நாம் நம் பள்ளி நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு பருவ காலங்களிலும் ஒவ்வொரு பழங்களைப் பறித்துச் சாபிடுவதிலும் வாங்கிச் சாப்பிடுவதிலும் அனுபவித்த சந்தோசத்தை கண்டிப்பாக யாராலும் மறக்கமுடியாது.
மாங்காய்,மாம்பழம்,நாகப்பழம்,கொடுக்காபுளி,நெல்லிக்காய்,விளாம்பழம்,சீதாப்பழம்,நுங்கு,கிழங்கு,முந்திரிப் பழம்,வெள்ளரி,இலந்தைப் பழம் என ஒவ்வொன்றுக்கும் ஒரு சீசன் உண்டு.அந்த நாட்களில் நம்முடைய சிந்தனை முழுதும் அதை சுற்றியே இருப்பது தவிர்க்க முடியாதது!.இவற்றில் ஏதேனும் ஒரு மரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து நாம் கண்டிப்பாக கல் எறிந்திருப்போம்.அப்படி என் வாழ்வில் மறக்க முடியாதது இலந்தை பழம்.எங்கள் ஊரில் உள்ள ஒரு பாட்டி வீட்டில் இரண்டு இலந்தை மரங்கள் அருகருகே இருந்தன.அவை அண்ணன் தம்பியைப் போல ஒன்று பெரிதும் மற்றொன்று சிறிதுமாக இருக்கும்.நண்பர்களுள் சிலருக்கு சிறிய மரத்தின் பழத்தின் சுவை பிடிக்கும்.எனக்கும் மற்ற சிலருக்கும் பெரிய மரத்தின் பழத்தினுடைய சுவை பிடிக்கும்.அந்த மரம் அமைந்த கொல்லை மிகப் பெரியது.நடுவே மிகப் பெரிய மாடி வீடு.அதன் பின்னே இம்மரங்கள் வளர்ந்து நின்றன.நாங்கள் பள்ளியிலிருந்து வரும்போது இந்த வீட்டை தாண்டியே எங்கள் வீட்டுக்கு போக வேண்டும்.இலந்தை காய்க்க ஆரம்பித்ததுமே நாங்கள் எங்கள் வருகையை அங்கே பதிந்துவிட்டே பள்ளிக்கும்,திரும்ப வீட்டுக்கும் செல்வது வழக்கம்.இதிலென்ன சிறப்பு என்கிறீர்களா?உண்டு.அது சௌந்தரம் கிழவி…
நேரில் பாட்டி என்றாலும் நாங்கள் எங்களுக்குள் கிழவி என்றே அழைப்போம்.
சௌந்தரம் கிழவிக்கு நாங்கள் அத்துமீறி உள்ளே நுழைவது பிடிக்காது.காரணம் ஒருமுறை நண்பன் ஒருவன் எறிந்த கல் நேராக கிழவி வீட்டின் கண்ணாடி ஜன்னலைப் பதம் பார்த்தது.மேலும் கல்லெறிந்து கீழே உதிர்ந்து விழும் இலைகளை கூட்டிப் பெருக்குவது கடினம்.வேலி அடைப்பை நாங்கள் திறந்தே விட்டுவிடுவதால் மாடுகள் உள்ளே கொல்லைக்குள் புகுந்து தென்னம்பிள்ளைகளைக் கடித்துவிடுகின்றன என்பன கிழவியின் குற்றச் சாட்டுகள்.ஆகையால் நாங்கள் வேலி அடைப்பைத் தொட்டதுமே இரைந்துகொண்டே எங்களை விரட்ட ஓடி வரும் கிழவி.வீட்டில் எல்லோரும் வெளியே சென்றுவிட்டாலும் கிழவி மட்டும் காவலாக கையில் ஒரு கம்புடன் வெளியே உட்கார்ந்திருக்கும்.பாதையில் போவோர் வருவோரை யேசிக் கொண்டிருக்கும்.அப்படி யாரும் வரவில்லை என்றால் கோழி,ஆடு மாடுகளை திட்டிக் கொண்டிருக்கும். கிழவியின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு வீட்டின் முகப்பைக் கடப்பதென்பது அவ்வளவு சுலபமல்ல.இருப்பினும் நாங்கள் பிற்காலத்தில் அதில் கை தேர்ந்தவர்களாக மாறிவிட்டோம்.
கல்லெறிந்த சத்தம் காதில் விழுந்தால் நல்ல தமிழ் வசனங்களை பேசிக் கொண்டே கிழவி தாவிக் குதித்து வரும் எங்களை விரட்ட.நாங்கள் போர்க்கால நடவடிக்கையாக அடித்த பழங்களை பைகளில் அடைத்துக் கொண்டு பின் பக்க அடைப்பின் கவயைத் தாண்டி வயல் வெளிகளுக்குள் ஓடிவிடுவோம்.கிழவியின் பேச்சுக் குரல் முழுதும் ஓய்ந்த இடத்தில் ஓட்டத்தை நிறுத்தி எங்கள் பங்கு பிரிப்பை ஆரம்பிப்போம்.ஒருபுறம் கையில் தூக்கிப் பிடித்த சேலையுடன் “பயலுவ என்ன அக்குருமம் பண்ணுதுவ“ என சொல்லிக்கொண்டே அந்தக் கொல்லயயைச் சுற்றி வரும்.விடுமுறை நாட்களில் அந்தப் பின்புற வழியில் சுலபமாய் வந்துவிடுவோம்.காய்ந்த சருகுகளில் காலடி சத்தம் கேட்காமல் மெதுவே நடந்து வருவோம்.எப்படியாவது கிழவி மோப்பம் பிடித்துவிடும்.எங்களுக்கும் கிழவியிடம் வசை வாங்காமல் பறித்த பழங்கள் அன்றைக்கு இனித்ததே இல்லை.அப்படி பறித்த பழங்களை சுவை இல்லை என்று சில நேரங்களில் வீசி எறிந்திருக்கிறோம்.இன்னும் ஊர்ப் பொது இடங்களில் இரண்டு மூன்று இலந்தை மரங்கள் உண்டு.அவை பறிப்பாரற்று கொட்டி அழிந்தாலும் பழங்களை நாங்கள் பறிப்பதே இல்லை.கிழவி அசந்த நேரத்தில் நாங்கள் கொன்றை மரத்திலிருந்து பிடித்து வரும் பொன்வண்டுக்கு இலந்தை இலைகளை உணவாகக் கொடுத்து சினிமாக் கதைகள் பேசி அந்த நிழலில் அமர்ந்திருப்பது எங்களுக்கு பிடித்தமான ஒன்று.அன்றாட வாழ்வில் நாங்கள் பார்க்கும் பழகும் உயிர்களுள் இலந்தை மரம் தவிர்க்க முடியாததாக மாறிப்போனது.என்னுடைய ஆரம்ப பள்ளிக் கால கோடை நாட்களின் பெரும்பாலான பொழுதுகளை இங்கே தான் நண்பர்களுடன் கழித்திருக்கிறேன்.அவ்விரு மரங்களில் எத்தனை கிளைகள் இருந்தன,எப்படிப்பட்ட கவைகள் இருந்தன,எந்த இடத்தில் கணுக்கள் இருந்தன,அதில் எந்த கிளை முறிந்திருந்தது,எந்த கிளையில் அதிகமான காய்கள் இருந்தன என்று என்னால் இப்பொழுதும் காணமுடிகிறது.
கால ஓட்டத்தில் நான் உயர்நிலைக் கல்வி பயில நகரத்திற்கு சென்றுவிட்டேன்.விடுமுறைக்கு ஊருக்கு வந்த போதும் நண்பர்களுடன் சேர்ந்து எங்கள் போதி மரத்தை நாடிச் சென்றோம்.சௌந்தரம் கிழவி வெளியே அமர்ந்திருந்தாள்.நான் அதே பயத்துடன் முகப்பைக் கடந்தேன்.ஆனால் இம்முறை எதுவும் கேட்கவில்லை.முதுமையின் பலகீனத்தால் தலை லேசாக ஆடிக்கொண்டிருந்தது,கண்களும் மங்கியிருக்க வேண்டும் அதனால் தானோ என்னவோ எங்களை சிறிதும் பொருட்படுத்தாமல் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள்.மரத்தின் பெரும்பான்மையான கிளைகள் வெட்டப்பட்டிருந்தன. கிழவியின் மகன் கடலை வயலில் மாடுகள் புகுந்துவிடாமல் இருக்க முள்ளுடன் உள்ள இலந்தைக் கிளைகளை வெட்டி வைத்துவிட்டாராம்.சிறிது நேரம் அங்கேயே நின்றபோது எதோ இடம் மாறி வந்த உணர்வு ஏற்பட நிற்க மனமில்லாமல் நடக்க ஆரம்பித்தேன்.இன்னும் ஆறுமாசத்தில துளிர்த்திடும் என்றான் நண்பன்.கல்லூரியில் சேர்ந்து ஆண்டு முடிந்தது.பேருந்து ஏறியதுமே பழைய இலந்தை மரக் கிளைகள் என் கண்களில் வந்து ஆடியது.பேருந்திலிருந்து இறங்கி வீட்டை எட்டியதும் ஓடிவந்து அணைத்துக் கொண்டாள் அம்மா.நீண்ட நாட்களுக்குப் பின் வீட்டுச் சாப்பாடு.எனக்கு பிடித்த அம்மாவின் கை வண்ணத்திலான மீன் குழம்பு.சாப்பிடும்போது `தம்பி இந்த சௌந்தரம் பாட்டி இருக்குல்ல..அது செத்துபோச்சுடா முந்தாநாளு,காலைல ஒரு எட்டு போயி தலைய காமிச்சிட்டு வந்திடு,அந்த மாமா இருப்பார்` என்றாள் அம்மா.மனதில் பல கேள்விகளுடன் பொழுது விடியக் காத்திருந்தேன்.
பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது வீட்டின் முன்பு.மொட்டைத் தலையுடன் கணேசன் மாமாவும் இன்னும் இரண்டுபேரும் பந்தலில் அமர்ந்திருந்தார்கள்.தகனத்திற்கு வரமுடியாத சில பெண்கள் அன்று வந்து வீட்டினுள் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தது என் காதுகளில் விழ அது லேசான படபடப்பை ஏற்படுத்தியது எனக்கு.என்னைப் பார்த்து மௌனமாக தலையை ஆட்டினார் கணேசன் மாமா.கீழே விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் சென்று அமர்ந்தேன்.சிறிதுநேரம் மௌனம் காத்துவிட்டு லேசாக பின்புறம் எட்டிப் பார்த்தேன்.வெறிச்சோடிக் கிடந்தது.இலந்தை மரம் இருந்த இடத்தில் இரண்டு அடிக் கட்டைகள் மட்டுமே எஞ்சி இருந்தன.மனம் கனத்துபோக கண்களில் நீர் கட்டிக் கொண்டது.உண்மையில் சௌந்தரம் பாட்டியின் மீது பாசம் வந்தது அப்போது எனக்கு.காரணம் அவள் எங்களை எப்போதும் விரட்டியிருதாலும் இவ்வளவு நாட்களாக மரத்தையும்,மரத்திற்கும் எங்களுக்குமான நட்பையும் காத்தவள் அவள் தான் என்பதை உணர்ந்தேன்.பாட்டி இல்லையென்றால் இந்த மரம் எப்போதோ வெட்டப்பட்டிருக்கும்.இவ்வளவு காலமாக அந்த கொல்லையின் எல்லா அசையும் அசையா பொருட்களுக்கும் அவள் காவல் தெய்வமாக விளங்கி இருக்கிறாள்.இலந்தை மரத்திற்காக கட்டிய கண்ணீர் சௌந்தரம் பாட்டிக்காக சொட்டியது.கணேசன் சற்று ஆச்சர்யமாகப் பார்த்தார் என்னை…அவருக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை.கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து நடக்க ஆரம்பித்தேன்…
– 30 ஆகஸ்ட் 2012