அன்புள்ள அம்மா அப்பாவுக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 17, 2018
பார்வையிட்டோர்: 9,180 
 

மாலை நேரப் பரபரப்பில் இருந்தது சென்னை மாநகரம்.

நாளுக்கு நாள் பெருகி வருகிற வாகன நெரிசலால் உருவாகும் புகையாலும் இரைச்சல்களாலும் கோடைக் காலம் வருவதற்கு முன்பேயே மாநகரம் சூடாகி வெக்கை அதிகமாகி இருந்தது.

நெருங்கிய தோழிகளான வர்ஷாவும் நிஷாவும் சீருடையில் பள்ளி முடிந்து மாலையில் பள்ளி வளாகத்தில் கைகோர்த்தபடி நடந்து வந்தனர். இருவரும் சென்னையில் உள்ள அந்தத் தனியார் பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவிகள்.

அவர்களை அழைத்துச் செல்ல தினமும் மாலையில் பள்ளிக்கு வெளியே விலையுயர்ந்த கார்களுடன் டிரைவர்கள் காத்திருப்பார்கள். இருவரும் மிகவும் வசதி படைத்த பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வர்ஷாவின் குடும்பம் சென்னையிலிருந்தாலும் அவளுடைய தந்தை மட்டும் அடிக்கடி தில்லியில் உள்ள அவரின் வர்த்தக நிறுவனத்தின் கிளைக்கு சென்று வருவார்.
மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் உற்சாகம் அனைவரின் முகத்திலும் தெரிய வர்ஷாவின் முகம் மட்டும் மிகவும் வாடிப்போயிருப்பதைக் கவனித்தாள் அவளின் தோழி நிஷா. வாடிய மலரைப் போலிருந்தது அவள்முகம்.

கடந்த சில நாட்களாக வர்ஷாவிடம் நிறைய மாற்றங்கள். எப்போதும் எதையோ பறி கொடுத்த மாதிரியிருந்தாள். என்ன வென்றுகேட்டால்
“ஒண்ணுமில்லை… லேசா தலைவலிக்கிறது…”
என்று பொய் சொல்லி வந்தவள் இன்று மனமுடைந்து அழுதுவிட்டாள்.

“எதுவாயிருந்தாலும் என்கிட்டே சொல்லுடி… மனசுக்குள்ளேயே வச்சிகிட்டு இருந்தா இன்னும் கஷ்டம் தான் அதிகமாகும்…” என நிஷா கேட்க வர்ஷா மனம் திறந்து பேசினாள்.

“நிஷா… நான் என் அம்மாவையும் அப்பாவையும் ரொம்பவும் நேசிக்கிறேன். ஆனால் என் வாழ்க்கையில் மட்டும் ஏன் இப்படி நடக்குதுன்னு தெரியலை. எது நடக்கக்கூடாதுன்னு நான் இவ்வளவு நாள் பயந்துகிட்டு இருந்தேனோ அது கடைசியா நடந்துடிச்சி. அவங்க ரெண்டு பேருக்கும் டைவர்ஸ் கிடைச்சிடுச்சி. இந்த வார சண்டே அன்னிக்கு என் அப்பா தில்லியிலிருந்து சென்னை வருகிறார். அடுத்த வாரம் நாங்கள் மூனுபேரும் நிரந்தரமா பிரியப் போறோம்… என்னாலதான் அதைத் தாங்கிக்கொள்ள முடியலை.
என் வாழ்க்கைக்கு இனி எந்த அர்த்தமுமில்லாத மாதிரி தோனுது எனக்கு. என்ன செய்யறதுன்னு ஒண்ணும் புரியலை…” என்று தன் மனதில் இருந்தவைளை தன் தோழியிடம்
கொட்டினாள் வர்ஷா.

நிஷாவிற்கோ என்ன சொல்லி அவளைத் தேற்றுவது என்று தெரியவில்லை. எப்படியாவது தன் தோழிக்கு உதவ வேண்டும் என்று நினைத்தாள். ஆனாலும் இந்த விஷயத்தில் தன்னால் என்ன செய்துவிட முடியும், வர்ஷாவிற்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்வதைத்தவிர என்று நினைத்துக் கொண்டாள்.

அந்த ஆண்டின் இறுதித் தேர்வு நெருங்கிக் கொண்டிருந்தது. அன்று இரவு வீட்டில் தன் அறையில் கடந்த மூன்று நாட்களாக மனதில் சுமக்க முடியாத பாரங்களுடன் உறங்காது தவித்த வர்ஷா , களைப்பில் இரவு எட்டு மணிக்கு முன்பே உறங்கிப்போனாள்.

நிஷாவோ வீட்டில் தன் அறையில் அமர்ந்து படிப்பதற்காக தன் பேக்கிலிருந்து ஆங்கில புத்தகத்தை எடுத்தாள். ஆனால் பள்ளியில் தன் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருக்கும் தோழி வர்ஷாவின் புத்தகத்தை அவசரத்தில் மாற்றி எடுத்து வந்திருப்பது தெரிந்தது.

அப்போது அந்தப் புத்கத்தின் நடுவே நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த அந்தக் காகிதம் அவள் கண்ணில்பட்டது. அது ஒரு கடிதம் போலிருந்தது. ஒருவேளே அது விவாகரத்து குறித்த ஆணையோ…அல்லது வர்ஷா எதையாவது கடிதமாக எழுதி இருப்பாளா… சந்தேகமாக இருந்தது நிஷாவிற்கு. அதை பிரித்துப் படிக்கலாமாவேண்டாமா என்று தயங்கினாள் நிஷா. தன் தோழியின் தற்போதைய மன நிலையில் அவள் தவறான முடிவெடுத்து விபரீதமாக எதுவும் நடந்துவிடக்கூடுமோ என்ற அச்சத்தில் ரகசியமாக அந்தக் கடிதத்தை பிரித்துப் படிக்க ஆரம்பித்தாள்.

அன்புள்ள அம்மா அப்பாவுக்கு,

உங்கள் மகளாக அல்லது முன்னாள் மகளாக எழுதியது.

இந்த வரிகள் உங்களுக்கு அபத்தமாகப் படலாம். இவைகள் அபத்தமெனில் இந்த அபத்தங்களை உருவாக்கியவர்கள்நீங்கள் இருவருமே.

என் வாழ்வில் எது நடக்கக்கூடாதென்று பயந்து கொண்டேயிருந்தேனோ அது இப்போதுநடந்தே விட்டது. எவ்வளவு எளிதாக எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு நீங்கள் இருவரும் நிரந்தரமாகப் பிரிந்து விட்டீர்கள்.

வாழ்ந்த வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்ட சந்தோஷங்களை,துக்கங்களை, உணர்வுகளை,உறவுகளை, குடும்பம், வீடு எனஅனைத்தையும் பொய்யாக்கிக் கலைத்துவிட்டீர்கள். இவைகள் அர்த்தமற்றவையாக ஆகிவிட்டபின் எனது இந்த வாழ்க்கையும் அர்த்தமற்றதாகிவிட்டது போல் உணர்கிறேன்.
எப்படி இப்படி நடந்துகொள்ள முடிகிறது உங்களால். ஆனால் எனது நிலமையைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். என்னால் உங்களைப் போல் அப்படி வாழ முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.

திடீரென்று ஒரு நாளில் முன்னாள் கணவனாகவும் முன்னாள் மனைவியாகவும் அறிவித்துக்கொண்டு பிரிந்து விட்டீர்கள்.ஆனால் என் நிலமை தான் என்ன…
எனக்கு ஒன்றும் புரியவில்லை.இனி நான் என்ன உங்கள் முன்னாள் மகளா….
இதை நிலையை நான் ஒரு நாளும் வேண்டியதில்லையே. பிறகு ஏன் என் மீது இதைத் திணித்துவிட்டீர்கள்?

சிறுவயதில் நான் நடக்கப்பழகிய நாட்களில் உங்கள் இருவரின் கைவிரல்களை இரு புறமாக எனது கைகளால் பிடித்துக்கொண்டு நடந்த அந்தப் புகைப்படத்தை நான் பத்திரமாக வைத்திருக்கிறேன் .. ஆனால் அந்தக்குழந்தைக்கு இருபுறமும் துணையாக இருந்த உருவங்கள் இன்று மறைந்ததோடு அந்தக்குழந்தையின் பார்வை பறிபோக இருளில் தடுமாறிக்கொண்டிருக்கிறது.

ஓரே இரவில் வாழ்வில் யாருமேயில்லாத அநாதையாகிவிட்ட அந்தக் குழந்தையைப் பார்க்க முடியாமல் பார்வையை பறிகொடுத்தவர்கள் உண்மையில் நீங்களே.
உங்கள் தரப்பு நியாயங்களை நீங்கள் பேசலாம். ஆனாலும் என்னைக் கொஞ்சம் பேசவிடுங்கள் என் மனதில் உள்ளவற்றைச் சொல்லி அழவிடுங்கள்.

உங்கள் உணர்வுகள், உரிமைகள், சுதந்திரம், சந்தோஷம் எதையுமே நான் புரிந்து கொள்ளாமல் மறுக்கவோ எதிர்க்கவோ இல்லை. அவைகள் உங்களுக்கானவை.
ஆனால் எனது உணர்வுகள்,கனவுகள், சந்தோஷங்கள் என எனக்குத்தான் எதுவும் இல்லை இன்று. எனக்கு என் குடும்பம்வேண்டும். அம்மாவும் அப்பாவும் இருக்கிற வீடு வேண்டும்…அவைகளை எனக்குத் திருப்பித் தருவீர்களா என்று கேட்கக்கூட முடியவில்லை என்னால் உங்களிடம். இனி எனது ஏக்கங்களை, கனவுகளை யாரிடம்சொல்வேன் நான். அவைகள் இனி ஒருநாளும் நிறைவேறாத பகற்கனவுகள்.

பிரிவது தான் உங்கள் இருவரின்முடிவெனில் நான் ஒருத்தி மட்டும் இந்தப் பூமியில் பிறக்காமலேயே இருந்திருக்கலாம். அல்லது நான் பிறக்கும் முன்பேயே நீங்கள் பிரிந்து போயிருக்கலாம்.

நான் ஒரு சமயம் விலையுயர்ந்த பொம்மை ஒன்றை கைத்தவறி உடைத்து விட்போது, ‘இதைக்கூடப்பத்திரமாக வைத்துக் கொள்ளதெரியவில்லை’ என என்னைத் திட்டிய நீங்கள்தான் இந்தவாழ்க்கையை என் சந்தோஷங்களை எப்படி உடைத்துவிட்டீர்கள். தவறுகள் யாருடையதோ தண்டனைகளை நிரபராதியான நான் மட்டுமே அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.

எனக்கு நினைவு தெரியாத நாட்களில் நேசித்து வாழ்ந்த நீங்கள் எனக்கு மெல்ல மெல்ல உலகம் புரிய ஆரம்பித்தபோது உங்களுக்குள் புரிதலற்றுப் போய் இறுதியில் என் வாழ்க்கையைப் புரியாத புதிராகப் புயலாக ஆக்கிவிட்டீர்கள்.

என்னைப் பொறுத்தவரை நீங்கள் இருவரும் இணைந்து வாழவேமுடியாத மோசமான தம்பதிகளோ, தாய் தந்தையரோ இல்லை. ஆனால் ஒருவருக்காக மற்றொருவர் இறங்கிவந்து விட்டுக் கொடுக்க மனமில்லாத ஈகோயிஸ்ட்டுகள். இப்படிச் சொல்வதற்காக உங்கள் மகளான என்னை மன்னிக்கவும்.

உங்களுக்கான பொது அடையாளங்கள் அனைத்தையும் அழித்தும் இல்லாமலும் செய்வதில் ஜெயித்துவிட்டீர்கள் நீங்கள் இருவரும். ஆனாலும் உங்களின் மகளான என்னை மட்டும் என்ன செய்வதாய் இருக்கிறீர்கள்.

உங்களில் யாருடன் இருப்பது என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. உங்கள் இரு கண்களில்எது வேண்டும் என்று உங்களிடம்யாரும் கேட்கப்போவதில்லை.

அன்பான தாய் தந்தைக்குப் பிறந்த பிள்ளைகள் அடுத்த பிறவியிலும் உங்கள் மகனாக அல்லதுமகளாகப் பிறக்க வேண்டும் என்பார்கள் . நானோ அடுத்த பிறவியிலாவது ஒருவரை ஒருவர் நேசிக்கும் தாய் தந்தைக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் .

இறுதியாக சில விஷயங்கள்.

இவைகளை உங்கள் மனதைப் புண்படுத்தவோ உங்கள் மீது குறை கூறவோ எழுதவில்லை. உங்கள் இருவரின் நியாயங்களை,உணர்வுகளை, வாதங்களை, உரிமைகளை நான் மதிக்கிறேன்.

பிரிந்த பின்னும் எனக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை, உதவிகளை, அக்கறையை நான் உணர்ந்து கொள்ள முயல்கிறேன்..பண விஷயத்திலோ என் தேவைகளிலோ எனக்கு எந்தக்குறையுமில்லாமல் கவனித்துக்கொள்கிறீர்கள்.

கூண்டில் ஒரு பறவையை அடைத்துவிட்டு அதற்கு வேளை தவறாமல் உணவு தரப்படுவது மாதிரி உணர்வது ஒருவேளை என் தவறாக இருக்கலாம். இவை அனைத்தையும் கடந்து இது ஒரு மகளின் ஏக்கங்கள், புலம்பல்கள் மட்டுமே. நாம் முன்பு மகிழ்ச்சி யோடு வாழ்ந்த அரண்மனை போன்ற இதே வீட்டில் கடந்த சில மாதங்களாக அன்னியர்களாகி ஓரே வீட்டில் தனித்தனி அறைகளில் சிறைப்பட்டு ஒருவருக்கொருவர் மனம் திறந்து பேச முடியாத சூழலில் வாழ்கிறோம். எனினும் இந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு அனுப்பப்போவதில்லை. இது எனக்காக நானே எழுதியது.

இனி நீங்கள் புது வாழ்க்கையைத் தேடிக்கொள்ள இருப்பதாகவும் கேள்விப்பட்டேன். அது உண்மையா என்று எனக்குத் தெரியவில்லை .உண்மையெனில், அவர்கள் எனக்கு என்ன மாதிரியான உறவுகளென்று எனக்குப் புரியவில்லை. ஆனால் ஒன்று அந்த உறவுகள் மூலம் பிறக்க இருக்கும் என் சகோதரனுக்கோ சகோதரிக்கோ மீண்டும் என் நிலமை வரவேண்டாம் என்று மட்டும் வேண்டுகிறேன்.

கடைசியாக ஒரு விஷயம்…

கடிதத்தின் தொடக்கத்தில் உங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்து
“அம்மா அப்பாவுக்கு” என எழுதியதற்காக, இறுதியாக ஒருமுறை மன்னிப்பு கோருகிறேன்.

இப்படிக்கு,
உங்கள் அன்பு மகள் வர்ஷா.

கடிதத்தைப் படித்த நிஷாவின் கண்களிலிருந்து பொலபொலவென கண்ணீர் வழிந்தது. தன் தோழியைப் பார்க்கையில் மிகவும் பரிதாபமாக இருந்தது. அப்படியே மீண்டும் அந்தப் புத்தகத்தின் நடுவே கடிதத்தை வைத்துவிட்டு நாளை இதை மீண்டும் வர்ஷாவின் பைக்குள் அவளுக்குத் தெரியாமல் வைத்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு நிஷாவும் உறங்கிவிட்டாள்.

மறுநாள் விடியலில் கதிரவனின் மிதமான ஒளி படர ஈரக்காற்று வீசக் கோடையின் தாக்கம் சற்று குறைந்து இதமாக இருந்தது. அன்று காலையில் கண்விழித்தபோது நிஷாவின் மனதில் அந்த யோசனை உதித்தது . எப்படியும் தன் தோழி வர்ஷாவிற்கு உதவ இதுதான் வழியென்று முடிவுசெய்தவள், அன்றே வர்ஷாவுக்கு தெரியாமல் அந்தக் காரியத்தைச் செய்தாள் நிஷா.

என்னை மன்னிச்சுடு வர்ஷா…எனக்கு வேற வழி தெரியலை. உன்னோட அனுமதி இல்லாம உன் கடிதத்திற்கு இரண்டு நகல்கள் எடுத்து அவைகளில் உன் வீட்டு முகவரி எழுதி உங்க அம்மாவுக்கும், தில்லியிலுள்ள நிறுவன முகவரி எழுதி உன் அப்பாவுக்கும் தனித்தனி கடிதங்களாக அதை அனுப்பிவச்சிட்டேன்…என்று மனதுக்குள் தன் தோழியிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டாள் நிஷா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *