அப்பாவின் மனசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 28, 2019
பார்வையிட்டோர்: 8,246 
 
 

கதவைத் திறப்பது அப்பாதான் என்று தோன்றியது. அதென்னவோ அந்த நேரத்திற்கு எனக்கும் முழிப்பு வந்து விடுகிறது. திறக்கும் சத்தம் கேட்டுக் கேட்டே அப்படியாகிவிட்டது தினமும். தூங்குபவர்களை எழுப்பி விடும் என்று அப்பாவிற்கும் தெரியும்தான். கூடியானவரை அதிகச் சத்தம் வராமல்தான் திறக்கப் பார்க்கிறார். அதையும் மீறித்தான் அந்தக் “க்றீச்“. ஒரு நாள் எண்ணெய் கூடப் போட்டார். ரெண்டு நாளைக்கு தாழ்ப்பாள் மிகக் குறைவான ஒலியோடு திறந்தது. பிறகு பழையபடி ஆகிவிட்டது. கதவை இடது கையால் அமுக்கிக் கொண்டு வலது கையால் தாழ்ப்பாளை நெகிழ்த்தி, கீழ் நோக்கி அழுத்தமாய் இழுத்து மிகக் கவனமாய்த்தான் திறக்கிறார். அப்படியும் ஒரு சத்தம் அதற்கென்று பதிவாகிப் போகிறது. லேசாய்த் திரும்பியும் பார்த்துக் கொள்கிறார். யாரும் எழவில்லையே என்று…! பிறகு கிரில் கேட்டின் பூட்டைத் திறப்பது கூட மிகச் சன்னமாகத்தான். அத்தனை நாசூக்காக யாரும் செய்ய மாட்டார்கள்தான். இரண்டாம் தளத்தின் எதிரேயுள்ள பிற மூன்று வீடுகளிலும் யாருக்கும் தொந்தரவு வந்து விடக் கூடாது, தூக்கத்திற்கு இடையூறு ஏற்பட்டு விடக் கூடாது. யாரு கதவத் திறக்கிறது…திருடனோ…என்று அலெர்ட் ஆகி விடுகிறார்கள் சமயங்களில். நாந்தான்…நாந்தான்…. ஓ! அங்கிளா….? குட் மார்னிங் அங்கிள்…

எந்தவொன்றிலும் மிகவும் கவனமாயிருப்பவர் அப்பா. கூடியானவரை தன் வேலைகளை, கூடியானவரை என்ன, முழுதுமே அவரேதான் செய்து கொள்கிறார். ஊரில் சொந்த வீட்டில் சுதந்திரமாய் எப்படியிருந்தாரோ அப்படியேதான் இங்கும். இதுவும் சொந்த வீடுதான் என்றாலும்…

ம்உறீம்…உன் பேருக்குன்னா வாங்கியிருக்கு…என்கிறார். அப்பாவின் முகத்தில் அத்தனை பெருமை…

நீங்கதானேப்பா என் பெயரைப் பதிவு பண்ணினீங்க… பணம் போட்டீங்க…அப்போ இதுவும் உங்க வீடுதானே….என்றால் இல்லை…இல்லை….என்று மறுத்து விடுகிறார். தானே வாங்கிக் கொடுத்திருந்தாலும், தன் பையன் ரவீந்திரனின் வீடு என்று மற்றவர்கள் சொல்ல வேண்டும், அதில் அந்த ரகசியம் புதைந்து காணாமல் போக வேண்டும்…! எனக்குத் தெரிய வேறு யாரும் இப்படிச் செய்திருப்பதாக நான் கேள்விப் படவில்லை. சம்பாதிக்கும் பையனுக்கு, அவன் பெயருக்கு ஒரு சொந்த வீடு என்று வாங்கிக் கொடுத்தது அப்பாவாகத்தான் இருக்கும்.

அம்மாவும் எப்பொழுதடா ரிடையர்ட் ஆவாள் என்று காத்திருந்ததுபோல் கிளம்பி வந்து விட்டார்களே…! பொறுப்பாய்ச் சிந்தித்தால்தான் பொறுப்பான செயல்கள் நிறைவேற்ற முடியும் போலிருக்கிறது. வயதிற்கேற்றாற்போல் சிந்திக்க அப்பாவால் மட்டும்தான் முடியும். நல்லது சொன்னால் சரி என்று தலையாட்ட வேண்டியதுதானே…! அம்மாவுக்கும் ஓ.கே…! இந்த மனுஷனோட கழிக்கிறதுக்கு…பையனோட இருந்தா திருப்தி…என்று நினைத்திருக்கலாம். அப்பா ஊரிலேயே தங்கி விடுவார் என்று எதிர்பார்த்திருந்தாளோ என்னவோ…? வயசான காலத்தில் ஒருவருக்கொருவர் துணைதானே சரி..? அவரை மட்டும் ஒத்தையில் விட்டுவிட முடியுமா? சொல்லப் போனால் அம்மாவை விட அப்பாதான் என் மனதில் ஆழமாய் ஊன்றியவர். தன் எளிமையால் கவர்ந்தவர். அவரைப் பொறுத்தவரை ஒரு நாற்காலி கூட அதிகம்தான். தரையில் உட்காரலாமே என்பார். அதுதான் அவரின் மகோன்னதமான அழகு.

எத்தனை நாளைக்குத்தான் சார் வெளிலயே சாப்டிட்டுச் சீரழிவான்…பத்து வருஷத்துக்கும் மேலாயிருச்சு சார்…ரூம்லதான் கெடக்கான்…வெறும் பத்துக்குப் பத்து கூட இல்ல..அம்புட்டு சிறிசு…அதுல நாலு பேரு இருக்கானுங்க…வரிசையாப் படுத்தா,இடிக்காம திரும்பிப் புரளக்கூட முடியாது….இந்தப் பக்கம் செவுரு, அந்தப் பக்கம் செவுருன்னு காலும் கையும் முட்டிக்கும்….காலடில தண்ணிக் கேனை வேறே கவுத்து வச்சிருக்கானுங்க…நா ஒரு வாட்டி போயிருந்தப்போ…அதத் தூக்கி வாசல்ல கெடாசுங்கடான்னு சொல்லிப் பார்த்தேன். வர்றவன் போறவன்லாம் குடிச்சித் தீர்த்துக் காலி பண்ணிட்டுப் போயிடுவான்கிறாங்க பசங்க…அதுவும் சரிதான்…வத வதன்னு ஃப்ரென்ட்ஸ் வந்த மணியமாத்தான இருக்கு…அந்தக் கூட்டத்துல நாம பொருத்தமில்லாம நடுவுல மாட்டிட்ட மாதிரி….ஒரு தனி ரூம் பார்த்திட்டா என்ன இவனுக்குங்கிற அளவுக்கு யோசனை….!

அந்தக் கேனுக்கு முப்பத்தஞ்சு ரூபாயாம்…மாடிக்குத் தூக்கிட்டு வந்து கொடுக்கிறதால அஞ்சு ரூபா கூடவாம்… எல்லாத்துக்கும் ஒரு ஐ.எஸ்.ஐ முத்திரை. அவிங்களே அடிச்சு வச்சிருக்காங்க போல… உண்மைலயே சுத்தத்துக்கு செக்கிங்கா நடக்குது? …வட்ட வட்டமா கம்பெனிபேர் போட்ட பேப்பர ஒட்டினா ஆச்சு…எவன் கேட்குறான்…? தண்ணில ஒரே சிக்கு வாடை…என்னதான் சுத்தம் பண்ணுவானுங்களோ…? எந்தக் கெமிக்கலக் கலக்குவானுங்களோ?

நீங்க நம்புனா நம்புங்க…நம்பாட்டிப் போங்க…என் ரெண்டு கண்ணால பார்த்தது இது… ….ரூம் மாடில நின்னு….சென்னை மெட்ரோன்னு வந்து நிக்கிற லாரி, தெருவுல பதிச்சிருக்கிற கார்ப்பரேஷன் சின்டெக்ஸ் தொட்டில நிறைச்சிட்டுப் போறாங்க…வாரத்துக்கு ரெண்டு நாள்….அது அப்டி நகர, அடுத்த நிமிஷம் எங்கிருந்துதான் வருவானுங்களோ…கேன் கேனா…வந்து நிறைச்சிட்டுப் போயிடுறானுங்க….அந்தத் தண்ணியத்தான் அப்டியே கொண்டு வந்து வீட்டுக்கு டெலிவரி பண்ணுறாங்களோன்னு ஒரு சந்தேகம்…எவன் சுத்தம் பண்றான்…யாரு கண்டது? அந்தப் ப்ளாஸ்டிக் கேனக் கழுவி மாமாங்கம் இருக்கும் போல… …. முப்பத்தஞ்சு ரூவாக்கி விக்கிறான்..என்ன அநியாயம்? ….ஊரான் வீட்டு நெய்யே… எம்பொண்டாட்டி கையேன்னு… கொள்ள லாபம் பாருங்க… யாரு கேட்குறது? மெட்ராசுல தடுக்கி விழுந்தா வாட்டர் பிளான்ட்…ரகசியமா எத்தனையோ….! எதையும் வாய்விட்டுச் சொல்றதுக்கில்ல….! பகிரங்கமாச் செய்றானுங்க…

காலடில கவுத்தி வச்சிருக்கிற தண்ணிக் கேனை…தூக்கக் கலக்கத்துல ஒரு உதை உதைச்சாப் போச்சு…நேரா பெல்லிலதான் விழும். நசுங்கிச் சாக வேண்டிதான்….இல்லன்னா வேறே கதையாகிப் போகும்…நாளைப் பின்ன கல்யாணமாகி, குழந்த குட்டிகளோட இருக்க வேண்டிய பசங்கல்ல….நாலு பேரும் நமக்கு ஒண்ணுதானே…வித்தியாசமா உண்டு…அவனவன் அப்பன் ஆத்தா பெத்து வளர்த்து, படிக்க வச்சு பட்டணத்துக்கு அனுப்பப் போக இவனுங்க…நகரத்துக்கு வந்து இப்டிக் கெடந்து சீரழியுறானுங்க….அநாதைக மாதிரி….

இன்னும் அநியாயத்தக் கேளுங்க…அந்தக் குச்சிலுக்கு ஒராளுக்கு ரெண்டாயிரத்து ஐநூறாம் வாடகை….மொத்தம் பத்தாயிரம்…ஒரு ரூமுக்கு ஆறு பேராம்…சொல்றான் அந்த ஓனரு…நாலே இடிச்சிட்டிருக்கு….முதுகுக்கு முதுகு ஒரசிட்டுத்தான் படுக்கணும்….எலெக்ட்ரிசிட்டி தனி…!!!கொடுத்திட்டுத்தான கெடக்காங்க…மொட்ட மாடில வரிசையா இப்டி ஆறு ரூம் கட்டிருக்கான்யா அந்தாளு….என்னா சில்ரை…? பெருமழ பெஞ்சா தண்ணி ரூமுக்குள்ள இறங்கிடும்…அந்தக் குச்சிலுக்குள்ளயே ஓரமா கக்கூசு…பாத்ரூமு….ஒண்ணாக் கெடக்கு… தலவிதியப் பாருங்க இந்தப் பசங்களுக்கு…? ஊர்ல அப்பாம்மா பராமரிப்புல ஜம்முன்னு இருந்திருப்பானுங்க…இங்க வந்து இந்தச் சீரழிவு? எள வயசுன்னால ஜாலியாத் திரியிறானுங்க…

விரிச்ச படுக்கைய எவனும் மடக்குறதேயில்ல…அதும் மேலயே மிதிச்சு நடக்க, அதுலயே படுக்க… ஒரே தூசி துப்பட்ட…மாசத்துக்கு ஒரு வாட்டி பெருக்கினா பெருசு…பார்பர் ஷாப் மாதிரி…அங்க கூடப் பரவால்லன்னலாம்…ஒராள் முடிஞ்சவுடனே கூட்டி ஒதுக்கிடுறாங்களே…அந்தச் சோலியே இல்லையே இங்க? எங்க பார்த்தாலும் முடியும், அழுக்கும், பிசுக்கும்… நாத்தமும்….சேரி கெட்டுது போங்க… இருந்த நாளைக்கெல்லாம் நானும் வித்தியாசம் பார்க்காமக் கூட்டிப் பெருக்கி அள்ளிப் போடத்தான் செய்தேன்… அங்கிள்…சூப்பர் அங்கிள்…தாங்க்ஸ் அங்கிள்…!!! கை கொடுத்து குஷால் பண்றானுங்க…எல்லாம் நம்ம பிள்ளைங்கதான…இருக்கிற எடத்த சுத்தமா வச்சிக்குங்கப்பா…வியாதி வெக்க வராம…ஒரு வேள நம்ம பையனோட இந்தச் சீரழிவப் பார்த்துத்தான் எனக்கு திடீர்னு இப்டி ஐடியா மண்டைல உதிச்சிச்சோ என்னவோன்னு இன்னைக்குக்கூட நான் நினைக்கிறதுண்டு….அங்கேயிருந்து அவன மீட்கணும்ங்கிற வெறி….!

அவனா சம்பாதிச்சு, சேமிச்சு வாங்கணும் சார்…அதுக்குள்ளே நீங்க ஏன் வாங்கிக் கொடுத்தீங்க…? அவன் பேர்ல ஏன் ரிஜிஸ்டர் பண்ணினீங்க…?ஸ்ரீதர் தியாகராஜன்னு போட்டு உங்க பேர்ல பண்ண வேண்டிதான? அப்புறம் அவனுக்கு அந்த ஊக்கமே இல்லாமப் போயிடும் சார்…என்றுதான் பலரும் சொன்னார்கள். அவர்களின் பேச்சு அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. தான் இஷ்டப்பட்டு முடிவு செய்து வாங்கியது அவனுக்கல்லாமல் வேறு யாருக்கு? அதை உயிரோடு இருக்கும்போதே கொடுத்து மகிழ்வதில்தானே திருப்தி. மண்டையப் போட்ட பிறகு எவன் வந்து செய்து யார் பார்க்க?

அதனாலென்ன…இன்னொரு வீடு வாங்கிட்டுப் போறான்…இப்பத்தானே வேலைக்குப் போயிருக்கான்…உடனே வாங்குன்னா எப்டி முடியும்? இதுக்குன்னு லோன் போட்டு கடனாளியாக முடியுமா? வாழ்க்கையோட துவக்கத்தையே கடன்லயா ஆரம்பிக்கிறது? கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடிதான் பார்த்தோம்ல…எவ்வளவு பேருக்கு வேலை போச்சு? வீடு வாங்கினவன், காரு வச்சிருந்தவன்னு எத்தனை பேரு…வித்துப்புட்டு ஓடினாங்க..? கடனை அடைச்சாப் போதும்னு நடுத்தெருவுக்கு வரல்லியா? இப்பத்தான எல்லாமும் ஒரு நிதானத்துக்கு வந்திருக்கு…! அளந்து சம்பளம் கொடுக்கணும்னு அவனும்…அளவா வேலை செய்யணும்னு இவனுங்களும் தெளிஞ்சிருக்காங்க……ஒருத்தருக்கொருத்தன் பேசிக்காமலேயே, சொல்லிக்காமலேயே கள்ளத்தனமாப் புரிஞ்சிக்கிட்டிருக்கான்கள்…அதத்தான் நிர்வாகம்ங்கிறான் அவன்…அப்டியா சேதிங்கிறான் இவன்…! கூலித் தொழிலாளி மாதிரி எல்லாமே கான்ட்ராக்ட்தான…வேறென்ன கிழியுது இங்க…! எங்கள மாதிரி அம்பத்தெட்டு, அறுபதுன்னு கழிஞ்சு பென்ஷனா உண்டு? நாப்பது, நாப்பதஞ்சுக்குள்ள புத்திசாலித்தனமா சேர்த்து வச்சிக்கிட்டா உண்டு….அளவா ரெண்டு கொழந்தைகளோட, இல்லாட்டி ஒண்ணு போதும்னு இருக்கணும்…அப்பத்தான் அதுக்குக் கல்யாணம் காட்சி பண்ணி, வயசான காலத்துல வைத்தியச் செலவுக்குன்னு கொஞ்சம் வச்சிக்கிட்டு, எப்போ என்ன வியாதி வரும்னு காத்திருக்கலாம்…

எவன் இதெல்லாம் புரிஞ்சு நடக்குறான்? எல்லாப் பயலுவளும் விட்டேத்தியாத்தான் திரியுறான்…ஒரு சினிமாவுக்குப் போனா ஐநூறு ரூபா இல்லாம ஒருத்தன் உள்ளாற காலடி வைக்க முடியாது…எங்கயாச்சும் திங்க உட்கார்ந்தா ஆயிரத்து சொச்சம், ரெண்டாயிரம்னு பிடுங்கிப் புடறான்…என்னென்னவோ பேரச் சொல்லிட்டுக் கொண்டாந்து வைக்கிறான். அது வெந்தும் வேகாமயும் ஆவி பறக்க…கலர் கலரா வந்து நிக்குதா…? தின்னு வைக்கிறானுங்க…பெறவு வயித்தப் புடிச்சிட்டு அலையுறானுங்க…நம்ம நாட்டு உணவாவே தெரில எதுவும்..அந்தப் பேருகளும் மனசுல நிக்க மாட்டேங்குது…என்ன சாப்டோம்னு வெளில வந்து கேட்டா சொல்லத் தெரியாத அளவுல இருக்கு….காலம் மாறட்டும் ஏத்துக்கலாம்…கன்னா பின்னான்னு தறிகெட்டுப் போனா….? இன்னும் அப்பாவுக்கு எதுவும் பிடித்து வரவில்லைதான். ஒரு நாளைக்குச் சொன்னார்…

நகரமே தலைய விரிச்சுப் போட்டுட்டு ஆடுற மாதிரி இருக்குப்பா எனக்கு….

இங்கு வந்த பிறகு அப்பா தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்ட பழக்கம் பல.

அவரிஷ்டத்திற்கு விட்டுவிட வேண்டியதுதான். ஒன்றும் சொல்வதற்கில்லை. நாலு நாலரைக்கெல்லாம் கண் விழித்து விடுகிறார். புரண்டு கொண்டே கிடந்து அஞ்சு போல் எழுந்து காலைக்கடன்களைத் துவக்குகிறார். அவருக்கு அவர் கையாலே காப்பி போட்டுக் குடித்தால்தான் திருப்தி. ஊருக்கு முந்தி எழுந்து கொண்டு கார்….பூர்ர்ர்… என்று பல் தேய்த்து வாய் கொப்பளிக்கும் சத்தம் அந்தப் பிராந்தியத்தையே கலக்கத்தான் செய்கிறது. அதுவும் மாடி வீடா…வலது பக்கம் பட்டாசாலைப் பெரிய ஜன்னல் வழி கிறீச்சிடுகிறது பிளிறல். அநேகமாக எல்லாருக்கும் பழகித்தான் போயிருக்கும். ஒரு வசதி…மணி காலை அஞ்சாகி விட்டது…

கதவுக்கு அடுத்த கிரில்லைத் திறந்து கொண்டு வெளியேறி, சாவியை மீண்டும் மெல்ல நுழைத்து அப்பா கதவைப் பூட்டிக் கொண்டிருந்தார். ஐந்தரை போல் விடிகின்ற பொழுதில் கீழே கார் பார்க்கிங் போய், எரியும் விளக்குகளையெல்லாம் அணைத்து விடுவார். எதுக்கு வெட்டியா? யாரு காசு கொடுக்கிறது? யாருமே கண்டுக்கிறதில்லை….விட்டா ஏழு, ஏழரை வரைக்கும் பக பகன்னு எரிஞ்சிட்டிருக்கு…பல சமயங்கள்ல தெரு லைட்டே அணைக்க மாட்டேங்குறான்…? எலெக்ட்ரிசிட்டி விரயம்? நான் அணைக்கிறது அத்தனை பேருக்கும் நல்லதுதானே…இதிலெல்லாம் பிரெஸ்டீஜ் பார்த்தா நடக்காது…இருக்கிற எடத்துக்குத் தகுந்த மாதிரி நம்மள மாத்திக்கணும்…நான் ஏன் செய்யணும்…எட்டு வீடு இருக்குதானே…யாராச்சும் செய்யட்டும்னும் நினைக்கக் கூடாது….நல்லது செய்யணும்னா நாமதான் முந்தணும்…அது பேசப்படணும்…மதிக்கப்படணும்னும் நினைக்கக் கூடாது…ஏன்னா இம்மாதிரி விஷயங்கள் ஆத்ம திருப்திக்காகச் செய்யுறது…அதுக்கு ஒரு தனி மைன்ட் செட் வேணும்…

சொல்வது நன்றாகத்தான் இருக்கிறது கேட்க. அது சமயங்களில் அளவு மிஞ்சிப் போகும்போது சங்கடத்தை…ஏன் எரிச்சலையே உண்டு பண்ணும். கௌரவம் பார்க்க வேண்டாம்தான்… அதுக்குன்னு செய்ற வேலைகளுக்கு ஒரு அளவு இல்லையா? எதை எதைக் கையில எடுக்கணும்…எதை எதைத் தொடக் கூடாதுன்னு ஒரு விவஸ்தை வேண்டாம்? அது அப்பாவுக்குத் தெரிவதில்லை.

அப்பா….யப்பா….இதெல்லாம் ரொம்ப ஓவர்னு உங்களுக்குத் தோணலையா…? ஏம்ப்பா மானத்த வாங்குறீங்க…? இப்டியானதைச் செய்யறதுக்குத்தான் ஆள் போட்டிருக்கே…அப்புறம் ஏன் நீங்க கையில தூக்கிட்டு அலையுறீங்க…?

அவ என்னைக்கு வர்றது….என்னைக்கு சுத்தம் பண்றது…? வர்ற…போற ஆட்கள் பார்த்தா அசிங்கமா நினைக்க மாட்டாங்க…? அதான் சரி இருக்கட்டும்னு நான் செய்திட்டிருக்கேன்…. – சொல்லிக் கொண்டே கார் பார்க்கிங் சுவர்களின் உத்திரங்களில் தொங்கிக் கொண்டிருந்த ஒட்டடைகளைக் கவனமாய் நீக்கிக் கொண்டிருந்தார் அப்பா. அவர் அப்படித்தான் என்று அடுக்ககத்தில் உள்ள எல்லோருக்கும் தெரியும்தான். அவர்கள் பாட்டுக்குத் தான் உண்டு தங்கள் வேலையுண்டு என்று போய்க் கொண்டிருந்தார்கள். சொன்னால் கேட்கப் போவதில்லை என்பது எங்களை விட அவர்களுக்கு நன்றாய்த் தெரிந்திருந்தது. பெரியவர் மேல் உள்ள மரியாதையாகவும் இருக்கலாம். அல்லது இந்தாள் இப்டித்தான் என்றும் விட்டிருக்கலாம்…

அடுக்ககத்திற்கு என்று மோட்டார் போட, சுத்தம் செய்ய, மெழுக என்று ஒரு வேலையாள் போட்டிருந்ததுதான். அந்த அம்மாள் மதியம் ரெண்டு மணி போல் வந்தது. நாலைந்து வீடுகளில் வேலை பார்க்கும் அதற்கு இங்கு குறித்திருந்த நேரம் அதுதான். வந்ததும் மோட்டார் சுவிட்சைத் தட்டி விட்டு, மேலே வீட்டு வேலைக்குப் புகுந்து விடும் அது. சம்ப்பில் தண்ணீர் இருக்கிறதா என்று பார்க்க வேண்டாமா? பார்த்துத்தானே மோட்டார் போட வேண்டும்? தண்ணீர் இல்லையென்றால் லாரிக்குச் சொல்ல வேண்டும். வெறும் மோட்டார் ஓடினால் ஏர் லாக் ஆகாதா? இதை எத்தனையோ முறை சொல்லியாயிற்று. அது கேட்பதாயில்லையோ அல்லது மறந்து விடுகிறதோ…ரெண்டு மூன்று முறை மோட்டார் ரிப்பேர் ஆகி, தண்டம் அழுது….அதை அந்த அம்மாள் சம்பளத்திலா பிடிக்க முடியும்? தொலையுது என்று கொடுத்துத் தொலைக்கத்தான் வேண்டியிருக்கிறது. வேலைக்கு வராத நாட்களுக்கு சம்பளமா பிடிக்கிறார்கள். அந்தப் பிராந்தியம் முழுதும் விசாரித்துப் பார்த்தாயிற்று.

அப்டியெல்லாம் செஞ்சா ஒராள் வராது இந்தப் பக்கம்…..

இன்று லேபர் வேலைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்குத்தான் மதிப்பு அதிகம். அவர்கள் சொன்ன கூலிதான். வைத்த ரேட்டுதான். ஒரு எலெக்ட்ரீஷியன் வந்து ஒரு ப்ளக்கைத் தொட்டான் என்றால் அம்பது ரூபாய் பழுத்தது. அப்படி எத்தனை ப்ளக் பாயின்டுகள் சரி பண்ணுகிறானோ அத்தனை ஐம்பது….சில்லரை வேலைக்கெல்லாம் யாரையும் கூப்பிட முடிவதில்லை. ஆளும் வருவதில்லை. மத்தியானம் வர்றேன்…சாயங்காலம் வர்றேன் என்று தாக்காட்டி விடுகிறார்கள். வேலை என்று அழைத்தால் நாள் கூலிதான். அது சிறிசோ, பெரிய வேலையோ….!

அப்பா என்ன நினைத்தாரோ….காலையில் கீழே இறங்கி வரும்போது, வந்த கையோடு மோட்டாரையும் தட்டி விட்டார். தட்டும் முன் படு ஜாக்கிரதையாய்த் தரையில் மண்டி போட்டு அந்த கனமான சச்சதுர சம்ப் மூடியை ரெட்டை விரலால் தூக்கி விலக்கி வைத்து (விரலால் தூக்குவதில் அத்தனை பெருமை, தன் பலத்தைச் சோதிக்கிறாராம்) உள்ளே தலையை விட்டுத் தண்ணீர் எவ்வளவு உயரத்திற்கு மீதமிருக்கிறது என்று கணக்கிட்டு விட்டுத்தான் சுவிட்சைத் தட்டினார். போதாது என்று குடு குடுவென்று மாடிக்கு ஓடினார்.

எதுக்குப்பா இப்டிச் செய்றீங்க…? என்றால், சுவிட்சைப் போட்டோம், சரி…தண்ணி இருக்கான்னும் பார்த்துட்டோம்….தண்ணி ஏறுதான்னு பார்க்க வேண்டாமா? மாடிக்குப் போயி பைப் லைன்ல காதை வச்சித்தான் பார்க்கணும்…சமயங்கள்ல அதைத் துல்லியமா உணர முடியாது. மேலே தொட்டிக்கு ஏறித்தான் பார்க்கணும்…ஏர் லாக் ஆகி வெறும் மோட்டார் ஓடித்துன்னா…காயல்ல எறிஞ்சு போகும்? .

தேவையில்லாம மெனக்கெடுறீங்கப்பா…. –என்றபோது சொன்னார்.

எனக்குப் பிடிச்சிருக்கு…செய்றேன்…விட்றேன்…..

தலையில் கையை வைத்துக் கொண்டுதான் உட்கார வேண்டியிருக்கும். இந்த வயசில் இந்த மனுஷன் இந்த ஓட்டம் ஓடுகிறாரே என்றிருக்கும். எங்கேயாவது இடங்கேடாய்த் தடுக்கிக் கொண்டு கீழே விழுந்து காலைக் கையை ஒடித்துக் கொண்டு விடுவாரோ என்று பயமாய் வேறு இருக்கும். சொன்னாலும் கேட்க மாட்டார். எப்படித் தடுப்பது இதை? அம்மா நினைத்ததுபோல் அப்பா ஊரிலேயே இருந்திருக்கலாமோ என்று கூடத் தோன்றியிருக்கிறது எனக்கு. அப்படியிருந்தாலும் அதுவும் கவலைதான். எப்படியிருக்காரோ, ஏதாயிருக்காரோ என்று அம்மா நாள்தோறும் கவலை கொள்ளத்தான் செய்வாள். அவளோடு சேர்ந்து நாமும் கன்னத்தில் கை வைத்து துக்கம் கொண்டாட வேண்டியிருக்கும்.

எப்படித் தடுப்பது இவற்றையெல்லாம். அப்பாவை யாரும் எதற்காகவும் தடுத்து நிறுத்தி விட முடியாது. அவர் செய்வதைச் செய்து கொண்டேதான் இருப்பார். மொட்டை மாடியில் உயரமாய்ச் சுவர் எழுப்பி, அதற்கு மேலே சம்ப் போடப்பட்டிருந்தது. அதைப் படு கனமான இரும்பு மூடியால் மூடி வைத்திருந்தது. கடந்த 2015 புயலின்போது அந்த இரும்பு மூடியே காற்றில் பட்டம் போல் பறந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நல்லவேளை ரோட்டில் போய் விழாமல் மொட்டை மாடியிலேயே விழுந்து பைப் லைன்களை வசமாய்ப் பதம் பார்த்து, அத்தோடு தன் உக்கிரத்தை முடித்துக் கொண்டது. எதிர்பாராச் செலவினம். கன்டின்ஜென்ஸீஸ்…..

அந்த உயரச் சுவரின் மேல் ஏறி மூடியைத் திறந்து தண்ணீர் எவ்வளவு நிறைந்திருக்கிறது என்று பார்த்தால்தான் அப்பாவுக்குத் திருப்தி. பக்கத்திலேயே ஃப்ளஷ் அவுட்டிற்கான தண்ணீர்த் தொட்டி. இது அரை மணி ஓடினால், அது ஒரு மணி நேரம் ஓடியாக வேண்டும். அதையும் போட்டுவிட்டு அந்த நேரம் முடிவதற்காகவும் அப்பா காத்துக் கொண்டிருப்பார். தொட்டி நிறைந்தால்தான் அவர் மனசு நிறையும்.

அம்மா…! அப்பா செய்ற வேலையைப் பார்த்தா…பேசாம அந்தம்மாவ வேலையை விட்டு நிறுத்திப்புட்டு, உங்கப்பாவுக்கு அந்தச் சம்பளத்தக் கொடுத்திடலாம் போல்ருக்கு…இந்த அப்பார்ட்மென்டுக்காக நம்மப்பா படுற பாடு இருக்கே…அடா…அடா…அடா….!!சொல்லி மாளாது….. – நானும் எவ்வளவோ புலம்பித் தள்ளித்தான் விட்டேன். அம்மா சொல்வதாயும் இல்லை…அப்பா கேட்பதாயும் இல்லை…..அது பொம்பள…மாடிலெல்லாம் ஏறிப் பார்க்க முடியுமா? விடு கழுதயா…நாந்தான் இருக்கனே….

அப்பா கீழே போயாச்சு என்று தெரிந்தது. ஊருக்கு முன்னால் போய் லைட்டுகளை அணைத்தால்தான் அவருக்குத் திருப்தி. எங்கள் அபார்ட்மென்டில் எட்டு வீடு போகத் தனியாய் ஒரு வீடு துருத்திக் கொண்டிருக்கும். ப்ளாட்டின் அமைப்பு அப்படி. அது மட்டும் தனி வீடு. அந்த வீட்டில் குடியிருக்கும் பையன் அவன் பகுதி லைட்டைப் போட்டு வைத்திருப்பான். அதையும் போய் அணைத்து விட்டு வருவார் அப்பா. யார் அணைத்தது என்று அவன் இன்றுவரை கேட்டதில்லை.

அவனுக்குத் தனி கரன்ட்ன்னாலும் அதுவும் வீணாத்தானே எரியும்…அணைச்சா நல்லதுதானே…! போகட்டும்….எலெக்ட்ரிசிடி மிச்சமாகும்….நம்ம பையனாட்டும் அவன்…சின்ன வயசுலயே கல்யாணம் ஆயிடுச்சி போல்ருக்கு…துணைக்கு யாரும் பெரியவங்க இல்ல போல் தெரியுது….நாமதான் செய்வோமே…என்ன குறைஞ்சு போறது…?

அன்று நெடு நேரம் ஆகியும் அப்பா மேலே வரவில்லை.லேசான மழைத் தூறல். நிற்கட்டும் என்று காத்திருக்கலாம். சமயங்களில் கார் பார்க்கிங்கிலேயே நடை பழகுவார். ஆரம்பத்தில் செய்து கொண்டிருந்தார். இப்போது முடிவதில்லை. இப்பொழுதுதான் வீட்டுக்கு வீடு கார் வைத்திருக்கிறார்களே…! பார்க்கிங் ஏரியா கம்பெனி ஷோரூம் போலிருந்தது. வழக்கமாய் மோட்டார் ஸ்விட்சைப் போட்டுவிட்டு அந்த வீதி நெடுக ஒரு நடை நடந்து விட்டு வருவார் அப்பா. அங்கொரு அபார்ட்மெனை்டுக்கு “லயம்“ ன்னு பேர் வச்சிருக்காங்க பார்த்தியா? ரசனையான மனிதர் அப்பா. வாக்கிங் முடித்து வந்து அணைப்பார். அதுதான் கணக்கு. வரும்போது ஞாபகமாய் அந்தக் கடையில் பிஸ்கட் பாக்கெட்களை வாங்கி வருவார். வீடு நெருங்க நெருங்க…“அவைகள்“…அவரைப் பின் தொடரும்….எட்டு, ஒன்பது, பத்து என்று தெருக்கள் வர வர…அங்கங்கே இருப்பவை பின்னால் சேர்ந்து கொள்ளும். ஒரு குறிப்பிட்ட நான்கு வீதி கூடும் இடத்தில் ஓரமாய் நின்று அப்பா அவைகளுக்கு அந்த பிஸ்கட்டுகளை எடுத்து வீசுவார். நிற்பவைகளுக்கு ஏற்றாற்போல் சரி சமமாய்த்தான் பிரித்துக் கொடுப்பார்…..அவைகளோடு உரையாடவும் செய்வார்…

உனக்குத்தான் மூணு கொடுத்துட்டேன்ல…போ…ஒதுங்கு….நீ வாடா…ராஜா…..

சண்டை போடக் கூடாது….சத்தம் வரக் கூடாது…அமைதியா வாங்கிக்கணும்…தெரிஞ்சிதா….?

அடடா…என்ன ஒரு அந்நியோன்யம்…? ஒரு தெருவின் எல்கைக்குள் இன்னொன்றை நுழைய விடாத அவைகளுக்குள் எப்படி இப்படி ஒரு ஒற்றுமை? அது அப்பா நிகழ்த்திய அதிசயம்…! அன்பென்று கொட்டு முரசே….!

கடைசியாகத் தனக்கென்று ஒரு பிஸ்கட்டை விண்டு வாயில் போட்டுக் கொண்டே வந்து கொண்டிருந்தார் அப்பா.

அநேகமாக அடுக்ககத்தின் அனைத்து வீடுகளிலும் நிச்சயம் ஒரு ஜோடிக் கண்கள் அவரை நோக்கி விரிந்திருக்கும்தான்.

காலிங் பெல் அடிக்கும் சத்தம். அப்பாவாய்த்தான் இருக்கும். போய்த் திறந்தேன்.

செப்டிக் டாங்க் ஓவர் ஃப்ளோ ஆகுற மாதிரித் தெரியுது…வாடையடிக்குது…நிரம்பிடுச்சு போல்ருக்கு….உடனே ஃபோன் பண்ணி கழிவு லாரிய வரப் பண்ணனும் ….என்றவாறே தன் டைரியை எடுத்துப் பர பரப்பாய்ப் புரட்ட ஆரம்பித்தார் அப்பா…..! நாங்கள் அவரையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தோம்…!

Print Friendly, PDF & Email
தன் குறிப்பு இயற்பெயர்: கி.வெங்கட்ரமணி தகப்பனார் பெயர்:ஆ.ப.கிருஷ்ணய்யர் பிறந்த தேதி: 10.12.1951 கல்வித் தகுதி: பி.யு.சி. பிறந்த ஊர்: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பணி: தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறையில் அலுவலகக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து பின்னர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவிக் கணக்கு அலுவலகராகப் பணி புரிந்து ஓய்வு. புனை பெயருக்கான காரணம் திரு. நா. பார்த்தசாரதி, அவர்களின் தீபம் இலக்கிய இதழின் மீதான வாசிப்பு அனுபவத்தில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *