(இதற்கு முந்தைய ‘சில நிஜங்கள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)
“கூட்டணி தர்மப்படி, நம்ம எம்.எல்.ஏ சீக்கிரமே சென்ட்ரல் மந்திரியாகப் போகிறார். அதனால நம்ம ஊருக்கு ஒரு இடைத் தேர்தல் வரப்போகுது… நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல்களுடன் நம்ம தொகுதிக்கும் தேர்தல் வச்சாகணும்.”
“தேர்தல் தேதி சொல்லிட்டாங்களா?”
“இன்னும் இல்ல. ஆனா இப்பப் பிடிச்சே ஸீட் எனக்கு ஒனக்குன்னு ஒரே குடுமிபிடி சண்டை…”
சபரிநாதனுக்குள் ஒரு விதை விழுந்தது. இந்த இடைத்தேர்தலில் நின்றால் என்ன என்ற புது நினைப்பு அவருக்குள் ஓடியது. அதே நினைப்பிலேயே அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். அவர்களுடைய தேர்தல் பேச்சு சுவாரசியமாகத் தொடர்வதை உறுதி செய்துகொண்ட ராஜலக்ஷ்மி, சாத்தி வைத்திருந்த சமையலறை ஜன்னல் கதவுகளைத் திறந்தாள். பதை பதைப்புடன் நின்றுகொண்டே இருந்தாள்.
அவள் எதிர்பார்த்தபடியே பக்கத்து வீட்டு ஜன்னல் வழியாக சுப்பையாவின் முகம் தெரிந்தது. சற்றுமுன் சபரிநாதனின் நாக்கு சவுக்காகச் சுழன்று சொற்களால் தாக்கின படுகாயம் அவள் மனதில் தோன்றியது. ‘ஒரு பிள்ளையை பெற்றுக் கொடுக்கத் தெரியலை’ என்ற தேவையே இல்லாத சீண்டலில் ராஜலக்ஷ்மியின் மார்பு பொங்கிப் போயிருந்தது. ஜன்னல் கம்பிகளை ஆக்ரோஷமாகத் திருகிக்கொண்டே, சுப்பையாவைப் பார்த்து, “சபரிநாதன் என்கிற அந்தமான் ஜெயில்ல நான் கைதியா நிக்கிறது தெரியலையா உங்களுக்கு?” என்று குமுறலுடன் கேட்டாள்.
‘அந்தமான் கைதி’ என்ற சொல் சுப்பையாவை பலமாகத் தாக்கிவிட்டது. பதறிப் போனான். “சொல்லாமலே தெரியுது ராஜலக்ஷ்மி” என்றான்.
“என்னோட பயமெல்லாம் நான் இங்கே ஆயுள் கைதியா இருந்திடக் கூடாது என்பதுதான்…”
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் உதட்டை இறுகக் கடித்தவாறு மெளனமாக நின்றான் சுப்பையா.
அவனைப் பார்த்து இரண்டு கைகளையும் கூப்பி, “இந்த ஜெயில்ல இருந்து எனக்கு விடுதலை கிடைக்க நீங்கதான் ஏதாவது உதவி செய்யணும்” என்று இறைஞ்சினாள்.
அவள் வணங்கி நின்றதை சுப்பையாவால் தாங்க முடியவில்லை.
“எப்படி எந்த வழியில் நான் உங்களுக்கு உதவி செய்ய முடியும்னு தெரியலை.”
“எனக்கும் அது தெரியலை. ஆனா நான் இந்தப் பாழடைந்த கெணத்ல இருந்து எதையாவது பிடிச்சி மேல ஏறி வந்துடணும். இந்தக் கெணத்லேயே முங்கிப் போயிடக்கூடாது… அந்தப் பதட்டம்தான் எப்பப் பார்த்தாலும். விடுதலை கிடைச்சா போதும்னு இருக்கு. இவ்வளவுதான் சொல்ல முடியும் எனக்கு.”
சுப்பையா உருகினான். அவன் முதலில் அவள் அழகில் மயங்கி அவளை உடலால் அடைய ஆசைப்பட்டது நிஜம். ஆனால் இப்போது அவள் மீது ஆசையை விட அன்புதான் அதிகமானது. அவளுக்காக தான் எதையாவது சாதித்துக்காட்ட வேண்டும் என்று நினைத்தான்.
“பதட்டப் படாதீங்க ராஜலக்ஷ்மி. கொஞ்சம் பொறுமையா இருங்க.. எப்படி உங்களுக்கு உதவ முடியும்னு நான் யோசிக்கிறேன்.”
“அவசரமா யோசிக்கணும்.”
“கண்டிப்பா.”
“இப்பவே உங்களுக்கு கோடி நன்றி சொல்லிடறேன்.” அவள் கண்களில் கண்ணீர் பளபளத்தது. அப்போது சுப்பையாவின் வீட்டு வாசலில் ஏதோ அரவம் கேட்டது. “வாசல்ல ஏதோ சப்தம் கேக்குது… மறுபடியும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது பேசுவோம். நான் வரேன்.” சுப்பையா வாசலை நோக்கி விரைந்தான்.
வாசலில் பத்துப் பதினைந்து சிறுமிகளும் சிறுவர்களும் நின்று கொண்டிருந்தார்கள். எல்லோருமே ஏழைக் குழந்தைகள். சுப்பையாவுக்குப் புரிந்தது. கொஞ்ச நேரத்திற்கு முன்பு அவனிடம் ஸ்லேட் வாங்க வந்திருந்த சிறுவன்தான் எல்லோருக்கும் முன்னால் நின்றான்.
“என்னடா இதெல்லாம்?”
“ஆமா அங்கிள்… இசக்கிக்கும் ஸ்லேட் இல்லையாம்; மணிக்கு புஸ்தகம் இல்லை; முப்பிடாதிக்கு பென்சில் இல்லை…” அவன் சொல்லச் சொல்ல சுப்பையா மனம் கனிந்து போனான். சபரிநாதன் மட்டும் ஓரக்கண்ணால் இதயெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தார். பார்க்கப் பார்க்க பொறாமைதான் பொங்கியது. அவரின் மனநிலை புரியாத முருகபூபதி, “தம்பி! போற போக்கைப் பாத்தா வரப்போற இடைத் தேர்தல்ல நீங்க போட்டி போட்டீங்கன்னா இந்த ஊரு ஓட்டு ஒங்களுக்குத்தான் விழும்போல…” என்றார்.
சபரிநாதனுடைய மனசில் அந்தக் காட்சி ஓடியது…
சுப்பையா வேட்புமனு செய்கிறான்; வாக்காளர்களைச் சந்திக்கிறான்; பேரணியே நடத்துகிறான்; வெற்றி பெற்று மாலையும் கழுத்துமாக ஊர்வலம் வருகிறான்; காந்திமதியும், ராஜலக்ஷ்மியும் போட்டி போட்டுக்கொண்டு சுப்பையாவைப் பார்க்க தெருவில் ஓடுகிறார்கள்… இதற்குமேல் பார்க்கப் பிடிக்காமல் அவரது மனசு மூடிக்கொண்டது. இதெல்லாம் நடக்கப்போவது கிடையாது. ஆனால் நடக்கப்போகிற மாதிரி ஒரு பிரமை அவர் மனசில் ஏற்பட்டுவிட்டது.
சுப்பையாவின் புகழ் வளர்ச்சியை முறியடிக்க முடியுமோ முடியாதோ; அவனுக்கும் மேல் தான் புகழ் பெற்றாக வேண்டும் என்ற திமிர் அவருக்குள் தலை தூக்கியது. அதற்கான உடனடியான ஒரே வழி, வரப்போகும் இடைத் தேர்தலில் அவர் போட்டியிட்டு ஜெயிப்பதுதான்.
குழந்தைகளின் மத்தியில் நின்ற இளம் சுப்பையாவை, சபரிநாதன் இத்தகைய தீவிரமான சிந்தனையுடன் பார்த்தார். இளமையில்கூட அவர் சுப்பையா அளவிற்கு இத்தனை அழகாக இருந்ததில்லை! அதெல்லாம்கூட இப்போது அவருக்கு ஒரு விசனமாக இருந்தது. இந்தநேரம் பார்த்து அந்தப் பக்கமாக காந்திமதி வந்து கொண்டிருந்தாள். அவளுக்கு மட்டும் கண்ணால் விழுங்கக்கூடிய சக்தி இருந்தால் சுப்பையாவை விழுங்கிவிட்டுத்தான் அடுத்த ஜோலியைப் பார்ப்பாள்! காந்திமதியின் பார்வையை உணராமல் சுப்பையா குழந்தைகளோடு ஐக்கியமாகி நின்றான். ஆனால் சபரிநாதன் இதைப் பார்த்துவிட்டார். என்ன தைரியம் இருந்தால்; அவர்மேல் எத்தனை அலட்சியம் இருந்தால் அவரின் கண் எதிர்லேயே அறுதலி சிறுக்கி சுப்பையாவுக்கு இப்படி ‘கள்ளவோட்டு’ போட வருவாள்?!
சபரிநாதன் எழுந்தே நின்றுவிட்டார். இந்த அறுதலி சிறுக்கிக்கும் சேர்த்து பதிலடி கொடுக்க வருகிற இடைத் தேர்தலில் போட்டி போட்டேயாக வேண்டும் அவர்…! இனி தனக்கு வேற வழி கிடையாது… என்று குமைந்தார் சபரிநாதன்.
முருகபூபதி சுப்பையாவிடம் சொன்ன வார்த்தைகள் சபரிநாதனின் மனநிலையில் நிறைய தாக்கங்களை ஏற்படுத்திவிட்டது. கண்கொத்திப் பாம்பாக ராஜலக்ஷ்மியை காபந்து பண்ணிப் பண்ணி வாழ்ந்து கொண்டிருந்த சுருங்கிப்போன வாழ்க்கையில் இருந்து அவருக்கே விடுதலை வேண்டும்போல இருந்தது. அக்கடாவென்று எங்கேயும் போக முடியவில்லை; அப்படியே போனாலும் நாய் மாதிரி ஓடிவர வேண்டியிருக்கிறது. என்ன ஆகிவிடுமோ, ஏது ஆகிவிடுமோ என்ற பயம் இருபத்திநான்கு மணி நேரமும் அவருடைய மண்டைக்குள் குடைந்து கொண்டிருந்தது. அவரால் இந்த மண்டைக் குடைச்சலைத்தான் தாங்க முடியவில்லை. எங்கேயாவது போய்வரலாம் என்று பார்த்தால், சுப்பையா பக்கத்து வீட்டில் இருக்கும்வரை அதுவும் முடியாது.
இவன் எப்போது வேறு வீடு பார்த்து, பேரனுக்கு ஸ்கூல் பார்த்து வீட்டைக் காலி பண்ணுவான்? எதுவும் புரியவில்லை. சொந்த மாப்பிள்ளை வேறு… புயல் உருவாகி இருக்கும் நேரம் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கப்போவது கிடையாதே! இப்போது சுப்பையா என்ற புயல் ரொம்பப் பக்கத்தில் மையம் கொண்டுள்ளதே! முதலில் அது கரையைக் கடக்க வேண்டும்… பிறகு உடனே கிளம்பிவிடுவார் சபரிநாதன், காற்றோட்டமான புதிய வாழ்க்கையை நோக்கி! புது வாழ்க்கைத் தொடரின் முதல் அத்தியாயம்தான், அவர் இடைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆவது…
இன்று நாடு இருக்கிற நிலைமையில் சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவியே போதும். அட்டகாசம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதிகார துஷ்பிரயோகத்திற்கான சாத்தியக் கூறுகள் ஏராளம். அவருடைய இப்போதைய உடனடித்தேவை பதவியும் அதிகாரமும்தான். பண்ணையார் என்ற அந்தஸ்தெல்லாம் அந்தக்காலம். அதை வைத்துக்கொண்டு ராஜலக்ஷ்மியை கல்யாணம் செய்து கொண்டதற்கு மேல் அவளால் சபரிநாதனுக்கு எந்த சந்தோஷமும் கிடைக்கவில்லை!
இத்தனைக்கும் எல்லா விதத்திலும் ராஜலக்ஷ்மியை அவருடைய கெடுபிடியான தீர்மானங்களின்படிதான் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய எல்லா எண்ணங்களும் அவளின் வெளி நடத்தைகளைத்தான் கட்டுக்குள் வைத்திருக்கிறதே தவிர, உள்மனசில் ராஜலக்ஷ்மி நேர் எதிராகத்தான் இருக்கிறாள் என்ற சந்தேகமும் சபரிநாதனுக்கு இருக்கவே செய்தது. இந்தச் சந்தேகம் ஒருவித தோல்வி மனப்பான்மையையும், தாழ்வு மனப்பான்மையையும் அவருக்குள் ஏற்படுத்தி விட்டிருந்தது.
அதனால்தான் புத்தம் புதிய வேறொரு அந்தஸ்தால் ராஜலக்ஷ்மி என்ற செத்த சவத்தை சபரிநாதனுக்கு உடனடியாக ஜெயித்துக்காட்ட வேண்டியிருந்தது. அதற்கான அருமையான சந்தர்ப்பம்தான் வரப்போகிற இடைத் தேர்தல். இந்தத் தடவை அதை நழுவவிடத் தயாரில்லை அவர். சீக்கிரம் வேட்புமனு தாக்கல் செய்யபோகிற வேகத்தில் காத்திருந்தார். . அவருடைய ஆசைக்கேற்ற மாதிரி, இடைத் தேர்தல் பொறுப்பாளரான மந்திரி அருணாச்சலம் பாளையங்கோட்டையில் பள்ளிக்கூடம் ஒன்றின் பொன் விழாவிற்காக ஜங்க்ஷன் ஜானகிராம் ஹோட்டலில் வந்து அன்று தங்கியிருந்தார்.
இதைத் தெரிந்துகொண்ட சபரிநாதனின் மேட்டு விழிகள் அப்படியும் இப்படியுமாக கடிகாரப் பெண்டுலம் போல ஆடின! தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப் படவில்லைதான். அதனால் அவசரமே இல்லைதான். ஆனால் சபரிநாதனுக்கு அவசரமோ அவசரமாயிற்றே! இந்த நிமிஷமே மந்திரி அருணாச்சலத்தைப் பார்த்துப் பேசி, தன்னுடைய பெயரை ‘ரிஸர்வ்’ செய்து வைத்துவிட்டு வந்துவிடலாம் என்று தோன்றிவிட்டது அவருக்கு. சாப்பாட்டுக் கடையை காமா சோமாவென்று முடித்துவிட்டு முருகபூபதியையும் இழுத்துக்கொண்டு ஜங்க்ஷன் கிளம்பிவிட்டார். “ஒரு ஜோலியா ஜங்க்ஷன் போறேன். சீக்கிரம் வந்திருவேன்..” என்று இப்போதே எம்.எல்.ஏ ஆகிவிட்டாற் போன்ற செருக்கோடு ராஜலக்ஷ்மியை பார்க்காமலேயே சொல்லிவிட்டு தெருவில் வேகமாக இறங்கி நடந்தார்.
சபரிநாதனுக்கே தெரியும் நிச்சயமாக அவரால் சீக்கிரமாகத் திரும்பி வரமுடியாது என்பது… ஆனால் இப்படிச் சொல்லி வைத்துவிட்டுக் கிளம்புவது அவருடைய ஸ்டைல். அப்போதுதான் அவர் சீக்கிரம் வந்துவிடுவார் என்ற பயத்தில் இருப்பாளாம் ராஜலக்ஷ்மி.
சபரிநாதன் குடையுடன் வேகமாகக் கிளம்பிப் போனதை தற்செயலாக சுப்பையா பார்த்துவிட்டான். உடனே தன்னுடைய வீட்டிற்குள் போய் கதவை சாத்திக்கொண்டான். அறையின் ஜன்னல் ஓரம்போய் நின்றுகொண்டு “ஹலோ” என்று சத்தமாகக் குரல் கொடுத்தான். குரல் கேட்டு முதலில் ராஜலக்ஷ்மி திடுக்கிட்டாள். குரல் நிஜமா அல்லது தன் பிரமையா என்று தெரியவில்லை. சில வினாடிகளுக்குப் பிறகு குரல் மறுபடியும் கேட்டது. அடுத்தகணம் ராஜலக்ஷ்மி ராஜலக்ஷ்மி சமையலறை ஜன்னலில் நின்றாள். சிறிதும் எதிர்பார்க்காமல் கிடைத்த சந்தர்ப்பம் என்பதால் இருவருமே சில நிமிடங்கள் மெளனமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
சுப்பையா “என்ன வேலையா இருந்தீங்க?” என்று கேட்டான்.
“என்ன வேலை செய்யலாம்னு யோசனை பண்ணிக்கிட்டு இருந்தேன்.”
அவளின் இந்த எளிய பதில்கூட அவளை அவனுக்கு மிகவும் அருகாமைப் படுத்தியது.
“எங்கே போறார் அவர்?”
“அதெயெல்லாம் சொல்லிட்டார்னா கெளரவம் குறைஞ்சி போயிடும் அவருக்கு. அதனால எங்க ஒழிஞ்சாருன்னு எனக்குத் தெரியாது.”
“ஒரு முக்கியமான கேள்வியை ஒங்ககிட்ட கேக்கணும்…”
“எதுவாயிருந்தாலும் கேளுங்க…”
“எந்தச் சூழ்நிலையால் அல்லது எந்தக் காரணத்தால் என்னோட மாமனாரை நீங்கள் கல்யாணம் செய்து கொண்டீர்கள்?” சுப்பையா இதை ஆங்கிலத்தில் கேட்டான்.
“இப்படி இங்லீஷ்ல கேட்டீங்கன்னா எனக்குப் புரியாது. தமிழ்லேயே கேளுங்க.”
மிகக நன்றி ஜாவித். தொடர்ந்து படியுங்கள், இன்னமும் விறுவிறுப்பு எகிறும்.
அண்ணா உங்கள் இந்த சபரிநாதன் தொடர்கதை விறுவிறுப்பாக உள்ளது.சீக்கிரம் அடுத்த பகுதியை எழுதவும்.இந்த குளிர் மிகுந்த மழைக்காலத்தில் உங்கள் எழுத்தை வாசிக்க அருமையாக உள்ளது .