அறம் சார்ந்த வாழ்க்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 19, 2020
பார்வையிட்டோர்: 4,005 
 

எண்பத்தியேழு வயது விஸ்வநாத ஐயர் காலையில் சந்தியாவந்தனம் செய்துவிட்டு அன்றைய பேப்பரை எடுத்துக்கொண்டு ஈஸி சேரில் வந்து அமர்ந்தார்.

கொள்ளுப் பேரன் ஸ்ரீராம் அங்கு வந்து, “தாத்தா நானும் கமலியும் இன்னிக்கி தனிக்குடித்தனம் போகிறோம்…” என்றான்.

“எதுக்குடா இப்ப தனிக்குடித்தனம்?”

“கமலிக்கு இங்க ப்ரைவஸி இல்ல தாத்தா… மேலும் இப்ப பார்த்திருக்கிற வாடகைவீடு அவளோட கம்பெனி கிட்டயே இருக்கு….”

“சரி… சரி நல்லபடியா இருங்கோ…”

‘இந்தக் காலத்துப் பசங்க எல்லாம் பொண்டாட்டி தாசனாகவே மாறியாச்சு… தற்போதைய வாழ்வியல் முறையே பணம், சொத்து, கார், வீடு என்று மாறிவிட்டது… அறம் சார்ந்த வாழ்க்கையை யாருமே நினைப்பதுகூட இல்லை…’ என்று எண்ணிப் பெருமூச்சு விட்டார்.

அவரது எண்ணங்கள் பலவாறாகச் சிந்திக்கலாயின…

கல்வி, அரசியல், சினிமா, மீடியா முதலான சமுதாயத்தின் முக்கியமான துறைகள் எல்லாமே கெட்டுக் கிடக்கிறபோது, இப்போதைய கூட்டுக் குடும்பங்கள் மட்டும் என்ன பெரிசாக வாழ்ந்து விடப் போகின்றன?

ஒரு காலத்தில் தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா என்று எல்லோரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். யாரும் தனிவீடு பார்த்துப் போய்க் கொள்கிறேன்; தனிக்குடித்தனம் போகிறேன் என்று சொல்லி வீட்டிலுள்ள பெரியவர்களைப் பயமுறுத்தியதில்லை. ஆனால் இன்று, தனிக்குடித்தனம் போகாதவன் மனுஷனே இல்லை என்றாகிவிட்டது.

ரோட்டில் போகிற எவனைப் பார்த்தாலும் நான் ஐடியில் வேலை பார்க்கிறேன் என்கிறான். ஆணும், பெண்ணும் பல அடுக்கு மாடிக் கட்டிடங்களில் லேப்டாப் முன்னால் உட்கார்ந்துகொண்டு பொழுதெல்லாம் பட்டன்களைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

1960-70 களில் மத்திய மாநில அரசுகளில் வேலை பார்க்கிறவனைத்தான் இந்தியா தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடியது. ஆனால் இன்று ஏகப்பட்ட பெரிய ஐடி கம்பெனிகள். அதில் வேலை செய்பவனைத்தான் நாம் மதிக்கிறோம். ஏனெனில் அவர்கள் பல லகரங்களில் சம்பளம் வாங்குகிறார்கள்.

பாரதியார் பெண் விடுதலை பெற வேண்டும் என்று எழுதினார். ‘வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்தொமேன்ற விந்தை மனிதர் மாண்டுவிட்டார்’ என்று பெண் விடுதலையை பாரதியார் ஆதரித்தார்.

இக்காலத்துப் பெண்கள் ஆண்களுக்கு சமமாக எல்லா வேலைகளிலும் ஈடு படுகிறார்கள். மனைவியும் கை நிறைய சம்பாதிக்கிறாள்.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்று சோம்பேறி எவனோ சொன்னான். இன்றைய திருமணங்கள் வேலை பார்க்கின்ற அலுவலகங்களில் நிச்சயிக்கப் படுகின்றன. பெரும்பாலான திருமணங்கள் காதல் திருமணங்கள்…

தற்போதைய சினிமா, டிவி தொடர்கள் எல்லாம் காதல் காதல் என்றே கூச்சலிடும்போது, வேலை பார்க்கின்ற ஆணும் பெண்ணும் காதலிக்காமல் ரிஷிகளாகவா இருப்பார்கள்?

காதலர்கள் என்ற பேரில் பப்புக்கு போய் பிக்ஸர் பிக்ஸராக குடித்துக் கும்மாளமிடுகிறார்கள். குறைந்த பட்சம் வீட்டுக்குத் தெரியாமல் சினிமாவுக்காகவாவது போகிறார்கள்.

சினிமா, பப், பீச், கொடைக்கானல், ஊட்டி, மூணாறு என்று வீட்டில் பொய் சொல்லிவிட்டுச் சுற்றிய கால்கள், திருமணமான பின்பும் அதே கலாச்சாரத்தைத் தொடர விரும்புகின்றன.

இதற்கு அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என்ற கிழடு கட்டைகள் எதிர்ப்பு தெரிவிப்பதால்; சட்டி, பொட்டியைத் தூக்கிக்கொண்டு தனிக்குடித்தனம் போய் விடுகின்றனர்.

கூட்டுக் குடும்பத்தில் ‘குழந்தைகள்’ என்பது ஒரு பிரச்னையே இல்லை. பலர் நிறைந்திருக்கிற குடும்பத்தில், குழந்தைகளை ஆளாளுக்குச் சீராட்டி வளர்ப்பார்கள்.

தனிக்குடித்தன வாழ்வில் சித்தி ஏது? அத்தை ஏது? மாமா ஏது? மெட்டர்னிட்டி லீவு முடிந்ததும் குழந்தையை ‘க்ரெச்’சில் கொண்டுபோய் கொண்டுபோய் விட்டுவிடுகிறது இந்த தனிக்குடித்தனக் கும்பல்.

க்ரெச்சிலுள்ள ஆயாதான் குழந்தைக்கு பாட்டி, சித்தி, அத்தை எல்லாம். குழந்தைக்கு வைத்திருக்கிற பாலையும், டிபனையும், சத்து மாவையும் அந்த ஆயாவே காலி பண்ணி விடுவாள்.

தான் தனிக்குடித்தனம் போனது மட்டுமின்றி, தனது பெற்றோரையும் நகரங்களில் பெருத்துக் கிடக்கிற முதியோர் இல்லங்கள் ஏதாவது ஒன்றில் போய் விட்டுவிடுகிறார்கள். கையில் புரளுகிற பணம் என்ன வேண்டுமானாலும் செய்யத் தூண்டுகிறது. தன்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோரைக் கூடத் துச்சமாக மதித்து, அவர்களை முதியோர் இல்லத்தில் விடச் சொல்கிறது…

தனிக்குடித்தம், தனிக்குடித்தனம் என்ற பேரில், குடும்ப உறவுகளின் தொடர்பே இல்லாமல், காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியர் வாழும் தனிக்குடித்தன வாழ்க்கையில், காதலெல்லாம் கசந்து சண்டை சச்சரவுகள் ஏற்பட்டால், அவர்களைச் சமாதானம் செய்து சேர்த்து வைக்கக்கூட நாதியில்லை.

கடைசியில் பெரும்பாலான காதல் திருமணங்கள் நீதிமன்றங்கள் வரை வந்து விவாகரத்துடன் முடிகின்றன.

சரி, நகரங்களிலுள்ள குடும்பங்கள்தான் இப்படிச் சீரழிந்து சின்னா பின்னமாகிக் கிடக்கின்றன என்றால், கிராமங்களிலுள்ள குடும்பங்கள் என்ன லட்சணத்தில் இருக்கின்றன?

கல்வி முக்கியம்தான். ஆனால் இக்காலக் கல்வி எல்லோரையும் நகரங்களை நோக்கித்தான் படையெடுக்க வைக்கிறது. கிராமத்து இளைஞர்கள் எல்லாம் பிஈ, எம்ஈ என்று படித்துவிட்டு தங்களது கிராமங்களை உதறிவிட்டு நகரங்களுக்கு ஓடிவிடுகின்றனர்.

விளை நிலங்களைக் கவனிக்க ஆளில்லை. படித்த கிராமத்து இளைஞன் எல்லாம் ஏஸி ரூம்களில் கம்யூட்டர் முன்பு உட்காரத்தான் விரும்புகிறானே தவிர, எவனும் சேற்றில் இறங்கிப் பாடுபடத் தயாரில்லை.

வேறு போக்கற்றவர்கள்தான் கிராமங்களில் உட்கார்ந்திருக்கின்றனர். இருக்கிற கொஞ்ச நஞ்ச கிராமவாசிகளும் பொழுதெல்லாம் டிவி பெட்டியின் முன்னால் உட்கார்ந்துகொண்டு, கண்ட கண்ட சினிமாக்களையும்; ஸீரியல் நாடகங்களையும் பார்த்துக்கிண்டு பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கின்றனர். தமிழக அரசு வேறு வீட்டுக்கு வீடு இலவச டிவி பெட்டிகளையும் வழங்கித் தொலைத்து விட்டது.

அதுமட்டுமா? மிக்ஸி, க்ரைண்டர், இலவச அரிசி, விலையில்லா ஆடு என்று ஜனங்களின் ஓட்டைப் பறிக்க எதையெல்லாமோ கொடுத்து கொடுத்துக் கெடுத்து குட்டிச் சுவராக்கி வைத்துள்ளது அரசு. இது தவிர, நடமாடும், நடமாடாத அம்மா உணவகங்கள் வேறு.

வயலிலும் காடு கரைகளிலும் போய் இடுப்பொடிய வேலை பார்த்துத்தான் ஆக வேண்டும் என்ற நிலை இன்றைய கிராமத்தான் எவனுக்கும் இல்லை.

மகனும், மகளும் நகரத்தில் விரல் நுனியில் அழுக்குப் படாமல் ஐடியில் வேலை பார்த்து லட்சங்களில் சம்பாதிக்கிறார்கள். கிராமத்திலிருக்கிற பெற்றோர், அரசு இலவசங்களைப் பெற்றுக்கொண்டு பொங்கிச் சாப்பிட்டு சந்தோஷமாக டிவி பார்த்துக் காலத்தை ஓட்டுகிறார்கள்.

அப்படியே வேலை வெட்டிக்குப் போக வேண்டுமென்றாலும், இருக்கவே இருக்கிறது நூறுநாள் வேலைத்திட்டம். மண்வெட்டி, கூடையுடன் மரத்தடியில் தூங்கிவிட்டு வீட்டுக்குப் போவதற்கு அரசு சம்பளம் தருகிறது.

எல்லா ஊர்களிலும் ஜனங்களின் கைகளில் புரளுகிற பணத்தைப் பிடுங்குவதற்கென்றே அரசு தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்திருக்கிறது. இலவசங்களில் புரளும் ஏழைகள் டாஸ்மாக்கில் கொண்டுபோய் பணத்தைத் தொலைக்கின்றனர். அப்பனும் மகனும் சேர்ந்தே குடிக்கின்றனர்.

சில பத்தாம்பசலிக் கிழங்களும், சனாதனிகளும்தான் ஐயோ நமது குடும்பம் சீரழிகிறதே என்று சதா சர்வகாலமும் அழுது புலம்புகிறார்கள். நாளையே சாகப்போகிற கிழவன் கூட செல்போனில் வாட்ஸ் ஆப்பை நோண்டிக் கொண்டிருக்கிறான். அந்தளவுக்கு டெக்னாலஜி வளர்ந்து செழித்துக் கிடக்கிறது. மின்சாரம் இல்லாத ஊரே இல்லை.

இந்த நிலையில் குடும்பங்கள் கூட்டுக் குடும்பமாக இல்லாமல் தனித் தனியாகப் பிரிந்து போனால்தான் என்ன? அப்படி இருந்து அக்காலத் தமிழன் என்னத்தைக் கண்டான்? குடும்பத்திலுள்ள பெரிசு மண்டையைப் போட்டால், இருக்கிற ஓட்டு வீட்டுக்கு ஆளாளுக்கு சண்டை போட்டதுதான் மிச்சம். பங்காளிச் சண்டை இல்லாத கூட்டுக் குடும்பம் உண்டா?

மஹாபாரதக் கதையே சொத்துத் தகராறுதானே; பங்காளிச் சண்டைதானே?

சரி, காலம் போகிற அவல நிலையை நினைத்து மன நிம்மதியைத் தேடி கோயிலுக்கு போகலாம் என்றால், கடந்த ஐம்பது வருடங்களில் கோயில் சிலைகள் அனைத்தும் திருட்டுப் போய்விட்டன. கோயில் சொத்துக்களும் நிலங்களும் அடிக்கடி சூறையாடப் படுகின்றன…

“இந்தாங்கோ காப்பி… உடனே குடிங்கோ அப்புறம் சூடு இல்லைன்னு ஆவலாதி சொல்லாதீங்கோ…” ‘ணங்’கென்று டபரா டம்பளரை அவரெதிரில் வைத்துவிட்டு மூத்த மாட்டுப்பெண் அங்கிருந்து அகன்றாள்.

தன்னிடம் வாஞ்சையும், அக்கறையும் காட்டிய மனைவியை நினைத்து ஏங்கினார். அவள் இல்லாததை நினைத்து வேதனையடைந்தார். மனைவி இல்லாத கூட்டுக் குடும்பமும் சுடுகாடுதான்… ‘இல்லாள் இல்லாத இல்லமும் சுடலை.’ என்கிற கூற்று உண்மைதான்.

‘அறம் சார்ந்த வாழ்க்கை’ என்பது தன் மனைவி மங்களம் தன்னோடு வாழ்ந்த காலத்தோடு போய்விட்டது என்று நினைத்து சோகமடைந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *