அர்த்தமுள்ள வாழ்க்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2022
பார்வையிட்டோர்: 2,979 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வாழ்க்கையின் அர்த்தங்களை புரிந்து கொள்வதற்குள் வனஜாவுக்கு வயது நாற்பது ஆகிவிட்டது. அவள் இதுவரை தனக்கு எல்லாம் தெரியும் என நினைத்துக் கொண்டு தன் வீடு, தன் கணவன், தன் பிள்ளைகள் என ஒரு சிறு வட்டத்திற்குள் வாழ்ந்து வந்தாள். கட்டிய கணவன்தான் தெய்வம். அவனுக்கு வாய்க்கு ருசியாக சமைத்துக் கொடுத்து திருப்திப் படுத்துவதில்தான் அதிக கவனம் செலுத்தி வந்திருக்கிறாள்.

குடும்ப வட்டத்துக்குள் இருந்த வனஜாவுக்கு தெரியாத பல விஷயங்களை அவள் கணவன் ரவி வெளியுலகில் சாதித்து வருவது அவளுக்குத் தெரிய நேரிட்டபோது ‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா’ என மயக்கமிடாத குறைதான்.

விஷயத்தைக் கேட்ட போது அவளால் நம்ப முடியாமலும் இருக்க முடியவில்லை . காரணம் அவள் கணவன் ரவி ஆடு திருடியவன் போல திருட்டு முழி முழித்துக் கொண்டு வனஜாவையே வளைய வந்து கொண்டிருந்தான். அவளுக்கோ ‘செய்யறதையும் செய்துட்டு மனுசன் சே!’ என மனம் அலுத்துக்கொண்டாள். இந்த அப்பாவிகளை நம்பவே கூடாது. நம்ப வச்சு கழுத்த அறுத்த கதையா பண்ணிட்டாரே என்று நடந்ததையே நினைத்துக் கொண்டு மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தாள். எந்த ஆர்ப்பாட்டமும் பண்ணவில்லை.

இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயான வனஜா ஓரளவு படித்தவள், புத்திசாலி. அவள் தன் இளவயதில் நல்ல அழகுடனும் வசீகரத்துடனும்தான் இருந்தாள். இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் அவள் விரும்பாமலேயே அவள் உடல் பெருத்து, எடை கூடி, வயது சற்று அதிகமானதுபோல் ஆகிவிட்டாள்.

அவளுக்கும் உடம்பைக் குறைக்க ஆசைதான். என்ன செய்வது தலை கீழாய் நின்று முயற்சி செய்தும் ஒரு பலனும் இல்லை. ஒரு பவுண்டு உடல் எடை குறைகிறது. பின்பு இரண்டு பவுண்டு ஏறுகிறது. பட்டினி கிடந்தும் பார்த்து விட்டாள். பாழாய் போன உடம்பு குறைய மறுத்தது.

அப்போது அவள் கணவன் ரவி சொன்னான் சிரித்துக் கொண்டே, “வனஜா! உடற்பயிற்சி செய். உன் உடம்பு குண்டு பூசணி போல இருக்கு” என்று. அப்போதெல்லாம் வனஜா ஏதோ தன் கணவன் தன் மீது அக்கறை கொண்டு கூறுகிறான் என்று நினைத்தாள். ஆனால், அவன் மனதில் ஒரு வஞ்சத்தோடு கூறியிருப்பது போல இப்போது தோன்றியது.

ரவிக்கு வயது நாற்பத்து ஐந்து (45). ஆனால், அவன் இளவயது வாலிபன் போல துள்ளிக்குதித்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் வேலைக்குச் செல்வான். அவன் உயர்பதவியில் இருப்பதால் தினமும் கோர்ட், ‘டை’ என்று ‘ஸ்மார்ட்டாக’ ஆடை அணிந்து காரில் சென்று வரும் போது, வனஜாவுக்கு தன் கணவனைப் பார்க்கையில் மனதிற்கு பெருமிதமாகத்தான் இருக்கும்.

தன் கணவன் தனக்கு மட்டும்தான் என்று ஒவ்வொரு பெண்ணும் ஆசைப்படுவதில் தவறு ஒன்றும் இல்லையே! ஆனால் இன்னொரு பெண்ணிடமும் அல்லவா தன் கணவன் ஆசைப்பட்டிருக்கிறான் என்று அறியும் போது வனஜாவுக்கு பற்றிக்கொண்டு வந்தது. “பாவி மனுசன் சிரிக்க சிரிக்கப் பேசி என் கழுத்தையே அறுத்து விட்டாரே” என்று வனஜா மனம் நொந்தாள்.

“பிள்ளைகளுக்கு நல்ல தாயாக, கண் நிறைந்த மனைவியாகத்தானே இருந்தேன், இவருக்கு ஏன் புத்தி இப்படி போனது” என நினைத்துக் கொண்டவள், திடீரென எழுந்து கண்ணாடியின் முன் நின்று கொண்டு தன்னையே பார்த்துக் கொண்டவள், தனக்குள் “ஆமாம், நான் சற்று குண்டாகத்தான் இருக்கிறேன்” என சொல்லிக் கொண்டாலும்,

உண்மையான அன்பு உள்ளம் கொண்டவர்களுக்கு உடல் பருமன் ஒரு பிரச்சனையா என்ன? தான் வீட்டுக்குள்ளே இருப்பதால் எதற்கு அலங்காரம் என ஏனோதானோவென்று உடையணிந்து இருப்பது அவருக்கு பிடிக்காமல் தன்னை வெறுக்கத் தொடங்கிவிட்டாரோ! அதனால்தான் இப்படி நடந்துக் கொண்டாரா?

அவர் எப்படி இருந்தாலும் எனக்கு கணவர்தான் என்று நான் நினைப்பது போல அவர் என்னைப் பற்றி நினைக்கவில்லையே என்ற ஆதங்கம் வனஜாவை வாட்டி எடுத்தது.

செய்யறதையும் செய்துட்டு “என்னை மன்னித்து விடு” என்கிறார். பதினைந்து வருட தாம்பத்ய வாழ்க்கையை வனஜாவால் விட்டுக் கொடுக்க முடியவில்லை .

ரவி மீது அவள் கொண்ட நம்பிக்கை தூள் தூளானாலும், அவளால் கணவனைத் தூற்ற முடியவில்லை. இதுதான் இல்லற பந்தம் என்பதா?

வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் வரும் என்பார்கள். அது பண விஷயத்தில் வந்தால்கூட அவள் போராட தயாராய் இருக்கிறாள். ஆனால், இப்போது அவளுக்கு வந்திருக்கும் சோதனை.

கணவனை உதறிவிட்டு, அருகிலிருக்கும் தாய் வீட்டுக்குச் செல்ல அவளுக்கு அதிக நேரம் எடுக்காது. ஆனால், வனஜா வேகத்தைவிட விவேகமாய் நடந்து கொள்வதுதான் புத்திசாலித்தனம் என நினைத்தாள்.

ஒரு குடும்பத்தை சுவர்க்கமாக்குவதும் நரகமாக்குவதும், பெண்கள் கையில்தான் இருக்கு என்பதை நன்கு உணர்ந்த வனஜா அறிவுப் பூர்வமாக சிந்திக்க ஆரம்பித்தாள்.

நடந்தது இதுதான் :

அலுவலகத்தில் ரவியுடன் வேலை செய்யும் இளம் பெண்ணான பிரேமா என்ற பெண்ணுடன் ரவி தொடர்பு வைத்திருப்பதாக வனஜாவுக்கு தகவல் தெரிந்தபோது முதலில் வனஜா நம்பவில்லை. காரணம் அவள் கணவன் ரவி உயர் பதவியில் இருப்பவன். எல்லோரிடமும் சகஜமாக பேசி பழகும் வேலை. இதை யாரோ தவறாக புரிந்து கொண்டு பேசுகிறார்கள் என நினைத்தாள்.

ஆனால், ஒரு நாள் இரவு பிரேமாவே வனஜாவுக்கு போன் செய்து உங்கள் கணவர் ரவி நேற்று என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார். நல்ல வேளையாக நான் என்னை காப்பாற்றிக் கொண்டேன். எனக்கு ஏற்கனவே காதலர் இருக்கிறார் என்றும்,

“ரவி மிக நல்லவர், ஆனால் நேற்று ஏன் என்னிடம் அப்படி தவறாக பழகினார் என்றும் தெரியவில்லை , வீட்டில் உங்களிடம் ஏதாவது தகறாரா?” என கேட்டதும், வனஜா அதிர்ச்சியில் ஆடிவிட்டார்.

அந்த அதிர்ச்சியிலிருந்து வனஜா இன்னும் மீள முடியாமல் நடைப்பிணமாக இயங்கிக் கொண்டிருந்தாள். வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சனைகளை தாண்டித்தான் அவளும் உலா வந்து கொண்டிருக்கிறாள். கணவனே தெய்வம் என வாழ்ந்தவளுக்கு கிடைக்கும் பரிசு இதுதானா?

நல்ல வேளையாக பிரேமா நல்ல பெண் என்பதால் தன்னைக் காப்பாற்றிக் கொண்டதுடன், அதை உரிமைக்குரிய வனஜாவுக்கு தெரியப்படுத்தி புத்திசாலித்தனத்துடன் நடந்துக் கொண்டாள் என பிரேமா பற்றி பெருமைப்பட்டாலும், தன் கணவன் ஏன் இப்படி கீழ்த்தரமாக நடந்துக் கொண்டான்?

பிரேமாவைப் போல எத்தனைப் பெண்கள் உயர்வாக நடந்துக் கொள்வார்கள் என பிரேமா பற்றி சிந்தித்து, பிராமாவுக்கு அவள் மனதின் மரியாதைக்குரிய ஓர் இடத்தை அளித்தாள். பிரேமாவை மனதிற்குள் பாராட்டினாள்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. ரவி அன்று வீட்டிலிருந்தான். வனஜா ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு ரவியிடம் மென்மையாக கேட்டாள், ” நேற்று அலுவலகத்தில் என்ன நடந்தது?” “பார்ட்டி இருந்தது உனக்குத்தான் தெரியுமே,” ரவி சொன்னான்.

“பார்ட்டீனா என்ன வேனும்னா செய்யலாமா?” ரவி “ஓ டியர் என்ன சொல்றே, புதுசா கேள்வி கேட்குற?” என கேட்டான். வனஜா பதிலுக்கு “புதுசா பிரச்சனைகள் நம் வாழ்க்கையிலே தோன்ற வேண்டாமே என்றுதான்” என மென்மையாகச் சொன்னாள். பிரேமாவிடமிருந்து வந்த தொலைபேசி உரையாடலை ரவியிடம் கூறினாள்.

ரவி ஒன்றுமே தெரியாதது போல “அப்படியா! சொன்னாள், எனக்கு ஒன்றுமே தெரியாது” என மழுப்பினான். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ வனஜா பக்குவமாக ‘தவறு செய்வது மனித இயல்பு’ என்றதும் ரவி வனஜாவின் காலில் விழாத குறையாக மன்னிப்புக் கேட்டான். ரவி கொடுமைக்காரன் இல்லை.

ரவி குடும்பத்திற்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. முதல் முறையாக தவறு செய்ய எண்ணியவர் திருந்திவிட்டார். தவறு செய்பவர்களை ஒரு முறை மன்னிப்பது மனித தர்மம்தானே என நினைத்த வனஜா தன் கணவன் விரும்பிய படி தான் உடல் பருமனை குறைத்து அழகுடன் திகழ மன உறுதி கொண்டாள். பெண் நினைத்தால் எதையும் சாதிப்பாள்.

இல்லறத்தை பேணிக் காக்க நினைக்கும் வனஜா வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்க எண்ணி கணவனை மன்னித்தாள். இனி வனஜாவின் வாழ்க்கையில் நல்ல எதிர்காலம்தான். ‘பொறுத்தவள் பூமியாள்வாளே’.

ரவியும் தன் செயலை நினைத்து வெட்கப்பட்டான். அன்று ஒரு நாள் பார்ட்டியில் சற்று கூடுதலாக டிரிங்ஸ் சாப்பிட்டதால் என்ன நடந்தது என்று அவனுக்கு சரியாக ஞாபகம் இல்லை .

இனி எந்த டிரிங்ஸும் தொடக்கூடாது என மன உறுதி எடுத்துக்கொண்ட ரவி, குடும்பத்தில் பொறுப்புடன் இருக்கும் வனஜாவுக்கு, தன் மீது உயிரையே வைத்திருக்கும் மனைவிக்கு இனி எக்காலமும் உண்மையான நல்ல கணவனாக இருக்க உறுதி கொண்ட ரவி வனஜா மாதிரி நல்ல மனைவி கிடைத்ததை எண்ணி ஆண்டவனுக்கு நன்றி கூறினான்.

– தமிழ் முரசு மார்ச் 2006, ’பிரகாசம்’ சிறுகதை தொகுப்பு, முதற்பதிப்பு : மே 2006, சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *