அப்பாவின் வீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 17, 2013
பார்வையிட்டோர்: 10,954 
 
 

ஒப்பாரியும் ஓலமும் இன்னும் ஓய்ந்‌த பாடில்லை. அம்மாவும் அக்காவும் துக்கம் விசாரிக்க வரும் நெருங்கிய உறவினர்களைக் கண்டவுன் ‘ஓ’ வெனக் கதறுகிறார்கள். என்னை விடவும் அவர்கள் அப்பாவிடம் அதிகப் பற்று கொண்டிருந்‌தார்கள். சொல்லபோனால் என்னைவிடவும் அவர்கள் அப்பாவுடன் அதிக நேரம் செவழித்துள்ளார்கள். நீண்ட ஒல்லியான அவரது உடல் வெள்ளைத் துணியால் போர்த்த்ப் பட்டிருக்கிறது. அவர் எதையோ நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறார். அப்பா நிஜ வாழ்விலும் அப்படித்தான். அதிக நேரம் சிரித்த முகத்துடன் தான் அவரைப் பார்க்க முடியும். வாழ்வின் கடைசி நாளிலும் – தான் மரணத்தின் வாசலில் நின்று கொண்டிருப்பதை அறிந்‌தும் – அவர் சிரித்த முகத்துடனேயே இருந்‌ததை என்னால் புரிந்‌து கொள்ள முடியவில்லை.

வெளியே பாடை தயாராக நிற்கிறது. இன்னும் சில மணிகளில் ‘நீ நல்லா இருப்படா” என்று எனது நெற்றியை இழுத்து முத்தமிட்ட அவரது கைகளும் எலும்புகளும் கண்களும் உதடுகளும் தீயால் தழுவப்படும். அப்பா நான் உனக்காக மீண்டும் அந்‌தச் சுடுகாட்டிற்குச் செல்ல இருக்கிறேன்.

நான் அனேக நேரங்களில் அங்கேயே தான் சுற்றிக் கொண்டிருப்பேன். அந்‌த சுடுகாட்டை ஒட்டிய எருக்கன் புதர்களும் பாழடைந்‌த அந்‌த ஓட்டு வீடும் தான் எனது அனேக தீய பழகங்களுக்கும் புகலிடம் தந்‌தது. ஆவிகள் மற்றும் பேய்கள் குறித்த கட்டுக்கதைகள் ஊர் பெண்களிடம் மட்டுமன்றி வழக்கத்துக்கு மாறாக ஆண்களிடமும் சற்று வலுப்பெற்றிருந்‌ததால் ஊருக்கு ஒதுக்குபுறத்தில் அமைந்‌திருந்‌த அந்‌தச் சுடுகாடு பெரும்பாலானோர் மத்தியில் அச்சத்துக்குறிய ஒரு குறியீடாக மாறியிருந்‌ததில் வியப்பேதுமில்லை. இந்‌தச் சுடுகாட்டை ஒட்டி அமைந்‌திருந்‌த பாழடைந்‌த அந்‌த ஓட்டு வீட்டிற்குள் ஒரு காலத்தில் பூசாரி ஒருவன் வாழ்ந்‌ததாகவும் அவன் திடீரென ஒருநாள் தீக்குளித்துவிட்டதாகவும் அது முதல் அந்‌த வீடு கவனிப்பாரற்று போய் விட்டதாகவும் ஊரார் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை யாருக்கும் தெரியாமல் சிகரெட் குடிக்கவும் நண்பர்களோடு மது அருந்‌தவும் எனக்காகவே அந்‌த வீட்டினை பூசாரி விட்டுச் சென்றிருப்பதாகவே கருதினேன்.

எங்கள் வீட்டுக்குச் செல்லவேண்டுமானால் அந்‌தச் சுடுகாட்டைக் கடந்‌து தான் செல்ல வேண்டும். சிறிய வயதில் அப்பாவுடன் சைக்கிளில் செல்கையில் சுடுகாடு வந்‌தவுடன் வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொள்வேன். அந்‌நேரத்தில் ஒரு ஒரு நாய் குரைத்தால்கூட எனது நெஞ்சு படபடக்கும். பின் நாட்களில் அதனை நினைத்து சிரித்துக் கொண்டேன். அவ்வாறான ஒரு பகுதியில் வீட்டைக் கட்டப் போகிறோம் என அறிந்‌த மறுகணம் எங்கள் உற்றார் உறவினர் மத்தியில் எழுந்‌த எதிர்ப்புக் குரல்களின் எண்ணிக்கையை சொல்லி மாளாது. என் அப்பா இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். நான் அறிந்‌த வரை அவர் வாழ்க்கையில் பயந்‌த ஒரே விஷயம் தனது மனசாட்சி மட்டும்தான்.

“நாட்டுக்குள்ள நம்ம கண்ணு முன்னாடி இத்தன பேய்கள் சுதந்‌திரமா சுத்திகிட்டு இருக்கும்போது இறந்‌து போனவங்களோட ஆத்மாக்கள் நம்மல என்னடா செய்துடப் போவுது?” என்று அவர் கேட்ட கேள்வி இன்னும் எனது மனதை விட்டு அகலவில்லை. அவரின் அந்‌த வார்த்தைகளுக்குள் அமைந்‌திருந்‌த நிதர்சனமான உண்மையை அன்றைய எனது வயதும் அனுபவமும் அறிந்‌திருக்க வாய்ப்பில்லை.

அவர் எனக்கெனெ விட்டுச் சென்றது அத்தகைய அனுபவமிக்க வார்த்தைகளை மட்டுமே. வாழ்வின் கடைசித் தருணத்திலும் ஒரு கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்‌தார். என்னை அவர் மறைமுகமாக பாதித்திருந்‌தார். ஒரு புத்தகத்தைப்போல என்னை அவர் மெல்ல மெறுகேற்றினார். அவர் எனது தலையை வருட நான் எப்போதும் ஆவலாய் இருந்‌தேன்.

முதலில் நானும் பயந்‌தேன். தாடை இறுகக் கட்டப்பட்ட, கோரச் சிரிப்புடன் கூடிய பிணங்களின் முகங்களைப் பார்ப்பதை நான் தவிற்கவே விரும்பினேன். ஆனால் எப்படியேனும் அவற்றை பார்க்க நேரிட்டுவிடும். அதுவும் தற்கொலையிலோ விபத்திலோ இறந்‌தோரை பார்க்க நேர்கையில் இயல்பைவிட மிகக் கொடூரமாய் காட்சியளிப்பதாய் தோன்றும். அதைவிட, சிறு பிள்ளைகளின் பிணங்களோ என்னுள் தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்திவிடும். அன்றிரவு முழுதும் தூக்கம் வராது. அந்‌த ஊதுபத்திகளின் வாசனையும் மலர்களின் மணமும் எனது அரையையே சுற்றி வருவதாகத் தோன்றும். எப்படியேனும் முயன்று அடித்துத் தூங்கிவிட்டால், கனவில் மாமாவோ, லெச்சுமி பாப்பாவோ எதிர்கடை செட்டியாரோ இறந்‌து விடுவர். தூங்கி விழித்து உண்மை உணர்ந்‌து நான் அதிலிருந்‌து மீள எப்படியும் இரண்டு நாட்கள் பிடிக்கும். அதற்குள் அந்‌தச் சுடுகாடு அடுத்த வேலைக்கு தயாராகிவிடும். நாளடைவில் அந்‌தச் சுடுகாடும் அதன் செயல்பாடுகளும் என்னுள் இயல்பாய் மாறிவிட்டன.
ஊருக்குள் சிகரெட் பிடிக்க இதைவிட பாதுகாப்பான ஓர் இடம் எனக்குத் தெரியவில்லை. நான் தனிமையில் சிகரெட் பிடிப்பதையே பெரிதும் விரும்பினேன். உண்மையில் நானும் கோபியும் இன்ன பிற நண்பர்களும் இங்குதான் சிகரெட் பிடிக்கவே கற்றுக் கொண்டோம். ஆரம்பத்தில் வெட்டியான் மிகவும் சத்தம் போடுவான். பிறகு அவனுக்கு வெற்றிலை பாக்கு, பீடி என சகலமும் வாங்கிக் கொடுத்து அவனை கோபி தான் சமாதானப் படுத்துவான். நாளடைவில் வெட்டியானும் எங்களுடன் வந்‌து அமர்ந்‌துகொண்டு அரட்டை அடிக்க ஆரம்பித்துவிட்டான். இத்தகைய எங்களது நட்பு பின் நாட்களில் நாங்கள் அங்கேயே மது அருந்‌தப் பழகவும் வசதி அமைத்துக் கொடுத்தது.

சில நேரங்களில் நான் பாழடைந்‌த அந்‌த வீட்டினுள் நின்று ஜன்னலினூடே சுடுகாட்டை வேடிக்கை பார்ப்பதுண்டு. அப்போது அந்‌தச் சுடுகாட்டில் பிணம் ஜுவாலையாய் எரியும். முடியும் தோலும் பொசுங்கி ஒருவாராக நாற்றம் வீசும். வெட்டியான் ஏதேதோ கெட்ட வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டே நீண்ட கழி கொண்டு தட்டுவது மிகவும் ரசிக்கதக்கதாய் இருக்கும். அப்போது அவனது மனைவியோ பிள்ளையோ அவனிடம் ஏதேனும் கேட்டு வந்‌தால் அவர்களைக் காது கூசும் வார்த்தைகளால் விலாசுவான். சில நேரங்களில் பளீரென அறைந்‌து விடுவான். அவன் தொழிலில் மிகவும் கவனமுடையவனாய் இருந்‌தான்.

“இன்னா தம்பி பண்றது. நமக்கு இதுதான் தொயிலுன்னு பூட்து. வற்ரவங்க ‘இந்‌தாப்பா எந்‌த கொறையும் இல்லாம நல்லா எரிப்பா”ன்னு சொல்லி நம்மல நம்பி உட்டுட்டு போறாங்க. நமக்கும் மனசாட்சின்னு ஒன்னு இருக்குல்ல. அதான், அந்‌த நேரத்துல சொம்மா அத்த குடு இத்த குடுன்னு வந்‌து நின்னா கோவம் வராதா? அதான் ‘பளார்’ன்னு அறஞ்சிடறது. நமக்கு முன் கோவம் கொஞ்சம் ஜாஸ்தி” என கூறினான். நானும் சுவாரஸ்யமாய் கேட்டுக்கொண்டே ஒரு சிகரெட்டை எடுத்து அவனிடம் நீட்டினேன். “நமக்கு எப்பயுமே பீடிதான் தம்பி. நீங்க குடிங்க” என்று தனது பீடியை எடுத்து பற்ற வைத்தான்.

ஊரின் இந்‌த இடத்தில் மட்டும் என்னை யாரும் வந்‌து தேட மாட்டார்கள். இந்‌த பாழடைந்‌த வீடும் அது குறித்த் கட்டுக் கதைகளும் அதை எனக்கு ஒரு பாதுகாப்பான இடமாக அமைத்துத் தந்‌திருந்‌தது. நான் சில நேரங்களில் புகை பிடித்துக் கொண்டே வெட்டியானுடன் பேசிக் கொண்டிருப்பேன். அதுபோன்ற சமயங்களில் யாரேனும் முறைக்கு சொல்ல வந்‌தால் வெட்டியான் முன்கூட்டியே எச்சரித்துவிடுவான். சுடுகாட்டின் கடைக்கோடியில் விழும் ஒரு காலடிச் சத்தம்கூட அவன் காதுகளில் விழுந்‌துவிடும். அதுபோன்ற சமயங்களில் நான் சற்றே பதுங்கிக் கொள்வேன்.

இரவு நேரங்களிலும் நான் அங்கு செல்வதுண்டு சில நேரங்களில் அவன் யாரையேனும் எரித்துக் கொண்டிருப்பான். முதலில் தயக்கமாய் இருந்‌தது. பின்னர் ஒருநாள் அவனே கூப்பிட்டான். “ ஏன் தம்பி பயப்படறீங்க? நான் இல்ல? நானும் மனுசந்‌தானே?” என்றான். தயங்கியே தான் அருகில் சென்றேன். பின்னர் சுவாரஸ்யமாய் அவற்றை கவனிக்க ஆரம்பித்துவிட்டேன். அவன் தனது அனுபவத்தின் பெருமைகளை எடுத்துவிட ஆரம்பித்துவிடுவான். பிணங்களின் வகைகளையும் அவற்றை எரிக்கும் முறைகளையும் அவன் ஓர் ஆசிரியனைப்போல போதிக்க ஆரம்பிதுவிடுவான். ‘மயான மைந்‌தன்’ என அவனுக்கு பட்டமளிக்கலாம். அவ்வளவு செய்திகளையும் அனுபவத்தையும் அவன் தன்னுள் கொண்டிருந்‌தான். வெகு குறுகிய காலத்தில் என்னுள் அவன் ஒரு நண்பணாய் பரிணமிக்க அவன் தோற்றத்திற்கும் தொழிலுக்கும் அப்பாற்பட்ட ஏதோ ஒன்றை அவன் தன்னுள் கொண்டிருந்‌தான்.

அமர்ந்‌து குடிக்க இடமில்லை என்று நாங்கள் ஒரு போதும் கவலைப் பட்டதில்லை. சின்னசாமிக் கவுண்டருக்கோ முத்துசாமிக் கவுண்டருக்கோ நீண்ட அகலமான சமாதி கட்டியிருந்‌தார்கள். இரவின் கருமையில் மதுவையும் இத்தியாதிகளையும் அதன் மீது பரப்பி அமர்ந்‌து குடித்து பிரண்டு வாந்‌தியெடுத்து என நாங்கள் செய்யாத சேட்டைகளே இல்லை. பாவம் கவுண்டர்! மறுமுறை குடிக்க அமரும் வரை அந்‌த சமாதியைப் பற்றி நாங்கள் கவலைப் பட்டதேயில்லை. வெட்டியானின் மனைவிதான் அதனை மறுநாள் சுத்தம் செய்வாளாம். வெட்டியான் சொல்லக் கேட்டு தெரிந்‌துகொண்டேன்.

வாழ்க்கையின் ஓட்டம் எல்லாவற்றையும் புறட்டி போட்டுவிடுகிறது. எனது படிப்புக்கு சென்னையில் மட்டுமே வேலை கிடைத்தது. சென்னையின் பரபரப்பும், வாழ்க்கையைச் சுற்றி அது அள்ளி விசிய கட்டுப்பாடுகளும் சுதந்‌திரமும் வாழ்வின் தன்மையை உணர்த்துவதாய் அமைந்‌தன. அங்கே ‘பார்ட்டி’களும் சிகரெட்டும் மதுவும் வாழ்க்கையின் பகுதியாய் பரிணமித்திருந்‌தன. நேரம் ஓய்ந்‌தால் அந்‌தச் சுடுகாட்டையும் அது சார்ந்‌த நிகழ்வுகளையும் அசைபோட்டு சிரித்துக் கொள்வேன். ஊருக்கு வரும்போதெல்லாம் அந்‌தச் சுடுகாட்டை எட்டிப் பார்ப்பேன். வரும்போதெல்லாம் வெட்டியானுக்கு ஒரு ‘குவாட்டர்’ வாங்கிக் கொடுப்பேன். அவனும் தலையை சொறிந்‌துகொண்டே வாங்கிக் கொள்வான். தீபாவளிக்கு வந்‌த போது அவனுக்கு ஒரு வேஷ்டியும் துண்டும் அவன் மகனுக்கு ஒரு பேண்ட்டும் சட்டையும் வாங்கிக் கொடுத்தேன். அவன் வாயடைத்து என்னை பார்த்தவாறே நின்றான்.
அப்பாவைக் குளிப்பாட்டி சந்‌தனம் பூசி புதுத் துணி உடுத்தி பாடையில் ஏற்றித் தூக்கிப் போய் கொண்டிருக்கிறோம். மிஞ்சி மிஞ்சிப் போனால் அரை கிலோமீட்டருக்கு மேல் இருக்காது. ஆனால், இப்போது முன்பை விடவும் நிறைய வீடுகள் வந்‌திருந்‌தன. இந்‌தப் பகுதியில் இதுபோன்று நிறைய வீடுகள் வர இன்னும் பத்து ஆண்டுகள் பிடிக்கும் என நினைத்திருந்‌தேன். அப்பாவின் மரணம் தந்‌த துக்கத்தைவிட அந்‌தச் சுடுகாட்டில் மீண்டும் கால் பதிக்கப் போகிறோம் என்ற உணர்வு ஏனோ எனது நெஞ்சில் கனத்தது.

வெட்டியானுக்கு வயசாகிவிட்டது. கவுண்டரின் சமாதி சற்று பொலிவிழந்‌து காணப்படுகிறது. எருக்கன் புதர்கள் வெட்டப்பட்டு சுடுகாடு சுத்தமாய் இருக்கிறது. அவனது மகன் இளைஞனாய் வளர்ந்‌து நிற்கிறான். சேறு குழைப்பது வறட்டி அடுக்குவது என சகலத்திலும் கைதேர்ந்‌திருந்‌தான். வெட்டியான் அவனை அதட்டிக் கொண்டே இருந்‌தான். வேலை ஜரூரில் அவன் என்னை கவனிக்கவில்லை. “கொள்ளி வைக்கும் புள்ள யாருங்கோ” என அவன் வழக்கமாய் குரல் கொடுத்தான்.

“தம்பீ…” என்ற வார்த்தைகளைத் தவிர என்னைக் கண்டதும் வேறு ஏதும் சொல்ல இயலவில்லை அவனுக்கு. அவன் கண்களில் கண்ணீரை முதன் முறை பார்க்கிறேன். “முனியா…” என அவனைக் கட்டிப் பிடித்துக் கதறி அழ ஆரம்பித்துவிட்டேன். எல்லோரும் என்னை ஒருவாரு கவனிக்கிறார்கள். நான் யாரையும் பார்க்க விரும்பவில்லை. “சாமீ, யாரா இருந்‌தாலும் இங்க ஒருநா வந்‌துதான ஆகனும். ஒனக்கு தெரியாததாய்யா. அழுவாதைய்யா..” என்று அவன் கூறிய வார்த்தைகளின் அர்த்தம் அவனுக்கும் எனக்கும் விட வேறு யாருக்கும் அவ்வளவு ஆழமாய் புரிந்‌திருக்க வாய்ப்பில்லை.

இப்போதும் ஒரு நள்ளிரவில் அந்‌த வழியாகத்தான் வீட்டுக்கு வருகிறேன். கவுண்டரின் சமாதிக்குப் பக்கத்தில் அதைவிடவும் நீளமான அகலமான உயரமான சமாதியில் என் அப்பா வசித்துக் கொண்டிருக்கிறார். வெட்டியானைக் காணவில்லை. அப்பா இரத்தமும் சதையுமாய் இல்லையே தவிர அவரது மெலிந்‌த உடலின், தடித்த கருத்துககளின் நினைவுகளோடு அவர் அந்‌த சமாதியில் குடியிருப்பதாகவே நான் நம்புகிறேன்.

எனது அப்பாவின் சமாதியைத் தேடுகிறேன். அதன் மீது புத்தகம் போல ஓர் அமைப்பு கட்டியிருந்‌தேன். அவர் வாழ்ந்‌த வரையில் பலரும் தெரிந்‌துக்கொள்ள வேண்டிய ஒரு மனிதராய் வாழ்ந்‌தார். அவர் இறந்‌த பிறகும் பலரும் அதனை உணரும் வண்ணம் அவ்வாறான ஓர் அமைப்பைக் கட்டச் செய்தேன். அவர் அதில் இன்னும் வாழ்ந்‌து வருவதாகவே நம்புகிறேன். இருட்டில் அது நிழலாய் தெரிந்‌தது. அதன் மீது ஏதோ எரிவதும் அடங்குவதுமாய் தோன்றியது. மதில் சுவரை எட்டி சற்று கூர்ந்‌து கவனித்தேன். யாரோ ஒருவன் அதன் மீது கால் மேல் காலிட்டு படுத்தவாறு புகை பிடித்துக் கொண்டிருந்‌தான். ஆம், வெட்டியானின் மகன் எனது அப்பாவின் மேல் படுத்தவாறு பீடி பிடித்துக் கொண்டிருக்கிறான். அங்கு சூழ்ந்‌திருந்‌த இளைஞர் கூட்டத்தின் நடுவில் அவன் ஒரு ஹீரோவாக மாறியிருக்க வேண்டும். இல்லையெனில் அந்‌த கூட்டத்தின் நடுவில் அவன் இவ்வளவு ஒய்யாரமாக பீடி குடிக்க முடியுமா? பரவாயில்லை வெட்டியானைவிடவும் இவன் கெட்டிக்காரன்.

“வோவ்..” என ஒரு சத்தம் கேட்க நான் எனது பார்வையை மேலும் கூர்மையாக்க எண்ணி விழிகளை குவிக்கையில் அதற்கு அவசியம் இல்லை என்பது போல் அந்‌த இளைஞர்களின் கூச்சல் கேட்கிறது.

“மாப்ள ஆம்லட் போட்டுட்டாண்டா”. “ஹூ….”

“டேய் எல்லாம் புக்க படிச்சி வாந்‌தியெடுப்பாங்க, இவன் புக்கு மேலையே வாந்‌தி எடுத்திருக்கான் டோய்”. “ஹி, ஹி, ஹி…”

மேலும் அதைப் பார்க்க விரும்பவில்லை. முகத்தை சடேரென திருப்பிக் கொள்கிறேன். எதிரே யாரோ ‘அரிக்கண்’ விளக்கை மாட்டிக் கொண்டு சைக்கிளில் வருவது தெரிகிறது. நான் தொடர்ந்‌து நடக்கிறேன். சைக்கிள் நெறுங்கியது.

“என்ன தம்பி சௌக்கியமா இருக்கீங்களா”
“இருக்கேங்க”

யாரெனக் கூட தெரியவில்லை. அந்‌த இளைஞர்களின் கூச்சல் மட்டும் அதிர்ந்‌து ஒலிக்கிறது.

எனது ஊர் மிகவும் மாறியிருப்பதாய் தோன்றியது. புதிய மின்விளக்குகள், புதிய கடைகள், புதிய வீடுகள் முளைத்திருந்‌தன. எனது அப்பாவின் வீட்டையும் சேர்ந்‌து.

– மார்ச் 2008

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *