அம்மா வாங்கி வந்த பேனாவைப் பார்த்ததும் கோபுவுக்கு ஒரே மகிழ்ச்சியாக இருந்தது.
ஓடிச்சென்று அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கன்னத்தில் முத்தமிட்டான்.
“ரொம்ப நன்றி அம்மா. பேனாவைக் கொடுங்க அம்மா,” கேட்டான் கோபு.
“கோபு, இந்தப் பேனா உனக்கல்ல!” அம்மா சொன்னதும் ஆவலெல்லாம வடிந்துவிட அதிர்ச்சியுடன், “பின் யாருக்கம்மா?” என்றான்.
“இது உன் நண்பன் அந்த ஏழை பாபுவுக்கு”.
“நான்தான் அம்மா பேனா கேட்டேன்!”
“நீதான் இரண்டு, மூன்று பேனா வைத்திருக்கிறாயே! ஆனால், அந்த பாபுவிடம் பேனாவே இல்லேங்கிறது இப்பத்தான் என் நினைவுக்கு வந்தது. அதனாலே இதை அவன் கிட்டே கொடுக்கப் போகிறேன்.”
அதைக்கேட்டதும் கோபுவின் முகம் சுருங்கிப் போய் விட்டது. அம்மாவின் மேல் அவனுக்கு இப்பொழுது கோபம், கோபமாக வந்தது.
“இந்தப் பேனாவை பாபுகிட்டே கொடுக்கிறதினாலே என் மேல் உனக்குக் கோபம் இல்லையே!”
அம்மா கேட்டதும் கோபத்தை மறைத்துக் கொண்டு “இல்லேம்மா?” என்றான்.
அவன் வாய் சொன்னாலும் அவன் முகத்தில் இருந்த கோபத்தை அம்மா புரிந்து கொண்டாள்.
“இதோ பாரு கோபு, உனக்கு நான் இருக்கிறேன். உன் அப்பா இருக்கிறார். ஆனால் பாபுவுக்கு யார் இருக்கிறார்கள்? அம்மா இறந்து போயிட்டாங்க. அவன் அப்பாவோ நோயாளி. எப்போதும் நம்மைவிடக் கஷ்டப்படறவங்களுக்கு நாம உதவி செய்தால் கடவுள் நமக்கு உதவி செய்வார். எங்கே நீயே மகிழ்ச்சியோடு இந்தப் பேனாவைக் கொண்டு போய் பாபுவிடம் கொடுத்துவிட்டுவா. பார்ப்போம்”.
கோபு போலியான மகிழ்ச்சியோடு பேனாவை பாபுவிடம் கொடுத்துவிட்டு வந்தான்.
சமாதானம் அடையாத மனத்தோடு பள்ளிக்குச் சென்றான்.
பாபு எல்லோரிடமும் கோபு கொடுத்த பேனாவைக் காட்டி, கோபுவின் பெருந்தன்மையை எடுத்துச் சொன்ன பொழுது கோபுவிற்கு ஒருபுறம் பெருமையாக இருந்தாலும் ஒருபுறம் எரிச்சலாகவும் இருந்தது.
அன்று மாலையே கோபுவுக்கு ஓர் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி ஏற்பட்டது பள்ளியில்.
சென்றவாரம் நடந்த கட்டுரைப் போட்டியில் அவன் முதற்பரிசு பெற்றதாக அறிவித்துப் புது ஹீரோ பேனா ஒன்று பரிசளிக்கப்பட்டது தலைமையாசிரியரால்!
பழைய வருத்தம் மறைந்து போக புதுப் பேனாவுடன் மகிழ்ச்சியோடும், பெருமையோடும் வீட்டிற்குச் சென்று அம்மாவிடம் தன் பேனாவைக் காட்டினான்.
“கோபு, நான் காலையிலேயே சொன்னேன் அல்லவா? கடவுளுக்குப் பிடிச்ச விஷயத்தை நாம் செஞ்சா கடவுள் நமக்குப் பிடிச்ச விஷயத்தைச் செய்வாருன்னு! நாம் பாபுவுக்குக் கொடுத்தது சாதாரணப் பேனா ஆனால் கடவுள் உனக்குக் கொடுத்ததோ ஒரு உயர்வான ஹீரோ பேனா என்றாள்.
“உண்மைதான் அம்மா! நானும் இனிமேல் நம்மைவிடக் கஷ்டப் படறவங்களுக்கு என்னால் முடிஞ்ச உதவியைச் செய்வேன்” என்று சொன்ன கோபுவைப் பெருமையோட உச்சிமோந்தாள் அம்மா.
– கோகுலம் நவம்பர் ‘87’