அன்புவின் வாசிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 23, 2018
பார்வையிட்டோர்: 6,846 
 
 

சீக்கிரம் கிளம்புப்பா , சீக்கிரம் என்னப்பா எங்க போறம் கிளம்புன்னு சொல்றீங்க, மறந்துட்டியா இன்னிக்கு உங்க அக்கா வீட்டுக்கு போகலாமின்னு நேத்தே சொன்னல்ல ஞாபகமில்ல,,கிளம்பு என்று சொல்லிக்கொண்டே தன்னுடைய இடுப்பில் உள்ள வேட்டியை இழுத்து கட்டினார் தமிழ்ப்பிரியன். அப்பா நான் வரலப்பா ,இன்னாடா சொல்ற ,அக்காவ பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு நீதான சொன்ன ,இப்ப நீயே வரலன்னு சொன்னா என்னா அர்த்தம், அதெல்லாம் முடியாது போய்தான் ஆவனும் ரெடியாகு போ என்று கண்டிச்சு சொல்ல அதற்கு அவன், அப்பா எனக்கு எக்ஸாம் இருக்குப்பா அதனாலதான் வரலேங்கிறேன். நீங்க போய் அக்காவ பாத்துட்டு வாங்க அப்படியே நான் கேட்டன்னு சொல்லுங்க. என்னடா சொல்ற கிளம்புடா என்று அதட்டி சொல்ல, அம்மா எனக்குத்தான் எக்ஸாம் இருக்குன்னு சொல்றன்னல்ல அப்படியும் நான் வரனுமா, சரி அப்ப எக்ஸாமில பெயிலாட்டா என்ன கேட்கக்கூடாது என்று சொன்னான் அன்பு . இதைக்கேட்ட அவனின் தாய் சரி சரி நீ வீட்லேயே இரு எக்ஸாமுக்கு ஒழுங்கா படிச்சிட்டு நல்லா எழுது. நாங்க ரெண்டுபேரும் போயிட்டு வரோம் என்று சொல்லிவிட்டு தமிழ்ப்பிரியனும் பிரீத்தியும் புறப்பட்டுச் சென்றனர்.

அவன் தெனமும் நூலகம் செல்வது வழக்கம். வழக்கம் போலவே நூலகம் சென்றான். அங்கே ஒரு வரலாற்று நாடக நூல் என்னும் புத்தகத்தை எடுத்து வந்தான். ரெண்டு நாள்கள் அவன் அந்த புத்தகத்தைத் தொடவே இல்லை. அந்த ரெண்டு நாள்களில் ஏதோதோ புத்தகங்களைப் படித்துக்கொண்டு இருந்தான். சரி இந்த வரலாற்று புத்தகத்தை எடுத்து வந்தோம் தலைப்புவேற நல்லா இருக்கு. அதனால இன்னிக்கு இந்த புத்தகத்தைப் படித்தேத் தீரனும் என்ற ஆசையின் வெறியில் படிக்கத் தொடங்கினான். சுமார் ரெண்டு மணிநேரம் படித்துக்கொண்டே இருந்தான். அட புத்தகத்தை வய்க்கலாமின்னு நெனச்சா படிக்க படிக்க இன்ரெஸ்ட்டா இல்ல இருக்கு. அட நூலாசிரியர் நல்லாத்தான் எழுதியிருக்கிறார் என்று தன் மனதில் பேசிக்கொண்டான்.

கதவு தட்டப்படுகிறது என்னடா இது நாமதான் வரலாற்று நாடகநூல் படிக்றோம். அதுவும் விறுவிறுப்பாக அல்லவா கதை ஓடிக்கிட்டிருக்கிறது என்ற சலிப்புடன் எழுந்து கதவினைத் திறந்தான். அவனுடைய அம்மாவைக்கண்ட அவன் அம்மா அப்பா வரலியா ? நீ மட்டும் வந்திருக்க …அப்பா என்ன முதல்ல போகச்சொல்லிட்டு பின்னாடி வரேன்னு சொன்னாரு. ஏம்மா ரெண்டு பேரும் ஒன்னாவே வந்திருக்கலாம்மில்ல என்பதற்கு, இல்லப்பா என்ன சொல்றது அப்பா சொல்றத கேட்டு கேட்டு பழக்கமாயிடுச்சு அதனால்தான் நா வந்திட்டேன் என்று கூறினாள் பிரீத்தி.

அம்மா சாப்பாடு இல்ல ஏதாவது செய்யும்மா எனக்கு பசிக்குது. சீக்கிரம் செய்யும்மா என்று சொன்னவுடனே நீ இன்னும் சாப்பிடல, இல்லம்மா சாப்பிட்டன் இருந்தாலும் பசிக்குதும்மா என்றான். இதைக்கேட்ட அவன் தாய் சரி சரி நா பூரி செய்யறன் என்று சொல்லிவிட்டு சமையலைக்குச் சென்றாள்.

அவன் அந்தப் புத்தகத்தப் படிக்காமல் விடுவதில்லை என்று சொல்லிக்கொண்டே படிக்க ஆரம்பித்தான். படிக்க படிக்க அவனை அறியாமலேயே ஒருவித பயத்தில் ஆழ்ந்துவிட்டான் அன்பு. அப்போது பார்த்து கரெண்ட் நின்னுபோச்சு. இப்ப போய் திடீரென கரெண்ட் ஆப் ஆயிடுச்சே என்று புலம்பிக்கொண்டு இருந்தான்.

அன்பு அந்த விளக்கை முதல்ல ஏத்துப்பா பெறவு டார்ச் லைட்டை எடுத்து ஜெனரேட்டரை ஸ்டார்ட் பண்ணுப்பா என்றாள் அவனது தாய். அதைச் செய்துவிட்டு தன் படிப்பில் இறங்கினான் அன்பு. என்னப்பா படிச்சிகிட்டே இருக்க நாளைக்குத்தான் படியேன். இல்லனா சாப்பிட்டாவது போய் படியேன் என்பதைக் கேட்ட அன்பு, இல்லம்மா கதை சூப்பரா போயிட்டிருக்கு நானும் சீக்கிரமா படிச்சிட்டு வய்க்கலாமின்னுதான் பாக்கறன் முடியலம்மா, இரும்மா படிச்சிட்டே தூங்குறேன் என்றான். சரி நீ படிச்சிட்டே தூங்கு ஆனால் அதுக்கு முன்னாடி சாப்பிட்டு விட்டு தூங்கு என்றாள் பிரீத்தி. மேலும் எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு நான் தூங்கப் போறேன்னு சொல்லிவிட்டு தன் படுக்கறை நோக்கி நகர்ந்தாள் அன்புவின் தாய்.

அவன் அந்த ஜெனரேட்டர் வெளிச்சத்தில் தனியாக உட்கார்ந்து கொண்டு படித்துக்கொண்டே இருந்தான். நேரம் 12மணி ஆகிய போது பிரீத்தி எழுந்து அன்பு தூங்குப்பா, நாளைக்குச் சீக்கிரம் எழுப்பிவிடறன் அப்ப படிச்சுக்கோ என்றாள். இல்லம்மா நான் இந்த புத்தகத்தைப் படிச்சிட்டே தூங்குறென் நீ போய் தூங்கும்மா என்று சொல்லிவிட்டு மீண்டும் படிப்பில் ஆழ்ந்தான்.

அன்பு அந்த புத்தகத்தைப் படித்துவிட்ட மகிழ்ச்சியில் தூங்க நினைத்து தூங்கப் போகிறான். அவனது அறையில் ஒரு துண்டு தொங்குவதைப் பார்த்து அவன் கதையில் படித்த ஒரு பாம்பின் தோற்றமே அவனுக்குத் தெரிந்தது. அம்மாமாமா…. என்று கனத்தக்குரலில் கத்தினான். என்னப்பா இன்னாச்சு என்று அலறிக்கொண்டு அவனது அம்மா கேட்க இங்க பாரும்மா ஒரு பெரிய பாம்பு தொங்குது என்று சொல்ல அடச்சீ அது பாம்பு இல்லப்பா துண்டுதான் என்று உண்மையைச் சொல்லிவிட்டு சரி நீ பயப்படாம தூங்கு எனக்கும் ரொம்ப தூக்கம் வருது என்று தூங்கப் போய்விட்டாள்.

அவன் தூங்க நினைத்து மெல்ல மெல்ல கண்களை மூடுகிறான். கதையில் படித்த அந்தப் பெரிய பாம்பினை இளவரசன் இளவரசியைக் காப்பாற்ற நினைத்து உடனே தன் உறையில் உள்ள வாளை எடுத்து அந்தப் பாம்பை வெட்டி விடுகிறானே. மிக மிக தைரியமான செயல்தான் என்று பாராட்டிக் கொள்கிறான். அந்தத் துண்டைப் பார்த்து இளவரசா பாம்பு பாம்பு என்று கத்திக்கொண்டே தன் இரு கண்களை இறுக்கமாக மூடிக்கொள்கிறான்.

அட என்னடா இது அந்தக் கதையினை ஏன்தான் படித்தோனோ தெரியல, படிக்காமலேயே இருந்திருக்கலாம். ஒரே பயமா இருக்குது . இனிமே வரலாற்று கதைகளோ நாடகங்களோ படிக்கவே கூடாது. சரி தூங்கலாம் என்று நெனச்சு தூங்க நினைக்கிறான். ஆனால் அவனால் தூங்கவே முடியவில்லை .

ஐய்யய்யோ அந்த வீரன் மன்னனைக் கொல்ல வரானே . இல்ல இளவரசன் காப்பாத்தி விடுவாரு, நினைத்த மாதிரியே இளவரசரு அவனைக் கொன்னுட்டாரே அவனைப் போல எனக்கும் தைரியம் வரனும். சரி இளவரசன் ஏன் அந்த ஷீலா துரத்தி துரத்தி காதலிச்சா? பெறவு ஏன் அவனையே கொல்ல நெனச்சா? ஆமாம் இளவரசனோட சூழல் அப்படி. அவன் அம்மாதான் அப்படி அவன்கிட்ட சத்தியம் வாங்கிட்டாளே நீ எந்த பொண்ணையும் காதலிக்கக்கூடாது. நான் பார்த்து வைக்கிற பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கனும் . இதுக்கும் அந்த ஷீலா இளவரசனைக் கொல்ல நெனச்சதுக்கும் எந்த சம்பந்தம். ஆமாம் இளவரசன் அவளைக் காதலிப்பது போல நடிச்சிட்டானில்ல அதான். சரி இதையெல்லாம் நான் ஏன் நெனக்கிறேன்னு தெரியில. தூங்குவோம் என்று மீண்டும் மீண்டும் தூங்க முயற்சிக்கிறான்.

தூக்கம் அவன் கண்களை வந்தடையவில்லை. மீண்டும் மீண்டும் அந்தக் கதையின் நிகழ்ச்சியே அவனைக் கொல்கிறது. கண்களை மூடுகிறான். இளவரசன் ஏன் பட்டத்தரசியானவங்கிட்ட நான் எந்த பொண்ணையும் காதலிக்கமாட்டன் என்று சத்தியம் செஞ்சான். ஒரு தனி மனிதன் அவன் விருப்பப்படி காதலிப்பது தவறா என்ன?

தப்புதான் அது இளவரசனைப் பொருத்தவர ஏன்? என்று அவனுடைய மனசு கேட்க அவன் திறம மிக்கவன், அந்நாட்டிற்கே இளவரசன் அதுமட்டுமா? அவனுக்குக் கீழ் ஆட்சி செய்யும் குறுநில மன்னர்கள் வருடா வருடம் கப்பம் கட்றாங்க இப்படிப்பட்ட திறம மிக்கவன், செல்வத்தை உடையவன் அவனுக்கு ஏத்ததா இல்லனா ? கொஞ்சம் கொறஞ்சவங்கதான் இளவரசன திருமணம் செஞ்சிக்க முடியும். அது சரிதான் அப்படியிருந்தும் அந்த ஷீலாவை ஏன் காதலிக்கிறதா சொல்லி ஏமாத்திட்டானே? ஏமாத்துக்காரன். அட தூங்கதானே படுத்தேன் ஏன் தூக்கம் வராம ஏதோதோ புலம்பிகிட்டிருக்கறம். கண்களை இறுக்கமாக மூடிக்கொள்கிறான். போர்வையைத் தன் முகம் முழுவதும் போர்த்திக் கொள்கிறான். இருப்பினும் அவன் மனதில் அக்கதைப் பற்றியே ஓடிக்கிட்டிருக்கிறது.

சரி மன்னன்தான் சொல்லிட்டாரு. தனக்கு வரி கட்டாத அக்குறுநில மன்னனிடம் சென்று அமைச்சரே நீர் போய் வரிகட்டுகின்றாயா? இல்லையா? என்று கேட்டுவிட்டு வரச்சொன்னார். அதைப்போலவே அமைச்சரும் போய் மன்னரே, எம் மன்னன் அதாவது உனக்கும் மன்னன் எனக்கும் மன்னன் உங்களிடம் சென்று தாங்கள் இந்த ஆண்டு வரியினை ஏன் செலுத்தவில்லை, சீக்கிரமே செலுத்துகின்றீரா? இல்லையா? என்று கேட்டுகிட்டு வரச் சொன்னார்.

அமைச்சர் கேட்டது சரிதான் ஏன்? அந்த குறுநில மன்னன் என்னால வரி செலுத்த முடியாது என்கிறார். ஆமாம் போர் தொடங்குவதற்கே அதுதானே காரணம். அமைச்சர் வந்து மன்னனிடம் மன்னா தங்கள் ஆட்சியினைப் பற்றி அக்குறுநில மன்னன் தகாத வார்த்தைகளால் பேசிவிட்டான். என்ன எவ்வளவோ திட்டிவிட்டான். அது சரி இருப்பினும் தாங்களைப் போய் வேறுவேறு விதமான வார்த்தைகளால் பேசியதுதான் என்னால தாங்கிக்கொள்ள முடியல. ஆகவே மன்னா தங்களை மதிக்காத அக்குறுநில மன்னனுக்கு தங்களின் ஆட்சியின் பெருமையையும் வீரத்தையும் காட்ட வேண்டாமா? உடனே நால்வகைப் படைகளுக்கு கட்டளையிடுங்கள். அவனோடு போர் புரிந்து அவனை வெற்றி கொள்வோம். சீக்கிரம் என்னுடைய ஆசை நிறைவேறுமா? மன்னா என்றார் அமைச்சர். அமைச்சர் ஏன் இவ்வளவு கோபமாக பேசுகிறார். ஆமாம் அந்த குறுநில மன்னன் அரசரையும் அவரையும் அவமானப்படுத்திவிட்டான் அல்லவா அதான் என்றான் அங்கிருந்தவர்களில் ஒருவன்.

சரி அப்புறம் என்னாச்சு. ஆம் மன்னன் நான் போர் செய்யப்போனால் என் பெருமை, வலிமைகள் எல்லாம் என்னாவது அதனால் இளவரசா நீ சென்று அவனை வென்று வா என தன் மகனுக்கு ஆணையிட்டார் அரசன். உடனே இளவரசன் மன்னா தாங்கள் இட்டுள்ள பணியினை இன்பமாக ஏற்றுக்கொள்கிறேன். பேரரசே நான் வாகைமாலை அணிந்து கொண்டுதான் நம் நாடு திரும்புவேன். அவ்வாறே ஆகட்டும் என் அருமை மகனே வென்று வா என் மைந்தா. அவனுடைய அம்மாவும் இளவரசா உன் தந்தையின் புகழை நிலைநாட்டிவிட்டு வா என்றார்.

பட்டத்தரசி இளவரசனை நோக்கி, இளவரசா நில், இந்த உன் குலதெய்வக்கடவுளையும் கொற்றவை தேவியையும் வணங்கி விட்டு போ உனக்குத்தான் வெற்றி, இந்தா நெற்றியினைக் காட்டு குங்குமம், விபூதி வைக்கிறேன்னு நெற்றியில் வைத்தார். இளவரசன் போருக்கு புறப்பட்டுவிட்டார். அட கருமமே ஏன் அந்தக் கதையைப் பற்றியே நா நெனக்கிறேன்னு தெரியலையே. அம்மா அம்மா என்று அழைத்துக்கொண்டே இருட்டில் தன் அறையைவிட்டு சமையலறைக்குச் சென்று ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் வந்து படுத்தான். முன்னர் செய்ததுபோலவே இரு கண்களையும் இறுக்கமாக மூடிக்கொண்டு படுக்கிறான் ஆனால் அவனுக்குத் தூக்கமே வரவில்லை.

இளவரசன் போனானே என்னவாயிருக்கும், ஆமாம் நான்தான் படிச்சிட்டேனே. இளவரசன் போர்க்களத்தில் அக்குறுநில மன்னனைப் போருக்கு அழைக்கிறார். முதலில் வரமாட்டேன்னு சொன்னார். பிறகு அவனது அமைச்சரும் சேனாதிபதியும் இவ்வாறு சொன்னார்கள். மன்னா நாம் இப்போது போரிட்டு வெற்றி பெறமுடியவில்லை என்றால் அவர்கள் நேராக நம்நாட்டை கொள்ளையடித்துக் கொண்டு சென்றுவிடுவார்கள். அதற்கு நாம் இடம்தரக்கூடாது. இதனையடுத்து இருநாட்டவரும் போரிடுகின்றனர். அன்பு அய்யோ அய்யோ என்கிறான். இருவரும் ஏன் சண்டை போடுறாங்க. அதான் தெரியுமே.

நினைக்கவே அருவருப்பாக இருக்கிறது. உடைந்த தலையும் ,கடல்போன்ற ரத்தமும், மனித வீரர்களின் மூளைகள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. தசைப்பிணங்கள் அடுக்கடுக்காக வைத்த மாடிப்படி போன்று உள்ளன. அய்யோ அங்க ஒருவனின் கையை இன்னொரு வீரன் வெட்டுகிறானே, அட இன்னொரு வீரன் அந்த வீரனின் மார்பில் ஈட்டியால் குத்தறானே, இப்படி போர்க்களத்தில் நடக்கின்ற ஒவ்வொரு காட்சியும் அன்புவைத் தொந்தரவு செய்தன.

நெனக்கும்போதே என் நெஞ்சு உடைஞ்சிடும்போல இருக்கிறதே. அங்கே எலும்புகள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. பிணங்களை மிருகங்கள் வந்து அய்யோ , அதனுடைய விரல்கள் ஏன் இவ்வளவு பெரிதாக இருக்கின்றன. அந்த வீரனின் கண்களைத் தன் விரல்களால் பிடுங்கி சாப்பிடுகிறதே. அவனுடைய மார்பினைப் பிடுங்கி திண்கிறதே. பிணங்களின் மேல்நின்று எல்லா விலங்குகள் மற்றும் பறவைகளும் நாட்டியம் ஆடுகின்றதே. நெனைக்கும்போதே என் கண்களைப் பிடுங்குவதைப் போலவே இருக்கிறதே.

வெளியில் சென்றுவிட்டு சற்று காற்று வாங்கிவிட்டு பின்பு வந்து படும்போம் என்று நினைத்துக்கொண்டே வெளியில் செல்கிறான். நன்றாக காற்று வீசுகிறது. அவனும் சென்று உலவிவிட்டு சற்று திரும்பி பார்க்கிறான் அந்தக்கதையில் படித்த மிருகங்கள் எல்லாம் தன்னைத் துரத்துவதாக எண்ணிக்கொண்டு தன்னுடைய அறைக்கு வந்து ஓடி அடித்துக்கொண்டு வந்து தூங்க முயற்சிக்கிறான். ஆனால் முன்புபோலவே அவனுக்குத் தூக்கம் வரவில்லை .

தெருவுல பார்த்த விலங்குகள் எல்லாம் ஏன் என் அறைக்குள் நுழைகின்றன. அய்யோ சிங்கம் என்னை கடிக்கின்றதே…சிறுத்தை என் கண்களைப் பிடுங்குகின்றதே. தயவுசெய்து என்னை விட்டுவிடு என்று அன்பு கத்துவதைக்கேட்ட அவனுடைய அம்மா என்னப்பா ஏன் கத்தற என்பதற்கு, அன்பு ஒன்னுமில்ல அம்மா என்றான். சரி சரி பயப்படாம தூங்கு என்று சொல்ல, பயப்படாதவா அய்யோ என்னை இந்த விலங்குகள் எல்லாம் சாகடிக்கிறதே என்று வருந்துகிறான். சரி என்று நினைத்து தூங்க ஆரம்பித்தான். அவன் விலங்குகள் எல்லாம் ஒன்று சேர்ந்து நம்மை கொன்றுவிடும் என்று நினைத்துக் கொண்டே தூங்கினான்.

காலையில் கதிரவன் தன் வானமேடையில் தெனமும் ஆடுவதைப்போன்றே செங்கதிர்களைக்கொண்டு எழுந்தான். காலை விடிந்துவிட்டது. கதவு தட்டப்பட்டு பிரீத்தி பிரீத்தி என்ற குரல் கேட்கிறது. தன் அறையில் படுத்துக் கொண்டிருந்தவள் ஓடிவந்து கதவைத் திறக்கிறாள். அப்போதுதான் அவளுக்கு விடிந்தது தெரிந்தது. அவள் தன் உடல்சோர்வினால் அதிக நேரம் தூங்கிவிட்டாள்.

என்ன பிரீத்தி ரொம்ப நேரம் தூங்கிட்ட போல என்று தமிழ்ப்பிரியன் கேட்க ஆமாங்க என்று தலையசைத்தாள். சரி நீயே இவ்வளவு நேரம் தூங்கி இருக்கிற அன்பு எழுந்திட்டானா என்று கேட்க நான் பார்க்கலீங்க நீங்க போய் பாருங்க என்றாள். சமையலறையில் வேலைசெய்துகொண்டே தமிழ்ப்பிரபாவின் பேட்டை நாவலை படித்துக் கொண்டிருந்தாள் பிரீத்தி. அன்பு அன்பு என்று தன் மகனின் அறைக்கதைவைத் தமிழ்ப்பிரியன் தட்டிக்கொண்டிருந்தார். அன்பு அசராமல் இருந்தான்.

தன் கணவனின் சத்தம்கேட்டு பிரீத்தியும் வந்து கதவைத் தட்டினாள். அப்போதும் கதவுத் திறக்கவில்லை. இருவரும் அருகில் இருக்கும் ஜன்னலில் பார்த்து நிம்மதி அடைந்தனர். ஜன்னலில் கம்பிகொண்டு அடிக்க அன்பு தான் படித்துக்கொண்டு இருக்கும் மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு கதவைத் திறந்தான். ஏம்பா அன்பு படிக்க வேண்டியதுதான் அதற்காக இப்படியா உலகத்தை மறந்துவிட்டு படிப்பது என்று இருவரும் கேட்க பின்ன என்ன அம்மா உலகமே விழித்துக்கொள்ள வழிகாட்டிய நாவலில் இருந்து என்னை எப்படி விடுவித்துக் கொள்வேன் என்றான். ஆமாம் இந்த நாவலை நீ என்ன மொத முறையா படிக்கிற, இல்லம்மா ஐந்தாவது முறைதான் என்றான். ஒவ்வொரு முறையும் படிக்கின்ற போது ஒரு புதிய தெம்பு கிடைக்கின்றது என்று சொல்ல இருவரும் சிரித்தனர். இவன் திருந்தவே மாட்டான் வாங்க நாம போவோம் என்று இருவரும் தன் போக்கில் சென்றனர். மீண்டும் அன்பு தாய் நாவலில் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான் அன்பு…..அவனுக்கான உலகம் மீண்டும் மலரத் தொடங்கியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *