அன்பு சம்ராஜியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 13, 2016
பார்வையிட்டோர்: 11,874 
 
 

தஞ்சை தரணியில் காவிரியால் வளமான நகரத்துக்கு அருகாமையில் பச்சை பசேல் என வயல்வெளிக்கு நடுவே அந்த அழகிய கிராமம். காலைக் கதிரவன் மெல்ல எழக், கந்த சஷ்டி கவசம் காதில் தேனாய் விழக், கதிர் இழுத்துப் போர்த்திக் கொண்டு சுகமாய் அரைக் குறை தூக்கத்தில் படுத்திருந்தான்.

“கதிர், எழுந்திரு நேரம் ஆகுது”“ என்று எழுப்பினாள் அக்கா வளர்மதி. சோம்பலாய் எழுந்து, வரவேற்பறையை எட்டிப் பார்த்தான், எதிர்வீட்டு தங்கராசு மாமாவும் கதிர் அப்பாவும் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

“பொண்ணு பெயர் சுதாராணி லட்சணமாய் அழகாய் இருக்கும், பி.ஏ. வரைக்கும் படிச்சிருக்கு, இந்தாங்க பொண்ணோட போட்டோவைப் பாருங்க.”“ என்று போட்டோவையும், சான்றிதழ்களின் நகலையும் கொடுத்தபடி தொடர்ந்தார்.

“பொண்ணோட வீட்டுல ஜெயராமன், லெஷ்மணன்னு அண்ணன், தம்பிங்க, ரெண்டு பேரும் இரட்டையர்கள், ஒரே குடும்பத்தில் அக்காவையும் தங்கச்சியையும் கல்யாணம் செய்துகிட்டாங்க. மூத்தவர் ஜெயராமனோட பொண்ணுதான் சுதாராணி. நல்ல குடும்பம். வெங்கட்டுக்கு இன்னிக்கு பொண்ணு பார்க்கப் போறோம். பிடிச்சிருந்தா பேசி முடிச்சிடலாமான்னு நினைக்கிறேன்.”“ என்றார் கதிர் அப்பா.

“ஆமாண்ணே, பொண்ணு நல்லா இருக்கு. நல்லபடியா பேசி முடிச்சிட்டு வாங்க.”“ என்று கிளம்பினார் தங்கராசு.

“கதிர், இதை உள்ளே கொண்டு போய் வை”“ என்றார் அப்பா.

தன் அண்ணனுக்குப் பொண்ணுக்கு பார்க்க ஊருக்குப் போகப் போறோம் என்று மகிழ்ச்சியோடு அந்தச் சான்றிதழை வாங்கிப் படித்தான், வியந்து போய் மீண்டும் பார்த்தான். மீண்டும் வியந்தான்.

அப்போது “சீக்கிரம் கிளம்பு கதிர். சாயுங்காலம் படம் வரைகிறேன்னு சொல்லிட்டு நேரம் கழித்து வராம சீக்கிரம் வந்துடு.”“ என்றாள் அம்மா.

“சரிம்மா”“ என்று சொல்லிவிட்டு விரைந்தான். சாயுங்காலம் சீக்கிரம் வீட்டுக்கு வந்தான் கதிர். கிளம்பி வெளியே வரவே வேன் தயாராக இருந்தது. முன் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டான். சற்று நேரத்தில் அனைவரும் வர, வேன் கிளம்பியது. அவன் ஜன்னல் அருகில் அமர்ந்து காவிரி நதியின் அழகைப் பார்த்து ரசித்தப்படியே வந்தான்.

பெண்ணின் வீடு வந்தது. அனைவரையும் அன்போடு வரவேற்றார்கள். சம்பிரதாயமாகப் பேசாமல், அன்பாய்ப் பேசினார்கள். இரு வாசல் வைத்த வீடு உள்ளே ஒரே வீடாய் இருந்தது. அண்ணன் தம்பி இருவரும் குடும்பமாய் ஒரே வீட்டில் வசித்தார்கள். வாசல் மட்டுமே இரண்டு. மனசு எல்லாம் ஒன்றாக இருந்தது.

அனைவருக்கும் சாப்பாடு வைத்துக் கேட்டுக் கேட்டுப் பரிமாறினார்கள். அனைவரையும் பார்த்த மாத்திரத்தில் பிடித்துப்போனது. அனைவரும் கூடிப்பேசிப் பிப்ரவரி மாதம் திருமணத்தை வைத்தார்கள். அங்கே கடைக்குட்டியான திரபா அந்த வீட்டில் அனைவருக்கும் செல்லப் பிள்ளையாக வளைய வளைய வந்தாள். கதிருக்குத் திரபாவை பார்த்ததும் சற்றே பொறாமையாக இருந்தது.

ஒரு அறையில் திரபா தனது புத்தகங்களைப் பார்த்து எடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது சான்றிதழ்கள் நினைவுக்கு வந்தது. பெரியவர் பெயர் ஜெயராமன், அவரோட பொண்ணுதான் அண்ணி. ஆனா J.L. சுதாராணி அப்படின்னு எழுதியிருக்கு. ஒரு வேளை தவறுதலாகப் போட்டுவிட்டார்களோ?

“திரபா, உங்களுடைய அடையாள அட்டையைப் பார்க்கலாமா?”“என்றான்கதிர்.

“எதுக்குக் கதிர், நான் என்ன படிக்கிறேன்னு தெரிஞ்சுக்கனுமா?”“ என்று புன்சிரிப்புடன் கேட்டவாறே கொடுத்தாள் திரபா.

அதைப் பார்த்து மீண்டும் வியந்து போனான் கதிர். அதிலும் J.L. திரபா என்றுபோட்டிருந்தது.

“ஏன் அப்படிப் பாக்குறீங்க?”“ என்றாள் திரபா.

“உங்கள் எல்லோருக்கும் J.L. ன்னுதான் இன்ஷியல் போடுவீங்களா?”“ என்றான் கதிர்.

“ஆமாம், எங்களுக்கு இரண்டு அப்பா, இரண்டு அம்மா. அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கிறோம். எங்களைப் பிரிச்சி பார்க்காதீங்க. சரியா?”“ என்றாள் திரபா.

“சரி திரபா ““என்றான் கதிர் நெகிழ்வுடன். அனைவரும் கிளம்பினார்கள். கதிர் திரபாவிடமும் சுதாராணியிடமும் விடை பெற்றுக் கிளம்பினான். திருமணம் மிக விமர்சையாக நடந்தது. அன்று இரவு தொலைகாட்சியில் தங்கமலை ரகசியம் திரைப்படம் போட்டார்கள்.

அண்ணி வீட்டுக்கு வந்ததும் மிகவும் ஜாலியாக இருந்தது. நிறைய விஷயங்கள் கற்றுக் கொடுத்தாள் இன்னொரு அம்மாவாய்த், தவறுகளைக் கண்டித்தாள் அப்பாவாய்.

சுதாராணி ஊருக்குக் கிளம்புகிறாள் என்றால் கதிருக்கு இரவெல்லாம் தூக்கமே வராது. அண்ணியுடன் ஊருக்குச் செல்வது குஷியாக இருக்கும். சுதாராணியும் ஏதாவது காரணம் சொல்லிக் கதிரை அழைத்துச் செல்வாள்.

அண்ணி வந்தாலும், வராவிட்டாலும் அடிக்கடி அண்ணியின் ஊருக்குச் செல்வது கதிருக்கு வாடிக்கையாகிவிட்டது. அங்குப் பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா சின்னம்மா என்று அழைப்பதில்லை. இருவரையும் அப்பா என்றும் அம்மா என்றே அழைத்தார்கள்.

யாரும் இது உன்னுடையது என்னுடையது என்று சண்டையிடாமல் அனைத்தையும் பகிர்ந்து பயன்படுத்தினார்கள்.

இனிப்பு வாங்கி வந்தாலும்கூட யாராவது இல்லை என்றால் அவர்களுடைய பகுதி குளிர் சாதனப் பெட்டியில் காத்திருக்கும். மற்றவர்கள் அதைத் தொடக்கூட மாட்டார்கள்.

இதனால் அவர்களிடம் இருந்து ஒற்றுமையை மட்டும் இல்லை அன்பு, மரியாதை, விட்டுக் கொடுத்தல் என அனைத்தையும் கற்றுக் கொண்டான் கதிர். முதல் முறை சென்ற போது திரபாவுக்கு இணையாகக் கதிரை தாங்கு தாங்கு என்று தாங்கினார்கள். காலைச் சாப்பாட்டில் இருந்து, படுக்கப் போகும் வரை. அந்த அன்பில் நெகிழ்ந்து போனான் அவன்.

சில ஆண்டுகள் கழிந்து, கதிர் படிப்பை முடித்து விட்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தான். அதன் பிறகு அதிகமாகச் செல்ல இயலவில்லை. எப்போதாவது விடுமுறை வந்தால் காலையில் சென்று அனைவரையும் பார்த்து விட்டு இரவு திரும்பி விடுவான்.

அண்ணியின் ஊருக்கு அருகாமையில் உள்ள ஊரில், பெண் பார்த்துக், கதிருக்குத் திருமணத்தை நடத்தி வைத்தார்கள். ஒரு முறை அண்ணியின் வீட்டுக்குக் கதிர் மட்டும் சென்றவன். 2 மணி நேரத்தில் மின்னல் மாதிரி வந்தான்.

அதன்பிறகு அவன் அங்குச் செல்லவில்லை. ஏதாவது விஷேசம் வந்தால் கூட, ஏதாவது காரணம் சொல்லி அங்குச் செல்வதைத் தவிர்த்துவிடுவான். பல முறை வராததைக் கவனித்த சுதாராணி.

“ஏன்கதிர், எங்கஅம்மா வீட்டுக்கு வரவே மாட்டுற. நீ சின்னப் பிள்ளையா இருக்கும் போது, துள்ளிக் குதிச்சிக்கிட்டு எனக்கு முன்னாடி கிளம்புவ. ஆனா உனக்குத் திருமணம் ஆனதும் கூப்பிட்டாலும் வரமாட்டுறியே”என்று கேட்டாள் சுதாராணி.

“அண்ணி, ஒரே வீட்டில் ஒற்றுமையாகப், பெரியப்பா சித்தப்பா என்ற வேறுபாடு இன்றி நான்கு பேரையும் அப்பா, அம்மா என்று அழைத்து, உங்களின் தந்தையார் பெயரை அனைவருமே J.L. ன்னு இன்ஷியலாகப் போட்டு, ஊருக்கே ஒற்றுமைக்கு உதாரணமாக வாழ்ந்தது உங்களின் குடும்பம்.

அனைவரும் அன்போடு அண்ணா அண்ணி அக்கா அத்தான் என்று உறவாடி, அன்னத்தோடு அன்பையும் பரிமாறிய போது, நான் சோகத்தின் உச்சிக்கே போனேன். உங்கள் வீட்டில் திரபாவாகப் பிறந்திருக்கக் கூடாதா என்று ஏங்கிப் பல இரவுகள் அழுதிருக்கிறேன். பாசங்கு இல்லாத பாசம் அங்கு வளைய வளைய வந்தது.

நான் கடைசியாகச் சென்ற போது, அதிர்ந்து போனேன். என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. யார் கண் பட்டதோ தெரியவில்லை. அந்த அன்பு சகோதரர்கள் பிரிந்து தனித்தனியாக ஒரே வீட்டை இரண்டாகப் பிரித்து யாரோ போல வாழ்வது கொடுமை.

நாள் முழுவதும் அனைவரின் பாசத்தையும் அன்போடும் உரிமையோடும் போடும் சின்னச் சின்னச் சண்டைகளையும் பார்த்து நெகிழ்ந்த எனக்கு, எதிரிகளைப் பார்ப்பதைப் போல இன்று முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள். அதை என்னால் பார்த்துகிட்டு அரை மணி நேரம் கூட இருக்க முடியவில்லை. அன்று ஒற்றுமையான அன்புக்காக அழுத நான், இன்று பிரிந்த, அந்த அன்பு சம்ராஜித்திற்காக மனதுக்குள் அழுகிறேன். பாசத்தின் கோட்டையைப் பாழடைந்த மண்டபமாகப் பார்க்க விரும்பவில்லை.” என்று கண்கள் கண்ணாடி திரையிடச் சொன்னான் கதிர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *