அம்மா மனசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 20, 2021
பார்வையிட்டோர்: 3,927 
 

பேருந்து நிறுத்தத்தில் கல்லூரிப் பெண்கள் கூட்டம். பெட்டிக்கடை அருகில் நின்று கொண்டிருந்த ஒருவர் மெல்ல நெருங்கி அங்கிருந்த ஒரு பெண்ணிடம் பேச முயன்றார்.

அந்த பெண் அவரை ஒரு அற்பப் பொருளாகப் பார்த்து விட்டு சற்றுத் தள்ளி போய் நின்றாள்.

தன் முயற்சி தோல்வி என்பதை புரிந்து கொண்ட அந்த மனிதர் மறுபடியும் பெட்டிக்கடை அருகில் போய் நின்று கொண்டார். இதே இடத்தில் டி.வி. ரிப்பேர் கடை வைத்திருக்கும் மெக்கானிக் ராம்குமார், தினசரி இந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

அந்த மனிதருக்கு ஐம்பது தாண்டியிருக்கும். `பளிச்’ உடையில் தினமும் தலைவாரி டிப்- டாப்பாக டூவீலரில் வந்து நிற்பார். அந்தப் பெண்கள், பேருந்தில் ஏறிச் செல்லும் வரை அந்த இடத்தை விட்டு நகரமாட்டார். ஆனால் இன்று… வழக்கத்திற்கு மாறாக ஒரு பெண்ணிடம் பேச முயன்றது. ராம்குமாருக்கு எரிச்சலை உண்டாக்கியது.

அந்தப் பெண் பிரியா மீது ராம்குமாருக்கு ஒருவித காதல் இருந்தது. அரசல் புரசலாக இருவரும் பேசிக்கொள்வார்கள். தினமும் பேருந்து நிறுத்தத்தில் வந்து நிற்கும்போது அவள் ஓரக் கண்ணால் ராம்குமாரைப் பார்த்துப் புன்னகைப்பதும், பதிலுக்கு இவன் சிரிப்பதுமாய் மவுனக் காதலை பேச வைக்க முயன்ற நேரம்… இப்போது யாரோ ஒருவர் வந்து தன் மனதில் இடம் பிடித்த பெண்ணிடம் போய் வலுக்கட்டாயமாக பேச முயன்றதில் எரிச்சலாகி இருந்தான்.

அப்போது அங்கு வந்த கல்லூரிப் பேருந்து, அந்தப் பெண்களை அள்ளிப் போட்டுக் கொண்டு சென்றது. அதுவரை கலகலப்பாக காட்சியளித்த பேருந்து நிறுத்தம் இப்போது வெறிச்சோடிக் கிடந்தது.

அதற்காகவே காத்திருந்த ராம்குமார், கடையை விட்டு வெளியே வந்தான். பெரியவர் டூவீலரை எடுத்துக்கொண்டு செல்வதற்குள் எதிரே வந்து வழிமறித்தான்.

“நானும் பல நாட்களாகப் பார்க்கிறேன். தினமும் இங்கு வந்து நின்று கல்லூரிப் பெண்களைச் சைட் அடிக்கிறீங்க சரி.. போகட்டும் என்று இருந்தால்.. இன்று ஒரு பெண்ணோட பேசவே ஆரம்பிச்சுட்டீங்க. இந்த வயதில் இது உங்களுக்குத் தேவையா?” என்றான்.

“உனக்கு அந்தப் பெண்ணை எத்தனை வருஷமா தெரியும்?”

“ரெண்டு வருஷமா தெரியும். அம்மாவும் பெண்ணுமா எங்க வீட்டு மாடியில தான் குடியிருக்காங்க”

“உனக்கு ரெண்டு வருஷம் தான். ஆனால் எனக்கு இருபத்தி நாலு வருஷமா தெரியும்.. ஏன்னா அந்தப் பெண்ணைப் பெற்றவனே நான் தான்..” என்றார்.

அதைக் கேட்டு ராம்குமார் அதிர்ந்தான். “என்ன சொல்றீங்க… பிரியாவோட அம்மா, எனக்கு யாருமே இல்லைன்னு சொன்னாங்களே..”

“அவள் அப்படித்தான் சொல்வா. ஏன்னா அந்த அளவுக்கு அவளை நான் கொடுமைப்படுத்தி இருக்கேன். கைநிறைய சம்பளம். சொந்த வீடு, ஆடம்பர வாழ்க்கை, ஆரம்பத்தில் நாங்கள் மகிழ்ச்சியாகத்தான் இருந்தோம். என்னுடைய குடிப் பழக்கத்தால் குடும்பம் மகிழ்ச்சியை இழந்தது. அதோடு மட்டுமல்லாமல் அவள் மீது சந்தேகப்பட்டு, தினமும் குடிச்சிட்டு வந்து அடிப்பேன், உதைப்பேன், என்னுடைய கொடுமை தாங்காமல் ஒருநாள் தாலியைக் கழட்டி என் முகத்தில் வீசி விட்டு, குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய்விட்டாள். அவ போனப்பறம் தான் என் மனைவி மகளுடைய அருமை புரிந்தது. பாசத்துக்காக ஏங்கினேன். என் மனைவியையும் மகளையும் மறக்க முடியாமல் தவித்தேன். பணம் இருந்தும் வசதி இருந்தும் என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை.”

“என் மனைவியை சந்தித்து நான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டேன். ஆனால் அவள் மன்னிக்கவில்லை. என்னோடு சேர்ந்து வாழ முடியாது என்று முடிவாகக் கூறி விட்டாள். என் மகளையாவது பார்க்கலாம் என்று வந்தால், அவளும் என்னோடு பேச மறுக்கிறாள்” என்றார்.

“அந்த அம்மாவைப் பார்த்தால் மன்னிக்கும் மனப்பான்மை உள்ளவங்க போலத் தெரியுது. நிச்சயம் ஒரு நாள் நீங்க செய்த தவறுகளை மன்னிச்சு உங்களை ஏத்துக்குவாங்க.. அந்த நாள் மிக விரைவில் வரும். அதுக்கு நான் உதவி செய்கிறேன்” என்றான், ராம்குமார்.

அவன் இப்படிப் பேசியது, அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

“நீ புரிஞ்சுக்கிட்ட அளவுக்கு கூட என்னால் என் குடும்பத்தை புரிஞ்சிக்க முடியல தம்பி.. இது மட்டும் நடந்தால், என் உயிர் உள்ளவரை உன்னை மறக்க மாட்டேன்..” என்றவாறு புறப்பட்டார்.

“நிச்சயம் நடக்கும் அதுக்கு நான் பொறுப்பு. நம்பிக்கையோடு போங்க” என்றான். அவன் மனதில் ஏதோ ஒரு வித மகிழ்ச்சி. இனம்புரியாத தவிப்பு. பிரியாவை நெருங்க வேண்டிய சந்தர்ப்பம் கிடைத்து விட்டது என்ற மனப்பூரிப்பு.

அப்போதே பிரியா பேருந்து நிறுத்தத்தில் நின்று புன்னகைப்பது போலொரு காட்சி கண்ணில் வந்துபோனது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *