அமிர்தவர்ஷினி

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 9,873 
 

ஒரு மார்கழி மாதத்துப் பனிக் குளிரில்தான் அவளைப் பார்த்தது. அப்போது என் உலகம் செவ்வகமாக இருந்தது. அதன் ஈசான மூலையில் அவள் வீடு. அங்கிருந்துதான் அவள் சூரியனாய் எழுந்தருள்வாள். மேற்கில் அவளும் நானும் படிக்கும் பள்ளிக்கூடம்.

அந்தப் பள்ளிக்கூடம் பூக்களால் ஆனது. செம்பருத்தி, நித்யகல்யாணி, வாடாமல்லி, காக்கரச மரத்தின் மஞ்சள் பூ மற்றும் எங்கள் காதலால் நிறைந்த பள்ளி அது. வடக்கில் அவளும் நானும் சந்தித்துக்கொள்ளும் சுப்ரமணியசாமி கோயில். தெற்கே அதிகாலையில் ஆனந்த நீராடும் மணிமுத்தாறு கால்வாய். இந்த நீள் செவ்வகச் சதுக்கம் தாண்டி உலகம் இல்லை.

அப்போது எனக்கு 12 வயது. பட்டாம்பூச்சி வயசு. பட்டாம்பூச்சிகளின் வளர்சிதை மாற்றங்களில் சில வரிசைக்கிரமங்கள் இருக்கின்றன. நோட்டுப் புத்தகத்தில் வைத்த மயில் தோகை குட்டி போடாது, பனஞ்சோறு தின்னாது என்பதை அறிந்துகொண்ட தருணத்தில் என் அரை டிராயரில் இருந்த கோலி குண்டுகளும், பம்பரமும் விடைபெற்றுச் சென்றன. டீக்கடை பெஞ்சுகளில் விரியும் தினசரிக்குள் கடைசித் தலையாய் என் தலையையும் புதைத்துக்கொண்டேன். அந்தோணி தைனஸின் சிரிப்பைத் திருடி வைத்திருந்தேன். பென்சிலால் வரையப்பட்ட டெய்ஸியின் கருத்த விழிகள் என் வீட்டுச் சுவரில் இருந்தபடி என்னை விழுங்கிக்கொண்டு இருந்தன.

படுக்கையில் மூத்திரம் பெய்யும் கனவு, பள்ளத்தில் உருண்டு விழும் கனவு, பேய்கள் துரத்தும் கனவு இப்படியான சின்ன வயதுக் கனவுகளெல்லாம் உடைந்து சிதறின. சின்ன சினேகிதிகள் தங்கள் மந்திரச் சொற்களால் என்னை மீட்டும் இசைக் களமாகவே இருந்தன எல்லாக் கனவுகளும்.

அப்படி கனவுக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட நொடியில்தான் அவள் பாடினாள்.

”கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின… இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளியளி உதயத்து
ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்கு…”

என் பனிப் போர்வை விலக்கி, அவள் பாட்டு வருடியது. அவள் பாடல் என்னை ஸ்பரிசித்த கணம், தேவகணம். அவள் குரல் பேரழகாய் உருவெடுத்து நின்றது. என் போர்வையிலிருந்து என்னைப் புலம் பெயர்த்துத் தூக்கிச் சென்றது அந்தக் குரல்.

நான் அவள் வாசலில் நின்றேன். மெய் மறந்து கண் மூடியபடி பாடினாள்.

”யாவரும் அறிவரியாய் எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!”

ஒரு வீணையின் அதிர்வோடு அவள் பாடி முடித்துக் கண் திறக்க, அவளெதிரில் உருகி நின்றேன். வெட்கம் அவள் விழிகளில் மின்னலாய்ப் பூத்தது. பாடிய பாட்டுக்கு இணையான ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு ஓடினாள். தோட்டம் வரை வாசல்களாய் இருந்தது அவள் வீடு. அவள் ஒரு புள்ளியாய் ஓடி மறைந்தாள். மறைந்த அந்தப் புள்ளி என் மனதில் மையமிட்டது. தனியாய் அவள் வீட்டுக்குச் சென்ற நான் அவளோடு திரும்பினேன்.

”யார் இவள்?” கேள்விகளால் துரத்தப்பட்டேன். என் பயணம் துவங்கியது. கதவுகளும் சன்னல்களுமற்ற என் மனவெளியில் அவள் ஒளியாய்ப் பரவினாள். தைனஸின் புன்னகை ஏந்திய கிண்ணம் அவள் கால் பட்டு இடறியது. டெய்ஸியின் பென்சில் விழிகள் இருண்மைக்குள் தொலைந்தன.

”யார் இவள்?”

”அமிர்தவர்ஷினி… பி.டபிள்யூ.டி இன்ஜினீயர் பொண்ணு. நாளைக்கு நம்ம ஸ்கூல்ல ஜாயின் பண்றா!” வடக்குத் தெரு முத்துக்கிருஷ்ணன் அவளைப் பற்றிய தகவல்களைச் சொன்னான். என் சுவாசத் தம்புரா அவள் பெயரில் சுதி சேர்த்துக்கொண்டது.

மறுநாள் பள்ளி அசெம்ப்ளி, ஒரு தேவதையோடு துவங்கியது. தேவதை நீலப் பாவாடையும் வெள்ளைச் சட்டையும் அணிந்திருந்தாள். இரட்டைச் சடை ஒன்று முன்னும் ஒன்று பின்னுமாக இருந்தது. நெற்றியில் சின்னதாக ஒரு சந்தனக் கீற்று. கழுத்தில் டாலர் இல்லாத செயின்.

”கடவுளே! இவள் என் வகுப்பறைக்கு வர வேண்டும்”- மனம் உருகிப் பிரார்த்தனை செய்தேன். அது கடவுளிடம் நான் கேட்ட முதல் பிரார்த்தனை. கடவுள் கருணைமிக்கவன். காதல் அறிந்தவன். அவனே ஒரு காதலன். ”மே ஐ கம் இன் சார்” என்றபடி கணக்குப் பாட வேளையில் அவள் என் வகுப்பறையில் அடியெடுத்துவைத்தாள். எல்லா விழிகளும் அவள் அழகைப் பருகின. நான் அவள் அழகை அணிந்துகொண்டேன். கணக்கு ஆசிரியர் பாலகிருஷ்ணன் பித்தகோரஸ் தேற்றத்தை எங்கள் புத்தியில் திணிக்க மல்லுக்கட்டிய வேளையில், நான் அவளிடம் எப்படிப் பேசுவது என்பது பற்றி யோசித்துக்கொண்டு இருந்தேன்.

இடைவேளையின் மணிச் சத்தம் ஒரு தேவகானமாய் இசைத்தது. அந்தத் தண்டவாள அதிர்வு அடங்கும்போது, அவளைப் பார்த்தேன். அவள் என் பார்வையை ஒரு புன்னகையால் எதிர்கொண்டாள். வகுப்பறையில் அவளும் நானும் மட்டும் இருந்தோம். கடவுள் கருணையானவன்.

”நல்லா பாடறே.”

சிரித்தாள்.

”நாளைக்குப் பாடுவியா?”

சிரித்தாள்.

”பாட்டுக் கேக்க நாளைக்கு வரட்டுமா?”

மீண்டும் மிண்டும் சிரித்தாள்.

அந்த புன்னகைத் தோரணம் எனக்குப் பிடித்திருந்தது.

”உம் பேரென்ன?”

”மணியரசு” என்றேன். ‘மணியரசு’ ஒரு முறை சொல்லிப் பார்த்துக்கொண்டாள். முதல் முறையாக என் பெயர் பிறவிப் பயனடைந்தது.

”நீ என்ன கவர்ன்மென்ட்டா? அரசுன்னு பேர் வெச்சிருக்கற?” என்றபடி சிரித்தாள். சிரிப்பைச் சோழியாகச் சுழற்றுகிறாள். விருத்தங்களும் தாயங்களுமாக விழுந்து தொலைக்கிறது. மீண்டும் மீண்டும் சுழல்கின்றன அவள் சோழிகள்.

மறுநாள் அவள் வீட்டு வாசலில் நின்றபோது, ‘யாதுமாகி நின்றாய் காளி… எங்கும் நீ நிறைந்தாய்’ பாடிக்கொண்டு இருந்தாள். பாடியபடியே என்னைச் சைகையால் அழைத்தாள். திண்ணையில் அமரச் செய்தாள். அவள் பாவனைப் பேச்சு அழகாக இருந்தது. பாடி முடித்ததும் உள்ளே திரும்பி, ”அம்மா, கவர்மென்ட் வந்திருக்கு. ஒரு காபி கொண்டு வா” என்றாள். அம்மா காபி எடுத்து வர, ”ஹி இஸ் மை கிளாஸ்மேட். ஸ்மார்ட் பாய். மை மியூஸிக் லவ்வர்” என அறிமுகம் செய்துவைத்தாள். என் இசைக் காதலன் என அவள் சொன்ன வார்த்தைகளில் இருந்த இசையைப் பார்வையால் கரைத்துக்கொண்டு இருந்தேன்.

”எங்களை மணிமுத்தாறு கால்வாய்க்கு அழைச்சுட்டுப் போறியா..?” – வர்ஷினியின் அம்மா கேட்டதும் உற்சாகமாகத் தலையசைத்தேன்.

அவர்களோடு நடந்து செல்லும்போதுதான் கவனித்தேன். அமிர்தவர்ஷினி என்னைவிடச் சற்று உயரம், நல்ல சிவப்பு. தாட்டியான உருவத்துடன்கூடிய ஒரு பெரிய மனுஷித்தன்மை அவளிடம் இருந்தது. நான் குள்ளமாக, ஒல்லியாக இரண்டு தெற்றுப் பற்களுடன் இருந்தேன். எந்த விதத்திலும் அவளுக்குப் பொருத்தமாக இல்லை. நான் குதிகால்களை உயர்த்தி இணையாக நடந்து வந்தேன்.

அமிர்தவர்ஷினிக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை. எல்லாவற்றையும் அழகாகப் பார்க்கும் ஒரு தேவதை மனதுடன் இருந்தாள். நீர்க்கருவை மரத்தின் சாட்டை வடிவ மஞ்சள் பூவைப் பார்த்து, ”அழகா இருக்குல்ல” என்றாள். சட்டென ஒரு பூவைப் பறித்துக் கொடுக்கவும் உதிர்த்து உள்ளங்கையில் வைத்து ஊதினாள்.அந்தப் பிரதேசமெங்கும் மஞ்சள் பூத்தது.

அன்றிலிருந்து அவர்களின் நீராடும் பயணத்தின் மெய்க்காப்பாளன் ஆனேன். சில நிலா நாட்களில் நாங்கள் வெள்ளி நதியில் நீராடுவோம். எப்படியோ அமிர்தவர்ஷினி குடும்பத்தோடு எனக்கொரு இணக்கமான நேசம் ஏற்பட்டது.

அமிர்தவர்ஷினியின் வருகைக்குப் பிறகு அந்த ஊர் அழகாக இருந்தது. சூரியனும் நிலவும் கையெட்டும் தூரத்தில் இருந்தது. நட்சத்திரங்கள் ஒவ்வொரு இரவிலும் வந்து எங்களை வேடிக்கை பார்த்தது. தரையில் வானவில் பூத்தது. என் பொழுதுகள் எல்லாம் அவளிடம் சரணடைந்திருந்தன. என் கால்கள் அமிர்தவர்ஷினிக்காக நடந்தன. அந்த ஊரில் இப்போது ஒரே ஒரு பெண்தான் இருந்தாள்.

”அமிர்தவர்ஷினி… இந்தப் பேருக்கு என்ன அர்த்தம்?”

”இது ஒரு ராகம். இந்த ராகம் பாடினா மழை வரும்.”

”பொய் சொல்றே.” நான் தெப்பக் குளத்தில் கல் எறிந்தபடியே இதைச் சொன்னேன்.

”பாடிப் பாரு… மழை வரும்” என்றாள்.

”அமிர்தவர்ஷினி… அமிர்த…வர்ஷினி”- நான் அவள் பெயரையே ராகமாகப் பாட… அவள் சிரித்தாள். அது பெரும் சிரிப்பு. இந்தப் பிரபஞ்சத்தை உலுக்கிவிடும் பேய்ச் சிரிப்பு. அவள் சிரித்து அடங்கிய கணத்தில் அவள் கன்னத்தில் ஒரு துளி பெய்திருந்தது. துளிகள் பெருகின. இரண்டு படிகள் மேலேறி அமர்ந்தோம். எங்கள் கால்களை மழை நனைத்தது. கருக்கிருட்டில் கனிந்தது வானம். ஒரு பேரிடியைத் துவக்கமாகக் கொண்டு பெய்தது பெருமழை. நாங்கள் படித்துறை மண்டபத்தில் ஒதுங்கினோம்.

இடிச் சத்தம் எங்கள் விரல்களைக் கோத்து நின்றது. மழை எங்களை உருக்கி ஒருவருக்குள் ஒருவரை ஊற்றியது. அவள் என் தோளில் சாய்ந்தாள். அவளின் ஈர ஸ்பரிசம் என்னை உஷ்ணப்படுத்தியது. ஒரு கணம் சட்டென விலகியவள் படித்துறை மழையில் ஏகாந்த மாய் நனைந்தாள். அவள் கூந்தல் நடுவகிட்டில் ஒரு துளி ஓடியது.

அது அவள் நனையப் பெய்த மழை. மழை அவளை ஓர் ஓவியமாக்கி இருந்தது. நான் மண்டபத்தில் அமர்ந்து அவளையே பார்த்தபடி இருந்தேன். அந்த மழை என் காதலை அவளுக்கு மொழிபெயர்த்துச் சொல்லியிருக்க வேண்டும். அதன் பின் அவள் பார்வையிலும் அணுகுமுறையிலும் இணக்கமான மாற்றங்கள் தெரிந்தது. நனைந்து திரும்பியவள் என் சட்டையைக் கேட்டாள். நான் கழற்றிக் கொடுக்கவும் சட்டையால் தலை துவட்டிக்கொண்டாள். அந்த மழை அவளுக்குக் காய்ச்சலையும் எனக்குக் காதலையும் தந்தது.

அந்தப் பள்ளியாண்டு முழுவதும் அவள் எனக்கு வண்ணமிகு கணங்களைப் பரிசளித்தபடியே இருந்தாள். பத்தாவது ரேங்கில் இருந்த என்னை இரண்டாவது ரேங்க்குக்குக் கொண்டுவந்தாள். அச்சுறுத்தும் தேர்வுகளை எதிர்கொள்ளும் சூட்சுமத்தை அவளிடம்தான் கற்றுக்கொண்டேன். வாரம் ஒருமுறை நகம் வெட்டுவது, திருத்தமாய் உடுத்திக்கொள்வது, எப்போதும் ஃப்ரெஷ்ஷாக இருப்பது என அவள் ஆளாக்கிய மனிதனாக இருந்தேன்.

எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் துணிச்சல் என்னிடம் இருந்தது. தாழ்வு மனப்பான்மை என்னைவிட்டு விலகியது. ஆனபோதும் அவளிடம் காதல் சொல்லும் தைரியம் மட்டும் வரவே இல்லை.

அது பள்ளியின் கடைசி நாள். ப்ளஸ் டூ மாணவ மாணவிகள் கண்ணீரோடு ‘பசுமை நிறைந்த நினைவுகளே…’ பாடியபடி விடைபெற்றுக்கொண்டு இருந்தார்கள். நாங்களும் விடைபெறும் சூழ்நிலையில்தான் இருந்தோம். அமிர்தவர்ஷினியின் அப்பாவுக்கு டிரான்ஸ்ஃபர் கிடைத்திருந்தது. இந்தத் தேர்வுக் காலம் வரைதான் என்னோடு இருப்பாள். அதற்குள் என் மனதில் உள்ளதைச் சொல்லிவிட வேண்டுமென முடிவு செய்தேன்.

அன்று மாலை அமிர்தவர்ஷினி என்னிடம் மடிக்கப்பட்ட ஒரு கடிதம் எடுத்து நீட்டினாள்.

”வெச்சுக்க… அப்புறமா படிச்சுப் பாரு.”

”என்ன இது?”

”லவ் லெட்டர்” – கண் கலங்கச் சொல்லிவிட்டு சட்டென நகர்ந்தாள். கடவுள், காதல் அறிந்தவன். அவனே ஒரு காதலன். தாங்க இயலாத தவிப்போடு யாரும் பார்க்காத வண்ணம் சைக்கிள் ஸ்டாண்ட் அருகே சென்று கடிதம் பிரித்துப் படித்தேன்.

அது காதல் கடிதம்தான். ஆனால், அது அமிர்தவர்ஷினி எனக்கு எழுதிய கடிதம் இல்லை. அமிர்தவர்ஷினிக்கு சங்கரநாராயணன் கொடுத்த கடிதம். சட்டென நொறுங்கிப் போனேன். இதை என்னிடம் எதற்குத் தர வேண்டும்? ஒருவேளை அமிர்தவர்ஷினிக்கும்…

நெருஞ்சி பூத்திருந்த மைதானத்தில் அமர்ந்தி ருந்தோம். எனக்கு அமிர்தவர்ஷினியின் மீது அளவிட முடியாத கோபம் எழுந்தது. அமைதியாக இருந்தேன். நீண்ட மௌனத்துக்குப் பிறகு அமிர்த வர்ஷினி பேசத் துவங்கினாள்.

”ஏன்டா இப்படிப் பண்ணினான்..? பதிமூணு வயசுல என்ன காதல்? நாங்க நிறைய ஊர்ல இருந்திருக்கிறோம். எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்குறாங்க. நான் எல்லாரையும் ஒரே மாதிரிதான் பாக்கறேன்…”

”வா… ஹெச்.எம்கிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்ணுவோம்.”
”வேணாம்டா. பாவம் எக்ஸாம் டைம். அவன் லைஃப் பாதிக்கப்படும். இப்படியே விட்டுடலாம்.”

நான் அமைதியாக இருந்தேன்.

”வா, போகலாம்!”

இருவரும் எழுந்து நடந்தோம். என் காலுக்குக் கீழே பூமி நழுவிக்கொண்டு இருந்தது. ஒரு சிந்தனை வசப்பட்ட அமைதி அமிர்தவர்ஷினியின் முகத்தில் இருந்தது. எப்போதும் அலைபாய நடந்து வரும் அவள் அமைதியாக நடந்து வந்தாள். ஏதோ நினைத்துக்கொண்டவளாக, ”நீ நல்லவன்டா” என்றாள். நான் எங்கோ தூரத்தை வெறித்தபடி நடந்தேன். முப்புடாதி அம்மன் கோயில் வேப்ப மரத்தில் இரண்டு புறாக்கள் இருந்தன. அவளுக்கு நெடுந்தூரம் நடக்க வேண்டும் போலிருந்திருக்க வேண்டும்.

”பஜார் வழியா போகலாம்” என்றாள். நான் பதிலேதும் சொல்லாமல் நடந்தேன். இருவரும் சீரான இடைவெளியில் நடந்து வந்தோம். எனக்கு நட்புக்கும் காதலுக்குமான நுட்பமான இடைவெளி புரியாமல் போயிற்று. அந்தக் குழப்பத்தினூடாகவே வந்துகொண்டு இருந்தேன்.

நாங்கள் ஓடைப் பாலத்தை அடைந்தபோது, ”அம்மா” என்கிற அலறல் கேட்டது. டவுன்பஸ் ஒரு சைக்கிள்காரன் மீது ஏறி இறங்கி இருந்தது. ரத்தமும் ரணமுமாக வீழ்ந்துகிடந்தான். சட்டென என் கைகளை அழுந்தப் பற்றிக்கொண்டாள் அமிர்தவர்ஷினி. கூக்குரலோடு எல்லோரும் ஓடிக்கொண்டு இருந்தார்கள்.

நான் சட்டென அமிர்தவர்ஷினியை இழுத்துக்கொண்டு ஒரு முட்புதரில் மறைந்துகொண்டேன். உடலெங்கும் நடுக்கத்தில் அதிர நின்றாள் அமிர்தவர்ஷினி. அவளை ஆதரவாக என் தோளில் சாய்த்துக்கொண்டேன். தடதடவென அவள் இதயம் அதிர்வது என்னுள் பரவியது. அமிர்தவர்ஷினி என்னை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள். என்னை அப்பிப் பிடித்திருந்த நிலையில் ஒரு குழந்தையாகத் தெரிந்தாள்.

”போலாமா?” என்றேன். இப்போது அடிபட்டவனை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள். இருவரும் ஓடை வழியாகக் குறுக்கே நடந்தோம்.

”ஏன்டா இப்படி?” என்றாள் வர்ஷினி. நான் பதிலேதும் சொல்லவில்லை.

நான் வர்ஷினியின் வீடு வரை சென்றுவிட்டு வந்தேன்.

”ரொம்ப தேங்க்ஸ் அரசு” என்றாள். எனக்குச் சிரிப்பு வந்தது.
”ஏன் சிரிக்கறே?” என்றாள்.

”பயத்துல உன் நெஞ்சு துடிச்சது டிரெய்ன் ஓடற மாதிரி இருந்தது” என்றேன். அவளும் சிரித்தாள்.

வரலாறு, புவியியல் பரீட்சை முடிந்த அன்று அமிர்தவர்ஷினி ஊரைவிட்டுப் புறப்பட்டாள். எந்த வலியும் இல்லாமல் அவளுக்கு விடை தரும் பக்குவத்தை அவள் எனக்குள் ஏற்படுத்தி இருந்தாள்.

ரயிலின் ஜன்னல் கம்பிகளுக்கிடையே இருந்தபடி, ”உன்னை என்னால மறக்க முடியாது அரசு” என்றாள். என் வார்த்தைகள் கண்ணீராகக் கசிந்து கண்களில் திரண்டு இருந்தது. அழுதுவிடக் கூடாது என்று உறுதியோடு இருந்தேன்.

ரயில் புறப்பட்டுவிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஜன்னல் கம்பிகளைப் பிடித்தபடி நின்றிருந்தேன். அமிர்தவர்ஷினி என் கைகளின் மேல் தன் கைகளை வைத்திருந்தாள். இப்படியே இருந்தாலும் நன்றாக இருக்குமென்றும் தோன்றியது.

”நான் கிளம்பட்டுமா.?”

”ஏன், இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா அழுதிடுவியா..?”

நான் அமைதியாக இருந்தேன். வர்ஷினியின் அப்பாவும் அம்மாவும் லக்கேஜ்களை ஒழுங்குபடுத்திக்கொண்டு இருந்தார்கள்.

”அரசு…”

நான் அவளை ஏறிட்டுப் பார்த்தேன்.

”அழறதுன்னா அழுதிடு. உன் கண்ணீரையும் என்னையும் இங்கேயே விட்டுட்டுப் போயிரு.”

நான் அழவில்லை. கண்ணீர் வழிந்தபடி இருந்தது. அமிர்தவர்ஷினி என் கண்ணீர் துடைத்தாள்.

”நீ என்னை லவ் பண்றேன்னு எனக்குத் தெரியும், வேணாம்டா!” ரொம்பத் தணிவான குரலில் அவள் இதைச் சொன்னாள். சட்டென நான் உடைந்து அழத் துவங்க, சிக்னல் விழுந்தது. நெல்லை எக்ஸ்பிரஸ் என் தேவதையைச் சுமந்தபடி புறப்பட்டது.

நான் திரும்பி நடந்தேன். நானும் அவளுமாக ரயில்வே ஸ்டேஷன் வந்தோம். இப்போது நான் மட்டும் திரும்பிக்கொண்டு இருந்தேன். அந்த ரயிலின் சப்தம் அவள் இதயத் துடிப்பாய் என்னுள் ஒலித்துக்கொண்டு இருந்தது. அவள் புள்ளியாய் மறைந்தாள். ஸ்டேஷன் விட்டு வெளியே வரும்போது தூறலாக மழை பெய்யத் துவங்கியது.

”அமிர்தவர்ஷினி…”

– 17th செப்டம்பர் 2008

Print Friendly, PDF & Email

1 thought on “அமிர்தவர்ஷினி

  1. சிறு வயதில் தானே கோர்த்தணியும் மணி மாலையின் அழகும் சுகமும் 15 பவுன் தாலியில் கிடைப்பதில்லை. அமிர்தவர்ஷினி… சுகமும் சோகமும் சேர்த்த பின்னிய ஒற்றைச் சடை. நேர்த்தியான பின்னல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *