அர்த்தங்கள் – ஒரு பக்க கதை

0
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 3,145 
 

மீனா அபார்ட்மென்ட்ஸ். மூன்றாவது ப்ளோரின் 21ம் நம்பர் வீடு. சமையல் முடித்து ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி நிகழ்ச்சியினை காண கண்ணாடி ஜன்னலின் திரைச்சீலையை மூட வந்தவளுக்கு திக்கென்றிருந்தது.

உடனே கணவனிடம் சென்று,

“இதோ பாருங்க, உங்க அப்பாவும் அம்மாவும் கீழே வந்துகிட்டிருக்காங்க, சும்மா விட்டோம்னா இங்கயே ஒரேயடியா தங்கிடுவாங்க. அதனால அவங்க வந்ததும் நாங்க திருப்பதி போறோம், வர ஒரு வாரம் ஆகும்னு சொல்லி அந்த கிழங்கள விரட்டிடுங்க ..சரியா?”

“சரி சரி”

அழைப்பு மணி அழைத்தது.

கதவை திறந்ததும் மலர்ந்த முகத்தோடு அந்த வயோதிக உள்ளங்கள் வந்தது. உடனே அவன் தன்மனைவி சொன்ன வார்த்தை பிசகாமல் படபடப்போடு அனைத்தையும் சொல்லி முடித்தான்.அவர்களும் பாவமாய்,

“சரிப்பா…பரவாயில்லப்பா, இந்தப் பக்கம் ஒரு வேலையா வந்தோம்…இவ பேரன பாக்கனும்னா. நாங்க பார்த்துட்டு போயிடறோம்” என்றார்கள்.

குழந்தையை பார்த்ததும் சந்தோசம் கொள்ளவில்லை அவர்களுக்கு.

குழந்தையோ அழுது கதறியது.

கொஞ்சிவிட்டு அவர்கள் கிளம்பினார்கள்.

கதவை தாளிட்டு வந்து “அப்பாடா…போக வச்சாச்சு” என்று கணவனும், மனைவியும் சந்தோஷப்பட்டார்கள்.

அவ்வளவு நேரம் அழுத அந்த எட்டு மாதக் குழந்தை அவர்கள் இருவரையும் பார்த்து ‘கக்கக்கவென’ சிரித்தது.சத்தமாய் அழது அரற்றிய குழந்தை திடீரென சிரிப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டனர்.

“பாசமாய் வந்த அய்யா அப்பத்தாவை விரட்டி விட்டீர்களே.எத்தனை வருடம் உங்களுக்காக அவர்களை சிதைத்து கொண்டு உங்களை இந்த உச்சியில் வைத்திருக்கிறார்கள். அடுத்தவரோட உணர்வுகளை உணர்ந்து, மதிச்சு நடக்கிறவன் தான் மனுஷ ஜென்மம். உங்களுக்கு போய் நான் பொறந்ததுல வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு தான் என் அய்யா அப்பத்தாவோட நான் இருக்க முடியலயேன்னு அழுதேன். இப்படியும் அப்பா அம்மா இருக்காங்களேன்னு உங்கள பார்த்து சிரிக்கிறேன்” என்று அந்த குழந்தையின் சிரிப்பில் அர்த்தங்கள் இருப்பதாய் அவர்களுக்கு உரைத்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *