அழகின் குரூரங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 17, 2014
பார்வையிட்டோர்: 15,582 
 
 

நிலா குளித்து எழுந்த ஒரு வானத்துத் தேவதை மாதிரி அவள். நிலா கூட அவளது ஒளி நிறைவான காட்சியழகுக்கு முன்னால் கண்கள் கூசித் திரை மறைந்து கொள்ளும். அழகியென்றால் அப்பேர்ப்பட்ட அழகி கொழும்பு நகரின் முடி சூடிக் கொண்டு விட்ட அதி தேவதைகள் வரிசையில் அவளும் ஒருத்தி அதைவிடப் பெரும் பணக்காரி கணவன் ஒரு கணக்காளர் ஓடிட் செய்வதற்கு தனியான ஒரு கம்பனி நிர்வாகம் அவரிடம் உண்டு

அந்தஸ்தளவில் சமூக அங்கீகாரம் பெற்ற ஒரு கெளரவமான பெரிய மனிதர் அவர் பெயர் தான் நரசிம்மன் பார்ப்பதற்குப் பரம சாது தினம் குடியே கதியென்று கிடந்தாலும் எல்லை மீறிப் போகாத அவருடைய அந்தச் சாந்த சுபாவமே, சாவித்திரிதேவியென்ற அந்தப்பேரழகியைப் படி தாண்ட வைத்து ஊர் சிரிக்க அவள் கதை நாறுகிறது

ஊரிலேயென்றால் அப்படித்தான் நடந்திருக்கும். இது நாகரீக முன்னேற்றம் கண்ட கொழும்புப் பட்டினம் என்றபடியால் அவள் கற்பு நிலை சரிந்து யாரோடு எப்படிப் போனாலென்ன. இங்கு கேள்வியில்லை. வெள்ளவத்தையிலேயே யாரும் அதைக் கண்டு கொள்ளவில்லை. அங்கு தான் நிறையத் தமிழர்கள் குடியிருப்புகள் . விகார லேனில் அவர்களுடைய மாளிகை போன்ற தனி வீடு. இரண்டு அடுக்கு மாடி வீடு வீட்டு வேலைகளக் கவனிக்க இரு வேலையாட்கள் சமையல் வேலை செய்ய ஒரு பெண் வேலைக்கரியும் வீடு கவனிக்க ஓர் ஆணுமாக இருவர் .பிள்ளைகள் ஐந்து பேர். மூன்று பெண்கள் இரு ஆண்மக்கள். இளமை கொழிக்கும் வாலிப வயது அவர்களுக்கு.. கடைசிப் பெண் நிஷாவுக்குப் பிறகு குழந்தைகளே வேண்டாமென்று தேவி குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டு விட்ட நிலையிலும் இளமை நதி வற்றாத ஒரு பேரழகி நினைப்புத் தான் அவள் மனசெங்கும். அப்படி அலை புரண்டு பெருக்கெடுத்தோடும் அவளின் இளமை உணர்ச்சிகளுக்கு இப்போது வடிகால் நரசிம்மனல்ல. மிக இளம் வயதிலேயே முடியெல்லாம் கொட்டி வழுக்கை விழுந்து பார்ப்பதற்கு அவர் ஓர் அரைக் கிழவன் போல இருக்கிறார்.

அவரோடு மனம் ஒன்றுபட்டு வாழ்க்கை நடத்திய நிலை போய் இன்னொரு ஆணிடம் மனதைப் பறி கொடுத்துச் சித்தம் பேதலித்துப் போகுமளவுக்கு தேவியின் தரம் கெட்ட நடத்தை மாற்றங்கள் அவர் அறிய வெளிப்படையாகவே நடக்கலாயின.. இதைப் பிள்ளைகளும் அறிவார்கள்

சங்கர் என்று அவர்கள் வீட்டுக்கு முன் எதிரில் நீண்ட நாட்களாகக் குடியிருக்கும் மிகவும் கவர்ச்சியான ஓர் இளம வாலிபன்.. அவன் ஓர் இளம் வழக்கறிஞன் இன்னும் கல்யாணமாகாமல் வேறு இருக்கிறான். கற்றை கற்றையாகப் பணம் கொழிக்கச் சுக போக வாழ்க்கையில் திளைத்திருக்கும் தேவிக்கு அவன் மீது மையல் கொண்டு அலைவது ஒன்றும் விபரீதமாகப்படவில்லை.. மேனி மினுக்கி உலா வரும் அவளின் நாளாந்த பொழுது போக்குகளுக்கு விலையாக திசை மாறித் தடம் புரண்டு போன அவளது கற்பின் தடங்கள்.

ஏற்கனவே அவளின் மதி மயங்க வைக்கும் பேரழகைக் கண்டு மனதைப் பறி கொடுத்தவன் தான் இந்தச் சங்கரும்.. இருந்தாலும் உள்ளூர ஒரு பயம் அவள் ஒன்றும் கன்னி கழியாத, வண்டு தீண்டாத புது மலரல்லவே. கன்னி கழிந்த இன்னொருவரின் மனைவி. மாற்றான் மனைவியை மனதால் தீண்டுவதே பெரும் பாவம்.. கண்கொண்டு பார்ப்பது அதைவிடப் பெருங்குற்றம். ஆனால் பார்க்காமல் இருக்க முடியவில்லையே. தினமும் ஜன்னல் வழியே அந்த நிலா முற்றத்தில் அவளின் அழகிய முக தரிசனத்துக்காக அவன் தவம் கிடந்தது ஒன்றும் பொய்யாகி விடவில்லை. அவளே வலிய வீடு தேடி வந்து ஆட் கொண்டு அருள் புரிந்த பின் ……………….சீ இப்படி நினைத்த மனமும் எரிந்து போகும். ஆட் கொள்வதற்கும் அருள் புரிவதற்கும் அவள் என்ன அம்மனா? காசுக்காகக் கற்பையே விலை கூறி விற்கும் பரத்தையை விட இவள் படு மோசமான கறை பட்ட ஒரு பெண்மை நிழல் நிஜமென்பது முற்றாக ஒழிந்து போய் ஒரு உயிர் வற்றி அல்லது இல்லாமல் போன சடம் வெறித்த ஒரு குரூர நிழலின் கறை தின்று சாகக் கிடந்த நிலையிலும் நரசிம்மனுக்கு விழிப்பு மாறாத பெருந்தவமாய் அவருடைய அந்த விரிந்து அகன்ற வாழ்க்கை வேள்வி. .தானுண்டு தன் தொழிலுண்டு என்றே அவருடைய காலம் போகும். எப்போதும் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பவர் சங்கருடனான தேவியின் கள்ளக் காதல் குறித்து, அவர் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.

இருந்தாலும் அவரிடம் கொண்ட இயல்பான பயம் காரணமாக திரை மறைவிலேயே அவர் அறியாமல் தேவியின் உறவு திரிந்து போன விபரீத நாடகம் படு அமர்க்களமாக அரங்கேறிக் களை கட்டி நிற்கும்.. பிள்ளைகளுக்கும் அது தெரியும் அம்மாவின் சினேகிதனென்று சங்கரைப் பற்றி அந்தரங்கமாக அவர்கள் தங்களுக்குள்ளே சிலாகித்துப் பேசிக் கொள்வார்கள். முதல் நான்கு பேர் மட்டும் தான், இப்படி அம்மா பக்கம் எப்போதும் சங்கருக்கு நரசிம்மன் அறியாமல் மறைத்து வைத்துச் சாப்பாடு அனுப்புவது கூட அவர்கள் மூலமாகத்தான் ஆனால் கடைசிப் பெண் நிஷா மட்டும் இதற்கு எதிர்மாறான ஒரு கலங்கரை விளக்கம் அப்பா என்றால் அவளுக்கு உயிர்

அப்பா வாங்கிக் கொடுத்த சொகுசுக் காரிலேயே மாலை வேளைகளில் அம்மா சங்கரோடு உல்லாசமாக நாடு சுற்றிப் பயணிப்பதும் ஹோட்டலில் ஒன்றாகக் களித்து விருந்துண்டு மகிழ்வதும் அப்பாவுக்குச் செய்யும் பெருந் துரோகமாக அவள் கவலை கொண்டு மனம் வருந்துவாள். அப்பாவின் காலத்திற்குப் பிறகு சமூக அங்கீகாரம் கிடைக்க்கிறதோ இல்லையோ தன் இஷ்டத்திற்கு அவள் சங்கரையே மறுதாரமாக மணம் செய்து கொண்டு சுமங்கலிக் கோலத்துடன் வலம் வரவும் தயங்க மாட்டாளென்று மனதில் படும் போது இது பற்றி அறிவு பூர்வமாக அவளோடு தர்க்கித்து நீதியை நிலைநாட்ட வேண்டுமென்று விரும்பி ஒரு சமயம் தேவி வீட்டில் ஓய்வாக இருக்கும் போது நிஷா மிகவும் மனம் உடைந்து போய்க் கேட்டாள்.

“அம்மா! இது உங்களுக்கே குழி தோண்டுற மாதிரி அப்பாவைப் பற்றி இந்தத் துரோக நினைப்பு எப்படியம்மா உங்கடை மனசிலே வேரூன்றியது? இதை இப்பவே களைஞ்சு போடாவிட்டால் எங்களையும் இந்தச் சாபம் கொன்று போடுமோ என்று எனக்கு ஒரே பயமாயிருக்கு”

“நிஷா !ஒன்று சொல்லுறன் குடிகாரனான உன்ரை அப்பாவின்ரை பெருமையை நீதான் மெச்ச வேணும் .சீ! அவர் முகத்தைப் பார்க்கவே இப்ப எனக்குப் பிடிக்கேலை சங்கரை எனக்கு நிரம்பப் பிடிச்சிருக்கு ஒரு நாளைக்கு அவனைப் பார்க்காமல் இருக்க முடியேலை இப்படி நான் சந்தோஷமாக இருக்கிறது உனக்கு வயிற்றெரிச்சலென்றால் அதுக்கு நானே பொறுப்பு“

“ஐயோ அம்மா உங்கடை சந்தோஷம் நியாயமானதாய் இருந்தால் நான் ஏன் சந்தோஷப்படாமல் இருக்கப் போறன் தரம் கெட்ட உங்கடை இந்தச் சந்தோஷத்தின் பொருட்டு நானும் மகிழ என்ன இருக்கு? இது பெண்மையையே களங்கப்படுத்தும் ஒரு கேவல நினைப்பில்லையா? இப்படி நீங்கள் வரம்பு மீறி அப்பாவுக்குத் துரோகம் செய்து ஆட்டம் போடக் காரணம் உங்கடை திமிரல்ல உங்கடை அழகு நினைப்புத்தானென்று நான் நம்புறன் அப்பாவுக்கு நல்லாய் வேணும் போயும் போயும் இப்படி ஒரு அழகுச் சாக்கடையிலே மனசைப் பறி கொடுத்தாரே அவர் புத்தியைத் தான் செருப்பால் அடிக்க வேணும்”

என்று அவளுடைய மனம் கொதித்துப் பொங்குகிற தர்மாவேசம் கண்டு தேவி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் நையாண்டியாகச் சிரித்தபடியே கூறினாள்

“போய் நல்லாய் அடி விழுகிற அந்த அடியிலே அவருக்குப் புத்தி வருகிறதோ இல்லையோ உனக்குத் தான் கை வலிக்கப் போகுது “

“அம்மா என்ரை கை வலி பற்றி நீங்கள் சொல்லுறியள் மனசாலை உடைஞ்சு போய் எனக்குள் உதிரம் கொட்டுதே இந்தக் காயத்துக்கு என்ன மருந்து? சொல்லுங்கோவம்மா குரூரம் வெறிச்சுச் சாக்கடை போலான உங்கடை அழகு இருக்கல்லே அது மருந்தாகி விடுமா?

இதைக் கேட்டு விட்டு மனம் பொறுக்காமல் அவள் கதறியழுத சப்தம் கல்லையும் கரைய வைக்கும் தேவியோ கரைய மனம் வராமல் கல்லையும் விடப் படுமோசமாய் அவளின் அந்த ஒளியுலகம் கண்கொண்டு பார்க்கிற காட்சிக்கு மட்டுமே அவள் ஒரு தேவதை காட்சியழகில் கண் அவிந்து போன வெறும் காட்சி நிழல் இப்போது அவள் இப்போதல்ல என்றுமே தான் அப்படி நினைத்துப் பார்க்கிற போது நிஷாவின் கண்களை எரித்தது அம்மாவின் அபரிதமான கொடி விட்டுப் பறக்கும் அழகல்ல கறைபட்ட குரூரம் வெறித்த அதன் நிழல்தானென்று அவள் மிகவும் மன வருத்தத்தோடு நினைவு கூர்ந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *