்சரியப்பட்டான். இவ்வளவு நேரம் கழித்து இந்த உண்மையைச் சொல்லும் அவர் குரலில் ஏன் இப்படியொரு சோர்வு? 

“ரிக்கி, என் மகளும் அவ புருஷன் சித்தார்த்தும் ஆல்பர்ட் மெமோரியல் கான்வென்ட்டிலே மியூசிக் டீச்சர்சா இருக்காங்க. அவுங்களே தனியா ஒரு ஆர்க்கெஸ்ட்ரா ட்ரூப்பும் வச்சிருக்காங்க. தங்களோட குழுவிற்கு ‘ஹார்மோனி’ அப்படின்னு பெயர் வச்சிருக்காங்க. ஆனா புருஷன்-மனைவிக்குள்ளே மட்டும் குடும்பத்துல நல்ல ஹார்மோனி இல்லே; ‘ட்யூனிங்’ சரியில்லே. காரணம், ஏழு வருஷ தாம்பத்திய வாழ்க்கையிலே அவுங்களுக்குக் குழந்தைங்குற சுருதி கிட்டாத துர்பாக்கியம்தான்.” 

மகளின் வாழ்க்கைப் பிரச்சினையை இசையோடு பொருந்திய வார்த்தைகளைக் கொண்டே சுருக்கமாகச் சொல்லிவிட்டார் டாக்டர் ஹரிஹரன்.

“குழந்தை இல்லாத குறையை என் மருமகன் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அதுதான் விசித்திரம். ஆனால், சீதா அந்தப் பிரச்சினையைப் பெரிதுபண்ணிட்டிருக்கா. தன்னை விவாகரத்து செய்துவிட்டு, புருஷனை இன்னொரு திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வாதாடிப் போராடிக் கொண்டிருக்கிறாள். சித்தார்த் மனைவியை எதிர்த்துப் போராடுகிறார். பார்த்தாயா ரிக்கி, நான் உன்கிட்டே சொன்னதைவிட அன்பிற்கும் பாசத்துக்கும் வித்தியாசமான இன்னொரு பரிமாணமும் இங்கே இருக்கிறது. புருஷனும் மனைவியும் ஒருவரையொருவர் அதீதமாக நேசிப்பதன் விளைவுதான் இன்றைக்கு அவர்களுடைய வாழ்க்கையிலே வேதனையைத் தேவையில்லாமல் திணித்து விட்டிருக்கிறது. ‘இன்னும் ஒருவாரத்திற்குள் எனக்குக் கணவனிடமிருந்து விடுதலை வேண்டும்; இல்லையென்றால் நான் தற்கொலைக்குத் தயாராகிவிடுவேன்’ என்று கீதா என்னையும் சித்தார்த்தையும் கெடு வைத்து பீதியடைய வைத்திருக்கிறாள்”. 

அந்த ராத்திரி முழுதும் ரிக்கியால் தூங்க முடியவில்லை. ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் இயற்கை எத்தனை விதமான சோதனைகளையும், வேடிக்கைகளையும், வினோதங்களையும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. பெண் குழந்தை என்தால் பெற்றவர்களே சிசுஹத்தி செய்வதும். அதிகம் பெறக்கூடாது என்று அரசாங்கமே மக்களை மண்டியிட்டுக் கெஞ்சுவதும் இன்று சாதாரணம். ஆனால் இந்த டாக்டரின் மகள் குடும்பத்தில் குழந்தை இல்லாத குறை அவர்களின் வாழ்க்கையை இரண்டாகக் கிழித்தெறியப் போகிறது. அன்புக்கு அத்தளை விளக்கம் தந்தாரே டாக்டர். ஆனால் அந்த அன்பிற்கும் பலவீனம் உண்டா? இருக்கவே முடியாதே ஹரிஹரன்தான் எத்தனை ஆளுமையோடு அன்பு என்பதற்கான பதத்தின் வலிமையை எடுத்துச் சொன்னார், 

‘டாக்டரின் மகளும் அவள் புருஷனும் பாசத்தில் பக்குவப்பட்ட மனிதர்கள் என்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் பிரியமாட்டார்கள். அது நடக்கவும் கூடாது’ ரிக்கி தன் வலதுகையால் நெஞ்சில் தட்டிக்கொண்டான் ஒருவித பிரார்த்தனையோடு 

அப்பா இந்திரஜித் நினைவு இப்போது குறுக்கிட்டது. இங்கு வந்தபிறகு அந்த சர்வாதிகாரியின் ஞாபகம் இப்பொழுதுதான் வருகிறது. இந்திரஜித்தை ‘அப்பா’ என்று நினைக்கக்கூட ரிக்கியின் மூளைக்குக் கசப்பாக இருந்தது. உடனே நினைவுகளின் பாதையை ராமய்யாவிற்குத் திருப்பினான்.

அந்தச் சிவப்புக் கடித உறை!? அதைப் பிரித்துப் படிக்க இன்னும் எத்தனை காலம் ஆகும்? அந்தக் கடிதத்தில் அப்படி என்ன ஒளிந்திருக்கிறது? 

அதை இப்பொழுதே படித்தால் என்ன? வேண்டாம். அன்பான ராமய்யா ஏதோ நல்ல காரணத்தோடும், நோக்கத்தோடும்தான் தனக்கு அப்படியொரு காலக்கெடுவை நிச்சயத்திருக்க வேண்டும். ரிக்கியின் மனத்தில் எழும்பிய சிற்றலைகள் ஓய்ந்தன. ஆனால், கீதா, சித்தார்த் பற்றிய சிந்தனை மட்டும் நண்டுபோலக் குடைந்துகொண்டிருந்தது. 

தூக்கம் வராமல் புரண்டு புரண்டு களைத்தவன் விளக்கைப் போட்டான். எழுந்து வந்து மேஜை முன்னால் உட்கார்ந்தான். நீண்ட நேரம் எதைப்பற்றியோ தீவிர எழுத்தாளன் மாதிரி யோசித்துக்கொண்டிருந்தான். ஒரு வெள்ளைத்தாள், பேனா, கடித உறை இப்பொழுது அவனுக்கு மிக அவசரமாகத் தேவைப்பட்டது. 


7 

ஆல்பர்ட் மெமோரியல் கான்வென்ட் வெள்ளைக்காரத் துரைகளின் காலத்தில் கட்டப்பட்ட பழமையான, ஆனால் கம்பீரமான தோற்றம் கொண்டிருந்தது. அந்த மாலை நேரத்தில் கான்வென்ட்டின் உள்ளே நீள வாட்டான அழகிய ஹால் – பனிப்புகை படர்ந்த ஜன்னல் கண்ணாடி வழியாக – அந்தப் புகைப் படலத்தைக் கையால் துடைத்தபடி, வெளியில் நின்றவாறு தங்களை ரிக்கி என்ற ஒருவன் பார்ப்பது தெரியாமல், உள்ளே – சீதாவும் சித்தார்த்தும் மாணவர்களுக்கு வயலின் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள், அதீதமான சிரத்தையுடன்.

டாக்டர் ஹரிஹரன் வீட்டில் ரிக்கி பார்த்த ஃப்ரேம் போட்டு வைத்திருந்த போட்டோவில், திருமணக் கோலத்தில் அந்த இருவரும் எப்படி இருந்தார்களோ அப்படியேதான் இப்பொழுதும் மலர்ந்த பூக்களை நினைவூட்டும் முகத்தோடு காட்சி தருகிறார்கள் கீதாவும் சித்தார்த்தும். சீதா நல்ல சிவப்பு. ஊட்டிக் குளிர் அவள் முகத்திற்கு ஒருவிதக் கரும் பொன்னிறத்து நிறத்தைப் பூசியிருந்தது. அவளின் அழகிய முகத்திற்கு கூடுதல் வசீகரம் சேர்த்தது அவளின் புன்னகை, குழந்தைகளிடம் சிரித்தபடியே அவள் திருத்தம் கூறி அவர்களை வயலின் வாசிக்கக் கற்றுக் கொடுக்கும் நேரத்தில் – மனைவியை வாஞ்சையுடன் பார்க்கும் சித்தார்த், உள்ளத்தில் ஈருதி பேதம் இல்லாத ஒரு அபூர்வ புருஷனாகத் தெரிகிறான். கூர்மையான திருத்தப்படாத அடர்த்தியான மீசை நாசியின் கீழ் அளவான உயரம். கீதாவைப்போல அவனுக்கும் அழகான புன்னகை முகம். ஏழு வயது முதல் பதினாறுவரை அடங்கிய மாணவர்களும், மாணவிளும் அறுபது பேர் இருப்பார்கள். மூத்தவர்களை சித்தார்த் கவனித்துக்கொள்கிறார். சின்னவர்கள் மத்தியில் கீதா. எல்லோர் கையிலும் வயலின்கள். கரும்பச்சை யூனிஃபார்மில், அத்தனைபேரும். உயரத்திற்கேற்றபடி வரிசைப்படுத்தப்பட்டு, இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள், இசையால் ஒன்றாகப் பிணைக்கப்பட்ட மாணவர்கள். சின்னக் குழந்தைகள் யாராவது அவள் சொல்லிக் கொடுத்தபடி வயலின் நரம்புகளை மீட்டிவிட்டால் கீதா ஓடிப்போய் தூக்கி முத்தமிட்டுப் பாராட்டுகிறான். சித்தார்த்தும் போட்டி போட்டபடி மனைவியிடமிருந்து அந்தக் குழந்தையை வாங்கிக்கொண்டு வயலினை வாசித்துக்காட்டச் சொல்கிறார். 

ரிக்கி, அவர்களின் அப்பழுக்கற்ற நேசத்தைப் பார்த்துவிட்டு, ‘இவர்களா பிரியப்போகிறார்கள்’ என்று குழப்பமடைகிறான்.

இப்பொழுது – கீதாவும் சித்தார்த்தும் சேர்ந்து தங்களின் வயலின்களைக் கொண்டு ஆங்கிலத் தாலாட்டுப் பாடலின் ட்யூன் ஒன்றை இணைந்து வாசித்துக் காட்டுகிறார்கள் மாணவர்களுக்கு ரிக்கியின் காலில் அந்த நேரம் தேள் ஏதாவது கொட்டியிருந்தால்கூட சொரணை இருந்திருக்காது. அந்தத் தம்பதி வாசித்த இசையின் மயக்கத்தில் உருகிப்போய் தன் கண்களை மூடிக் கொண்டான். ‘எத்தனை தேன்கூடுகள் குடிகொண்டிருக்கிறதோ இவர்களின் கையில்’ என்று கவிதையாய் ரசிக்கத் தொடங்கிவிட்டான். திடீரென ஒரு சந்தேகம். ஒரு வயலினா? இரண்டு வயலின்களா? இரண்டுதான். சீதாவும் சித்தார்த்தும் சேர்ந்துதான் வயலின் நரம்புகளை மீட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் ஒருத்தர் மட்டுமே வாசிப்பதுபோல சத்தியம் பண்ணத் தோன்றுகிறது. இசையின் மந்திரத்தில் இருவர் ஒருவராக இணைந்துவிடும் இவர்கள், வாழ்க்கைப் படகில் மட்டும் எதிரும் புதிருமாக உட்கார்ந்திருக்கிறார்கள் என்றால் எப்படி நம்ப முடியும்? முடியவே முடியாது. இல்லை டாக்டர் மிகைப்படுத்தியிருக்கிறார். அல்லது – தன்னிடம் வேடிக்கை காட்டியிருக்கிறார். ‘நாம் சொல்வதைக் கேட்டு இந்த ரிக்கிப் பயல் ஒருநாள் ஏமாற வேண்டும்..’ என்று திட்டம் போட்டிருக்கிறார். ரிக்கி புரிந்துகொண்டான். 

மியூசிக் கிளாஸ் முடிந்துவிட்டது. மாணவர்கள் புறப்பட்டுவிட்டார்கள். சீதாவும் சித்தார்த்தும் தங்கள் வயலின் பெட்டிகளை எடுத்துக்கொண்டு வெளியே வரப்போகிறார்கள். “எப்படியும் அவர்களிடம் பேசிவிட வேண்டும்” என்ற ஆசை ரிக்கிக்கு அந்த ஹாலின் வெளிப்பக்கத்துச் சுவரின் மூலையிலிருந்து அவர்கள் எப்பொழுது ஹாலுக்குள்ளிருந்து வெளியே வருவார்கள் என்று எதிர்பார்க்கத் தொடங்கினான். 

‘அவர்கள்’ வந்துவிட்டார்கள். “என்ன பேசலாம், எப்படித் தொடங்கலாம்” என்று ரிக்கி ஒத்திகைப் பார்ப்பதற்கு முன், அவர்கள் இருவரும் வெளி கேட்டை நெருங்கிவிட்டார்கள். அக்கம்பக்கத்தில் யாருமில்லை; 

ஒரு ஆட்டுக்கூட்டம் மட்டுமே கான்வென்ட்டை ஒட்டிய அமைதியான அந்த ரோடில் போய்க்கொண்டிருந்தது. வேகமாக பாதங்களை எடுத்து வைத்தான் ரிக்கி அவர்களை நெருங்கியும் விட்டான். 

“முடியவே முடியாது. அந்த ரெஸ்டாரெண்ட் மெனு ஐட்டம் எதுவுமே எனக்குப் பிடிக்காது. வீட்டிலே வெஜிடபிள்ஸ் இருக்கு, கேக், ஃப்ரூட்ஸ் இருக்கு. எனக்குப் பிடிச்சதை நான் சமைச்சுக்குவேன்..” 

“ப்ளீஸ் கீதா. நீ இன்னைக்குக் களைப்பாத் தெரியறே. அதனால் வீட்டுக்குப் போய் சமைக்கிற சங்கடம் எதுவும் உனக்கு வேண்டாம்.” 

“சங்கடம்னு நான் சொன்னேனா? என்னைக்குச் சொன்னேன்? கமான், சொல்லுங்க” 

“எதுக்கு இப்படி ஆத்திரப்படுறே. உனக்குச் சங்கடம்னு நீ என்னைக்குமே சொன்னதில்லே. கீதா, உனக்கு ‘ரெஸ்ட்’ வேணாமா, அதுக்காகத்தான் சொன்னேன்.” 

“நான் எனக்கு ரெஸ்ட் வேணும்னு உங்களைக் கேட்டேனா? என்னைக்குக் கேட்டேன், சொல்லுங்க” 

“இல்லே.” 

அப்புறம் ஏன் தேவையில்லாத வார்த்தைகளை யூஸ் பண்றீங்க?” 

“இப்ப நான் என்ன சொல்லிட்டேன்? ஏன் திடீர் திடீர்னு இப்படி டென்ஷன் வந்திருது உனக்கு? ” 

“ஆமா எனக்கு டென்ஷன்தான். உங்க மாதிரி எனக்குப் புத்தரா இருக்கத் தெரியாது. சாந்தம், கருணை, இரக்கம் எதுவுமே என்கிட்டே இல்லை.” 

“ப்ளீஸ் கீதா, கூல்டௌன்” 

“நோ. நோ. இத்தனையும் என்கிட்டே கிடையாதுன்னு உங்களுக்குத் தெரியும்ல? அப்புறம் ஏன் டைவர்சுக்கு சம்மதிக்க மாட்டேங்குறீங்க? சொல்லுங்க, கமான் டெல் மீ”. 

ரிக்கியால் மேற்கொண்டு பின்தொடரவா முடியும்? அவன் எப்பொழுதோ அதிர்ச்சியில் வார்ப்பெடுக்கப்பட்டு இறுகிப்போய் நின்றுவிட்டான். வயலின் தந்திகள் அறுந்து சுருண்டு அவன் முகத்தில் அறைந்துவிட்ட மாதிரி சிலிர்த்து விட்டான். 

மாணவர்களிடம், இணைந்து இழைந்து – ஒன்றாய் – ஒருவராய் இசைத்தவர்கள். இப்போது இரண்டாய்ப் பிளந்து, எதிராய் – பிசகாய் – கசப்பாய், சுருதிபேதம் கொண்டு அபஸ்வரமாய் ஒலிப்பதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 

இதுதான் உண்மையா? 

இந்த இருவரிடத்திலும் அன்பு என்பது செல்லரித்துக் கொண்டிருக்கிறதா? 

இல்லை, இரட்டை வேஷம் போடுகிறதா? 

ரிக்கியால் தீர்மானிக்க சக்தி இல்லை. 

ஹாலின் உள்ளே மாணவர்களுடன் இருந்தபோது, கணவன்- மனைவியின் அன்பான செயல்களில் எந்தவிதமான போலித் தனத்தையும் அவன் காணவில்லை. 

இப்பொழுது அவர்கள் பேசிக்கொண்டு போகும் விதத்திலி ருந்து டாக்டர் ஹரிஹரன் சொன்னதும் பொய் இல்லை என்ற முடிவுக்குத்தான் வந்தான் ரிக்கி. 

“அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்றார்கள். அது தவறு. அதற்கும் ஒரு உச்சவரம்பு தேவை. எல்லைக்கோடு அவசியம். 

கீதாவும் சித்தார்த்தும் அந்த வரம்பைத் தாண்டிவிட்டார்கள். ‘தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறோம்’ என்பதை அவர்கள் உணரவில்லை. குழந்தைக்கு ஏங்கும் அவர்களே இப்பொழுது குழந்தைகளாகிவிட்டார்கள். 

அதுதான் உண்மை. 

இந்தப் பெரிய குழந்தைகளின் சண்டையைத் தீர்க்க குழந்தைத்தனமான ஒரு வைத்தியம்தான் சரியானது என்று குறித்துக்கொண்டான் ரிக்கி முந்திய இரவு. அவன் வேடிக்கையாக ஜோடனை செய்த நாடகம், நிச்சயம் நல்ல பலன் தரும் மருந்தாக இருக்கும் என்று நினைத்தபடி தன் பாண்ட் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்தான். ‘அந்தக் கடிதம்’ பத்திரமாக இருந்தது. 

டாக்டர் ஹரிஹரனின் பயம் நிறைந்த கேள்விக்கும் சந்தேகத்திற்கும் சமையல்காரர் பிரான்சிஸ் பதில் சொல்ல முடியாமல் தவித்தார். ரிக்கியின் புல்லாங்குழல் வாசிப்பைக் கேட்பதற்காகவே வழக்கத்தைவிட காலை எட்டு மணிக்கே வேலைக்கு வந்துவிட்டான் கம்பவுண்டர் மாரா. டாக்டரின் பரபரப்புக்கு அவனாலும் பதில் தர முடியவில்லை. 

“என்ன மாரா, உனக்கும் தெரியலேங்குறே நீ கேட்டுக்கிட்ட மாதிரி உங்க குடியிருப்புக்கு ரிக்கி போயிருப்பானோன்னு ஒரு சந்தேகம் இருந்திச்சு. இப்ப நீயும் கையை விரிக்கிறே. நேத்து சாயந்தரம் ஊரைச் சுத்திட்டு லேட்டா வந்தான் ரிக்கி. ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னால, ‘நான் காலையில சீக்கிரமா எந்திரிக்கணும் அங்கிள்’ன்னு எங்கிட்டே சொன்னான். நான் அதை ஒண்ணும் பெரிசா எடுத்துக்கலே, ஏதோ காலையிலே பத்துமணிங்கிறதுக்கு பதிலா எட்டு மணிக்கு எந்திரிச்சுக்கப் போறான்னுதான் நினைச்சேன். இன்னைக்கிக் காலையிலே பாத்து ஆறு மணிக்கே ஒரு ஆக்ஸிடெண்ட் கேஸ் வந்து நான் எந்திரிச்சுட்டேன். ஆனா ரிக்கி? அவன் பெட்டுல இல்லே, அதனால்கூட எனக்கு ஷாக் இல்லே. அவனோட லக்கேஜ் பையும், புல்லாங்குழலும் அவன் அறையிலே இப்பக் காணோம். ரூம் பூரா தேடிட்டேன்.” 

மாரா, டாக்டர் போலவே இப்பொழுது பயந்துவிட்டான். தங்களை விட்டு ரிக்கி நிரந்தரமாகப் பிரிந்து போய்விட்டானா? ஏன்? எதற்கு? தவித்துவிட்டான். 

“எனக்கு எதுவுமே புரியலையே” என்று தன் பக்கத்தில் இருக்கும் இருவரையும் பரிதாபமாகப் பார்த்தார் ஹரிஹரன். 

“டாக்டர், நான் பஸ் ஸ்டாண்டு பக்கம் போய்த் தேடிட்டு வர்றேன். தைரியமாக இருங்க. ரிக்கி இந்த ஊட்டியை விட்டு எங்கேயும் போயிருக்க முடியாது. அதை மட்டும் என்னால் நிச்சயம் சொல்ல முடியும். எங்க சாதிக்காரங்களுக்கு வேட்டை நாய்களைவிட மோப்பம் பிடிக்கிற சக்தி ரொம்ப ஜாஸ்தி. நான் ரிக்கியைக் கண்டுபிடிக்காம விடமாட்டேன்” என்று சபதம் செய்கிற தோரணையில் நம்பிக்கையோடு சொன்ன மாரா, டாக்டர் தன் முக அசைப்பால் தந்த அனுமதியுடன் அவசரமாகப் புறப்பட்டு விட்டான். 

அப்பொழுதுதான் அன்றைக்கு வந்திருந்த காலைப்பேப்பரை எடுத்துப் பார்த்தார் டாக்டர். அதைப் படிப்பது கூட தன்னுடைய மனக்குழப்பத்திற்கு மாற்று மருந்தாக இருக்கும் என்ற நினைப்போடுதான் படிக்கத் தொடங்கினார். 

முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தி வரிகளைப் பார்த்துவிட்டு, கண்களைத் தாழ்த்தி, கீழே உள்ள ஒரு புகைப்படத்தையும் அதை ஒட்டிக் காணப்பட்ட செய்தியையும் படித்தார். படித்ததும் வெடித்தார். “இப்படியும் ஒரு தகப்பனா, ரிக்கிக்கு”- வெடித்த பின்னால் சிரித்தார். 

“பிரான்சிஸ், இங்கே பாத்தியா வேடிக்கையை… இந்தப் படத்திலே உருத்தெரியாம கிடக்கே ஒரு பொணம். இது யாரு தெரியுமா? நம்ம ரிக்கி..” 

அவர் சிரியோ சிரியென்று சிரிக்க பிரான்சிஸ் மட்டும் விபரம் புரியாதவனாய் ‘என்னங்கடா இது கூத்து’ என்கிற மாதிரிப் பார்த்தான். “அமுகிப்போய் அடையாளம் காட்ட முடியாத நிலையில் கிணறு ஒன்றில் கண்டெடுத்த ஒரு பிணத்தைத் தன் மகன் ‘ரிக்கி’ என்று சத்தியம் பண்ணி போலீஸிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் ரிக்கியோட அப்பா” என்று டாக்டர் சொன்னபொழுது, “என்ன சார் அக்கிரமமா இருக்கு. எந்த அடையாளமும் ஆதாரமும் இல்லாம அவர் எப்படி இந்த மாதிரிச் சொல்ல முடியும்?” – பிரான்சிஸ் கேட்டான். 

“அந்த மனுஷனுக்குள்ளே இருக்கிற வக்கிரகுணமும், பேய்த்தனமும்தான் நீ கேக்குற அடையாளமும் ஆதாரமும் இப்பேர்ப்பட்ட பணக்காரன் கடவுள்மேலகூட பொய்க் கம்ப்ளெய்ண்ட் குடுப்பானுங்க. நம்ம போலீசும் அந்தக் கம்ப்ளெய்ண்ட்டை வாங்கிக்கிட்டு, “எந்தக் கடவுளுக்கு? விநாயகரா, பெருமாளா, சிவனா பார்வதியா, முருகனான்னு கம்ப்ளெய்ண்ட்டுலே தெளிவா குறிப்பிடணும். அப்பத்தான் நாங்க வலை விரிச்சு அமுக்சு சௌகரியமா இருக்கும்னு”னு சொல்லுவாங்க. நீ என்ன பிரான்சிஸ், செத்தவன் எல்லாம் உயிரோட வந்து வாக்குச் சாவடியிலே ஓட்டுப்போடுற இந்தக் காலத்துல போய் இந்த மாதிரிக் கேள்வியெல்லாம் கேட்டுக்கிட்டிருக்கே? இந்த நியூஸ்வேயும் நான் இப்பச் சொன்ன மாதிரியே போலீசும் கோமாளித்தனமா உளறியிருக்கு பாரு, ‘இது கொலையா, தற்கொலையா என்று போலீஸ் ஆராய்ந்து வருகிறது’. எப்படி இருக்கு? செத்தது ரிக்கிதான்னு அப்பன்காரன் சொன்னதும், போலீஸ் அப்படியே மரத்துலேயிருந்து பறிச்சுப் போடுற மாங்காய்களைக் கோணிப்பையிலே வாங்கிக்கற மாதிரி ஏத்துக்கிட்டாங்க. இப்ப அந்த சாவுக்கான காரணத்தைத் தேடுறாங்களாம். அதாவது, அந்த மாங்காயை ஊறுகாய் போடலாமா? இல்லே, பழுக்க வைக்கலாமான்னு யோசிக்கிற மாதிரி” 

சொல்விவிட்டு மீண்டும் சிரித்த டாக்டர் ஹரிஹரன், “இந்த நியூஸைப் படிக்கிறதுக்குக்கூட அருவருப்பா இருக்கு. என் மகளோட பிரச்சினை இப்ப எனக்கு மறந்து போச்சு, ரிக்கி மாதிரியான வைரியத்தைப் பெத்துட்டு, மனுஷனா இருக்குற எந்தத் தகப்பனாச்சும் இப்படி அநாதைப் பொணமாகக் கிடக்கிற ஒண்ணைப் பார்த்து ‘இது என் மகன்தான்’னு சத்தியம் செய்வானா?” 

திடீரென மறுபடியும் ரிக்கியின் கவலை டாக்டருக்கு. 

“இந்த ரிக்கி எங்கே போயிருப்பான்” – புலம்பத் தொடங்கினார்.

“மாரா போயிருக்கான். எப்படியும் மோப்பம் பிடிச்சு ரிக்கியைக் கொண்டாந்து சேர்த்திடுவான் பாருங்க” பிரான்சிஸ் தைரியத்தைக் கொடுக்க, டாக்டர் வேறு கண்ணோட்டத்தில் பயப்படத் தொடங்கினார். 

“பிரான்சிஸ், இப்ப ரிக்கி திரும்பி வர்றான்னு வச்சுக்க. இனிமேதான் அவன் ஜாக்கிரதையா இருக்கணும், ரிக்கி உயிரோட இருக்கிறது அவனோட அப்பாவுக்குத் தெரியவே கூடாது. ஏதோ ஒரு பிணத்தைக் காட்டி ‘இது என் மகனேதான். சந்தேகமே இல்லைன்னு சந்தியம் பண்ண தகப்பன், ரிக்கி உயிரோட் இருக்கிறது தெரிஞ்சா போதும். ரிக்கியைத் தேடி வந்து கொலைபண்ணி, அதையும் உலகத்துக்குத் தெரியாமப் பண்ணிடுவான். இரக்கமில்லாத ஒருத்தன், சுட்டிக் கிடக்கிற புறாவைக்கூட புலியைக் கொல்ற வெறியோடதான் வேட்டையாடுவான். பூவைப் பறிக்கிறதைக்கூட ஒருத்தனின் கழுத்தைச் சீவுற மாதிரித்தான் கருவிக்கிட்டு செய்வான். அந்தக் கொலைகாரன் கண்ணுலே நம்பகிட்டே இருக்குற ரிக்கி தென்படவேகூடாது. ரிக்கியை அந்தப் படுபாவி தீர்த்துக் கட்டிடுவான்” 

சொல்லிக்கொண்டே போன ஹரிஹரனின் முகம் அடர்த்தியான வேதனையைக் காட்டியது. பயத்தில் அவர் முகம் வெளிறத் தொடங்கியது. 


8

பெரும் புயலின் தாக்குதலால் கடல் அலைகள் திமிறிக் கொண்டு சித்தார்த்தின் பங்களாவினுள் பொங்கித் திரண்ட மாதிரியும். அப்படிக் கொந்தளிக்கும் அலைகள் சித்தார்த்தைப் புரட்டி எடுக்கிற மாதிரியும், அது போதாதென்று ஒரு பயங்கர சுறா வாயைப் பிளந்துகொண்டு சித்தார்த்தைச் சுற்றிச் சுற்றி வருவது போன்றது மான நிலைமையைத் தோற்றுவித்து விட்டான் ரிக்கி. அய்யோ பாவமாய் அந்த வீட்டிற்குள் நுழைந்த ரிக்கி, மௌனமாய்க் கொடுத்த சித்தார்த்திடம் ஒரு கடிதம்தான் இப்பொழுது சித்தார்த்தின் இல்லத்தில் எழுப்பியிருக்கும் அதிர்ச்சி அலைகள். 

ஆத்திரத்துடன் ரிக்கியை வெளியே தள்ளிக் கதவைச் சாத்தப் பார்க்கிறார் சித்தார்த் கீதா தடுக்கிறாள். “ராஸ்கல். Liar… Crooke. Black Mailer. நீ எத்தனை பேரை இந்த மாதிரி ஏமாத்தியிருக்கே. இப்பவே போலீஸைக் கூப்பிட்டு உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று கூச்சலிட்ட சித்தார்த் ரிஸீவரை எடுக்கவிடாமல் கீதா மறிக்கிறாள். “கீதா இந்தத் திருட்டு நாயை நம்பாதே. இந்த லெட்டர்லே எழுதியிருக்கிறதெல்லாம் பொய்.. பொய் புடம் போட்ட பொய். கட்டுக்கதை!” வீடே அதிரக் கத்துகிறார் சித்தார்த். 

“ஆனா நீங்க சொல்ற பொய், கட்டுக்கதை எல்லாமே நிஜமா இருந்தா என்ன தப்பு?” – கீதா தீர்க்கமாய்ச் சொல்கிறாள். 

“மேடம், சார். நீங்க ரெண்டுபேரும் ஏன் சண்டை போட்டுக்கறீங்க? நான் ஒரு போஸ்ட்மேன் மாதிரி. ரொம்பச் காலத்துக்கு அப்புறம், நேரமும் ஞாபகமும் சேர்ந்து வந்து, இந்த லெட்டரை உங்கக்கிட்டே கொண்டாந்து குடுத்தேன். அவ்வளவு தான். இந்த லெட்டர்ல எழுதியிருக்கிறது என்ன ஏதுன்னு இதுவரைக்கும் எனக்குத் தெரியாது” – ரிக்கி கெஞ்சுகிறான். 

“இல்லை. இல்லை… இதெல்லாம் உன்னோட நாடகம்” சித்தார்த் சீறுகிறார். 

“சார். இந்தக் கடிதத்தைக் காட்டி உங்க வீட்டுலே நான் இடம் பிடிக்க வரலே, உங்ககிட்டே எந்த உதவியும் கேக்கறதுக்கு நான் ஆசைப்படலே. ஆத்திரப்பட்டு என் மேல அபாண்டமாப் பழி சுமத்தாதீங்க. இதோ நான் போய்க்கிட்டேயிருக்கேன். இந்தக் கடிதம் பற்றி வெளியே யார்கிட்டேயும் நான் எதுவும் சொல்லமாட்டேன், ஐ பிராமிஸ். கவலைப்படாதீங்க, நான் வர்றேன். குட்பை.” 

ரிக்கி தன் தோள்பை, ஃப்ளூட்டுடன் புறப்படுகிறான். ஓடி வந்து தடுக்கிறாள் கீதா. 

“ரிக்கி, நான் உன்னை நம்புறேன். இந்தக் கடிதத்தை நம்புறேன். எங்களை விட்டுப் போகாதே” 

“மன்னிச்சுக்குங்க மேடம் நான் வந்த வேலை முடிந்தது. உங்கள் குடும்பத்துலே அநாவசியமான குழப்பத்தை உண்டாக்க நான் தயாரா இல்லே” 

கதவைத் திறந்துகொண்டு வெளியேறுகிறான் ரிக்கி “அவனைக் கூப்பிடுங்க ப்ளீஸ்… ப்ளீஸ்…” புருஷனைக் கண்ணீரோடு கெஞ்சுகிறாள் கீதா. 

“என்ன கீதா, அவனை நீயுமா நம்புறே..?”

“அதிலே உங்களுக்குச் சந்தேகமே வேண்டாம். இத்தனை காலமா நான் ஒரு தாய்ங்குற அந்தஸ்தை அடைய முடியாமப் போனதுக்கு, நீங்க ஒரு பெண்ணுக்கு செஞ்ச துரோகம்தான் காரணம்ங்கிறது இப்பத் தெரியுது.” 

“கீதா, நான் யாருக்கும் சொப்பனத்துலகூட துரோகம் நினைச்சதில்லே. ” 

“இப்படித்தான் தன்னைத் தேடிவந்த சகுந்தலைகிட்டே துஷ்யந்தனும் சொல்லியிருக்கான். கல்யாணத்துக்கு முன்னாலே, ஆண்கள், தங்களை அறியாம தூக்கத்திலே நடக்கிற வியாதியஸ்தனைப் போல, சில தவறுகள் செய்றது சகஜம்தான்” 

“கீதா- கீதா… நான் சொல்றத நீ நம்பமாட்டியா? இல்லாத ஒண்ணை நீயா நிச்சயம் பண்ணிக்கிட்டு என்னை குற்றவாளியாக்கிப் பேசுறியே?” 

“அதான் சொன்னேனே.. அறியாமல் செய்த வாலிப காலத்துத் தவறுகள் மன்னிக்கக்கூடாத பாவங்கள் இல்லே. அதுக்குப் பரிகாரம் தேடிக்கிறதுக்கு எல்லாம், பல பேருக்கு, அவங்க கல்யாணத்துக்கு அப்புறம் எந்தச் சந்தர்ப்பமும் வாய்க்கிறதில்லே ஆனா ரிக்கி மூலமா அந்த அதிர்ஷ்டம் உங்களுக்குக் கிடைச்சிருக்கு. அதுக்காக சந்தோஷப்படுங்க.” 

“கீதா, அவன் என் மகன் இல்லே கீதா” 

“எந்த ஒரு ஆம்பிளையும், உங்க மாதிரித் தங்களோட கடந்தகால சறுக்கலை, உடனே ஏத்துக்கமாட்டாங்க” 

“அந்த மாதிரி ஒருத்தன் நான் இல்லை கீதா” 

“ஏன் இப்படித் தவிக்கிறீங்க? இதுக்காக நான் உங்களை வெறுக்கல. இப்பத்தான் உங்களை அதிகப்படியா நேசிக்கிறேன். சிறுபிள்ளைத்தனமா உங்களைவிட்டு நிரந்தரமாப் பிரிய நினைச்ச என்னையே இப்ப தடுத்து நிறுத்திட்டான் இந்த ரிக்கி இனிமே என்னைக்கும் உங்களை விட்டு பிரியமாட்டேன். இது நிச்சயம். ரிக்கியைக் கூப்பிடுங்க.” 

“போலீஸை வேணும்னா கூப்பிடுறேன்.” 

“அப்படியா, கூப்பிடுங்க. நான் ரிக்கிக்குச் சாதகமாத்தான்” பேசுவேன், ‘ஒரு மனைவியே, தன் கணவன் யாருக்கோ பெற்ற பிள்ளையை ஏத்துக்கத் தயாரா இருக்காள்’னு தெரியும்போது என் கட்சிதான் ஜெயிக்கும்” 

“ஆனா, நான் உன்கிட்டே ஆதாரம் கேட்பேன்” 

“ஆதாரமா? நீங்களும் நானும் காற்றைச் சங்கீதமாக்கி கேக்குறவங்களை மயங்கச் செய்கிறோமே, அதுக்கு என்ன ஆதாரம்? அந்தக் காற்றைக் கையிலே பிடிச்சுக் காட்டி, இதுதான் எங்க இசைக்கு ஆதாரம்னு நம்மாலே சொல்ல முடியுமா? அதை விடுங்க. இத்தனை வருஷக் குடும்ப வாழ்க்கையிலே நான் உங்களுக்குத் துரோகம் பண்ணியிருக்கேன்னு உங்ககிட்ட ஒருத்தர் சொல்லலாம். அதுக்கு, நான் பத்தினிதான், உத்தமிதான்னு நிரூபிக்கிறதுக்கு என்கிட்டே என்ன ஆதாரம் இருக்கு? சொல்லுங்க.” 

அப்பொழுதுதான் யாரும் எதிர்பார்க்காத அற்புதமான அந்த இசைச்சாரல் அடிக்கத் தொடங்கியது. கண்ணாடி ஜன்னலை நோக்கி ஓடுகிறாள் கீதா. அங்கே. தங்கள் வீட்டுக் காம்பவுண்டுக்கு வெளியே, ஒரு சிறிய பாறை மேல் உட்கார்ந்தபடி கண்களை மூடிய நிலையில் புல்லாங்குழலை இசைத்துக்கொண்டிருக்கிறான் ரிக்கி. கண்ணனின் மாயக்குழல் இசைகேட்டு மெய்மறந்த மாந்தர்போல, ரிக்கியைச் சுற்றிச் சிறியவர்களும் பெரியவர்களுமான கூட்டம். அவனுடைய ஜீவனே இசைக்கின்ற மாதிரி அத்தனை உருக்கம்! இனிமை! அவனைச் சுற்றி நிற்கும் கூட்டமோ மந்திரப்பொடி தூவப்பட்டவர்கள் மாதிரி ரிக்கியின் இசை ரீங்காரத்தில் மயங்கிப் போய்ச் சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். ஆவேசம் திறைந்த சித்தார்த்கூட இப்போது சாந்தம் பெற்ற சித்தார்த்தனாகி விட்டார். கோபம் வெடித்த முகத்தில் அமைதியின் ஆதிக்கம். 

அந்தக் குழலிலிருந்து வருகின்ற காற்றுக்கு இத்தனை தித்திப்பா? இத்தனை வர்ணங்களா? இத்தனைக் கோணங்களா? இத்தனை உள்ளங்களா? இவ்வளவு உயரங்களா? இத்தனை ஆழங்களா? 

“இந்த ஆதாரம் ஒன்று போதுமே.. இந்த இசைஞானம் இவனுக்கு எப்படி வந்தது? இந்த மேதாவிலாசம் ஒன்றே போதும் – இவன், ஒரு இசை மேதைக்குப் பிறந்தவன் என்பதற்கு” 

-என்றபடி உணர்ச்சி மேலிட்டவளாய் வெளியே ஓடும் கீதா கூட்டத்தை விலக்கிக் கொண்டு ‘ரிக்கி’ என்று வாஞ்சையோடு நெருங்கியபொழுது கண்களைத் திறக்கிறான் ரிக்கி. “ரிக்கி வா, நம்ம வீட்டுக்குள்ளே போகலாம்” என்று அவனைப் பேசவிடாமல், அவனுடைய புல்லாங்குழலைப் பெருமையுடன் தன் கையில் வாங்கிக்கொண்டு, இன்னொரு கையால் அவனை உரிமையோடு அணைத்துக்கொண்டு வீட்டிற்குள் விரைகிறாள் கீதா. 

“ரிக்கி வா, நீ அவரிடம் எதுவும் பேசவேண்டாம். அவர் பேசுவதை நீ பொருட்படுத்தவும் வேண்டாம். வா இனி, இந்த வீடே உனக்குச் சொந்தமானதுதான்.. உனக்கு வசதியான தனி அறையை ஒழுங்குபண்ணித் தருகிறேன். சத்தியமாகச் சொல்கிறேன் ரிக்கி. இனி இந்த வீட்டை விட்டு நீ எக்காலத்திலும் போக முடியாது. நீ என்னோட அன்பு மகன், உன்னை நான் போகவிடமாட்டேன்” – திணறிப்போய் நின்ற ரிக்கியை கைபிடித்து அழைத்துக்கொண்டு அங்குள்ள அறையின் உள்ளே போகிறாள் கீதா. 

திகைத்து – திணறிப் பேச முடியாத நிலையில் அவர்கள் இருவரும் போவதையே பார்த்துக்கொண்டு நிற்கிறார் சித்தார்த். சராசரியாக ஒவ்வொரு நாளும். ஒரு நிமிடத்தில், உலகெங்கும் எத்தனை கொலைகள், தற்கொலைகள், கற்பழிப்புகள் பிறப்புகள், மரணங்கள் நிகழ்கின்றன என்று ஆராய்ச்சி நிறுவனம் புள்ளி விபரம் தருகிறதே; அதையெல்லாம் கேட்கும்போதுகூட வியப்படையாத சித்தார்த், தன் வீட்டினுள் நுழைந்து ரிக்கி கொடுத்த கடிதம், அதில் அவர் படித்தது, அதனால் ஏற்பட்ட எதிர்பாராத திருப்பமும்கூட, ஒரு நிமிடம்தான் என்று நினைத்துப் பார்த்தபோது, ‘ஆனால் இதைப்போன்ற ஒரு அதிர்ச்சி ஒரு நிமிட அவகாசத்தில் உலகின் எந்த மூலை முடுக்கிலும் நடைபெற வழியே இல்லை’ என்று சத்தியம் பண்ணுகிறார் மனதிற்குள். 

இத்தனைக்கும் காரணமான அந்தக் கடிதத்தை ரிக்கி கொண்டுவந்த விதமே அலாதி. “சார், நீங்கதானே மிஸ்டர் சித்தார்த் இந்தாங்க, உங்களுக்கு ஒரு லெட்டர்” என்று ரிக்கி சொல்லித் தந்த கடிதம் மேஜையில் கிடக்கிறது. 

திறந்து கிடக்கும் அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருப்பது இதுதான்: 

“மரியாதைக்குரிய திரு. சித்தார்த் அவர்களுக்கு, இக் கடிதம் கொண்டுவரும் ‘ரிக்கி’ என்ற பிள்ளையின் ஏக்கத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். இவன் பிறந்து தவழத் தொடங்கிய நாள் முதலாய்த் தகப்பனால் வெறுக்கப்பட்டவன். மறக்கப்பட்டவன். இதுவரை எப்படியோ காட்டுச் செடிபோல வளர்ந்துவிட்டான். இனியும் தந்தையின் பாசம் எப்படி இருக்கும் என்று தெரியாமல், தாய்ப்பாசம் கிடைக்காமல் இவன் வளரக்கூடாது. கருணை கூர்ந்து இவனை ஏற்றுக்கொள்ளுங்கள். இவனை அனாதையாக்கி விடாதீர்கள். அந்தப் பாவத்தை நீங்கள் சுமக்கவேண்டாம். இவன் எக்காலத்திலும் உங்களுக்குத் துரோகம் நினைக்க மாட்டான், உங்களைப் பரிசுத்தமாக நேசிப்பான். உங்கள் நிழலைவிட்டு இவனைத் துரத்திவிடாதீர்கள். இவனுக்குத் தேவை உங்களின் அன்பு மட்டுமே. அதை இவனுக்குத் தர மறுக்காதீர்கள். 

இப்படிக்கு, 
(என் பெயர் எழுதத் தயங்குகிறேன். தங்கள் அன்பு மனைவியின் அன்புக்கும் மகிழ்ச்சிக்கும் நான் தீங்கு செய்ய நினைக்கவில்லை. தங்கள் அருமை மனைவியின் தாயன்பு, இந்த ‘ரிக்கி’ என்ற பிள்ளைக்குக் கிடைத்திடப் பிரார்த்திக்கிறேன்” )

இதுவரை, இங்கே நடந்தவற்றையெல்லாம் ‘மோப்பம்’ பிடித்துவிட்டு, ஒருத்தன் டாக்டர் ஹரிஹரனைத் தேடி ஓடுகிறான் என்பதை சித்தார்த்தோ, கீதாவோ, ரிக்கியோ அப்போது அறியவில்லை. 


அன்று ஞாயிற்றுக்கிழமை. மதர்மேரி கான்வென்ட்டின் காம்பவுண்டுக்கு வெளியே ஏராளமான கார்கள் நின்றுகொண்டிருக்கின்றன. ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் தங்கள் பெண் பிள்ளைகளைப் பார்க்க வெளியூரிலிருந்து வந்திருந்த அப்பா அம்மாக்களும், உறவினர்களும், குடும்ப சினேகிதர்களும் காம்பவுண்டுக்கு உள்ளே பரவிக் காணப்படுகிறார்கள். தாங்கள் கொண்டு வந்திருக்கும் அன்பளிப்புகள், உயர்ந்த ரகப் பதார்த்தங்கள், பரிவான விசாரிப்புகள் விசாரணைகள், முத்தங்கள் அனைத்தையும் தங்கள் பெண்களிடம் அவர்கள் பரிமாற்றம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது- 

தங்கள் காரை விட்டு இறங்கிய கீதா “நீயும் வா ரிக்கி, கூச்சப்படாதே” என்று ரிக்கியை அழைத்துக்கொண்டு உள்ளே போகிறாள். அப்போது, ‘ஆன்ட்டி’ என்று மகிழ்ச்சியில் கூவியபடி ஓடோடி வரும் ஒரு அழகிய மாணவி கீதாவைக் கட்டிப்பிடித்துக் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு, கீதா சொல்லத் தொடங்குவதற்கு முன் ரிக்கியை ‘யார்?” என்பதுபோலப் பார்த்ததும்… 

“அனிதா.. உனக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ், இந்த ரிக்கி யார்னு தெரிஞ்சா எனக்கு ஆயிரம் முத்தம் குடுப்பே. முதல்லே, இதை வாங்கிக்க. உங்க அப்பா கல்கத்தாவிலிருந்து உனக்குக் கொடுத்து அனுப்பியிருக்கார்: ஒரு பெரிய பார்சலை அவளிடம் கொடுத்த கீதா, “அனிதா வா அந்த மரத்தடியிலே போய் தனியே உட்கார்ந்து பேசலாம். இங்கே இந்தக் கூட்டம் நம்மை நிம்மதியாய்ப் பேசவிடாது” 

அந்த மரத்தடி நிழலில் உட்கார்ந்தபொழுது ரிக்கி சுற்று முற்றும் பராக்குப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான். கீதா, ரிக்கியின் கையைப் பிடித்து இழுத்து தன் பக்கத்தில் அவனை உட்கார வைத்தாள். “ரிக்கி, இந்த அனிதாவோட அப்பா பெரிய பிசினஸ் மாக்னெட்” என்று கீதா முடிக்கவில்லை, அனிதா, அவசரமாகவும் கோபமாகவும் குறுக்கிட்டாள். “ஆமா- எங்க டாடி ஒரு மாக்னெட்தான். காந்தம் மாதிரியேதான். அவர் என்கிட்டே வந்து ஒட்டமாட்டார். நானேதான் ஓடிப்போய் ‘சக்’குன்னு அவர்கிட்டே ஒட்டிக்கணும், அவர்கிட்டே எனக்கு அஃபெக்ஷன் இருக்கோ இல்லையோ, அவரு அப்பாங்குறதுக்காக நான்தான் அவரைத் தேடி கல்கத்தா போய் ஒட்டிக்கணும். அவரும் என்னை உதறிவிடுறதுக்காக அவர் பிஸினஸ் விஷயமா போற நாடுகள்ளேருந்து இப்படி ஏதாவது ப்ரசண்ட் அது, இதுன்னு மூட்டை கட்டி ஆன்ட்டிக்கு அனுப்புவார். ஆன்ட்டிக்கு போஸ்ட்மேன் ஜாப். ஆனா ஆன்ட்டிதான் உண்மையான ‘மாக்னெட்’ தன்னோட அன்பிலேயும் சிரிப்பாலேயேயும் எல்லாரையும் தன் பக்கம் இழுத்திடுவாங்க” 

“மிஸ் அனிதா, உங்களாலே தண்ணிக்குள்ள எவ்வளவு நேரம் மூச்சைப் புடிச்சிக்கிட்டு ‘தம்’ பிடிக்க முடியும்?” -திடீர் கேள்வி, ரிக்கியிடமிருந்து. 

அனிதா புரியாமல் சீதாவைப் பார்த்தாள்.

ரிக்கி சிரித்தபடி புதிரை அவிழ்த்தான். 

“இப்படி மூச்சு விடாமல் பேசுறீங்களே, அதை வச்சுக் கேட்டேன்.” 

‘ஹோய்’ என்று விழுந்து விழுந்து சிரித்தாள் அனிதா. கீதாவும்தான். 

“அனிதா, இன்னைக்கி அடைமழைதான். போ. நீ இப்படிச் சிரிச்சு இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்லை. வாரத்துல ஒருநாள் நான் வரும்போது மட்டும் மானேஜர் வீட்டுக் கல்யாணத்துக்கு வர்ற ஏழை கிளார்க் மொய் எழுதுற மாதிரி அழுதுகிட்டே சிரிப்பே. இன்னைக்கித்தான் மனசைத் தெறந்து சிரிச்சிருக்கே. இவ்வளவு தைரியமாவும் பேசியிருக்கே” 

கீதா அப்படிச் சொன்னதும்தான். அனிதா, தான் அதிகம் பேசிவிட்டதாகவும், மிச்சம் மீதி இல்லாமல் சிரித்ததையும் உணர்ந்தாள். உடனே மௌனமாகிவிட்டாள். 

“ஐ அம் ஸாரி அனிதா, நீங்க சிரிச்சதுக்கு நான் காரணமாயிட்டேன். அதுக்காக ஃபீல் பண்றீங்களா?” ரிக்கி வருத்தப்பட்டான். 

மறுத்தாள் அனிதா, அந்த மறுப்பில் கலக்கமும் ஏக்கமும் இருந்தது. “நோ நோ.நீங்க நீங்க.. ஆங்…ரிக்கி ரிக்கி – நான் இப்படி சிரிச்சது முதல் தடவையாக இருக்கலாம். அதுக்காக நான் ரொம்பவும் உங்களுக்கு நன்றி சொல்லணும். ஆனா இப்படிச் சிரிக்கிற சந்தர்ப்பம் எனக்கு நிரந்தரம் இல்லை. அதை நினைச்சுத்தான்.” 

கீதா, அனிதாவை அணைத்துக்கொண்டாள். 

“லுக் ஹியர் அனிதா. இனிமே, இந்தச் சிரிப்பு எப்பவும் உன்கிட்டே இருக்கும். இந்த ரெண்டு வருஷமா உன்னை எங்க வீட்டுக்குத் தினம் தினம் வந்து அழைச்சிட்டுப் போக முடியாததை நினைச்சு நான் வேதனைப்படாத நாளே கிடையாது. இனிமே அந்த வேதனைக்கு அவசியம் இல்லே” ரிக்கியின் பக்கம் திரும்பினாள் கீதா. 

“ஆமா ரிக்கி, பகல்பூரா நானும் அவரும் வேலைக்குப் போயிடுறோம். ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள்தான்.. அன்னிக்குப் பார்த்து எங்க ஆர்க்கெஸ்ட்ரா ட்ரூப்புக்கு ரிகர்சல் வச்சிருப்போம். இல்லே, எங்க ரெண்டு பேருக்குள்ளே ‘வாக்குவாதம்’ நடத்திக்கிட்டு எங்க நிம்மதியைக் கெடுத்திட்டிருப்போம். அதனாலே அனிதாவை வீட்டுக்கு அழைச்சிட்டுப் போய் இவளுக்கு ஒரு நாளாவது முழுமையான சந்தோஷத்தைக் குடுக்க முடியாமல் போச்சு. இவளுடைய தனிமைக்கு என்னாலே மருந்து கொடுக்க முடியலே. ஆனா இன்னையிலேருந்து அந்தக் குறை மட்டும் இல்லே, எனக்கு வேற எந்தக் குறையும் இல்லாமப் போச்சு. நீதான் வந்துட்டியே. இனிமே தினமும் அனிதா நம்ம வீட்டுக்கு வரலாம்; மூச்சுவிடாமப் பேசலாம்; நீயும் ஒன்- டூ- த்ரீ-ன்னு எண்ணிக்கிட்டிருக்கலாம்.” 

இப்பொழுது ரிக்கி பளீரென சிரித்தான். அனிதா அழுதுவிட்டாள். “ஆன்ட்டி நீங்க சொல்றது. உண்மைதானா? இதுதான் நீங்க சொன்ன சஸ்பென்ஸா?” 

“இதுக்குமேலே இன்னொரு பெரிய சஸ்பென்ஸும் இருக்கு அனிதா. நாளைக்கு கவர்ன்மெண்ட் ஹாலிடே. நேரத்தோட காலையிலேயே வந்து உன்னை எங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போயிடுறேன். அங்கே வீட்டுல் வச்சு அது என்ன சஸ்பென்ஸ்ங்குறதை உனக்குச் சொல்கிறேன்” 

மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய அனிதா, ரிக்கியை நன்றியுடன் பார்த்தாள் ஆனால் அப்பொழுதும் அந்தப் பார்வையில் ஒரு நம்பிக்கையின்மை மிருதுவாக ஓரம்கட்டியிருந்தது. 

ரிக்கி, “வேண்டாம் வேண்டாம். போதும். போதும் ஆன்ட்டி” என்று எவ்வளவோ செஞ்சியும்கூட, பிடிவாதமாக, அவனுக்கு ஜீன்ஸ், பாண்ட்ஸ், ஸ்வெட்டர், ஷு, ஷர்ட்டுகள் என்று தோ. வாங்கிக் குவித்துவிட்ட பாக்கேஜ்கள் காருக்குள் நிறைத்துக் கொண்டிருந்தன. விடுமுறை என்று திறக்காத கடையையும் திறக்கச் செய்த கீதாவின் அன்பும் பிடிவாதமும் ரிக்கியைத் திகைக்கச் செய்தது. 

வீடு திரும்புகையில், அனிதாவைப் பற்றியே நினைத்துக் கொண்டு வந்த ரிக்கி திடீரென்று கீதாவிடம் ஞாபகம் வந்து கேட்டான் “ஆன்ட்டி, உங்க ஆர்கெஸ்ட்ரா ட்ரூப் பத்தி அனிதாவோட பேசிட்டிருக்கும் போது சொன்னீங்களே. அது எப்படி? என்ன மாதிரின்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” – அவனுடைய இயல்பான இசை ஆர்வத்திற்கு மிகுந்த உற்சாகம் தந்தது, கீதா சொன்ன பதில். 

“ஆமா ரிக்கி, நானும் அவரும் ‘ஹார்மோனி’ங்குற பேருல ஆர்கெஸ்ட்ரா ட்ரூப் வச்சிருக்கோம். ஆனா வியாபார நோக்கத்தோட இல்லே. நல்ல காரியங்களுக்கு நிதி திரட்டுறதுக்குன்னு ஆரம்பத்துல ஆரம்பிச்சது. ஆனா நாளடைவிலே எங்க ட்ரூப்புக்கு பெரிய அங்கீகாரமும், மரியாதையும் கெடச்சிருச்சு. வெளிநாட்டு அம்பாஸடர்கள், மினிஸ்டர்ஸ், நம்ம கவர்னர்கள் இப்படிப்பட்ட வி.வி.ஐ.பி.ங்க ஊட்டிக்கு வந்தாங்கன்னா எங்க ட்ரூப்தான் அவங்களைக் கௌரவிக்கணும். இந்த நிலைமைக்கு எங்க ட்ரூப், ஸாரி… இனிமே அது நம்ம ட்ரூப்… இந்த அளவுக்குப் பெருமை அடைஞ்சிருக்குன்னா அதுக்கு நம்ம ட்ரூப்ல இருக்கிற ஒவ்வொரு மியூசிஷியனும் காரணம். அவங்களோட அபாரமானண திறமை காரணம், எல்லாத்துக்கும் மேலே உங்க ‘டாடி’யோட உழைப்பும் ஞானமும் காரணம்.” 

ரிக்கிக்கு அந்த ‘டாடி’ என்ற வார்த்தை தந்த அடி கொஞ்சம் வலித்தது. கீதா தொடர்ந்து சொன்னாள்: “சொன்னா நம்பமாட்டே ரிக்கி. நம்ம ட்ரூப்ல மியூசிக் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் வாசிக்கிற ப்ளேயர்ஸ் எல்லாம் யார் தெரியுமா? ஊட்டியிலே இருக்கிற போலீஸ் சூப்பரின்டெண்ட், டாக்டர்ஸ், லாயர்ஸ், பிசினஸ் பீப்பிள் இவங்கதான். அவங்க எல்லோரும் சின்னப்பையன்களா மாறி உங்க டாடிகிட்டே திட்டு வாங்கிக்கிட்டு ரிகர்ஸ் பண்றத நீ பார்த்தே ஒரே சிரிப்பா இருக்கும். ட்ரைவர், ஏன் காரை நிறுத்துறீங்க?” ட்ரைவர் மருதமுத்து எதிரே கையைக் காட்ட அங்கே அனிதா சைக்கிளில் நின்றுகொண்டிருக்கிறாள். மூச்சிரைத்தபடி அவள் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு காரிடம் வருகிறாள். “என்ன அனிதா, என்ன?” கீதா பதறியபொழுது, மூச்சிரைப்புக்கு, நடுநடுவே இடைவெளிவிட்டு, “ஆன்ட்டி. உங்ககிட்ட பேசிக்கிட்டிருக்கும்போது, என்னை அறியாம ரிக்கி கையிலிருந்த இந்த ப்ளூட்டை எடுத்து என் கையிலே வச்சிருந்திருக்கேன். நீங்க புறப்பட்டுப் போனதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது. குறுக்கு வழியிலே உங்களைப் பிடிக்கிறதுக்கு அடிச்சுப் புடிச்சு ஓடியாந்தேன்” 

கீதா அவளிடமிருந்து ப்ளூட்டை வாங்கியபடி சிரித்துவிட்டாள், “ரிக்கி வந்த நேரத்துலேர்ந்து உனக்கு மட்டும் இல்லே, எனக்கும் எல்லோருக்கும் மூச்சு முட்டுது; உன்னை மாதிரியே பேச முடியலை. நீதான் நாளைக்கு வீட்டுக்கு வரப்போறியே இந்த ப்ளூட்டாலே ரிக்கி நம்ம எல்லோரையும் மூச்சே நின்னு போகும்படி ப்ளே பண்றானா இல்லியா பாரு. ஹி இஸ் கிரேட் இன் ப்ளூட்” 

“ரியலி?” முகமெல்லாம் ஆச்சரியம் தாங்கிய அனிதா, “இப்பவே விடிஞ்சிட்டா நல்லா இருக்குமே ஆன்ட்டி” என்றாள் உண்மையான ஆசையோடு. ”அனிதா மூச்சுவிடாமப் பேசுறது தப்பு இல்லே.. இப்படி மூச்சை அடக்கி வேகம் வேகமா மேடு, பள்ளம் பார்க்காமெ சைக்கிள் மிதிக்கிறது ரொம்பத் தப்பு. இதுலே ‘ரிஸ்க்’ அதிகம்.. நீங்களும் சொல்லுங்க ஆன்ட்டி…” என்று ரிக்கி சொன்னபொழுது, அனிதாவின் முகம் என்றுமில்லாத புதுவிதப் பிரகாசத்தை அடைந்தது. 


10

கதவைத் தட்டினான். திறந்தேன். “நீங்க மிஸ்டர் சித்தார்த்தாவா?”ன்னு கேட்டான். நான் தலையசைத்ததும் “இந்தாங்க உங்களுக்கு ஒரு லெட்டர் கொண்டு வந்திருக்கேன்”னு சொல்லி இந்த லெட்டரைக் குடுத்துட்டு அப்பாவி மாதிரி இங்கே, என் முன்னாலே நின்னான் படிச்சதும் எனக்கு வெறியே வந்திருச்சு. “டேய் நீ யாரு சொல்லு. இப்பவே உன்னைப் புடிச்சு லாக்கப்லே தன்றேன்”னு கத்தினேன். அவன் பயப்படவே இல்லை. ரொம்பவும் சுவாதீனமா “அப்படி என்ன சார் அந்த லெட்டர்ல இருக்குன்னு என்னையே திருப்பிக் கேட்டான். அதுக்குள்ளே என்கிட்டேயிருந்து அவசரமா லெட்டரைப் பறிச்சுப் படிச்சா கீதா. அவ்வளவுதான். அதை அப்படியே நம்பிட்டா. என்னோட எந்த வாதமும் அவகிட்டே எடுபடலே. அவனோ? மகாபுத்திசாலி. “சார் உங்களை நான் ஏமாத்த வரலே. இப்பவே நான் வெளியே போறேன். என்னைத் தப்பா நெனைக்காதீங்கீன்னு புறப்படுறான். எப்பேர்ப் பட்ட நடிப்பு, “உங்க அம்மா எங்கேடா”ன்னு கடைசியாக் கேட்டேன். பூமியைக் காட்டுறான். அவங்க அம்மா செத்துட்டாங்களாம்” 

மருமகன் சித்தார்த் சொல்லச் சொல்ல, ஒரு கையில் சிகரெட்டுடனும், இன்னொரு கையில் அந்தக் கடிதத்துடனும் அமைதியாக உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார் டாக்டர் ஹரிஹரன். கீதாவும் ரிக்கியும் அப்போது வீட்டில் இல்லாததால் இவர்களால் மனம் விட்டுப் பேச முடிந்தது. ஹரிஹரன் முகத்தில் எந்தவிதமான பதட்டமும் இல்லாதது சித்தார்த்துக்கு எரிச்சலைத் தரவில்லை. எதற்கும், எந்தச் சமயத்திலும் பதற்றமே படாமல் பிடில் வாசிப்பவர் தன் மாமனார் என்பது சித்தார்த்துக்குத் தெரியும். எடுத்ததற்கெல்லாம் கண்ணில் வெங்காயம் பிழிந்த மாதிரி துள்ளிக் குதிப்பவர்களை ‘எம்மோஷனல் இடியட்ஸ்’ என்று வர்ணிப்பவர் ஹரிஹரன், ஆனால், இப்பொழுது அவருடைய தியான நிலைக்கு அடிப்படை காரணம், ‘மோப்பம்’ பிடித்த மாரா பிசிறு தட்டாமல் அவரிடம் வந்து தான் பார்த்தது, கேட்டதையெல்லாம் முன்கூட்டியே சொல்லிவிட்டதுதான். இருந்தாலும் மருமகன் சொல்வதை அதிசயத்துடன் கேட்கிறார். 

சித்தார்த் தனது கொந்தளிப்பைச் சொல்லச் சொல்ல.. ஹரிஹரனுக்கு ‘ரிக்கி’ பற்றிய வியப்புதான் திணறடித்துக் கொண்டிருந்தது. அப்புராணிப் புறாவாக இருந்த ரிக்கிக்கு இந்த மாதிரி குயுக்தியான விபரீத நாடகம் போடும் சாமர்த்தியமும், தைரியமும் எப்படி வந்தது? மகள் கீதாவின் குடும்பச் சிக்கலைப் பற்றி அவனிடம் அவர் சொன்னது உண்மைதான். ஆனால், அந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காக இப்படிப்பட்ட திட்டமும் நாடகமும் நடத்த அவனுக்கு யார் கற்பித்தார்கள்? போன வாரம்கூட ஸ்டார் டிவியில் கலிபோர்னியாவில் ‘பறவைகள் பழக்கப்படும்’ விதத்தைப் பார்த்தது அவர் நினைவுக்கு இப்போது வந்தது. ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் ஒரு ஆணும் பெண்ணும் புறாக்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும்படி பழக்கியிருப்பதை செயல்படுத்திக் காட்டினார்கள். மாய்ந்துபோனார் ஹரிஹரன், அவர்கள் பயிற்சி கொடுத்த புறா ஹெலிகாப்டரில் இருந்து பறந்து வந்து வேடிக்கைப் பார்க்கும் கூட்டத்தில் நிற்பவர் நீட்டிய கையில் இருந்த நாணயத்தை வாயால் பற்றிக்கொண்டு தன் தலைவியான பயிற்சியாளரிடம்  கொண்டுபோய்க் கொடுக்கிறது. அவள் அந்தப் புறாவிடம், “பாவம். அந்த ஆள்… நீ அவரிடமிருந்து எடுத்துக்கொண்டு வந்த நாணயத்தை அவரிடமே கொண்டுபோய்க் கொடுத்துவிடு. அதுதான் நாணயம். இது உன்னுடைய பணம் அல்ல” என்று அறிவுரை சொன்னதும்.. அந்தப் புறா மீண்டும் பறந்துபோய் தான் பறித்து வந்த மனிதரின் கையில் அந்தக் காசை வைத்துவிட்டு அந்தப் பெண்ணிடம் திரும்பி வருகிறது. ‘புறாக்களுக்குப் பழக்கமான இந்த நாணயம் நமது அரசியல்வாதிகளிடம் இல்லையே’ என்று பிரான்சிஸிடம் சொல்லிப் புலம்பினார் ஹரிஹரன்.

அந்தப் புறாவின் சாயலைத்தான் இப்பொழுது உடல் எடுத்துக்கொண்டிருக்கிறான். இந்தக் குறுகிய காலத்தில்தங் குடும்பத்தின் மீது இவ்வளவு அக்கறை காட்டி கைதேர்ந்த நடிகனாக இவன் மாறிய ஜாலம் எப்படி? அந்த விந்தையிலும் மனிதநேயம் என்ற நச்சாணி அமைந்தது எப்படி?

“நமக்கு விடை தெரியாத அற்புதங்களைப் பார்க்கும் போதெல்லாம், நாஸ்திகக் கொடி தூக்குகிறவர்கள் கூட “நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது” என்று உதடு பிரியாமல் சொல்லிவிடுவார்களே. அந்த சக்திதான் ரிக்கியை இப்படி இயங்க வைத்ததோ? அந்த ஹரிக்கே வெளிச்சம்” என்று இந்த ஹரிஹரன் நினைத்துக்கொண்டார். 

“சித்தார்த். இப்ப, அந்தப் பையன் எங்கே? – அப்படிக் கேட்கும்போதே தன்னுடைய தற்போதைய நடிப்பை நினைத்தும் அதிசயித்துக்கொண்டார். 

“என்னமோ ஷாப்பிங்காம். அவனை கீதா அழைச்சிட்டுப் போயிருக்கா. ஆனா அங்கிள்.” நிறுத்தினார் சித்தார்த், தன்னையும் அறியாமல் சித்தார்த் என்ற அந்த இசைக்கலைஞன், தன் புலம்பலைத் துரத்திவிட்டு ரிக்கியின் இசை ஞானத்தைப் புகழ்த் தொடங்கினான். “அவன் யாரோ, எப்படியோ, அதெல்லாம் கிடக்கட்டும். அவனோட ரத்தம் எல்லாம் இசை அணுக்கள் நிறைஞ்சது. தனது சுவாசக் காற்றுக்கெல்லாம் ஆயிரமாயிரம் வடிவங்களைக் கொடுக்கிறான். புல்லாங்குழலை நீங்கள் கும்பிடும் கண்ணபிரான்கூட இப்படி வாசித்திருக்க முடியாது. இவன் ஒரு ஞானக் குழந்தையா இருக்கணும், ஹி இஸ் எ சைல்டு ப்ராடிஜி. அதேசமயம், ஏன் இப்படி. இந்த வீட்டுக்குள்ள கிறுக்குத்தனமா நுழைஞ்சிருக்கான். அதான் புரியலே”. 

சித்தார்த், ரிக்கி அன்று தங்கள் வீட்டின் வெளியே கிடந்த பாறையில் உட்கார்ந்து பாடிய ராகத்தைப் பாடிக்காட்ட முயன்றார். 

“என்னாலேயே முடியல பாருங்க அங்கிள்” – தோல்வியை சந்தோஷமாக ஒப்புக்கொண்டார். 

“சித்தார்த், சில விஷயங்களைப் புரிஞ்சுக்காமயே நாம ரொம்பவும் அனுபவிச்சு ரசிக்கிறோம். அதுலே இந்த மியூசிக்கும் அடக்கம் உங்க பாட்டை- இல்லே. ஒரு காம்போசிஷனை. பாட்டு இல்லாம் தாளத்தை மட்டும் ஆதார கருதியா வச்சு நீங்க சங்கீதமாக்குறதை ஊட்டியிலே இருக்கிற மேட்டுக்குடி மக்கள் மட்டும் இல்லே, இங்கே இருக்கிற பழங்குடிகள் கூட மெய்மறந்து ரசிக்கிறாங்க ஏன்? அதனோட அர்த்தம் தெரிஞ்சா? இல்லே, சங்கீதத்தோட ரீங்காரத்துக்கு, ஐ மீன் வைபிரேஷனுக்குக் கட்டுப் படாத ஜென்மம் உலகத்தில் யாரும் இருக்க முடியாது. அதைப்போல மனித உயிர்கள்ளேயும், புரிஞ்சுக்க முடியாத, ஆனால், நம்மாலே அதிகமா நேசிக்கப்படுகிற அளவுக்குப் பல பிறவிகள் இருக்காங்க. அது மாதிரிதான் நீங்க சொல்ற ரிக்கியும் இருக்க முடியும்!” அப்படி அவர் சொல்லி முடிப்பதற்குள் வாசலில் கார் வந்து நிற்கும் அறிகுறி. 

சித்தார்த் வாசலைப் பார்த்தார். 

ஹரிஹரன் வானத்தைப் பார்த்தார், ஜன்னல் வழியாய்.

கீதாவும் ரிக்கியும் சிரித்தபடி வருகிறார்கள். 

– தொடரும்…

– அழகிய தவறு (நாவல்), முதற் பதிப்பு: 2007, சாருபிரபா பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *