அழகிய இதயங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 30, 2022
பார்வையிட்டோர்: 4,973 
 
 

(1969 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

செம்பூக்கள் இழைத்த திரைச்சீலை போல கீழ் வானம் செக்கச்சிவந்து விட்டது. கண்பட்ட இடமெல்லாம் பரந்து கிடக்கும் குன்றுகளும், செம்மயமாகிச் சிரிக்கின்றன. காலையிளஞ்சூரியன் மேலநோக்கி மெல்ல மெல்ல உயர்கிறது. அது, பேரீத்தம் பழச்சாற்றில் தோய்த்தெடுத்த வட்ட வடிவமான கோதுமை ரொட்டி போல பேரழகு சிந்துகிறது.

ஷாம் தேசத்தின் தலைநகரான் திமிஷ்க்கின் மத்தி யிலே, உள்ள நீர்ச்சுனை பாலையின் கனிந்த இதயத்தைப் பிரதிபலித்துக் கிடக்கிறது. இதயத்தின் இன்பக் கனவுகள் சடத்தோற்றம் பெற்றெழுந்ததுபோல, உயர்ந்து வளர்ந்த பேரீந்துகள் சுனையைச் சூழ்ந்து நிற்கின்றன. கலையின் செழுமையைத் தனதாக்கிக்கொண்டு சோலையின் மத்தியிலே கம் பீரமாக நிற்கின்றது நகரின் பிரதான பள்ளிவாயில். அது பாலை நிலத்தின் கனவின் நிறைவேற்றமாகக் காட்சி தருகிறது.

பாலைவனக்காற்று, மணலை வாரியிறைத்துக் கோரமாக வீசுங்குணமுடையது. அதற்குக் குளிர் இரவின் பனிச் சுமையினால் அழுத்தம் பெற்ற மயக்கம் போலும், படுக்கை விட்டெழும் சோம்பிய பெண்ணாக மெல்ல நெளிகிறது.

குளிரானது மயிர்க்கால்களைத் துளைக்கின்ற காலை வேளை. ஒரு பெருங்கூட்டம் பள்ளிவாசலின் உள்ளேயிருந்து வெளிவருகிறது. கூட்டத்தினர், வைகறைத் தொழுகையை இமாம் ஜமா அததாக நிறைவேற்றிவிட்டு வெளிவருகின்ற னர். நித்திரை ஒரு சுகமாத்திரை. உழைத்துக்கழைத்த உடலைத் தேற்றிக்கொள்ள இரவு. நித்திரை தந்த புதுத் தெம்போடு உழைப்பதற்கும், உன்னதமான உலகைச் சமைப் பதற்குமாகப் பகல். இவற்றைப் படைத்தளித்த அல் லாஹ்வை இந்தச் சந்திவேளையில் துதித்து நன்றி செலுத் தியதிற்றான் அவர்களுக்கு வவ்வளவு மன நிறைவு . அவர்கள் தங்களின் இதயப் பூரிப்பை முகத்திலே தேக்கியவர்களாக வெளிவருகிறார்கள். அத்தோடு, தங்களையும் தாங்கள் மேற் கொள்ளப்போகும் முயற்சிகளையும், அவனது பாதுகாப்பு அரணுக்குள் ஒம்புவித்துவிட்டு வருகிறார்கள்.

இருவரைத் தவிர மற்ற எல்லோரும் வெளிவாயிலைக் கடந்து தெருவில் இறங்கிவிட்டார்கள். அவ்விருவரும் வெளி வாயிலுக்கு வெகு தொலைவில் வந்து கொண்டிருக்கிறார்கள். மஸ்ஜிதின் முகப்புக்கு நேரே. வளைவு நெளிவு இல்லாமல் ஓங்கி உயர்ந்து நிற்கின்றது. ஒரு ஈத்தமரம். மெல்ல நடந்த இருவரும் ஈத்தமரத்தை அடைந்ததும் தகைந்து நிற்கிறார்கள்.

காலைச்சூரியன் இருளைப் புறங்காணும் போரிலே வென்று நெட்டுயிர்க்கிறான். நீண்டகால உழைப்பின் சின்னமான பழைய பாத அணியும், பல இடங்களில் அண்டை போட்ட சறுவாலும், மேலங்கியும் ஓரங்கள் கரைந்து (பிசி றெடுத்துப்) போன தலை முட்டாக்கும் அணிந்திருப்பவர், அஹ்மத் பின் அஷ்காப் என்பவராவார். இளநரை கலந்த தாடியுடன் கூடிய வசீகரமான முகமும், தீட்சண்யம் மிக்க கண்களும், கன்னச் சுருக்கங்களும், நெற்றிப்பிரிகளும் அவ ரது மேதாவிலாசத்தை, எடுத்தோதுகின்றன. அவர், அந் நகரத்தின் மணியான மார்க்க அறிஞர், இறை பக்தர். மற்றவர், பல பேரீந்து, திராட்சை, செய்த்தூன் (ஒலிவ்) தோட்டங்களுக்கு உரிமையாளர். நூற்றுக்கணக்கான ஓட் டகைகளுக்குச் சொந்தக்காரர். திமிஷ்க்கிலிருந்து நானாதிசை களிலுஞ் செல்லும் கரவன் பாதைகளில் அவரது பாலைவனக் கப்பலான ஒட்டகைகள் கலந்து கொள்ளாத பாதைகள் இல்லை. அப்பாதைகள் வழியான பிரயாணத்திலும், வியா பாரத்திலும் அவைகளுக்குப் பெரும் பங்குண்டு. அணிந் திருக்கும் ஆடைகளும், மிடுக்கான தோற்றமும், தகுதியைச் சொல்லாமல் சொல்லுகின்றன.

அஹ்மத் பின் அஷ்காப் அவரை நோக்கிப் பேச்சை ஆரம்பிக்கிறார்.

“ஹபீப், எனக்கு உங்களிடமிருந்து ஒரு முக்கிய காரியம் ஆக வேண்டியிருக்கிறது.”

“சொல்லுங்கள் ஹஸ்ரத் முடிந்தவரைக்குஞ் செய்கிறேன்”

“இன்ஷா அல்லாஹ்! இம்முறை ஹஜ்யாத்திரை மேற்கொள்ளலாமென்றிருக்கிறேன்.”

இந்த வார்த்தைகள் பண்ணையாரைத் தூக்கிப்போட்டன.

“என்ன நீங்களா? ஹஜ்யாத்திரை போகிறீர்களா?”

இந்தக் கேள்விமூலம் தனக்குண்டான வியப்பை அவர் வெளியிட்டார். அவரது வியப்புக்குப் போதிய காரணங்கள் இல்லாமலில்லை. அஹ்மத் சிறந்த மார்க்க அறிஞர் தான். அவரது ஈமான் இறை நம்பிக்கை சந்தேகத்துக்கிடமற்றது. விதிக்கப்பட்ட தொழுகை மாத்திரமன்றி, இரவெல்லாம் விழித்திருந்து, இரு பாதமும் நோக, முழங்கால் முட்டுகள் வலியெடுக்க இறைவனை வணங்குவார். நோன்பு நோற் பதிலே குறைவைக்காதவர். தன்னிலும் எளியவர்களுக்குத் தன்னாலியன்றவரை உதவுபவர். இவற்றையெல்லாம் ஒழுங்காக நிறைவேற்றுகிறவர்கள் தாம், இறுதிக் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுதற்கு லாயக்கானவர்கள் என்பதும் பண்ணையாருக்குத் தெரியாததல்ல. எவ்வளவு தான் உள்ளத் தூய்மையும், பேணுதலான சமய வாழ்க்கையுமிருந்தாலும், பண பலமற்றவர்களால் மக்கா யாத்திரையை நினைத்துப் பார்க்கவும் முடியாதே. அஹ்மத் பின் அஷ்காபோ ஆண்டை போட்ட ஆடைகளையே அணியுமளவிற்கு ஏழ்மையில் வாழ் பவர். மாணவர்கட்கு அறிவு புகட்டுவதின்மூலம் கிடைக் கும் அற்ப வருமானத்தைக் கொண்டு, மனைவி மக்கள் நிறைந்த தனது குடும்பத்தேரை இழுக்கமுடியாமல் இழுத் துக் கஷ்ட சீவனம் நடாத்துபவர்.

பண்ணையாரின் கேள்விகளின் உட்பொருளை உணர்ந்து கொண்ட அஹ்மத். ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்து விட்டார்.

“ஹபீப்! நீங்கள் ஆச்சரியப்படுவது நியாயமானதே. உங்கள் கேள்விகளும் பொருள் பொதிந்தவையே. இந்த மிஸ்கீனாஸ் எப்படி இது சாத்தியமாகும் என்றுதானே நினைக்கிறீர்கள். அல்லாஹ்வின் நாட்டமும், நமது முயற்சியுமிருந் தால் எதுவும் சாத்தியமாகும் என்பதற்கு நானும் ஒரு முன்மாதிரி. இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையையும் நிறை வேற்றும் பாக்கியம் கிடைக்காதா என்று நான் ஏங்காத ஏக்கமில்லை, எனது எண்ணம் ஈடேற அருள்புரியுமாறு அல் லாஹ்வைப் பிரார்த்திக்காத நாளில்லை. பிரார்த்திருப்பவர் பால் தன் அருள்மாரியைச் சொரிகின்ற கொடையாளி அவனைவிட வேறுயார். “அல்லாஹ்வை நம்புங்கள்; உங்கள் ஒட்டகைகளையும் கட்டிவையுங்கள். எனப் பெருமானார் சொல்லியிருப்பதுபோல நான் அவனை நம்பினேன். நாளும் பொழுதும் சிறு காசுகளாகச் சேமித்து வந்தேன்.”

என்று உணர்ச்சியோடு கண்கள் ஆனந்தக் கண்ணீர் மல்கக் கூறிமுடித்தார் அஹ்மத், அவரது வார்த்தைகள் ஒவ்வொன்றும் பண்ணையாரைச் சுட்டெரித்தன.

“அஸ்தஃபிருல்லாஹ! அல்லாஹ் என்னை மன்னிப்பானாக. ஹஸ்ரத் ! முன் யோசனையில்லாத எனது பேச்சை யெண்ணி வருந்துகிறேன். அதை நீங்கள் மன்னித்தாக வேண்டும்.”

என்று பண்ணையார் அஹ்மத் அவர்களின் கரங்களைப் பற்றிக்கொண்டு உணர்ச்சியுடன் கூறினார்.

“உங்கள் பேச்சிலே மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது ஹபீப், நீங்கள் பிழையாக ஒன்றையுஞ் சொல்லிவிட வில்லையே. இப்பொழுது விஷயத்துக்கு வருவோம். இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் நாடினால், துல்கஹ்தா தலைப்பிறையோடு பிரயாணத்தை ஆரம்பிக்க இருக்கிறேன். மக்கா போகும் பாதையிலே நன்கு பழக்கப்பட்ட, நல்ல நிலையி லுள்ள உங்களது ஒட்டகைகளிலொன்று எனக்கு வாடகைக்குத் தத்துதவ வேண்டும்.

“அதற்கென்ன உங்களிடத்தில் நான் வாடகையா வாங்கவேண்டும்?”

“கூடாது வாடகையில்லாமல் நான் பெற்றுக்கொள்ள மாட்டேன்”.

“இன்ஷா அல்லாஹ்! அப்படியே செய்வோம். நீங்கள் உங்கள் பிரயாணத்துக்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுங்கள்.”

மரத்திலிருந்து விழுந்த கனியொன்று நீர்ச்சுனையிலே விழுகிறது. இளஞ்சூரியனின் ஒளியில் தகதகக்கும் நீர்ப்பரப் பில் அலைவட்டங்கள் விரிகின்றன. நீரின் தண்ணென்ற இதவு நெஞ்சைக் குளிர்விக்கிறது.

“ஹைர் நல்லது. பிரிவோமே” பண்ணையார் இவ்வாறு சொல்லிக்கொண்டே, அஹ்மத்தின் கரங்களைப் பற்றியிருந்த தனது கரங்களை விடுவித்தார். அஹ்மத் பாளையும், பிஞ்சும், காயும், கனியுமாகக் குலைகட்டி நிற்கும் ஈத்தம் வட்டை வாஞ்சையோடு பார்த்துவிட்டு நடக்கத்தொடங்கினார்.

2

திமிஷ்க்கின் ஒரு கோடியிலுள்ள மேட்டு நிலப்பகுதி. அந்த இடத்தில் நின்று பார்த்தால், திராட்சைத் தோட் டங்களும், ஈத்தஞ் சோலைகளும், ஒலிவ் மரங்களும் நிறைந்த பசுந்தரைப் பகுதி கண்கொள்ளாக் காட்சியாகத் தொலைவில் தெரியும். கல்லுங் கரடுமான இந்த மேட்டிலே முட் செடிகளைத் தவிர வேறு தாவரங்கள் கிடையா.

படங்குகளாலான சிறிய கூடாரங்களும், ஈத்தந்தட்டிகளால் அமைந்த சிறு குடிசைகளும், கூரையற்ற களிமன் சுவர்களைக் கொண்ட சிறு வீடுகளும் விரவிய சேரிதான் இந்த மேட்டு நிலம்.

மேட்டின் ஒரு பாலில் ஈத்தங்கிடுகளால் வேயப்பட்டிருக்கும் சிறு குடிசைதான் ஹஸ்ரத் அஹ்மத் பின் அஷ் காபினுடையது.

குடிசையில் ஒளி பாய்கின்ற முற்பகுதியில், பழைய ஒட்டகைத் தோலில் அமர்ந்திருக்கிறார் அஹமத் பின் அஷ் காப். முன்பகுதியில் அவரைத் தவிர வேறு யாருமில்லை. மனைவி அடுப்படியில் புகையோடு பேராடிக்கொண்டிருக்கிறாள்.

அஹ்மத் பின் அஷ்காபின் முன்னே ஒரு தோற்பை இருக்கிறது. அவர் அதை எடுத்துக் கட்டை அவிழ்த்துப் பிரித்துத் தலைகீழாகக் கொட்டுகிறார். வெள்ளி நாணயங்கள் கலகலத்துக் கொட்டுகின்றன. பையைப் பக்கத்திலே வைத்து விட்டு நாணயங்களைப் பார்க்கிறார். அவரது முகம் மெல்ல மலர்கிறது. கனத்துத் தொங்கும் செந்திராட்சைக் குலையை நிகர்த்து நிற்கிறது. மேய்ந்துவிட்டுக் குட்டிகளைக் காண விரையும் ஆட்டின் முலைக்காம்புகள் போல கண்கள் கசிகின்றன.

பிரயாணத்துக்கான ஒட்டகைக்கும் ஒழுங்கு முடித் தாகிவிட்டது. மகாத்மியம் மிக்க துல் ஹஜ் மாதத்துக்கு முன்னறிவித்தல் கொடுக்கும், துல் கஹ்தாவின் கூனப்பிறை மேல் வானில் எழில் கூட்ட இன்னும் வெகுநாட்களில்லை. எனவே பிரயாணத்துக்கான மற்ற ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டாமா ; காலையிலே பண்ணையார் தெரிவித்த வியப்புக் குறிப்பை நினைவில் மெல்லாமலிருக்க அவரால் முடிய வில்லை .

நீண்ட நாளையக் கனவு, ஜீவன் முக்தி விகாரம் நிறை வேறப் போகிறதே என்ற அங்கலாய்ப்பில், உணர்ச்சி வசமாகி கணக்கிலே பிழைத்துவிட்டோமோ? குறைந்த தொகையைக் கூட்டிக் கணித்துவிட்டோமோ? என்ற சந்தேகம் அவரை அரிக்கத் தொடங்கியது.

நாணயங்களை மீண்டுமொரு முறை எண்ணிப் பார்க்கிறார். அப்பாடா! நிம்மதியை ஊட்டும் பெருமூச்சு மெல்ல வெளிப்போகிறது அவரது கணிப்புச் சரி. ‘ஹஜ்’ யாத் திரையை நிறைவேற்றப் போதுமான பணம் அவரிடமிருக் கிறது. நாணயங்களை மீண்டும் ஒவ்வொன்றாக எண்ணிப் பையிலே போட்டுச் சிக்காறாகக் சுற்றிக் கட்டிக்கொண்டார்.

அவரது ஏழு வயது மகன் கேவிக்கேவி அழுத வண்ணம் அவ்விடம் வருகிறான். எவ்வளவுதான் பக்தி மார்க் கத்தில் வாழ்பவராயிருந்தாலும் புத்திர பாசம் யாரைத் தான் விட்டது. தன் அருமை மகனின் அழுகை கண்டு அவர் நெஞ்சம் கவலையடைந்தது. பிள்ளையை அணைத்துத் தனது மேலங்கியால் அவன் கண்களைத் துடைத்தார்.

“ஏன் மகன் அழுகிறாய்? உனக்கு யார் என்ன செய்தார்கள்” எனப் பணிவுடன் வினவினார்.

“அ… டுத்…த…… வீ.ட்டி லே இ றைச் சி……. தின்…னு றாங் க… எ னக்.. குத் தர வே இல்…ல” என்று விக்கி விக்கிச் சொன்னான்.

அவரிதயம் சுருக்கென்றது. உணவு விசயத்தில் சிறு பிள்ளைகளின் அவா எப்படிப்பட்டதென்பதைத் தெரிந்தி ராத சடங்களா எனது அண்டை வீட்டுக்காரர், இவர் அண்டையிலா குடியிருப்பது என் நினைத்து அவரிதவங் கொதிப்படைந்தது.

வெளியே இருந்து வீசிய சுழல்காற்று சுடு மணலை அள்ளி இறைத்தது. விருந்தோம்பலைப்பற்றிப் பெருமானார் எத்தனை விதமாகச் சொல்லிவைத்திருக்கிறார்கள்; வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். அந்த வள்ளல் நபியினைப் பின்பற்றும் மூமீன்களா இவர்கள் ! இந்த நினைவுப் பின்னலில் வந்த ஆத்திரத்தை அவரால் அடக்க முடியவில்லை. காற்றோ கடுகி வீசுகிறது. காற்றையும் முந்திக்கொண்டு அவர் அண்டை வீட்டை நோக்கி விரைகிறார். தவறை அவர்களுக்குணர்த்தாத வரை அவருக்கு நிம்மதியேற்படப் போவதில்லை.

3

நடு மதியம். பாவ புண்ணியம் என்று பார்க்காமல், ஆனவழிகளிலெல்லாம் பணத்தைக் குவிக்கும் பண முதலை களின் நெஞ்சங்களை உருவகித்து வெப்பத்தை உமிழ்கிறது அந்தப் பிரதேசம். ஹஸ்ரத் அஹ்மத் பின் அஸ்காப், அவரது குடிசையின் முன் பகுதியில், அந்தப் பழைய ஒட்ட கைத் தவிசில் அமர்ந்த வண்ணம் தோற்சுவடிகளைப் புரட்டுகிறார். அவை அவர் கண்ணே போற் பாதுகாக்கும் திருக்குர் ஆன் பிரதியின் பக்கங்கள். அவர் தன் கைப்பட எழு தியவை. அவர் முன்னால் உணவுகள் காத்திருக்கின்றன. வாற்கோதுமை ரொட்டி, ஒட்டகை மாமிசக்கறி, பேரீத்தம் பழம்பாணி என்பன மண் சட்டிகளில் நிரப்பப்பட்டுள்ள கூசா போன்று உருவமைந்த தோற்பையில் நீர் நிறைக்கப் பட்டிருக்கிறது.

அவருக்காக அந்த உணவுகள் வெகுநேரமாகக் காத் துக்கொண்டிருக்கின்றன. மிக அபூர்வமாகத்தான் அந்த இல்லத்தில் மாமிசம் வாங்கப்படும். அபூர்வமாக வாங்கப்பட்டது. என்பதாலோ சுவைபட தாளித மனம் நாசியைத் துளைக்கத்தக்கதாக சமைக்கப்பட்டிருக்கிறது. ஈத்தம் பாணி யும் அருமையாகத்தான் அங்கு காணப்படும் வறுமை என் பதற்காக வாரத்துக்கு ஒரு தரமாவது நாவுக்கு ருசியாக உண்ணக்கூடாதா? இன்று வெள்ளிக்கிழமை. வெள்ளிக் கிழமை முஸ்லீம்களுக்கு மகத்தான தினம். புனித நாள்.

ஜும்ஆ கலைந்து வீடு வந்தபோதே, அவருக்கு உணவு பரப்பப்பட்டிருந்தது. வீட்டுக்காரி உணவுகொள்ள சொல்லி விட்டு நீர் எடுக்கச் சென்றுவிட்டாள். மாலை நேரமாகி விட்டால் பூவலடியில் நெரிசல் கூடிவிடும் என்பதனால் நடு மதியத்தில் சுடுசுரத்தையும் பொருட்படுத்தாது கணவனின் செருப்பை மாட்டிக்கொண்டு சென்றாள்.

அஷ்காப் குர் ஆன் ஒற்றைகளை அடுக்கிக் கட்டி வைத்து விட்டுச் சூனிய வெளியை கண்களால் துழாவுகிறார். அவர் உணர்வுகள் சூனியத்தோடு சூன்யமாகி, ஸ்தம்பித்து விட் டனவோ. கல்லால் வடித்த சிலை போலச் சலனமற்றுவிட் டதா? அவர் கண்கள் மாத்திரம் கண்ணீரைத் தாரையாக வார்க்கின்றன.

தண்ணீருக்குப் போயிருந்த மனைவியும் திரும்பிவிட் டார் உணவு வைத்தது வைத்தபடியே இருப்பதும், கண வன் அழுது வடிப்பதும் அவளை உலுப்பிவிட்டன. நீர்ப் பையை படியில் வைத்துவிட்டு கணவனுக்கு அருகமர்ந்தாள்.

“ஏனிப்படி அழுகிறீர்கள்?” என்று பதட்டத்துடன் கேட்டுவிட்டு அவர் பதிலுக்குக் காத்திராமலே,

“உணவு பதுவாச் செய்யுமே! ஏனின்னும் நீங்கள் சாப்பிடவில்லை?” என வினவிக்கொண்டே அவர் கண்களைத் துடைக்கப்போனாள். அவர், அவள் கரத்தைத் தடுத்து விட்டு, துண்டை எடுத்துத் தானே துடைத்துக்கொண்டார். சிறிது நேரம் அங்கு மௌனம் நிலவியது. பின் அஹ்மத்தே மௌனத்தைக் கலைத்தார். அவர் குரல் தீனமாக ஒலித்தது.

“இந்த உலகத்தில் அழுவதற்கு எவ்வளவோ காரணங்கள் இருக்கின்றன.”

“இப்பொழுது உங்களுக்கு என்ன நடந்துவிட்டது.”

“நமது துயருக்கு மாத்திரந்தான் அழவேண்டுமா ? நமது சகோதரர்களின் துயருக்காக அழக்கூடாதா? உணவு முனியுமே என்றாய், இந்த உணவு கிடைக்காத எத்தனையோ ஜீவன்கள் இந்த உலகத்தை முனிகின்றன, என்றறிவாயா?”

இதைச் சொல்லிவிட்டு மீண்டும் தன் கண்களைத் துடைத்துக்கொண்டார்.

“அண்டை வீட்டார் பசித்திருக்கும் போது நீங்கள் மாத்திரம் உண்ணாதீர்கள் என்ற பெருமானாரது பொன் மொழி ஞாபகத்திலிருக்கிறதா? நமது அண்டை வீட்டார் பசித்திருக்கும் போது நான் மட்டும் எப்படி இதைச் சாப்பிடுவது? நமது அண்டை வீட்டார் உண்டனரா? இல்லையா? என்பதை அறிய நாம் முற்பட்டோமா? இதை நினைந்து தான் அழுதுகொண்டிருந்தேன்.”

“அப்படியா இந்த உணவில் ஒரு பாகத்தைக்கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வருகிறேன்.”

மனைவியின் பதில் கேட்டு ஏளனச் சிரிப்பை மெல்ல உதிர்த்தார்.

“உனது உணவு இப்பொழுது அவர்களுக்குத் தேவையில்லை. அவர்களுக்கு அமைத்த றிஸ்கை உண்டு பசியாறித் தான் இருக்கிறார்கள். இனி இரவைக்குத்தான் அவர்களுக்குப் பசியெடுக்கும். அப்போது உன்னாலானதைக் கொண்டு போய்க் கொடு.”

“எனது நினைவைச் சபிக்க வேண்டும். ஏழெட்டு நாளா நான் அந்தப்பக்கம் போகவே இல்லை. அந்த வீட் டுக்காரி பாயும் படுக்கையுமாகி இன்றா நேற்றா? அந்த மனுஷனும் உள்ளது உரியதையெல்லாம் வித்து வைத்தியம் பார்த்தார். கடன் படுவதற்கும் இனிப் போக்கிடமில்லை. செய்யுஞ் தொழில்களும் சரிவருவதில்லை. அல்லாஹ்தான் அவர்களைக் காப்பாற்றவேண்டும்.”

இதைச்சொல்லி முடிக்கும்போது அவளது முகம் சோகக்கடலாக மாறிவிட்டது. அவர் தொடர்ந்தார்.

“சற்றுமுன் நம்முடைப் பயல் அங்கு போயிருக்கிறான். அவர்கள் இறைச்சி சாப்பிட்டிருக்கிறார்கள். ஒரு சிறு எலும்புத் துண்டையாவது அவர்கள் அவனுக்குக் கொடுக்கவில்லை. அதனால் அழுதுகொண்டு வந்தான். அப்பொழுது நீ அடுப்பங்கரையில் புகையோடு போராடிக் கொண்டிருந்தாய்: தொடர்ந்தாற்போல் நாலைந்து நாள் பசி கிடந்திருக்கிறார் கள். தெருவில் போனவர் செத்த ஆடொன்றைக் கண்டு எடுத்து வந்திருக்கிறார். அதைச் சமைத்துத் தங்கள் பசிக்கும் வயிறுகளின் கொதிப்பை ஆற்றியிருக்கிறார்கள்.”

“ஐயோ! அல்லாஹ் ! செத்த பிராணியின் மாமிசம் ஹறாமாச்சே.”

“ஹலாலான ஆகாரம் ஒரு கவளமாவது வைத்திருப் பவர்களுக்கு ஹறாம்தான், பிணத்தை உண்டுதான் உயிர் வாழ வேண்டுமென்ற நிலையிலுள்ளவர்களுக்கு அது ஹலால். இது பற்றித்தான் குர் ஆனை வாசித்துப்பார்த்தேன்.”

“அல்லாஹ்! வல்ல பெரிய நாயனே! இதைக் கேட்கும்போதே வயிற்றைக் குமட்டுகிறதே.”

அவளுக்கு வயிற்றைக் குமட்டிச்கொண்டு வந்தது. வெளியே பாய்ந்து வாந்தியெடுத்துவிட்டுத் திரும்பினாள்.

“பார் நினைத்தாலே உனக்கு வாந்தியெடுக்கிறது. ம், அவர்களுக்கு இன்றையப் பொழுது போய்விடும். நாளைக் கும் பொழுது விடியுமே”

“அல்லாஹ்! கருணாமூர்த்தியே! இதற்கு மேலும் அவர் களைச் சோதிக்காதே! நாம் வேண்டுமானால் ஒரு வேளை, இரண்டு வேளை கொடுத்து தவலாம். அதற்குமேல் நமக்குத் தௌலத்தில்லையே.”

“நானொரு நல்ல முடிவுக்கு வந்துவிட்டேன். ஹஜ் யாத்திரைக்கென்று நாம் சேமித்து வைத்திருக்கும் பணத்தை நமது அண்டை வீட்டாருக்குக் கொடுத்திடத் தீர்மானித்து விட்டேன்.”

“இஃதென்ன விபரீதம்! ‘ ஹஜ்’ செய்வதென்ற ஹாஜத்துக்காக, பல வருடங்களாக எறும்பு போல உழைத் துச் சேமித்த தொகை அதிலே மாத்திரம் கை வைக்க வேண்டாம்.”

இதைக் கேட்டதும் அஹ்மத் அர்த்த புஷ்டியான ஒரு புன்னகை உதிர்த்தார்.

“அடி பேதைப் பெண்ணே ! இதைவிட மேலான ஹஜ் இருக்கிறதா? இந்தப்பணம் நமது அடுத்த வீட்டாரின் வறுமையைப் போக்குமானால், நமக்கு ஏழுமுறை ஹஜ் செய்த தவாப் கிடைக்கும். நீ இதிலே ஒத்துழைத்தால் உனக்கும் அந்தப் பாக்கியம் கிட்டும்.”

“எனது அறியாமையைச் சபியுங்கள் . இதோ உங்கள் பணிக்கு நானும் பச்சைக்கொடி உயர்த்துகிறேன்.”

– தினகரன் 1969

– மருதூர்க்கொத்தன் கதைகள், முதற் பதிப்பு: ஜனவரி 1985, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம், சாய்ந்தமருது, கல்முனை (இலங்கை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *