கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 5, 2023
பார்வையிட்டோர்: 2,994 
 
 

“தூங்கறவாள எழுப்பறது மஹாப் பாவம், தெரியுமோ”, தூங்குபவர் யாராக இருந்தாலும் அப்பா வழக்கமான சொல்வது. இதைச் சொல்லும் போது மட்டும் அவரது சாந்தமான குரல் சற்றே உயர்ந்து ஒலிக்கும்.

பெரியப்பாவிடம் அப்பா யாரும் புரிந்து கொள்ள முடியாத ஒரு மரியாதை வைத்திருந்தார். இருவருக்குமே ஓய்வூதியத்தில் ஜீவனம் என்ற ஒரே ஒற்றுமையைத் தவிர குணத்தில் நேர் எதிர். அப்பாவுக்கு இஷ்ட தெய்வம் அனந்த சயனத்திலிருக்கும் ஸ்ரீரங்கம் ரங்கனாதர் என்றால் பெரியப்பாவிற்கு எல்லா விதமான உக்ரமூர்த்திகளும்.

துருவக் கரடியைப் போலத் தூங்குபவர் பெரியப்பா. நாள் கணக்கில் தொலைத்த தன் தூக்கத்தைச் சரிக்கட்ட பகலெல்லாம் ஒரு முறையே இல்லாமல் தொடர்ந்து தூங்குவார். இரவும் தான். அவர் ஒரு ப்ராஜெக்டை எடுத்துக் கொண்டால், அது முடியும் வரை அவருக்குத் தூக்கமே வராது. ஏதோ ப்ராஜெக்டின் வளர்ச்சியினை அடிக்கடி கேட்டு நச்சரிக்க மேலதிகாரி ஒருவர் இருப்பதைப் போலத்தான் பரபரப்பார்.

பகலெல்லாம் வேலைக்கான ஆயத்தங்களில் கழியும். இரவு மற்றவர்கள் தூங்கப் போனதும் தான் இவர் தன் வேலையையே ஆரம்பிப்பார். ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸில் தொடங்கி, பேப்பர் மேஷ்ஷில் தொடர்ந்து, சிமெண்ட் வரை பலதரப் பட்ட வஸ்துக்களைக் குழைத்துப் பொம்மைகள் செய்வார். வடிவம் வந்ததும், வர்ணங்கள் பூசுவார். ஆதிசங்கரர் ஓரளவு சங்கரரைப் போலவே இருப்பார். சற்று பருத்தோ இளைத்தோ இருந்தாலும் சுமாராய் ஆதிசங்கரர் என ஒப்புக் கொள்ளும் படியே இருக்கும் பொம்மை. சில சமயம் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு தன் பெண்ணிற்கோ அல்லது நாட்டுப் பெண்ணிற்கோ, அவர்களுக்கு அது தேவையா அல்லது பிடிக்குமா என்பதை லட்சியம் செய்யாது வரலக்ஷ்மி விரதத்திற்கு மண்டபம் செய்வார்.

எத்தனை முக்கிய செய்தியானாலும் பெரியப்பா தூங்குவதைப் பார்த்ததும் அப்பா பேசாமல் இடத்தை விட்டு அகல்வார். அடுத்தது ரிஷப வாகனமா இல்லை பிள்ளையாரா என்று முடிவெடுப்பதற்கு முன் வேணும் மட்டும் தூக்கிக் கொள்வார் பெரியப்பா. பிறகு தான் இருக்கவே இருக்கிறதே, இரவுகளில் தன் மூலத்தையும் மறந்த மோன நிலை.

ஓய்வு பெற்றபின் அடிக்கடி பெரியப்பாவைப் பார்த்துப் பேசவென்று, சாப்பிட்டு விட்டு விருதுநகரிலிருந்து மதுரைக்குக் காலையிலேயே லொங்கு லொங்கென்று பஸ்ஸைப் பிடித்துக் கிளம்புவார் அப்பா. இவர் போகும் நேரம் பார்த்து பெரியப்பா மதியத் தூக்கத்தில் ஊஞ்சலிலோ அறையிலோ ஆழ்ந்திருப்பார்.

அப்பா காத்திருப்பார். பெரியப்பா எழுந்ததும், அதுவரை தொலைந்திருந்த ‘அவசரம்’ அப்பாவைச் சட்டென்று பற்றிக் கொள்ளும். செய்தியை மளமளவென்று சொல்லி விட்டுக் கிளம்புவார். பார்க்க வேடிக்கையாக இருக்கும். தன் அண்ணா முழித்திருக்கும் போது அவரைப் பார்க்க அப்பாவிற்கு விருப்பமில்லையோ என்று நான் யோசித்து மனதுக்குள் சிரித்ததுண்டு.

‘நா வேணா அவர எழுப்பட்டா’, என்று பெரியம்மா கேட்டாலும், உடனே, “வேண்டாம், மன்னி. ஒண்ணும் அவசரமில்ல. அண்ணா ஏந்துக்கற போது ஏந்துக்கட்டும். எனக்கென்ன பெரிய வேலை”, என்பார். உண்மையில் தலை போகிற அவசர செய்தியாகக் கூட இருக்கும். ஆனாலும், காத்திருப்பார். இல்லையானால், தானும் ஒரு தூக்கம் போடுவார். கவலைகள் எண்டிசையிலிருந்து அப்பாவைச் சூழ்ந்த போதிலும் அவரால் தான் சட்டென்று தூங்க முடியும்.

மெலிந்த தன் ஐந்தடி உடலை அப்பா லேசாக படுக்கையில் சாய்த்தாலே போதும், குறட்டைச் சத்தம் அடுத்த நொடியில் கேட்கும். படுக்கை கூட வேண்டாம் நினைத்த இடத்தில் நினைத்த மாத்திரத்தில் அவருக்குத் தூங்க வரும். நினைத்த போது தூங்கவும் அதுவும் ஆழ்ந்து தூங்கவும் ஒரு கொடுப்பினை வேண்டும் என்று பாட்டி சொல்வார். அது தன் மூன்று மகன்களில் தனக்கு அதிகப் பிரியமான அப்பாவிற்கு வாய்த்திருந்ததில் பாட்டிக்கு ஏகப் பெருமை. கோழித் தூக்கமெல்லாம் அப்பாவிற்குப் பரிச்சயமில்லாச் சமாச்சாரம். தூங்க ஆரம்பித்தால் ஆழ்ந்த உறக்கம் தான். புதிய இடமானாலும், பஸ்ஸானாலும், இரயிலானாலும், கல்யாணச் சத்திரமானாலும், சென்னைக் கொசுக்கடியே ஆனாலும் அப்பாவிற்குத் தூக்கம் சுகமாய் வரும்.

யாரும் தன்னை எழுப்பினால் ஆரம்ப காலங்களில் கோபப் பட்டுக் கொண்டிருந்தாரோ என்னவோ தெரியாது. ஆனால், என் நினைவு தெரிந்த நாளிலிருந்து யாரும் அவரை எழுப்பினால் கோபித்ததில்லை. எழுப்பியவருக்குக் காதைக் கொடுத்து விஷயத்தைத் தெளிவாய் உள்வாங்கிக் கொண்டு, துளியும் சிரமமேயின்றி தூக்கத்தைத் தொடரும் கலையை பழக்கத்தால் பயின்றிருந்தார். இதைப் பார்த்துப் பொறாமைப் பட்டவர்களில் என் அம்மாவும் ஒருவர். சொல்லப் போனால், அப்பாவிற்கு இந்தக்கலை கைகூட தன்னையறியாமலே உதவியதே அம்மா தான்.

வேண்டியது வேண்டாதது என்று எல்லாவகைச் சிந்தனைகளையும் வலியவலியத் தன் மூளைக்குள் திணித்துக் கொண்டும், நித்திரா தேவியோடு நிரந்தரமாய்ப் பிணக்கம் கொண்டும் இரவெல்லாம் தவியாய்த் தவிப்பார் அம்மா. அப்பாவையும் அடிக்கடி எழுப்பிப் பேச்சுக் கொடுப்பார். இதனாலேயே, நாளடைவில் தூங்குபவரை யாரேனும் எழுப்பினால் அப்பாவிற்குப் பிடித்ததில்லை. தூக்கம் வராமல் தவிப்போரைப் பரிதாபமாகப் பார்ப்பார். தேவைக்கதிகமாக அவர்களுக்காகக் கவலைப்படுவார். தனக்குத் தெரிந்த பல உத்திகளைச் சொல்வார். இவ்விஷயத்தில் அப்பா முனைவர் பட்டமே வாங்கியிருக்கலாம்.

பொறியாளராய் இருந்த காலத்தில், ‘டேபிள் ஒர்க்கே நேக்குத் துளியும் பிடிக்கறதில்லப்பா. சைட் ஒர்க் தான் எனக்குத் தோதா இருக்கு, என்று அவர் கட்டிடத் தளங்களில் முடிந்தவரை தனக்கு வேலை வரும் படி பார்த்துக் கொண்டதற்குக் காரணமே, பணி நேரத்தில் உறக்கத்தைத் தவிர்க்க. வேலை என்று வந்துவிட்டால், அது தோட்டவேலையானாலும் சரி, சமையல் வேலையானாலும் சரி, ஒரு கை பார்த்துவிடுவார். எல்லா வேலைகளும் தெரியும் அவருக்கு. “எப்படிக்கா தூக்கப்பிரியரா இருக்கற அத்திப்பேர் இவ்வளவு ஆக்டிவாவும் இருக்கா?”, என்று என் மாமாக்கள் அம்மாவிடம் சிலாகித்துக் கொள்வர். பொறாமையை அப்போதைக்கு ஒதுக்கி வைத்து விட்டு அம்மா பெருமிதம் காட்டுவார். அப்பாவிற்குத் தூங்கும் போது தூக்கம், மற்றபடி துருதுருவென்று கண் கண்டதைக் கை செய்யும்.

பெரியக்கா பிரசவத்திற்கு வந்திருந்த போது அவள் பகலில் தூங்கினால், இவர் கொட்டுக் கொட்டென்று விழித்திருப்பார். அந்த அறையினுள் யாரும் நுழையக் கூடாது. அப்படியே போனாலும், ஓசைப் படாமல் வெளியேற வேண்டும். ஒற்றை துவாரபாலகராய் வாசலிலேயே, அவ்வாரக் கல்கியையோ ஆனந்த விகடனையோ வைத்துப் புரட்டிக் கொண்டிருப்பார். இந்த துவாரபலகர் நிற்காமல் சௌகரியமாய் உட்கார்ந்து இருப்பார்.

அபிமன்யு போன்ற புராண நாயகர்களின் பின்புலத்தில் அவருக்கிருந்த நம்பிக்கை தான் காரணமென்று பலர் நினைக்கலாம். அதுதான் இல்லை. பொதுவாகவே தூக்கம் என்பதைப் பெரிதாய் நினைக்கும் அவருக்கு அக்காவும் அவளுக்குள்ளிருக்கும் குழந்தையும் நன்கு உறங்க வேண்டும் என்ற ஒரே முனைப்பு. அந்த நேரம் தப்பித் தவறி அம்மா சமையலறையில் பாத்திரத்தை உருட்டினாலோ, அம்மாவை ஹிரண்யனாக்கித் தான் நரசிம்மாவதாரம் எடுக்கவும் செய்வார். ஆச்சரியமென்னவென்றால், மற்ற நேரங்களில் அப்பா சாந்தஸ்வரூபி.

பிரசவமான பின் வந்த நாட்களில், தன் முதல் பேரனை அவனது குட்டி வயிறு நிரம்பக் காத்திருந்து, தூங்க வைக்க ஆஜராகிவிடுவார். தன் உடல் சூடு குழந்தையின் பஞ்சு உடலுக்குப் பாய்ந்துவிடாதிருக்க அவர் பிரத்யேக முயற்சிகள் செய்வார். அதற்குத் தயாராய் சப்பணமிட்ட அவர் மடியில் மெத்துமெத்தென்று இரண்டு மூன்றாய் மடித்த வேஷ்டியோ அல்லது துண்டோ இருக்கும். பிரமாதமாய் அக்காவையும் போய் தூங்கச் சொல்வார். காலை லேசாக ஆட்டியாட்டி, குழந்தையின் மீது லேசாகத் தட்டித்தட்டி அவர் தூங்கச் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரத்தில் கால்வாசி நேரம் கூட குழந்தை தூங்காது.

படுக்கையில் விட முயற்சி செய்தால் எங்கே விழித்துக் கொள்ளுமோ என்று மடியிலேயே போட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பார். ஆனாலும், அவருக்குச் சலிக்காது. “ஏம்ப்பா இத்தன ஸ்ரமப்படறேள், நீங்க ஒரு நாழி தட்டித் தூங்கப் பண்றேள், அதானா அரை நாழிகூடத் தூங்க மாட்டேங்கறது”, என்று அக்கா சொன்னாலும், அதாவது தூங்கினானேம்மா. கொழந்த நெறையத் தூங்கினா மூள வளர்ச்சிக்கு நல்லது”, என்பார். அலுக்காமல் குழந்தையைத் தூங்க வைக்க, ஆவலாய் மறுபடியும் மதியம் ஆஜராவார்.

லீவு நாட்களில் என் தம்பி ‘நான் கொஞ்சம் டீப்ப்பா திங்க் பண்ணிட்டு வரேன்’ என்று குஷாலாய்ப் பகல்தூக்கத்திற்குக் கிளம்புவான். அப்பா உஷாராய் இருப்பார். அவனுடைய சிநேகிதர்கள் யாரேனும் வந்தாலோ, அவனுக்குப் போன் வந்தாலோ, எத்தனை முக்கிய விஷயமானாலும் சரி எழுப்ப மாட்டார். வேறுயாரையும் எழுப்பவும் விடமாட்டார். ஏதாவது முக்கியமான விஷயமா இருக்கப் போறதுன்னா, அவன சித்த எழுப்புங்கோ. இது ஒரு அப்ஸேஷன் இவருக்கு’, என்று அம்மாவின் அலுப்புத் தோய்ந்த வார்த்தைகள் காற்றில் கரையும். அப்பா ஒரு முறைப்பை மட்டும் அம்மாவின் திசையில் வீசுவார். நானறிந்து மற்ற பல விஷயங்களுக்கு நேர்மாறாய் இவ்விஷயத்தில் மட்டும் அம்மா தொடர்ந்து தோல்வியையே தழுவியிருக்கிறார்.

அப்பா தூக்கத்தை உடல் ரீதியைக் கடந்து பார்த்திருக்கிறார். பத்து வருடங்களுக்கு முன்பெல்லாம் தூக்கம் குறித்த வேடிக்கையான அவரது பிடிவாதம் எரிச்சலூட்டியிருக்கிறது. முன்பு ஒரு முறை என் உற்ற நண்பன் ரகுவின் மொத்த குடும்பமும் வாகன விபத்தில் சிக்கியது. கலங்கிக் குழப்பமடைந்து உதவி வேண்டி எனக்குத் தொலைபேசியிருக்கிறான். விவரங்களைக் கேட்ட பிறகும் கூட அப்பா, ‘அவன் பத்து நாள் டூரெல்லாம் முடிச்சுட்டு இப்பத்தாம்பா சாப்பிட்டுட்டு, பாவம் ரொம்ப அசந்து தூங்கறான். நீ வேணா நம்பர் தாயேன், அவன் ஏந்துண்டதும் போன் பண்ணச் சொல்றேன், என்றிருக்கிறார்.

பாவம், ரகு உரிய நேரத்தில் நேரத்தில் உதவிக்கும் ஆலோசனைக்கும் ஆளில்லாமல் அல்லாடியிருக்கிறான். விவரம் தெரிந்ததும், உள்ளுக்குள்ளேயே அப்பாவை வைவதைத் தவிர எனக்கு வேறு ஒன்றும் அப்போது செய்ய முடியவில்லை. ரகுவின் வீட்டிற்கு ஓடினேன்.

இப்போது விவரம் தெரிந்து, எனக்கும் கொஞ்சம் யோகம் அறிமுகம் ஆகும் நிலையில், அப்பா தூக்கத்தை யோகமாகத் தான் பயின்றிருக்கிறார் என்றே உணர்கிறேன். எது எப்படியோ, ஆழ்ந்த தூக்கம் சர்வ நிச்சயமாய் ஒரு வரம் தான்.

தூக்கப் பிரியரான அப்பா நிரந்தரமாகத் தூக்கத்திலாழ்ந்த செய்தி என்னை எட்டிய போது நான் பணி நிமித்தம் தோக்கியோவில் மாட்டிக் கொண்டிருந்தேன். நோய் அவரைக் கொண்டு போகப் போகிறதென்று மருத்துவர் ஏற்கனவே சொல்லியிருந்த போதிலும் அப்பா அவ்வளவு சீக்கிரமே போவாரென்று நாங்கள் யாருமே எதிர் பார்க்கவில்லை. போன் வந்த போது வாரயிறுதி. களைப்பு உடலை முறுக்கியதில் சீக்கிரமே உறங்கச் சென்றிருந்தேன். இரண்டே நிமிடத்தில் மிக ஆழ்ந்த உறக்கம். மதியம் நன்றாகத் தூங்கியெழுந்திருந்த என் சகா அடுத்த அறையில் முக்கால் மணி நேரமாய்த் தூக்கத்தை வலிந்து கொணரும் முயற்சியில் இருந்திருக்கிறான்.

பின்னிரவு நேரம். கையடக்கத் தொலைபேசி சிணுங்க, எடுத்தால், தம்பியின் குரல். உடனே சந்தேகப் பொறி! “அப்பா மூச்சு நின்னுடுத்து. நீ உடனே கிளம்புடா. ம், ரொம்ப இல்ல, ஒண்ர நாள் வலில கஷ்டப் பட்டா. தூங்கற மாதிரியேயிருக்காடா அப்பா. ம், அம்மாவா? இன்னும் விஷயமே மனசுல சிங்க் ஆகல்லன்னு நெனைக்கறேன் அம்மாவுக்கு. ஏதேதோ பேசறா. தாம்பாட்டுக்கு ஒண்ணுமே நடக்காத மாதிரி. இன்னும் பொட்டு கூட அழல்ல. என்னது, பெரியக்காவா,. ஆன் தி வே. ஆமா, சின்னக்கா வர எப்படியும் ரெண்டு நாளாயிடும் போலருக்கு. அஞ்சு மணி நேரமா ‘ட்ரை’ பண்றேன்டா ஒன் செல்லுக்கு, தெரியுமா? ஹூம், எல்லாரும் வர ஆரம்பிச்சாச்சு. ஆமா, ம், நம்ம கணேச சாஸ்திரிகள் தான். வந்து, இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்துட்டுப் போயிருக்கார். காலமே ஆறு மணிக்கு வருவாராம். பரவால்ல, ரெண்டு நாளானாலும் வந்து நீ சேரு. அது வரைக்கும் நாந்தான் இருக்கேனே. இப்பவே ஒடனே கிளம்பு, சரியா, சோகத்துடனேயே ஒப்பித்து விட்டுப் போனைக் கட் பண்ணி விட்டான்.

உடம்பு தூக்கத்தைத் தொடரச் சொன்னது. ஆனால், மனமும் மூளையும் செய்தி கொடுத்த அதிர்ச்சியில் பளிச்சென்று விழித்துக் கொண்டு விட்டன. அடுத்து என்ன?”, யோசிக்க முடியாமல் ஒரு செயலற்ற நிலை. யோசிக்கவும் செயலாக்கவும் இப்போது வேறு யாராவது உடனிருந்தால் என்று யோசிக்க மட்டுமே மூளை சிறிது வேலை செய்தது.

உடனே அடுத்த அறைக் கதவைத் தட்டினேன். இரண்டாவது முறை தட்ட வேண்டிய தேவையே இல்லாமல் கதவைத் திறந்தான் நண்பன். “என்னப்பா, உனக்கே தூக்கம் வரல்லியா? சரி வா, வேணா ஒரு ரவுண்டு செஸ் ஆடுவோம், இல்ல கேரம் ஆடுவமா?”, என்று ஆர்வமுடன் தனக்குத் துணை கிடைத்த குஷியில் சிரித்த படி கேட்டான். பதிலுக்கு என் முகத்தில் சிரிப்பு வராதது கண்டு, “என்னாச்சு, ஏண்டா ஏதும் பிரச்சனையா? ம்?”

விஷயத்தைச் சுருக்கமாகச் சொன்னேன். கேட்கக் கேட்கப் பேய் முழி முழித்தான். அவனுக்கே வந்த துக்கம் போல் அவன் உறைந்து நின்றது தான் என்னை வியப்பிலாழ்த்தியது. மிகவும் விசித்திரமாகவும் இருந்தது. “நீயேண்டா பேந்தப் பேந்த முழிக்கற. கொஞ்சம் ஏர்போர்ட்டுக்குப் போன் பண்ணுடா. டிக்கெட் அவைலபிலிடி தெரியணுமே.”

கடைசியாக நான் கூறியதை அவன் உள் வாங்கவே இல்லை என்று அவனது முகபாவம் சொன்னது. இறந்தது யாருடைய அப்பா என்ற அளவிற்கு அவனது அமைதி என்னுள் சந்தேகத்தைக் கிளப்பியது. கண்ணிமைக்க மறந்து திகைத்தாற்போல நின்றான். முத்து முத்தாய் முகமெங்கும் வியர்வைத் துளிகள் துளிர்த்திருந்தன. லேசாகக் கையை அவனது தோளில் வைத்து உலுக்கியதுமே, முதுகுத் தண்டில் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு சிலிர்ப்புடன் உடலை ஒரு குலுக்கு குலுக்கிக் கொண்டான்.

“டேய், சொன்னா நம்ப மாட்டடா. இப்ப தாண்டா, நான் பொரண்டு பொரண்டு தூங்க ட்ரைப் பண்றேன், ரெண்டு மணி நேரமா. தூக்கமே வல்லடா. ‘உன் சிநேகிதனோட அப்பா தவறிட்டார்’, ‘உன் சிநேகிதனோட அப்பா தவறிட்டார்’னு நாலஞ்சு வாட்டி என் காது கிட்ட யாரோ திரும்பத் திரும்பச் சொல்றாப்ல இருந்துதுடா. பிரமைன்னு மட்டும் சொல்லாத. போன நிமிஷம் வரைக்கும் நானும் பிரமையோன்னு தாண்டா நெனச்சேன், ஆனா, இப்ப, எனக்கு ஒரே அதிசயமாவும் ஆச்சரியமாவும் இருக்கு”, மளமளவென்று பதற்றத்தோடு சொன்னதைக் கேட்டதும் நான் கலங்கி விட்டேன். அப்பாவிற்காக என் கண்களில் மளுக்கென்று தளும்பிய முதல் கண்ணீர்.

“ஆமா, உனக்குப் போன் எப்படா வந்துது?”

“இப்பத்தாண்டா, பத்து நிமிஷம் முன்னாடி”, என்றேன். என் அப்பாவின் மறைவு என்னைவிடவும் அவனுக்கு மறக்கவே முடியாத அனுபவமாய் அமைந்துவிட்டிருந்தது. பேயறைந்தாற் போல இருந்த அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது எனக்கு. சிறு குற்றவுணர்வு என்னை ஆட்கொண்டது.

‘தூங்கறவாள எழுப்பறது மஹாபாவம், அதான்’, என்று அருவமாய் நிறைந்திருந்த அப்பாவின் தன்னிலை விளக்கம் என் காதுகளுக்கு மட்டும்.

– மரத்தடி.காம் – பிப்ரவரி 04

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *