கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 25, 2022
பார்வையிட்டோர்: 5,035 
 

“டேய், இரண்டு கொத்து மாவிலை பறிச்சிண்டு வாடா, வாசல் நிலைப்படியில தோரணம் கட்டணும்” என்றாள் அம்மா. ஏதோ வீட்டில் சின்ன விசேஷம். ஓடிச்சென்று, காம்பவுண்ட் சுவரில் ஏறி, கைக்கெட்டிய கிளைகளிலிருந்து மாவிலைகளைக் கிள்ளி எடுத்து வந்தேன்.

அக்கம்பக்கத்துலேயும், எங்கள் வீட்டிலேயும் வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, சங்கராந்தி எல்லா நாட்களுக்கும் தோரணம் அந்த மாமரத்து இலைகள்தான்.

மரத்துக்கு சுமார் என்ன வயதிருக்கும்? தெரியாது. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அந்த மரம் அங்கே உள்ளது. எனக்கு நினைவு தெரிந்து கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலாகிறது.
கோயிலுக்கு எதிர்த்த வீட்டில், மூன்று அறைகள் வரிசையாகக் கொண்ட ஒரு சைட் போர்ஷன். அங்குதான் அம்மாவின் முப்பத்தைந்து வருட வாழ்க்கை. அறைகள், விருந்தினர் வந்தால், வரவேற்பறையாகவும், கையில் தட்டுடன் அமர்ந்தால், டைனிங் ஹாலாகவும், படுக்கை விரித்தால், படுக்கையறையாகவும் மாறிவிடும்,

ஒரு தேர்ந்த நாடக மேடை மாதிரி. முன் அறையிலிருந்து, உள் வழியாக மாடிக்குச் செல்லப் படிகள் உண்டு. மொட்டை மாடிதான். மாமரக்கிளைகள் மாடி வரையில் சிறிது எட்டிப் பார்ப்பதால், காலையில் கொஞ்சம் நிழல் விழும். மாடிப்படிகளுக்குக் கீழே, இரண்டு பேர் குத்துக்காலிட்டு உட்கார்ந்து கொள்ளத் தக்க இடமும் உண்டு. வீட்டில் மழைநீர் ஒழுகாத இடமும் அது ஒன்றுதான்.

எங்கள் போர்ஷனுக்கும், பக்கத்து வீட்டு காம்பவுண்ட் சுவருக்கும் இடையே சுமார் முப்பது அடி தூரம் வெற்று இடம். சுவருக்கருகே, எங்கள் போர்ஷனை நோக்கிச் சிறிது சாய்ந்தாற்போல் சிநேகமாய் நிற்கும் அந்த மாமரம். கிளைகளும், மாவிலைகளும் பந்தல் போலப் பரந்து, வெய்யிலே தெரியாமல் நிழலாய்க் குளுமையாய் இருக்கும்.

உடலில் ஆங்காங்கே மரப்பட்டைகள் உரிந்தும், பிளந்தும், நீளவாக்கில் பல விரிசல்களுடனும், மரம் தன் வயதைச் சொல்லிக் கொண்டிருந்தது. மழை நீரும், சிவப்பு நிற கட்டை எறும்புகளும் அந்த விரிசல்களில் எதிர் திசைகளில் சென்று கொண்டிருக்கும்.

அம்மாவுக்குத் தன் குழந்தைகளைப் போலவே, அந்த மாமரத்து மேலேயும் மிகுந்த பாசம். பிற்பகல் வேளைகளில், வீட்டு வாசற்படியில் உட்கார்ந்து கொண்டு, மரத்தைப் பார்த்து மகிழ்ந்து போவாள். மாலைக் காற்றில், சலசலக்கிற பச்சை இலைகளையும், லேசாகத் தலையசைக்கிற கிளைகளையும், தாவி ஓடுகிற அணிலையும், எப்போதாவது வந்து பழம் கொத்தும் கிளியையும் பார்த்து ஆனந்தப்படுவாள்.

அந்த மரத்தை எப்போதும் தன்னுடனேயே வசிக்கின்ற தோழியாகவோ அல்லது சகோதரியாகவோ நினைத்து, அதனுடன் தன் சுக துக்கங்களைப் பேசுவாளோ? என்று கூட எனக்குத் தோன்றும்.
பின் போர்ஷன் கழிவுநீர், மழைநீருடன் கலந்து, தெருவில் கலக்கச் செல்லும் வழியில் இம்மரத்து வேர்களை நனைத்தபடி செல்லும். இருந்தாலும் தினம் வாசலில் தண்ணீர் தெளிக்கும்போது இரண்டு பக்கெட் தண்ணீர் மரத்து வேரிலும் ஊற்றுவாள் அம்மா. “”பாவம் வெய்யலில் வாடறது” என்பாள்.

ஒருநாள், ஜன்னலை மறைக்கிறது என்று, அந்தப் பக்கக் கிளைகளை வெட்டிவிட்டார் பக்கத்து வீட்டு முதலியார்.

“அவர் நியாயம் அவருக்கு. எனக்குத்தான் கிளைய வெட்டின இடத்தப் பார்த்தா, கண்ணுல தண்ணி வருது” என்று வருந்தினாள் அம்மா.
“மரம்தானே அம்மா, அதுக்கு ஏன் இவ்வளவு கவலைப்படறே? கொஞ்ச நாளிலெ துளுத்துடப் போறது?” என்றேன் யதார்த்தமாக.

“மரமா அதுக்கு வலிக்காதுன்னு நீ எப்படிச் சொல்றே? அதுக்கும் உயிர் இருக்கு. பூக்கறது, காய்க்கறது. அதுவும் நம்பள மாதிரி. ம்.. ஹூம்… நம்பளவிட ஒசத்தியான ஒரு ஜீவன்டா… அதுக்கு, மனுஷா கிட்டே பாரபட்சமெல்லாம் கெடையாதுடா. அதெல்லாம் நமக்குதான். எல்லாருக்கும் நிழலும், காயும், பழமும் எப்பொவும் தரும்டா” என்றாள். அம்மாவுக்கு அந்த மாமரத்து மேல அவ்வளவு வாஞ்சை.

கோடைக்காலத்தில் நிறைய மாம்பூக்களும், இளந்துளிர் மாவிலைகளுமாக தரையெங்கும் தூவி, காற்றில் மரமே அசைந்து, சாமரம் போல் குளிர்ந்த காற்றை வீசும் சுகமே அலாதி.

தரையெங்கும் சிதறிக் கிடக்கும் சின்னச் சின்ன மாவடுக்களை எல்லாம் எடுத்து (பொறுக்கு வடு), உப்பும் காரமுமாய் மாவடு ஊறுகாய் போட்டு வைப்பாள் அம்மா. சீசனில் மாங்காய் காய்த்துக் குலுங்கும் “தட்’ டென்ற சத்தத்துடன் ஓட்டின் மீது விழும் மாங்காய், சில நேரங்களில் அணில் கடித்த அரைப்பழமாகவும் இருக்கும் ரோட்டில் போவோர் கல்லடியும், இவ்வளவு காய்களா? எனக் கண்ணடியும் படும் அந்த மரம். அம்மா, மரத்துக்கு உப்பு சுத்திப் போட்ட வருடங்களும் உண்டு.

எதிர் வீட்டு பாபு, பப்பி, பக்கத்து வீட்டு குரு, ராஜி மற்றும் பின் போர்ஷன் சின்னா, சேகாச்சி, கடைசி வீட்டு ஸ்ரீராம் எல்லோரும் கோடை வெய்யில் தெரியாமல் மாமர நிழலில் ஆட்டம் – கொக்கோ, நொண்டி, கவர்பால் கிரிக்கெட் என்று ஒருமினி ஒலிம்பிக் போட்டியே நடக்கும். இடையிடையே கல்லால் மாங்காய் அடிக்க, அம்மா வந்து, “”டேய், கல்லால அடிக்காதீங்கடா. மாடிக்குப் போய், அந்தத் தொரட்டுக்குச்சியால, கிளைய ஒடிக்காமெ, மெதுவா மாங்காய மட்டும் பறிங்கடா” என்பாள் கூடவே உப்பு, மிளகாய்ப் பொடியும் தொட்டுக்கக் கொடுப்பாள். மரத்துக்கும் வலிக்குமோ?

வீட்டின் பின்புறம் இரண்டு மாமரங்கள் உண்டு ஒன்றின் மாங்காய்கள் மிகவும் இனிப்பாக இருக்கும் (ஒட்டு மாங்காயோட கிராஸ் இது என்பாள் அம்மா).

மற்றது, மாங்கொட்டையே பிரதானமாயும், புளிப்பாயும் இருக்கும். கொட்டகாச்சி என்ற பெயர். அணில் மட்டுமே வருவித் தின்னும் .

இவை தவிர, ஒரு அருநெல்லிக்காய் மரமும், வாசற்புரம் ஒரு புன்னை மரமும், காம்பவுண்ட் சுவரைப் பிளந்தாற்போல் ஒருவேப்ப மரமும் வீட்டில் உண்டு. மரத்தடி நிலத்தைப் பெருக்கி, சுத்தமாக வைத்திருப்பாள் அம்மா அதில் விழும் வேப்பம்பூவைச் சேகரித்து, காய வைத்துத் தமிழ்ப் புத்தாண்டுக்கு பச்சடியும், ரசமும் வைப்பாள். பக்கத்து மர மாங்காய் வெல்லப் பச்சடியும் உண்டு. இவை யாவும் இயற்கை நமக்கு அளித்த கொடை என்று சொல்லி மகிழ்வாள்.

வீட்டுக்காரர், அந்த வருடம் மாமரங்களைக் குத்தகைக்கு விட்டு விட்டார். நீளமான கம்புகளில் கறுப்பு வலைகளுடன் வந்தவர்களிடம், “”பார்த்துப்பா, கிளைகளையெல்லாம் ஒடிச்சிடாமெ, மாங்காய்களை மட்டும் ஜாக்கிரதையாக பறிச்சிட்டுப் போங்க” என்று சொன்னவள், அன்று முழுவதும் சாப்பிடாமல், அவர்களைக் கண்காணித்தவறே இருந்தாள்.

ஒவ்வொரு மழைக்கும், காத்துல மாமரம் ஆடறதப் பார்த்து, “எங்கே மரம் உடைந்தோ அல்லது வேரோடு பெயர்ந்தோ நம்ப வீட்டு மேல விழுந்திடுமோ?’ன்னு பயப்படுவாள் அம்மா. மாடிப்படிக்குக் கீழே இருக்கிற அந்தச் சின்ன இடம்தான் ஈரமில்லாமல், பாதுகாப்பான இடம் என்று, ஒரு சாக்கைப் போட்டு, குழந்தைகளை அங்கேயே உட்கார வைத்து சாப்பாடு போடுவாள்.

மின்னல், இடின்னா, மரத்தை எட்டிப்பார்த்து, பயந்துகொண்டே “அர்ஜுனா, அர்ஜுனா’ என்பாள். மரமும் இப்போ விழுந்து விடவா என்பதுபோல முன்னும், பின்னும் அசைந்து பாவ்லா காட்டியபடியே இருக்கும். மரத்துக்கும் அம்மாவைப் பிடிக்கும்தானே? மீண்டும் “அர்ஜுனா, அர்ஜுனா’.

ஏதோ ஒரு செட்டியாரம்மா சொன்னாங்கன்னு, ஒரு நாள் மாமரத்தடியை நல்லா பெருக்கி, கோலம் போட்டு, மரத்துக்கு மஞ்சள், குங்குமம் வெச்சு, வெற்றிலை, பாக்கு, பழமெல்லாம் நைவேத்தியம் செய்து பூஜை செய்தாள் அம்மா. மரங்களைப்போற்றி, வளர்த்து பூஜைகள் செய்தால் நம்ம சந்ததிகள் நன்றாக இருப்பார்கள் என்று யாரோ சொன்னார்களாம்.

திடீரென்று அம்மாவுக்கு ஏதோ உடம்பு சரியில்லை தலைவலி. ஆஸ்பத்திரிக்குப் போகும்போது, மாமரத்தைப் பார்த்துக் கொண்டே ஆட்டோவில் ஏறினாள்.

“இரண்டு நாளாய் தண்ணீயே விடலை, நீயாவது ஊற்றக் கூடாதா?” என்றாள். அன்றுதான் அம்மா மாமரத்தைக் கடைசியாகப் பார்த்தது.

இரண்டு நாட்கள் சிகிச்சை பலனில்லாமல், உயிரற்ற உடலாய் அம்மாவைக் கொண்டு வந்தோம். இறுதிச் சடங்குகள், அவள் பாசமுடன் நேசித்த அந்த, மாமர நிழலில்தான் நடந்தேறின.

மரத்தில் ஓர் இலை கூட அசையவில்லை கிளம்பும்போது அம்மாவின் முகம் வானத்தை நோக்கி மாமரக் கிளைகளையும், இலைகளையும் பார்த்தவாறு சிறிது இதழ்விரித்து சினேகமாகப் புன்னகைத்த மாதிரி இருந்தது. இரண்டு மாவிலைத் துளிர்கள் சுழன்று, தரையிறங்கி அம்மாவின் மடியில் விழுந்தன. இறுதி மரியாதையோ? எத்தனை வருட பந்தம்? “மரத்துக்கும் உயிர் இருக்குடா” – அம்மாவின் குரல் காற்றில்கேட்பது போல் இருந்தது.

அம்மா போய் சில வருடங்களில் எல்லாரும் டெல்லி, கல்கத்தா, யூஎஸ் என்று சிதறி விட்டோம். வீட்டுக்காரரும் அந்த வீட்டை இடித்து அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப் போவதாகச் சொன்னார்.
“இந்த மாமரத்தை மட்டும் வெட்டிடாதீங்கோ, எங்க அம்மாவோட ஆன்மா இதுலெதான் இருக்கு”. அவருக்கு என்ன புரிந்ததோ? தெரியாது.

-அக்டோபர் 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *