கதையாசிரியர்:
தின/வார இதழ்: தென்றல்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 16, 2013
பார்வையிட்டோர்: 16,863 
 
 

மணி எட்டு. இன்னும் அரைமணி நேரத்திற்குள் பெருக்கித் துடைத்து முடிக்க வேண்டும். கமலத்தின் உடல் முழுவதும் வியர்வையில் நனைந்திருந்தது. 9.30 மணிக்கு விழா ஆரம்பம். 8.45க்கெல்லாம் ஸ்வர்ணா வந்து விடுவதாகச் சொல்லியிருந்தாள்.

லயன்ஸ் கிளப் தலைவி ஸ்வர்ணா. அவளுடைய குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் ஆயாவின் சிபாரிசின் மூலம்தான் இந்த லயன்ஸ் கிளப் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறாள் கமலம். ஸ்வர்ணாவிற்குக் கமலத்தைப் மற்றபடி எதுவும் தெரியாது.

வேகம் வேகமாகப் பெருக்கி முடித்த கமலம், டெட்டால் கலந்த தண்ணீர் வாளியுடனும் துடைக்கும் துணியுடனும் வந்தபோது யார் மீதோ இடித்துக் கொண்டாள். நெஞ்சம் நிறைய படபடப்போடு, நிமிர்ந்து பார்த்தபோதுதான் தெரிந்தது அது டாக்டர். கனகா என்று. அன்றைய விழாவிற்கு வருகை தந்திருந்த குழந்தை மருத்துவர் அவர். ‘அவசரத்திலே மோதிட்டேன் மன்னிச்சுக்கங்கம்மா’ என்றாள் கமலம் பவ்யமாக.

”ஏய் கமலம்!! நீ எப்படி இங்கே? ஆமா, ஏன் உன் குழந்தையை இன்னிக்கி க்ளினிக்குக்கு எடுத்துண்டு வரல்லே? நான் என்ன சொல்லியிருக்கேன் தவறாமே வந்து குழந்தைக்கு பிஸியோதெரபி செஞ்சுக்கோ, உன் குழந்தைக்குக் கால் சரியாகி ஆறே மாசத்திலே நடக்க ஆரம்பிச்சுடுவான்னு சொன்னேனா இல்லியா. இன்னிக்கி என்னாச்சு? ஒரு மாசமா ஒழுங்கா வந்துண்டிருந்தியே.” என்றாள் டாக்டர் கனகா.

ஸ்வர்ணா ஒன்றும் புரியாமல் அவர்கள் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்தாள். ”டாக்டர், என் குழந்தை நேத்து ராத்திரி ரெண்டு மூணு தரம் வயிற்றுப் போக்கால் தூக்கமேயில்லாமே அவஸ்தைப் பட்டான். காலைல அசந்து தூங்கிட்டிருந்தான். அதா எழுப்பமுடியல்லே. இங்கே வேலைக்கும் லேட்டாயிடுச்சு.” என்றாள் கமலம்.

”இப்ப குழந்தையெ யார் பாத்துக்கறா?” அக்கறையோடு கேட்டாள் டாக்டர். கனகா. பக்கத்து வீட்டு ஆயாகிட்ட கொஞ்ச நேரம் பாத்துக்கச் சொல்லிட்டு வந்திருக்கேன்.

ஸ்வர்ணா பக்கம் திரும்பி, ‘ஸ்வர்ணா! இவளுடைய குழந்தை இரண்டு வயசு வரை நன்னா ஓடி ஆடிண்டு தான் இருந்தான். குடிகாரப் புருஷனின் பொறுப்பில்லாத்தனம், ஏழ்மை எல்லாமா சேர்ந்து குழந்தையைக் கவனிக்க வேண்டிய நேரத்தில் கவனிக்கலை. சொட்டு மருந்து கொடுக்கலை. திடீரென்று ஒரு நாள் அதிகமான ஜுரத்தில் போலியோவினால் கணுக்கால் பாதிக்கப்பட்டு விட்டது. நல்ல காலம். ஆரம்பத்திலேயே கண்டு பிடிச்சதாலே பிசியோதெரபி மூலம் நல்ல பலன் இருக்கு. கால் விளங்காத குழந்தைய வெச்சு காலம் பூரா கஞ்சி ஊத்த என்னாலே முடியாது, நீயே கட்டிக்கிட்டு அழு என்று சொல்லி இவ புருஷன் ஊரவிட்டே போய்ட்டான்.

பாவம் கமலம். படிப்பும் இல்லே.

நாலு வீட்டிலே பாத்திரம் தேச்சு துணி துவைச்சு இந்தக் குழந்தைக்கும் நம்பிக்கையோடே வைத்தியம் பண்ணிண்டிருக்கா.”

ஸ்வர்ணா வாயடைத்து நின்று விட்டாள். போலியோவால் பாதிக்கப்பட்ட தன் குழந்தைக்கு வைத்தியம் பார்க்க கமலம் தன் வியர்வையைச் சிந்தி உழைத்துக் கொண்டிருப்பதோ இலவச போலியோ சொட்டு மருந்து வழங்கும் இந்த முகாமில்.

– மே 2003

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *