அந்த நாள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 4, 2012
பார்வையிட்டோர்: 11,028 
 
 

ஒரு கோர விநாடியில் அது நிகழ்ந்துவிட்டது.

ஷாட் ஓ.கே. ஆன திருப்தியில் கிரேன் மீது இருந்த நான் கேமராவிலிருந்து கண்களைச் சற்று நிதானமாக எடுக்க… ஃபைட் மாஸ்டரின் கால்குலேஷனை மீறி, டிரைவரின் ஒரு விநாடி நேரப் பிழையால் கார் 80 கி.மீ. வேகத்தில் கிரேன் மீது மோதியது.

கிரேன் தடுமாற, 40 அடி உயரத்திலிருந்து நான் கீழே விழுந்தேன். ஃபைட் மாஸ்டர், இயக்குநர், ஹீரோ, யூனிட் ஆட்களின் கதறல் சத்தம்தான் எனது நினைவுகளின் கடைசி விநாடிகளில் மூளைக்குள் பதிந்த விஷயங்கள்.

அரக்கு வேலி என்பது ஆந்திராவையும் ஒரிஸ்ஸாவையும் இணைக்கும் காட்டுப் பகுதி. அட்டகாசமான மலைகள்,உபயோ கப்படுத்தாத நீளமான ரயில் பாதை என சினிமாக்காரர்களுக்கு இஷ்டமான இடம். ஜீப்புகளும் கார்களும் பறந்து மோதிநொறுங் கும் சண்டைக் காட்சிகளை விரும்பி எடுக்கும் இடம்.

அப்படி ஒரு சண்டைக் காட்சிக்குத் திட்டமிட்டு வந்து 20 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு, கடைசி நாள், கடைசி ஷாட் முடிந்ததும்தான் இந்த துரதிர்ஷ்ட விபத்து.

தயாரிப்பாளரின் இறக்குமதி கார் விரைந்துகொண்டு இருந்தது. எனக்குச் சிறிது நினைவு திரும்பியிருந்தது. உயிருடன் இருக்கிறேன் என்பது சந்தோஷமாக இருந்தாலும், ஏன் மூச்சு விடுவதில் இத்தனை சிரமம்… ஒரு டன் பாறாங்கல்லை நெஞ்சில்வைத்தது போல.

”சார், உங்களுக்கு ஒண்ணுமில்ல, நல்லாருக்கீங்க. ஆஸ்பத்திரி பக்கத்தில் வந்துட்டோம்” – இயக்குநர் என் முகத்தில் தட்டிச் சிரிக்க முயன்றார். ஹீரோவும் அதையே சொன்னார்.

அவுட் ஆஃப் ஃபோகஸில் அவர்கள் முகங்கள் தெரிய… திருமணமாகி ஆறு மாதங்களே ஆன புது மனைவி மட்டும் ஃபோகஸில் சிரித்தாள். தலை கோதினாள். ‘என்னிக்கு ஊருக்குத் திரும்புவீங்க..?’

அந்த அரை நினைவு நிலையிலும் இயக்குநரிடம் தெளி வாகச் சொன்னேன். ”தயவுசெஞ்சு என் வொய்ஃபுக்கு இது தெரியக் கூடாது சார்… ப்ளீஸ்!”

திடுமென கார் நின்றது.

இயக்குநர் இறங்கிய வேகத்தில் திரும்ப ஏறினார்.

”ஆஞ்சநேயர் கோயில் பிரசாதம்!” என்றபடி நெற்றி நிறைய விபூதி பூசினார்.

”ஆஸ்பத்திரி வந்துட்டோம்.”

ஸ்ட்ரெக்ச்சர் வந்தது. தூக்கிப் படுக்கவைத்தார் கள்.

ஸ்ட்ரெக்ச்சர் நகர… தெலுங்கு சினிமாவுக்கு நான் ஏற்கெனவே அறிமுகமாகி இருந்த காரணத்தால், பத்திரிகைக்காரர்கள், புகைப்படக்காரர்கள்.

”தயவுசெஞ்சு வேணாம் சார்… என் வொய்ஃபுக்குத் தெரியவே கூடாது சார்.”

மரியாதையாக நகர்ந்தார்கள்.

நடு நெஞ்சில் ஃபிராக்ச்சர். ஆண்டவன் அருள் இருந்தால் எலும்புகள் சேர்ந்துவிடும். மூன்று மாதங்கள் கட்டாய ஓய்வு வேண்டும் என்றது டாக்டர்கள் குழு.

மூன்று மாதங்கள் கட்டாய ஓய்வு என்றதும் சிறிது கலக்கம். உதவியாளர் செல்போனை நீட்டினார். கிசுகிசுப்பாகச் சொன்னார்.

”உங்க வீட்ல சார்…”

ரெகுலர் விசாரிப்பு. ஆனாலும் அந்த நேரத்தில் இதமாக இருந்தது. உற்சாகமாகப் பேசுவது போல நடிப்பதற்கு நிறையச் சிரமப்பட வேண்டிய தாயிற்று.

கண்களை மூட… மீண்டும் தயக்கமாக இன்னொரு உதவியாளர்,

”சார்… உங்க மதர்!”

பட்டென வாங்கினேன். அம்மா பேசி நீண்ட நாட்களாயிற்று. அதுவும் செல்போனில் பேசவே மாட்டாள். வீட்டுத் தொலைபேசியில் மட்டுமே, மாதத்துக்கு ஒருமுறை ‘என்னப்பா, எப்படியிருக்க..?’ என்பாள்.

இப்போது எப்படி… ஒரு சமயம் தெரிந்திருக் குமோ..?

தயக்கமாக வாங்கினேன்.

”என்னப்பா, நல்லாருக்கியா?”

”நல்லாருக்கேம்மா…” – என் குரல் ஏனோ நடுங்கியது.

”சும்மாத்தாம்ப்பா.. திடும்னு உன் நெனப்பு.. வந்துச்சு. நேத்து ராத்திரி கனவுல ஆஞ்சநேயர் வந்தாரு… மனசுக்குள்ள ஒரு கலக்கம்… உன்னைப் பார்க்கணும் போல இருக்குப்பா!”

”ஊர் திரும்பினதும் வர்றேம்மா.”

ஏனோ இவ்வளவு நேரமும் கட்டுப்பாட்டுடன் இருந்த எனக்கு, இப்போது அழ வேண்டும் போல் இருந்தது!

– சிறுகதை ஆக்கம் திருவாரூர் பாபு – 24th செப்டம்பர் 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *