அல்ட்ராமேன்

0
கதையாசிரியர்: ,
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 12,622 
 

‘குமாரு… குமாரு…’ பெயரைக் கூப்பிடும் ஓசை சன்னமாகக் கேட்டபோது குமாரின் கண்கள் திறந்து கொண்டன. தலை அசைக்க முடியாத அளவிற்குக் கனத்தது. கண்கள் எரிந்தன. இப்போது குரலோசை இன்னும் வேகமாகக் கேட்டது. குரலோடு கதவு தட்டப்படும் ஒசையும் சேர்ந்து கொண்டது. மெதுவாக எழுந்து பாயில் உட்கார்ந்தான் குமார். தம்பி கால்களைக் குமாரின் தொடைகளில் போட்டபடி படுத்திருந்தான். தம்பியின் வலதுக்கை குமாரின் இடுப்பைச் சுற்றியிருந்தது. அன்னம்மா பாட்டி கதவை உடைத்து விடுவார் என பயந்து ‘வரேன் பாட்டி’ எனக்குரல் கொடுத்தான் குமார். தம்பியின் காலையும் கையையும் மெதுவாக அகற்றினான். எச்சரிக்கை மிகுதியால் உதடுகள் சேர்ந்துகொண்டன. தூக்கம் தடைப்பட்டதால் எதிர்முகமாகத் திரும்பிப்படுத்தான் தம்பி. மூத்திர கவுச்சி நாசியைத் துளைத்தது. தலையை இப்படியும் அப்படியும் ஆட்டிக் கொண்டான். ‘மூத்திரத்தை பேஞ்சிட்டு வந்து படுக்கச் சொன்னா கேக்கிறானா?’ மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

வரவேற்பறைக்கு வந்த போது அப்பாவின் குறட்டை ஒலி பயத்தை ஏற்படுத்தியது. அறையெங்கும் அப்பாவின் உடல் வீச்சமும், நேற்று குடித்திருந்த சம்சுவின் நாற்றமும் கலந்த பயங்கர நெடி. மூக்கைப் பிடித்துக் கொண்டான். கதவைத் திறந்த போது அன்னம்மா பாட்டி தலையில் கொட்டினாள். ‘இவ்ள நேரமாடா, தூங்குமூஞ்சி’ என்று செல்லமாக வைதுக் கன்னத்தைக் கிள்ளினார். ‘உங்கம்மா காசு கொடுத்திட்டு போனாங்க, பசியாற வாங்கிட்டு வர சொன்னாங்க, இன்னிக்கு அம்மாவுக்கு ‘A’ வெட்டு’ புகையிலையை வாயில் குதப்பியபடியே சொல்லிவிட்டு அகன்றார் பாட்டி. எதிர் லயன் சூரியனைப் பாதி மறைத்தப்படி இருந்தது. மணிப் பார்த்தான். கட்டை முள் ஒன்பதைக் காட்டியது. அப்பாவின் குறட்டை ஒலி தடைப்பட்டுத் தடைப்பட்டு ஒலித்தது. அப்பா இன்றும் வேலைக்குத் திட்டி.

அம்மா மீது கோப கோபமாக வந்தது குமாருக்கு. பள்ளி விடுமுறை நாட்களில் தீம்பாருக்கு வந்து ‘கிளாஸ் துடைக்க’ உதவலாமென்றால், அம்மா மறுத்து விடுகிறார். குமாருடன் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் ராஜா, மார்ட்டின், சுப்ரமணியம் எல்லாம், அவர்கள் பெற்றோருக்கு ‘கிளாஸ் துடைக்க’ போகும்போது, ஏன் அம்மா மட்டும் வேண்டாமென்கிறார்? சிந்தித்து, சிந்தித்து குழம்பிப் போனான் குமார். இதைப்பற்றி அம்மாவிடம் கேட்கவும் பயமாய் இருக்கிறது. அம்மா எப்போதும் அமைதியாகவே இருக்கிறார். பக்கத்து வீட்டு சந்தன அக்காவைப் போலவோ, எதிர் லயத்து சரோஜா அக்காவைப் போலவோ சிரித்துக் கொண்டே இருப்பதில்லை அம்மா. காலையில் தீம்பார் வேலை. வீட்டிற்கு வந்ததும் சமைப்பார். சாப்பிடச் சொல்லிவிட்டு, மாலையில் ‘மண் போடவோ’, கச்சான் பிடுங்கவோ சென்று விடுவார். இந்த வேலைகள் இல்லாவிட்டால் கொல்லையில் இருப்பார். வேறு எந்த வேலையும் இல்லாவிட்டால் குசினி இருட்டில் கூரைகளை வெறித்தப்படி அமர்ந்திருப்பார். பத்து கேள்விகளுக்கு இரண்டு பதில் சொல்வார். சந்தன அக்கா, பீட்டரைக் கொஞ்சுவதுப் போல அம்மா குமாரைக் கொஞ்சியதில்லை. குமாரிடம் அதிகம் பேசியதெல்லாம் அவனுடைய படிப்பு சம்பந்தமாகத்தான் இருக்கும். தம்பிதான் பாவம். ஏதாவது சேட்டைச்செய்து விட்டு அம்மாவிடம் நன்றாக அடி வாங்குவான். அவள் அழுவதைப் பார்த்து அம்மாவும் அழுவார். பிறகு தம்பியை அணைத்து ஆறுதல் சொல்வார். அப்போதெல்லாம் தம்பியைப் போலவே நடந்து கொள்ள ஆசைவரும்; செய்யமாட்டான். தம்பி இதற்காகவே சேட்டைகள் செய்வான், வாங்குவான், அழுவான்… பிறகு அணைப்பு, தேற்றுதல். ஆனாலும், அம்மா மிகவும் நல்லவர். அம்மா பாவம் என்று அன்னம்மா பாட்டி சொல்வார்.

பின் வாசல் கதவைத் திறந்தப் போது, சீனக்கடைக்கு ஆள் வர ஆரம்பித்திருந்தார்கள். ஆ லின் அக்கா ‘நாசி லெமா’ மற்றும் ‘மீகுனோடும்’ வியாபாரத்துக்குத் தயாராகி இருப்பார். ‘நாசி லெமா’வை நினைத்ததும் நாக்கில் எச்சில் ஊறியது. குளியலறைக்குள் நுழைந்தான் குமார். குளியலறை என்றால், குசினியோடு மூன்று பக்கமும் ஒன்றரை ஆள் உயரத்திற்கு எழுப்பப்பட்டிருக்கும் அலுமினியக்கூரைகள். பல் துலக்கியவுடன், தோம்பிலிருந்து தண்ணீரை எடுத்து வாயைக் கொப்பளித்தான். மீண்டும் குசினிக்குள் நுழைந்தபோது கண்கள் கசக்கியபடி தம்பி நின்றிருப்பதைக் கண்டான்.

‘தீம்பாருக்குப் போறியாண்ணே?’

‘இல்லையே’

‘பொய் சொல்லாதே, அன்னம்மா பாட்டிகிட்ட பேசினதைக் கேட்டேன்’

‘நீ அன்னம்மா பாட்டி கூட இரு, அண்ண அம்மாவுக்கு பசியாற கொடுத்திட்டு சீக்கிரம் வந்துர்றேன்’ தம்பியின் கன்னத்தைத் தடவியபடி சொன்னான்.

‘இல்ல, நானும் வரண்ண…’ கால்கள் இரண்டையும் தரையில் தட்டியபடியே கெஞ்சினான்.

‘வேணாம்டா, கொசு அட்டையெல்லாம் இருக்கும், அம்மா ஏசுவாங்க’

‘நான் அல்ட்ராமேன், கொசு அட்டையெல்லாம் என்னை ஒன்னும் செய்யாது’. குமாருக்கு சிரிப்பு வந்தது. தம்பிக்கு அல்ட்ராமேன் ரொம்ப பிடிக்கும். புதன் கிழமை மாலை 4.30 மணிக்கு அல்ட்ராமேன் ‘ராட்ஸச மிருகத்திடம்’ பொருதும் போது தம்பியும் உற்சாகமாகி விடுவான். சண்டையின் பாதிக் கட்டத்தில், அல்ட்ராமேன் சோர்ந்து நெஞ்சில் சிவப்பு விளக்கு எரியும் போது, தம்பிக்கு இன்னும் வேகம் வந்து விடும். ‘அல்ட்ராமேன், எழுந்திரு, எழுந்திரு, பேய் கூட சண்டை போடு’ என கத்தத் தொடக்கி விடுவான். அப்போதெல்லாம் அவன் கண்களில் அசாதாரண வெறி பளிச்சிடும். ‘ஆ…ஓய்…ஏய்’ என்று அல்ட்ராமேனின் ஒவ்வொரு அசைவுகளையும் ஓசையோடு பிரதிபலித்துக் கொண்டிருப்பான். தானும், ஆறு வயதில் இப்படியெல்லாம் நடந்து கொண்டிருப்பேனோ? கேள்வியலை எழும் குமாரின் மனதில். அப்படி நடந்து கொண்டதாக ஞாபகம் இல்லை. அம்மாவிடம் கேட்கலாம் என்று நினைப்பான். கேட்டதில்லை. இப்போதெல்லாம் குமாருக்கு அல்ட்ராமேன் பிடிப்பதில்லை. நல்லவனுக்குத் துன்பம் என்றால் அல்ட்ராமேன் தோன்றுவானாம். அம்மா அடி வாங்கும்போதெல்லாம் அல்ட்ராமேன் வருவதில்லையே? தம்பி சிறுபையன்தானே. இதற்குப் பிறகும் மறுத்தால், எந்த நேரத்திலும் உடைத்துக் கொண்டு வெளியேற தம்பியின் கண்களில் கண்ணீர் ஆயத்தமாக இருந்தது.

‘ஐம்பது காசுக்கு ஒரு புங்குஸ், இருபது காசுக்கு ரெண்டு, பத்து காசுக்கு ஒன்னு’ குமார் ஆ லின் அக்காவிடம் சொன்னான். ‘யாருக்குடா அம்பது காசு நாசி லெமா?’ ஆ லின் அக்கா கேட்டார். ‘அப்பாவுக்கு’ தனக்குள் முனகுவதுப்போல சொன்னான் குமார். ‘உங்கப்பனுக்கு இது ஒன்னுதான் கேடு’ அக்காவின் குரலில் வெப்பம் தெறித்தது. குமார் பார்வையை தரையில் படரவிட்டான். ‘அப்பா இன்னிக்கும் வேலைக்குத் திட்டியா?” இன்னும் தலை நிமிரவில்லை குமார். தம்பி கையை சுரண்டிக் கூப்பிட்டான்.

‘எனக்கும் இருபது காசு நாசி லெமா வேணும்’

‘காசு பத்தாதுடா, நாளைக்கு வாங்கி தரேன்’ தம்பியைச் சமாதானப்படுத்தினான். இரண்டு ஐம்பது காசு நாசி லெமாவும், இரண்டு இருபது காசு நாசி லெமாவும் மடித்துத் தந்தார் ஆ லின் அக்கா. ‘குடிகார நாயி… குடிகார நாயி…’ என்று முனகிக் கொண்டே, ‘அம்மாவுக்குப் போய் கொடுடா, உழைக்கிற பொம்பள, நல்லா சாப்பிடட்டும்’. ஒரு வெள்ளி மட்டும் வாங்கிக் கொண்டார். அக்காவை அப்படியே அணைத்துக் கொள்ள ஆசையாக இருந்தது குமாருக்கு.

‘A’ வெட்டு துரை பங்களாவிற்குப் பின்னால் இருந்தது. 10 நிமிட நடை. துரை பங்களா வேலியோரமாகவுள்ள ஒற்றையடிப்பாதையில் ஐந்து நிமிடம் நடந்தால் ஒரு மேடு வரும். மேட்டைக் கடந்தால் பெருமாள் ‘வெட்டு’க்கு பக்கத்தில் அம்மாவின் ‘வெட்டு’. தம்பி உற்சாகமாக இருந்தான். வழியில் ‘கித்தாக் கொட்டை’களைப் பொறுக்கியபடியே நடந்தான். தலையைச் சுற்றி பறந்து கொண்டிருந்த கொசுக்களையெல்லாம் ‘அல்ட்ராமேன்’ என கத்திக் கொண்டே கையை அல்ட்ராமேன் போல அசைத்து விரட்டினான். நேற்று நடந்தது மீண்டும் ஞாபகம் வந்ததுமே காலை காற்று உடலை மேலும் சில்லிடச் செய்தது. ‘மண் போட்டு’ விட்டு வர தாமதமாகிவிட்டதால் அம்மா பழையதையே வைத்து விட்டார். குமாருக்கும் தம்பிக்கும் ‘சோறு பிரட்டி’ கொடுத்தார். அப்பாவுக்கு கருவாடு மட்டும் பொரித்தார். குமாரும் தம்பியும் தூங்கி விட்டார்கள். திடீரென்று, பலத்த சத்தத்தோடு அம்மா வீறிட்டுக் கத்தினார். ‘பொத், பொத்’ என்று சத்தம் கேட்டது. தம்பி பட்டென்று திரும்பி குமாரை இறுக்கமாகக் கட்டி கொண்டான். குமார் கண்களை இறுக மூடிக் கொண்டான். குமாருக்கும் தம்பிக்கும் வேர்க்கத் தொடங்கியது. அப்பா, அம்மாவை ஏதோ கெட்ட வார்த்தையில் திட்டினார். அம்மா தேம்பும் ஒலி மட்டும் கேட்டது. அன்னம்மா பாட்டி கதவைத் தட்டி, அப்பாவை ஏசிக் கொண்டிருந்தார். குமாருக்கு ரொம்ப பயமாக இருந்தது. தம்பியின் உடல் பயத்தால் நடுங்க ஆரம்பித்திருந்தது. காதில் காற்றை அழுத்தச் செய்துச் சத்தத்தை மறுதலிக்க முயன்றான். கண்களை மேலும், மேலும் இறுக்கமாக மூடிக் கொண்டான்.

உணவை சாக்கின்மேல் வைத்து வாளியால் மூடினான் குமார். பக்கத்திலிருந்த பெரியக் கல்லை எடுத்து வாளியின் மேல் வைத்தான். ‘தம்பி, இங்கேயே இரு, குரங்கு வந்து சாப்பாட திருடிற போவுது’. ‘நான் அல்ட்ராமேன்’ என்று சொல்லி குரங்குக்கு சவால் விட்டான் தம்பி. மரம் சீவி முடிக்கும் தருணம்தான். கடைசி பத்தியில் இருந்தாள் அம்மா. இன்னும் இருபது மரங்கள் இருக்கும். அம்மாவிடம் ஓடினான் குமார். குமாரைப் பார்த்ததும் சிரிக்க முயன்றார் அம்மா. அம்மாவின் வலதுக் கண்ணைச் சுற்றி கருமையாக இருந்தது. நடையில் சற்று தடுமாற்றம் தெரிந்தது. தலையைச் சுற்றி கொசுக்கள் பறந்து கொண்டிருந்தன.

‘சாப்பிட்டாச்சா’

‘இல்லை’ என்றான் குமார்.

கோட்டுப் பாலை கட்டிப்பாலிலிருந்து பிரித்தெடுத்தார் அம்மா. கட்டிப்பாலையெல்லாம் சாக்கினுள் திணித்துக் கம்பியால் கட்டினார். மலத்தைப் போல நாறியது கட்டிப்பால். இரண்டு கரண்டிதான் கொண்டு வந்திருந்தான் குமார். தம்பியும் கரண்டியில் சாப்பிடுவேன் என்று அடம்பிடித்தான். அம்மா கரண்டியைத் தம்பியிடம் கொடுத்துவிட்டு, இரண்டு ரப்பர் குச்சிகளை எடுத்தார். குச்சிகளின் மேல்பட்டையை உரித்துப் போட்டார். தோலை இழந்தக் குச்சிகள் மஞ்சளாகக் காட்சியளித்தன. அம்மா, சீனரைப் போல் சாப்பிடத் தொடங்கினார்.

‘ஏம்மா உங்க கண்ணு கருப்பா இருக்கு,’ என்று கேட்டுவிட்டு, தம்பி கரண்டியால் சோற்றுக் கட்டிகளை குத்தி உடைக்கத் தொடங்கினான். குமாரால் சாப்பிட முடியவில்லை. நெஞ்சில் ஏதோ அடைப்பதுப் போல் இருந்தது.

‘ஏம்மா அப்பா உங்களை அடிக்கிறாரு?’

அம்மா சாப்பிடுவதை நிறுத்திக் குமாரைப் பார்த்தார். பிறகு தலையைத் தாழ்த்திக் கொண்டார்.

‘நீ நேற்று தூங்கலையா?’ அம்மாவின் குரலில் பிசிறடித்தது.

‘நீங்க அடி வாங்கும்போதெல்லாம், அப்பாவை ஓங்கிக் குத்தனும் போல இருக்கும்’ குமார் பேசிக் கொண்டிருக்கும்போதே அம்மா அவன் வாயைப் பொத்தினார்.

‘ஆமா, குத்தனும், குத்தனும், நான் அல்ட்ராமேன்… நான் அல்ட்ராமேன்’ என்று சோற்றுக்கட்டிகளை மேலும் ஆவேசமாகக் குத்த ஆரம்பித்தான் தம்பி. தம்பியை அதிர்ச்சியோடு குமார் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அம்மா விசும்பத் தொடங்கியிருந்தார்.

– நவம்பர் 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *