கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 8,956 
 
 

வயிற்றுக்குள் தும்பிக்கையைவிட்டு செல்லமாக ஆட்டியது. இவளுக்குத்தான் வலி தாங்க

முடியவில்லை. உயிர் போவதுபோல் இருந்தது. ‘ஐயோ… அம்மா!’ என்று கதற வேண்டும்போல் இருந்தது. வயிற்றுக்குள் சுற்றி வரும்போது, தந்தம் வேறு அவளது கர்ப்பப் பையைக் கிழித்து, ரணத்தை ஏற்படுத்தியது. தந்தத்தை வைத்துதான் அப்பு எனப் பெயரிட்டாள். இவள் அப்பு என்று சொல்லும்போதே செல்ல மாகத் தலை அசைக்கும். தும்பிக்கையை அவள் வயிற்றில் அழுத்தி இழுக்கும்போது, சூடான ஏதோ ஒன்று அவள் உடம்பு முழுவதும் பரவியது. பேரானந்தமாக உடம்பு எழும்பி அடங்கியது. இவள் சோகமாக இருக்கும்போது, ஏதோ புரிந்ததுபோல், அப்போது எல்லாம் அவளை இப்படித்தான் சந்தோஷப்படுத்தும். நாளாக நாளாக, அது வளர்வதை அதன் அழுத்தத்தைக்கொண்டு உணர முடிந்தது. முன்னே மாதிரி இல்லாமல், இப்போதுவேகமாக வளர்ந்தது. எத்தனை நாள், எத்தனை மாதம், எத்தனை வருஷம் இப்படித் தாங்கப் போகி றோம் என்ற பயம் ஏற்பட்டது. சில நாள் தாங்க முடியாமல், “அப்பு, நீ சீக்கிரம் வெளியே வந்துடேன். எனக்கு முடியலை” என்பாள். ஆனால், அப்பு மறுப்பதுபோல் தும்பிக்கையை ஆட்டும். ‘இந்த மாதிரி சூடான கதகதப்பும், அரவணைப்பும் வெளியே கிடைக்குமா? நான் வர மாட்டேன் போ’ என்று செல்லமாகக் கோபித்துக்கொண்டு சுருண்டு படுத்துவிடும். இவளுக்குத்தான் எப்படிப் புரியவைப்பது என்று குழப்பமாக இருந்தது. மசக்கை அசதி இப்போது எல்லாம் அதிகம். சாப்பாடு, தண்ணீர்கூட வேண்டாம். இப்படியே யுகயுகமாகப் படுத்தால், எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைத்தாள்.

“பொழுது விடிந்ததும் தெரியாம, செத்த பொணம் கணக்காத் தூங்குறாளே. கட்டை யில போற வயசுல நான் எழுந்துட்டேன். வீட்டுல எவ்வளவு வேலை குவிஞ்சுகிடக்கு” என்று மாமியார் வேதம் திட்டத் தொடங்கிய உடனே, அரக்கப்பரக்க முடியை வாரிச்சுற்றிக் கொண்டு கல்யாணி எழுந்தாள். அப்பு கோப மாக அவளை எழுந்திருக்கவிடாமல் இழுத்து சண்டித்தனம் பண்ணிற்று. ‘ஷ்ஷ்ஷ்’ என்று செல்லமாக மிரட்டிவிட்டு, வேகமாக எழுந் தாள். இல்லேன்னா, வேதம் காது கூசுறமாதிரி திட்ட ஆரம்பிப்பாள்.

வாசல் பெருக்கி, தண்ணீர் தெளித்துக் கோலம் போட ஆரம்பித்தாள். கோலம் போடத் தொடங்கியவுடனே தெருவே கூடி நின்று ஆசை ஆசையாக வேடிக்கை பார்க்கும். சிறகை விரித்து மழையில் நனைந்து ஆடும் மயில், வானவில்லின் வர்ணங்களாக, விதவிதமாகப் பூக்கள் விரிய, தேன் குடிக்கும் வண்டு கள், இப்படித்தான் ஒருநாள் வெண்ணெய் வழிய… கோகுல கிருஷ்ணனும் கோபிகா ஸ்த்ரீகளுமாக இரண்டு மணி நேரம், வளைத்து வளைத்துக் கோலம் போட்டாள். சிறிது நேரத்துக்கு எல்லாம் தூறல் போடத் துவங்கிற்று. இவள் வேக வேகமாக வெண்ணெயும் கிருஷ்ணனும் நனையாமல் இருக்க, குடை நட்டு வைத்தாள். அப்போதுகூட அப்பு கேட்டது, ‘என்னை எப்போதுதான் வரைவே?’ என்று. தும்பிக்கையும் தொந்தி தொப்பையுமாக இவள் உடம்பு முழுவதும் வியாபித்து இருக்கையில் இவளால் எப்படி வரைய முடியும். சிரித்துக்கொண்டே உள்ளே சென்று விட்டாள்.

இன்று என்ன கோலம் போடலாம் என்று யோசிக்கும்போது, வாசலில் கறுப்பாக ஒன்று கண்ணில்பட்டது. அருகில் சென்று பார்க்கும்போது, குஞ்சுக் காகம் ஒன்றுபறக் காமல் உட்கார்ந்து இருந்தது. இவளைப் பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தது. மனிதர்களைப் பார்த்துப் பயப்படாத ஒரு காக்கையை அன்றுதான் அவள் பார்த்தாள். பிறந்து சிறிது நாள்தான் ஆகியிருந்தது. பறக்க முயற்சிக்கும்போது, கீழே விழுந்துவிட்டது. மற்ற குஞ்சுகளைப்போல் பறக்க முடியவில்லை. அதனால், தாய் காகம் அதன் அருகிலேயே இருந்து பறக்க சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருந்தது. இருந்தும் குஞ்சால் பறக்க முடியவில்லை. பரிதாபமாக இவளையும் தன் தாயையும் மாறி மாறிப் பார்த்தது. அப்பு இப்போது என்ன நினைக்கும் என்கிற சிந்தனை ஏனோ இவளுள் எழுந்தது.

மொட்டை மாடியில் துணி காயப்போடப் போகும்போது திரும்பப் பார்த்தாள். குஞ்சு தத்தித் தத்தி இங்கேயும், அங்கேயுமாக நடக்க, தாய் காக்கா அதனைப் பறக்கவைக்கமுயற்சி செய்தது. இவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது, மற்ற குஞ்சுகளைப்பற்றி யோசிக் காமல், இதன்கூடவே சுற்றுகிறதே என்று! அப்பு உடனே, ‘நீ எப்போதும் என்னைப் பற்றித்தானே யோசிக்கறே. அது மாதிரிதான்’ என்றது.

மத்தியானம் சாப்பிட உட்கார்ந்தாள். அப்பு வளர வளர… இப்போது எல்லாம் எவ்வளவு சாப்பிட்டாலும் பத்த மாட்டேன்என்கிறது. சாப்பிட்ட கொஞ்ச நேரத்திலேயே திரும்பப் பசியெடுக்கத் தொடங்கிவிடுகிறது. அன்று அகோரப் பசி. பாத்திரத்தில் இருந்த சாதத்தைக் கொட்டி, அதில் சாம்பார், பொரியல், ரசம் எல்லாம் கலந்து, உருண்டை உருண்டையாக உருட்டிச் சாப்பிட ஆரம்பித்தாள். உள்ளே ஏதோ வேலையாக வந்த வேதம், இவள் சாப்பிடுவதைப் பார்த்து அலறினாள். “ஐயோ, மனுஷி மாதிரியா சாப்பிடறா? யானை மாதிரின்னா சாப்பிடறா! எல்லா நேரமும் சிரிக்கறதும், தனக்குத்தானே பேசிக்கறதும் நல்லாவா இருக்கு. காத்து, கறுப்பு ஏதாச்சும் அடிச்சிருக்குமோ… என்னமோ, குடும்பத்துக்குன்னு ஒரு வாரிசைக் குடுப்பா ளாங்கிற கவலை எனக்கு. இவளுக்கு அதெல்லாம் தோணுமோ, இல்லியோ?” என்று புலம்பத் தொடங்கினாள்.

வேதம் புலம்புவதைப் பார்த்து சிரிப்புதான் வந்தது. ‘யானையை வயிற்றில் சுமக்கும்போது யானை மாதிரி சாப்பிடாமல், பின்னே எப்படிச் சாப்பிடறதாம்’ என்று அடக்க முடியாமல் சிரித்தாள். அப்புவும் இவள் கூடச் சேர்ந்து சிரித்தது.

ஏனோ காக்கைக் குஞ்சு ஞாபகம் வந்தது. வெளியே போய்ப் பார்த்தபோது, இரண்டா வது நாளாக தாயும் குஞ்சும் இன்னமும் அதே முயற்சியில் ஈடுபட்டு இருந்தது. குஞ்சு எப்போதுதான் பறக்கும் என்று ஆயாசமாக இருந்தது. தாய் இரையும் தேடாமல் குஞ்சோ டவே இருக்கிறதே. பசித்தால் என்ன செய்யும் என்று தோன்றிற்று. உடனே, பாத்திரத்தில் சாதத்தையும் பாலையும் போட்டு மத்தால் வெண்ணையைப்போல் கடைந்து குஞ்சு அருகிலேயே கொஞ்சம் வைத்துவிட்டு, மிச்சத்தை தாய் காகத்துக்கு வைத்தாள். தாய் காகம் இவளை நன்றியோடு ஒரு பார்வை பார்த்துவிட்டு வேகமாகத் தின்றது.

உள்ளே வேதம் என்னமோ பேசுவது கேட்டது. வேதத்துக்குப் பிரச்னையே வேதம்தான். நாராய ணன் வேதத்துக்கு ஒரே பிள்ளை. கணவர்வேதாந் தம், நாராயணன் குழந்தையாக இருக்கும்போதே வைகுண்டம் போய்விட்டார். கல்யாணிக்குக் கல்யாணம் ஆன புதிதில், வேதம் இரவில் அடிக் கடி கதவைத் தட்டுவாள். “வெளியே புழுக்கமாஇருக்கு. உள்ளே காத்து நல்லா வரும். உள்ளே படுத்துக்கிறேனே” என்று சொல்லி, கல்யாணிக் கும் நாராயணனுக்கும் நடுவில் படுத்துக்கொள் வாள். ஒருமுறை சினிமா பார்க்க மூன்று பேரும் போனார்கள். அப்போது யதேச்சையாக நாரா யணன் பக்கத்தில் இவள் நின்றிருந்தாள்.”இப்போ கூட புருஷ சுகம் உனக்கு வேணுமோ? ஒழுங்கா என்கூட நில்லு” என்று வேதம் மிரட்டியவுடன், அன்றோடு புருஷனோடு வெளியே போகிற ஆசை போயிற்று.

நாராயணன் மட்டும் என்னதான் பண்ணுவான். அவன் பிறவியிலேயே ஜடமா அல்லது, வேதம்தான் அவனை அப்படி வளர்த்தாளா தெரியாது. எல்லாவற்றுக்கும் உணர்ச்சி அற்ற முகம்தான் பதில். கல்யாணம் ஆகி ஒரு வருடம் ஆனதும், வேதம் திடீரென்று ஞாபகம் வந்தது போல் சாமியாட்டம் ஆடினாள். இவளத்தவளுக்கு இடுப்பிலும், கையிலும் குழந்தை இருக்க, இவளுக்கு மட்டும் எந்தப் புழு பூச்சியும் இல்லே என்று வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்தாள்.

இவள் தாய் ஒரு முறை இவளைப் பார்க்க வரும்போது, இவளுக்கு ரொம்பப் பிடிக்குமே என்று எள்ளு சீடையும் பலாப் பிரதமனும் கொண்டுவந்தாள். உடனே வேதம், “மசக்கைக்காரி! அதான் பெத்தவ வாய்க்கு ருசியா கொண்டு வந்திருக்கா! காலி வயித்துக்கு இது ஒண்ணுதான் குறைச்சல்” என்று எல்லாவற்றையும் குப்பையில் கொட்டினாள். அவள் தாய் ஒன்றுமே பேசவில்லை. கனத்த இதயத்தோடு, அழுது வற்றிய கண்களுமாக அடுத்த பஸ்ஸிலேயே ஊருக்குக் கிளம்பிவிட்டாள். அன்றுதான், இவள் தாங்க முடியாமல் இதயம் வெடிக்கும் வரை அழுதாள்.

யாருமே இல்லாத இந்த சூனியத்தில், அதன் அகன்ற இருட்டில் தனியே இருக்க பயமாகப் போயிற்று. நிச்சயமற்ற தருணங்கள் அவளை மேலும் கலங்கவைத்தன. முகமூடியோடு மனிதர்கள் அவள் கழுத்தை நெரிப்பதுபோல் விசித்திர மாகக் கனவுகள் அவளைப் பயத்தில் மேலும் இறுக்கின. ‘கடவுளே! என்னைக் காப்பாற்று’ என்று அலறிய அந்தக் கணத்தில்தான் ‘அப்பு’ அவள் வயிற்றில் ஜனித்தது.

வெளியே பயங்கர இரைச்சல். கா கா கா என்று ஒரே சத்தம். வெளியே போய்ப் பார்த்தபோது மரம் நிறையக் காக்கைகளும், அதன் இரைச்சல்களுமாக. இந்த முறை அவள் பார்த்த காட்சி மிகப் பயங்கரமாக, ஈரக்குலையை அசைப்பதுபோல் இருந்தது. குஞ்சு ஈனஸ்வரத்தில் கத்தக் கத்த… அதன் தாய், அலகால் குத்திக் குத்தி காயப்படுத்திக்கொண்டு இருந்தது. மூன்று நாட்களாகச் சோறு தண்ணி இல்லாமல் பறக்கக் கற்றுக் கொடுத்துக்கொண்டு இருந்த தாயா இப்படிப் பண்றது? எந்தத் தருணத்தில் இப்படி மாறியது என்கிற கலவரம் உடம்பு முழுவதும் பரவியது. குஞ்சை மற்ற காக்கைகள் கொத்த வரும்போது விரட்டி விடுவதும், அதுவே தன் குஞ்சைக் கொத்துவதுமாகப் போராடிக்கொண்டு இருந்தது. சட்டென்று அவளுக்கு எல்லாம் புரிந்துபோயிற்று. நான்கு நாட்கள் கழித்தும் பறக்கத் தெரியாத குஞ்சை மற்ற காக்கைகள் குத்திக் கொன்றுவிடும் என்கிற பயத்தில், அதன் தாயே செய்யும் ‘கருணைக் கொலை.’ ‘ஐய்யோ, என்னைக் காப்பாத்தேன்’ என்று ஈனஸ்வரத்தில் பரிதாபமாக குஞ்சு இவளைப் பார்த்து முனகியது.

அந்தக் கணத்தில், அதனை எப்படியாவது காப்பாற்ற வேண் டும் என்று நினைத்தவள், உடனே உள்ளே சென்று ஒரு கறுப்புத் துணியைக்கொம்பில் கட்டி காகங்களுக்கு அருகே நட்டு வைத்தாள். பக்கத்தில் இருந்த தொழுவத்தில் இருந்து நிறைய வைக்கோல் கொண்டுவந்து பரப்பிவைத்து, நடுவில் ஒரு செங்கல்வைத்து, அதன் மேல் அந்த குஞ்சை வைத்தாள். அது தடுமாறிக் கீழே விழுந்தது. இரண்டாவது செங்கல் லையும்வைத்து அதன் மேல் குஞ்சை வைத்தாள். இந்த முறை யும் திரும்பக் கீழே விழுந்தது. இப்படி ஒவ்வொரு செங்கல்லாக ஏற்றிக்கொண்டே போவதும், குஞ்சு விழு வதும், அதன் தாய் பதற்றமாக அலகால் குத்துவதுமாக ஒரு ஜீவ மரணப் போராட்டம் நடந்துகொண்டு இருந் தது. எட்டு கல் வைத்தும் பறக்கவில்லை என்ற போது, அவளுக்கு முதன்முதலாகப் பயம் வந்தது.

தன் முயற்சியில் தோற்று, குஞ்சு இறந்துவிடுமோ என்கிற பயத்தில், உடம்பு எல்லாம் ஜில்லிட ஆரம்பித்தது. அடிவயிற்றில் ‘சுருக் சுருக்’ என்று விநோதமாக ஒரு வலி. ஒன்பதாவது கல்லையும் வைத்து, அதன் மேல் குஞ்சை வைத்து, இந்த முறை வெறி பிடித்தவள் மாதிரி தன் முழு பலத்தையும் பிரயோகித்து ஆவேசமாக அதனைப் பிடித்துத் தள்ளினாள். அவளின் இந்த எதிர்பாராத செயலால் பயந்து, குஞ்சு தன்னிச்சையாக இரண்டடி பறந்து கீழே விழுந்தது. ஆவேசமாக திரும்பத் திரும்ப கல்லில் வைத்து அதனைப் பிடித்துத்தள்ள, அது மெதுவாக நான்கடி, ஐந்தடி என்று பறந்து, இறுதியில் கா கா என்று சந்தோஷமாக றெக்கையை விரித்து இயல்பாகப் பறக்கத் தொடங்கிய அந்த நொடியில், இதுவரை ஊசியால் குத்திக்கொண்டு இருந்த வயிற்று வலி, உயிர் நரம்புகளை எல்லாம் கிழித்து, அவள் அடிவயிற்றை இரண்டாகப் பிளப்பதுபோல் உணர்ந்தாள். ‘அம்மா’ என்று கதறிக்கொண்டே மயங்கி விழுந்தாள்.

அரை மயக்கமாக அவள் கண் திறந்து பார்த்தபோது, வயிறு சிறிதாக அமுங்கி நிற்க, உடம்பெல்லாம் குருதி வாசனை. அவள் எதிரே கம்பீரமாக, வெண்மையான பரிசுத்த அழகோடு தீப் பிழம்பாக ‘அவளுடைய அப்பு’ நின்றிருந்தது. ஜீவப் பரவசமாக, காலப் பிரக்ஞனையற்ற அந்த நிமிடத்திலேயே உறைந்து நின்றாள். அப்பு அவளை இடம் இருந்து வலமாக மூன்று முறை வலம் வந்து, தும்பிக்கையால் அவள் நெற்றியில்வாஞ்சையாக முத்தமிட்டு, நமஸ்கரித்துவிட்டு, அவளைவிட்டு விலகி, மெதுவாக நடந்துபோயிற்று, சிறு புள்ளியாக!

– நவம்பர் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *