அப்பா…! அப்பப்பா…!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 5,834 
 
 

எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதில் அப்பாவின் அடையாளம் வந்து தொற்றிக் கொள்கிறது. அவரை நினைவுபடுத்துவது தன்னின் ஒவ்வொரு செயல்களும்தான். அப்பாவைத் தவிர்க்கவே முடிவதில்லை. வாழ்க்கை முழுவதும் அவருடைய நினைவுகளை விட்டுத் தாண்டவே முடியாது என்றுதான் தோன்றியது. கூடவே இருந்து வழி நடத்துகிறார். அதுதான் உண்மை.

அத்தனை எளிமையான வாழ்க்கையில் ஒரு மனிதன் தனக்கான அடையாளங்களாய் இவ்வளவையும் விட்டுச் சென்றிருக்க முடியுமா என்பதுதான் ஆச்சரியம்.

எந்த எதிர்பார்ப்புமற்ற மிக எளிமையான ஒருவனின் வாழ்க்கை தன்னைத்தானே நிலை நிறுத்திக் கொள்கிறது. நிச்சலனமற்ற, அலைகளற்ற, தெளிந்த தடாகமாய் எவனொருவனுக்கு மனம் அமைகிறதோ அவன் தன்னளவில் சுகவாழ்க்கை வாழ்கிறான். தன்னளவில் நிறைவுடயவனாய,; நிம்மதியானவனாய் வரித்துக் கொள்கிறான்.

அப்பா அப்படித்தான் இருந்து கழித்திருக்கிறார். புறச் சூழல்கள் எதுவும் அவரைச் சலனப்படுத்தியதில்லை. தன் இருப்பின் மேல் அவருக்குக் குறையும் இருந்ததில்லை. வாழ்க்கையைப் போட்டியின்றி, பொறாமையின்றி, சமன்பாடாய் எதிர் கொண்டு வாழ்ந்து கழித்தவர் அப்பா.
அவரைப் போல் அவர் மட்டும்தான் இருக்க முடியும். அவரைப் பார்த்துக் கொண்டே, நினைத்துக் கொண்டே இருந்தால் நம் வாழ்க்கை சீர்படும். தடம்புரளாமல் செல்லும். நிம்மதியாய்க் கழியும்.
இப்படித்தான் நாளும் பொழுதும் கழிந்து கொண்டிருக்கிறது இவனுக்கு.

“சார்…கொஞ்சம் வழி…” – பின்னாலிருந்து குரல் கேட்டவுடன் சட்டென்று ஒதுங்கினான்.

அத்தனை நேரம் வழியை அடைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தது அப்பொழுதுதான் உறைக்க, சங்கடமாய் இருந்தது.

“வழின்னு கூடத் தெரியாம இப்படிச் செவுரு கணக்கா நிக்கிறாங்களே…படிச்சவங்களே இப்டியிருந்தா எப்டி?” எத்தனையோ முறை மற்றவர்களைப் பற்றி நினைத்திருக்கிறான் இவன்.

“இதுக்குப் படிச்சவங்க, படிக்காதவங்கன்னு என்ன இருக்கு? பொது இடத்துல பொதுவான விதிகளைக் கடைப்பிடிக்கிறதுக்கு, அனுபவம் போதுமே?”

“சார், கொஞ்சம் பேனாத் தர்றீங்களா?” – பைக்குள் கை விட்டுவிடுவார் போலிருந்தது. எடுத்து நீட்டினான்.
கிளம்ப இருந்த தன்னிடம் பேனா வாங்கிக் கொண்டு விட்டார். இனி அவர் திருப்பித் தரும்வரை காத்திருக்க வேண்டும். ஒரு இருக்கையினைப் பார்த்து அமர்ந்தான். இருந்த கூட்டத்தில் யார் பேனா வாங்கியது என்று தெரியவில்லை.

ஏதோ தற்செயலாக வங்கிக்கு வந்ததுபோல் அல்லவா பேனாக் கேட்கிறார்கள்? ஒவ்வொரு முறையும் இவனுக்கு என்று இது நடந்து விடுகிறது. அதென்னவோ இவன் முகம்தான் பேனா தரும் ஆள் போல் இருக்கிறதோ என்னவோ? அப்படி மற்றவர்களுக்குத் தோன்றுகிறது என்றால் அதுவும் அப்பாவிடமிருந்து வந்ததுதான். மற்றவர்களுக்கு உகந்ததாக ஒருவன் தன்உருப்பெற்றிருப்பது ஒன்றும் சாதாரண விஷயமில்லையே? அது சிறு வயதிலிருந்தே வர வேண்டிய, வந்திருக்கக் கூடிய ஒன்றாகத்தான் இருக்க முடியும். அந்த அடையாளம் அப்பா தந்ததுதான்.

“தலையை நல்லா படியச் சீவிக்கோ…பறக்கக் கூடாது. நேர் வகிடா எடு…ரெண்டு புருவத்துக்கு மத்தில கொஞ்சம் மேலே…இப்டி இட்டுக்கணும் விப+தியை…இப்போ பார் கண்ணாடியை…சரியா இருக்கா?” – அம்மா சொல்லிக் கொடுத்தது இது.

“மேல் பட்டன் திறந்து இருக்கக் கூடாது…அது மரியாதையில்லை. எல்லா பட்டனையும் போடு…அதுதான் நல்லாயிருக்கும்..ஒழுக்கத்தையும், நன்னடத்தையையும் இப்படிச் சின்னச் சின்னதாக மனதில் படிய வைக்க முடியும். அப்போதுதான் உடம்போடு ஊறும். ரத்தத்தோடு கலக்கும்.

கையில் வைத்திருந்த பாஸ் புத்தகத்தை விரித்தான். எடுத்ததுபோக மீதி எவ்வளவு இருக்கிறது என்று பார்த்தான். இதுவும் இன்று அப்பா கொடுத்ததுதான். அவர் உழைத்த உழைப்புத்தான் தன்னிடம் கல்வியாகி , தகுதியாகி, வேலையாகி, ஒரு நிரந்தர வருமானமாகி, அதன் சேமிப்பாகப் பரிணமித்து இந்தக் கணக்குப் புத்தகத்தில் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

அப்பா காலத்தில் வங்கிகள் இல்லையா என்ன? எல்லாம் இருந்ததுதான். அது அதுபாட்டுக்கு இருந்தது. அதற்கான தேவை எழுந்தால்தானே? சேமிக்கும் இ;டம்தானே அது! செலவுக்கே இல்லையென்றால் எங்கிருந்து சேமிக்க? இந்த மாதிரி வங்கிப் புத்தகம் ஒன்றைக்கூடத் தன் வாழ் நாளில் பார்த்ததில்லை அப்பா.

அப்பா இருந்தபோது அவர் பெயரில்தான் இவன் முதன் முதலில் கணக்கைத் துவக்கினான். தன் முதல் சம்பளத்தில் சேமிப்பை அப்பா கை கொண்டு வாங்கிக் கொண்டு வங்கிக்குப் போனான். பாஸ் புக்கில் ஏற்றி அப்பாவிடம் கொண்டு வந்து காண்பித்த போது பத்திரம், பத்திரம் என்று பலமுறை அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது. தான் அதைப் பத்திரமாய் வைத்துக் கொள்ள மாட்டேன் என்ற எண்ணத்தில் அப்பா தன் பெட்டியில் வைத்திருந்ததும், வங்கிக்குச் செல்லும் போதெல்லாம் மட்டும் எடுத்துக் கொடுத்ததும் சேமித்த பணத்திற்கு அந்தப் பாஸ் புத்தகம்தான் ஆதாரம் என்பதில் அப்பா ரொம்பவும் பயபக்தியோடு இருந்ததும் இன்று நினைத்தால் கூட இவனுக்கு இவனுக்குச் சற்று சிரிப்புதான் வரும்.

அப்பா இன்று இருந்தால் எவ்வளவு சந்தோஷப் படுவார். எதற்கு? வங்கியில் இவ்வளவு துட்டு இருக்கிறதே என்றா? கண்களை அகலத் திறந்து பார்த்து ரசிப்பாரோ? பணம் போட்டதையும், மொத்த இருப்பையும் கூட்டிக் கூட்டிப் பார்த்து அப்பா ரசிப்பது போலிருந்தது இவனுக்கு.

“அப்பா, இது என்னோட முதல் மாத சம்பளம்…அதான் வாங்கிட்டு வந்தேன்…” – சொல்லிக் கொண்டே அந்தப் பெரிய பொடி டப்பாவை அப்பாவின் முன் வைத்தபோது அவர் முகம் எப்படிச் சுருங்கிப் போனது?

“ஏண்டா ரமணா, முன்னமே சொல்ல மாட்டியா? இப்பல்லாம் பொடி போடுறது அத்தனை நாகரீகமில்லைன்னுட்டு நானே ரொம்ப அதைக் குறைச்சிண்டிருக்கேன்…அப்படியாவது ஒரு கெட்ட பழக்கம் விட்டுப் போகட்டும்னு…இப்பப்போயி நீ இத்தனை பெரிய டப்பாவை வாங்கிண்டு வந்திருக்கியே?” அப்பா ரொம்பவும்தான் வருத்தப்பட்டார் அதற்காக.

இவனுக்குத் தெரிய சாகும்வரை அதை வைத்திருந்தார். கடைசியாகக் கொஞ்சம் பொடி மிச்சத்தோடு அதைத் தூர எறிந்தது நினைவுக்கு வந்தது.

கடைசி வரை ஒரு உறுத்தலோடேயே அப்பா அந்தப் பொடி டப்பாவை வைத்திருந்ததும் அதிலிருந்து மிகக் கொஞ்சம் எடுத்து மட்டையில் போட்டு மடித்துக் கொள்ளும் போதெல்லாம் ஏதோ விரயமாய்ச் செய்த ஒன்றை வீணாக்காமல் முழுதுமாய் உபயோகித்து முடிக்க வேண்டுமே என்கிற ஆதங்கத்தில்; கண்ணும் கருத்துமாய் இருந்ததும், தன்னின் அந்த ஆடம்பரச் செலவினை கடைசி வரை யாருக்கும் தெரியாமல் மறைத்து, அதை ஒன்றுமில்லாமல் செய்து விடுவது தன் கடமை என்பதுபோல் அப்பா செயல்பட்டதும், இவனால் மறக்க முடியாதவையாய் இருந்தன.

தரையில் துண்டை விரித்துச் சாய்ந்தால் அடுத்த நிமிடம் தூக்கம். எவ்வளவு பெரிய சொத்து? குளிக்கப் போகும் போது கட்டியிருக்கும் நாலு முழ வேட்டியைப் பந்து போல் சுருட்டிப் போடுவார். குளித்து முடித்துக் கட்டிக் கொள்ள கொடியில் துவைத்து உலர்த்திய ஒன்று.

இரண்டுதானே இருக்கிறது என்கிற குறை என்றுமே இல்லை. இருக்கும் இருப்பில் நிறைந்த மனசு.
பேனா வாங்கியவர் யார்? இவ்வளவு நேரமாயிற்றே, போயிருப்பாரோ? அல்லது ஒரு வேளை அவர் என்னைத் தேடுகிறாரா? மூடியை வைத்துக் கொண்டு கொடுத்திருக்க வேண்டும்.

எழுந்து வாசலுக்கு வந்தான். இரண்டு டூ வீலர்களுக்கு நடுவே சிக்கிக் கொண்டிருந்தது சைக்கிள். டூ வீலர்களுக்கு நடுவே சைக்கிள் கேவலம்தான். அதுதான் நடுவே இறுக்கிவிட்டார்கள் போலிருக்கிறது.
“ ஊர் உலகத்துல ஒங்களை மாதிரி யாராவது சைக்கிள் வச்சிருக்காங்களா பாருங்க…வேண்டாம்…இந்தத் தெருவை மட்டும் எடுத்துக்குங்க…ஒத்த வீட்லயாவது சைக்கிள் இருக்கா சொல்லுங்க…ஏன் இன்னும் இதைக் கட்டிக்கிட்டு அழுகுறீங்க…ஒரு மொபெட்டாவது வாங்கிக்கிடலாமுல்ல…?”

“மாசம் குறைஞ்சது ஐநூறு ரூபாயாவது ஆகும். சம்மதமா? ஐநூறு ரூபாய்க்கு இன்னைக்குத் தேதிக்கு முப்பது ரூபாய்ன்னு ரேட்டு வச்சாலும் பதினேழு கிலோ அரிசி வாங்கலாம். அது நம்ம வீட்டுக்கு ரெண்டு ரெண்டரை மாசத்துக்கு வரும்…ஏதாச்சும் புரிஞ்சிதான் பேசறியா நீ?”

“சிக்கனம் இருக்க வேண்டிதான்…அதுக்காக இப்படியா? பெரிய கஞ்சத்தனமாவுல்ல இருக்கு? வண்டியிருந்திச்சின்னா, சட்டுனு எடுத்தமா போனமான்னு கோயிலுக்குக் போயிட்டு வந்திடலாம்…அதெல்லாம் எங்க தெரியுது உங்களுக்கு?”

வருவாய்க்குத் தகுந்தமாதிரி ஒருவன் கடுமையான சிக்கனத்தைக் கடைப் பிடித்தால் அது கஞ்சத்தனமா? அப்படியிருந்தால் அது கேவலமா?

“இந்தத் தெருக்காரன் ப+ராவும் அப்படியிருக்கானேன்னு நானும் சூடு போட்டுக்க முடியுமா? எங்கப்பா அப்படியிருந்திருந்தா, சந்தோஷமா ஜாலியாத் தன் வாழ்நாளைக் கழிச்சிருந்தா இன்னைக்கு நான் இப்படி இருக்க முடியுமா?

எந்த நோக்கமும் இல்லாம ஒரு மனுஷன் இஷ்டத்துக்கு வாழ முடியுமா? முன்னோர்கள் விதை போட்டது அதுக்காகவா? விதை செடியாகி, செடி மரமாகி, மரம் பெரிய விருட்சமா ஆகுறதுக்குத்தானே?”
வாய் அடைத்துப் போனாள் அவள். வீட்டிற்கு இன்னும் லோனே அடையவில்லை. அதற்குள் அகலக் கால் வைக்கப் பார்க்கிறாள் இவள். மனக் கணக்குப் போட்டால்தானே வாழ்க்கைக் கணக்கு சரியாகும்.
அப்படிக் கணக்குப் போடும் வகையில்கூட அப்பாவுக்கு வாழ்க்கை அமையவில்லை. இந்த வருவாயை வைத்துக் கொண்டு என்ன கணக்கு வேண்டிக்கிடக்கிறது? கடைசிவரை பற்றாக்குறைதானே? கடன்தானே அப்பா தன் வாழ்க்கையில் கண்டது? அவரைக் காப்பாற்றியது அவரது நாணயம்! நாணயத்திற்காக நாணயம் இழக்காதவர் அப்பா! அதுதான் அவரது சொத்து!!

“உங்கப்பா இருக்காரே அவர மாதிரி ஒரு மனுஷனப் பார்க்க முடியாதுப்பா…” – சொல்பவரின் கண்களெல்லாம் கலங்கி நிற்பதை இன்றும் பார்க்கிறான் இவன்.

எல்லாமே அடங்கிப் போகிறதே இதில். இப்படி ஒரு நிறைவு வாழ்க்கை எவனால் வாழ முடியும்? வாழ்க்கையின் அர்த்தம் ப+ரணத்துவம் பெற்று விட்டதே?

மனதுக்குள் புத்துணர்ச்சி. சைக்கிளில் புறப்பட்டபோதுதான் பேனா ஞாபகம் வந்தது.

“பரவால்ல விடு…யாரோ ஒருத்தருக்குப் பயன்படப் போறது…”- அதுவும் அப்பா சொல்வது போலவே இருந்தது. அப்பாதான் இயக்குகிறார். அதுவே சத்தியம். நினைத்துக் கொண்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *