வாசலில் படுத்திருந்த நாய் திடுமென எழுந்தது. ஒரு பார்வை பார்த்தது. “சரிதான் தொலைந்தோம்” என அவன் நினைக்கையில் வாலை ஆட்டிக்கொண்டு ஓடிவந்தது. தலையைப் பதித்து அவனது காலை நக்கியது. அதன் தலையில் தட்டிக்கொடுத்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான்.
படிக்கட்டு காலில் தடுக்கியது. குனிந்து காலைத் தடவிக்கொண்டு விறாந்தையிலேறி நடந்தான். மனசில் தயக்கம். வரவேற்பு எப்படியிருக்குமோ… ஒருவேளை அப்பாவைக் காண நேர்ந்தால் விளைவுகள் எப்படியிருக்குமோ?
எப்படியிருந்தாலென்ன? அப்பாச்சியைப் பார்க்கத்தானே வருகிறான். அப்பாவுக்குத் தாயென்றாலும் அவனுக்குப் பேத்தி. பேத்தியிடம் பேரனுக்கு இல்லாத உரிமையா? நடந்தான்.
முற்றத்து மரத்தில் காகமொன்று கொப்பு மாறி இருந்து கரைந்தது. அவனை முதலில் கண்டது மாமிதான்.
‘விடியக் காலமையிலிருந்தே… காகமொன்று ஓயாமல் கத்திக்கொண்டிருக்கு! ஆரோ வராதவையள் வரப்போகினமெண்டு சொல்லிக் கொண்டிருந்தனான்..”
காய்கறி நறுக்கும் அலுவலை அந்தப்படியே விட்டு சேலைத் தலைப்பில் கையைத் துடைத்தவாறு வந்தாள் மாமி.
‘இப்பதான் வழி தெரிஞ்சுதாக்கும்?” மாமியின் பொய்க் கோபம் இதமாயிருந்தது. புன்னகைத்து அன்பைத் தெரிவித்தான்.
மாமியின் பிள்ளைகள் வந்து கூடினர். ஆளுக்கொரு விடயமாகக் குசலம் விசாரித்தனர். அவனது வருகை எல்லோருக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அவனது கண்கள் அப்பாச்சியைத் தேடின. வீட்டு தளபாடங்கள் இடம்மாறி இருந்தன. தூசி தட்டப்படாத படங்கள் சுவரில் தொங்கிக் கொண்டு இன்னும் நாங்கள் இருக்கிறோம் எனும் பரிதாபப் பார்வையுடன்.. நிலைக்கண்ணாடி தெற்குப் பக்கச் சுவருக்கு மாறியிருந்தது. பாவனைக்கு உதவாத அல்லது பாவனை முடிந்துபோன பண்டங்கள் ஒரு பக்கமாகத் தூக்கிப் போடப்பட்டு…
அப்பாச்சி ஓர் ஓரமாக உட்கார்ந்திருந்தாள்… கூனிக்குறுகி கால்களை மடித்து சுவருடன் சாய்ந்து வீட்டிலேற்பட்ட எந்த ஆரவாரமும் தன்னைப் பாதிக்காதது போல… ஒரு தனி உலகத்தில் இருப்பது போல…
அந்தக் கோலம் அவன் நெஞ்சைப் பிடித்து உலுக்கியது. இந்த ஆறு வருடத்துக்குள் எப்படி மாறிவிட்டாள்! முதுமை இப்படி திடுதிப்பென வந்து அடித்துப் போட்டுவிட்டு போய்விடுமா?
அப்பாச்சியின் பக்கத்தில் ஓர் ஊன்றுகோல்… சுவரில் சாத்தப்பட்டு, ஒரு காவலனைப்போல தலையை நிமிர்த்திக் கொண்டு நின்றது.
அவன் தலையைக் குனித்துக்கொண்டு போய் அப்பாச்சிக்குப் பக்கத்தில் அமர்ந்தான். மெல்லக் குரல் கொடுத்து அழைத்தான்.
‘அப்பாச்சி!”
அப்போதுதான் ஒரு கனவுலோகத்திலிருந்து மீண்டதுபோலத் தலைநிமிர்ந்தாள். முகத்தில் பலவிதச் சுருக்கங்கள்.. கீறிவிட்டதுபோலக் கோடுகள். கண்கள் அகல விரிந்தன. கைகளை மெல்ல உயர்த்தி குரல் வந்த திக்கில் நீட்டினாள். சக்தியற்று நடுங்கும் கைகளை அங்குமிங்கும் அசைத்தாள்.
அப்பாச்சிக்குக் கண் தெரியவில்லை.
அந்தக் கைக்குள் தன் முகத்தைக் கொடுத்தான். அப்பாச்சி அவனது சொக்கைத் தடவினாள். இரு கைகளாலும் விரல்கள் நடுங்க நடுங்கத் தடவினாள். கண் கலங்கி அழுதாள்.
‘ஆரது? வசந்தனே… வசந்தன்…! வசந்தன்..! என்ட அப்பு!” எனச் சொல்லிக்கொண்டே அவனது முதுகை அணைத்துத் தடவினாள்.
‘ஏன் அப்பாச்சி, கண் தெரியவில்லையோ?”
‘தெரியாமல்போச்சு அப்பு!”
பேசுவதை நிறுத்தி சத்தமாகப் பெருமூச்செறிந்தாள். “எல்லாம் முடிஞ்சுது” என்பதுபோல அல்லது தனது இயலாத்தன்மையைக் காட்டுவதுபோல கைகளை அபிநயித்தாள்.
‘ஆக்கள் போறது வாறது… சாடைமாடையாய் ஒரு அசைவு மாதிரித் தெரியும். இன்னாரெண்டு சொல்ல ஏலாது..”
‘டொக்டரிட்டைக் காட்டயில்லையோ?”
‘காட்டினது… கண்ணாடியும் எடுத்துக் கொடுத்தது. அது போட்டும் தெரியுதில்லையாம்..” மாமிதான் பதில் சொன்னாள்.
‘ஒப்பிரேசன் செய்தாத்தான் சரி வருமெண்டு டொக்டர் சொல்லுறார். மனிசி கேட்டாலெல்லோ.. பிடிச்சிராவி! வேண்டாமென்று நிக்குது!”
அவன் அப்பாச்சியின் கையை ஆதரவாகப் பிடித்தான். மென்மையாகச் சொன்னான்: ‘ஏன் அப்பாச்சி… பயமா? சின்ன ஒப்பிரேசன்தானே… என்ன பயம்? ஒப்பிரேசன் செய்திட்டால் கண் தெரியவரும். நல்லதுதானே?”
‘ஏன் அப்பன்? அதெல்லாம் வீண் செலவணை…. வேண்டாமப்பு… இண்டைக்கோ நாளைக்கோ எண்டு இருக்கிறனான்… இப்படியே ஒரு பக்கத்திலே கிடந்திட்டுப் போவம்!”
அப்பாச்சி தன் தள்ளாத வயதை உணரத் தலைப்பட்டுவிட்டாள். தன் காலங்கள் முடிந்துவிட்டன என்பது ஒரு விரக்தியுணர்வாக அவள் மனதில் படிந்துபோய்விட்டது. தான் எதற்கும் பயனில்லாதவள்… யாருக்கும் கஷ்டம் கொடுக்கக்கூடாது எனக் கருதித்தான்போலும் ஒதுங்கியிருக்கிறாள்… எப்படியாவது அவளை சிகிச்சைக்குச் சம்மதிக்க வைத்து பார்வையைத் திருப்பிக் கொண்டுவரவேண்டும் என நினைத்தான்.
‘வசந்தன்…! அம்மா எப்படி இருக்கிறாள்?” அம்மாவின் மீது அப்பாச்சி கொண்டுள்ள பிரியம் அவனுக்குத் தெரியும்.
அப்பாச்சி கிராமத்தில் தன் மகளோடு (மாமி) இருந்தாலும் கிழமைக்கு ஒரு தடவையாவது அம்மாவைப் பார்க்க வருவாள். அப்போதெல்லாம் யாழ்ப்பாணம் ரௌணுக்கு அடிக்கடி பஸ் சேவை இருந்தது. மாமியின் மகள் சுகந்தியை துணைக்கு அழைத்துக்கொண்டு அப்பாச்சி வருவாள்.
சனிக்கிழமைகளில் (சுகந்திக்கு ஸ்கூல் இல்லாத நாட்கள்) அப்பாச்சியை நிச்சயம் எதிர்ப்பார்க்கலாம். வீட்டு வாசலில் இருந்து வீதியைப் பார்த்துக்கொண்டிருப்பாhன். தலையில் ஓர் நார்க்கடகத்தைச் சுமந்துகொண்டு கையில் சுகந்தியையும் பிடித்துக்கொண்டு அப்பாச்சி வீதியின் திருப்பத்தில் இறங்கும்போது துள்ளிக்கொண்டு ஓடுவான்.
அப்பாச்சி தன் சேலைத் தலைப்பில் முடிந்து வைத்திருக்கும் இனிப்புச் சரையை எடுத்து அவனிடம் கொடுப்பாள். சுகந்தியின் கையைவிட்டு அவனது தோளைப் பிடித்துக்கொண்டு வருவாள். எப்போதுமே தோளைத்தான் பிடித்துக்கொள்வாள். அணைப்பது போலவுமிருக்கும். தாங்கிக் கொள்வது போலவுமிருக்கும். அப்பாச்சிக்கு ஒரு ஊன்றுகோலைப்போல தான் நடப்பதாக கற்பனை செய்வான். அதில் சந்தோஷமாயிருக்கும்.
வீட்டில் வந்து கடகத்தை இறக்கி வைத்தால்… இராசவள்ளிக்கிழங்கு, பனங்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு மற்றும் கிராமத்திலிருந்து புதுச்செழிப்புடன் வந்திருக்கும் மரக்கறிவகைகள் இத்யாதி! அம்மா வந்து பக்கத்தில் அமர்ந்துகொள்வாள். அப்பாச்சி கடகத்திலிருந்து ஒவ்வொரு பண்டமாக எடுத்த அவளிடம் கொடுப்பாள். எதை எதை எப்படிச் சமைக்கலாம் எனப் பக்குவம் சொல்வாள். அம்மா நல்ல சமையல்காரி… சாப்பிடும்போதெல்லாம் அப்பாச்சி அம்மாவைப் புகழ்வாள்..
‘இப்படி… ஆருக்கும் சமைக்கத் தெரியாது பிள்ளை!”
இராசவள்ளிக்கிழங்கு சீனியும் பாலுமிட்டு அவித்துச் சாப்பிடுவது அவனுக்குப் பிடிக்கும் அதில் கொஞ்சம் சவ்வரிசியும் சேர்த்துவிட்டால் மணி!
ஒவ்வொரு முறை அப்பாச்சி வரும்போதும் இராசவள்ளிக்கிழங்கும் தவறாது வரும். சீசன் கடந்தாலும் தேடிப்பிடித்து வாங்கிவந்துவிடுவாள்.
அவனது கண்கள் பனித்தன. அதை யாருக்கும் காட்டிக்கொள்ள விரும்பாமல் கண்களில் தூசிபட்டதுபோலத் துடைத்துப் பாசாங்கு செய்தான்.
‘என்னப்பு… கேக்கிறன்… பேசாமலிருக்கிறாய்… அம்மா எப்பிடி இருக்கிறாள்?”
‘சுகமாய் இருக்கிறா…. அம்மாதான் என்னை அனுப்பி வைச்சா… உங்களைப் பார்த்துக்கொண்டு வரச்சொல்லி…”
அம்மா சில நாட்களாக நச்சரிக்கத்தொடங்கியிருந்தாள். ‘அப்பாச்சியைப் போய்ப் பார்த்துவிட்டு வா தம்பி..!”
அதற்கு அவன் கிண்டல் செய்வான்.
‘அப்பாச்சியையோ? அப்பாவையோ? ஆரைப் போய்ப் பார்க்கச் சொல்லுறீங்கள் அம்மா?”
அது என்ன மாதிரியான பிரதிபலிப்பையும் அம்மாவின் முகத்தில் காட்டியதில்லை. எவ்வித உணர்வலைளையும் வெளிக்காட்டாது தன் சோகங்களையெல்லாம் தன் நெஞ்சுக்குள்ளேயே பூட்டி வைத்துக்கொள்ள அம்மா கற்றுக்கொண்டதும் இந்த ஆறு வருடங்களில்தான்.
அப்பாச்சியைப் பார்க்கப் போகிற சாட்டில் அப்பாவையும் அவன் பார்த்து வரட்டும் என உண்மையிலேயே அம்மா கருதியிருக்கலாம். அதனால் அப்பாவுக்கும் மகனுக்குமிடையில் உறவு மீண்டும் புதுப்பிக்கப்படாதா என்ற ஏக்கமும் அவள் மனதில் இருந்திருக்கலாம்.
அப்பா, அம்மாவையும் தங்களையும் பிரிந்து போனதற்கு ஏதோ ஒருவகையில் தான்தானே காரணம் என்ற உணர்வு அவன் நெஞ்சில் குத்திக்கொண்டேயிருக்கிறது.
அமைதியாகப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கைப் படகு அவனது திருமணப்பேச்சுக்களுடன்தான் ஆட்டம் காணத் தொடங்கியது.
அவனுக்குக் காதல்! அப்பாவைப் பொறுத்தவரை அவள் யாரோ ஒரு பெண்! அந்தக் கல்யாணத்துக்கு அவர் சம்மதமில்லை. வீடு அமர்க்களப்பட்டது.
அந்த நாட்களில் ஒருநாள் அப்பாச்சி அவனை தனிமையில் அழைத்துக் கேட்டாள்:
‘வசந்தன்… ஆரடா அந்தப் பெட்டை…? அவளைத்தான் முடிக்க வேண்டுமென்று நிக்கிறியாம்?”
அப்பாச்சியின் முன்னிலையில் மௌனியாயிருந்தான். குடும்பத்தில் எல்லோரிடத்திலும் பற்று பாசம், அக்கறை கொண்ட மனிசி.. வீடு இரண்டுபடுவதைப் பொறுக்கமுடியாது கேட்கிறது. என்ன பதிலைச் சொல்ல?
அப்பாச்சியின் அடுத்த கேள்வி அவனைத் தூக்கி நிறுத்தியது.
‘எப்பிடி வடிவான பெட்டையே…? எங்கட சுகந்தியை விட வடிவோ?”
கேள்விக்குறியுடன் அப்பாச்சியைப் பார்த்தான்.
காதல் வடிவிலா பிறக்கிறது? அல்லது அப்பா சொல்வதுபோல வயதுக் கோளாறினாலா? அதற்கும் மேலாக ஏதோ ஒன்று.. எங்கையோ அதை நிர்ணயித்துவிடுகிறது.
‘அவனது வாழ்க்கையில் பார்த்த, பழகிய பெண்களில்… ஏன் அவள் மட்டும் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினாள்? அவளுக்காக எதையும் எதிர்த்து நிற்கும் சக்தியைக் கொடுத்தது என்ன?”
யோசித்தப் பார்த்திருக்கிறான்…
பச்சைப் பாவாடை சட்டையும், செம்மஞ்சள் தாவணியும், கூந்தல் நிறைய மல்லிகை மலர்க் கொத்துமாக அந்த அம்மன்கோவிலில் தரிசித்த அந்தச் சின்னஞ்சிறு பெண்ணை பிறகு அவனால் மறக்க முடியாமற் போனது உண்மைதான்.
பெண்கள் எப்படி இருக்கவேண்டும் என்ற இலக்கணம் அப்பாவுக்கு இருந்தது. சரியோ, தவறோ அவனது மனதிலும் அது அப்படியே பதிந்து போனதற்கு அப்பாதான் காரணம். அதுபோன்ற ஒரு பெண்ணைக் காண நேர்ந்தபோது அவளைத் தன் பெண்ணாக மனசு தீர்மானித்துவிட்டிருக்கலாம்.
சந்தப்பவசமாக அல்லது சந்தர்ப்பத்தை வசப்படுத்திக் கொண்டு, பின்னர் பழகிய ஏழோ எட்டு வருடங்களில் அவள் இயல்பாகவே மனைவி என்ற ஸ்தானத்தை அடைந்திருந்தாள்.
குயிலொன்று தொலைவிலிருந்து தனிமையாகப் பாடியது. அந்தக் கீதத்தில் சோகம் இருந்தாலும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்போல இனிமையும் இருந்தது. அதில் லயித்ததில் நினைவுகள் தடைப்பட்டன. அடுத்த கணமே அப்பாச்சியின் மூன்றாவது கேள்வி நினைவில் வந்தது. ‘அவள் என்ன சாதி?”
‘பெண்சாதி!” சற்று சினத்துடன்தான் சொன்னான். சாதி இரண்டொழிய வேறில்லை. ஆண்சாதி, பெண் சாதி என்ற கருத்துப்படத்தான் அப்படிச் சொன்னான். அதில் இன்னொரு கருத்தும் “மனைவி” என்ற அர்த்தத்தில் தொனிப்பதை பின்னர்தான் உணர்ந்தான்.
அப்பாச்சி தன் கைகளை உயர்த்தினாள்.
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாதவள்போலக் கைகள் நடுங்கின. அவனைக் கும்பிடுவதுபோல் கைகளைப் பிடித்துக்கொண்டு அப்பாச்சி கண்கலங்கினாள்.
‘என்னவோ தம்பி… நீ படிச்சனி… நல்லது கெட்டது தெரியும்…. ஆனால் அவளைக் கண்கலங்க வைச்சிடாதை! கொப்பன் பிறகு அவளை திண்டு கைகழுவிப்போடுவான்!”
அப்பாச்சி அவள் எனக் குறிப்பிட்டது அம்மாவைத்தான். அப்பா எடுத்ததற்கெல்லாம் அம்மாவையே குறை குற்றம் சொல்வதுண்டு. அப்பாச்சி சொன்னது சரி. அம்மா தினமும் அப்பாவிடம் ஏச்சு வேண்டினாள்.
‘நீ வளர்த்த வளர்ப்பு சரியில்லை!”
அவன் குழம்பிப்போனான். செய்வதறியாது திகைத்து நின்றான். தடுமாறி நிற்கும்போது வழிகாட்டி ஆதரிக்கNவுண்டிய பெரியவர்கள் கோலைத் தூக்கிக்கொண்டு எதிரே நிற்கிறார்கள். அம்மா தன்னாலே அழுது தீர்க்கிறாள். இப்படியே காலங்கள் கழிய அவனுக்குத் தாடி வளரத் தொடங்கியிருந்தது.
இன்னொரு முறை வீட்டுக்கு வந்திருந்தபோது (அல்லது வந்து) அப்பாச்சிதான் அவனை மீண்டும் தூக்கி நிறுத்தினாள்.
‘என்னடா வசந்தன்? அதென்ன கோலம்? ஏன் யோசிச்சுக்கொண்டு திரியிறாய்?”
அப்பாச்சி தைரியம் ஊட்டினாள்.
‘நான் சொல்லுறதைக் கேள்! பொம்பிளைப்பிள்ளை விசயம்… பிறகு பழி பாவம் வரக்கூடாது. போய் அந்தப் பிள்ளையை முடிச்சுக்கொண்டு வா! மற்றவையளைப்பற்றிக் கவலைப்படாதை…”
அந்த மருந்து வேலை செய்தது. அவன் துணிந்து அப்பாவிடம் கதைத்தான். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதுதான் வாழ்க்கையின் உன்னதமான தத்துவம்… அப்பா சொன்னார்:
‘யாரையும் ஏமாற்றக்கூடாது. நீ வாக்குக் குடுத்தவளையே போய் கலியாணம் செய். அதுதான் சரி. ஆனால் வீட்டுக்குக் கூட்டிவரக்கூடாது. கூட்டிவந்தால் நான் வெளிக்கிட்டிடுவன்…”
“என்ன இது? கலியாணம் செய்து வீட்டுக்கு கூட்டிவராமல் வேறு எங்கு போவது? கலியாணம் காரணமாகக் குடும்பத்தில் ஒவ்வொருவரும் பிரிந்துபோவதென்றால் பிறகு ஏன் கலியாணம்?”
‘அதெல்லாம் போகப் போகச் சரிவரும்?” அவன் மணமுடித்து மனைவியைக் கூட்டிவந்தான்.
அப்பா வெளியேறிவிட்டார். தன்னையோ, அப்பாச்சியையோ யாரும் பார்க்க வரக்கூடாதென்ற உத்தரவு வேறு. அதனால் தனக்குத் தண்டனை அளித்தாரோ, அம்மாவுக்கா அல்லது எல்லோருக்கும் தண்டனை அளித்துக்கொண்டாரா என்பது இன்னும் அவனுக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது.
அவன் முகத்தைத் திருப்பி வெளியே பார்த்தான். ஆடாமல் அசையாமல் அணிவகுத்து நிற்கும் மரங்கள். காற்று வீசும் அறிகுறியில்லை. இதம் இல்லை. எனினும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் காற்றை சுவாசித்து வாழும் மரங்கள்.
வெயில் சுடுகிறது.. எரிச்சல், எனினும் வெயில் தேவைப்படுகிறது. வெயிலை எதிர்நோக்கி தலையை உயர்த்தி வளரும் மரங்கள். நிலத்தில் எங்கோ எல்லாம் வேரைப் புகுத்தி எப்படியாவது நீரை உறிஞ்சி வளரும் மரங்கள்.
இவற்றைப் பார்க்க ஆறுதல் ஏற்படுகிறது. வாழ்க்கையின் அர்த்தங்களை தன்னகத்தே கொண்டுள்ள மரங்கள்.. இயற்கை!
சுகந்தி தேநீர் கொண்டுவந்து பக்கத்தில் வைத்தாள். நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்.
‘ஆறமுதல் எடுத்துக் குடியுங்கோ!” என்றாள்.
அந்தக் கரிசனைக்குக் கட்டுப்பட்டு குழந்தைபோல தேநீரை எடுத்துப் பருகியபோது அது தொண்டையிலிருந்த நோவையும் கழுவிக்கொண்டு உள்ளிறங்குவது போலிருந்தது.
அப்பாச்சி அவனது நாடியை எட்டித் தன்பக்கம் திருப்பிக் கொண்டாள்.
‘வசந்தன்… அந்தப் பிள்ளையை இஞ்சை கூட்டிக் கொண்டு வரமாட்டியே! பார்க்க ஆசையாயிருக்கு…!”
‘கூட்டிவரலாம்தான். ஆனால், அப்பா…” எனத் தயங்கினான்.
‘அவன் கிடக்கிறான்… நீ கூட்டிக்கொண்டு வா!”
அப்பாவை இப்படி… அவன் இவன் என்று பேச அப்பாச்சி ஒருவரால் மட்டும்தான் முடியும். இவ்வளவு நாள்களும் தன் மனைவியைக் கூட்டிவந்து அப்பாச்சிக்குக் காட்டாமல் விட்டது. தவறுதானே என்று தோன்றியது.
அதுசரி, மனைவியை அப்பாச்சி பார்க்க வேண்டுமென்கிறாள்! எப்படிப் பார்ப்பாள்? இதுபோலத் தன் கைகளால் ஸ்பரிசித்து… உணர்ந்து… அதுபோதுமா?
எப்படியாவது அப்பாச்சியை கண் சிகிச்சைக்குச் சம்மதிக்க வைக்கவேண்டும்.
அப்பாச்சியைப் பார்க்க வந்ததற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அவன் வெளிநாட்டுக்குப் போகப் போகிறான். நாட்டில் யுத்தம் காரணமாக அவனது தொழில் கைவிட்டுப் போயிருந்தது. அதனால் பொருளாதாரக் கஷ்டம். வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்திருந்தான். சீக்கிரத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கை.
போவதற்கு முதல் அப்பாச்சியை ஒருமுறை பார்த்ததாகவும் பயணம் சொன்னதாகவும் இருக்கும் என்ற நோக்கமும் வந்ததில் இருந்தது.
பயணம் போக முதல் அப்பாச்சியின் கண்சிகிச்சைக்கு ஒழுங்கு செய்யவேண்டும் என்பதை ஒரு உறுதி போலவே மனத்தில் எடுத்துக்கொண்டான்.
எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு விடைபெற்றபோது அப்பாச்சி அவனது கையைப் பிடித்துக்கொண்டு விடாமல் அழுதாள்.
‘இந்தப் பிள்ளைகளெல்லாம்… இப்படித் திக்கு திக்காய் போச்சுதுகளே!”
அப்பாச்சியின் ஏக்கத்தை உணர முடிந்தது. சொல்ல எத்தனிப்பதும் புரிந்தது. தன் கடைசிக் காலத்தில்… ஒவ்வொரு பக்கமாகப் பிரிந்திருக்கும் பிள்ளைகுட்டிகளின் நிலைமையைத் தாங்கமுடியவில்லை. எல்லோரையும் ஒன்றுசேர்க்கும் வல்லமையை அவனிடத்தில் எதிர்பார்க்கிறாளோ என்னவோ! பேச முடியவில்லை, கையை விடுவித்துக்கொண்டு நடந்தான்.
‘வசந்தன்! அதுகும் என்ரை பிள்ளைதான்! போறதுக்கு முதல் கட்டாயம் கூட்டிவந்து காட்டு!”
அப்பாச்சி இன்னும் ஏதோ சொல்லிக்கொண்டிருப்பது கேட்டது. வந்துவிட்டான்.
வீட்டுக்கு வந்து இரண்டொரு நாட்களுக்குள்ளேயே வெளிநாட்டு வேலைக்கு அழைப்பு வந்தது. அவசரமாகப் போகவேண்டும்.
இந்த அவசரத்துக்குள் வேறு எந்த அவலும் முக்கியமானதாகப் படவுமில்லை. பொருளாதார நெருக்கடி வேலை விடயத்தைப் பின்போடவும் முடியவில்லை. அப்பாச்சியின் ஆசையை நிறைவேற்ற மனைவியையாவது அழைத்துப் போய்க் காட்டலாம். ஆனால் அப்பாவின் கண்ணில் பட்டால் என்ன ஆகுமோ எனும் தயக்கமும் ஒரு பக்கம்.
சரி, கண் சிகிச்சை அது இது எல்லாவற்றையும் பிறகு வந்து பார்க்கலாம் என வேலைக்குப் போக முடிவெடுத்தான். நியாயங்களையெல்லாம் சுயநலம் கலந்த சந்தர்ப்பவாதம்தானோ என்றும் தோன்றியது.
வேலைக்கு வந்து சேர்ந்து.. அவன் கடிதம் எழுதி, வீட்டிலிருந்து பதில் கடிதம் வர கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகியிருந்தன. அம்மா எழுதியிருந்தாள்..
‘தம்பி…! நீ போன அடுத்த நாள் அப்பாச்சி செத்துப்போனா. என்னைச் செத்த வீட்டுக்கும் வரக்கூடாதென்று சொல்லிப்போட்டினம். அவற்றை சகோதரங்களும் என்னைக் கூட்டிக்கொண்டுபோய்க் காட்டவேணுமெண்டு நினைக்கையில்லை. நான் அப்பாச்சியிலை வைச்சிருந்த பட்சம் இவையளுக்கு எப்பிடித் தெரியும்? வீட்டிலை இருந்து என்ர பாட்டிலை அழுதன்…”
அம்மாவைப்போல அவனும் எங்கோ ஒரு கண் காணாத தேசத்திலிருந்து அப்பாச்சியை நினைத்து அழுதான். இப்போது அந்த நினைவுகள் மட்டும் அவனிடத்தில் மிஞ்சிப் போயிருக்கின்றன.
– வீரகேசரி 1995 – தெரியாத பக்கங்கள் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: பிப்ரவரி 1997, மல்லிகைப்பந்தல் வெளியீடு, யாழ்ப்பாணம்