அறியாமை என்னும் பொய்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 6, 2021
பார்வையிட்டோர்: 4,250 
 
 

நாற்காலியின் ஒரு பக்கத்தில் கையை ஊன்றிக் கொண்டு கன்னத்தில் கை வைத்தவாறு உட்கார்ந்திருந்தார் சாம்பசிவன். பக்திக்கு மணமுண்டு என்று காட்டுவது போல் அவர் உடம்பில் பூசியிருந்த திருநீறு சுகந்தமான வாசனையை அறை முழுவதும் வாரியிறைத்தது.

அவர் அணிந்திருந்த கதர்ப் பட்டாலாகிய மஞ்சள் சட்டையின் வண்ணத்துடன் இசைந்து பொலிந்த தங்கப் பித்தான்கள், அவ்வறையில் பாய்ந்த காலை வெயிலின் ஒளியில் மின்னின.

அவர் கண்கள் லேசாக மூடியிருந்தன. அவரெதிரே அம்பி ‘படபடப்பாகப் பேசிக் கொண்டிருந்தான். கோபத்தில் அவன் குரல் கிறீச்சிட்டது.

“எவ்வளவு திமிர் இருந்தால் அவர் இப்படிப் பேசுவார்ங் கிறேள்? இது தனிப்பட்டவா விஷயம்… ஊருக்கு இதைப் பத்திப் பேச உரிமை இல்லையாம்… பெரியவா நீங்களெல்லாம் இருக்கச்சே, ஊர் அப்படி விவஸ்தை கெட்டா போயிடுத்து? நானும் தான் கேட்கிறேன்…”

சாம்பசிவன் கண்ணைத் திறந்தார். நின்று கொண்டே பொழிந்த அம்பியை உட்காரும்படி சைகை செய்தார். உடம்பைப் பல கோணல்களாக வளைத்து, இரண்டு கைகளையும் ஒருங்கு சேர இணைத்து, மடியிலிட்டவாறு உட்கார்ந்தான் அம்பி.

“அந்தக் குழந்தை யாரு? அவர் சம்சாரத்தோட பொண்ணா ?” என்று மோதிர விரலில் அணிந்திருந்த வைர மோதிரத்தை கட்டை விரலினால் நெருடிக் கொண்டே கேட்டார் சாம்பசிவன்.

“பின்னே ?… எல்லாம் விசாரிச்சுட்டேன்… ஓடிப்போனவ பெண்தான். அதுவும் இன்னொரு மதக்காரனோட ஓடிப் போயிருக்கா… கெட்டலைஞ்சு, சாகற காலத்திலே ஆம்படையான் காரனுக்கு சொல்லி அனுப்பிச்சாளாம். அவனும் போய் அவ குழந்தைக்குப் பொறுப்பேத்திண்டு அழைச்சிண்டு வந்திருக்கான்…. சே… விவஸ்தை வேண்டாம்?”

சாம்பசிவன் முகத்தில் தோன்றிய புன்னகை, அம்பியை மேலே பேச விடாமல் தடுத்தது.

“எதுக்குச் சிரிக்கிறேள்?” தான் உணர்ச்சி வயப்பட்டுப் பேசும்போது அவர் மௌனமாகப் புன்னகை பூக்கிறாரே என்ற பொறுமையின்மை அவன் குரலில் தொனித்தது.

“அதுவும் இன்னொரு மதக்காரனோடேன்னியே… நம்ப மதக்காரனா இருந்தா பரவாயில்லையா?”

அம்பி ஓர் அசட்டுச் சிரிப்புச் சிரித்தான்.

“ஐயாவுக்கு எப்பொழுதும் ஹாஸ்யம்தான். நம்ப ஊர் கௌரவம்…”

“புரியுது அம்பி, புரியுது. சும்மா வேடிக்கைக்காகச் சொன்னேன். இப்பொ என்ன செய்யணும்ங்கிறே?”

“ஊருக்குப் பெரியவர் நீங்க…. பஞ்சாயத்து போர்ட் பிரிஸிடன்ட்… எம்.எல்.ஏ ஆகப் போறேள்… அவரைக் கூட்டிண்டு வரச் சொல்லி விசாரிங்கோ… ஊர் ஒழுக்கத்தை நீங்கதானே காப்பாத்தணும்?”

‘ஊர் ஒழுக்கம்!’ சாம்பசிவனுக்கு மனத்துக்குள் சிரிப்பு வந்தது. ஊர் ஒழுக்கத்தைப் பற்றி அம்பி பேசுவது வேடிக்கைதான். அவனும் இன்னும் சிலருமாகச் சேர்ந்து கோயில் பணத்தை தம் சொந்தப் பணமாக நினைத்து செலவு செய்ய முற்பட்டபோது, அதை அம்பலமாக்கியவர் நடேசன். ஊர் ஒழுக்கம் நடேசனால்தான் நாசமாகின்றது என்று அம்பி குற்றம் சாட்டுவதற்கு ஒரு வாய்ப்பு இப்பொழுது ஏற்பட்டுள்ளது… நடேசனின் செய்கை தவறு என்று சொல்ல முடியுமா?… தவறு செய்த மனைவியை மன்னித்து தாம் தெய்வமாகி விட்டார்…. ஆனால், மனித நிலையிலே இருந்து கொண்டிருக்கும் தம்மால் அதைப் பற்றி வெளிப்படையாகப் பேச முடியுமா? தேர்தல் வரப்போகின்றது. எல்லா சமூகத்தினரையும் அநுசரித்துப் போவதே விவேகம்… அதுவும், அம்பியின் திறமையில் அவருக்கு அபார நம்பிக்கை…

“என்ன சொல்றேள்?” என்று கேட்டான் அம்பி. “சரி… நான் போய் அவரைப் பார்க்கிறேன்…”

“நடேசனையா? நீங்கள் போய் பார்க்கணுமா?…ஆளை விட்டு கூட்டிண்டு வரச் சொன்னா, தன்னாலே வரார். ஒரு பள்ளிக்கூட வாத்தியாருக்கு இவ்வளவு மரியாதையா?”

“போய்ப் பார்க்கிறேன் விடு… சும்மா அது, இதுன்னு நச்சு பண்ணாதே…”நடேசன்பால் சாம்பசிவனுக்கு மிகுந்த மதிப்புண்டு. அம்பி நடேசனை தூக்கியெறிந்து பேசுவது அவருக்குப் பிடிக்கவில்லை . அதோடு, அரசியல் காரணமாக நடேசனுடைய சொந்த வாழ்க்கையில் குறுக்கிட வேண்டியிருக்கிறதே என்று தம் மீதே ஆத்திரம்….

“என்ன இப்படி கோபப்படறேள்… நடேசனைப் பத்தி ஊர் அபிப்பிராயத்தைச் சொன்னேன்…”

ஊர் அபிப்பிராயமென்று தேர்தலை அவன் நினைவூட்டு கின்றான் என்று சாம்பசிவனுக்குப் புரியாமலில்லை. ‘அரசியலில் போய் மாட்டிக் கொண்டு விட்டோமே’ யென்று அவருக்கு ஒரு கணம் எரிச்சல் ஏற்பட்டது. ஆனால், சமூகத்தலைவரென்ற பாரம்பரியமான அந்தஸ்தை , அரசியலில் சேராமல், ஒதுங்கி நின்று இக் காலத்தில் காப்பாற்றிக் கொள்ள இயலுமா? இந்நிலையில், ஊரிலுள்ள செல்வாக்கு உடையவர்களுடைய கோபத்துக்கு பாத்திரமான நடேசனிடத்து தமக்கிருக்கும் அந்தரங்கமான மரியாதை எப்படி வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள முடியும்? இது அவருடைய அரசியல் எதிர்காலத்துக்கு நல்லதன்று. மனச் சாட்சியின் குரலை அடக்கக் கற்றுக் கொள்வதே அரசியலின் அரிச்சுவடிப் பாடம்.

சாம்பசிவன் எழுந்து கைகளைப் பின்புறமாக வளைத்து சோம்பல் முறித்தார். அம்பி எழுந்து போகலாமென்று இதற்கு அர்த்தம். இதைத் தெரிந்த கொண்ட அவனும் தன் இருப்பிடத்தை விட்டு எழுந்திருந்தான்.

“அப்போ … நீங்க வரப் போவதா நடேசனுக்குச் சொல்லி அனுப்பட்டுமா…”

“செய்…” என்றார் சாம்பசிவன்.

நடேசன் அவர் வருகைக்காக காத்திருப்பது போல் வாசலில் நின்று கொண்டிருந்தார்.

“நமஸ்காரம்…” என்றார் நடேசன்.

நடேசன் அருகில் திருநாவுக்கரசு நின்று கொண்டிருப்பதைக் கண்டதும் சாம்பசிவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இவன் எங்கே வந்தான்?

“சீர்திருத்தச் செம்மலை இங்கு பார்ப்பேன்னு நான் எதிர்பார்க்கலே” என்று சிரித்துக் கொண்டே கூறினார் சாம்பசிவன்.

“ஐயாவே இப்படி எல்லாருடைய வீட்டுக்கும் வராங்கன்னா, உலகத்திலே எதுதான் எதிர்பார்க்க முடியும், எதிர்பார்க்க முடியாது” என்றான் திருநாவுக்கரசு.

“உள்ளே வாருங்களேன்…” என்று அழைத்தார் நடேசன்.

சாம்பசிவன், திருநாவுக்கரசுக்கு பதில் கூறவில்லை . தேர்தலை மனத்தில் வைத்துக் கொண்டு பேசுகிறான் என்று அவர் உணர்ந்தார். அவர் மௌனமாக நடேசன் வீட்டுக்குள் நுழைந்தார்.

கூடத்தில் முற்றத்தருகே துளசிச் செடிக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டு சிறுமி ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். ஏழெட்டு வயதிருக்கும். மாநிறம்தான். ஆனால் கண்கள் குறுகுறுவென் றிருந்தன. யார் யாரோ உள்ளே வருவதைப் பார்த்து அவள் உள்ளே ஓடிவிட்டாள். பாவம், அம்பியைப் போல் இன்னும் எத்தனை பேர், சத்தம் போடவோ அல்லது வேடிக்கை பார்க்கவோ வந்திருப்பார்கள்? சாம்பசிவனின் உள்ளத்தில் ஓர் இனம் புரியாத வேதனை சூழ்ந்தது.

கூடத்தில் போடப்பட்டிருந்த பெஞ்சியில் உட்கார்ந்தார் சாம்பசிவன். திருநாவுக்கரசு வாசற்படியருகே இருந்த ஒட்டுத் திண்ணையில் உட்கார்ந்தான்.

“என்ன விசேஷம்…?” என்று கேட்டார் நடேசன்.

சாம்பசிவன் திருநாவுக்கரசை நோக்கினார். அதைப் புரிந்து அவன் கேட்டான்: “நான் இருப்பது ஐயாவுக்குக் கொஞ்சம் கஷ்டமா இருக்குதா?”

“உண்மையாகச் சொல்லப் போனா, ஆமாம்…” என்றார் சாம்பசிவன்.

“எல்லாம் எனக்குத் தெரியும்… அந்த அம்பிப் பய உங்க வீட்டுக்குப் போறப்போவெ நினைச்சேன். ஏன்யா, ஒருத்தரு மனுஷத் தன்மையா நடந்துக்கிட்டா இவ்வளவு எதிர்ப்பா? அம்பிப்பய நேத்து மேலண்டை வீதியிலே நின்னுகிட்டு கூப்பாடு போட்டான். ஜாதிக் கட்டுப்பாடாம், மதக்கட்டுப்பாடாம்… எல்லாக் கட்டுப்பாட்டையும் பார்த்துடுவோம்… நடேச ஐயரை பாராட்டி, தைரியம் கொடுக்கத் தான் நான் இப்போ வந்திருக்கேன்… நான் மட்டுமில்லே, எங்க கட்சியே இவருக்குப் பின்னால இருக்குது, நினைவு வைச்சுக்குங்க…”

கட்சி என்றதும் சாம்பசிவன், நடேசன் இருவருமே திடுக்கிட்டார்கள். சாம்பசிவன் சொன்னார்: “இதிலே அரசியலெக் கொண்டு வந்து ஏன் குழப்பறே, திருநாவுக்கரசு? நடேசனை எனக்கு நல்லாத் தெரியும்; அவருக்கும் என்னைத் தெரியும். வாத்தியாரா இருக்காரு… சமூகத்தோட பகை அவருக்கு எதுக்குன்னு தான் நான் சொல்ல வந்தேன்… நீ ஏதேதோ பேசிக் கிட்டே போறியே?”

நடேசன் குறுக்கிட்டார். “இதோ பாருங்க… இது என்னுடைய தனிப்பட்ட குடும்ப விஷயம். பேர் பேரா வந்து ஏன் பிச்சுப் பிடுங்கறீங்கன்னு புரியலே. ஒருத்தர் பாராட்டணும்னோ அல்லது சமூகத்தை விரோதிச்சிக்கவோ நான் இதைச் செய்யலே… என் மனசிலே எது சரின்னு படறதோ, அதை செய்ய நான் தயங்க மாட்டேன்…”

“நீங்க சொல்றது எனக்குப் புரியுது… இருந்தாலும் அதை எப்படிச் சொல்றதுன்னு எனக்கு விளங்கலே…” என்று தவித்தார் சாம்பசிவன்.

“எதைச் சொல்றது?” என்று கேட்டார் நடேசன்.

“உங்க பேரிலே இருக்கிற தனிப்பட்ட காய்ச்சல் எல்லாமே சேர்ந்துடுத்துன்னு ஒத்துக்கிறேன்… நம்ப இரண்டு பேருக்கு மட்டும் சொல்றேன். திருநாவுக்கரசு இதை நம்பினா நம்பட்டும், இல்லாட்டிப் போகட்டும், நான் அந்தரங்கமா சொல்லப்போனா, உங்க கட்சி… இருந்தாலும் ஊரிலே செல்வாக்கு உடையவங்களை விரோதிகிச் சுட்டு…” சாம்பசிவனுக்கு வியர்த்தது. அவர் மேல் துண்டினால் முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

“தேர்தலுக்கு நிற்க முடியுமா?” என்று முடித்தான் திருநாவுக்கரசு.

“நீ போய்யா, உன் வேலையைப் பார்த்து கிட்டு… உன்னை இங்கு யார் கூப்பிட்டாங்க?” என்று சீறினார் சாம்பசிவன். தம் உள் நினைவை இப்படிப் பச்சையாகச் சொல்லி விட்டானே என்ற அடக்க முடியாத சினம்…

“ஏன்யா, உங்க கட்சிக் கூட்டம்னு நினைச்சிங்களா? காசை விட்டெறிஞ்சு ஆளை கட்டிப் போட முடியாதய்யா. ஊரிலே செல்வாக்கு உடையவங்க வண்டவாளமெல்லாம் தெரியாதுன்னு நினைச்சிங்களா? என்னா செய்வாங்க? தலையைச் சீவிவிடு வாங்களா?”

நடேசன், திருநாவுக்கரசைக் கையமர்த்தினார்.

“திருநாவுக்கரசு… நீ வேறேகட்சி, சாம்பசிவன் வேறே கட்சியா இருக்கலாம். உங்களுடைய கட்சிச் சண்டைக்கு என் சொந்த விவகாரத்தை உபயோகப்படுத்தாதீங்க… இதைப் பார்த்தா, நான் இந்த ஊரை விட்டே போயிடலாம் போலிருக்கு…”

“அதென்ன அப்படிப் பேசறீங்க! இவ்வளவு தூரம் படிச்சவங்க, நீங்க இப்படிப் பேசலாமா? மூட்டைப் பூச்சிக்குப் பயந்துகிட்டு வீட்டைக் கொளுத்துவாங்களா? எதுக்காக நீங்க ஊரை விட்டுப் போவணும்? சமூகத்தை விரோதிச்சுகிட்டு ஒரு நல்ல காரியம் துணிஞ்சு செஞ்சிருக்கீங்க… அப்படியே கடைசி மட்டும் நில்லுங்க… நாங்க இருக்கோம், பாத்துக்கிறோம்…”

“இவன் பேச்சைக் கேட்டு ஒண்ணும் செய்யாதிங்க. நீங்க ஊரை விட்டுப் போறதும் நல்ல யோசனையாத்தான் எனக்குப் படுது… அதுக்கு வேண்டிய உதவி என்னாலே செய்ய முடியும்…” -”காசு இருக்கிற திமிர்தான். உங்களை இப்படிப் பேசச் சொல்லுது.. அவங்க அப்பன், பாட்டன் விளையாடின மண்ணை விட்டுப் போகச் சொல்ல நீங்க யார்யா நாட்டாமை?” திருநாவுக்கரசின் கண்கள் சிவப்பேறின. 4

சாம்பசிவன் கீழுதட்டைக் கடித்துக் கொண்டார். அவசரப்பட்டு அஜாக்கிரதையாகப் பேசி விட்டோமென்று அவருக்குப் பட்டது. இவனெதிரில் சொல்லியிருக்கக் கூடாது.

ஒரு விரக்தியில் தாம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்ட சாம்பசிவன் பேசியது நடேசனுக்குப் பிடிக்கவில்லை … அப்படியென்றால் தம்மை வரைவிட்டு விரட்ட ஒரு சதித் திட்டம் உருவாகின்றதா? திருநாவுக்கரசு தமக்காகப் பரிந்து கொண்டு ஓர் இயற்கையான ஆவேசத்துடன் பேசியது அவர் மனத்திற்கு திருப்தி அளித்தது. ஊரை விட்டுப் போகச் சொல்ல இவர் யார்? வேண்டிய உதவி செய்கிறாராமே இது பணச் செருக்கைத் தவிர வேறென்ன? – “மிஸ்டர் சாம்பசிவன், மன்னிக்க வேண்டும். உங்களைத் திருப்தி செய்யும் யோசனை எனக்கில்லை. நீங்க என்ன வேண்டுமானாலும் செஞ்சுக்கலாம்… என் குழந்தையோட நான் இங்கே தான் இருக்கப் போறேன்… நீங்க போகலாம்…”

“சபாஷ்!” என்று கைகளைத் தட்டினார் திருநாவுக்கரசு. சாம்பசிவன் ஒன்றும் கூறாமல் எழுந்து வெளியே சென்றார்.

சமையலறையில் உட்கார்ந்து கொண்டு இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த அந்தக் குழந்தையின் கண்களில் நீர் அருவியாகப் பெருகிற்று. தன்னால்தானே அப்பாவுக்கு இவ்வளவு கஷ்டம்?

மழலைப் பருவத்திலிருந்தே வசவுகளையும், துன்பத்தையும் தவிர வேறொன்றும் அறியாமல் வளர்ந்தாள் அவள். யார் மீதோ உள்ள கோபத்தை அம்மா தன்மீது காட்டுகிறாள் என்பது அவளுக்குத் தெரிந்தது. அது யாரென்றுதான் அவளுக்குப் புலப்படவில்லை . அம்மா ஒரு சமயம் ‘அடி அடி’ யென்று அடித்து விடுவாள். மறுசமயம், அவளை இறுக அணைத்து உச்சி மோந்து திக்கு முக்காடச் செய்வாள். அம்மா கொஞ்சினாலும் சரி, அடித்தாலும் சரி, வேதனை தான்… அம்மா செத்துப் போகும் சமயத்தில் திடீரென்று அப்பா வந்தார். இத்தனை நாள் எங்கிருந்தார் என்று அவர் பேரில் அவளுக்கு அசாத்திய கோபம்… ஆனால், இங்கு வந்த பிறகுதான் அவளுக்கு எல்லா விஷயங்களும் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத் தொடங்கின…. அம்மாவைப் பற்றி நினைக்க நினைக்க அவளுக்கு ஆத்திரமாக வந்தது.

“இங்கே உட்கார்ந்துண்டு என்னம்மா பண்றே?” தங்கம் நிமிர்ந்து பார்த்தாள். அப்பா புன்சிரிப்புடன் நின்று கொண்டிருந்தார். அவள் எழுந்திருந்து அப்படியே அவரைக் கட்டிக் கொண்டு அழத் தொடங்கினாள்.

எதையும் கூடிய வரை அதிக எதிர்ப்பில்லாமல் சமாளிக்க முயல்வார் சாம்பசிவன். இன்று அவருக்குப் பெரிய தோல்வி. இந்தத் திருநாவுக்கரசு தம்மை ஏன் இப்படி வெறுக்கிறான்? நடேசனும் கடைசியில் நம்மை அலட்சியப்படுத்திப் பேசி விட்டாரே!

நடேசனும் அவரும் குழந்தைப் பருவத்திலிருந்தே ஒன்றாக விளையாடி வளர்ந்தவர்கள். நடேசன் தந்தை சரபேச்வர சாஸ்திரிகள் பெரிய சாஸ்திர விற்பன்னர். பரம்பரை பரம்பரையாகக் கோயில் வேலை. புராண, உபந்நியாசங்கள் செய்து வந்த குடும்பம். நடேசன் ஆரம்பத்திலிருந்தே இப்படித் தான், தம் மனத்திற்கு எது சரியென்று தோன்றுகின்றதோ அதைத்தான் செய்வார். ‘திருமணம் செய்து கொள்ள மாட்டேன்’ என்று முரட்டுப் பிடிவாதமாக இருந்தவரை வற்புறுத்தி அதற்கிசையச் செய்தார் சரபேச்வர சாஸ்திரிகள். அவர் மனைவி அவரை விட்டுப் போனபோது கூட, நடேசன் அதிகமாக அது பற்றி வருந்தவில்லை என்று ஊர் முழுவதும் பேச்சு.

தாமாகவே ஊரை விட்டுப் போவதாக கூறினவர் திடீரென்று மாற்றிக் கொண்டு விட்டார். இனிமேல் அவர் முடிவை மாற்றிக் கொள்வதென்பது அவரால்தான் முடியும்.

சாம்பசிவன் வீட்டில் அவருக்காக அம்பி, சாமா அய்யர், சிவஞானம் ஆகிய மூவரும் காத்திருந்தார்கள். அம்பியைப் பார்த்ததும் அவருக்கு உற்சாகமாக இருந்தது. திருநாவுக்கரசை அவனால்தான் சமாளிக்க முடியும்…

அவருடைய சோர்வடைந்திருந்த முகத்தைப் பார்த்ததுமே, அம்பிக்கு விஷயம் விளங்கிவிட்டது.

“என்ன, அங்கே திருநாவுக்கரசு வந்திருந்தானோ?” என்று கேட்டான் அம்பி.

“ஆமாம்… உனக்கெப்படி தெரியும்?….” அம்பியின் சாமர்த்தியம் அவரை வியப்பில் ஆழ்த்தியது.

“இந்த அம்பிக்குத் தெரியாமல், இந்த ஊரில் ஒன்றும் நடக்காது…” என்று அடக்கமாகக் கூறினான் அம்பி.

“திருநாவுக்கரசு என்னைக் கண்டபடி பேசிட்டான். அதோட இல்லாமெ நடேசனுக்குத் தூபம் போட்டு இதை ஒரு அரசியல் பிரச்னை ஆக்கப் பார்க்கிறான்…” என்று அலுத்துக் கொண்டே கூறினார் சாம்பசிவன்.

“ரொம்ப நல்லது. கோதாவிலே இறங்குவோம். அவனும் அவன் கட்சியும் இதோட தீர்ந்து போகணும்… பார்த்துடுவோம் ஒரு கை” என்று மீசையை முறுக்கினார் சிவஞானம்.

சாம்பசிவன் சிவஞானத்தை கலவரத்துடன் பார்த்தார். “என்ன, இதை ஒரு கட்சி மோதலாவா ஆக்கணும்னு பார்க்கறீங்க? வேண்டாம், வேண்டாம்…”

“நாமா வம்புக்குப் போகலே…. அவனாகத்தானே வரான்… வேணும்னா ஐயா இதிலே சம்பந்தப்பட வேண்டாம்… நாங்க பாத்துக்கிறோம்…” என்றார் சிவஞானம்.

“வரப் போற தேர்தலுக்கும் இது ஓர் ஒத்திகை…” என்று கூறிவிட்டு சிரித்தார் சாமா அய்யர். தோளை ஆட்டிக் கொண்டு அவர் சிரித்தபோது, அவருடைய பெருத்த உடல் குலுங்கிற்று. பூத கனத்தின் ஆரவாரம் போலிருந்தது சாம்பசிவனுக்கு. அவருக்கு இக் காட்சி ரசிக்கவில்லை. வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.

திருநாவுக்கரசு இவ்வளவு பெரிய கூட்டத்தை திரட்டிக் கொண்டு வருவானென்று நடேசன் எதிர்பார்க்கவில்லை. அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டு அவர்கள் கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

“மக்கள் தலைவர் நடேசன் வாழ்க…!”

“புரட்சிப் பெரியார் வாழ்க…….”

திருநாவுக்கரசு நடேசனுடன் உள்ளே வாதாடிக் கொண்டிருந் தான். “நீங்க தயங்காதீங்க… ஒதுங்கியிருந்து கிட்டு யாரும் நாட்டுக்கு நல்லது செய்ய முடியாது. கோயில் பணத்தைக் களவாடிய திருட்டுப் பசங்க, நீங்க அம்பலப்படுத்திட்டீங்கன்னு உங்க பேரிலே கறு வைச்சுகிட்டு கலாட்டாப் பண்றாங்க, நீங்க சும்மாவா இருப்பீங்க?… நாங்கதான் உங்களைச்சும்மா இருக்க விடுவோமா?… நீங்கதான் எங்க அடுத்த எம்.எல்.ஏ. வாங்க வெளியிலே, ஜனங்களைக் கண்டு பேசுங்க.”

நடேசன் திடுக்கிட்டார்.

“என்ன சொன்னே ? எம்.எல்.ஏ.வா?”

“ஆமாம்… இது என் விருப்பமில்லே … ஜனங்க விருப்பம். அது கிடக்கட்டும். வெளியில வாங்க, ஜனங்க காத்துக் கிட்டிருக்காங்க, உங்களைப் பார்க்க.”

நடேசனைக் கண்டதும் மக்கள் ஆரவாரம் அதிகமாயிற்று. “கூட்டத்தைப் பார்த்துக் கையை கூப்பி லேசா சிரியுங்க…” என்று முணுமுணுத்தான் திருநாவுக்கரசு. இதைச் சொல்லிவிட்டு அவன் அவசர அவசரமாக உள்ளே போனான்.

நடேசன் புன்னகை செய்தார். திருநாவுக்கரசு இவ்வளவு கெட்டிக்காரனா? ஜனங்கள் பேசச் சொன்னால் என்ன செய்வது? வகுப்பில் குழந்தைகளிடத்துப் பேசித்தான் பழக்கம்.

உள்ளே சென்ற திருநாவுக்கரசு தங்கத்தை அழைத்துக் கொண்டு வந்தான்.

நல்லவேளை, அவனே பேசத் தொடங்கினான்.

“தோழர்களே… இதோ பாருங்கள், இந்தக் குழந்தையின் தெய்வீக மணம் கமழும் திருமுகத்தை. இப் பூஞ்சோலையை, அழகு நிலாவை, இளந் தென்றலை அழைத்துக் கொண்டு வந்ததன் காரணமாக புரட்சிப் பெரியார் நடேசன் இவ்வூரை விட்டே விரட்டியடிக்கப்பட வேண்டுமென்று கூறுகின்றதே ஒரு கூட்டம், இரக்கமற்ற அரக்கர் பாசறை, அரசியல் ஆணவங் கொண்ட அக்கிரமக் குழு…”

அவன் இன்னும் என்னென்னவோ அடுக்கிக் கொண்டே போனான். அவன், கைகளையும் உடம்பையும் ஆட்டிக் கொண்டு பேசுவது தங்கத்துக்கு வேடிக்கையாக இருந்தது. அவள் அவனையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நடேசனும் அவன் பேசிய வேகத்தைக் கண்டு வியந்தார். பள்ளிக்கூடத்துக்கு வெளியே உலகம் எவ்வளவு மாறுதல் அடைந்திருக்கிறது!

மழைபெய்து ஓய்ந்தது. பிறகு இடிஇடித்தது; கை தட்டல்!

திருநாவுக்கரசு, நடேசன் காதுகளில் மெதுவாகக் கூறினான். “நீங்க பேசுங்க….”

“நானா?… எனக்கு உன் மாதிரியெல்லாம் பேச வராது. உன் பிரசங்கத்துக்குப் பிறகு என் பிரசங்கம் அதிகப்பிரசங்கித்தனம்…”

“பிரசங்கம்னு சொல்லக் கூடாது… சொற்பொழிவுன்னு சொல்லணும்…” என்று அவரை லேசாகத் திருத்தி விட்டு, கூட்டத்தைப் பார்த்துக் கூறினான் திருநாவுக்கரசு. “மக்கள் தலைவர் நடேசன் அவர்கள் உணர்ச்சி வசப்பட்டிருப்பதன் காரணமாக இன்று அவரால் பேச இயலாது. மேலும் அவர் பேச்சில் நம்பிக்கை கொண்டவரல்லர். செயலாற்றுபவர். சீர்திருத்தமே தாரக மந்திரமாகக் கொண்ட அவர் தம் செயலுக்குச் சிறந்த எடுத்துக் காட்டு… இதோ” என்று கூறி தங்கத்தை அப்படியே அலாக்காகத் தூக்கி கூட்டத்திற்குக் காண்பித்தான்.

இதை எதிர்பார்க்காத தங்கத்தின் உடல் கொஞ்சம் நடுங்கியது.

“மக்கள் தலைவர் நடேசன் வாழ்க… சதிகாரன் சாம்பசிவன் ஒழிக!”

எல்லாம் கனவில் நிகழ்வன போல் பார்த்துக் கொண்டிருந்த நடேசன் விழிப்படைந்தார்.

“சதிகாரன் சாம்பசிவன் ஒழிக…” அட கடவுளே! விஷயங்கள் தம்மை மீறிச் சென்று விட்டனவே என்பதை அவர் உணர்ந்தார்.

“திருநாவுக்கரசு… இது எனக்குப் பிடிக்கலே. தயவு செய்து…”

திருநாவுக்கரசு அவசர அவசரமாக அவரை உள்ளே அழைத்துக் கொண்டு போனான்.

“இனிமே…. இப்படிப் பேசாதீங்க, கூட்டத்தெதிரே… வழவழப்பான ஒரு சாய்வான தரையிலே பந்தை உருட்டியாச்சு… இனிமே தடுக்க முடியாது.”

ஒன்றும் விளங்காமல் அருகே நின்று கொண்டிருந்த தங்கத்தை அப்படியே அணைத்துக் கொண்டார் நடேசன்.

சாம்பசிவன் நடுங்கிச் செத்துக் கொண்டிருந்தார். வாசலில் அவருக்கெதிராக கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர் மக்கள். திடீரென்று உள்ளே வந்து தாக்கத் தொடங்கினால்?

போலீசுக்குச் சொல்லி அனுப்பலாமென்றார் சாமாஅய்யர். அவர்கள் வந்து தடியடிப் பிரயோகம், கண்ணீர் புகை என்று ஆரம்பித்து விட்டால்… தேர்தல் சமயத்தில் இது கூடாதென்று இந்த யோசனையை நிராகரித்து விட்டான் அம்பி.

“இப்பொ என்ன செய்யறது சொல்லேன்…” என்று பலவீனமான குரலில் கேட்டார் சாம்பசிவன்.

“சும்மா இருங்கோ…அவாளாலே ஒண்ணும் பண்ணமுடியாது. அவாளுக்கும் உங்க மாதிரி தேர்தல்லே அக்கறை இல்லியா?”

“ஆமா… நடேசன்தான் அவங்க எம்.எல். ஏன்னு கூச்சல் போடறாங்களே! அவரை எப்படி இந்தப் பாவி சம்மதிக்க வச்சான்?”

“நீங்கதான் நினைச்சிண்டிருக்கேள். நடேசனுக்கு ஆசை கீசை ஒண்ணும் கிடையாதுன்னு…. பார்த்தேளா…பதவி ஆசை யாரை விட்டது?” என்றார் சாமா அய்யர்.

“நான் போய் கூட்டத்தைப் பார்த்து பேசட்டுமா” என்று கேட்டார் சிவஞானம்.

“வேண்டாம், வேண்டாம்… எல்லாம் தன்னாலே அடங்கிப் போய்விடும்” என்று தீர்மானமாகக் கூறினான் அம்பி.

“இந்தச் சூழ்நிலையிலே நான் தேர்தலுக்கு நின்னா, என்னப்பா ஆவது? ஜெயிக்க முடியுமா?” என்று அழாக் குறையாகக் கேட்டார் சாம்பசிவன்.

“அதுக்குத்தான் ஒரு திட்டம் வகுக்கிறேன்” என்றான் அம்பி. “என்ன திட்டம்?”

“அதுவா?” அம்பி தோள்களை நிமிர்த்தி நேரே உட்கார்ந்தான். அவன் கை சாமா அய்யர் பால் நீண்டது. அவர் பொடி மட்டையை இடுப்பிலிருந்து எடுத்துக் கொடுத்தார்.

மூக்கை உறிஞ்சி விட்டு மேல் துண்டினால் துடைத்துக் கொண்டே அம்பி ரகசியமான குரலில் பேசத் தொடங்கினான். மூவரும் மிகுந்த கவனத்துடன் கேட்டார்கள்.

ஏழெட்டு நாட்களுக்குப் பிறகு அவ்வூரைப் பற்றிய செய்தி பத்திரிகைகளில் அடிபடலாயிற்று. அயலூர்களிலிருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் அவ்வூரை நோக்கிப் படையெடுத்தனர். ‘கலியுக அதிசயம்’ ‘இனிமேல் வைத்தியர்கள் வேறு தொழில் பார்க்க வேண்டியதுதான்’ என்றெல்லாம் செய்தித் தாள்கள் தலையங்கங்கள் எழுதின. விஷயம் இதுதான்.

சாம்பசிவன் தம்முடைய தோட்டத்திலிருந்த பாசி படர்ந்திருந்த ஒரு குளத்தை புதுப்பித்தார். அதில் அவருடைய காரியஸ்தர் மனைவி நீராடி யெழுந்ததும் ஓர் அதிசயத்தை உணர்ந்தாள். வைத்தியத்திற்குக் கட்டுப்படாத அவளுடைய வயிற்று வலி உடனே நீங்கியது. இச்செய்தியைக் கேட்டதும், பல்வேறு நோய்களினால் பீடிக்கப்பட்டிருந்த பண்ணையாட்கள் அதில் நீராடினர். என்ன விந்தை! நோய்கள் பறந்து போயின. அவ்வளவுதான், ஊரே திரண்டு அக்குளத்தை நாடிச் சென்றது. இன்னின்ன வியாதிகளுக்கு இவ்வளவு நாட்கள் குளிக்க வேண்டுமென்ற கணக்கு ஏற்படலாயிற்று. மாசக் கணக்கு ஆகலாம், வருஷக் கணக்கு ஆகலாம், ஆனால் வியாதி ஓடிவிடும் என்ற நம்பிக்கை எங்கும் பரவியது. இக் குளத்தின் அற்புதத்தை விளக்கும் ஏட்டுச் சுவடியொன்று தோட்டத்தை வெட்டும் போது கிடைத்தது.

சாம்பசிவன் குளத்தை ஊருக்குப் பொதுவாக்கினார். வேறு பல சௌகரியங்களும் செய்து கொடுத்தார் ஊர் அவரை வாழ்த்தத் தொடங்கியது.

நடேசன் வேதனையுற்றார். மக்களை முட்டாள்களாக்க இப்படியொரு திட்டமா? பொது ஜன ஆதரவைப் பெற சாம்பசிவன் இவ்வளவு கேவலமாகவா போக வேண்டும்?

இதற்கெல்லாம் யார் காரணம்? தாம்தான். அன்று ஊர் தமக்கு ஆதரவாக எழுந்ததைக் கண்டு, அதன் கவனத்தைக் கவர இத் திட்டம் உருவாகியிருக்கின்றது. தாம் செய்த ஒரு சிறு செயல், சமூகப் பிரச்னையாகி, அரசியல் பிரச்னையாகி, எப்படி விசுவரூபம் எடுத்திருக்கிறது! பாவம், திருநாவுக்கரசு முதலில் இது ஏமாற்று அது, இது வென்று அவன் கூப்பாடு போட்டான்; பிறகு ஆளையே காணோம்!

திடீரென்று ஓர் ஆவேசம் அவருள்ளத்தில் எழுந்தது. இது தெய்வ விரோதம்! மக்களை ஏமாற்றுவது தெய்வத்துக்கு விடப்படும் சவால். மனிதன் பகுத்தறிவினால் கொடிய மிருகங்களை ஆட்டி வைக்கிறான். ஆனால் மனிதன் மனிதனையே குருட்டு நம்பிக்கையினால் ஆட்டி வைப்பது வெட்கக் கேடு. இதைப் போய் ஜனங்களிடம் கூறுவோம். கேட்டால் கேட்கட்டும், கேட்காவிட்டால் போகட்டும். இது தம்முடைய கடமை.

அவர், சாம்பசிவன் தோட்டத்தை நோக்கிச் சென்றார்.

எவ்வளவு கூட்டம்! எல்லா ஏற்பாடுகளையும் அம்பிதான் கண்காணித்துக் கொண்டிருந்தான்.

நடேசன் அப்படியே ஸ்தம்பித்து நின்றார். திருநாவுக்கரசு ஆனந்தமாக நீராடிக் கொண்டிருந்தான்!

அவர் மேலே தொடர்ந்து போகாமல் அப்படியே தம் வீட்டுக்குத் திரும்பினார்.

அடுத்த நாள் அம்பி உற்சாகமாக சாம்பசிவனிடம் கூறினான்:

“தெரியுமா சேதி? நடேசன் அந்தப் பொண்ணை அழைச்சிண்டு ஊரை விட்டே போயிட்டாராம்.”

ஜன்னலருகே நின்று கொண்டிருந்த சாம்பசிவன் கண்கள் திடீரென்று கசிந்தன. தம் தோட்டத்தை நோக்கிக் கூட்டம் கூட்டமாக மக்கள் சென்று கொண்டிருந்த அக்காட்சியை நீர்த்திரை மறைத்தது….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *