“விடிந்தால் போகிப் பண்டிகை.
“ராமு…! ராமு!!” மகனைத் தூக்கத்திலிருந்து எழுப்பினார் அப்பா.
அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்புப் படிக்கிறவன் ராமு.
இரவு படுப்பதற்கேத் தாமதமாகிவிட்டது.
எப்போதும் அம்மாவின் அரவணைப்பில் தூங்கும் ராமு, முதல் முறையாக அப்பா அன்பரசனோடு தனியாக இருந்தான்.
புதுச் சூழலில் தூக்கம் வரவில்லை.
அதோடு அன்று பள்ளியில் நடந்த ‘புகையில்லா போகி’ என்ற நிகழ்ச்சியில் பேசிய நகர் மன்றத் தலைவி துர்க்கா ராஜசேகர் அவர்களின் சிறப்புப் பேச்சு மீண்டும் மீண்டும் மனதில் சுழன்று கொண்டே இருந்தன.
அவனை அறியாமல் எப்போது தூங்கினானோ , அவனுக்கேத் தெரியாது..
விடிவதற்கு முன்னே அவனை எழுப்பியதால் அவனால் நிதானிக்க முடியவில
“ம்…ம்..ம்…” என்று முனகினான்.
சிணுங்கியபடியே புரண்டுப் படுத்தான்.
‘இட் ஈஸ் ட்டூ எர்லி…! ஐந்து நிமிடம் சென்று எழுப்புவோம்’
அப்பால் சென்றார்.
அன்பரசன், தன் சகோதரி மட்ட போனில் சொன்ன எல்லாவற்றையும் ‘செக் லிஸ்ட்’ வைத்துக் கொண்டு மீண்டும் ஒரு முறை சரியாக உள்ளதா என்று பார்த்தார்.
வங்கி பாஸ் புத்தகத்தை எடுத்து ஒரு முறை பேங்க் பேலன்ஸ் பார்த்துக் கொண்டார். டாக்டர் கேட்கும் பணத்தைக் கட்டவேண்டுமே..!
சமாளித்துவிடாலாம் என்று அன்பரசனின் மனசு நினைத்ததை அவர் முகம் காட்டியது.
‘ஃபிரிட்ஜ்’ஜிலிருந்து பால் பாக்கெட் எடுத்துக் கத்தறித்து வால் கிண்ணத்தில் ஊற்றினார்.
பொங்கப் பொங்கப் காய்ச்சினார்.
தெர்மாஸ் ஃப்ளாஸ்க்கில் ஊற்றி மூடினார்.
காபி கலந்து குடித்தார்.
ஜீனி ஒரு ‘ஸிப் லாக் கவர்’ல் போட்டுக் கொண்டார் அன்பரசன்.
ஹார்லிக்ஸ் பாட்டில், கலக்குவதற்கு ஸ்பூன்கள், டம்ளர்கள், டவராக்கள் என எல்லாம் ஒரு ஷாப்பர் பைக்குள் சென்றது.
‘பெரிய ஹீட்டர் ட்ரம்’ ல் குடிப்பதற்கான கொதி நீர் நிரப்பிக் கொண்டார்.
ஐந்து நிமிடத்திற்கு பத்து நிமிடங்களே கடந்து விட்டது.
மீண்டும் சென்று ராமுவை எழுப்பினார் அன்பரசு.
வீட்டில் யாரும் இல்லாமல் எப்படி தூங்குகிற குழந்தையை வீட்டில் விட்டுவிட்டுப் போக முடியும்.?
வேறு வழியின்றி விடி காலையிலேயே தூக்கத்திலிருந்து சிறுவனை எழுப்ப வேண்டிய நிர்ப்பந்தம்.
பின் பனி வேறு. குளிர் வாட்டியது.
அக்கம் பக்கம் யாரேனும் இருந்தால் கூட சொல்லிவிட்டுப் போகலாம். அதற்கும் வாய்ப்பில்லை. புறநகர் பகுதியில் இங்கொன்றும் அங்கொன்றுமாக வீடு.
இந்த முறை எழுப்பியபோது, ராமு உரத்து முணகினான், லேசாக அழுதான்.
வேறு வழியில்லாததால் உருட்டி உருட்டி ராமுவைத் தொந்தரவு செய்தார் அன்பரசன் .
அந்த நேரத்தில் செல் ஃபோன் அடித்தது.
அதைத் தோளில் கிடத்திக் கொண்டு எதிர்முனைப் பேச்சைக் காதில் வாங்கினார் அன்பரசு
“………………….”
“ அப்படியா…” அதிர்ந்தார் அன்பரசன்.
“………………….”
“பனிக்குடம் உடைஞ்சாச்சா…”
“………………….”
“லேபர் வார்டுக்குள்ள போயாச்சா…! உடனே வரேன்…” பரபரப்பு அதிகமானது.
போன் கட் செய்தார்.
இந்த முறை சற்றே ராமுவை எழுப்புவதில் தீவிரம் இருந்தது..
“ராமு சீக்கிரம் போகணும் எழுந்திரு… பாப்பா பொறக்கப் போவுதாம். ஆஸ்பத்திரீலேந்து அத்தை ஃபோன் பண்ணினாங்கடா…!”
ராமு, அப்பா சொன்னதைக் காதில் வாங்கியதும்தான் நிலைமை புரிந்தது அவனுக்கு.
முதல் நாள் அத்தையோடு, தன் அம்மாவை பிரசவ ஆஸ்பத்திரியில் விட்டு விட்டு, அப்பாவோடு வீடு திரும்பியது நினைவு வந்தது ராமுவுக்கு.
தாய்ப் பாசம் மூளையிலுள்ள செல்களைத் தூண்டிவிட, வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல ‘விருட்’டென்று எழுந்தான்.
ஓட்டமாய் ஓடினான்.
பல் துலக்கினான்.
இந்த நேரத்தில் அன்பரசன் ஆட்டோ டிரைவருக்குப் ‘ஃபோன்’ செய்தார்.
ராமு, கைக்குக் கிடைத்த ட்ரௌசர் சட்டையைப் போட்டுக் கொண்டு ஓட்டமும் நடையுமாகக் கிளம்பினான்.
வழக்கமான ஆட்டோ வந்து வீட்டு வாசலில் நின்றது.
பயணமானார்கள் அன்பரசனும் ராமுவும்.
அன்பரசனின் முகம் இறுக்கமாக இருந்தது.
டிவி சீரியல்களில், மனைவி குழந்தைப் பேற்றிற்காக லேபர் வார்டுக்குள் இருக்கும்போது கணவனின் முகத்தில் ஒரு விதமான இறுக்கம் அப்பியிருப்பதைப் போல தன் அப்பாவின் முகத்தில் காணப்படுவதாக உணர்ந்தான் ராமு.
லேபர் வார்டுக்கு வெளியே அத்தை பதற்றத்துடன் உட்கார்ந்திருந்தாள்.
அன்பரசனும், ராமுவும் வந்து அருகில் நின்றதைக் கூடப் பாராமல், மெய் மறந்து இறைவனைப் பிரார்த்திக் கொண்டிருந்தாள் அத்தை.
அத்தையின் பெயரைச் சொல்லி அழைத்தார் அன்பரசு
“வா; அன்பரசு, லேபர் வார்டுல அப்பே பிடிச்சிப் போராடறாங்க.”
“நார்மலுக்கு வாய்ப்பிருக்காமா?” தாழ்ந்த குரலில் கேட்டார் அன்பரசு.
“அநேகமா ஆயுதம் போட்டுதான் எடுப்பாங்க போல…நல்லபடியா தாயும் சேயும் பிரியணும். கர்ப்ப ரஷிகாம்பிகைக்கு வேண்டியிருக்கேன்.”
இது போன்ற டயலாக்குகளையெல்லாம் சினிமாக்களிலும், டிவி சீரியல்களிலும் அதிகம் பார்த்திருந்த ராமு, ‘பிரசவத்தின் போது இப்படிப்பட்ட பேச்சுக்களும் கவலைகளும் சகஜம் போல!’ என்று நினைத்துக் கொண்டான்.
லேபர் வார்டு கதவு திறந்தது.
ஒரு நர்ஸ் கையில் குழந்தையை வைத்திருந்தாள்.
குழந்தை அழவில்லை.
சிணுங்கல் கூட இல்லை.
“அப்நார்மல் சைல்ட்” என்றார் டாக்டர்.
“ரீசன்..?” அன்பரசன் கேட்டார்.
“என்ன சொல்றீங்க டாக்டரம்மா?” பதறினாள் அத்தை.
“அன் நோன் ரீசன்.. காரணமெல்லாம் சொல்ல முடியாது.”
“சொல்ல முடியாதுன்னா?”
“சுற்றுச் சூழல் பாதிப்புனால, காற்று மாசுனால, புகை மாசுனால இப்படி எதனாலயும் பாதிச்சிருக்கலாம். எந்த இதுதான்னு எதையும் உறுதியாச் சொல்ல முடியாது..”
சொல்லிவிட்டு டாக்டர் குனிந்து குழந்தையைக் காட்டினார்.
ஒரு தசைப் பிண்டம்போல உருவற்று இருந்தது குழந்தை.
பார்க்கும்போதே அழுகை பீரிட்டுக் கொண்டு வந்தது ராமுவுக்கு.
நேற்றைய தினம் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ‘புகையில்லா போகி’ பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நினைவில் சுழன்று சுழன்று அடித்தது ராமுவுக்கு.
டயர், பிளாஸ்ட்டிக், எலக்டரானிக் கழிவுகள், தெர்மாகோல் போன்றவற்றைப் பொது இடங்களில் எரிப்பதனால் ஏற்படும் ‘குளோபல் வாமிங்” பற்றி சிறப்பு விருந்தினர் பேசியது நினைவுக்கு வந்தது.
கண்காட்சியைத் திறந்து வைத்து டாக்டரம்மா, பலவித குறை உள்ள குழந்தைகளின் படங்களுடன் பல வித மாசுக்களால் கர்பிணிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், குறையுள்ள பிரசவங்களில் பிறந்த தசைப் பிண்டங்களையும் காட்டியது மண்டையில் அடித்தது ராமுவுக்கு.
ஃபிஸிக்கல் டைரக்டர், முரளீதரன் சார் சொல்லச் சொல்ல ‘புகையில்லா போகி’க்கான உறுதி மொழியைச் சொன்ன அந்த கணம் மனதைப் பிசைந்தது ராமுவுக்கு.
தம்பியானாலும் சரி , தங்கச்சியானாலும் சரி குறையில்லா சிப்ளிங்தான் எனக்கு வேணும்…”
உரக்கக் கத்திக்கொண்டே எழுந்தான் ராமு.
அன்பரசன், கர்ப்பிணியாக இருந்த ராமுவின் அம்மா, பாட்டி மூவரும் போர்ட்டிகோவில் இருந்து உள்ளே ஓடி வந்தனர்.
“என்னடா ஆச்சு ராமு.. எல்லாரும் பதறினார்கள்.”
போகிப் பண்டிகையண்ணிக்கு கொளுத்துறதுக்கு நம்ம வீட்டுப் போர்ட்டிகோவுல குவிச்சி வெச்சதையெல்லாம் கொளுத்திட்டீங்களா..?”
அதிர்ச்சியுடன் கேட்டான் ராமு.
“அதைக் கொளுத்தத்தான் போயிக்கிட்டிருந்தோம். நீ கத்தின கத்தல்ல வந்துட்டோம். ஏன்? ஏன் அப்படிக் கேக்குறே?” கேட்டார்கள் எல்லோரும் கோரஸாக.
உனக்குத் தம்பிப்பாப்பா வேணுமா, தங்கச்சிப் பாப்பா வேணுமானு அடிக்கடி கேப்பீங்கதானே பாட்டி,”
“ஆமாம் அதுக்கென்ன இப்போ?”
“என்னடா ராமு, இப்படிச் சம்பந்தமில்லாமச் பேசறியே ராமு, உனக்கு என்னாச்சு?’
அம்மா கவலையோடு கேட்டாள்.
எனக்கு தம்பியோ தங்கச்சியோ எதுவானாலும் பரவாயில்லைம்மா. குறையில்லாத சிப்ளிங்கா இருந்தாப் போதும். அதுக்கு நீங்க எல்லாரும் எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணணும்.”
என்னவென்று புரியாமல் பார்த்தனர் அப்பா,அம்மா,பாட்டி மூவரும்.
நம்ம வீட்டுல இருக்கற எந்தக் குப்பையையும் கொளுத்தவேக் கூடாது.
அதைத் துப்புவுப் பணியாளர் வரும்போது தரணும்”
சொல்லிய ராமு பள்ளியில் நடைபெற்ற
‘புகையில்லா போகி’
என்ற நிகழ்வையும், புகைமாசால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பாதிப்பைப் பற்றி மருத்துவர் சொன்னதையும் சொன்னான்.
கர்ப்பிணித் தாய் ராமுவைத் தழுவி உச்சி முகர்ந்தாள்.
சமுதாய உணர்வினை ஊட்டிய சபாநாயக முதலியார் இந்து மேனிலைப் பள்ளியையும், மகனின் சமுதாய உணர்வையும் நினைத்துப் பெருமைப்பட்டாள்.
– விகடன் 11- 01-2023