அம்மாவாகும்வரை……!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 10,614 
 
 

ஒரு வழியாக் பெண்ணோட கல்யாணம் நல்ல படியா முடிஞ்சு அந்த பிரம்மாண்டமான கல்யாண மண்டபத்தின் கணக்கை சரி பார்த்து முடித்து விட்டு கடைசியாக இருக்கும் மிச்சம் மீதி சாமான்களைக் கட்டி டெம்போவில் ஏற்றிக் கொண்டிருந்ததை மேற்பார்வை பார்த்தபடி பரபரத்தாள் ராஜம். அந்த இலைக்கட்டையும் எடுத்துப் போட்டுக்கோ,அதோ அங்க ஒரு கூடை கிடக்கு பாரு…அதையும் எடு….எல்லாத்தையும் ஒண்ணு மேல ஒண்ணு வைக்காமல் பரவலா வைப்பா..கடைசீல அங்க வந்து எடுக்கும்போது எல்லாம் கவிழ்ந்து கொட்டிப் போச்சுன்னு சொல்லுவீங்க….என்றபடி கடைசியா ஒரு பார்வை பார்த்துட்டு வந்துடறேன்…..

டேய்…சந்துரு….எல்லாம் ஏத்தியாச்சோன்னு ஒரு பார்வை ரூமுக்குள் பார்த்துட்டு வந்து சொல்லேன்…அவளது கால்வலி மேலே ஒரு அடி நகர மாட்டேன் என்று அடம் பிடித்தது. ரூமுக்குள் இருந்து “இங்க ஒண்ணுமே இல்லை மாமி….எல்லாம் காலி…” என்ற சத்தம் வரவும்….மனசு திக் கென்றது ராஜத்துக்கு . நேற்றிலிருந்து தானும் தன் மகள் வித்யாவும் அந்த ரூமில் தான் இருந்தார்கள் ….மகளை திருமணக் கோலத்தில் அலங்காரம் செய்து, புடவை கட்டி, அழகு பார்த்து, வந்த அழுகையை மறைத்துக் கொண்டு..அந்த ரோஜாபூ வாச அறையில் காலையில் சீக்கிரம் எழுந்து வித்யா தூங்குவதை அழகு பார்த்துக் “இன்றோடு இவள் எனக்கு சொந்தமில்லை” என்று எங்கிருந்தோ வந்து தான் இதயத்தில் குதித்துக் குத்திவிட்டுப் போன வார்த்தையை….அப்படியே நெஞ்சில் பதித்து..ஆனால் இந்த நிமிடம் எனக்குத் தான் சொந்தம் என்று உறங்கும் மகளின் நெற்றியில் முத்தமிட்டு”சீக்கிரம் எழுந்திரு…நாழியாச்சு…இன்னை
க்கு உன்னோட கல்யாணம்..நினைவிருக்கா ”ன்னு நமுட்டோச் சிரிப்போடு சொல்லிவிட்டு மற்ற வேலைகளில் மூழ்கிப் போன ராஜத்துக்கு…சந்துருவின் இந்த வார்த்தை தன்னோட இதய அறையை மகள் காலி செய்து விட்டுப் போனது போல இருந்தது. டெம்போ…. சாமான்களோடு கிளம்பியது…ராஜமும் நெருங்கிய உறவுகளோடு ஒரு காரில் ஒண்டிக்கொண்டு டெம்போ முன்னாடி வீடு நோக்கி சென்று கொண்டிருந்தாள்.

ராஜம்….கல்யாணம்…கல்யாணம்னு…வித்யாவும் ஜாம் ஜாம்னு தாலியக் கட்டிண்டு கிளம்பிப் போயாச்சு….இனி நீ மட்டும் தான்…தனியா…இங்க இருந்து என்ன செய்யப் போறே…நீயும் எங்களோட வந்துடேன் மாயவரத்துக்கு…ரெஸ்டா இருக்கலாம்..இத்தனை காலமா வித்யாவோட படிப்பு…வேலை..கல்யாணம்னு…பொறுப்பு உன் காலைக் கட்டி வைச்சிருந்தது…இனிமேல் நீ கொஞ்சம் அங்க இங்க நகரலாம்… ஜெயம் சித்தி சொல்லிக் கொண்டே வந்தாள்.

மகளின் கல்யாணம் நல்ல படியா நடக்கணும்னு நினைத்தது நிஜம் தான்…ஆனால் கல்யாணம் முடிந்ததும் தான் புரிந்தது காலையில் இருந்தே தனது மனதுக்குள் எதோ இனம் தெரியாத ஒரு இறுக்கம்…பயம்…வேதனை…தனிமை.. இதற்கெல்லாம் காரணம் வித்யா தான். அவளது பிரிவு தான்…பத்து வருஷம் முன்பு இப்படித் தான் தன் கணவர் விபத்தில் இறந்தபோது உலகமே இருள் மூண்டது போலிருந்தது ராஜத்துக்கு . எந்த உறவும் நிரந்தரமல்ல…என்ற நிதர்சனத்தில் அனுபவப் பட்டவள் தான் இருந்தும் இப்போது மனம் கலங்கினாள்.

இருக்கட்டும் மன்னி..அங்க அம்மா எப்படி இருக்கா…? பாவம் கல்யாணத்துக்குக் கூட வர முடியலையே..வித்யான்னா… அம்மாவுக்கு கொள்ளை பிரியம். இப்படி இந்த நேரம் பார்த்தா உடம்புக்கு வரணம்…என்று அங்கலாய்த்தாள். எனக்கும் அம்மா வரலையேன்னு தான் ஒரே குறை. பேசிக் கொண்டிருந்தவளுக்கு சடாலென…ஒரு மின்னல் வெட்டிப் போட்டது போல் மனதுக்குள் வந்து போனது…தானும் இப்படித்தானே கல்யாணம் ஆன கையோடு அவரின் கையைப் பற்றிக் கொண்டு கழுத்தில் ஏறிய தாலியை யாருக்கும் தெரியாமல் பார்த்து சந்தோஷத்தில் மானசீகமாக சிரித்துக் கொண்டு….நேற்று என்பதை அப்படியே தள்ளிவிட்டு….என்றும் இவருடன்…ன்னு கற்பனைக் கனவில் மிதந்து கொண்டே அவர் எப்போ நம் பெயர் சொல்லி கூபிடுவார்னு காத்துண்டு இருந்தேன்.

அம்மா, அப்பா ங்கற நினைவே அந்த வாரத்தில் சுத்தமா வரலையே….! அன்று என் அம்மாவும்,அப்பாவும் இப்போ நான் இருக்கும் இதே நிலைமையில் தான் இருந்திருப்பாளோ…? அம்மா ஸ்தானத்தில் நின்றால் மட்டும் தான் மகளின் இந்த நீள் பிரிவு…மகளின் இடத்தில் நின்று பார்த்தால் அவளுக்கு புது உறவின் வரவு…!

இதற்குத் தானா இத்தனை நாட்கள் துடியாய் துடித்து வேலைகள் செய்தேன்..?.இருந்தாலும் வலித்தது.
வீடு இன்னும் ஒரு சந்து திரும்பியதும் வந்து விடும்….அங்கும் வித்யாவின் வெறுமை தான் வாட்டும்.
இதே நிலைமை நாளைக்கு வித்யாவுக்கும்….அவள் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்த நிமிடங்களில் வரும். இதுவும் ஒரு அனுபவம் தானோ…சித்தி சொல்றது சரி தான்….வீட்டு வேலைகளை எல்லாம் மனசு ஒதுக்கியது….அம்மாவைப் போய் பார்க்கணும். வழியில் பசுவைத் தேடி துள்ளிக் குதித்து ஓடிக் கொண்டிருந்தது ஒரு கன்று.

சித்தி நானும் உங்களோட அம்மாவைப் பார்க்க வரேன்.ஜெயம் சித்தி ஏனோ மென்மையாகச் சிரித்தாள்…அவளும் பெண் தானே!

– 09 ஜூலை, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *