கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 27, 2023
பார்வையிட்டோர்: 474 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று சந்தியாவால் அலுவலகத்தில் வேலை செய்யவே முடியவில்லை. அந்த இனிய காலைப்பொழுதில் தனது வசீகரமான தோற்றத்தை மேலும் மெருகூட்டும் விதத்தில் முதன் முதலாக சேலையில் வந்திருந்தாள். அதுவே மனதில் ரம்மியத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தியிருந்தது. 

காலையில் அவன் சந்தியாவின் கண்ணில்பட்டு அவள் இதயத்தில் சலனமூட்டி ஆனந்த பரவசத்தைத் தந்தான். இன்னும் ஒருமுறை அவனைப் பார்க்க வேண்டுமே! மனது சொல்லியவண்ணமே இருந்தது. அவனாவது அவளை விட்டு வைத்தானா? வைத்த கண்வாங்காமல் அவளை விழிகளாலேயே உண்டுவிட்டானே! 

அன்று காலை சற்று நேரத்தில் டீசலை உண்டுவிட்டு ஏப்பமிடுவது போல ‘ப்ரேக்’ சத்தத்துடனும், பயணிகளை சாபமிடுவது போல தூசியைக்கிளறி புகையுடனும் வந்து நின்றது பஸ். ஏறிய சந்தியாவின் மான் விழியில் முதலில் அவன் உருவமே பட்டுத் தெறித்தது. சுருளான கேசம், நீண்ட நாசி, நேர் வரிசைப்பற்களில் ஒன்று விலகியதாலே அமைந்த அழகான சிரிப்பு. இப்படி சகலவற்றிலுமே அழகாயிருந்தான். 

அவளது அதிஷ்டமோ என்னவோ அவனது அம்மாவின் பக்கத்திலேயே இடம் கிடைத்ததால் அவள் மனம் மகிழ்ந்தது. அவளது காந்த விழிகள் அவனை மேய்ந்த வண்ணமே இருக்க அவனும் அவளைப் பார்த்து சிரிப்பதுவும் ஏன் தொடுவதுமாக இருந்தான். அடச்…சீ ஒரு பருவ வயதழகியை அவன் அம்மா முன்னிலையிலேயே இப்படி கிண்டல் பண்ணுவதா என அவள் நினைக்கவில்லை. அதுவே அவளுக்கு சுகமாயிருந்தது. 

‘எங்கம்மா வேலைக்கிப் போறியா…? ஊரெது, தொழில் என்ன, பேர் என்ன…?’ என்று அவனது அம்மாவின் அடுக்கு கேள்விகளுக்கு பதில் கூறியே இருவரும் புது உறவை ஏற்படுத்திக்கொள்ள தயாராயிருப்பதை சிரித்து ரசித்தான் அவன். 

சில நிமிடங்களில் தன் கெமரா போன் மூலமாக திருட்டுத் தனமாக அவனை அதில் பதிவு செய்த சந்தியா கனத்த இதயத்துடன் விடை பெற்று இறங்கி அலுவலகம் வந்துவிட்டாள். வழக்கத்துக்கு மாறாக யாருடனும் பேசாமலும், இன்னும் வீட்டுக்குப் போகாமலும் யோசித்துக் கொண்டிருந்த சந்தியாவைப் பார்த்து ஆச்சரியமடைந்தாள் நண்பி. 

‘எனக்கும் வேண்டும் இப்படியொரு…’ என்று தனக்குத்தானே உளறிக் கொண்டிருந்தாள் சந்தியா. 

அவளைப் பார்த்து ‘ஏய் சந்தியா ஆபீஸ் விட்டாச்சி. நீ வீட்டுக்குப் போகலியா? என்று கேட்டவாறு அருகில் வந்து போட்டோவைப் பார்த்துவிட்டாள் சந்தியாவின் தோழி. ஒரு கிண்டல் சிரிப்பை அவள் உதிர்க்க, கற்பனை கலைந்த அவ்வேளையிலும் சந்தியாவின் முகம் செக்கச்சிவந்து உதடு துடித்தது. 

வீட்டில் போய் தனது அறையைக்குச் சென்று கதவைத் தாழிடாமல் அவன் போட்டோவை ஆற அமர, ஆசை தீர ரசித்துவிட்டு எதேச்சையாக திரும்பினாள். திரும்பியவள் மூச்சுத்திணறி அதிர்ந்தாள். எதிரே பெற்றோர். 

‘யாரவன், யார் பிள்ளை?’ என வினா தொடுக்க நிதானமாய் எல்லாவற்றையும் கூறி முடித்தாள். விபரம் அறிந்த பெற்றோர் கேள்விகளை விட்டுவிட்டு புன்னகை பூத்தூவ சந்தியாவின் மகிழ்ச்சி இரட்டிப்பானது. 

நடந்த அனைத்தையும் பார்த்தவாறு போட்டோவில் அழகாக சிரித்தவாறு அவனிருந்தான். ஆமாம் சரியாக மூன்று வயது கூட நிரம்பாத அவனைப் பார்த்து, அவன் அழகை ரசித்து சந்தியா மீண்டும் தனக்குத் தானே கூறிக் கொண்டாள். ‘எனக்கும் வேண்டும் இப்படி ஒரு அழகான பிள்ளை!!!

– வைகறை (சிறுகதைகள்), முதல் பதிப்பு: நவம்பர் 2012, இலங்கை முற்போக்கு காலை இலக்கிய மன்றம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *